2 நாளாகமம்
27 யோதாம்+ ராஜாவானபோது அவருக்கு 25 வயது. அவர் 16 வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா பெயர் எருசாள், இவள் சாதோக்கின் மகள்.+ 2 யோதாம் தன்னுடைய அப்பா உசியாவைப் போலவே யெகோவாவுக்குப் பிரியமாக நடந்துவந்தார்.+ ஆனால், தன்னுடைய அப்பாவைப் போல் யெகோவாவின் ஆலயத்துக்குள்ளே அத்துமீறி நுழையவில்லை.+ இருந்தாலும், மக்கள் இன்னமும் மோசமான காரியங்களைத்தான் செய்துகொண்டிருந்தார்கள். 3 யெகோவாவுடைய ஆலயத்தின் ‘உயர்ந்த நுழைவாசலை’+ அவர் கட்டினார். ஓபேலில்+ இருந்த மதில்மேல் நிறைய கட்டுமான வேலைகளைச் செய்தார். 4 அதோடு, யூதாவின் மலைப்பகுதியில்+ நகரங்களைக் கட்டினார்.+ காட்டுப்பகுதிகளில் கோட்டைகளையும்+ கோபுரங்களையும் கட்டினார்.+ 5 அம்மோனியர்களின்+ ராஜாவோடு போர் செய்து, கடைசியில் வெற்றி பெற்றார். அதனால், அம்மோனியர்கள் அந்த வருஷம் அவருக்கு 100 தாலந்து* வெள்ளியையும் 10,000 கோர் அளவு* கோதுமையையும் 10,000 கோர் அளவு பார்லியையும் கொடுத்தார்கள். அடுத்த வருஷமும் அதற்கடுத்த வருஷமும் இதேபோல் கொடுத்தார்கள்.+ 6 யோதாம் தன்னுடைய கடவுளான யெகோவாவின் வழியில் நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால், அவர் நாளுக்கு நாள் வலிமையுள்ளவராக ஆனார்.
7 யோதாம் செய்த எல்லா போர்களைப் பற்றியும் அவருடைய வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்களைப் பற்றியும் இஸ்ரவேல் மற்றும் யூதா ராஜாக்களின் சரித்திரப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.+ 8 அவர் 25 வயதில் ராஜாவாகி, 16 வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார்.+ 9 யோதாம் இறந்துபோனதும்,* ‘தாவீதின் நகரத்தில்’+ அவரை அடக்கம் செய்தார்கள். அவருக்குப் பிறகு, அவருடைய மகன் ஆகாஸ் ராஜாவானார்.+