மோசமாக நடத்தப்பட்ட பெண்களுக்கு உதவி!
“ உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பெண்களும் சிறுமிகளும் பல கொடுமைகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள். அதில் நீங்களும் ஒருத்தரா? பெண்களின் பாதுகாப்பைக் கடவுள் ரொம்ப முக்கியமானதாக நினைக்கிறார். ஏன்? பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு அவர் என்ன செய்யப் போகிறார்? படித்துப் பாருங்கள்.”
இந்த வார்த்தைகளோடுதான் jw.org-ல் இருக்கிற “பெண்கள் பாதுகாப்பு—பைபிளின் கருத்து” என்ற ஒரு கட்டுரை ஆரம்பிக்கிறது. அந்தக் கட்டுரையின் கடைசியில் இருக்கும் லிங்க்கை கிளிக் செய்தால், அதன் PDF வடிவத்தை டவுன்லோட் செய்ய முடியும்; அதை பிரிண்ட் எடுத்து மடித்தால், நான்கு-பக்க துண்டுப்பிரதியாக அது மாறும். அமெரிக்காவில் இருக்கிற ஸ்டேசி என்ற சகோதரி இப்படிச் சொல்கிறார்: “நானும் இன்னொரு சகோதரியும் இந்தக் கட்டுரையை பிரிண்ட் எடுத்து, எங்கள் பகுதியில் இருக்கிற பெண்கள் காப்பகத்துக்குக் கொண்டுபோனோம்.”
அங்கே வேலை செய்த ஒரு பெண், காப்பகத்தில் இருக்கிற பெண்களுக்குக் கொடுக்க இன்னும் நிறைய பிரதிகள் கிடைக்குமா என்று கேட்டார். அதனால், இன்னும் 40 துண்டுப்பிரதிகளும் 30 jw.org கான்டாக்ட் கார்டுகளும் அவருக்குக் கொடுக்கப்பட்டன. பிறகு ஒருசமயம் அந்தக் காப்பகத்தைச் சந்தித்தபோது, பைபிள் படிப்பு எப்படி நடக்கும் என்பதை அங்கே இருக்கிறவர்களுக்குக் காட்ட முடியுமா என்று மேனேஜர் கேட்டார்.
சகோதரி ஸ்டேசிக்கும் இன்னும் இரண்டு சகோதரிகளுக்கும் இதே மாதிரி ஒரு அனுபவம் வேறொரு காப்பகத்திலும் கிடைத்தது. அவர்கள் அங்கே போய் ஐந்து பிரதிகளைக் கொடுத்தார்கள். இன்னும் நிறைய பிரதிகள் கிடைக்குமா என்று அங்கே வேலை செய்தவர்கள் கேட்டார்கள். “இந்த துண்டுப்பிரதி இங்கே இருக்கும் பெண்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கும். எங்களுக்கு இது உண்மையிலேயே தேவை!” என்று அங்கே வேலை செய்த ஒருவர் சொன்னார். பிறகு ஒரு தடவை சகோதரிகள் அந்தக் காப்பகத்துக்குப் போனபோது, பைபிள் படிப்பு எப்படி இருக்கும் என்று அங்கே இருக்கிறவர்களுக்கு நடித்துக் காட்டப்பட்டது. அதைப் பார்க்க நிறைய பெண்கள் ஒன்றாகக் கூடிவந்தார்கள். அவர்களில் இரண்டு பேர், அந்த வாரயிறுதி நாளில் நடக்கவிருந்த கூட்டத்துக்கு வருவதற்கும் ஆசைப்பட்டார்கள்.
சகோதரி ஸ்டேசி இப்படிச் சொல்கிறார்: “இந்த அழகான கட்டுரையைப் படிப்பதற்காக மக்கள் இதை ஆசை ஆசையாக வாங்கியதைப் பார்த்தபோது எங்களுக்குச் சந்தோஷமாக இருந்தது. இதை பிரிண்ட் எடுத்து, மடித்து, ஒரு துண்டுப்பிரதியாக கொடுப்பது, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நல்ல செய்தியைக் கொண்டுபோய் சேர்க்க ஒரு அருமையான வழி. இதில் இருக்கும் தகவல்களை அவர்கள் படித்து சந்தோஷப்பட்டபோது எங்கள் மனம் உருகியது. நாங்கள் எடுத்த முயற்சிகளை யெகோவா ஆசீர்வதித்ததைப் பார்த்தபோது, எங்கள் உள்ளம் பூரித்துப்போனது!”