ஆதியாகமம்
1 ஆரம்பத்தில் கடவுள் வானத்தையும் பூமியையும் படைத்தார்.+
2 பூமி ஒழுங்கில்லாமல் வெறுமையாக* இருந்தது, எங்கு பார்த்தாலும் ஆழமான தண்ணீரும்+ இருட்டுமாக இருந்தது. தண்ணீருக்கு மேலே+ கடவுளுடைய சக்தி*+ செயல்பட்டுக்கொண்டு* இருந்தது.
3 பின்பு கடவுள், “வெளிச்சம் வரட்டும்” என்று சொன்னார். அப்போது வெளிச்சம் வந்தது.+ 4 கடவுள் வெளிச்சத்தைப் பார்த்தபோது அது நன்றாக இருந்தது. பின்பு, அவர் வெளிச்சத்தையும் இருட்டையும் தனித்தனியாகப் பிரித்தார். 5 வெளிச்சத்துக்குப் பகல் என்றும், இருட்டுக்கு இரவு+ என்றும் பெயர் வைத்தார். சாயங்காலமும் விடியற்காலையும் வந்தது, முதலாம் நாள் முடிந்தது.
6 பின்பு கடவுள், “தண்ணீர் இரண்டாகப் பிரியட்டும்,+ நடுவில் ஆகாயவிரிவு உண்டாகட்டும்”+ என்று சொல்லி, 7 ஆகாயவிரிவை உண்டாக்க ஆரம்பித்தார். தண்ணீரின் ஒரு பகுதி ஆகாயவிரிவுக்குக் கீழேயும் இன்னொரு பகுதி ஆகாயவிரிவுக்கு மேலேயும் இருக்கும்படி பிரித்தார்.+ அது அப்படியே ஆனது. 8 அவர் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பெயர் வைத்தார். சாயங்காலமும் விடியற்காலையும் வந்தது, இரண்டாம் நாள் முடிந்தது.
9 பின்பு கடவுள், “வானத்துக்குக் கீழே இருக்கிற தண்ணீரெல்லாம் ஒருபக்கமாக ஒதுங்கட்டும், காய்ந்த தரை உண்டாகட்டும்”+ என்று சொன்னார். அது அப்படியே ஆனது. 10 காய்ந்த தரைக்கு நிலம் என்று கடவுள் பெயர் வைத்தார்.+ ஒருபக்கமாக ஒதுங்கிய தண்ணீருக்குக் கடல்+ என்று பெயர் வைத்தார். அவற்றை அவர் பார்த்தபோது அவை நன்றாக இருந்தன.+ 11 பின்பு கடவுள், “நிலத்தில் புற்களும் செடிகளும் மரங்களும் அந்தந்த இனத்தின்படியே* முளைக்கட்டும். செடிகள் விதைகளைத் தரட்டும், மரங்கள் விதைகளுள்ள பழங்களைக் கொடுக்கட்டும்” என்று சொன்னார். அது அப்படியே ஆனது. 12 நிலத்தில் புற்களும் செடிகளும் மரங்களும் அந்தந்த இனத்தின்படியே முளைக்க ஆரம்பித்தன. செடிகள் விதைகளைத் தந்தன,+ மரங்கள் விதைகளுள்ள பழங்களைக் கொடுத்தன. கடவுள் அவற்றைப் பார்த்தபோது அவை நன்றாக இருந்தன. 13 சாயங்காலமும் விடியற்காலையும் வந்தது, மூன்றாம் நாள் முடிந்தது.
14 பின்பு கடவுள், “பகலையும் இரவையும் தனித்தனியாகப் பிரிப்பதற்கு வானத்தில் ஒளிச்சுடர்கள்+ தெரியட்டும்.+ பருவ காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறித்துக் காட்டுகிற அடையாளங்களாக அவை இருக்கட்டும்.+ 15 அந்த ஒளிச்சுடர்கள் வானத்திலிருந்து பூமிக்கு வெளிச்சம் தரட்டும்” என்று சொன்னார். அது அப்படியே ஆனது. 16 பின்பு, கடவுள் இரண்டு மிகப் பெரிய ஒளிச்சுடர்களைத் தெரியும்படி செய்தார். பகலில் பிரகாசமாய் ஒளிவீச* ஓர் ஒளிச்சுடரையும்+ இரவில் இதமாய் ஒளிவீச ஓர் ஒளிச்சுடரையும், அதோடு நட்சத்திரங்களையும் தெரிய வைத்தார்.+ 17 இப்படி, பூமிக்கு வெளிச்சம் தருவதற்காகக் கடவுள் அவற்றை வானத்தில் வைத்தார். 18 பகலிலும் இரவிலும் ஒளிவீசுவதற்காகவும், வெளிச்சத்தையும் இருட்டையும் தனித்தனியாகப் பிரிப்பதற்காகவும் அப்படிச் செய்தார்.+ அவற்றை அவர் பார்த்தபோது அவை நன்றாக இருந்தன. 19 சாயங்காலமும் விடியற்காலையும் வந்தது, நான்காம் நாள் முடிந்தது.
20 பின்பு கடவுள், “தண்ணீரில் ஏராளமான உயிரினங்கள்* உண்டாகட்டும், பூமிக்கு மேலே இருக்கிற வானம் என்ற ஆகாயவிரிவிலே பறவைகள்* பறக்கட்டும்”+ என்று சொன்னார். 21 கடலில் வாழும் மிகப் பெரிய உயிரினங்களையும் கூட்டங்கூட்டமாக நீந்தும் உயிரினங்களையும் அந்தந்த இனத்தின்படியே கடவுள் படைத்தார். பறக்கும் எல்லா பறவைகளையும் அந்தந்த இனத்தின்படியே படைத்தார். அவற்றை அவர் பார்த்தபோது அவை நன்றாக இருந்தன. 22 கடவுள் அவற்றை ஆசீர்வதித்து, “ஏராளமாகப் பெருகி கடலை நிரப்புங்கள்”+ என்று சொன்னார்; “பூமியில் பறவைகள் பெருகட்டும்” என்றும் சொன்னார். 23 சாயங்காலமும் விடியற்காலையும் வந்தது, ஐந்தாம் நாள் முடிந்தது.
24 பின்பு கடவுள், “நிலத்தில் வாழும் உயிரினங்கள் அந்தந்த இனத்தின்படியே உண்டாகட்டும்; வீட்டு விலங்குகளும் ஊரும் பிராணிகளும் காட்டு மிருகங்களும் அந்தந்த இனத்தின்படியே உண்டாகட்டும்”+ என்றார். அது அப்படியே ஆனது. 25 காட்டு மிருகங்களை அந்தந்த இனத்தின்படியும் வீட்டு விலங்குகளை அந்தந்த இனத்தின்படியும் ஊரும் பிராணிகளை அந்தந்த இனத்தின்படியும் கடவுள் உண்டாக்க ஆரம்பித்தார். அவற்றை அவர் பார்த்தபோது அவை நன்றாக இருந்தன.
26 பின்பு கடவுள், “மனிதனை நம்முடைய சாயலில்+ நம்மைப்+ போலவே உண்டாக்கலாம்.+ கடலில் வாழும் மீன்களும், வானத்தில் பறக்கும் பறவைகளும், வீட்டு விலங்குகளும், ஊரும் பிராணிகளும், முழு பூமியும் அவனுடைய அதிகாரத்தின்கீழ் இருக்கட்டும்”+ என்று சொன்னார். 27 மனிதனைக் கடவுள் தன்னுடைய சாயலில் படைத்தார். தன்னுடைய சாயலிலேயே அவனைப் படைத்தார். ஆணையும் பெண்ணையும் அவர் படைத்தார்.+ 28 கடவுள் அவர்களிடம், “நீங்கள் பிள்ளைகளைப் பெற்று, ஏராளமாகப் பெருகி, பூமியை நிரப்புங்கள்;+ அதைப் பண்படுத்துங்கள்.*+ கடலில் வாழ்கிற மீன்களும், வானத்தில் பறக்கிற பறவைகளும், நிலத்தில் வாழ்கிற எல்லா உயிரினங்களும் உங்கள் அதிகாரத்தின்கீழ் இருக்கட்டும்”+ என்று சொல்லி ஆசீர்வதித்தார்.
29 பின்பு கடவுள், “பூமியிலுள்ள எல்லா செடிகளையும், விதைகளுள்ள பழங்களைத் தருகிற மரங்களையும் உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன். அவை உங்களுக்கு உணவாக இருக்கட்டும்.+ 30 பூமியிலுள்ள எல்லா காட்டு மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் நிலத்தில் வாழ்கிற எல்லா உயிரினங்களுக்கும் புல்பூண்டுகளை உணவாகத் தந்திருக்கிறேன்”+ என்றார். அது அப்படியே ஆனது.
31 பின்பு, தான் படைத்த எல்லாவற்றையும் கடவுள் பார்த்தார், எல்லாமே மிகவும் நன்றாக இருந்தன.+ சாயங்காலமும் விடியற்காலையும் வந்தது, ஆறாம் நாள் முடிந்தது.
2 இப்படி, வானமும் பூமியும் அவற்றிலுள்ள எல்லாமும் படைத்து முடிக்கப்பட்டன.+ 2 ஏழாம் நாள் ஆரம்பிப்பதற்குள், இந்த எல்லா வேலைகளையும் கடவுள் முடித்திருந்தார். இதையெல்லாம் முடித்துவிட்டு ஏழாம் நாளில் ஓய்வெடுக்கத் தொடங்கினார்.+ 3 அவர் படைக்க நினைத்த எல்லாவற்றையும் படைத்து முடித்துவிட்டு அந்த நாளில் ஓய்வெடுக்க ஆரம்பித்தார். அந்த ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் புனித நாளாக அறிவித்தார்.*
4 வானமும் பூமியும் படைக்கப்பட்ட காலத்தில், பூமியையும் வானத்தையும் கடவுளாகிய யெகோவா* படைத்த+ நாளில் நடந்தவற்றைப் பற்றிய பதிவு இதுதான்.
5 செடிகொடிகளோ மற்ற தாவரங்களோ அதுவரை பூமியில் முளைக்கவில்லை. ஏனென்றால், கடவுளாகிய யெகோவா பூமியில் அதுவரை மழை பெய்யும்படி செய்யவில்லை. அதோடு, நிலத்தைப் பண்படுத்த மனிதனும் இருக்கவில்லை. 6 ஆனால் பூமியிலிருந்து தண்ணீர் ஆவியாகி மேலே போய், பின்பு முழு நிலத்தையும் நனைத்தது.
7 அதன்பின், கடவுளாகிய யெகோவா நிலத்திலிருந்து மண்ணை எடுத்து, மனிதனை உருவாக்கத் தொடங்கினார்;+ அவனுடைய மூக்கில் உயிர்மூச்சை ஊதினார்.+ அப்போது அவன் உயிருள்ளவன்* ஆனான்.+ 8 கடவுளாகிய யெகோவா ஏதேனின் கிழக்குப் பகுதியில் ஒரு தோட்டம்+ அமைத்து, தான் உருவாக்கிய மனிதனை அங்கே குடிவைத்தார்.+ 9 கடவுளாகிய யெகோவா ருசியான பழங்களைத் தரும் அழகான மரங்களை நிலத்தில் வளர வைத்தார். அதோடு, வாழ்வுக்கான மரத்தையும்+ நன்மை தீமை அறிவதற்கான மரத்தையும்+ தோட்டத்தின் நடுவில் வளர வைத்தார்.
10 ஏதேனிலிருந்து ஓடிய ஓர் ஆற்றின் தண்ணீர் அந்தத் தோட்டத்தில் பாய்ந்தது, பின்பு அது நான்கு ஆறுகளாகப் பிரிந்தது. 11 முதலாம் ஆற்றின் பெயர் பைசோன். அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடுகிறது. அந்தத் தேசத்தில் தங்கம் கிடைக்கிறது. 12 அது சுத்தமான தங்கம். வெள்ளைப் பிசினும்* கோமேதகமும்கூட அங்கே கிடைக்கின்றன. 13 இரண்டாம் ஆற்றின் பெயர் கீகோன். அது கூஷ் தேசம் முழுவதையும் சுற்றி ஓடுகிறது. 14 மூன்றாம் ஆற்றின் பெயர் இதெக்கேல்.*+ அது அசீரியாவுக்குக்+ கிழக்கே ஓடுகிறது. நான்காம் ஆற்றின் பெயர் யூப்ரடிஸ்.*+
15 கடவுளாகிய யெகோவா மனிதனை ஏதேன் தோட்டத்தில் குடிவைத்து, அதைப் பண்படுத்தவும் பராமரிக்கவும் சொன்னார்.+ 16 அதோடு, கடவுளாகிய யெகோவா மனிதனுக்கு இந்தக் கட்டளையைக் கொடுத்தார்: “இந்தத் தோட்டத்தில் இருக்கிற எல்லா மரங்களின் பழங்களையும் நீ திருப்தியாகச் சாப்பிடலாம்.+ 17 ஆனால், நன்மை தீமை அறிவதற்கான மரத்தின் பழத்தை நீ சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால், அதே நாளில் கண்டிப்பாகச் செத்துப்போவாய்.”+
18 பின்பு கடவுளாகிய யெகோவா, “மனிதன் தனியாக இருப்பது நல்லதல்ல, அவனுக்கு உதவியாக இருப்பதற்குப் பொருத்தமான ஒரு துணையை நான் உண்டாக்குவேன்”+ என்று சொன்னார். 19 அதன்பின், கடவுளாகிய யெகோவா மண்ணிலிருந்து தான் உருவாக்கிய எல்லா காட்டு மிருகங்களுக்கும் பறக்கும் உயிரினங்களுக்கும் மனிதன் என்ன பெயர் வைப்பான் என்று பார்ப்பதற்காக, அவற்றை அவனிடம் கொண்டுவரத் தொடங்கினார். ஒவ்வொரு உயிரினத்துக்கும் மனிதன் என்ன பெயர் வைத்தானோ அதுவே அதன் பெயராக ஆனது.+ 20 இப்படி வீட்டு விலங்குகள், பறக்கும் உயிரினங்கள், காட்டு மிருகங்கள் ஆகிய எல்லாவற்றுக்கும் மனிதன் பெயர் வைத்தான். ஆனால், மனிதனுக்குப் பொருத்தமான ஒரு துணை இருக்கவில்லை. 21 அதனால், கடவுளாகிய யெகோவா அவனுக்கு ஆழ்ந்த தூக்கத்தை வர வைத்தார். அவன் தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில், அவனுடைய விலா எலும்புகளில் ஒன்றை எடுத்துவிட்டு, அந்த இடத்தை மூடினார். 22 மனிதனிலிருந்து எடுத்த அந்த விலா எலும்பை வைத்து யெகோவா ஒரு பெண்ணை உருவாக்கி, அவளை மனிதனிடம் கொண்டுவந்தார்.+
23 அப்போது அந்த மனிதன்,
“இதோ! இவள் என்னுடைய எலும்பின் எலும்பு!
என் சதையின் சதை!
இவள் மனுஷி என்று அழைக்கப்படுவாள்.
ஏனென்றால், இவள் மனுஷனிலிருந்து எடுக்கப்பட்டாள்”+
என்று சொன்னான். 24 அதனால், மனிதன் தன்னுடைய அப்பாவையும் அம்மாவையும் விட்டுத் தன் மனைவியோடு சேர்ந்திருப்பான்.* அவர்கள் ஒரே உடலாக* இருப்பார்கள்.+ 25 அந்த முதல் மனிதனும் அவன் மனைவியும் நிர்வாணமாக இருந்தார்கள்,+ ஆனாலும் அவர்கள் வெட்கப்படவில்லை.
3 கடவுளாகிய யெகோவா படைத்த காட்டு மிருகங்கள் எல்லாவற்றையும்விட பாம்பு+ மிகவும் ஜாக்கிரதையானதாக* இருந்தது. அது அந்தப் பெண்ணிடம், “தோட்டத்தில் உள்ள அத்தனை மரங்களின் பழங்களையும் நீங்கள் சாப்பிடக் கூடாது என்று கடவுள் நிஜமாகவே சொன்னாரா?”+ என்று கேட்டது. 2 அதற்கு அந்தப் பெண், “தோட்டத்தில் இருக்கிற மரங்களின் பழங்களை நாங்கள் சாப்பிடலாம்.+ 3 ஆனால், தோட்டத்தின் நடுவில் இருக்கிற மரத்தின் பழத்தை+ நாங்கள் சாப்பிடக் கூடாது என்றும், தொடக் கூடாது என்றும் கடவுள் சொல்லியிருக்கிறார். மீறினால் நாங்கள் செத்துப்போவோம் என்றும் அவர் சொல்லியிருக்கிறார்” என்றாள். 4 அப்போது அந்தப் பாம்பு அவளிடம், “நீங்கள் கண்டிப்பாகச் செத்துப்போக மாட்டீர்கள்.+ 5 நீங்கள் அதைச் சாப்பிடும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமையைத் தெரிந்துகொண்டு*+ கடவுளைப் போல ஆவீர்கள் என்றும் கடவுளுக்குத் தெரியும்” என்று சொன்னது.
6 அதன்பின், அந்த மரத்தின் பழம் அவளுடைய கண்களுக்கு மிகவும் நல்ல* பழமாகவும், அழகான பழமாகவும் தெரிந்தது. அதைப் பார்க்கப் பார்க்க அவளுக்கு ஆசையாக இருந்தது. அதனால், அந்தப் பழத்தைப் பறித்துச் சாப்பிட்டாள்.+ பிறகு, தன் கணவனோடு இருந்தபோது அவனுக்கும் கொஞ்சம் கொடுத்தாள், அவனும் சாப்பிட்டான்.+ 7 உடனே, அவர்கள் இரண்டு பேருடைய கண்களும் திறந்தன, தாங்கள் நிர்வாணமாக இருப்பதை உணர்ந்தார்கள். அதனால், அத்தி இலைகளைத் தைத்து இடுப்பில் கட்டிக்கொண்டார்கள்.+
8 பின்பு, தென்றல் காற்று வீசும் சாயங்கால வேளையில் கடவுளாகிய யெகோவா தோட்டத்தில் நடந்துகொண்டிருந்த சமயத்தில், அந்த மனிதனும் அவன் மனைவியும் அவருடைய குரலைக் கேட்டார்கள். கடவுளாகிய யெகோவாவின் கண்ணில் படாமல் இருப்பதற்காக அவர்கள் உடனே தோட்டத்திலுள்ள மரங்களுக்கு நடுவில் ஒளிந்துகொண்டார்கள். 9 அப்போது கடவுளாகிய யெகோவா அந்த மனிதனிடம், “நீ எங்கே இருக்கிறாய்?” என்று திரும்பத் திரும்பக் கேட்டார். 10 கடைசியாக அவன், “தோட்டத்தில் உங்களுடைய குரலைக் கேட்டேன், ஆனால் நான் நிர்வாணமாக இருப்பதால் பயந்து ஒளிந்துகொண்டேன்” என்று சொன்னான். 11 அதற்கு அவர், “நீ நிர்வாணமாக இருக்கிறாய் என்று உனக்குச் சொன்னது யார்?+ சாப்பிடக் கூடாது என்று நான் சொல்லியிருந்த மரத்தின் பழத்தை+ நீ சாப்பிட்டாயா?” என்று கேட்டார். 12 அதற்கு அவன், “என்னோடு இருப்பதற்காக நீங்கள் எனக்குத் தந்த பெண்தான் அந்த மரத்தின் பழத்தைக் கொடுத்தாள், அதனால் சாப்பிட்டேன்” என்று சொன்னான். 13 அப்போது கடவுளாகிய யெகோவா அந்தப் பெண்ணிடம், “நீ ஏன் இப்படிச் செய்தாய்?” என்று கேட்டார். அதற்கு அவள், “அந்தப் பாம்புதான் என்னை ஏமாற்றியது, அதனால்தான் சாப்பிட்டேன்”+ என்று சொன்னாள்.
14 பின்பு கடவுளாகிய யெகோவா அந்தப் பாம்பிடம்,+ “நீ இப்படிச் செய்ததால், வீட்டு விலங்குகள் எல்லாவற்றிலும் காட்டு மிருகங்கள் எல்லாவற்றிலும் நீ சபிக்கப்பட்டிருப்பாய். உன் வயிற்றில் ஊர்ந்து போவாய், உன் வாழ்நாளெல்லாம் மண்ணைத் தின்பாய். 15 உனக்கும்+ பெண்ணுக்கும்+ உன் சந்ததிக்கும்+ அவள் சந்ததிக்கும்+ பகை உண்டாக்குவேன்.+ அவர் உன் தலையை நசுக்குவார்,*+ நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்”*+ என்று சொன்னார்.
16 கடவுள் அந்தப் பெண்ணிடம், “நீ கர்ப்பமாக இருக்கும்போது உன் வலியை ரொம்பவே அதிகமாக்குவேன். வலியோடுதான் நீ பிள்ளைகளைப் பெற்றெடுப்பாய். உன் கணவன்மேல் ஏக்கமாகவே இருப்பாய், அவன் உன்னை அடக்கி ஆளுவான்” என்றார்.
17 பின்பு அவர் ஆதாமிடம்,* “நீ உன் மனைவியின் பேச்சைக் கேட்டு, ‘சாப்பிடக் கூடாது’ என்று நான் சொல்லியிருந்த மரத்தின் பழத்தைச்+ சாப்பிட்டதால் இந்த நிலம் சபிக்கப்பட்டிருக்கும்.+ வயிற்றுப்பிழைப்புக்காக உன் வாழ்நாளெல்லாம் நீ சிரமப்பட்டு வேலை செய்ய வேண்டியிருக்கும்.+ 18 நிலத்தில் முட்செடிகளும் முட்புதர்களும் முளைக்கும். அதில் விளைவதைத்தான் நீ சாப்பிட வேண்டும். 19 நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால்+ மண்ணுக்குப் போகும்வரை நெற்றி வியர்வை சிந்திதான் உணவு சாப்பிடுவாய். நீ மண்ணாக இருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய்”+ என்றார்.
20 அதன்பின், ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள்* என்று பெயர் வைத்தான். ஏனென்றால், அவள்தான் உயிருள்ள எல்லாருக்கும் தாய்.+ 21 கடவுளாகிய யெகோவா நீளமான தோல் உடைகளைச்+ செய்து ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும் கொடுத்தார். 22 பின்பு, கடவுளாகிய யெகோவா இப்படிச் சொன்னார்: “இதோ, நன்மை தீமையைத் தெரிந்துகொள்வதில்* மனிதன் நம்மைப் போல ஆகிவிட்டான்.+ இப்போது அவன் வாழ்வுக்கான மரத்தின் பழத்தையும்+ பறித்துச் சாப்பிட்டு என்றென்றும் வாழாதபடி,—” 23 இப்படிச் சொல்லிவிட்டு, கடவுளாகிய யெகோவா அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து+ துரத்திவிட்டார். மண்ணிலிருந்து உருவாக்கப்பட்ட அவனை+ மண்ணிலேயே வேலை செய்வதற்காகத் துரத்திவிட்டார். 24 அவனைத் துரத்திய பின்பு, வாழ்வுக்கான மரத்துக்குப் போகிற வழியைக் காவல் காப்பதற்கு ஏதேன் தோட்டத்தின் கிழக்கே கேருபீன்களை+ நிறுத்தினார். சுடர்விட்டபடி எப்போதும் சுழன்றுகொண்டிருந்த வாளையும் அங்கே வைத்தார்.
4 பின்பு, ஆதாம் தன் மனைவி ஏவாளோடு உறவுகொண்டான். அவள் கர்ப்பமாகி காயீனைப்+ பெற்றெடுத்தாள்.+ அப்போது, “யெகோவாவின் உதவியால் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தேன்” என்று சொன்னாள். 2 பிற்பாடு, அவள் இன்னொரு மகனைப் பெற்றெடுத்தாள். அவன்தான் காயீனின் தம்பி ஆபேல்.+
ஆபேலும் காயீனும் வளர்ந்து ஆளானார்கள். ஆபேல் ஆடுகளை மேய்த்துவந்தான், காயீன் விவசாயம் செய்துவந்தான். 3 சில காலம் கழித்து, நிலத்தில் விளைந்த சில பொருள்களை காயீன் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான். 4 ஆனால், ஆபேல் தன்னுடைய ஆடுகளின் முதல் குட்டிகளில் சிலவற்றை,+ அவற்றின் கொழுப்போடு சேர்த்துக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவன் காணிக்கையையும் யெகோவா ஏற்றுக்கொண்டார்.+ 5 ஆனால், காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் ஏற்றுக்கொள்ளவே இல்லை. அதனால், காயீனுக்குப் பயங்கர கோபம் வந்தது, அவன் முகத்தைத் தொங்கப்போட்டுக்கொண்டான். 6 அப்போது யெகோவா காயீனிடம், “நீ ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறாய்? ஏன் முகத்தைத் தொங்கப்போட்டுக்கொண்டு இருக்கிறாய்? 7 நீ மனம் மாறி நல்லது செய்தால், உன்னை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேனா?* நீ நல்லது செய்யவில்லை என்றால், இதோ, பாவம் உன் கதவுக்கு வெளியில் பதுங்கியிருக்கிறது. அது உன்மேல் பாய்வதற்குக் காத்திருக்கிறது. ஆனால், நீ அதை அடக்குவாயா?” என்றார்.
8 பின்பு காயீன் தன்னுடைய தம்பி ஆபேலிடம், “வா, காட்டுப் பக்கம் போய்விட்டு வரலாம்” என்றான். அவர்கள் காட்டுப் பக்கம் போன பிறகு, காயீன் தன் தம்பி ஆபேலைக் கொலை செய்தான்.+ 9 பின்பு யெகோவா காயீனிடம், “உன் தம்பி ஆபேல் எங்கே?” என்று கேட்டார். அதற்கு அவன், “எனக்குத் தெரியாது. என் தம்பிக்கு நான் என்ன காவல்காரனா?” என்று கேட்டான். 10 அப்போது கடவுள், “நீ என்ன காரியம் செய்திருக்கிறாய்? இதோ! உன் தம்பியின் இரத்தம் என்னிடம் நீதி கேட்டு இந்த மண்ணிலிருந்து கதறுகிறது.+ 11 நான் உன்னைச் சபிக்கிறேன்; உன் தம்பியின் இரத்தத்தை உன் கையிலிருந்து வாங்கிக் குடித்த இந்த மண்ணைவிட்டு உன்னைத் துரத்துகிறேன்.+ 12 நீ நிலத்தில் பயிர் செய்தாலும் உனக்கு விளைச்சல் கிடைக்காது. இந்தப் பூமியில் நாடோடியாக அலைந்து திரிவாய்” என்றார். 13 அதற்கு காயீன் யெகோவாவிடம், “நான் செய்த குற்றத்துக்கு நீங்கள் தருகிற தண்டனையை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியாது. 14 இன்று நீங்கள் இந்த மண்ணைவிட்டு என்னைத் துரத்துகிறீர்கள். இனி நான் உங்கள் முகத்துக்கு முன்னால் நிற்க முடியாது. இந்தப் பூமியில் நாடோடியாகத்தான் அலைந்து திரிய வேண்டியிருக்கும். என்னை யாராவது பார்த்தால் கண்டிப்பாகக் கொன்றுவிடுவார்களே” என்றான். 15 அதற்கு யெகோவா, “அப்படியென்றால், காயீனைக் கொலை செய்கிறவன் ஏழு மடங்கு பழிவாங்கப்படுவான்” என்றார்.
காயீனைப் பார்க்கிற எவனும் அவனை அடித்துக் கொல்லாமல் இருப்பதற்காக, யெகோவா காயீனுக்காக ஓர் அடையாளத்தைக் கொடுத்தார்.* 16 அப்போது, யெகோவாவின் முன்னிலையிலிருந்து காயீன் புறப்பட்டுப் போய், ஏதேனுக்குக்+ கிழக்கே இருந்த நோத்* தேசத்தில் குடியேறினான்.
