எண்ணாகமம்
30 மோசே இஸ்ரவேலின் கோத்திரத் தலைவர்களிடம்,+ “யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் கட்டளை இதுதான்: 2 ஒருவன் எதையாவது செய்யப்போவதாக அல்லது தவிர்க்கப்போவதாக யெகோவாவிடம் நேர்ந்துகொண்டாலோ+ உறுதிமொழி எடுத்தாலோ+ அதை மீறக் கூடாது.+ தான் நேர்ந்துகொண்ட எல்லாவற்றையும் நிறைவேற்ற வேண்டும்.+
3 ஒரு இளம் பெண் தன்னுடைய அப்பாவின் வீட்டில் வாழும்போது எதையாவது செய்யப்போவதாக அல்லது தவிர்க்கப்போவதாக யெகோவாவிடம் நேர்ந்துகொண்டால், 4 அவள் நேர்ந்துகொண்ட எல்லாவற்றையும் அவளுடைய அப்பா கேள்விப்பட்டும் அவளைத் தடுக்காவிட்டால், நேர்ந்துகொண்ட எல்லாவற்றையும் அவள் நிறைவேற்ற வேண்டும். 5 ஆனால், அவளுடைய அப்பா அதைக் கேள்விப்பட்டு அவளைத் தடுத்தால், நேர்ந்துகொண்டதை அவள் நிறைவேற்ற வேண்டியதில்லை. அவளுடைய அப்பா அவளைத் தடுத்துவிட்டதால் அவளை யெகோவா மன்னிப்பார்.+
6 அவள் எதையாவது நேர்ந்திருக்கும் சமயத்தில் அல்லது அவசரப்பட்டு சத்தியம் செய்திருக்கும் சமயத்தில் அவளுக்குக் கல்யாணமானால், 7 அவளுடைய கணவன் அதைக் கேள்விப்படும் நாளில் அவளைத் தடுக்காவிட்டால், நேர்ந்துகொண்ட எல்லாவற்றையும் அவள் நிறைவேற்ற வேண்டும். 8 ஆனால், அவளுடைய கணவன் அதைக் கேள்விப்படும் நாளில் அதற்கு அனுமதி தர விரும்பாவிட்டால், அவள் நேர்ந்துகொண்டதை அல்லது அவசரப்பட்டு சத்தியம் செய்ததை அவர் ரத்து செய்யலாம்.+ யெகோவா அவளை மன்னிப்பார்.
9 விதவைப் பெண்ணோ விவாகரத்தான பெண்ணோ எதையாவது நேர்ந்துகொண்டால் அதைக் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும்.
10 ஆனாலும், ஒரு பெண் தன்னுடைய கணவனின் வீட்டில் வாழும்போது எதையாவது செய்யப்போவதாக அல்லது தவிர்க்கப்போவதாக கடவுளிடம் நேர்ந்துகொண்டால், 11 அவளுடைய கணவன் அதைக் கேள்விப்படும்போது அதற்கு ஆட்சேபணையோ மறுப்போ தெரிவிக்காவிட்டால், தான் நேர்ந்துகொண்ட எல்லாவற்றையும் அவள் நிறைவேற்ற வேண்டும். 12 ஆனால் அவளுடைய கணவன் அதைக் கேள்விப்படும் நாளில், அவள் நேர்ந்துகொண்ட எல்லாவற்றையும் முழுவதுமாக ரத்து செய்தால் அவள் அவற்றை நிறைவேற்ற வேண்டியதில்லை.+ அவளுடைய கணவன் அவற்றை ரத்து செய்ததால் யெகோவா அவளை மன்னிப்பார். 13 எதையாவது செய்யப்போவதாக அல்லது தன்னையே வருத்திக்கொள்ளப்போவதாக* அவள் நேர்ந்துகொண்டாலோ உறுதிமொழி எடுத்தாலோ, அதை அவள் நிறைவேற்ற வேண்டுமா வேண்டாமா என்பதைக் கணவன் தீர்மானிக்கலாம். 14 ஆனால், பல நாட்களாகியும் அவளுடைய கணவன் எந்த ஆட்சேபணையும் தெரிவிக்காவிட்டால், அவள் நேர்ந்துகொண்ட எல்லாவற்றுக்கும் சம்மதம் தெரிவித்துவிட்டார் என்று அர்த்தம். ஏனென்றால், அதைக் கேள்விப்பட்ட நாளில் அவர் ஆட்சேபணை தெரிவிக்கவில்லை. 15 ஆனால், அதைக் கேள்விப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு ரத்து செய்தால், அவளுடைய குற்றத்துக்கு அவர்தான் பொறுப்பு.+
16 ஏதோவொன்றை நேர்ந்துகொள்ளும் விஷயத்தில் கணவனுக்கும் மனைவிக்கும், அப்பாவுக்கும் அவர் வீட்டில் வாழ்கிற மகளுக்கும் மோசே மூலமாக யெகோவா கொடுத்த விதிமுறைகள் இவைதான்” என்றார்.