எண்ணாகமம்
2 யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும், 2 “மூன்று மூன்று கோத்திரங்களாகப் பிரிக்கப்பட்ட இஸ்ரவேலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் முகாம்போட வேண்டும்.+ ஒவ்வொருவரும் தங்களுடைய தந்தைவழிக் குடும்பத்தின் அடையாளச் சின்னத்துக்குப் பக்கத்தில் முகாம்போட வேண்டும். சந்திப்புக் கூடாரத்தைப் பார்த்தபடி, அதைச் சுற்றிலும் அவர்கள் முகாம்போட வேண்டும்.
3 சூரியன் உதிக்கும் கிழக்குத் திசையில் மூன்று கோத்திரங்கள் அணி அணியாக* முகாம்போட வேண்டும். யூதா கோத்திரம் அவற்றின் நடுவில் முகாம்போட வேண்டும். யூதா கோத்திரத்தின் தலைவர், அம்மினதாபின் மகனாகிய நகசோன்.+ 4 அவருடைய படையில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 74,600 பேர்.+ 5 யூதா கோத்திரத்தின் ஒருபக்கத்தில் இசக்கார் கோத்திரம் முகாம்போட வேண்டும். இசக்கார் கோத்திரத்தின் தலைவர், சூவாரின் மகனாகிய நெதனெயேல்.+ 6 அவருடைய படையில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 54,400 பேர்.+ 7 யூதா கோத்திரத்தின் மறுபக்கத்தில், செபுலோன் கோத்திரம் முகாம்போட வேண்டும். செபுலோன் கோத்திரத்தின் தலைவர், ஹேலோனின் மகனாகிய எலியாப்.+ 8 அவருடைய படையில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 57,400 பேர்.+
9 யூதா கோத்திரத்தின் முகாமில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் மொத்தம் 1,86,400 பேர். அவர்கள்தான் முதலாவதாகப் புறப்பட வேண்டும்.+
10 தெற்கே மூன்று கோத்திரங்கள் அணி அணியாக* முகாம்போட வேண்டும். ரூபன் கோத்திரம்+ அவற்றின் நடுவில் முகாம்போட வேண்டும். ரூபன் கோத்திரத்தின் தலைவர், சேதேயூரின் மகனாகிய எலிசூர்.+ 11 அவருடைய படையில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 46,500 பேர்.+ 12 ரூபன் கோத்திரத்தின் ஒருபக்கத்தில் சிமியோன் கோத்திரம் முகாம்போட வேண்டும். சிமியோன் கோத்திரத்தின் தலைவர், சூரிஷதாயின் மகனாகிய செலூமியேல்.+ 13 அவருடைய படையில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 59,300 பேர்.+ 14 ரூபன் கோத்திரத்தின் மறுபக்கத்தில், காத் கோத்திரம் முகாம்போட வேண்டும். காத் கோத்திரத்தின் தலைவர், ரெகுவேலின் மகனாகிய எலியாசாப்.+ 15 அவருடைய படையில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 45,650 பேர்.+
16 ரூபன் கோத்திரத்தின் முகாமில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் மொத்தம் 1,51,450 பேர். அவர்கள்தான் இரண்டாவதாகப் புறப்பட வேண்டும்.+
17 சந்திப்புக் கூடாரத்தை எடுத்துக்கொண்டு போகும்போது,+ லேவியர்களின் கோத்திரம் மற்ற கோத்திரங்களுக்கு நடுவே போக வேண்டும்.
ஒவ்வொரு கோத்திரமும் எந்த வரிசையில் முகாம்போடுகிறதோ அந்த வரிசைப்படி பயணம் செய்ய வேண்டும்.+ மூன்று மூன்று கோத்திரங்களாகப் பயணம் செய்ய வேண்டும்.
18 மேற்கே மூன்று கோத்திரங்கள் அணி அணியாக* முகாம்போட வேண்டும். எப்பிராயீம் கோத்திரம் அவற்றின் நடுவில் முகாம்போட வேண்டும். எப்பிராயீம் கோத்திரத்தின் தலைவர், அம்மியூத்தின் மகனாகிய எலிஷாமா.+ 19 அவருடைய படையில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 40,500 பேர்.+ 20 எப்பிராயீம் கோத்திரத்தின் ஒருபக்கத்தில் மனாசே கோத்திரம்+ முகாம்போட வேண்டும். மனாசே கோத்திரத்தின் தலைவர், பெதாசூரின் மகனாகிய கமாலியேல்.+ 21 அவருடைய படையில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 32,200 பேர்.+ 22 எப்பிராயீம் கோத்திரத்தின் மறுபக்கத்தில், பென்யமீன் கோத்திரம் முகாம்போட வேண்டும். பென்யமீன் கோத்திரத்தின் தலைவர், கீதெயோனியின் மகனாகிய அபிதான்.+ 23 அவருடைய படையில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 35,400 பேர்.+
24 எப்பிராயீம் கோத்திரத்தின் முகாமில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் மொத்தம் 1,08,100 பேர். அவர்கள்தான் மூன்றாவதாகப் புறப்பட வேண்டும்.+
25 வடக்கே மூன்று கோத்திரங்கள் அணி அணியாக* முகாம்போட வேண்டும். தாண் கோத்திரம் அவற்றின் நடுவில் முகாம்போட வேண்டும். தாண் கோத்திரத்தின் தலைவர், அம்மிஷதாயின் மகனாகிய அகியேசேர்.+ 26 அவருடைய படையில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 62,700 பேர்.+ 27 தாண் கோத்திரத்தின் ஒருபக்கத்தில் ஆசேர் கோத்திரம் முகாம்போட வேண்டும். ஆசேர் கோத்திரத்தின் தலைவர், ஓகிரானின் மகனாகிய பாகியேல்.+ 28 அவருடைய படையில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 41,500 பேர்.+ 29 தாண் கோத்திரத்தின் மறுபக்கத்தில், நப்தலி கோத்திரம் முகாம்போட வேண்டும். நப்தலி கோத்திரத்தின் தலைவர், ஏனானின் மகனாகிய அகீரா.+ 30 அவருடைய படையில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 53,400 பேர்.+
31 தாண் கோத்திரத்தின் முகாமில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் மொத்தம் 1,57,600 பேர். மூன்று கோத்திர வரிசைப்படி, அவர்கள்தான் கடைசியாகப் புறப்பட வேண்டும்”+ என்றார்.
32 அவரவருடைய தந்தைவழிக் குடும்பத்தின்படி பெயர்ப்பதிவு செய்யப்பட்ட இஸ்ரவேலர்கள் இவர்கள்தான். படையில் சேவை செய்வதற்காகப் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் மொத்தம் 6,03,550 பேர்.+ 33 ஆனால், மோசேக்கு யெகோவா கொடுத்த கட்டளைப்படி, மற்ற இஸ்ரவேலர்களோடு லேவியர்கள் பெயர்ப்பதிவு செய்யப்படவில்லை.+ 34 மோசேக்கு யெகோவா கொடுத்த கட்டளைப்படியே இஸ்ரவேலர்கள் எல்லாவற்றையும் செய்தார்கள். இப்படித்தான், அவரவர் வம்சத்தின்படியும் தந்தைவழிக் குடும்பத்தின்படியும் மூன்று மூன்று கோத்திரங்களாக முகாம்போட்டார்கள்,+ அந்த வரிசைப்படியே புறப்பட்டும் போனார்கள்.+