17 அதன்பின், காயீன் தன் மனைவியோடு+ உறவுகொண்டான். அவள் கர்ப்பமாகி ஏனோக்கைப் பெற்றாள். பின்பு, காயீன் ஒரு நகரத்தைக் கட்டத் தொடங்கி, அதற்குத் தன்னுடைய மகன் ஏனோக்கின் பெயரை வைத்தான். 18 பிற்பாடு, ஏனோக்குக்கு ஈராத் என்ற மகன் பிறந்தான். ஈராத்துக்கு மெகுயவேல் பிறந்தான். மெகுயவேலுக்கு மெத்தூசவேல் பிறந்தான். மெத்தூசவேலுக்கு லாமேக்கு பிறந்தான்.
19 லாமேக்குக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியின் பெயர் ஆதாள், இரண்டாம் மனைவியின் பெயர் சில்லாள். 20 ஆதாள் யாபாலைப் பெற்றெடுத்தாள். கூடாரங்களில் தங்கி கால்நடைகளை வளர்த்த முதல் மனிதன் யாபால்தான். 21 அவனுடைய சகோதரன் பெயர் யூபால். யாழும் குழலும் வாசித்த முதல் மனிதன் யூபால்தான். 22 சில்லாள், தூபால்-காயீனைப் பெற்றெடுத்தாள். அவன் எல்லாவித செம்புக் கருவிகளையும் இரும்புக் கருவிகளையும் செய்தான். தூபால்-காயீனின் சகோதரி பெயர் நாமாள். 23 பின்பு, லாமேக்கு தன் மனைவிகளான ஆதாளையும் சில்லாளையும் பார்த்து,
“லாமேக்கின் மனைவிகளே, கேளுங்கள்.
என் வார்த்தைகளுக்குக் காதுகொடுங்கள்:
ஒரு மனுஷனைக் கொன்றேன், என்னைக் காயப்படுத்தியதற்காக.
ஆம், ஓர் இளைஞனைக் கொன்றேன், என்னை அடித்ததற்காக.
என்று சொன்னான்.
25 ஆதாம் தன் மனைவியோடு மறுபடியும் உறவுகொண்டான், அவள் ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். அப்போது அவள், “ஆபேலைக் காயீன் கொலை செய்ததால்+ அவனுக்குப் பதிலாகக் கடவுள் எனக்கு இன்னொரு வாரிசைக் கொடுத்திருக்கிறார்” என்று சொல்லி அவனுக்கு சேத்*+ என்று பெயர் வைத்தாள். 26 சேத்துக்கும் ஒரு மகன் பிறந்தான். சேத் அவனுக்கு ஏனோஸ்+ என்று பெயர் வைத்தார். அந்தச் சமயத்தில், ஜனங்கள் யெகோவாவின் பெயரைக் களங்கப்படுத்த* ஆரம்பித்தார்கள்.
5 ஆதாமுடைய வம்சத்தைப் பற்றிய பதிவு இதுதான். ஆதாமைக் கடவுள் படைத்தபோது* அவனை அவருடைய சாயலில் படைத்தார்.+ 2 ஆணையும் பெண்ணையும் கடவுள் படைத்தார்.+ அவர்களைப் படைத்தபோது*+ அவர்களை ஆசீர்வதித்து, மனித இனம்* என்று அழைத்தார்.
3 ஆதாமுக்கு 130 வயதானபோது அவனைப் போலவே, அவனுடைய சாயலில் ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு சேத்+ என்று ஆதாம் பெயர் வைத்தான். 4 சேத் பிறந்த பின்பு, ஆதாம் 800 வருஷங்கள் வாழ்ந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றான். 5 ஆதாம் மொத்தம் 930 வருஷங்கள் வாழ்ந்தபின் இறந்துபோனான்.+
6 சேத்துக்கு 105 வயதானபோது அவருக்கு ஏனோஸ்+ பிறந்தார். 7 ஏனோஸ் பிறந்த பின்பு, சேத் 807 வருஷங்கள் வாழ்ந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றார். 8 சேத் மொத்தம் 912 வருஷங்கள் வாழ்ந்தபின் இறந்துபோனார்.
9 ஏனோசுக்கு 90 வயதானபோது அவருக்கு கேனான் பிறந்தார். 10 கேனான் பிறந்த பின்பு, ஏனோஸ் 815 வருஷங்கள் வாழ்ந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றார். 11 ஏனோஸ் மொத்தம் 905 வருஷங்கள் வாழ்ந்தபின் இறந்துபோனார்.
12 கேனானுக்கு 70 வயதானபோது அவருக்கு மகலாலெயேல்+ பிறந்தார். 13 மகலாலெயேல் பிறந்த பின்பு, கேனான் 840 வருஷங்கள் வாழ்ந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றார். 14 கேனான் மொத்தம் 910 வருஷங்கள் வாழ்ந்தபின் இறந்துபோனார்.
15 மகலாலெயேலுக்கு 65 வயதானபோது அவருக்கு யாரேத்+ பிறந்தார். 16 யாரேத் பிறந்த பின்பு, மகலாலெயேல் 830 வருஷங்கள் வாழ்ந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றார். 17 மகலாலெயேல் மொத்தம் 895 வருஷங்கள் வாழ்ந்தபின் இறந்துபோனார்.
18 யாரேத்துக்கு 162 வயதானபோது அவருக்கு ஏனோக்கு+ பிறந்தார். 19 ஏனோக்கு பிறந்த பின்பு, யாரேத் 800 வருஷங்கள் வாழ்ந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றார். 20 யாரேத் மொத்தம் 962 வருஷங்கள் வாழ்ந்தபின் இறந்துபோனார்.
21 ஏனோக்குக்கு 65 வயதானபோது அவருக்கு மெத்தூசலா+ பிறந்தார். 22 மெத்தூசலா பிறந்த பின்பு, ஏனோக்கு 300 வருஷங்கள் வாழ்ந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றார். அவர் உண்மைக் கடவுளுடைய* வழியில் தொடர்ந்து நடந்துவந்தார்.* 23 ஏனோக்கு மொத்தம் 365 வருஷங்கள் வாழ்ந்தார். 24 அவர் உண்மைக் கடவுளுடைய வழியில் தொடர்ந்து நடந்துவந்தார்.*+ அதன்பின் யாரும் அவரைப் பார்க்கவில்லை. ஏனென்றால், கடவுள் அவரை எடுத்துக்கொண்டார்.+
25 மெத்தூசலாவுக்கு 187 வயதானபோது அவருக்கு லாமேக்கு+ பிறந்தார். 26 லாமேக்கு பிறந்த பின்பு, மெத்தூசலா 782 வருஷங்கள் வாழ்ந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றார். 27 மெத்தூசலா மொத்தம் 969 வருஷங்கள் வாழ்ந்தபின் இறந்துபோனார்.
28 லாமேக்குக்கு 182 வயதானபோது அவருக்கு ஒரு மகன் பிறந்தான். 29 அப்போது அவர், “யெகோவா சபித்த இந்த மண்ணில்+ நாம் படாத பாடுபடுகிறோம்; ஆனால், இவன் நமக்கு ஆறுதல்* தருவான்” என்று சொல்லி அவனுக்கு நோவா*+ என்று பெயர் வைத்தார். 30 நோவா பிறந்த பின்பு, லாமேக்கு 595 வருஷங்கள் வாழ்ந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றார். 31 லாமேக்கு மொத்தம் 777 வருஷங்கள் வாழ்ந்தபின் இறந்துபோனார்.
32 நோவாவுக்கு 500 வயதான பின்பு அவருக்கு சேம்,+ காம்,+ யாப்பேத்+ என்ற மகன்கள் பிறந்தார்கள்.
6 மனிதர்கள் பூமியில் ஏராளமாகப் பெருக ஆரம்பித்தார்கள். அவர்களுக்குப் பெண் பிள்ளைகள் பிறந்தார்கள். 2 பூமியிலிருந்த பெண்கள் அழகாக இருப்பதைத் தேவதூதர்கள்*+ கவனித்தார்கள். அதனால், தங்களுக்குப் பிடித்த பெண்களையெல்லாம் தங்களுடைய மனைவிகளாக ஆக்கிக்கொண்டார்கள். 3 அப்போது யெகோவா, “மனுஷனை நான் காலமெல்லாம் இப்படியே பொறுத்துக்கொள்ள மாட்டேன்.+ ஏனென்றால், அவன் பாவமுள்ளவன்.* அவன் வாழப்போவது இன்னும் 120 வருஷங்கள்தான்” என்று சொன்னார்.+
4 கடவுள் அதைச் சொன்னபோது, பூமியில் ராட்சதர்கள்* இருந்தார்கள். அந்தக் காலத்தில், பூமியிலிருந்த பெண்களோடு தேவதூதர்கள் தொடர்ந்து உறவுகொண்டார்கள். அவர்களுக்கு மகன்கள் பிறந்தார்கள். இந்த மகன்கள்தான் பெரிய பலசாலிகளாகவும், பிரபலமானவர்களாகவும் இருந்தார்கள்.
5 பூமியில் வாழ்ந்த மனிதர்கள் மிக மோசமாக நடந்துகொண்டதையும், அவர்களுடைய உள்ளத்தின் எண்ணங்களும் ஆசைகளும் எப்போதும் மோசமாகவே இருந்ததையும்*+ யெகோவா கவனித்தார். 6 யெகோவா பூமியில் படைத்த மனிதர்களை நினைத்து வருத்தப்பட்டார், உள்ளத்தில் மிகவும் வேதனைப்பட்டார்.+ 7 அதனால் யெகோவா, “நான் படைத்த மனுஷர்களை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது, அவர்களை இந்தப் பூமியிலிருந்து அடியோடு அழிக்கப்போகிறேன். வீட்டு விலங்குகள், ஊரும் பிராணிகள், பறக்கும் உயிரினங்கள் எல்லாவற்றோடும் சேர்த்து அவர்களை அழிக்கப்போகிறேன்” என்றார். 8 ஆனால், நோவா யெகோவாவுக்குப் பிரியமானவராக இருந்தார்.
9 நோவாவின் வரலாறு இதுதான்.
நோவா நீதிமானாக இருந்தார்.+ அவருடைய காலத்தில் வாழ்ந்த ஜனங்களில் அவர் குற்றமற்றவராக இருந்தார். அவர் உண்மைக் கடவுளின் வழியில் நடந்தார்.*+ 10 சேம், காம், யாப்பேத் என்ற மூன்று மகன்கள் அவருக்குப் பிறந்தார்கள்.+ 11 பூமி சீரழிந்து கிடந்ததை உண்மைக் கடவுள் பார்த்தார். பூமியெங்கும் வன்முறை நடந்தது. 12 கடவுள் பூமியைப் பார்த்தபோது, அது சீரழிந்து கிடந்தது.+ பூமியில் மனிதர்கள் எல்லாருடைய நடத்தையும் படுமோசமாக இருந்தது.+
13 அப்போது நோவாவிடம் கடவுள், “எல்லா உயிர்களையும் அழிக்க வேண்டுமென்று நான் முடிவுசெய்துவிட்டேன். ஏனென்றால், இந்தப் பூமியில் எங்கு பார்த்தாலும் மனுஷர்கள் வன்முறையில் இறங்குகிறார்கள். அதனால், அவர்களையும் இந்தப் பூமியையும் நான் நாசமாக்கப்போகிறேன்.+ 14 கொப்பேர்* மரத்தால் நீ ஒரு பேழையை* கட்டு.+ அதில் அறைகளை அமைத்து, அதன் உள்ளேயும் வெளியேயும் தார் பூசு.+ 15 பேழையின் நீளம் 300 முழமும், அகலம் 50 முழமும், உயரம் 30 முழமுமாக* இருக்க வேண்டும். 16 வெளிச்சம் வருவதற்காக பேழையின் கூரைக்குக் கீழே ஒரு முழம் விட்டு ஜன்னல்* வைக்க வேண்டும். பேழையின் பக்கவாட்டில் ஒரு கதவு வைக்க வேண்டும்.+ கீழ்த்தளம், நடுத்தளம், மேல்தளம் என மூன்று தளங்களையும் அமைக்க வேண்டும்.
17 வானத்தின் கீழிருக்கிற எல்லா உயிர்களையும்* அழிப்பதற்கு பூமியின் மேல் நான் பெரிய வெள்ளத்தைக்+ கொண்டுவரப்போகிறேன். அப்போது, பூமியிலுள்ள எல்லா உயிர்களும் இறந்துபோகும்.+ 18 ஆனால், நான் உன்னோடு ஒரு ஒப்பந்தம் செய்கிறேன். நீயும், உன் மனைவியும், உன் மகன்களும், உன் மருமகள்களும் பேழைக்குள் போக வேண்டும்.+ 19 உன்னோடு சேர்த்து மற்ற உயிர்களையும் காப்பாற்றப்போகிறேன். அதனால், ஒவ்வொரு உயிரினத்திலும் ஆண், பெண் என ஒரு ஜோடியைப் பேழைக்குள் கொண்டுபோ.+ 20 பறக்கும் உயிரினங்களிலும் வீட்டு விலங்குகளிலும் ஊரும் பிராணிகளிலும் அந்தந்த இனத்தில்* ஒவ்வொரு ஜோடியைப் பேழைக்குள் கொண்டுபோ. அவற்றின் உயிரையும் நான் காப்பாற்றப்போகிறேன்.+ 21 நீயும் மற்ற உயிரினங்களும் சாப்பிடுவதற்குத் தேவைப்படும் எல்லா வகையான உணவையும்+ சேர்த்து வைத்து, அவற்றைப் பேழைக்குள் கொண்டுபோ” என்று சொன்னார்.
22 கடவுள் சொன்ன எல்லாவற்றையும் நோவா செய்தார். அவர் அப்படியே செய்தார்.+
7 அதன்பின் யெகோவா நோவாவிடம், “இந்தத் தலைமுறையிலேயே நீதான் என் பார்வையில் நீதிமானாக இருக்கிறாய். அதனால், நீ உன் குடும்பத்தோடு பேழைக்குள் போ.+ 2 சுத்தமான மிருகங்களில்,* ஒவ்வொரு இனத்திலும்* ஆண், பெண் என ஏழு மிருகங்களை* கொண்டுபோ. அசுத்தமான+ மிருகங்களில், ஒவ்வொரு இனத்திலும் ஆண், பெண் என இரண்டு மிருகங்களை மட்டும் கொண்டுபோ. 3 பறக்கும் உயிரினங்களில் ஆண், பெண் என ஏழு உயிரினங்களை* கொண்டுபோ. அந்த எல்லா இனங்களும் பூமியிலிருந்து அடியோடு அழிந்துபோகாதபடி அவற்றைப் பேழைக்குள் கொண்டுபோ.+ 4 இன்னும் ஏழே நாட்களில், இந்தப் பூமியில் நாற்பது நாட்களுக்கு இரவும் பகலும்+ மழை பெய்ய வைப்பேன்.+ நான் படைத்த எல்லா உயிர்களையும் இந்தப் பூமியிலிருந்து அடியோடு அழிப்பேன்”+ என்று சொன்னார். 5 யெகோவா சொன்ன எல்லாவற்றையும் நோவா செய்தார்.
6 நோவாவுக்கு 600 வயதானபோது பூமியில் பெரிய வெள்ளம் வந்தது.+ 7 அது வருவதற்கு முன்பு நோவாவும் அவருடைய மனைவியும் மகன்களும் மருமகள்களும் பேழைக்குள் போனார்கள்.+ 8 நோவாவுக்குக் கடவுள் கட்டளை கொடுத்தபடியே, சுத்தமான மிருகங்கள், அசுத்தமான மிருகங்கள், பறக்கும் உயிரினங்கள், ஊரும் பிராணிகள் என எல்லாமே+ 9 ஆணும் பெண்ணுமாக ஜோடி ஜோடியாய்ப் பேழைக்குள் நோவாவிடம் போயின. 10 ஏழு நாட்கள் கழித்து பூமியில் பெரிய வெள்ளம் வந்தது.
11 நோவாவுக்கு 600 வயதானபோது, அந்த வருஷத்தின் இரண்டாம் மாதம், 17-ஆம் நாளில், வானத்திலிருந்த மாபெரும் அணைக்கட்டுகள் உடைந்து* அதன் மதகுகள் திறந்தன.+ 12 நாற்பது நாட்கள் இரவும் பகலும் விடாமல் மழை கொட்டியது. 13 அதே நாளில், நோவாவும் அவருடைய மனைவியும் அவருடைய மகன்களான சேம், காம், யாப்பேத் ஆகியவர்களும்,+ அவர்களுடைய மனைவிகள் மூன்று பேரும் பேழைக்குள் போனார்கள்.+ 14 எல்லா காட்டு மிருகங்களையும், எல்லா வீட்டு விலங்குகளையும், ஊருகிற எல்லா பிராணிகளையும், எல்லா பறவைகளையும், இறக்கையுள்ள எல்லா உயிரினங்களையும் அந்தந்த இனத்தின்படியே பேழைக்குள் அவர்கள் கொண்டுபோனார்கள். 15 எல்லா உயிரினங்களுமே* ஜோடி ஜோடியாக நோவாவின் பேழைக்குள் போயின. 16 நோவாவுக்குக் கடவுள் கொடுத்த கட்டளைப்படியே, எல்லா உயிரினங்களும் ஆணும் பெண்ணுமாகப் பேழைக்குள் போயின. அதன் பின்பு பேழையின் கதவை யெகோவா மூடினார்.
17 பூமியில் நாற்பது நாட்களுக்கு விடாமல் மழை கொட்டியது, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நீர்மட்டம் உயர்ந்துகொண்டே போனது. அதனால் பேழை மேலே எழும்பி மிதக்க ஆரம்பித்தது. 18 தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் பூமி வெள்ளக்காடானது, ஆனால் பேழை தண்ணீரில் மிதந்துகொண்டிருந்தது. 19 தண்ணீர் பெருகிக்கொண்டே போனதால் பூமியில் இருந்த உயரமான மலைகளெல்லாம் மூழ்கிவிட்டன.+ 20 மலைகளுக்கு மேலே 22 அடி* உயரத்துக்குத் தண்ணீர் பெருகியது.
21 அதனால், பறக்கும் உயிரினங்கள், வீட்டு விலங்குகள், காட்டு மிருகங்கள், கூட்டங்கூட்டமாகப் போகும் சிறு பிராணிகள் என பூமியிலிருந்த எல்லா உயிரினங்களும் அழிந்தன.+ அதோடு, எல்லா மனிதர்களும் இறந்துபோனார்கள்.+ 22 நிலத்தில் வாழ்ந்த சுவாசமுள்ள+ எல்லாமே அழிந்தன. 23 மனிதர்கள், மிருகங்கள், ஊரும் பிராணிகள், பறக்கும் உயிரினங்கள் என பூமியிலிருந்த எல்லா உயிர்களையும் கடவுள் அழித்தார். அவற்றைப் பூமியிலிருந்து அடியோடு அழித்தார்.+ நோவாவின் குடும்பமும் அவருடன் பேழையிலிருந்த உயிரினங்களும் மட்டும்தான் உயிர்பிழைக்க முடிந்தது.+ 24 பூமி 150 நாட்களுக்குத் தண்ணீரில் மூழ்கியிருந்தது.+
8 ஆனால், நோவாவுக்கும் அவரோடு பேழையில் இருந்த காட்டு மிருகங்கள், வீட்டு விலங்குகள் எல்லாவற்றுக்கும் கடவுள் கருணை காட்டினார்.+ பின்பு, பூமியில் காற்றை வீச வைத்தார், அப்போது தண்ணீர் குறைய ஆரம்பித்தது. 2 வானத்திலிருந்த அணைக்கட்டுகளும்* மதகுகளும் மூடப்பட்டன. அதனால், மழை கொட்டுவது நின்றது.+ 3 பூமியிலிருந்த தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக வடியத் தொடங்கியது. 150 நாட்கள் கழித்து தண்ணீர் மட்டம் குறைந்திருந்தது. 4 ஏழாம் மாதம் 17-ஆம் நாளில், பேழை அரராத் மலையில் வந்து நின்றது. 5 பத்தாம் மாதம்வரை தண்ணீர் வடிந்துகொண்டே வந்தது. பத்தாம் மாதம் முதலாம் நாளில், மலைகளின் உச்சிகள் தெரிய ஆரம்பித்தன.+
6 நோவா 40 நாட்களுக்குப் பின்பு பேழையின் ஜன்னலைத்+ திறந்து, 7 ஓர் அண்டங்காக்கையை வெளியே விட்டார். பூமியிலிருந்த தண்ணீர் வற்றும்வரை அது போவதும் வருவதுமாக இருந்தது.
8 பின்பு, தண்ணீர் வடிந்துவிட்டதா என்று தெரிந்துகொள்ள நோவா ஒரு புறாவை அனுப்பினார். 9 பூமியெங்கும் இன்னும் தண்ணீர் நிறைந்திருந்ததால் புறாவுக்கு உட்கார இடமே கிடைக்கவில்லை.+ அதனால், அது பேழைக்கே திரும்பி வந்தது. நோவா தன் கையை நீட்டி அதைப் பிடித்து பேழைக்குள் எடுத்துக்கொண்டார். 10 இன்னும் ஏழு நாட்கள் கழித்து, அந்தப் புறாவைப் பேழையிலிருந்து மறுபடியும் வெளியே விட்டார். 11 அது பசுமையான ஒலிவ இலையைக் கொத்திக்கொண்டு சாயங்காலத்தில் அவரிடம் திரும்பி வந்தது. அதைப் பார்த்தபோது, பூமியிலிருந்த தண்ணீர் வடிந்துவிட்டது என்பதை நோவா தெரிந்துகொண்டார்.+ 12 ஏழு நாட்கள் கழித்து, அந்தப் புறாவை மறுபடியும் வெளியே விட்டார். ஆனால், அது திரும்பி வரவே இல்லை.
13 நோவாவுக்கு 601 வயதானபோது,+ அந்த வருஷத்தின் முதலாம் மாதம், முதலாம் நாளில் பூமியிலிருந்த தண்ணீர் வடிந்திருந்தது. பேழையின் கூரையை நோவா திறந்து பார்த்தபோது, நிலம் காய்ந்துவருவது தெரிந்தது. 14 இரண்டாம் மாதம் 27-ஆம் நாளில் பூமி நன்றாகக் காய்ந்திருந்தது.
15 அப்போது கடவுள் நோவாவிடம், 16 “நீயும், உன் மனைவியும், உன் மகன்களும், உன் மருமகள்களும் பேழையிலிருந்து வெளியே வாருங்கள்.+ 17 உன்னோடு இருக்கிற மிருகங்கள், பறக்கும் உயிரினங்கள், ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும்+ நீ வெளியே கொண்டுவா. அவையெல்லாம் பூமியில் ஏராளமாகப் பெருகட்டும்”+ என்று சொன்னார்.
18 அதனால், நோவாவும் அவருடைய மனைவியும் மகன்களும்+ மருமகள்களும் பேழையிலிருந்து வெளியே வந்தார்கள். 19 எல்லா மிருகங்களும், ஊருகிற எல்லா பிராணிகளும், பறக்கிற எல்லா உயிரினங்களும், நிலத்தில் வாழ்கிற மற்ற எல்லா உயிரினங்களும் அந்தந்த இனத்தின்படி பேழையிலிருந்து வெளியே வந்தன.+ 20 பின்பு, யெகோவாவுக்காக நோவா ஒரு பலிபீடத்தைக் கட்டினார்.+ சுத்தமான மிருகங்கள் சிலவற்றையும் சுத்தமான பறவைகள்+ சிலவற்றையும் எடுத்து அதன்மேல் தகன பலி செலுத்தினார்.+ 21 அது யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருந்தது. அதனால் யெகோவா தன் உள்ளத்தில், “மனுஷர்கள் செய்கிற தவறுக்காக இனி ஒருபோதும் இந்தப் பூமியைச் சபிக்க மாட்டேன்.+ சிறு வயதிலிருந்தே மனுஷர்களுடைய உள்ளத்தின் ஆசைகள் மோசமாக இருக்கின்றன.*+ இப்போது செய்ததுபோல், எல்லா உயிர்களையும் இனி நான் ஒருபோதும் அழிக்க மாட்டேன்.+ 22 பூமியில் இனி விதைப்பும் அறுப்பும், குளிரும் வெப்பமும், கோடைக் காலமும் குளிர் காலமும், பகலும் இரவும் எப்போதுமே இருக்கும்”+ என்று சொல்லிக்கொண்டார்.
9 நோவாவையும் அவருடைய மகன்களையும் கடவுள் ஆசீர்வதித்து, “நீங்கள் பிள்ளைகளைப் பெற்று, ஏராளமாகப் பெருகி, பூமியை நிரப்புங்கள்.+ 2 பூமியிலுள்ள எல்லா மிருகங்களும், பறக்கிற எல்லா உயிரினங்களும், நிலத்தில் வாழ்கிற மற்ற எல்லா உயிரினங்களும், கடலிலுள்ள எல்லா மீன்களும் முன்பு போலவே உங்களைப் பார்த்துப் பயப்படும். அவற்றை இப்போது உங்கள் கையில்* ஒப்படைக்கிறேன்.+ 3 பூமியில் வாழும் எல்லா மிருகங்களையும் நீங்கள் சாப்பிடலாம்.+ நான் உங்களுக்குச் செடிகொடிகளைத் தந்தது போல இவை எல்லாவற்றையும் தருகிறேன்.+ 4 ஆனால், இறைச்சியை நீங்கள் இரத்தத்தோடு சாப்பிடக் கூடாது;+ ஏனென்றால், இரத்தம்தான் உயிர்.+ 5 நீங்கள் கொலை செய்யப்பட்டால்,* உங்கள் உயிருக்காக நான் பழிவாங்குவேன். மிருகமாக இருந்தாலும் சரி, மனுஷனாக இருந்தாலும் சரி, நான் பழிவாங்குவேன். தன் சகோதரனை யார் கொலை செய்தாலும் அந்தச் சகோதரனின் உயிருக்காக நான் அவனைப் பழிவாங்குவேன்.+ 6 ஒரு மனுஷனைக் கொலை செய்கிறவன் இன்னொரு மனுஷனால் கொலை செய்யப்படுவான்.*+ ஏனென்றால், மனுஷனை என்னுடைய சாயலில் படைத்திருக்கிறேன்.*+ 7 நீங்கள் பிள்ளைகளைப் பெற்று, ஏராளமாகப் பெருகி, இந்தப் பூமியை நிரப்புங்கள்” என்று சொன்னார்.+
8 பின்பு, நோவாவிடமும் அவருடன் இருந்த மகன்களிடமும் கடவுள் இப்படிச் சொன்னார்: 9 “இப்போது உங்களோடும் உங்கள் வம்சத்தோடும் நான் ஒரு ஒப்பந்தம் செய்கிறேன்.+ 10 உங்களுடன் இருக்கிற பறவைகள், மிருகங்கள் என எல்லா உயிரினங்களோடும், அதாவது பேழையிலிருந்து வெளியே வந்த எல்லா உயிரினங்களோடும்,+ பூமியிலுள்ள எல்லா உயிர்களோடும் நான் ஒரு ஒப்பந்தம் செய்கிறேன். 11 இனி ஒருபோதும் எல்லா உயிர்களையும் வெள்ளத்தால் அழிக்க மாட்டேன், இனி ஒருபோதும் இந்தப் பூமியை வெள்ளத்தால் நாசமாக்க மாட்டேன் என்று உங்களோடு ஒப்பந்தம் செய்கிறேன்.”+
12 அதோடு, கடவுள் இதையும் சொன்னார்: “உங்களோடும், உங்களோடு இருக்கிற எல்லா உயிரினங்களோடும், தலைமுறை தலைமுறைக்கும் நான் செய்யும் ஒப்பந்தத்துக்கு அடையாளம் இதுதான். 13 நான் ஒரு வானவில்லை மேகத்தில் வர வைக்கிறேன். இந்தப் பூமியில் வாழ்கிற எல்லாருடனும் நான் செய்கிற ஒப்பந்தத்துக்கு இதுதான் அடையாளம். 14 வானத்தில் மேகங்களை நான் வர வைக்கும்போது வானவில்லும் கண்டிப்பாக வரும். 15 அப்போது, உங்களோடும் எல்லா உயிர்களோடும் நான் செய்த ஒப்பந்தத்தை நிச்சயம் நினைத்துப் பார்ப்பேன். பூமியிலுள்ள எல்லா உயிர்களையும் அழிக்க இனி வெள்ளம் வராது.+ 16 மேகத்தில் வானவில் தெரியும்போதெல்லாம், நான் அதைப் பார்த்து, இந்தப் பூமியிலுள்ள எல்லா உயிர்களோடும் நான் செய்த நிரந்தர ஒப்பந்தத்தை நிச்சயம் நினைத்துக்கொள்வேன்.”
17 கடவுள் மறுபடியும் நோவாவிடம், “இந்தப் பூமியிலுள்ள எல்லா உயிர்களோடும் நான் செய்கிற ஒப்பந்தத்துக்கு இதுதான் அடையாளம்” என்று சொன்னார்.+
18 பேழையிலிருந்து வெளியே வந்த நோவாவின் மகன்களுடைய பெயர்கள்: சேம், காம், யாப்பேத்.+ பின்பு, காமுக்கு கானான் பிறந்தான்.+ 19 இந்த மூன்று பேரும் நோவாவின் மகன்கள். பூமியிலிருக்கிற எல்லா மனிதர்களும் இவர்களுடைய வம்சத்தில்தான் வந்தார்கள். பின்பு, மனிதர்கள் பூமி முழுவதும் பரவினார்கள்.+
20 நோவா விவசாயம் செய்ய ஆரம்பித்தார். அவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டார். 21 ஒருநாள், போதை தலைக்கேறும் அளவுக்கு அவர் திராட்சமதுவைக் குடித்துவிட்டு தன் கூடாரத்தில் உடை இல்லாமல் கிடந்தார். 22 கானானின் அப்பாவான காம் தன்னுடைய அப்பா நோவா நிர்வாணமாகக் கிடப்பதைப் பார்த்துவிட்டு, வெளியே போய்த் தன் இரண்டு சகோதரர்களிடம் சொன்னான். 23 உடனே, சேமும் யாப்பேத்தும் ஓர் அங்கியை எடுத்துத் தங்கள் தோள்களின் மேல் போட்டுக்கொண்டு, பின்னோக்கி நடந்துபோய், தங்களுடைய அப்பாவின் மேல் போட்டார்கள். அவர்களுடைய முகம் எதிர்ப்பக்கமாக இருந்ததால் தங்கள் அப்பா நிர்வாணமாகக் கிடப்பதை அவர்கள் பார்க்கவில்லை.
24 நோவா போதை தெளிந்து எழுந்தபோது தன் இளைய மகன் செய்ததைப் பற்றித் தெரிந்துகொண்டார். 25 அப்போது அவர்,
“கானான் சபிக்கப்பட்டவன்.+
அவனுடைய சகோதரர்களுக்கு அவன் அடிமையாகட்டும்”*+
என்று சொன்னார்.
26 அதோடு அவர்,
“சேமின் கடவுளாகிய யெகோவாவைப் போற்றுகிறேன்,
சேமுக்கு கானான் அடிமையாகட்டும்.+
27 யாப்பேத்துக்குக் கடவுள் மிகப் பெரிய இடத்தைக் கொடுக்கட்டும்,
அவன் சேமின் கூடாரங்களில் குடியிருக்கட்டும்.
கானான் யாப்பேத்துக்கும் அடிமையாகட்டும்”
என்று சொன்னார்.
28 பெருவெள்ளத்துக்குப் பின்பு, நோவா 350 வருஷங்கள் வாழ்ந்தார்.+ 29 மொத்தம் 950 வருஷங்கள் வாழ்ந்த பின்பு நோவா இறந்துபோனார்.
10 நோவாவின் மகன்களான சேம்,+ காம், யாப்பேத் ஆகியவர்களின் வரலாறு இதுதான்.
பெருவெள்ளம் வந்த பின்பு அவர்களுக்கு மகன்கள் பிறந்தார்கள்.+ 2 யாப்பேத்தின் மகன்கள்: கோமர்,+ மாகோகு,+ மாதாய், யாவான், தூபால்,+ மேசேக்,+ தீராஸ்.+
3 கோமரின் மகன்கள்: அஸ்கினாஸ்,+ ரீப்பாத், தொகர்மா.+
4 யாவானின் மகன்கள்: எலிஷா,+ தர்ஷீஸ்,+ கித்தீம்,+ தொதானீம்.
5 இவர்களுடைய வம்சத்தார் அவரவர் மொழியின்படியும், குடும்பத்தின்படியும், தேசத்தின்படியும் தீவுகளில்* பரவியிருந்தார்கள்.
6 காமின் மகன்கள்: கூஷ், மிஸ்ராயீம்,+ பூத்,+ கானான்.+
7 கூஷின் மகன்கள்: சிபா,+ ஆவிலா, சப்தா, ராமாகு,+ சப்திகா.
ராமாகுவின் மகன்கள்: சேபா, தேதான்.
8 கூஷுக்கு நிம்ரோது பிறந்தான். இந்தப் பூமியில் நிம்ரோதுதான் முதன்முதலில் பலம்படைத்தவனாக ஆனான். 9 இவன் பெரிய* வேட்டைக்காரனாக இருந்தான், யெகோவாவையே எதிர்த்தான். அதனால்தான், “யெகோவாவையே எதிர்த்த பெரிய வேட்டைக்காரனான நிம்ரோதைப் போல” என்ற வழக்குச்சொல் வந்தது. 10 அவன் முதன்முதலாக ஆட்சி செய்த நகரங்கள்: சினேயார் தேசத்திலிருந்த+ பாபேல்,+ ஏரேக்,+ அக்காத், கல்னே. 11 அவன் அந்தத் தேசத்திலிருந்து அசீரியாவுக்குப்+ போய் நினிவே,+ ரெகொபோத்-இர், காலாக் ஆகியவற்றையும் 12 நினிவேக்கும் காலாக்குக்கும் இடையில் ரெசேனையும் கட்டினான். இதுதான் மாநகர்.*
13 மிஸ்ராயீமின் மகன்கள்: லூதீம்,+ அனாமீம், லெகாபீம், நப்தூகீம்,+ 14 பத்ருசீம்,+ கஸ்லூகிம் (இவருடைய வம்சத்தார்தான் பெலிஸ்தியர்கள்),+ கப்தோரிம்.+
15 கானானின் முதல் மகன் சீதோன்.+ இன்னொரு மகன் ஏத்.+ 16 அதன்பின் எபூசியர்கள்,+ எமோரியர்கள்,+ கிர்காசியர்கள், 17 ஏவியர்கள்,+ அர்கீயர்கள், சீநியர்கள், 18 அர்வாதியர்கள்,+ செமாரியர்கள், காமாத்தியர்கள்+ ஆகியவர்களுக்கு கானான் மூதாதை ஆனான். பிற்பாடு, இந்த கானானியர்களின் குடும்பங்கள் சிதறிவிட்டன. 19 கானானியர்களுடைய தேசத்தின் எல்லை சீதோனிலிருந்து காசாவுக்குப்+ பக்கத்திலுள்ள கேரார்+ வரையும், லாசாவுக்குப் பக்கத்திலுள்ள சோதோம், கொமோரா,+ அத்மா, செபோயீம்+ வரையும் இருந்தது. 20 குடும்பங்களின்படியும், மொழிகளின்படியும், தேசங்களின்படியும், சமுதாயங்களின்படியும் வாழ்ந்துவந்த காமின் சந்ததியார் இவர்கள்தான்.
21 சேமுக்கும் பிள்ளைகள் பிறந்தார்கள். அவன் மூத்தவனாகிய யாப்பேத்தின் சகோதரன்,* ஏபேருடைய சந்ததியாருக்கு+ மூதாதை. 22 சேமின் மகன்கள்: ஏலாம்,+ அஷூர்,+ அர்பக்சாத்,+ லூத், அராம்.+
23 அராமின் மகன்கள்: ஊத்ஸ், கூல், கேத்தெர், மாஸ்.
24 அர்பக்சாத்தின் மகன் சேலா.+ சேலாவின் மகன் ஏபேர்.
25 ஏபேருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். ஒரு மகனின் பெயர் பேலேகு,*+ ஏனென்றால் அவருடைய வாழ்நாளில்தான் ஜனங்கள் எல்லா இடங்களுக்கும் பிரிந்துபோனார்கள். இன்னொரு மகனின் பெயர் யொக்தான்.+
26 யொக்தானின் மகன்கள்: அல்மோதாத், சாலேப், ஆசர்மாவேத், யேராக்,+ 27 ஹதோராம், ஊசால், திக்லா, 28 ஓபால், அபிமாவேல், சேபா, 29 ஓப்பீர்,+ ஆவிலா, யோபாப்; இவர்கள் எல்லாரும் யொக்தானுக்குப் பிறந்தவர்கள்.
30 இவர்கள் குடியிருந்த பகுதி, மேசாமுதல் கிழக்கத்திய மலைப்பகுதியான செப்பார்வரை பரவியிருந்தது.
31 குடும்பங்களின்படியும், மொழிகளின்படியும், தேசங்களின்படியும் சமுதாயங்களின்படியும் வாழ்ந்துவந்த சேமின் சந்ததியார் இவர்கள்தான்.+
32 வம்சங்களின்படியும் தேசங்களின்படியும் வாழ்ந்துவந்த நோவாவுடைய மகன்களின் குடும்பத்தார் இவர்கள்தான். பெருவெள்ளத்துக்குப் பின்பு இவர்களுடைய சந்ததியார்தான் பூமியெங்கும் பரவினார்கள்.+
11 அப்போது, பூமியெங்கும் ஒரே மொழி இருந்தது; ஜனங்கள் ஒரே விதமான வார்த்தைகளைப் பேசினார்கள். 2 அவர்கள் கிழக்குத் திசையில் போனபோது, சினேயார் தேசத்தில்+ ஒரு சமவெளியைக் கண்டுபிடித்து அங்கே குடியேறினார்கள். 3 அப்போது அவர்கள், “நாம் செங்கல் செய்து அவற்றைச் சூளையில் சுடுவோம், வாருங்கள்” என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டார்கள். பின்பு செங்கல் செய்து அவற்றைக் கல்லுக்குப் பதிலாகப் பயன்படுத்தினார்கள், தார் வைத்து அவற்றைப் பூசினார்கள். 4 பின்பு அவர்கள், “வாருங்கள்! நாம் பூமி முழுவதும் சிதறிப்போகாமல் இருப்பதற்காக, நமக்கு ஒரு நகரத்தையும் வானத்தைத் தொடுகிற அளவுக்கு ஒரு கோபுரத்தையும் கட்டி, பேரும் புகழும் சம்பாதிப்போம்” என்று சொல்லிக்கொண்டார்கள்.+
5 மனிதர்கள் கட்டிக்கொண்டிருந்த நகரத்தையும் கோபுரத்தையும் பார்ப்பதற்காக யெகோவா கீழே இறங்கி வந்தார்.* 6 அப்போது யெகோவா, “இதோ! அவர்கள் எல்லாரும் ஒரே மொழியைப்+ பேசிக்கொண்டு ஒன்றாக இருக்கிறார்கள். அதனால்தான், இந்த வேலையைச் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இனி அவர்கள் திட்டம் போடுகிறபடியெல்லாம் செய்துவிடுவார்கள். 7 அதனால் நாம்+ இறங்கிப் போய்,* அவர்கள் ஒருவருக்கொருவர் பேசுவது புரியாதபடி அவர்களுடைய மொழியில் குழப்பத்தை ஏற்படுத்தலாம்” என்று சொன்னார். 8 அதன்படியே, யெகோவா அவர்களை அங்கிருந்து பூமி முழுவதும் சிதறிப்போக வைத்தார்.+ அதனால், அந்த நகரத்தை அவர்கள் கட்டாமல் விட்டுவிட்டார்கள். 9 அந்த இடத்துக்கு பாபேல்*+ என்ற பெயர் வைக்கப்பட்டது. ஏனென்றால், பூமியெங்கும் பேசப்பட்ட மொழியை யெகோவா குழப்பியது அந்த இடத்தில்தான். அங்கிருந்த ஜனங்களை யெகோவா பூமியெங்கும் சிதறிப்போக வைத்தார்.
பெருவெள்ளம் வந்து இரண்டு வருஷங்களுக்குப் பின்பு, சேமுக்கு 100 வயதானபோது, அவனுக்கு அர்பக்சாத்+ பிறந்தான். 11 அர்பக்சாத் பிறந்த பின்பு சேம் 500 வருஷங்கள் வாழ்ந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றான்.+
12 அர்பக்சாத்துக்கு 35 வயதானபோது அவனுக்கு சேலா+ பிறந்தான். 13 சேலா பிறந்த பின்பு அர்பக்சாத் 403 வருஷங்கள் வாழ்ந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
14 சேலாவுக்கு 30 வயதானபோது அவனுக்கு ஏபேர்+ பிறந்தான். 15 ஏபேர் பிறந்த பின்பு சேலா 403 வருஷங்கள் வாழ்ந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
16 ஏபேருக்கு 34 வயதானபோது அவனுக்கு பேலேகு+ பிறந்தான். 17 பேலேகு பிறந்த பின்பு ஏபேர் 430 வருஷங்கள் வாழ்ந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
18 பேலேகுக்கு 30 வயதானபோது அவனுக்கு ரெகூ+ பிறந்தான். 19 ரெகூ பிறந்த பின்பு பேலேகு 209 வருஷங்கள் வாழ்ந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
20 ரெகூவுக்கு 32 வயதானபோது அவனுக்கு சேரூக் பிறந்தான். 21 சேரூக் பிறந்த பின்பு ரெகூ 207 வருஷங்கள் வாழ்ந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
22 சேரூக்குக்கு 30 வயதானபோது அவனுக்கு நாகோர் பிறந்தான். 23 நாகோர் பிறந்த பின்பு சேரூக் 200 வருஷங்கள் வாழ்ந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
24 நாகோருக்கு 29 வயதானபோது அவனுக்கு தேராகு+ பிறந்தான். 25 தேராகு பிறந்த பின்பு நாகோர் 119 வருஷங்கள் வாழ்ந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
26 தேராகுக்கு 70 வயதான பின்பு, அவனுக்கு ஆபிராம்,+ நாகோர்,+ ஆரான் என்ற மகன்கள் பிறந்தார்கள்.
27 தேராகுடைய வரலாறு இதுதான்.
ஆபிராம், நாகோர், ஆரான் ஆகியவர்கள் தேராகுவின் மகன்கள்; ஆரான் லோத்துவைப்+ பெற்றார். 28 ஆரான் தன்னுடைய சொந்த நகரமாகிய ஊர்+ என்ற கல்தேயர்களின் நகரத்தில்+ தன் அப்பா தேராகுக்கு முன்பே இறந்துவிட்டார். 29 சாராய்+ என்ற பெண்ணை ஆபிராம் கல்யாணம் செய்துகொண்டார். மில்காள்+ என்ற பெண்ணை நாகோர் கல்யாணம் செய்துகொண்டார்; மில்காள் ஆரானின் மகள். ஆரானுக்கு மில்காளைத் தவிர இஸ்காள் என்ற மகளும் இருந்தாள். 30 சாராய்க்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை.+
31 பின்பு, தேராகு தன்னுடைய மகன் ஆபிராமையும், ஆரானின் மகனும் தன்னுடைய பேரனுமான லோத்துவையும்,+ ஆபிராமின் மனைவியும் தன் மருமகளுமான சாராயையும் கூட்டிக்கொண்டு, ஊர் என்ற கல்தேயர்களின் நகரத்தைவிட்டு கானான் தேசத்துக்குப்+ புறப்பட்டுப் போனார். பின்பு, அவர்கள் ஆரான்+ என்ற நகரத்துக்குப் போய் அங்கே குடியிருந்தார்கள். 32 தேராகு மொத்தம் 205 வருஷங்கள் உயிரோடு இருந்தார். பின்பு, ஆரானில் இறந்துபோனார்.
12 அப்போது யெகோவா ஆபிராமிடம், “நீ உன் தேசத்தையும், உன் சொந்தக்காரர்களையும், உன் அப்பாவின் குடும்பத்தாரையும்* விட்டுவிட்டு நான் காட்டப்போகிற தேசத்துக்குப் புறப்பட்டுப் போ.+ 2 நான் உன்னை மாபெரும் தேசமாக்குவேன், உன்னை ஆசீர்வதித்து உன் பெயரைப் பிரபலமாக்குவேன். உன் மூலமாக எல்லாருக்கும் ஆசீர்வாதம் கிடைக்கும்.+ 3 உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை நான் ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவர்களை நான் சபிப்பேன்.+ பூமியிலுள்ள எல்லா குடும்பங்களும் உன் மூலமாக நிச்சயம் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளும்”+ என்று சொன்னார்.
4 யெகோவா சொன்னபடியே ஆபிராம் அங்கிருந்து புறப்பட்டுப் போனார், லோத்துவும் அவருடன் போனார். ஆபிராம் ஆரானிலிருந்து புறப்பட்டபோது+ அவருக்கு 75 வயது. 5 ஆபிராம் தன் மனைவி சாராயோடும்,+ தன் சகோதரனின் மகன் லோத்துவோடும்,+ ஆரானிலே அவர்கள் சேர்த்துவைத்த எல்லா பொருள்களோடும்,+ சம்பாதித்த வேலைக்காரர்களோடும் கானான் தேசத்துக்குக் கிளம்பினார்.+ அவர்கள் கானான் தேசத்தின் எல்லையை அடைந்தார்கள். 6 அதன்பின் அந்தத் தேசத்துக்குள் பயணம் செய்து, சீகேம்+ நகரத்திலே பெரிய மரங்கள் இருந்த மோரே+ என்ற இடத்துக்கு வந்துசேர்ந்தார்கள். அந்தச் சமயத்தில் கானானியர்கள் அங்கு வாழ்ந்துவந்தார்கள். 7 பின்பு யெகோவா ஆபிராமுக்குத் தோன்றி, “உன்னுடைய சந்ததிக்கு+ இந்தத் தேசத்தைக் கொடுப்பேன்”+ என்று சொன்னார். அதனால், ஆபிராம் யெகோவாவுக்காக அங்கே ஒரு பலிபீடம் கட்டினார். 8 பிற்பாடு, பெத்தேல்+ நகரத்துக்குக் கிழக்கே இருந்த மலைப்பகுதிக்குப் போய் அங்கே கூடாரம் போட்டார். அதற்கு மேற்கே பெத்தேல் நகரமும் கிழக்கே ஆயி நகரமும்+ இருந்தன. அங்கு அவர் யெகோவாவுக்கு ஒரு பலிபீடம் கட்டி+ யெகோவாவின் பெயரைப் போற்றிப் புகழ்ந்தார்.+ 9 பின்பு ஆபிராம் அங்கிருந்து புறப்பட்டு, நெகேபின்+ திசையில்* பயணம் செய்தார். வழியிலே, பல இடங்களில் கூடாரம் போட்டுத் தங்கினார்.
10 அப்போது, கானான் தேசத்தில் பஞ்சம் ஏற்பட்டது. பஞ்சம் கடுமையாக இருந்ததால்,+ சில காலம்* எகிப்தில் தங்குவதற்காக ஆபிராம் புறப்பட்டுப் போனார்.+ 11 எகிப்தை நெருங்கியபோது அவர் தன் மனைவி சாராயிடம், “தயவுசெய்து நான் சொல்வதைக் கேள்! நீ பார்ப்பதற்கு ரொம்ப அழகாக இருக்கிறாய்.+ 12 அதனால் எகிப்தியர்கள் உன்னைப் பார்க்கும்போது, ‘இவள் இவனுடைய மனைவி’ என்று சொல்லி, உன்னை அடைவதற்காக என்னைக் கொன்றுவிடுவார்கள். 13 அவர்களிடம் நீ என் தங்கை என்று தயவுசெய்து சொல்லிவிடு. அப்போதுதான், அவர்கள் என்னை ஒன்றும் செய்ய மாட்டார்கள். உன்னால் நான் உயிர் பிழைப்பேன்”+ என்று சொன்னார்.
14 ஆபிராம் எகிப்துக்குள் போனவுடன், சாராய் மிக அழகாக இருப்பதை எகிப்தியர்கள் கவனித்தார்கள். 15 பார்வோனின் அதிகாரிகளும் அவளைப் பார்த்து, அவளுடைய அழகைப் பற்றி பார்வோனிடம் புகழ்ந்து பேசினார்கள். அதனால், அவள் பார்வோனின் அரண்மனைக்குக் கொண்டுபோகப்பட்டாள். 16 அவளுக்காக ஆபிராமை பார்வோன் நன்றாகக் கவனித்துக்கொண்டான். அவருக்கு ஆடுமாடுகளையும் கழுதைகளையும் வேலைக்காரர்களையும் வேலைக்காரிகளையும் ஒட்டகங்களையும் கொடுத்தான்.+ 17 ஆபிராமின் மனைவி சாராய்+ பார்வோனின் அரண்மனைக்குக் கொண்டுபோகப்பட்டதால், அவனையும் அவன் வீட்டைச் சேர்ந்தவர்களையும் யெகோவா கொடிய நோய்களால்* வாட்டினார். 18 அதனால் பார்வோன் ஆபிராமைக் கூப்பிட்டு, “நீ ஏன் இப்படிச் செய்தாய்? இவள் உன் மனைவி என்று ஏன் என்னிடம் சொல்லவில்லை? 19 ‘இவள் என் தங்கை’ என்று ஏன் சொன்னாய்?+ அதனால்தானே இவளை என் மனைவியாக்க நினைத்தேன். இதோ, உன் மனைவி! இவளைக் கூட்டிக்கொண்டு போய்விடு!” என்று சொன்னான். 20 பின்பு, ஆபிராமை அனுப்பிவிடச் சொல்லி பார்வோன் தன்னுடைய ஆட்களுக்கு ஆணையிட்டான். அதன்படியே, அவர்கள் ஆபிராமை அவருடைய மனைவியோடும் அவர்களுக்குச் சொந்தமான எல்லாவற்றோடும் அனுப்பி வைத்தார்கள்.+
13 அதன்பின், ஆபிராம் தன் மனைவியோடும் லோத்துவோடும் தன்னிடம் இருந்த எல்லாவற்றோடும் எகிப்திலிருந்து நெகேபுக்குப்+ போனார். 2 ஆபிராமிடம் ஏராளமான கால்நடைகளும் வெள்ளியும் தங்கமும் இருந்தன.+ 3 நெகேபிலிருந்து பெத்தேலுக்கு அவர் பயணம் செய்தபோது பல இடங்களில் கூடாரம் போட்டுத் தங்கினார். கடைசியில், பெத்தேல் நகரத்துக்கும் ஆயி நகரத்துக்கும்+ இடையில், ஏற்கெனவே கூடாரம் போட்டிருந்த இடத்துக்குப் போய்ச் சேர்ந்தார். 4 முன்பு அவர் பலிபீடம் கட்டியிருந்த அந்த இடத்தில் யெகோவாவின் பெயரைப் போற்றிப் புகழ்ந்தார்.
5 ஆபிராமுடன் பயணம் செய்துவந்த லோத்துவுக்கும் ஆடுமாடுகளும் கூடாரங்களும் இருந்தன. 6 அதனால், அவர்கள் ஒன்றாகக் குடியிருக்க அந்த இடம் போதவில்லை. அவர்களுக்கு ஏராளமான பொருள்கள் சேர்ந்துவிட்டதால் அவர்களால் ஒன்றாகக் குடியிருக்க முடியவில்லை. 7 இதன் காரணமாக, ஆபிராமின் மேய்ப்பர்களுக்கும் லோத்துவின் மேய்ப்பர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. (அந்தச் சமயத்தில் கானானியர்களும் பெரிசியர்களும் அந்தத் தேசத்தில் குடியிருந்தார்கள்.)+ 8 அதனால் ஆபிராம் லோத்துவிடம்,+ “உனக்கும் எனக்கும் உன் மேய்ப்பர்களுக்கும் என் மேய்ப்பர்களுக்கும் தயவுசெய்து எந்த வாக்குவாதமும் வேண்டாம். நீயும் நானும் சகோதரர்கள்தானே? 9 இந்தத் தேசத்தில் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் நீ எடுத்துக்கொள். தயவுசெய்து நாம் பிரிந்துவிடலாம். நீ இடது பக்கமாகப் போனால், நான் வலது பக்கமாகப் போவேன். நீ வலது பக்கமாகப் போனால் நான் இடது பக்கமாகப் போவேன்” என்று சொன்னார். 10 சோவார்+ வரையுள்ள யோர்தான் பிரதேசம் முழுவதையும் லோத்து பார்த்தார்.+ அது நிறைய தண்ணீர் உள்ள இடமாக இருந்தது. (சோதோமையும் கொமோராவையும் யெகோவா அழிப்பதற்கு முன்பு அது அப்படி இருந்தது.) யெகோவாவின் தோட்டத்தைப் போலவும்+ எகிப்து தேசத்தைப் போலவும் அது இருந்தது. 11 யோர்தான் பிரதேசம் முழுவதையும் லோத்து தேர்ந்தெடுத்தார். பின்பு, கிழக்கே போய்க் குடியிருந்தார். இப்படி, ஆபிராமும் லோத்துவும் ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்துபோனார்கள். 12 ஆபிராம் கானான் தேசத்தில் குடியிருந்தார். ஆனால் லோத்து, யோர்தான் பிரதேசத்தில் இருந்த நகரங்களில் குடியிருந்தார்.+ கடைசியாக, அவர் சோதோமுக்குப் பக்கத்தில் கூடாரம் போட்டார். 13 சோதோமிலிருந்த ஆட்கள் பொல்லாதவர்களாக இருந்தார்கள். அவர்கள் யெகோவாவுக்கு எதிராகப் பயங்கரமான பாவங்களைச் செய்துவந்தார்கள்.+
14 ஆபிராமிடமிருந்து லோத்து பிரிந்துபோன பின்பு யெகோவா ஆபிராமிடம், “நீ இருக்கும் இடத்திலிருந்து தயவுசெய்து வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் மேற்கிலும் பார். 15 நீ பார்க்கும் எல்லா இடங்களையும் உனக்கும் உன் சந்ததிக்கும் நிரந்தர சொத்தாகத் தருவேன்.+ 16 உன் சந்ததியைப் பூமியிலுள்ள மணலைப் போலப் பெருக வைப்பேன். பூமியிலுள்ள மணலை யாராவது எண்ண முடிந்தால்தான் உன் சந்ததியையும் எண்ண முடியும்.+ 17 நீ புறப்பட்டுப் போய் அந்தத் தேசம் முழுவதையும் சுற்றிப் பார். நான் அதை உனக்குத் தருவேன்” என்று சொன்னார். 18 ஆபிராம் தொடர்ந்து கூடாரங்களில் வாழ்ந்துவந்தார். பிற்பாடு, எப்ரோனிலே+ பெரிய மரங்கள் இருக்கிற மம்ரே+ என்ற இடத்துக்குப் போய்க் குடியிருந்தார். அங்கே யெகோவாவுக்கு ஒரு பலிபீடம் கட்டினார்.+
14 அம்ராப்பேல் சினேயாரின்+ ராஜாவாகவும், ஆரியோகு ஏலாசாரின் ராஜாவாகவும், கெதர்லாகோமேர்+ ஏலாமின்+ ராஜாவாகவும், திதியால் கோயிமின் ராஜாவாகவும் இருந்தார்கள். 2 இவர்கள் சோதோமின்+ ராஜா பேராவுக்கும், கொமோராவின்+ ராஜா பிர்சாவுக்கும், அத்மாவின் ராஜா சிநெயாவுக்கும், செபோயீமின்+ ராஜா செமேபருக்கும், பேலாவின் (அதாவது, சோவாரின்) ராஜாவுக்கும் எதிராகப் போர் செய்தார்கள். 3 இவர்கள்* எல்லாரும் தங்கள் படைகளோடு சித்தீம் பள்ளத்தாக்கிலே,+ அதாவது இப்போது உப்புக் கடல்*+ இருக்கிற இடத்திலே, ஒன்றுதிரண்டார்கள்.
4 இவர்கள்* 12 வருஷங்களாக கெதர்லாகோமேர் ராஜாவுக்கு அடிபணிந்து நடந்தார்கள்; ஆனால், 13-ஆம் வருஷத்தில் கலகம் செய்தார்கள். 5 அதனால் 14-ஆம் வருஷத்தில் கெதர்லாகோமேர் ராஜாவும் அவரோடு இருந்த ராஜாக்களும் படையெடுத்து வந்து, அஸ்தரோத்-கர்னாயீமில் இருந்த ரெப்பாயீமியர்களையும், காமில் இருந்த சூசிமியர்களையும், சாவே-கீரியத்தாயீமில் இருந்த ஏமியர்களையும்,+ 6 சேயீர் மலையில்+ இருந்த ஓரியர்களையும்+ தோற்கடித்தார்கள். இவர்களை வனாந்தரத்தின் எல்லையிலுள்ள எல்-பாரான்வரை தோற்கடித்தார்கள். 7 பின்பு, அங்கிருந்து திரும்பி என்-மிஸ்பாத்துக்கு, அதாவது காதேசுக்கு,+ போய் அமலேக்கியர்களின்+ பிரதேசம் முழுவதையும் கைப்பற்றினார்கள். அதோடு, அத்சாத்சோன்-தாமாரில்+ குடியிருந்த எமோரியர்களைத்+ தோற்கடித்தார்கள்.
8 அப்போது சோதோமின் ராஜாவும், கொமோராவின் ராஜாவும், அத்மாவின் ராஜாவும், செபோயீமின் ராஜாவும், பேலாவின் (அதாவது, சோவாரின்) ராஜாவும் சித்தீம் பள்ளத்தாக்கிலே அணிவகுத்து வந்து, 9 ஏலாமின் ராஜாவாகிய கெதர்லாகோமேருக்கும், கோயிமின் ராஜாவாகிய திதியாலுக்கும், சினேயாரின் ராஜாவாகிய அம்ராப்பேலுக்கும், ஏலாசாரின் ராஜாவாகிய+ ஆரியோகுக்கும் எதிராகப் போர் செய்தார்கள். அதாவது, நான்கு ராஜாக்கள் சேர்ந்து ஐந்து ராஜாக்களுக்கு எதிராகப் போர் செய்தார்கள். 10 சித்தீம் பள்ளத்தாக்கில் தார் குழிகள் நிறைய இருந்தன. சோதோமின் ராஜாவும் கொமோராவின் ராஜாவும் தப்பித்து ஓடியபோது அந்தக் குழிகளுக்குள் விழுந்தார்கள். மற்றவர்கள் மலைப்பகுதிக்கு ஓடிப்போனார்கள். 11 வெற்றி அடைந்த படைவீரர்கள் சோதோம், கொமோரா ஜனங்கள் வைத்திருந்த உணவுப் பொருள்களையும் மற்ற எல்லா பொருள்களையும் எடுத்துக்கொண்டு போனார்கள்.+ 12 ஆபிராமுடைய சகோதரனின் மகனாகிய லோத்து சோதோமில் வாழ்ந்துவந்ததால்+ அவரையும் பிடித்துக்கொண்டு போனார்கள். அவருக்குச் சொந்தமான எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போனார்கள்.
13 அவர்களிடமிருந்து தப்பித்து வந்த ஒருவன் அந்த விஷயத்தை எபிரெயரான ஆபிராமிடம் சொன்னான். அந்தச் சமயத்தில் ஆபிராம், எமோரியனான மம்ரே என்பவனுக்குச் சொந்தமான பெரிய மரங்களுக்கு நடுவே குடியிருந்தார்.*+ இந்த மம்ரே, எஸ்கோலுக்கும் ஆநேருக்கும்+ சகோதரன். இந்த மூன்று பேரும் ஆபிராமோடு ஒப்பந்தம் செய்திருந்தார்கள். 14 எதிரிகள் படையெடுத்து வந்து தன்னுடைய சகோதரனின் மகனைப்+ பிடித்துக்கொண்டு போனதை ஆபிராம் தெரிந்துகொண்டார். உடனே, தன்னுடைய வீட்டில் பிறந்து வளர்ந்திருந்த பயிற்சி பெற்ற 318 வீரர்களைக் கூட்டிக்கொண்டு தாண்வரை+ எதிரிகளைத் துரத்திச் சென்றார். 15 அன்றைக்கு ராத்திரி, தன்னோடு இருந்தவர்களை அவர் அணி அணியாகப் பிரித்தார். பின்பு, அவரும் அவருடைய வீரர்களும் எதிரிகளைத் தாக்கி அவர்களைத் தோற்கடித்தார்கள். தமஸ்குவுக்கு வடக்கே இருக்கிற ஓபா வரையில் ஆபிராம் அவர்களைத் துரத்திக்கொண்டு போனார். 16 பின்பு, எதிரிகள் எடுத்துக்கொண்டு போயிருந்த எல்லாவற்றையும், தன் சகோதரனின் மகன் லோத்துவையும் அவருக்குச் சொந்தமானவற்றையும், பெண்களையும், மற்ற ஜனங்களையும் மீட்டுக்கொண்டு வந்தார்.
17 ஆபிராம் கெதர்லாகோமேர் ராஜாவையும் அவனுடன் இருந்த ராஜாக்களையும் தோற்கடித்துவிட்டுத் திரும்பியபோது, சோதோமின் ராஜா அவரைச் சந்திப்பதற்காக சாவே பள்ளத்தாக்குக்கு, அதாவது ராஜா-பள்ளத்தாக்குக்கு,+ புறப்பட்டு வந்தார். 18 சாலேமின் ராஜாவாகிய+ மெல்கிசேதேக்கு+ ஆபிராமுக்கு ரொட்டியும் திராட்சமதுவும் கொண்டுவந்தார். அவர் உன்னதமான கடவுளுக்குச் சேவை செய்துவந்த குருவாக இருந்தார்.+
19 அப்போது அவர் ஆபிராமை ஆசீர்வதித்து,
“வானத்தையும் பூமியையும் படைத்த உன்னதமான கடவுள்
ஆபிராமை ஆசீர்வதிக்கட்டும்!
20 உன்னதமான கடவுளுக்குப் புகழ் சேரட்டும்!
அவர் உன்னுடைய எதிரிகளை உன் கையில் கொடுத்தாரே!”
என்று சொன்னார். ஆபிராம் தான் மீட்டுவந்த எல்லாவற்றிலும் பத்திலொரு பாகத்தை அவருக்குக் கொடுத்தார்.+
21 அதன்பின் சோதோமின் ராஜா, “என்னுடைய ஜனங்களை மட்டும் என்னிடம் கொடுத்துவிடுங்கள், பொருள்களை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்” என்று ஆபிராமிடம் சொன்னார். 22 ஆனால் ஆபிராம், “நான் என் கையை உயர்த்தி, வானத்தையும் பூமியையும் படைத்த உன்னதமான கடவுளாகிய யெகோவாவுக்குமுன் உறுதிமொழி தருகிறேன். 23 உங்களிடமிருந்து சின்ன துரும்பைக்கூட* நான் எடுத்துக்கொள்ள மாட்டேன். ஏனென்றால், ‘ஆபிராமை நான்தான் பணக்காரனாக்கினேன்’ என்று நீங்கள் சொல்லிவிடக் கூடாது. 24 என்னோடு இருக்கிற வாலிபர்கள் எதை எடுத்து சாப்பிட்டார்களோ அதை மட்டுமே நான் எடுத்ததாக வைத்துக்கொள்ளலாம். ஆனால், என்னோடு வந்த ஆநேரும் எஸ்கோலும் மம்ரேயும்+ அவர்களுடைய பங்கை எடுத்துக்கொள்ளட்டும்” என்று சோதோமின் ராஜாவிடம் சொன்னார்.
15 அதன்பின் யெகோவா ஒரு தரிசனத்தில், “ஆபிராமே, பயப்படாதே.+ நான் உனக்குக் கேடயமாக இருக்கிறேன்.+ உனக்கு மிகப் பெரிய ஆசீர்வாதத்தைத் தருவேன்”+ என்று சொன்னார். 2 அதற்கு ஆபிராம், “உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, நீங்கள் என்ன ஆசீர்வாதத்தைத் தருவீர்கள்? எனக்குத்தான் இன்னும் குழந்தை இல்லையே; என்னிடம் இருப்பதெல்லாம் தமஸ்கு ஊர்க்காரனாகிய எலியேசருக்குத்தானே+ போய்ச் சேரும்” என்று சொன்னார். 3 அதோடு ஆபிராம், “நீங்கள் எனக்குக் குழந்தை பாக்கியம் தராததால்,+ என் வீட்டில் வேலை செய்கிறவன்தான் என் வாரிசு ஆவான்” என்றார். 4 அதற்கு யெகோவா, “அவன் உன் வாரிசு ஆக மாட்டான்; உனக்குப் பிறக்கும் மகன்தான் உன் வாரிசு ஆவான்” என்று சொன்னார்.+
5 அப்போது ஆபிராமைக் கடவுள் வெளியே கூட்டிக்கொண்டு வந்து, “தயவுசெய்து வானத்தை அண்ணாந்து பார், நட்சத்திரங்களை உன்னால் எண்ண முடிந்தால் எண்ணு” என்றார். பின்பு, “இப்படித்தான் உன் சந்ததியும் எண்ணற்றதாக ஆகும்”+ என்றார். 6 யெகோவாமேல் ஆபிராம் விசுவாசம் வைத்தார்.+ அதனால், அவர் ஆபிராமை நீதிமானாகக் கருதினார்.+ 7 அதோடு அவர், “இந்தத் தேசத்தை உனக்குக் கொடுப்பதற்காக கல்தேயர்களுடைய நகரமான ஊர் நகரத்திலிருந்து உன்னைக் கூட்டிக்கொண்டு வந்த யெகோவா நான்தான்”+ என்று சொன்னார். 8 அதற்கு ஆபிராம், “உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, இந்தத் தேசம் எனக்குச் சொந்தமாகும் என்பதை நான் எப்படித் தெரிந்துகொள்வது?” என்று கேட்டார். 9 அதற்குக் கடவுள், “மூன்று வயதுள்ள இளம் பசுவையும், மூன்று வயதுள்ள பெண் வெள்ளாட்டையும், மூன்று வயதுள்ள செம்மறியாட்டுக் கடாவையும், ஒரு காட்டுப் புறாவையும், ஒரு புறாக் குஞ்சையும் கொண்டுவா” என்றார். 10 அப்படியே, ஆபிராம் அவற்றைக் கொண்டுவந்து, இரண்டு துண்டுகளாக வெட்டி, அந்தத் துண்டுகளை எதிரெதிராக வைத்தார். பறவைகளை அவர் அப்படி வெட்டவில்லை. 11 அந்த இறைச்சித் துண்டுகளைச் சாப்பிட வேறு பறவைகள் பறந்து வந்தன, ஆனால் ஆபிராம் அவற்றை விரட்டிவிட்டார்.
12 சூரியன் மறையும் நேரத்தில், ஆபிராம் நன்றாகத் தூங்கிவிட்டார். அப்போது, பயங்கரமான இருட்டுக்குள் இருப்பதுபோல் அவருக்கு ஒரு கனவு வந்தது. 13 அவரிடம் கடவுள், “உன்னுடைய சந்ததியில் வருகிறவர்கள் வேறொரு தேசத்தில் அன்னியர்களாகக் குடியிருப்பார்கள்; அந்தத் தேசத்து ஜனங்கள் 400 வருஷங்களுக்கு+ அவர்களை அடிமைகளாக வைத்துக் கொடுமைப்படுத்துவார்கள். இது நடக்கப்போவது உறுதி. 14 ஆனால், அவர்களை அடிமைப்படுத்திய தேசத்தை நான் தண்டிப்பேன்.+ அதன்பின், அவர்கள் அங்கிருந்து நிறைய பொருள்களை எடுத்துக்கொண்டு வருவார்கள்.+ 15 முதிர்வயதில் நீ உன் முன்னோர்களைப் போல நிம்மதியாகக் கண்மூடுவாய்.+ 16 உன்னுடைய சந்ததியின் நான்காவது தலைமுறைதான் இங்கே திரும்பி வரும்.+ ஏனென்றால், எமோரியர்களை* தண்டிக்க வேண்டிய நேரம் இன்னும் வரவில்லை”+ என்று சொன்னார்.
17 சூரியன் மறைந்து, நன்றாக இருட்டிவிட்டது. அப்போது, புகைகிற சூளை ஒன்று தெரிந்தது. ஒரு தீப்பந்தம் அந்த இறைச்சித் துண்டுகளின் நடுவே கடந்துபோனது. 18 அன்றைக்கு ஆபிராமுடன் யெகோவா ஓர் ஒப்பந்தம் செய்து,+ “எகிப்தில் இருக்கிற ஆற்றிலிருந்து பெரிய ஆறான யூப்ரடிஸ்வரை*+ இருக்கிற இந்தத் தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுப்பேன்.+ 19 கேனியர்களும்,+ கெனிசியர்களும், கத்மோனியர்களும், 20 ஏத்தியர்களும்,+ பெரிசியர்களும்,+ ரெப்பாயீமியர்களும்,+ 21 எமோரியர்களும், கானானியர்களும், கிர்காசியர்களும், எபூசியர்களும்+ வாழ்கிற அந்தத் தேசத்தைக் கொடுப்பேன்” என்று சொன்னார்.
16 ஆபிராமின் மனைவி சாராய்க்குக் குழந்தை இல்லை.+ அவளுக்கு எகிப்தைச் சேர்ந்த ஆகார்+ என்ற வேலைக்காரி இருந்தாள். 2 அதனால் சாராய் ஆபிராமிடம், “யெகோவா எனக்குக் குழந்தை பாக்கியம் தரவில்லை. அதனால், என் வேலைக்காரியை உங்களுக்குக் கொடுக்கிறேன். தயவுசெய்து அவள் மூலம் எனக்குக் குழந்தை பாக்கியம் கொடுங்கள்”+ என்று சொன்னாள். ஆபிராமும் சாராயின் பேச்சைக் கேட்டார். 3 ஆபிராம் கானான் தேசத்துக்கு வந்து 10 வருஷங்கள் ஆகியிருந்த சமயத்தில்தான், சாராய் தன்னுடைய எகிப்திய வேலைக்காரி ஆகாரைத் தன் கணவன் ஆபிராமுக்கு மனைவியாகக் கொடுத்தாள். 4 ஆபிராமினால் ஆகார் கர்ப்பமானாள்; தான் கர்ப்பமாக இருப்பதை அவள் தெரிந்துகொண்டபோது தன்னுடைய எஜமானியைக் கேவலமாகப் பார்க்க ஆரம்பித்தாள்.
5 அப்போது சாராய் ஆபிராமிடம், “உங்களால்தான் எனக்கு இந்த நிலைமை. என் வேலைக்காரியை உங்களுக்குக் கொடுத்ததே நான்தான். ஆனால், அவள் எப்போது கர்ப்பமானாளோ அப்போதிலிருந்து என்னைக் கேவலமாகப் பார்க்கிறாள். தப்பு என்மேல் இருக்கிறதா, உங்கள்மேல் இருக்கிறதா என்பதை யெகோவாவே முடிவுசெய்யட்டும்” என்று சொன்னாள். 6 அதற்கு ஆபிராம், “சாராய், உன் வேலைக்காரிக்கு நீதான் எஜமானி. உனக்கு எது சரி என்று படுகிறதோ அதைச் செய்” என்று சொன்னார். அதன்பின், ஆகாரை சாராய் நோகடித்தாள்.* அதனால், ஆகார் சாராயிடமிருந்து ஓடிப்போனாள்.
7 பிற்பாடு, வனாந்தரத்திலுள்ள நீரூற்றுக்குப் பக்கத்தில், அதாவது ஷூருக்குப்+ போகும் வழியிலுள்ள நீரூற்றுக்குப் பக்கத்தில், யெகோவாவின் தூதர் அவளைச் சந்தித்தார். 8 அவர் ஆகாரிடம், “சாராயின் வேலைக்காரப் பெண்ணாகிய ஆகாரே, நீ எங்கிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்?” என்று கேட்டார். அதற்கு அவள், “என் எஜமானி சாராயிடமிருந்து ஓடிப்போகிறேன்” என்று சொன்னாள். 9 அப்போது யெகோவாவின் தூதர் அவளிடம், “நீ உன் எஜமானியிடம் திரும்பிப் போ; அவளுக்கு அடங்கி நட” என்றார். 10 அதுமட்டுமல்ல, யெகோவாவின் தூதர் அவளிடம், “யாருமே எண்ண முடியாத அளவுக்கு நான் உன் சந்ததியைப் பெருக வைப்பேன்”+ என்று சொன்னார். 11 பின்பு யெகோவாவின் தூதர் அவளிடம், “இப்போது கர்ப்பமாக இருக்கிற நீ ஒரு மகனைப் பெற்றெடுப்பாய்; அவனுக்கு இஸ்மவேல்* என்று பெயர் வை. ஏனென்றால், உன்னுடைய கதறலை யெகோவா கேட்டிருக்கிறார். 12 உன் மகன் அடங்காதவனாக* இருப்பான். எல்லாரும் அவனை எதிர்ப்பார்கள், எல்லாரையும் அவன் எதிர்ப்பான்; தன்னுடைய சகோதரர்கள் எல்லாருக்கும் எதிராக* வாழ்வான்” என்றார்.
13 யெகோவா இதையெல்லாம் சொன்ன பிறகு ஆகார் அவருடைய பெயரைப் புகழ்ந்து, “நீங்கள் எல்லாவற்றையும் பார்க்கிற கடவுள்.+ என்னைப் பார்ப்பவரை நானும் பார்த்துவிட்டேனே!” என்று சொன்னாள். 14 அதனால்தான், அந்தக் கிணறு பெயெர்-லகாய்-ரோயீ* என்று அழைக்கப்பட்டது. (அது காதேசுக்கும் பேரேத்துக்கும் இடையில் இருக்கிறது.) 15 ஆபிராமுக்கு ஆகார் ஒரு மகனைப் பெற்றுக் கொடுத்தாள். அவனுக்கு இஸ்மவேல்+ என்று ஆபிராம் பெயர் வைத்தார். 16 இஸ்மவேல் பிறந்தபோது ஆபிராமுக்கு 86 வயது.
17 ஆபிராமுக்கு 99 வயதானபோது யெகோவா அவர்முன் தோன்றி, “நான் சர்வவல்லமையுள்ள கடவுள். நீ என்னுடைய வழியில் நடந்து, குற்றமற்றவனாக இரு. 2 நான் உன்னோடு செய்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தி,+ உன்னுடைய சந்ததியை மிக அதிகமாகப் பெருக வைப்பேன்”+ என்றார்.
3 உடனே, ஆபிராம் சாஷ்டாங்கமாக விழுந்தார். கடவுள் அவரிடம், 4 “நான் உன்னோடு ஒப்பந்தம் செய்திருக்கிறேன்.+ அதனால் நிறைய தேசங்களுக்கு நீ தகப்பனாவாய், இது உறுதி.+ 5 இனி நீ ஆபிராம்* என்று அழைக்கப்படாமல், ஆபிரகாம்* என்று அழைக்கப்படுவாய். ஏனென்றால், நான் உன்னை நிறைய தேசங்களுக்குத் தகப்பனாக ஆக்கப்போகிறேன். 6 உன் சந்ததியை மிக அதிகமாகப் பெருக வைப்பேன். உன்னிடமிருந்து ஜனக்கூட்டங்கள் உருவாகும், உன்னிடமிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள்.+
7 உன்னோடும், உன் சந்ததியோடும், அவர்களுக்குப் பின்வரும் எல்லா தலைமுறைகளோடும் நான் செய்திருக்கிற நிரந்தரமான ஒப்பந்தத்தைக் காப்பேன்.+ அதன்படியே, உனக்கும் உன்னுடைய வருங்காலச் சந்ததிக்கும் கடவுளாக இருப்பேன். 8 நீ அன்னியனாகத் தங்கியிருக்கிற+ இந்த கானான் தேசம் முழுவதையும் உனக்கும் உன் வருங்காலச் சந்ததிக்கும் நிரந்தர சொத்தாகத் தருவேன்; நான் அவர்களுடைய கடவுளாக இருப்பேன்”+ என்று சொன்னார்.
9 அதன்பின் கடவுள் ஆபிரகாமிடம், “நீயும் உன் வருங்காலச் சந்ததியும், அவர்களுக்குப் பின்வரும் எல்லா தலைமுறைகளும் என் ஒப்பந்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். 10 நான் உங்களோடு செய்கிற ஒப்பந்தத்தின்படி, ஒவ்வொரு ஆணும் விருத்தசேதனம்* செய்துகொள்ள வேண்டும். நீயும் உன் வருங்காலச் சந்ததியும் இதைக் கடைப்பிடிக்க வேண்டும்.+ 11 நீங்கள் கண்டிப்பாக விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும். நான் உங்களோடு செய்கிற ஒப்பந்தத்துக்கு இதுதான் அடையாளம்.+ 12 இனிவரும் காலமெல்லாம் உன்னுடைய சந்ததியில் பிறக்கிற ஒவ்வொரு ஆண் குழந்தைக்கும் எட்டாவது நாளில் விருத்தசேதனம் செய்ய வேண்டும்.+ உன் வீட்டில் பிறக்கிற எல்லா ஆண் குழந்தைகளும், உன் சந்ததியில் வராத எல்லா ஆண்களும், மற்ற தேசத்தாரிடமிருந்து விலைக்கு வாங்கப்படுகிற எல்லா ஆண்களும் விருத்தசேதனம் செய்யப்பட வேண்டும். 13 உன் வீட்டில் பிறக்கிற எல்லா ஆண் குழந்தைகளும், நீ விலைக்கு வாங்குகிற எல்லா ஆண்களும் விருத்தசேதனம் செய்யப்பட வேண்டும்;+ இந்த விருத்தசேதன ஒப்பந்தம் நிரந்தர ஒப்பந்தமாக இருக்க வேண்டும். 14 எந்த ஆணாவது விருத்தசேதனம் செய்யவில்லை என்றால் அவன் கொல்லப்பட வேண்டும்; ஏனென்றால், அவன் என் ஒப்பந்தத்தை மீறுகிறான்” என்று சொன்னார்.
15 பின்பு கடவுள் ஆபிரகாமிடம், “நீ உன் மனைவியை இனி சாராய்*+ என்று கூப்பிடக் கூடாது, இனிமேல் அவளுடைய பெயர் சாராள்.* 16 நான் அவளை ஆசீர்வதித்து, அவள் மூலம் உனக்கு ஒரு மகனைக் கொடுப்பேன்.+ நான் அவளை ஆசீர்வதிக்கப்போவதால், அவளிடமிருந்து தேசங்கள் உருவாகும், ராஜாக்கள் தோன்றுவார்கள்” என்று சொன்னார். 17 அப்போது ஆபிரகாம் சாஷ்டாங்கமாக விழுந்தார். அதன்பின் சிரித்துக்கொண்டே,+ “100 வயதில் எனக்குக் குழந்தை பிறக்கப்போகிறதா? 90 வயதில் சாராள் பிள்ளையைப் பெற்றெடுக்கப்போகிறாளா?”+ என்று உள்ளத்தில் சொல்லிக்கொண்டார்.
18 ஆபிரகாம் உண்மைக் கடவுளிடம், “இஸ்மவேலுக்கு உங்களுடைய ஆசீர்வாதம் கிடைக்கட்டுமே!”+ என்றார். 19 அதற்குக் கடவுள், “உன் மனைவி சாராள் கண்டிப்பாக உனக்கு ஒரு மகனைப் பெற்றுக் கொடுப்பாள். அவனுக்கு நீ ஈசாக்கு*+ என்று பெயர் வைக்க வேண்டும். என்னுடைய ஒப்பந்தத்தை அவனுக்கும் அவனுடைய வருங்காலச் சந்ததிக்கும் நிரந்தர ஒப்பந்தமாக உறுதிப்படுத்துவேன்.+ 20 இஸ்மவேலைப் பற்றி நீ சொன்னதைக் கேட்டேன்; நான் அவனை ஆசீர்வதித்து, அவன் சந்ததியை மிக அதிகமாகப் பெருக வைப்பேன். அவனிடமிருந்து 12 தலைவர்கள் தோன்றுவார்கள். அவனை நான் மாபெரும் தேசமாக்குவேன்.+ 21 ஆனாலும், அடுத்த வருஷம் இதே சமயம்+ சாராளுக்குப் பிறக்கப்போகிற ஈசாக்கோடுதான் நான் ஒப்பந்தம் செய்வேன்”+ என்று சொன்னார்.
22 ஆபிரகாமிடம் பேசி முடித்த பின்பு கடவுள் அங்கிருந்து போய்விட்டார். 23 அதன்பின், கடவுள் சொன்னபடியே+ ஆபிரகாம் தன் மகன் இஸ்மவேலுக்கும் தன் வீட்டில் இருந்த எல்லா ஆண்களுக்கும் அதே நாளில் விருத்தசேதனம் செய்தார். அதாவது, தன் வீட்டில் பிறந்த எல்லா ஆண்களுக்கும், தான் விலைக்கு வாங்கிய எல்லா ஆண்களுக்கும் விருத்தசேதனம் செய்தார். 24 ஆபிரகாமுக்கு விருத்தசேதனம் செய்யப்பட்டபோது அவருக்கு 99 வயது.+ 25 அவருடைய மகன் இஸ்மவேலுக்கு விருத்தசேதனம் செய்யப்பட்டபோது அவனுக்கு 13 வயது.+ 26 ஆபிரகாமுக்கும் அவர் மகன் இஸ்மவேலுக்கும் ஒரே நாளில் விருத்தசேதனம் செய்யப்பட்டது. 27 அவருடைய வீட்டில் இருந்த எல்லா ஆண்களுக்கும், அதாவது அவர் வீட்டில் பிறந்த எல்லா ஆண்களுக்கும் மற்ற தேசத்தாரிடமிருந்து விலைக்கு வாங்கப்பட்ட எல்லா ஆண்களுக்கும், அவரோடு சேர்ந்து விருத்தசேதனம் செய்யப்பட்டது.
18 பிற்பாடு, மம்ரேயில் இருந்த பெரிய மரங்களின் நடுவே+ யெகோவா+ ஆபிரகாமுக்குமுன் தோன்றினார். அப்போது, உச்சி வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. ஆபிரகாம் கூடார வாசலில் உட்கார்ந்துகொண்டிருந்தார். 2 அவர் நிமிர்ந்து பார்த்தபோது, கொஞ்சத் தூரத்தில் மூன்று மனிதர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். உடனே, கூடார வாசலிலிருந்து எழுந்து ஓடி, அவர்களுக்கு முன்னால் மண்டிபோட்டு தரைவரைக்கும் குனிந்து வணங்கினார்.+ 3 பின்பு, “யெகோவாவே,* இந்த அடியேன்மேல் உங்களுக்குப் பிரியம் இருந்தால், தயவுசெய்து கொஞ்ச நேரம் இருந்துவிட்டுப் போங்கள். 4 நான் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவருகிறேன். தயவுசெய்து உங்கள் பாதங்களைக் கழுவிவிட்டு+ இந்த மரத்தின் கீழ் ஓய்வெடுங்கள். 5 நீங்கள் இந்த அடியேனிடம் வந்திருப்பதால், கொஞ்சம் ரொட்டி கொண்டுவருகிறேன். அதைச் சாப்பிட்டுவிட்டு, தெம்போடு நீங்கள் கிளம்பலாமே” என்று சொன்னார். அதற்கு அவர்கள், “சரி, நீ சொன்னபடியே செய்” என்றார்கள்.
6 உடனே, ஆபிரகாம் கூடாரத்துக்குள் ஓட்டமாய் ஓடி சாராளிடம், “சீக்கிரம்! மூன்று படி* நைசான மாவை எடுத்துப் பிசைந்து, ரொட்டி சுடு” என்று சொன்னார். 7 பின்பு மாட்டுத் தொழுவத்துக்கு ஓடி, இளம் காளைகளில் நல்லதாக ஒன்றைத் தேடிப் பிடித்து அவருடைய வேலைக்காரனிடம் கொடுத்தார். அவன் அதைச் சமைக்க வேகவேகமாய்ப் போனான். 8 பின்பு அவர் வெண்ணெயையும், பாலையும், சமைத்த இறைச்சியையும் கொண்டுபோய் அவர்கள்முன் வைத்தார். அவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அவர்களுக்குப் பக்கத்திலேயே மரத்தடியில் நின்றார்.+
9 அப்போது அவர்கள், “உன் மனைவி சாராள்+ எங்கே?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “இங்கேதான் கூடாரத்தில் இருக்கிறாள்” என்றார். 10 அவர்களில் ஒருவர், “அடுத்த வருஷம் இதே சமயம் நான் கண்டிப்பாகத் திரும்பி வருவேன்; அப்போது உன் மனைவி சாராளுக்கு ஒரு மகன் இருப்பான்”+ என்றார். அவருக்குப் பின்னாலிருந்த கூடார வாசலில் சாராள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். 11 ஆபிரகாமும் சாராளும் வயதானவர்களாக இருந்தார்கள்.+ சாராள் குழந்தை பெறும் வயதைத் தாண்டியிருந்தாள்.+ 12 அதனால், “நான் ஒரு கிழவி, என் எஜமானும் கிழவராகிவிட்டார், இந்த வயதில் எனக்குச் சந்தோஷம் கிடைக்குமா?”+ என்று தனக்குள் சிரித்துக்கொண்டே சொன்னாள். 13 அப்போது யெகோவா ஆபிரகாமிடம், “‘இந்த வயதான காலத்தில் எனக்குப் பிள்ளை பிறக்குமா’ என்று சாராள் ஏன் சிரித்துக்கொண்டே சொன்னாள்? 14 யெகோவாவினால் செய்ய முடியாதது ஏதாவது இருக்கிறதா?+ அடுத்த வருஷம் இதே சமயம் நான் திரும்பி வருவேன்; அப்போது சாராளுக்கு ஒரு மகன் இருப்பான்” என்று சொன்னார். 15 உடனே சாராள் பயந்துபோய், “நான் சிரிக்கவில்லை” என்று சொன்னாள். ஆனால் அவர், “இல்லை! நீ சிரித்தாய்!” என்றார்.
16 பின்பு, அந்த மனிதர்கள் எழுந்து சோதோமைப்+ பார்த்தபடி நடக்க ஆரம்பித்தார்கள். அவர்களை வழியனுப்ப ஆபிரகாமும் கூடவே போனார். 17 அப்போது யெகோவா, “நான் செய்யப்போவதை ஆபிரகாமுக்குச் சொல்லாமல் இருப்பேனா?+ 18 ஆபிரகாம் பலம்படைத்த தேசமாகவும் மாபெரும் தேசமாகவும் ஆவான், இது உறுதி. பூமியிலுள்ள எல்லா தேசத்தாரும் ஆபிரகாம் மூலமாக ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வார்கள்.+ 19 ஆபிரகாமை எனக்கு நன்றாகத் தெரியும். யெகோவாவின் வழியில் நடக்கும்படி அவன் தன்னுடைய மகன்களுக்கும் வருங்காலச் சந்ததிகளுக்கும் நிச்சயமாகக் கட்டளை கொடுப்பான். அவர்களை நீதியோடும் நியாயத்தோடும் நடக்கச் சொல்வான்.+ அதனால், ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதியை யெகோவா நிறைவேற்றுவார்” என்று சொன்னார்.
20 அதன்பின் யெகோவா, “சோதோமிலும் கொமோராவிலும் இருக்கிற ஜனங்கள் படுமோசமான பாவங்களைச் செய்திருக்கிறார்கள்.+ அவர்களுக்கு எதிராக மற்றவர்கள் பயங்கரமாகப் புலம்புவதைக் கேட்டேன்.+ 21 மற்றவர்கள் புலம்புவதுபோல், அந்த ஜனங்கள் உண்மையிலேயே மோசமாக நடக்கிறார்களா என்று நான் இறங்கிப் போய்ப் பார்க்கப்போகிறேன்”+ என்றார்.
22 பின்பு, அந்த மனிதர்கள் அங்கிருந்து சோதோமுக்குப் போனார்கள். ஆனால், யெகோவா+ ஆபிரகாமுடனேயே இருந்தார். 23 அப்போது ஆபிரகாம் அவரிடம், “பொல்லாதவர்களோடு சேர்த்து நீதிமான்களையும் நீங்கள் அழித்துவிடுவீர்களா?+ 24 ஒருவேளை அந்த நகரத்தில் 50 பேர் நீதிமான்களாக இருந்தால்? அப்போதும் அவர்களை அழித்துவிடுவீர்களா? அந்த 50 பேருக்காக அந்த நகரத்தை மன்னிக்க மாட்டீர்களா? 25 பொல்லாதவர்களோடு சேர்த்து நீதிமான்களையும் அழிப்பதை உங்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாதே! அப்படி அழித்தால் நீதிமான்களுக்கும் பொல்லாதவர்களுக்கும் ஒரே கதி வந்துவிடுமே!+ அப்படிச் செய்வதை உங்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாதே!+ இந்த முழு உலகத்துக்கே நீதிபதியாக இருப்பவர் நியாயமாக நடக்காமல் இருப்பாரா?”+ என்றார். 26 அதற்கு யெகோவா, “சோதோமில் 50 பேர் நீதிமான்களாக இருந்தால் அவர்களுக்காக அந்த முழு நகரத்தையும் மன்னிப்பேன்” என்று சொன்னார். 27 ஆனால் ஆபிரகாம் மறுபடியும், “நான் வெறும் தூசிதான், சாம்பல்தான். இருந்தாலும் யெகோவாவே, உங்களிடம் உரிமையோடு பேசுகிறேன், தயவுசெய்து கேளுங்கள். 28 ஒருவேளை, அந்த 50 பேரில் ஐந்து பேர் குறைவாக இருந்தால்? ஐந்து பேர் குறைகிறார்கள் என்பதற்காக அந்த முழு நகரத்தையும் நீங்கள் அழிப்பீர்களா?” என்று கேட்டார். அதற்குக் கடவுள், “அங்கே 45 பேர் நீதிமான்களாக இருந்தால்கூட அதை அழிக்க மாட்டேன்”+ என்று சொன்னார்.
29 மறுபடியும் ஆபிரகாம் அவரிடம், “ஒருவேளை அங்கே 40 பேர் நீதிமான்களாக இருந்தால்?” என்று கேட்டார். அதற்கு அவர், “40 பேர் நீதிமான்களாக இருந்தால்கூட நான் அதை அழிக்க மாட்டேன்” என்று சொன்னார். 30 ஆனால் ஆபிரகாம், “யெகோவாவே, தயவுசெய்து என்மேல் கோபப்படாதீர்கள்;+ நான் பேசுவதை இன்னும் கொஞ்சம் கேளுங்கள். அங்கே ஒருவேளை 30 பேர் மட்டுமே நீதிமான்களாக இருந்தால்?” என்று கேட்டார். அதற்கு அவர், “அங்கே 30 பேர் நீதிமான்களாக இருந்தாலும் நான் அதை அழிக்க மாட்டேன்” என்று சொன்னார். 31 ஆனால் ஆபிரகாம் தொடர்ந்து, “யெகோவாவே, உங்களிடம் உரிமையோடு பேசுகிறேன், தயவுசெய்து கேளுங்கள். அங்கே ஒருவேளை 20 பேர் மட்டுமே நீதிமான்களாக இருந்தால்?” என்று கேட்டார். அதற்கு அவர், “20 பேர் நீதிமான்களாக இருந்தால்கூட நான் அதை அழிக்க மாட்டேன்” என்று சொன்னார். 32 கடைசியாக ஆபிரகாம், “யெகோவாவே, தயவுசெய்து என்மேல் கோபப்படாதீர்கள். இன்னும் ஒரு தடவை மட்டும் நான் பேசுவதைக் கேளுங்கள். அங்கே ஒருவேளை 10 பேர் மட்டுமே நீதிமான்களாக இருந்தால்?” என்று கேட்டார். அதற்கு அவர், “10 பேர் நீதிமான்களாக இருந்தால்கூட நான் அதை அழிக்க மாட்டேன்” என்று சொன்னார். 33 ஆபிரகாமிடம் பேசி முடித்த பின்பு யெகோவா அங்கிருந்து போனார்,+ ஆபிரகாமும் தன் இடத்துக்குத் திரும்பிப் போனார்.
19 அந்த இரண்டு தேவதூதர்களும் சாயங்காலத்தில் சோதோமுக்கு வந்துசேர்ந்தார்கள். அப்போது, லோத்து நகரவாசலில் உட்கார்ந்திருந்தார். அவர்களைப் பார்த்ததும் அவர் எழுந்துபோய், அவர்கள்முன் மண்டிபோட்டு,+ 2 “என் எஜமான்களே, இன்றைக்கு ராத்திரி தயவுசெய்து அடியேனுடைய வீட்டில் தங்குங்கள். உங்கள் பாதங்களைக் கழுவ எங்களுக்கு வாய்ப்புக் கொடுங்கள். விடிந்ததுமே நீங்கள் கிளம்பிவிடலாம்” என்றார். அதற்கு அவர்கள், “பரவாயில்லை, இன்றைக்கு ராத்திரி நாங்கள் பொது சதுக்கத்திலேயே தங்கிக்கொள்கிறோம்” என்றார்கள். 3 ஆனால், அவர் மிகவும் வற்புறுத்திக் கூப்பிட்டதால் அவருடைய வீட்டுக்குப் போனார்கள். அவர்களுக்காக லோத்து புளிப்பில்லாத ரொட்டி சுட்டு, விருந்து வைத்தார்; அவர்கள் சாப்பிட்டார்கள்.
4 அவர்கள் படுக்கப் போவதற்கு முன்பு, சோதோம் நகரத்திலிருந்த சிறுவன்முதல் கிழவன்வரை எல்லா ஆண்களும் கும்பலாக வந்து அவருடைய வீட்டைச் சூழ்ந்துகொண்டார்கள். 5 லோத்துவை அவர்கள் சத்தமாகக் கூப்பிட்டுக்கொண்டே இருந்தார்கள். “ராத்திரி உன் வீட்டில் தங்க வந்த ஆண்கள் எங்கே? நாங்கள் அவர்களோடு உறவுகொள்ள வேண்டும்,+ அவர்களை வெளியே கொண்டுவா” என்று கத்திக்கொண்டே இருந்தார்கள்.
6 அப்போது லோத்து வீட்டுக்கு வெளியே வந்து, கதவைச் சாத்தினார். 7 அவர் அவர்களிடம், “என் சகோதரர்களே, தயவுசெய்து இந்தக் கெட்ட காரியத்தைச் செய்யாதீர்கள். 8 தயவுசெய்து நான் சொல்வதைக் கேளுங்கள். கல்யாணமாகாத இரண்டு பெண்கள் எனக்கு இருக்கிறார்கள். அவர்களை நான் வெளியில் கொண்டுவருகிறேன், அவர்களை நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால், இந்த ஆண்களை மட்டும் தயவுசெய்து ஒன்றும் செய்துவிடாதீர்கள். அவர்கள் என் வீட்டில்* தங்க வந்திருக்கிறார்கள்”+ என்று சொன்னார். 9 அதற்கு அவர்கள், “தள்ளிப் போ!” என்று சொல்லிவிட்டு, “நம் ஊரில் பிழைக்க வந்த நாதியில்லாத இவன் நமக்கே நியாயம் சொல்ல வந்துவிட்டான், என்ன துணிச்சல்! முதலில் உன்னைத்தான் ஒருவழி பண்ண வேண்டும்” என்றார்கள். பின்பு, லோத்துவை நெருக்கித் தள்ளி கதவை உடைக்கப் பார்த்தார்கள். 10 உடனே, வீட்டுக்குள் இருந்த மனிதர்கள்* கையை நீட்டி, லோத்துவை உள்ளே இழுத்துக்கொண்டு, கதவைச் சாத்தினார்கள். 11 பின்பு, வீட்டு வாசலில் இருந்த சிறுவன்முதல் கிழவன்வரை எல்லா ஆண்களுடைய கண்களையும் குருடாக்கினார்கள். அதனால் அவர்கள் வாசல் கதவைத் தேடித்தேடி அலுத்துப்போனார்கள்.
12 அப்போது அந்த மனிதர்கள்* லோத்துவிடம், “இந்த நகரத்தில் உனக்கு வேறு யாராவது இருக்கிறார்களா? மருமகன்கள், மகன்கள், மகள்கள் என்று யார் இருந்தாலும் எல்லா சொந்தபந்தங்களையும் கூட்டிக்கொண்டு இங்கிருந்து போய்விடு! 13 நாங்கள் இந்த இடத்தை அழிக்கப்போகிறோம். இந்த ஜனங்களைப் பற்றிய பயங்கரமான புலம்பலை யெகோவா கேட்டிருக்கிறார்.+ அதனால், இந்த நகரத்தை அழிக்க யெகோவா எங்களை அனுப்பியிருக்கிறார்” என்று சொன்னார்கள். 14 உடனே, லோத்து தன் மகள்களுக்கு நிச்சயம் செய்திருந்த மருமகன்களைப் போய்ப் பார்த்து, “சீக்கிரம்! இங்கிருந்து புறப்படுங்கள்! யெகோவா இந்த நகரத்தை அழிக்கப்போகிறார்!” என்று திரும்பத் திரும்பச் சொன்னார். ஆனால், அவர் ஏதோ வேடிக்கையாகச் சொல்கிறார் என்று அவர்கள் நினைத்துக்கொண்டார்கள்.+
15 பொழுது விடியும் நேரத்தில் அந்தத் தேவதூதர்கள் லோத்துவிடம், “சீக்கிரம்! உன் மனைவியையும் உன் இரண்டு மகள்களையும் கூட்டிக்கொண்டு போ! இல்லையென்றால், இந்த நகரம் அதன் அக்கிரமத்துக்காக அழிக்கப்படும்போது நீயும் அழிக்கப்படுவாய்!”+ என்று சொல்லி அவசரப்படுத்தினார்கள். 16 லோத்து தயங்கிக்கொண்டே இருந்தார். ஆனாலும், யெகோவா அவர்மேல் கரிசனை காட்டியதால்+ அந்த மனிதர்கள்* அவருடைய கையையும், அவருடைய மனைவியின் கையையும், இரண்டு மகள்களுடைய கையையும் பிடித்து நகரத்துக்கு வெளியில் கொண்டுவந்து விட்டார்கள்.+ 17 நகரத்துக்கு வெளியில் வந்ததும் அந்த மனிதர்களில் ஒருவர், “தப்பித்து ஓடு! திரும்பிப் பார்க்காதே,+ இந்தப் பிரதேசத்தில்+ எங்கேயும் நிற்காதே! மலைப்பகுதிக்குத் தப்பித்து ஓடு! இல்லையென்றால் உன் உயிர் போய்விடும்!” என்றார்.
18 அதற்கு லோத்து அவர்களிடம், “யெகோவாவே,* தயவுசெய்து அங்கே போகச் சொல்லாதீர்கள்! 19 நீங்கள் அடியேனுக்குக் கருணை காட்டியிருக்கிறீர்கள். அளவுகடந்த அன்பை* காட்டி, என் உயிரைக் காப்பாற்றியிருக்கிறீர்கள்.+ ஆனாலும், என்னால் அந்த மலைப்பகுதிக்கு ஓடிப்போக முடியாது. அங்கே ஏதாவது ஆபத்தில் சிக்கி செத்துவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது.+ 20 தயவுசெய்து, பக்கத்தில் உள்ள ஊருக்கு ஓடிப்போகிறேனே; அது சின்ன ஊர்தானே. தயவுசெய்து அங்கே ஓடிப்போகட்டுமா? அது சின்ன ஊர்தான். அங்கே போனால் நான் பிழைத்துக்கொள்வேன்” என்று சொன்னார். 21 அதற்கு அவர், “சரி, இந்த விஷயத்திலும் உனக்குக் கருணை காட்டுகிறேன்,+ நீ சொல்கிற ஊரை அழிக்காமல் விடுகிறேன்.+ 22 சீக்கிரம் ஓடிப்போ, நீ அங்கே போய்ச் சேரும்வரை என்னால் ஒன்றும் செய்ய முடியாது!”+ என்று சொன்னார். அதனால்தான், அந்த ஊருக்கு சோவார்*+ என்ற பெயர் வந்தது.
23 லோத்து சோவாருக்குப் போய்ச் சேர்ந்தபோது சூரியன் உதித்திருந்தது. 24 அப்போது யெகோவா சோதோம், கொமோராவில் நெருப்பையும் கந்தகத்தையும் கொட்டினார். யெகோவா வானத்திலிருந்து அவற்றைக் கொட்டி,+ 25 அந்த நகரங்களை அழித்தார். ஜனங்கள், செடிகொடிகள் என எதையும் விட்டுவைக்காமல் முழு பிரதேசத்தையும் அழித்தார்.+ 26 லோத்துவுக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த அவருடைய மனைவி திரும்பிப் பார்த்தாள், உடனே உப்புச் சிலையானாள்.+
27 ஆபிரகாம் விடியற்காலையில் எழுந்து, தான் ஏற்கெனவே யெகோவாவுக்குமுன் நின்றிருந்த இடத்துக்குப் போனார்.+ 28 அங்கிருந்து அவர் கீழே பார்த்தபோது, சோதோமும் கொமோராவும் அந்த முழு பிரதேசமும் கோரமாகக் காட்சியளித்தது. சூளையிலிருந்து போகிற புகையைப் போல அடர்த்தியான புகை மேலே போய்க்கொண்டிருந்தது!+ 29 கடவுள் அந்தப் பிரதேசத்திலுள்ள நகரங்களை அழிப்பதற்குமுன், ஆபிரகாமோடு தான் பேசியதை நினைத்துப் பார்த்தார். அதனால், அங்கு வாழ்ந்துவந்த லோத்துவை அங்கிருந்து அனுப்பிவிட்டார்.+
30 பிற்பாடு, லோத்து சோவாரில்+ குடியிருக்கப் பயந்து, தன்னுடைய இரண்டு மகள்களையும் கூட்டிக்கொண்டு மலைப்பகுதிக்குப் போனார்.+ அங்கே, தன்னுடைய இரண்டு மகள்களுடன் ஒரு குகையில் குடியிருந்தார். 31 ஒருநாள் பெரியவள் தன் தங்கையிடம், “அப்பாவுக்கு வயதாகிவிட்டது. எல்லாரையும் போல நாமும் கல்யாணம் செய்துகொள்ள இந்த இடத்தில் ஒரு ஆண்கூட இல்லை. 32 வா, அப்பாவுக்குத் திராட்சமதுவைக் குடிக்கக் கொடுக்கலாம். அப்புறம், அவரோடு படுத்துக்கொள்ளலாம். அப்போதுதான் அப்பாவுடைய வம்சம் அழியாமல் இருக்கும்” என்று சொன்னாள்.
33 அதனால் அன்றைக்கு ராத்திரி, அவர்கள் தங்களுடைய அப்பாவுக்குத் திராட்சமதுவை ஊற்றி ஊற்றிக் கொடுத்தார்கள். பின்பு, பெரியவள் உள்ளே போய்த் தன் அப்பாவோடு படுத்துக்கொண்டாள். ஆனால், அவள் எப்போது படுத்தாள், எப்போது எழுந்தாள் என்று லோத்துவுக்குத் தெரியவில்லை. 34 அடுத்த நாள் பெரியவள் தன் தங்கையிடம், “நேற்று ராத்திரி நான் அப்பாவோடு படுத்துக்கொண்டேன். இன்றைக்கு ராத்திரியும் அவருக்குத் திராட்சமதுவைக் குடிக்கக் கொடுக்கலாம். அப்புறம் நீ உள்ளே போய் அவரோடு படுத்துக்கொள். அப்போதுதான் அப்பாவின் வம்சம் அழியாமல் இருக்கும்” என்று சொன்னாள். 35 அதனால், அன்றைக்கு ராத்திரியும் அவர்கள் தங்களுடைய அப்பாவுக்குத் திராட்சமதுவை ஊற்றி ஊற்றிக் கொடுத்தார்கள். பின்பு, சின்னவள் போய்த் தன் அப்பாவோடு படுத்துக்கொண்டாள். ஆனால், அவள் எப்போது படுத்தாள், எப்போது எழுந்தாள் என்று லோத்துவுக்குத் தெரியவில்லை. 36 இப்படி, லோத்துவின் இரண்டு மகள்களும் தங்கள் அப்பாவினால் கர்ப்பமானார்கள். 37 பெரியவளுக்கு ஒரு பையன் பிறந்தான். அவனுக்கு மோவாப்+ என்று அவள் பெயர் வைத்தாள். அவனுடைய வம்சத்தில் வந்தவர்களைத்தான் இன்று மோவாபியர்கள்+ என்று சொல்கிறோம். 38 சின்னவளுக்கும் ஒரு பையன் பிறந்தான். அவனுக்கு பென்னம்மி என்று அவள் பெயர் வைத்தாள். அவனுடைய வம்சத்தில் வந்தவர்களைத்தான் இன்று அம்மோனியர்கள்+ என்று சொல்கிறோம்.
20 பிற்பாடு, ஆபிரகாம் புறப்பட்டு+ நெகேபுக்குப் போய் காதேசுக்கும்+ ஷூருக்கும்+ இடையில் குடியிருந்தார். அவர் கேராரில்+ வாழ்ந்துவந்தபோது, 2 மறுபடியும் தன்னுடைய மனைவி சாராளைத் தன்னுடைய தங்கை என்று சொன்னார்.+ அவர் அப்படிச் சொன்னதால், கேராரின் ராஜா அபிமெலேக்கு* ஆள் அனுப்பி சாராளைக் கொண்டுபோனார்.+ 3 ஆனால் ராத்திரியில் அபிமெலேக்கின் கனவில் கடவுள் வந்து, “அந்தப் பெண்ணைக் கொண்டுவந்திருப்பதால் நீ சாகப்போகிறாய்.+ அவள் கல்யாணம் ஆனவள், இன்னொருவனுக்குச் சொந்தமானவள்”+ என்று சொன்னார். 4 அபிமெலேக்கு அதுவரை அவளை நெருங்காமல்* இருந்ததால் கடவுளிடம், “யெகோவாவே, ஒரு பாவமும் செய்யாத ஜனங்களை நீங்கள் கொன்றுவிடுவீர்களா? 5 ‘இவள் என்னுடைய தங்கை’ என்று அவன் என்னிடம் சொன்னானே; அவளும் அவனை அண்ணன் என்று சொன்னாளே. நான் கெட்ட எண்ணத்துடனோ வேண்டுமென்றோ இதைச் செய்யவில்லை”* என்றார். 6 அப்போது கடவுள் அவரிடம், “நீ கெட்ட எண்ணத்துடன் இதைச் செய்யவில்லை என்று எனக்குத் தெரியும். அதனால்தான் பாவம் செய்யாதபடி நான் உன்னைத் தடுத்தேன், அவளைத் தொடுவதற்கு உன்னை விடவில்லை. 7 இப்போது, அவளை அவளுடைய கணவனிடமே அனுப்பிவிடு, அவன் ஒரு தீர்க்கதரிசி.+ அவன் உனக்காக என்னிடம் மன்றாடுவான்,+ அப்போது நீ சாகாமல் பிழைத்துக்கொள்வாய். ஆனால் அவளைத் திருப்பி அனுப்பவில்லை என்றால், நீயும் உன் வீட்டிலிருக்கிற எல்லாரும் கண்டிப்பாகச் சாவீர்கள்” என்றார்.
8 அபிமெலேக்கு விடியற்காலையில் எழுந்து தன்னுடைய வேலைக்காரர்கள் எல்லாரையும் கூப்பிட்டு, இந்த எல்லா விஷயங்களையும் சொன்னார். அவர்கள் பயத்தில் வெலவெலத்துப் போனார்கள். 9 பின்பு அபிமெலேக்கு ஆபிரகாமை வரவழைத்து, “ஏன் இப்படிச் செய்தாய்? நான் உனக்கு என்ன பாவம் செய்தேன்? உன்னால் என்மேலும் என் நாட்டின்மேலும் எவ்வளவு பெரிய பழி விழுந்திருக்கும்! நீ செய்த காரியம் கொஞ்சம்கூட சரியில்லை” என்று சொன்னார். 10 அதோடு, “என்ன நினைத்து நீ இப்படிச் செய்தாய்?”+ என்று அபிமெலேக்கு கேட்டார். 11 அதற்கு ஆபிரகாம், “இங்கு இருக்கிறவர்களுக்குக் கடவுள்பயமே இல்லை என்றும், என் மனைவியை அடைவதற்காக என்னைக் கொன்றுவிடுவார்கள் என்றும் நினைத்தேன்.+ 12 அதோடு, அவள் நிஜமாகவே என் தங்கைதான். அவளும் என் அப்பாவுக்குப் பிறந்தவள்தான். எங்கள் அம்மாதான் வேறு வேறு. அவளை நான் கல்யாணம் செய்துகொண்டேன்.+ 13 என்னுடைய அப்பாவின் வீட்டிலிருந்து கடவுள் என்னைப் புறப்பட்டுப் போகச் சொன்னபோது+ நான் அவளிடம், ‘உனக்கு உண்மையிலேயே என்மேல் அன்பு* இருந்தால், நாம் எங்கு போனாலும் நான் உன் அண்ணன் என்றுதான் நீ சொல்ல வேண்டும்’+ என்று சொல்லி வைத்திருந்தேன்” என்றார்.
14 அதன்பின், அபிமெலேக்கு ஆடுமாடுகளையும் வேலைக்காரர்களையும் வேலைக்காரிகளையும் ஆபிரகாமுக்குக் கொடுத்தார், அவருடைய மனைவி சாராளையும் அவரிடமே ஒப்படைத்தார். 15 அப்போது அபிமெலேக்கு அவரிடம், “என்னுடைய தேசத்தில் எங்கு வேண்டுமானாலும் நீ குடியிருக்கலாம்” என்றும் சொன்னார். 16 அதோடு சாராளிடம், “உன் அண்ணனுக்கு நான் 1,000 வெள்ளிக் காசுகள் கொடுக்கிறேன்.+ என் நிழல்கூட உன்மேல் படவில்லை என்பதற்கு இது அடையாளமாக இருக்கும். உன்னோடு இருப்பவர்களுக்கும் மற்ற எல்லாருக்கும் இது அடையாளமாக இருக்கும். நீ களங்கம் இல்லாதவள்” என்று சொன்னார். 17 அப்போது, ஆபிரகாம் உண்மைக் கடவுளிடம் மன்றாடினார். கடவுள் அபிமெலேக்கையும் அவருடைய மனைவியையும் அவருடைய அடிமைப் பெண்களையும் குணப்படுத்தி, அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் தந்தார். 18 ஏனென்றால், ஆபிரகாமின் மனைவி சாராளை அபிமெலேக்கு கொண்டுவந்த சமயத்திலிருந்து அவருடைய அரண்மனையில் இருந்த எந்தப் பெண்ணும் கர்ப்பமாகாதபடி யெகோவா செய்திருந்தார்.+
21 யெகோவா தான் சொன்னபடியே சாராளுக்குக் கருணை காட்டினார். அவளுக்குக் கொடுத்த வாக்குறுதியை யெகோவா நிறைவேற்றினார்.+ 2 அதனால் சாராள் கர்ப்பமாகி,+ வயதான ஆபிரகாமுக்கு ஒரு மகனைப் பெற்றுக் கொடுத்தாள். ஆபிரகாமுக்குக் கடவுள் வாக்குறுதி கொடுத்தபடியே குறித்த காலத்தில் இது நடந்தது.+ 3 சாராள் பெற்றெடுத்த மகனுக்கு ஈசாக்கு+ என்று ஆபிரகாம் பெயர் வைத்தார். 4 கடவுளுடைய கட்டளைப்படியே+ ஆபிரகாம் தன்னுடைய மகன் ஈசாக்கு பிறந்த எட்டாம் நாளில் அவனுக்கு விருத்தசேதனம் செய்தார். 5 ஈசாக்கு பிறந்தபோது ஆபிரகாமுக்கு 100 வயது. 6 அப்போது சாராள், “கடவுள் என்னைச் சந்தோஷமாகச் சிரிக்க வைத்திருக்கிறார். இதைக் கேள்விப்படுகிற எல்லாரும் என்னோடு சேர்ந்து* சிரிப்பார்கள்” என்று சொன்னாள். 7 அதோடு, “நான் என்னுடைய கணவருக்குக் குழந்தை பெற்றுக் கொடுப்பேன் என்று யாராவது நினைத்திருப்பார்களா? இருந்தாலும், அவருடைய வயதான காலத்தில் அவருக்கு நான் ஒரு மகனைப் பெற்றுக் கொடுத்திருக்கிறேன்” என்று சொன்னாள்.
8 ஈசாக்கு வளர்ந்து தாய்ப்பாலை மறந்தான். அன்றைக்கு ஆபிரகாம் ஒரு பெரிய விருந்தை ஏற்பாடு செய்தார். 9 ஆனால், எகிப்தியப் பெண் ஆகார் மூலமாக ஆபிரகாமுக்குப் பிறந்த மகன், ஈசாக்கைக் கேலி செய்வதை+ சாராள் கவனித்துக்கொண்டே இருந்தாள்.+ 10 அதனால் சாராள் ஆபிரகாமிடம், “இந்த அடிமைப் பெண்ணையும் இவளுடைய மகனையும் துரத்திவிடுங்கள். இவளுடைய மகன் என்னுடைய மகன் ஈசாக்கோடு வாரிசாக இருக்க முடியாது!”+ என்றாள். 11 ஆனால் ஆபிரகாமுக்கு, தன்னுடைய மகனைப் பற்றி அவள் இப்படிச் சொன்னது மிகவும் வேதனையாக இருந்தது.+ 12 அப்போது கடவுள் ஆபிரகாமிடம், “உன்னுடைய மகனையும் உன்னுடைய அடிமைப் பெண்ணையும் பற்றி சாராள் சொன்னதை நினைத்து வேதனைப்படாதே. அவளுடைய பேச்சைக் கேள். ஏனென்றால், ஈசாக்கின் வழியாக உருவாகும் சந்ததிதான் உன்னுடைய சந்ததி என்று அழைக்கப்படும்.+ 13 உன்னுடைய அடிமைப் பெண்ணின் மகனையும்+ ஒரு தேசமாக ஆக்குவேன்;+ ஏனென்றால், அவனும் உன் சந்ததிதான்” என்று சொன்னார்.
14 அதனால் ஆபிரகாம் விடியற்காலையில் எழுந்து, உணவையும் ஒரு தோல் பை நிறைய தண்ணீரையும் எடுத்து, ஆகாரின் தோள்மேல் வைத்து, அவளையும் பையனையும் அனுப்பி வைத்தார்.+ அவள் அங்கிருந்து புறப்பட்டுப் போய், பெயெர்-செபாவின்+ வனாந்தரத்தில் அலைந்து திரிந்தாள். 15 கடைசியில், தோல் பையில் இருந்த தண்ணீர் தீர்ந்துபோனபோது அவள் தன்னுடைய பையனை ஒரு புதரின் கீழ் விட்டுவிட்டாள். 16 பின்பு, அம்பு பாயும் தூரத்துக்குப் போய் உட்கார்ந்துகொண்டு, “என் பையன் சாவதை என்னால் பார்க்க முடியாது” என்று சொல்லிக் கதறி அழ ஆரம்பித்தாள்.
17 அப்போது, அந்தப் பையனுடைய குரலைக் கடவுள் கேட்டார்.+ பரலோகத்திலிருந்து ஒரு தேவதூதர் ஆகாரைக் கூப்பிட்டு,+ “ஆகாரே, ஏன் அழுகிறாய்? பயப்படாதே, அங்கே கிடக்கிற உன் மகனுடைய குரலைக் கடவுள் கேட்டார். 18 எழுந்திரு, அவனைத் தூக்கிவிடு, உன் கையால் தாங்கிப் பிடித்துக்கொள். அவனை நான் மாபெரும் தேசமாக்குவேன்”+ என்று சொன்னார். 19 அதன்பின் கடவுள் அவளுடைய கண்களைத் திறந்ததால், தண்ணீருள்ள ஒரு கிணற்றை அவள் பார்த்தாள். உடனே போய், தோல் பையில் தண்ணீரை நிரப்பி தன் பையனுக்குக் குடிக்கக் கொடுத்தாள். 20 கடவுள் அவனோடு+ இருந்தார். அவன் வனாந்தரத்தில் குடியிருந்தான். வளர்ந்து ஆளான பின்பு அம்புவிடுவதில் அவன் திறமைசாலியாக ஆனான். 21 பாரான் வனாந்தரத்தில்+ அவன் குடியிருந்தபோது, அவனுடைய அம்மா எகிப்து தேசத்துப் பெண்ணை அவனுக்குக் கல்யாணம் செய்து வைத்தாள்.
22 அந்தச் சமயத்தில், அபிமெலேக்கு தன்னுடைய படைத் தளபதி பிகோலைக் கூட்டிக்கொண்டு ஆபிரகாமிடம் வந்து, “நீ செய்கிற எல்லா காரியத்திலும் கடவுள் உன்னோடு இருப்பதை எங்களால் பார்க்க முடிகிறது.+ 23 அதனால், எனக்கும் என் பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் நீ நம்பிக்கைத் துரோகம் செய்ய மாட்டாய் என்று கடவுள் பெயரில் சத்தியம் செய்து கொடு. நான் உனக்கு விசுவாசமாக இருப்பது போல நீயும் எனக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். நீ குடியிருக்கிற இந்தத் தேசத்தின் ஜனங்களுக்கும் விசுவாசமாக இருக்க வேண்டும்”+ என்று சொன்னார். 24 அதற்கு ஆபிரகாம், “நான் விசுவாசமாக இருப்பேன், இது சத்தியம்” என்றார்.
25 ஆனாலும் ஆபிரகாம், அபிமெலேக்கின் ஆட்கள் சண்டைபோட்டுப் பிடுங்கிக்கொண்ட கிணற்றைப்+ பற்றி அவரிடம் புகார் செய்தார். 26 அதற்கு அபிமெலேக்கு, “யார் அப்படிச் செய்தார்கள் என்று எனக்குத் தெரியாது. இதுவரை இந்த விஷயத்தைப் பற்றி நீ என்னிடம் எதுவும் சொல்லவில்லை, யாருமே சொல்லவில்லை” என்றார். 27 பின்பு, ஆபிரகாம் அபிமெலேக்குக்கு ஆடுமாடுகளைக் கொடுத்தார். இரண்டு பேரும் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். 28 அதன்பின், ஏழு பெண் செம்மறியாட்டுக் குட்டிகளை மட்டும் ஆபிரகாம் தனியாக நிற்க வைத்தார். 29 அதைப் பார்த்தபோது அபிமெலேக்கு அவரிடம், “ஏன் இந்த ஏழு ஆட்டுக்குட்டிகளை மட்டும் தனியாக நிற்க வைத்திருக்கிறாய்?” என்று கேட்டார். 30 அதற்கு ஆபிரகாம், “நான் இந்தக் கிணற்றைத் தோண்டினேன் என்பதற்கு அத்தாட்சியாக இந்த ஏழு ஆட்டுக்குட்டிகளை என்னிடமிருந்து வாங்கிக்கொள்ளுங்கள்” என்றார். 31 பின்பு, அந்த இடத்துக்கு பெயெர்-செபா*+ என்று பெயர் வைத்தார். ஏனென்றால், அந்த இடத்தில் இரண்டு பேரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள். 32 அவர்கள் இரண்டு பேரும் பெயெர்-செபாவில் ஒப்பந்தம் செய்த+ பின்பு, அபிமெலேக்கும் அவருடைய படைத் தளபதி பிகோலும் பெலிஸ்தியர்களின் தேசத்துக்குத் திரும்பிப் போனார்கள்.+ 33 பின்பு, பெயெர்-செபாவில் ஆபிரகாம் ஒரு சவுக்கு மரத்தை நட்டு வைத்தார். என்றென்றுமுள்ள கடவுளான+ யெகோவாவின் பெயரை அங்கே போற்றிப் புகழ்ந்தார்.+ 34 பெலிஸ்தியர்களின் தேசத்தில் ஆபிரகாம் நிறைய காலம் தங்கியிருந்தார்.+
22 பின்பு, ஆபிரகாமின் விசுவாசத்தை உண்மைக் கடவுள் சோதித்துப் பார்த்தார்.+ ஒருநாள் அவர், “ஆபிரகாமே!” என்று கூப்பிட்டார். அதற்கு ஆபிரகாம், “சொல்லுங்கள் எஜமானே!” என்றார். 2 அப்போது கடவுள், “நீ உயிருக்கு உயிராய் நேசிக்கிற உன்னுடைய ஒரே மகன்+ ஈசாக்கைத்+ தயவுசெய்து மோரியா தேசத்துக்குக்+ கூட்டிக்கொண்டு போ. அங்கே நான் காட்டுகிற ஒரு மலையில் அவனைத் தகன பலியாகக் கொடு” என்று சொன்னார்.
3 அதனால், ஆபிரகாம் விடியற்காலையில் எழுந்து, தன்னுடைய கழுதைமேல் சேணம்* வைத்தார். பின்பு, தன்னுடைய மகன் ஈசாக்கையும் இரண்டு வேலைக்காரர்களையும் கூட்டிக்கொண்டு, தகன பலிக்கு வேண்டிய விறகுகளையும் வெட்டி எடுத்துக்கொண்டு, உண்மைக் கடவுள் சொல்லியிருந்த இடத்துக்குப் புறப்பட்டுப் போனார். 4 மூன்றாம் நாள் ஆபிரகாம் அந்த இடத்தைத் தூரத்திலிருந்து பார்த்தார். 5 அவர் தன் வேலைக்காரர்களிடம், “நீங்கள் இங்கேயே கழுதையுடன் இருங்கள். நானும் என் மகனும் அங்கே போய் கடவுளை வணங்கிவிட்டு வருகிறோம்” என்று சொன்னார்.
6 பின்பு, ஆபிரகாம் தகன பலிக்கான விறகுகளை எடுத்து, தன்னுடைய மகன் ஈசாக்கின் தோள்மேல் வைத்தார். அதன்பின், நெருப்பையும் கத்தியையும்* எடுத்துக்கொண்டார். இரண்டு பேரும் ஒன்றாக நடந்துபோனார்கள். 7 அப்போது ஈசாக்கு ஆபிரகாமிடம், “அப்பா!” என்றார். அதற்கு அவர், “என்ன மகனே?” என்று கேட்டார். அப்போது ஈசாக்கு, “நெருப்பும் விறகும் இருக்கிறது, ஆனால் தகன பலி கொடுக்க ஆடு எங்கே?” என்று கேட்டார். 8 அதற்கு ஆபிரகாம், “மகனே, தகன பலிக்கான ஆட்டைக்+ கடவுள் கொடுப்பார்” என்று சொன்னார். இரண்டு பேரும் தொடர்ந்து நடந்துபோனார்கள்.
9 கடைசியாக, உண்மைக் கடவுள் சொல்லியிருந்த இடத்துக்கு அவர்கள் போய்ச் சேர்ந்தார்கள். அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதன்மேல் விறகுகளை அடுக்கினார். பின்பு, தன்னுடைய மகன் ஈசாக்கின் கையையும் காலையும் கட்டி, அந்த விறகுகள்மேல் படுக்க வைத்தார்.+ 10 அதன்பின், ஆபிரகாம் தன்னுடைய மகனைக் கொல்வதற்காகக் கத்தியை* எடுத்தார்.+ 11 உடனே யெகோவாவின் தூதர் பரலோகத்திலிருந்து, “ஆபிரகாமே, ஆபிரகாமே!” என்று கூப்பிட்டார். அதற்கு ஆபிரகாம், “சொல்லுங்கள், எஜமானே!” என்றார். 12 அப்போது அவர், “உன் மகனைக் கொன்றுவிடாதே, அவனுக்கு ஒன்றும் செய்துவிடாதே. நீ கடவுள்பயம் உள்ளவன் என்று இப்போது நான் தெரிந்துகொண்டேன். ஏனென்றால், எனக்காக உன்னுடைய ஒரே மகனைக் கொடுப்பதற்குக்கூட நீ தயங்கவில்லை”+ என்று சொன்னார். 13 அப்போது, கொஞ்சத் தூரத்தில் ஒரு செம்மறியாட்டுக் கடா இருப்பதை ஆபிரகாம் பார்த்தார். அதனுடைய கொம்புகள் ஒரு புதரில் சிக்கியிருந்தன. ஆபிரகாம் அங்கே போய் அந்தச் செம்மறியாட்டுக் கடாவைப் பிடித்துக்கொண்டு வந்து, தன் மகனுக்குப் பதிலாக அதைத் தகன பலியாகச் செலுத்தினார். 14 ஆபிரகாம் அந்த இடத்துக்கு யெகோவா-யீரே* என்று பெயர் வைத்தார். அதனால்தான், “யெகோவா தன்னுடைய மலையில் கொடுப்பார்”+ என்று இன்றுவரை சொல்லப்படுகிறது.
15 யெகோவாவின் தூதர் இரண்டாம் தடவை பரலோகத்திலிருந்து ஆபிரகாமைக் கூப்பிட்டு, 16 “யெகோவா இப்படிச் சொல்கிறார்: ‘என்மேல் சத்தியமாகச் சொல்கிறேன்,+ நீ உன்னுடைய ஒரே மகனை எனக்குக் கொடுக்கத் தயங்காததால்+ 17 நான் உன்னை நிச்சயம் ஆசீர்வதிப்பேன். உன்னுடைய சந்ததியை வானத்திலுள்ள நட்சத்திரங்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் பெருகப் பண்ணுவேன்.+ உன்னுடைய சந்ததி எதிரிகளுடைய நகரங்களை* கைப்பற்றும்.+ 18 நீ என் பேச்சைக் கேட்டதால், உன்னுடைய சந்ததியின்+ மூலம் பூமியிலுள்ள எல்லா தேசத்தாரும் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வார்கள்’”+ என்று சொன்னார்.
19 பின்பு, ஆபிரகாம் தன்னுடைய வேலைக்காரர்கள் இருந்த இடத்துக்கு வந்தார். அங்கிருந்து அவர்கள் எல்லாரும் பெயெர்-செபாவுக்குத்+ திரும்பிப் போனார்கள். ஆபிரகாம் தொடர்ந்து பெயெர்-செபாவிலேயே குடியிருந்தார்.
20 அதன்பின் ஒருவன் ஆபிரகாமிடம் வந்து, “உங்கள் சகோதரன் நாகோருக்கும்+ அவருடைய மனைவி மில்காளுக்கும் இப்போது மகன்கள் இருக்கிறார்கள். 21 முதல் மகனுடைய பெயர் ஊத்ஸ், இரண்டாவது மகன் பூஸ், மூன்றாவது மகன் அராமின் அப்பாவான கேமுவேல். 22 இவர்களைத் தவிர கேசேத், ஆசோ, பில்தாஸ், இத்லாப், பெத்துவேல்+ என்ற மகன்களும் இருக்கிறார்கள்” என்று சொன்னான். 23 பெத்துவேலுக்கு ரெபெக்காள்+ பிறந்தாள். பெத்துவேலோடு சேர்த்து அந்த எட்டு மகன்களும் ஆபிரகாமின் சகோதரனான நாகோருக்கும் மில்காளுக்கும் பிறந்தவர்கள். 24 நாகோரின் மறுமனைவி பெயர் ரேயுமாள். அவளுக்கு தேபா, காகாம், தாகாஸ், மாக்கா என்ற மகன்கள் பிறந்தார்கள்.
23 சாராள் 127 வருஷங்கள் வாழ்ந்தாள்.+ 2 அவள் கானான் தேசத்திலுள்ள+ கீரியாத்-அர்பாவில்,+ அதாவது எப்ரோனில்,+ இறந்தாள். அவளுக்காக ஆபிரகாம் துக்கம் அனுசரிக்கவும் அழுது புலம்பவும் ஆரம்பித்தார். 3 பின்பு, அங்கிருந்து எழுந்து போய் ஏத்தின்+ மகன்களிடம், 4 “நான் என்னுடைய தேசத்தைவிட்டு இங்கே வந்து அன்னியனாகக் குடியேறினேன்.+ என் மனைவியை அடக்கம் செய்வதற்காக எனக்கு ஒரு இடம் கொடுங்கள்” என்றார். 5 அதற்கு ஏத்தின் மகன்கள் ஆபிரகாமிடம், 6 “எஜமானே, நீங்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபதி* என்று எங்களுக்குத் தெரியும்.+ நாங்கள் அடக்கம் செய்கிற இடங்களில் ஒரு நல்ல இடமாகப் பார்த்து உங்கள் மனைவியை நீங்கள் அடக்கம் செய்துகொள்ளலாம். நாங்கள் எல்லாருமே எங்களுடைய இடத்தைத் தருவதற்குத் தயாராக இருக்கிறோம்” என்று சொன்னார்கள்.
7 அப்போது ஆபிரகாம் எழுந்து, அந்தத் தேசத்தைச் சேர்ந்த ஏத்தின்+ மகன்களைப் பார்த்துத் தலைவணங்கி, 8 “என் மனைவியை இங்கே அடக்கம் செய்ய நீங்கள் ஒத்துக்கொண்டால், சோகாரின் மகன் எப்பெரோனிடம் பேசி, 9 மக்பேலாவில் அவருடைய நிலத்தின் ஓரத்தில் இருக்கிற குகையை எனக்கு விற்கச் சொல்லுங்கள். உங்களுடைய முன்னிலையில் அதை அவர் விற்கட்டும், அதற்கான மொத்த விலையையும்+ நான் கொடுத்துவிடுகிறேன். அப்போது, அடக்கம் செய்ய எனக்கென்று சொந்தமாக ஒரு இடம் இருக்கும்”+ என்று சொன்னார்.
10 ஏத்தின் மகன்களோடு ஏத்தியனான எப்பெரோன் உட்கார்ந்துகொண்டிருந்தார். அவர்களுடைய முன்னிலையிலும் அந்த நகரவாசலில்+ இருந்த எல்லாருடைய முன்னிலையிலும் எப்பெரோன் ஆபிரகாமைப் பார்த்து, 11 “என் எஜமானே! நான் சொல்வதைக் கேளுங்கள். அந்த நிலத்தோடு சேர்த்து அதிலுள்ள குகையையும் உங்களுக்குத் தருகிறேன். என்னுடைய ஜனங்களின் முன்னிலையில் அதை நான் உங்களுக்குத் தருகிறேன். உங்கள் மனைவியை அங்கே அடக்கம் செய்யுங்கள்” என்று சொன்னார். 12 அப்போது ஆபிரகாம் அந்தத் தேசத்து ஜனங்கள்முன் தலைவணங்கி, 13 அவர்கள் முன்னிலையில் எப்பெரோனிடம், “தயவுசெய்து நான் சொல்வதைக் கேளுங்கள். நிலத்துக்கான மொத்த விலையையும் நான் உங்களுக்குக் கொடுக்கிறேன், வாங்கிக்கொள்ளுங்கள். அப்போது, என் மனைவியை நான் அங்கே அடக்கம் செய்வேன்” என்று சொன்னார்.
14 அதற்கு எப்பெரோன் ஆபிரகாமிடம், 15 “என் எஜமானே, நான் சொல்வதைக் கேளுங்கள். அந்த நிலத்தின் விலை 400 வெள்ளி சேக்கல்.* ஆனால், நமக்குள்ளே பணம் ஒரு பெரிய விஷயமா? உங்கள் மனைவியை அங்கே அடக்கம் செய்துகொள்ளுங்கள்” என்றார். 16 ஏத்தின் மகன்களுடைய முன்னிலையில் எப்பெரோன் சொன்னதை ஆபிரகாம் ஒத்துக்கொண்டு, அன்றைய வியாபாரிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்குப்படி 400 வெள்ளி சேக்கலை* நிறுத்துக் கொடுத்தார்.+ 17 அப்போது, மம்ரேக்குப் பக்கத்தில் மக்பேலாவில் இருந்த எப்பெரோனின் நிலத்தையும் அதிலிருந்த குகையையும் எல்லா மரங்களையும், 18 ஏத்தின் மகன்களுடைய முன்னிலையிலும் நகரவாசலில் இருந்த எல்லாருடைய முன்னிலையிலும் ஆபிரகாம் வாங்கியதாக உறுதி செய்யப்பட்டது. 19 அதன்பின், மக்பேலாவில் இருந்த அந்த நிலத்தின் குகையில் ஆபிரகாம் தன் மனைவி சாராளை அடக்கம் செய்தார். அது கானான் தேசத்தில் இருந்த மம்ரேக்குப் பக்கத்தில், அதாவது எப்ரோனில், இருந்தது. 20 இப்படி, அடக்கம் செய்வதற்கான இடமாக அந்த நிலத்தையும் அதிலிருந்த குகையையும் ஏத்தின் மகன்கள் ஆபிரகாமுக்குக் கொடுத்தார்கள்.+
24 ஆபிரகாம் மிகவும் வயதானவராக இருந்தார். அவர் செய்த எல்லாவற்றையும் யெகோவா ஆசீர்வதித்திருந்தார்.+ 2 ஒருநாள் ஆபிரகாம், தன் வீட்டிலுள்ள எல்லாவற்றையும் கவனித்துவந்த மூத்த ஊழியரிடம்,+ “தயவுசெய்து என் தொடையின் கீழ் உன் கையை வைத்து,* 3 நான் குடியிருக்கிற இந்த கானான் தேசத்திலிருந்து என்னுடைய மகன் ஈசாக்குக்கு நீ பெண்ணெடுக்க மாட்டாய் என்று பரலோகத்துக்கும் பூமிக்கும் கடவுளான யெகோவாவின் மேல் சத்தியம் செய்து கொடு.+ 4 நீ என்னுடைய தேசத்துக்குப் போய் என்னுடைய சொந்தத்திலிருந்து+ அவனுக்குப் பெண்ணெடுக்க வேண்டும்” என்று சொன்னார்.
5 அப்போது அந்த ஊழியர், “என்னோடு இங்கே வர அந்தப் பெண்ணுக்கு விருப்பம் இல்லையென்றால் என்ன செய்வது? நீங்கள் விட்டுவந்த தேசத்துக்கே+ உங்கள் மகனை நான் கூட்டிக்கொண்டு போகட்டுமா?” என்று கேட்டார். 6 அதற்கு ஆபிரகாம், “வேண்டாம்! என் மகனை நீ அங்கே கூட்டிக்கொண்டு போகக் கூடாது.+ 7 என்னுடைய அப்பாவின் வீட்டிலிருந்தும் என்னுடைய சொந்தக்காரர்களின் தேசத்திலிருந்தும் என்னைக் கூட்டிக்கொண்டு வந்த+ பரலோகத்தின் கடவுளான யெகோவா, என்னுடைய சந்ததிக்கு+ இந்தத் தேசத்தைத் தருவதாக+ வாக்குக் கொடுத்திருக்கிறார்.+ அதனால், அவருடைய தூதனை உனக்கு முன்னால் அனுப்புவார்,+ நீ கண்டிப்பாக அங்கிருந்து என் மகனுக்குப் பெண்ணெடுப்பாய்.+ 8 ஒருவேளை, உன்னோடு வர அந்தப் பெண்ணுக்கு விருப்பம் இல்லையென்றால், எனக்குக் கொடுத்த உறுதிமொழியிலிருந்து நீ விடுபடுவாய். ஆனாலும், என் மகனை நீ அங்கே கூட்டிக்கொண்டு போகக் கூடாது” என்று சொன்னார். 9 அப்போது, அந்த ஊழியர் தன்னுடைய எஜமான் ஆபிரகாமுடைய தொடையின் கீழ் கை வைத்து, அவர் கேட்டபடியே சத்தியம் செய்து கொடுத்தார்.+
10 பின்பு, அந்த ஊழியர் தன்னுடைய எஜமானிடமிருந்து 10 ஒட்டகங்களையும் நல்ல நல்ல அன்பளிப்புகளையும் எடுத்துக்கொண்டு மெசொப்பொத்தாமியாவில் இருந்த நாகோரின் நகரத்துக்குப் புறப்பட்டுப் போனார். 11 அந்த நகரத்துக்கு வெளியில் ஒரு கிணற்றைப் பார்த்தபோது அங்கே தன்னுடைய ஒட்டகங்களை ஓய்வெடுக்க விட்டார். அது சாயங்கால நேரமாக இருந்தது. பொதுவாக, அந்த நேரத்தில் பெண்கள் தண்ணீர் எடுக்க வருவார்கள். 12 அப்போது அவர், “யெகோவாவே, என் எஜமான் ஆபிரகாமின் கடவுளே, தயவுசெய்து நான் வந்த காரியத்தை நல்லபடியாக முடித்துக் கொடுங்கள். என் எஜமானாகிய ஆபிரகாமின் மேல் எப்போதும் போல அன்பு* காட்டுங்கள். 13 நான் கிணற்றுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருக்கிறேன். இந்த நகரத்துப் பெண்கள் தண்ணீர் எடுக்க வந்துகொண்டிருக்கிறார்கள். 14 ‘உன்னுடைய ஜாடியிலிருந்து எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கொடு’ என்று நான் கேட்கும்போது, ‘குடியுங்கள், உங்கள் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் கொடுக்கிறேன்’ என்று எந்தப் பெண் சொல்கிறாளோ, அவள்தான் உங்கள் ஊழியன் ஈசாக்குக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கிற பெண் என்று தெரிந்துகொள்வேன். என் எஜமான்மேல் நீங்கள் வைத்திருக்கிற அன்பை* இதன் மூலம் எனக்குக் காட்டுங்கள்” என்று வேண்டிக்கொண்டார்.
15 அவர் இப்படிச் சொல்லி முடிப்பதற்குள், ரெபெக்காள் தண்ணீர் ஜாடியைத் தோளில் சுமந்துகொண்டு வந்தாள். அவள் ஆபிரகாமுடைய சகோதரன் நாகோருக்கும்+ அவர் மனைவி மில்காளுக்கும்+ பிறந்த பெத்துவேலின் மகள்.+ 16 அவள் கல்யாணமாகாத இளம் பெண். பார்க்க ரொம்ப அழகாக இருந்தாள். அவள் கிணற்றுக்குள் இறங்கி தண்ணீர் ஜாடியை நிரப்பிக்கொண்டு மேலே வந்தாள். 17 உடனே அந்த ஊழியர் அவளிடம் ஓடிப்போய், “தயவுசெய்து உன் ஜாடியிலிருந்து கொஞ்சம் தண்ணீர் கொடு” என்று கேட்டார். 18 அதற்கு அவள், “குடியுங்கள், ஐயா” என்று சொல்லி, உடனே தன்னுடைய ஜாடியைத் தோளிலிருந்து இறக்கி அவருக்குத் தண்ணீர் கொடுத்தாள். 19 அவர் குடித்து முடித்ததும் அவள் அவரிடம், “உங்களுடைய ஒட்டகங்களுக்கும் போதுமான அளவு தண்ணீர் எடுத்துக் கொடுக்கிறேன்” என்று சொன்னாள். 20 பின்பு, ஜாடியில் இருந்த தண்ணீரை அங்கிருந்த தொட்டியில் சீக்கிரமாக ஊற்றிவிட்டு, மறுபடியும் மறுபடியும் ஓடிப் போய் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துவந்தாள். அவருடைய எல்லா ஒட்டகங்களும் குடித்து முடிக்கும்வரை ஊற்றிக்கொண்டே இருந்தாள். 21 அந்த ஊழியர் எதுவும் பேசாமல் அவளை ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டே, தான் வந்த காரியத்தை யெகோவா கைகூடி வரப் பண்ணிவிட்டாரோ என்று யோசித்துக்கொண்டிருந்தார்.
22 எல்லா ஒட்டகங்களும் தண்ணீர் குடித்து முடித்ததும், தங்கத்தில் செய்த அரை சேக்கல்* எடையுள்ள மூக்குவளையத்தையும் 10 சேக்கல்* எடையுள்ள இரண்டு காப்புகளையும் அந்த ஊழியர் அவளுக்கு எடுத்துக்கொடுத்தார். 23 பின்பு அவளிடம், “நீ யாருடைய மகள் என்று தெரிந்துகொள்ளலாமா? இந்த ராத்திரி நாங்கள் தங்குவதற்கு உன் அப்பாவுடைய வீட்டில் இடம் இருக்கிறதா?” என்று கேட்டார். 24 அதற்கு அவள், “நாகோருக்கும் மில்காளுக்கும் பிறந்த பெத்துவேலின் மகள்+ நான்” என்று சொன்னாள். 25 அதோடு, “ராத்திரி தங்குவதற்கு எங்கள் வீட்டில் இடம் இருக்கிறது. ஒட்டகங்களுக்கு வைக்கோலும் நிறைய தீவனமும்கூட இருக்கிறது” என்றாள். 26 அப்போது, அந்த ஊழியர் மண்டிபோட்டு, தரைவரைக்கும் குனிந்து, யெகோவாவுக்கு நன்றி சொல்லி, 27 “என் எஜமான் ஆபிரகாமின் கடவுளான யெகோவாவுக்குப் புகழ் சேரட்டும்! அவர் என் எஜமானுக்கு எப்போதும் போலவே மாறாத அன்பையும் உண்மைத்தன்மையையும் காட்டியிருக்கிறார். என் எஜமானுடைய சகோதரர்களின் வீட்டுக்கே வந்துசேர யெகோவா எனக்கு உதவியிருக்கிறார்” என்று சொன்னார்.
28 ரெபெக்காள் இந்த விஷயங்களைத் தன்னுடைய அம்மாவிடமும் மற்றவர்களிடமும் சொல்வதற்காக ஓடினாள். 29 ரெபெக்காளுக்கு லாபான் என்ற அண்ணன் இருந்தார்.+ அவர், நகரத்துக்கு வெளியே கிணற்றுக்குப் பக்கத்தில் இருந்த அந்த ஊழியரைப் பார்க்க ஓடினார். 30 ஏனென்றால், அந்த ஊழியர் பேசியதைப் பற்றி அவருடைய தங்கை சொல்லியிருந்தாள். அவளுடைய மூக்கிலிருந்த வளையத்தையும் கைகளிலிருந்த காப்புகளையும்கூட லாபான் பார்த்திருந்தார். அதனால், கிணற்றுக்குப் பக்கத்தில் ஒட்டகங்களுடன் நின்றுகொண்டிருந்த அந்த ஊழியரிடம் போய், 31 “யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெற்றவரே, ஏன் இங்கேயே நின்றுகொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் என்னுடைய வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன், உங்கள் ஒட்டகங்களுக்கும் ஒரு இடத்தைத் தயார் செய்திருக்கிறேன், வாருங்கள்” என்றார். 32 அதனால், அந்த ஊழியர் லாபானின் வீட்டுக்கு வந்தார். அப்போது, அவர்* ஒட்டகங்களின் சேணத்தை* அவிழ்த்து அவற்றுக்கு வைக்கோலும் தீவனமும் கொடுத்தார். அதோடு, அந்த ஊழியரும் அவருடன் வந்தவர்களும் தங்கள் பாதங்களைக் கழுவுவதற்காகத் தண்ணீர் கொடுத்தார். 33 அந்த ஊழியருக்கு உணவு பரிமாறப்பட்டபோது, “வந்த விஷயத்தைச் சொல்வதற்கு முன்பு நான் சாப்பிட மாட்டேன்” என்று சொன்னார். அதற்கு லாபான், “சரி, சொல்லுங்கள்!” என்றார்.
34 அதற்கு அவர், “நான் ஆபிரகாமின் ஊழியன்.+ 35 யெகோவா என் எஜமானை அளவில்லாமல் ஆசீர்வதித்திருக்கிறார். அவருக்கு ஆடுமாடுகள், ஒட்டகங்கள், கழுதைகள், வெள்ளி, தங்கம், வேலைக்காரர்கள், வேலைக்காரிகள் எல்லாவற்றையும் கொடுத்து அவரைப் பெரிய பணக்காரராக ஆக்கியிருக்கிறார்.+ 36 அதோடு, என் எஜமானின் மனைவி சாராள் வயதான காலத்தில் அவருக்கு ஒரு மகனைப் பெற்றுக் கொடுத்தார்.+ அந்த மகனுக்குத்தான் என் எஜமானுடைய எல்லா சொத்தும் வந்து சேரும்.+ 37 என் எஜமான் என்னிடம், ‘நான் குடியிருக்கிற இந்த கானான் தேசத்திலிருந்து நீ என்னுடைய மகன் ஈசாக்குக்குப் பெண்ணெடுக்காமல்,+ 38 என் அப்பாவின் வீட்டுக்குப் போய் என் குடும்பத்திலிருந்து+ அவனுக்குப் பெண்ணெடு’+ என்று சொல்லி என்னிடம் சத்தியம் வாங்கிக்கொண்டார். 39 அப்போது நான் என் எஜமானிடம், ‘என்னோடு வர அந்தப் பெண்ணுக்கு விருப்பம் இல்லையென்றால் என்ன செய்வது?’ என்று கேட்டேன்.+ 40 அதற்கு அவர், ‘நான் வணங்குகிற யெகோவா*+ தன்னுடைய தூதனை உன்னோடு அனுப்பி,+ நீ போகிற காரியம் கைகூடும்படி செய்வார். என் குடும்பத்திலிருந்தும் என் அப்பாவின் வீட்டிலிருந்தும் நீ என் மகனுக்குப் பெண்ணெடுக்க வேண்டும்.+ 41 நீ என் சொந்தக்காரர்களிடம் போய்க் கேட்டும் அவர்கள் பெண் தராவிட்டால், எனக்குக் கொடுத்த உறுதிமொழியிலிருந்து நீ விடுபடுவாய்’ என்று சொன்னார்.+
42 இன்று நான் கிணற்றுப் பக்கமாக வந்தபோது கடவுளிடம், ‘யெகோவாவே, என் எஜமான் ஆபிரகாமின் கடவுளே, நான் வந்த காரியத்தை நல்லபடியாக முடித்துக் கொடுங்கள். 43 நான் கிணற்றுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருக்கிறேன். தண்ணீர் எடுக்க வருகிற ஒரு பெண்ணிடம்,+ “உன்னுடைய ஜாடியிலிருந்து எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கொடு” என்று நான் கேட்கும்போது, 44 அவள் என்னிடம், “குடியுங்கள், உங்கள் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் கொடுக்கிறேன்” என்று சொன்னால், அவள்தான் என் எஜமானுடைய மகனுக்கு யெகோவா தேர்ந்தெடுத்த பெண் என்று தெரிந்துகொள்வேன்’+ என்று வேண்டிக்கொண்டேன்.
45 நான் இப்படி மனதில்* சொல்லி முடிப்பதற்குள், ரெபெக்காள் தண்ணீர் ஜாடியைத் தோளில் சுமந்துகொண்டு வந்தாள். அவள் கிணற்றுக்குள் இறங்கி தண்ணீர் எடுத்தாள். அப்போது நான் அவளிடம், ‘தயவுசெய்து, குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கொடு’ என்று கேட்டேன்.+ 46 அவள் உடனே தன்னுடைய தோளிலிருந்து ஜாடியை இறக்கி, ‘குடியுங்கள்,+ உங்களுடைய ஒட்டகங்களுக்கும் தண்ணீர் கொடுக்கிறேன்’ என்று சொன்னாள். நான் குடித்தேன், அதன்பின் ஒட்டகங்களுக்கும் அவள் தண்ணீர் கொடுத்தாள். 47 பின்பு அவளிடம், ‘நீ யாருடைய மகள்?’ என்று கேட்டேன். அதற்கு அவள், ‘நாகோருக்கும் மில்காளுக்கும் பிறந்த பெத்துவேலின் மகள் நான்’ என்றாள். அப்போது, நான் அவளுடைய மூக்கில் வளையத்தையும் கைகளில் காப்புகளையும்+ போட்டுவிட்டேன். 48 பின்பு மண்டிபோட்டு, தரைவரைக்கும் குனிந்து, என் எஜமானின் கடவுளாகிய யெகோவாவுக்கு+ நன்றி சொன்னேன். என் எஜமானுடைய மகனுக்கு அவருடைய சகோதரரின் மகளையே பேசி முடிப்பதற்கு உதவி செய்த யெகோவாவைப் புகழ்ந்தேன். 49 இப்போது, என் எஜமானிடம் மாறாத அன்பு காட்டவும் அவருக்கு உண்மையாக இருக்கவும் நீங்கள் விரும்புகிறீர்களா என்று தயவுசெய்து என்னிடம் சொல்லுங்கள். உங்களுக்கு விருப்பம் இல்லையென்றாலும் என்னிடம் சொல்லுங்கள். அப்போதுதான், அடுத்து என்ன செய்ய வேண்டுமென்று நான் யோசிக்க முடியும்”+ என்று சொன்னார்.
50 அதற்கு லாபானும் பெத்துவேலும், “இது யெகோவாவின் ஏற்பாடு. அதனால் நாங்கள் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. 51 இதோ, ரெபெக்காள் இருக்கிறாள். அவளைக் கூட்டிக்கொண்டு போங்கள். யெகோவா சொன்னபடியே அவள் உங்கள் எஜமானுடைய மகனுக்கு மனைவியாகட்டும்” என்று சொன்னார்கள். 52 ஆபிரகாமின் ஊழியர் இதைக் கேட்டவுடன் மண்டிபோட்டு, தரைவரைக்கும் குனிந்து யெகோவாவை வணங்கினார். 53 பின்பு, தங்க நகைகளையும் வெள்ளி நகைகளையும் துணிமணிகளையும் எடுத்து ரெபெக்காளுக்குக் கொடுத்தார். அவளுடைய அண்ணனுக்கும் அம்மாவுக்கும் விலைமதிப்புள்ள பொருள்களைக் கொடுத்தார். 54 அதன்பின், அவரும் அவரோடு இருந்த ஆட்களும் சாப்பிட்டு, குடித்தார்கள். ராத்திரி அங்கேயே தங்கினார்கள்.
அந்த ஊழியர் காலையில் எழுந்து, “என் எஜமானிடம் போக வேண்டும், என்னை அனுப்பி வையுங்கள்” என்றார். 55 அதற்கு அந்தப் பெண்ணின் அண்ணனும் அம்மாவும், “எங்கள் பெண் பத்து நாளாவது எங்களோடு இருக்கட்டுமே, அப்புறம் போகலாமே’ என்று சொன்னார்கள். 56 ஆனால் அவர், “நான் வந்த காரியத்தை யெகோவா நல்லபடியாக முடித்துக் கொடுத்திருக்கிறார், அதனால் நேரம் தாழ்த்தாமல் என்னை அனுப்பி வையுங்கள். நான் என் எஜமானிடம் போக வேண்டும்” என்றார். 57 அப்போது அவர்கள், “பெண்ணையே கூப்பிட்டு அவளுடைய விருப்பத்தைக் கேட்கலாமே” என்று சொன்னார்கள். 58 உடனே ரெபெக்காளைக் கூப்பிட்டு, “இவரோடு போக உனக்குச் சம்மதமா?” என்று கேட்டார்கள். அதற்கு அவள் “சம்மதம்தான்” என்று சொன்னாள்.
59 அதனால், அவர்கள் ரெபெக்காளையும்*+ அவளுடைய தாதியையும்*+ ஆபிரகாமின் ஊழியரையும் அவருடைய ஆட்களையும் அனுப்பி வைத்தார்கள். 60 அப்போது அவர்கள் ரெபெக்காளிடம், “எங்கள் சகோதரியே, உன்னுடைய வம்சம் லட்சக்கணக்கில் பெருகட்டும்; உன்னுடைய சந்ததி எதிரிகளின் நகரங்களைக் கைப்பற்றட்டும்” என்று சொல்லி வாழ்த்தினார்கள்.+ 61 பின்பு, ரெபெக்காளும் அவளுடைய பணிப்பெண்களும் ஒட்டகங்களில் ஏறி, அந்த ஊழியரின் பின்னால் போனார்கள். இப்படி, அந்த ஊழியர் ரெபெக்காளைக் கூட்டிக்கொண்டு போனார்.
62 நெகேபில்+ குடியிருந்த ஈசாக்கு, பெயெர்-லகாய்-ரோயீ+ என்ற கிணற்றின் வழியாக வந்தார். 63 அவர் சாயங்கால நேரத்தில், சில விஷயங்களைத் தியானிப்பதற்காக+ காட்டுவெளியில் நடந்துகொண்டிருந்தார். அவர் நிமிர்ந்து பார்த்தபோது, ஒட்டகங்கள் வருவது தெரிந்தது. 64 ரெபெக்காளும் ஈசாக்கைப் பார்த்தாள். உடனே, ஒட்டகத்தைவிட்டு இறங்கினாள். 65 அப்போது அந்த ஊழியரிடம், “நம்மைச் சந்திப்பதற்காக ஒருவர் வருகிறாரே, அவர் யார்?” என்று கேட்டாள். அதற்கு அந்த ஊழியர், “அவர்தான் என் எஜமான்” என்று சொன்னார். அப்போது, அவள் முக்காடு போட்டுக்கொண்டாள். 66 அதன்பின் அந்த ஊழியர், நடந்த எல்லா விஷயங்களையும் ஈசாக்கிடம் சொன்னார். 67 பின்பு, ஈசாக்கு தன்னுடைய அம்மா சாராளின் கூடாரத்துக்கு+ ரெபெக்காளைக் கூட்டிக்கொண்டு போய், தன்னுடைய மனைவியாக்கிக்கொண்டார். அவர் அவளை நேசித்தார்.+ இப்படி, அம்மாவைப் பறிகொடுத்த+ சோகத்திலிருந்து மீண்டு ஆறுதல் அடைந்தார்.
25 பின்பு ஆபிரகாம், கேத்தூராள் என்ற பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டார். 2 அவர்களுக்கு சிம்ரான், யக்ஷான், மேதான், மீதியான்,+ இஸ்பாக், சுவாகு+ என்ற மகன்கள் பிறந்தார்கள்.
3 யக்ஷானின் மகன்கள்: சேபா, தேதான்.
தேதானின் மகன்கள்: அசூரீம், லெத்தூசீம், லெயூமீம்.
4 மீதியானின் மகன்கள்: ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபிதா, எல்தாகா.
இவர்கள் எல்லாரும் கேத்தூராளின் பேரன்கள்.
5 ஆபிரகாம் தன்னுடைய எல்லா சொத்துகளையும் ஈசாக்குக்குக் கொடுத்தார்.+ 6 ஆனால், தன்னுடைய மறுமனைவிகள் பெற்ற மகன்களுக்கு அன்பளிப்புகளைக் கொடுத்தார். அதுமட்டுமல்ல, தான் உயிரோடு இருக்கும்போதே தன் மகன் ஈசாக்கைவிட்டுத் தூரமாய்க் கிழக்கத்திய தேசத்துக்கு அவர்களை அனுப்பி வைத்தார்.+ 7 ஆபிரகாம் 175 வருஷங்கள் வாழ்ந்தார். 8 அவர் நிறைய காலம் மனநிறைவோடு வாழ்ந்த பின்பு முதிர்வயதில் இறந்துபோனார்.* 9 அவருடைய மகன்களான ஈசாக்கும் இஸ்மவேலும் மம்ரேக்குப் பக்கத்தில், ஏத்தியனான சோகாரின் மகன் எப்பெரோனுடைய நிலத்திலுள்ள மக்பேலா குகையில், அவரை அடக்கம் செய்தார்கள்.+ 10 அந்த நிலத்தை ஏத்தின் மகன்களிடமிருந்து ஆபிரகாம் விலைக்கு வாங்கியிருந்தார். அவருடைய மனைவி சாராள் அடக்கம் செய்யப்பட்ட அதே இடத்தில் அவரும் அடக்கம் செய்யப்பட்டார்.+ 11 ஆபிரகாம் இறந்த பின்பு, அவருடைய மகன் ஈசாக்கைக் கடவுள் தொடர்ந்து ஆசீர்வதித்தார்.+ பெயெர்-லகாய்-ரோயீ+ என்ற கிணற்றுக்குப் பக்கத்தில் ஈசாக்கு வாழ்ந்துவந்தார்.
12 சாராளின் வேலைக்காரியான எகிப்தியப் பெண் ஆகாருக்கும்+ ஆபிரகாமுக்கும் பிறந்த இஸ்மவேலின்+ வரலாறு இதுதான்.
13 இஸ்மவேலுடைய மகன்களின் பெயர்களும் அவரவர் வம்சங்களின் பெயர்களும் இவைதான்: இஸ்மவேலுடைய மூத்த மகன் நெபாயோத்.+ அவனுக்குப் பிறகு கேதார்,+ அத்பியேல், மிப்சாம்,+ 14 மிஷ்மா, தூமா, மாஸா, 15 ஆதாத், தீமா, யெத்தூர், நாபீஸ், கேத்மா ஆகிய மகன்களும் இஸ்மவேலுக்குப் பிறந்தார்கள். 16 இஸ்மவேலுடைய மகன்களாகிய இந்த 12 பேரும் அவரவர் குலத்துக்குத் தலைவர்களாக இருந்தார்கள்.+ அவர்கள் தங்கியிருந்த கிராமங்களும் முகாம்களும் அவர்களுடைய பெயர்களால் அழைக்கப்பட்டன. 17 இஸ்மவேல் 137 வருஷங்கள் வாழ்ந்த பின்பு இறந்துபோனார்.* 18 எகிப்துக்குக் கிழக்கே ஷூருக்குப்+ பக்கத்திலுள்ள ஆவிலா+ பகுதியிலிருந்து அசீரியாவரை இஸ்மவேலர்கள் வாழ்ந்துவந்தார்கள். அவர்கள் தங்களுடைய எல்லா சகோதரர்களுக்கும் பக்கத்தில் குடியிருந்தார்கள்.*+
19 ஆபிரகாமின் மகன் ஈசாக்கின் வரலாறு இதுதான்.+
ஆபிரகாமுக்கு ஈசாக்கு பிறந்தார். 20 ஈசாக்கு 40 வயதில் ரெபெக்காளைக் கல்யாணம் செய்துகொண்டார். இவள் பதான்-அராமைச் சேர்ந்த அரமேயனான பெத்துவேலின் மகள்,+ அரமேயனான லாபானின் தங்கை. 21 ரெபெக்காளுக்குக் குழந்தை இல்லாததால் ஈசாக்கு யெகோவாவிடம் வேண்டிக்கொண்டே இருந்தார். யெகோவா அவருடைய வேண்டுதலைக் கேட்டார், ரெபெக்காள் கர்ப்பமானாள். 22 அவளுடைய வயிற்றிலிருந்த மகன்கள் ஒருவருக்கொருவர் முட்டிமோதிக்கொண்டிருந்தார்கள்.+ அதனால் அவள், “நான் இப்படிக் கஷ்டப்படுவதற்குச் செத்துப்போவதே மேல்” என்று சொன்னாள். அதன்பின், யெகோவாவிடம் விசாரித்தாள். 23 யெகோவா அவளிடம், “உன் வயிற்றில் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.*+ உன்னிடமிருந்து இரண்டு தேசங்கள் உருவாகும்.+ ஒரு தேசம் மற்றொன்றைவிட பலமானதாக இருக்கும்.+ பெரியவன் சின்னவனுக்குச் சேவை செய்வான்”+ என்று சொன்னார்.
24 பிரசவ நேரம் வந்தது. அவளுடைய வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் இருந்தன. 25 முதலில் பிறந்த குழந்தை சிவப்பாக இருந்தது. கம்பளி போர்த்தியது போல அதன் உடம்பு முழுக்க முடி இருந்தது.+ அதனால், அந்தக் குழந்தைக்கு ஏசா*+ என்று அவர்கள் பெயர் வைத்தார்கள். 26 இரண்டாவதாகப் பிறந்த குழந்தை தன்னுடைய அண்ணன் ஏசாவின் குதிங்காலைப் பிடித்தபடி வெளியே வந்தது.+ அதனால், இந்தக் குழந்தைக்கு யாக்கோபு*+ என்ற பெயர் வைக்கப்பட்டது. ரெபெக்காள் குழந்தைகளைப் பெற்றபோது ஈசாக்குக்கு 60 வயது.
27 அந்தக் குழந்தைகள் வளர்ந்து ஆளானார்கள். ஏசா வேட்டையாடுவதில் கெட்டிக்காரனாக ஆனான்.+ அவன் காட்டிலேயே சுற்றித் திரிந்துகொண்டு இருந்தான். ஆனால், யாக்கோபு அமைதியாக* கூடாரத்தில் தங்கிவந்தான்.+ 28 ஈசாக்கு ஏசாவை அதிகமாக நேசித்தார். ஏனென்றால், அவருடைய வாய்க்கு ருசியானதை அவன் வேட்டையாடிக் கொண்டுவந்தான். ஆனால், ரெபெக்காள் யாக்கோபை அதிகமாக நேசித்தாள்.+ 29 ஒருநாள், யாக்கோபு கூழ் காய்ச்சிக்கொண்டிருந்தான். அப்போது, காட்டிலிருந்து ஏசா களைப்பாகத் திரும்பி வந்தான். 30 அதனால் யாக்கோபிடம், “நான் ரொம்பக் களைத்துப்போயிருக்கிறேன்,* தயவுசெய்து அந்தச் சிவப்பான கூழைக் கொஞ்சம்* தா! சீக்கிரம் கொடு!” என்று கேட்டான். அதனால்தான் அவனுக்கு ஏதோம்*+ என்ற பெயர் வந்தது. 31 யாக்கோபு அவனிடம், “மூத்த மகனின் உரிமையை முதலில் எனக்கு விற்றுவிடு!”+ என்றான். 32 அதற்கு ஏசா, “நானே செத்துக்கொண்டிருக்கிறேன்! மூத்த மகனின் உரிமையை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறேன்?” என்றான். 33 “அப்படியானால், முதலில் நீ எனக்குச் சத்தியம் செய்து கொடு!” என்று யாக்கோபு கேட்டான். அதன்படியே, ஏசா சத்தியம் செய்து கொடுத்து, மூத்த மகனின் உரிமையை யாக்கோபுக்கு விற்றுவிட்டான்.+ 34 அப்போது, ஏசாவுக்கு ரொட்டியையும் பயற்றங்கூழையும் யாக்கோபு கொடுத்தான். அவன் சாப்பிட்டான், குடித்தான். பின்பு எழுந்து போனான். இப்படி, மூத்த மகனின் உரிமையை ஏசா அலட்சியம் பண்ணினான்.
26 ஆபிரகாமின் காலத்தில் பஞ்சம் உண்டானது போலவே,+ மறுபடியும் ஒரு பஞ்சம் தேசத்தில் உண்டானது. அதனால், கேராரிலிருந்த பெலிஸ்திய ராஜாவான அபிமெலேக்கிடம் ஈசாக்கு போனார். 2 அப்போது யெகோவா அவர்முன் தோன்றி, “நீ எகிப்துக்குப் போகாதே. நான் சொல்கிற இடத்துக்குப் போய்க் குடியிரு. 3 இந்தத் தேசத்தில் அன்னியனாகத் தங்கியிரு.+ நான் எப்போதும் உன்னோடு இருந்து உன்னை ஆசீர்வதிப்பேன். உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசம் முழுவதையும் கொடுப்பேன்.+ உன் அப்பாவான ஆபிரகாமுக்குக் கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்றுவேன்.+ 4 நான் ஆபிரகாமிடம், ‘உன் சந்ததியை வானத்திலுள்ள நட்சத்திரங்களைப் போலப் பெருகப் பண்ணுவேன்.+ உன் சந்ததிக்கு இந்தத் தேசம் முழுவதையும் கொடுப்பேன்.+ உன் சந்ததியின் மூலம் பூமியிலுள்ள எல்லா தேசத்தாரும் நிச்சயம் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வார்கள்’+ என்று சொன்னேன், அதன்படியே செய்வேன். 5 ஏனென்றால், ஆபிரகாம் என் பேச்சைக் கேட்டு நடந்தான். எப்போதுமே என்னுடைய விதிமுறைகளையும் கட்டளைகளையும் சட்டதிட்டங்களையும் கடைப்பிடித்தான்”+ என்று சொன்னார். 6 அதனால், ஈசாக்கு கேராரிலேயே+ குடியிருந்தார்.
7 அங்கிருந்த ஆண்கள் அவருடைய மனைவியைப் பற்றிக் கேட்டபோதெல்லாம், “இவள் என் தங்கை” என்று அவர் சொல்லிவந்தார்.+ ரெபெக்காள் அழகாக இருந்ததால்+ அங்கே இருந்தவர்கள் அவளை அடைவதற்காகத் தன்னைக் கொன்றுபோடுவார்களோ என்று பயந்துதான் அவளைத் தன் மனைவி என்று சொல்லாமல் இருந்தார். 8 கொஞ்சக் காலத்துக்குப் பின்பு, பெலிஸ்திய ராஜாவான அபிமெலேக்கு ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, ஈசாக்கு தன் மனைவி ரெபெக்காளைக் கொஞ்சிக்கொண்டிருந்தார்.*+ 9 உடனே அபிமெலேக்கு ஈசாக்கைக் கூப்பிட்டு, “அவள் உண்மையில் உன் மனைவிதானே! அப்புறம் எதற்கு ‘இவள் என் தங்கை’ என்று சொன்னாய்?” என்று கேட்டார். அதற்கு ஈசாக்கு, “அவளை அடைவதற்காக என்னை யாராவது கொன்றுபோடுவார்களோ என்று பயந்துதான் அப்படிச் சொன்னேன்”+ என்றார். 10 அதற்கு அபிமெலேக்கு, “ஏன் இப்படிச் செய்தாய்?+ எங்களில் யாராவது உன் மனைவியோடு படுத்திருந்தால், எங்கள்மேல் பழி விழுந்திருக்குமே!”+ என்றார். 11 பின்பு, “இந்த மனுஷனின் மேலோ இவனுடைய மனைவியின் மேலோ யாராவது கை வைத்தால் அவன் கண்டிப்பாகக் கொல்லப்படுவான்!” என்று எல்லா ஜனங்களையும் எச்சரித்தார்.
12 ஈசாக்கு அந்தத் தேசத்தில் பயிர் செய்யத் தொடங்கினார். யெகோவா அவரை ஆசீர்வதித்ததால்+ அந்த வருஷத்தில் விதைத்ததைவிட 100 மடங்கு அதிகமாக அறுவடை செய்தார். 13 அவர் பணக்காரராக ஆனார், சொத்துகள் குவிந்துகொண்டே இருந்ததால் மிகப் பெரிய பணக்காரராக ஆனார். 14 அவருக்கு ஏராளமான ஆடுமாடுகளும் நிறைய வேலைக்காரர்களும் இருந்தார்கள்.+ அதையெல்லாம் பார்த்து பெலிஸ்தியர்கள் வயிற்றெரிச்சல்பட்டார்கள்.
15 அதனால், அவருடைய அப்பாவான ஆபிரகாமுடைய காலத்தில் ஆபிரகாமின் வேலைக்காரர்கள் வெட்டியிருந்த எல்லா கிணறுகளையும்+ பெலிஸ்தியர்கள் மண்ணினால் மூடினார்கள். 16 அப்போது அபிமெலேக்கு ஈசாக்கிடம், “நீ எங்களைவிட ரொம்பப் பெரிய ஆளாகிவிட்டாய், அதனால் இங்கிருந்து போய்விடு” என்று சொன்னார். 17 உடனே, ஈசாக்கு அங்கிருந்து புறப்பட்டுப் போய் கேரார்+ பள்ளத்தாக்கில்* கூடாரம் போட்டுத் தங்கினார். 18 அவருடைய அப்பா ஆபிரகாம் நிறைய கிணறுகளை வெட்டியிருந்தார். ஆனால், ஆபிரகாம் இறந்தபின் பெலிஸ்தியர்கள் அவற்றை மூடிவிட்டார்கள்.+ அந்தக் கிணறுகளை ஈசாக்கு மறுபடியும் தோண்டி, தன்னுடைய அப்பா வைத்திருந்த பெயர்களையே அவற்றுக்கு வைத்தார்.+
19 ஈசாக்கின் வேலைக்காரர்கள் அந்தப் பள்ளத்தாக்கில்* தோண்டியபோது, நல்ல தண்ணீருள்ள கிணற்றைப் பார்த்தார்கள். 20 அப்போது, கேராரைச் சேர்ந்த மேய்ப்பர்கள் ஈசாக்கின் மேய்ப்பர்களிடம், “இந்தக் கிணற்றுத் தண்ணீர் எங்களுடையது!” என்று சொல்லி வாக்குவாதம் செய்தார்கள். அவர்கள் அவருடன் வாக்குவாதம் செய்ததால் அந்தக் கிணற்றுக்கு ஏசேக்கு* என்று அவர் பெயர் வைத்தார். 21 அவர்கள் இன்னொரு கிணற்றைத் தோண்ட ஆரம்பித்தபோது, அதற்காகவும் பெலிஸ்தியர்கள் வாக்குவாதம் செய்தார்கள். அதனால், அந்தக் கிணற்றுக்கு சித்னா* என்று பெயர் வைத்தார். 22 பிற்பாடு, அவர் அங்கிருந்து புறப்பட்டுப் போய் வேறொரு கிணற்றைத் தோண்டினார். ஆனால், இந்தத் தடவை அவர்கள் வாக்குவாதம் செய்யவில்லை. அதனால், “நம்முடைய சந்ததி பெருகுவதற்காக இப்போது யெகோவா இந்தத் தேசத்தில் நமக்கு நிறைய இடம் தந்திருக்கிறார்”+ என்று சொல்லி, அந்தக் கிணற்றுக்கு ரெகொபோத்* என்று பெயர் வைத்தார்.
23 பின்பு, அவர் அங்கிருந்து புறப்பட்டு பெயெர்-செபாவுக்குப்+ போனார். 24 அந்த ராத்திரி யெகோவா அவர்முன் தோன்றி, “உன்னுடைய அப்பாவான ஆபிரகாமின் கடவுள் நான்தான்.+ பயப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன்.+ என்னுடைய ஊழியன் ஆபிரகாமுக்காக நான் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருக வைப்பேன்”+ என்று சொன்னார். 25 அதனால் ஈசாக்கு அங்கே ஒரு பலிபீடம் கட்டி, யெகோவாவின் பெயரைப் போற்றிப் புகழ்ந்தார்.+ பின்பு, அங்கே ஒரு கூடாரம் போட்டுத் தங்கினார்.+ அவருடைய வேலைக்காரர்கள் அங்கே ஒரு கிணறு தோண்டினார்கள்.
26 பிற்பாடு, அபிமெலேக்கு கேராரிலிருந்து தன்னுடைய முக்கிய ஆலோசகரான அகுசாத்தையும், தன்னுடைய படைத் தளபதி பிகோலையும்+ கூட்டிக்கொண்டு ஈசாக்கைப் பார்க்க வந்தார். 27 ஈசாக்கு அவர்களிடம், “ஏன் என்னைப் பார்க்க வந்தீர்கள்? நீங்கள்தான் என்னை வெறுத்து, உங்கள் ஊரைவிட்டே அனுப்பிவிட்டீர்களே” என்றார். 28 அதற்கு அவர்கள், “யெகோவா உங்களோடு இருக்கிறார் என்பதை எங்கள் கண்களாலேயே பார்த்துவிட்டோம்.+ அதனால், ‘தயவுசெய்து எங்களோடு ஒரு சமாதான ஒப்பந்தம் செய்யுங்கள்’+ என்று கேட்க வந்திருக்கிறோம். 29 நாங்கள் உங்களுக்குக் கெடுதல் செய்யாமல் நல்லதையே செய்து, உங்களைச் சமாதானமாக அனுப்பி வைத்தோம் இல்லையா? அதுபோலவே, நீங்களும் எங்களுக்கு எந்தக் கெடுதலும் செய்ய மாட்டீர்கள் என்று எங்களோடு ஒப்பந்தம் செய்யுங்கள். உங்களை யெகோவா ஆசீர்வதித்திருக்கிறாரே!’” என்றார்கள். 30 பின்பு, ஈசாக்கு அவர்களுக்கு விருந்து வைத்தார். அவர்கள் சாப்பிட்டார்கள், குடித்தார்கள். 31 விடிந்ததுமே அவர்கள் எழுந்து ஒருவருக்கொருவர் உறுதிமொழி தந்தார்கள்.+ அதன்பின், ஈசாக்கு அவர்களை அனுப்பி வைத்தார். அவர்களும் சமாதானத்துடன் புறப்பட்டுப் போனார்கள்.
32 அதே நாளில் ஈசாக்கின் வேலைக்காரர்கள் அவரிடம் வந்து, அவர்கள் தோண்டிய கிணற்றில்+ தண்ணீர் வந்துவிட்டதாகச் சொன்னார்கள். 33 அந்தக் கிணற்றுக்கு செபா* என்று அவர் பெயர் வைத்தார். அதனால்தான், அந்த நகரம் இன்றுவரை பெயெர்-செபா*+ என்று அழைக்கப்படுகிறது.
34 ஏசாவுக்கு 40 வயதானபோது, ஏத்தியனான பெயேரியின் மகள் யூதீத்தையும் ஏத்தியனான ஏலோனின் மகள் பஸ்மாத்தையும்+ கல்யாணம் செய்துகொண்டான். 35 அவர்கள் இரண்டு பேரும் ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் தீராத தலைவலியாக இருந்தார்கள்.+
27 வயதான காலத்தில் ஈசாக்கின் கண்பார்வை சுத்தமாக மங்கிவிட்டது. அவர் தன்னுடைய மூத்த மகன் ஏசாவைக்+ கூப்பிட்டு, “மகனே!” என்றார். அதற்கு ஏசா, “சொல்லுங்கள், அப்பா!” என்றான். 2 அப்போது அவர், “எனக்கு வயதாகிவிட்டது, எவ்வளவு நாள் உயிரோடு இருப்பேன் என்று தெரியவில்லை. 3 அதனால், இப்போது நீ தயவுசெய்து உன்னுடைய வில்லையும் அம்புகளையும் எடுத்துக்கொண்டு காட்டுக்குப் போய், ஏதாவது ஒரு மிருகத்தை வேட்டையாடிக் கொண்டுவா.+ 4 எனக்குப் பிடித்த மாதிரி அதை ருசியாகச் சமைத்துத் தா. அதை நான் சாப்பிட்டுவிட்டு, உயிரோடு இருக்கும்போதே உன்னை ஆசீர்வதித்துவிடுகிறேன்” என்று சொன்னார்.
5 ஈசாக்கு தன்னுடைய மகன் ஏசாவிடம் பேசிக்கொண்டிருந்ததை ரெபெக்காள் கேட்டாள். ஏசா மிருகத்தை வேட்டையாடிக் கொண்டுவர காட்டுக்குப் போனான்.+ 6 அப்போது ரெபெக்காள் தன்னுடைய மகன் யாக்கோபிடம்,+ “உன் அண்ணன் ஏசாவோடு உன் அப்பா பேசிக்கொண்டிருந்ததை இப்போதுதான் கேட்டேன். 7 அவர் அவனிடம், ‘ஏதாவது ஒரு மிருகத்தை வேட்டையாடிக் கொண்டுவந்து ருசியாகச் சமைத்துத் தா. அதை நான் சாப்பிட்டுவிட்டு, உயிரோடு இருக்கும்போதே யெகோவாவின் முன்னிலையில் உன்னை ஆசீர்வதித்துவிடுகிறேன்’+ என்று சொன்னார். 8 மகனே, நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டு அப்படியே செய்.+ 9 தயவுசெய்து தொழுவத்துக்குப் போய், கொழுகொழுவென்று இருக்கிற இரண்டு வெள்ளாட்டுக் குட்டிகளைக் கொண்டுவா. உன் அப்பாவுக்குப் பிடித்த மாதிரியே அதை ருசியாகச் சமைத்துக் கொடுக்கிறேன். 10 அதை உன் அப்பாவிடம் கொண்டுபோய்க் கொடு. அவர் அதைச் சாப்பிட்டுவிட்டு, உயிரோடு இருக்கும்போதே உன்னை ஆசீர்வதிக்கட்டும்” என்று சொன்னாள்.
11 அப்போது யாக்கோபு தன்னுடைய அம்மா ரெபெக்காளிடம், “என் அண்ணனுக்கு உடம்பு முழுக்க முடி இருக்கிறது,+ ஆனால் எனக்கு இல்லையே. 12 ஒருவேளை அப்பா என்னைத் தடவிப் பார்த்தால்?+ நான் அவரை ஏமாற்றுவதாக நினைத்து, என்னை ஆசீர்வதிப்பதற்குப் பதிலாகச் சபித்துவிடுவாரே” என்று சொன்னான். 13 அதற்கு அவனுடைய அம்மா, “மகனே, அந்தச் சாபம் என்மேல் வரட்டும். இப்போது, நான் சொல்வதைச் செய், நீ போய் நான் கேட்டதைக் கொண்டுவா”+ என்று சொன்னாள். 14 அவன் போய், வெள்ளாட்டுக் குட்டிகளைப் பிடித்துத் தன்னுடைய அம்மாவிடம் கொண்டுவந்தான். அவள் அவனுடைய அப்பாவுக்குப் பிடித்த மாதிரியே ருசியாகச் சமைத்தாள். 15 அதன்பின், வீட்டிலே தன்னுடைய பெரிய மகன் ஏசா வைத்திருந்த அருமையான அங்கிகளை எடுத்துத் தன்னுடைய சின்ன மகன் யாக்கோபுக்குப் போட்டுவிட்டாள்.+ 16 அதோடு, வெள்ளாட்டுக் குட்டிகளின் தோலை அவன் கைகளிலும் கழுத்திலும் போட்டுவிட்டாள்.+ 17 பின்பு, தான் சமைத்த ருசியான இறைச்சியையும் ரொட்டியையும் எடுத்துத் தன்னுடைய மகன் யாக்கோபிடம் கொடுத்தாள்.+
18 யாக்கோபு தன்னுடைய அப்பாவிடம் போய், “அப்பா!” என்றான். அதற்கு ஈசாக்கு, “சொல், மகனே! நீ ஏசாவா யாக்கோபா?” என்று கேட்டார். 19 அப்போது யாக்கோபு, “நான் உங்களுடைய மூத்த மகன் ஏசா.+ நீங்கள் சொன்ன மாதிரியே செய்திருக்கிறேன். தயவுசெய்து எழுந்து உட்காருங்கள், நான் வேட்டையாடிக் கொண்டுவந்ததைக் கொஞ்சம் சாப்பிடுங்கள். பின்பு என்னை ஆசீர்வதியுங்கள்”+ என்றான். 20 அதற்கு ஈசாக்கு, “மகனே, எப்படி இவ்வளவு சீக்கிரம் வேட்டையாடிவிட்டு வந்தாய்?” என்று கேட்டார். அப்போது யாக்கோபு, “நம்முடைய கடவுள் யெகோவாதான் எனக்கு உதவி செய்தார்” என்றான். 21 பின்பு ஈசாக்கு யாக்கோபிடம், “தயவுசெய்து என் பக்கத்தில் வா மகனே, நிஜமாகவே நீ ஏசாதானா என்று உன்னைத் தடவிப் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும்”+ என்றார். 22 அதனால், யாக்கோபு தன்னுடைய அப்பா ஈசாக்கின் பக்கத்தில் போனான். அவர் யாக்கோபைத் தடவிப் பார்த்து, “குரல் யாக்கோபின் குரலைப் போல இருக்கிறது, ஆனால் கைகள் ஏசாவின் கைகளைப் போலத்தான் இருக்கிறது”+ என்றார். 23 யாக்கோபின் கைகள் அவனுடைய அண்ணன் ஏசாவின் கைகளைப் போல நிறைய முடியுடன் இருந்ததால், ஈசாக்கினால் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால், அவனை ஆசீர்வதித்தார்.+
24 அதன்பின் ஈசாக்கு, “நீ நிஜமாகவே என் மகன் ஏசாதானா?” என்று கேட்டார். அதற்கு அவன், “நான் ஏசாதான்” என்றான். 25 அப்போது ஈசாக்கு, “மகனே, நீ வேட்டையாடிக் கொண்டுவந்ததை எனக்குக் கொஞ்சம் தா, நான் அதைச் சாப்பிட்டுவிட்டு உன்னை ஆசீர்வதிக்கிறேன்” என்றார். யாக்கோபு அதைக் கொண்டுவந்து கொடுத்தான். ஈசாக்கு அதைச் சாப்பிட்டார். பின்பு, அவன் திராட்சமதுவைக் கொண்டுவந்து கொடுத்தான், அவர் அதைக் குடித்தார். 26 அதன்பின் ஈசாக்கு அவனிடம், “தயவுசெய்து என் பக்கத்தில் வா மகனே, எனக்கு ஒரு முத்தம் கொடு”+ என்றார். 27 அதன்படியே, யாக்கோபு அவர் பக்கத்தில் போய் முத்தம் கொடுத்தான். யாக்கோபு போட்டிருந்த அங்கிகளிலிருந்து வாசனை வந்தது.+ அப்போது அவர் அவனை ஆசீர்வதித்து,
“இதோ, என் மகனுடைய வாசனை யெகோவா ஆசீர்வதித்த காட்டுவெளியின் வாசனையைப் போல இருக்கிறது. 28 உண்மைக் கடவுள் உனக்கு வானத்தின் பனித்துளிகளையும்+ செழிப்பான நிலங்களையும்+ ஏராளமான தானியங்களையும் புதிய திராட்சமதுவையும்+ கொடுக்கட்டும். 29 எல்லா ஜனங்களும் உனக்குச் சேவை செய்யட்டும், எல்லா தேசத்தாரும் உனக்குத் தலைவணங்கட்டும். உன்னுடைய சகோதரர்களுக்கு நீ எஜமானாக இருப்பாய், அவர்கள் உனக்குத் தலைவணங்கட்டும்.+ உன்னைச் சபிக்கிறவர்கள் சபிக்கப்படட்டும், உன்னை ஆசீர்வதிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்படட்டும்”+ என்றார்.
30 இப்படி, ஈசாக்கு ஆசீர்வதித்து முடித்த பின்பு யாக்கோபு அங்கிருந்து போனான். அவன் போன உடனேயே அவனுடைய அண்ணன் ஏசா வேட்டையாடிவிட்டுத் திரும்பி வந்தான்.+ 31 அவனும் இறைச்சியை ருசியாகச் சமைத்துத் தன்னுடைய அப்பாவிடம் கொண்டுவந்தான். அவன் அவரிடம், “அப்பா, எழுந்திருங்கள். உங்களுடைய மகன் வேட்டையாடிக் கொண்டுவந்ததைச் சாப்பிட்டுவிட்டு ஆசீர்வாதம் பண்ணுங்கள்” என்றான். 32 அதற்கு அவனுடைய அப்பா ஈசாக்கு, “நீ யார்?” என்று கேட்டார். அப்போது அவன், “நான்தான் உங்களுடைய மகன், உங்களுடைய மூத்த மகன் ஏசா”+ என்றான். 33 உடனே ஈசாக்கு அதிர்ச்சியில் நடுநடுங்கிப்போய், “அப்படியானால், இதற்குமுன் வேட்டையாடிக் கொண்டுவந்தது யார்? நீ வருவதற்கு முன்பே நான் அதைச் சாப்பிட்டுவிட்டு அவனை ஆசீர்வதித்துவிட்டேனே! அவனுக்குத்தான் ஆசீர்வாதம் போய்ச் சேரும்!” என்றார்.
34 அவர் சொன்னதைக் கேட்டதும் ஏசா, “என்னையும் ஆசீர்வதியுங்கள் அப்பா, என்னையும் ஆசீர்வதியுங்கள்!” என்று சொல்லி பயங்கரமாகக் கதறி அழுதான்.+ 35 ஆனால் அவனுடைய அப்பா, “உன் தம்பி என்னை ஏமாற்றி, உனக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தை வாங்கிக்கொண்டான்” என்றார். 36 அதற்கு ஏசா, “யாக்கோபு* என்ற பெயர் அவனுக்குப் பொருத்தமாகத்தான் இருக்கிறது. எனக்குச் சொந்தமானதை இரண்டு தடவை அவன் பிடுங்கிக்கொண்டான்.+ முன்பு மூத்த மகனின் உரிமையைப் பிடுங்கினான்,+ இப்போது எனக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தையும் பிடுங்கிக்கொண்டான்!”+ என்றான். அதன்பின், “எனக்கென்று ஒரு ஆசீர்வாதத்தைக்கூட நீங்கள் விட்டுவைக்கவில்லையா?” என்று கேட்டான். 37 அதற்கு ஈசாக்கு, “நான் அவனை உனக்கு எஜமானாக நியமித்துவிட்டேன்.+ அவனுடைய சகோதரர்கள் எல்லாரையும் அவனுக்கு வேலையாட்களாகக் கொடுத்துவிட்டேன். தானியங்களையும் புதிய திராட்சமதுவையும் அவனுக்குத் தந்துவிட்டேன்.+ அப்படியிருக்கும்போது, என் மகனே, நான் உனக்கு வேறென்ன கொடுக்க முடியும்?” என்று கேட்டார்.
38 அதற்கு ஏசா, “அப்பா, இனி உங்களிடம் ஒரு ஆசீர்வாதம்கூட இல்லையா? அப்பா, என்னை ஆசீர்வதியுங்கள், என்னையும் ஆசீர்வதியுங்கள்!” என்று சொல்லி, கண்ணீர்விட்டுக் கதறி அழுதான்.+ 39 அப்போது அவனுடைய அப்பா ஈசாக்கு,
“செழிப்பான நிலத்தில் நீ வாழ மாட்டாய், வானத்தின் பனித்துளியை நீ அனுபவிக்க மாட்டாய்.+ 40 உன்னுடைய வாளோடுதான் நீ வாழ்வாய்,+ உன்னுடைய சகோதரனுக்குச் சேவை செய்வாய்.+ உன்னால் பொறுக்க முடியாமல் போகும்போதோ, உன்னுடைய கழுத்தில் அவன் சுமத்திய நுகத்தடியை உடைத்துப்போடுவாய்”*+ என்றார்.
41 யாக்கோபு தன்னுடைய அப்பாவிடமிருந்து ஆசீர்வாதத்தை வாங்கிக்கொண்டதால் அவன்மேல் ஏசா வெறுப்பை வளர்த்துக்கொண்டான்.+ “இன்னும் கொஞ்சக் காலத்தில் அப்பா செத்துப்போய்விடுவார்.+ அதன்பின் என் தம்பி யாக்கோபைத் தீர்த்துக்கட்டிவிடுவேன்” என்று உள்ளத்தில் சொல்லிக்கொண்டே இருந்தான். 42 பெரிய மகன் ஏசாவின் திட்டத்தைப் பற்றி ரெபெக்காள் கேள்விப்பட்டபோது, அவள் உடனே தன்னுடைய சின்ன மகன் யாக்கோபை வரவழைத்து, “உன்னுடைய அண்ணன் ஏசா உன்னைப் பழிவாங்கப்போகிறான். உன்னைக் கொலை செய்யத் திட்டம் போட்டிருக்கிறான்.* 43 அதனால் என் மகனே, நான் சொல்கிறபடி செய். உடனே கிளம்பி ஆரானிலுள்ள என் அண்ணன் லாபானிடம் ஓடிப்போ.+ 44 உன்னுடைய அண்ணனின் ஆத்திரம் அடங்கும்வரை நீ கொஞ்சக் காலம் அங்கேயே தங்கியிரு. 45 நீ அவனுக்குச் செய்ததை அவன் மறந்து அவனுடைய கோபம் தீர்ந்தவுடன் நான் உனக்குச் சொல்லி அனுப்புகிறேன், அப்போது நீ வரலாம். ஒரே நாளில் உங்கள் இரண்டு பேரையும் நான் ஏன் இழக்க வேண்டும்?” என்றாள்.
46 பின்பு ரெபெக்காள் ஈசாக்கிடம், “இந்த ஏத்தியப் பெண்களால் எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது.+ யாக்கோபும் ஒரு ஏத்தியப் பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டால் நான் செத்துப்போவதே மேல்”+ என்று புலம்பிக்கொண்டே இருந்தாள்.
28 அதனால், ஈசாக்கு யாக்கோபைக் கூப்பிட்டு, “நீ கானானியப் பெண்ணைக் கல்யாணம் செய்யக் கூடாது.+ 2 பதான்-அராமில் இருக்கிற உன் தாத்தா* பெத்துவேலின் வீட்டுக்குப் புறப்பட்டுப் போ. அங்கே உன்னுடைய தாய்மாமன் லாபானின் மகள்களில்+ ஒருத்தியைக் கல்யாணம் செய்துகொள்” என்று சொன்னார். 3 அதோடு, “சர்வவல்லமையுள்ள கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார். உன்னை ஏராளமாகப் பெருக வைப்பார். உன் சந்ததி ஒரு பெரிய ஜனக்கூட்டமாக ஆகும்.+ 4 ஆபிரகாமுக்குக் கொடுத்த ஆசீர்வாதத்தை+ அவர் உனக்கும் உன் சந்ததிக்கும் கொடுப்பார். நீ அன்னியனாகக் குடியிருக்கிற இந்தத் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்வாய். ஆபிரகாமுக்கு அவர் கொடுத்த இந்தத் தேசம்+ உனக்குச் சொந்தமாகும்” என்று சொல்லி ஆசீர்வதித்தார்.
5 பின்பு ஈசாக்கு யாக்கோபை அனுப்பி வைத்தார். அவர் பதான்-அராமில் இருந்த அரமேயனான பெத்துவேலின் மகன் லாபானுடைய வீட்டுக்குப் புறப்பட்டுப் போனார்.+ யாக்கோபையும் ஏசாவையும் பெற்றெடுத்த ரெபெக்காளின் சொந்த அண்ணன்தான் லாபான்.+
6 ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்ததையும், கானானியப் பெண்ணைக் கல்யாணம் செய்யக் கூடாதென்று+ அவரிடம் சொல்லி பதான்-அராமுக்குப் போய் பெண் பார்க்கச் சொன்னதையும் ஏசா கேள்விப்பட்டான். 7 யாக்கோபு தன்னுடைய அம்மா அப்பாவின் பேச்சைக் கேட்டு பதான்-அராமுக்குப் போனதையும் கேள்விப்பட்டான்.+ 8 தன்னுடைய அப்பா ஈசாக்குக்கு கானானியப் பெண்களைப் பிடிக்கவில்லை+ என்பது அவனுக்குப் புரிந்தது. 9 அதனால், ஏற்கெனவே மனைவிகள் இருந்தும்+ அவன் ஆபிரகாமின் மகன் இஸ்மவேலிடம்* போய், அவருடைய மகளும் நெபாயோத்தின் சகோதரியுமான மகலாத்தைக் கல்யாணம் செய்துகொண்டான்.
10 யாக்கோபு பெயெர்-செபாவிலிருந்து புறப்பட்டு ஆரானுக்குப்+ போய்க்கொண்டிருந்தார். 11 பின்பு, ஒரு இடத்தில் தங்க முடிவுசெய்தார். ஏனென்றால், சூரியன் மறைந்து இருட்டாகியிருந்தது. அவர் அங்கிருந்த ஒரு கல்லை எடுத்துத் தலைக்கு வைத்துக்கொண்டு படுத்துத் தூங்கினார்.+ 12 அப்போது, அவருக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில், பரலோகத்தைத் தொடும் அளவுக்கு உயரமான ஒரு படிக்கட்டு* பூமியில் இருந்தது. அதில் தேவதூதர்கள் ஏறிக்கொண்டும் இறங்கிக்கொண்டும் இருந்தார்கள்.+ 13 அதன் உச்சியில் யெகோவா இருந்தார். அவர் யாக்கோபிடம்,
“உன்னுடைய தாத்தா ஆபிரகாமின் கடவுளும் உன்னுடைய அப்பா ஈசாக்கின் கடவுளுமான யெகோவா நான்தான்.+ நீ படுத்திருக்கிற இந்த இடத்தை உனக்கும் உன் சந்ததிக்கும் கொடுப்பேன்.+ 14 உன்னுடைய சந்ததி நிச்சயம் பூமியின் மணலைப் போலப் பெருகும்.+ உன்னுடைய வம்சம் மேற்கிலும் கிழக்கிலும் வடக்கிலும் தெற்கிலும் பரவும். உன் மூலமாகவும் உன் சந்ததி மூலமாகவும் பூமியிலுள்ள எல்லா குடும்பங்களும் நிச்சயமாக ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளும்.+ 15 நான் உன்னோடு இருப்பேன், நீ போகும் இடமெல்லாம் உன்னைப் பாதுகாப்பேன். உன்னை இந்தத் தேசத்துக்குத் திரும்பி வரப் பண்ணுவேன்.+ நான் உனக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன், உன்னைக் கைவிடவே மாட்டேன்”+ என்று சொன்னார்.
16 யாக்கோபு தூக்கத்திலிருந்து எழுந்து, “நிஜமாகவே யெகோவா இந்த இடத்தில் இருக்கிறார் என்பதை நான் தெரிந்துகொண்டேன்” என்றார். 17 பின்பு பயபக்தியோடு, “இந்த இடம் எவ்வளவு பரிசுத்தமானது! இது கடவுளுடைய வீடாகத்தான் இருக்க வேண்டும்,+ பரலோகத்தின் வாசலாகத்தான் இருக்க வேண்டும்”+ என்றார். 18 யாக்கோபு விடியற்காலையில் எழுந்து, தான் தலைவைத்துப் படுத்திருந்த கல்லை எடுத்து நினைவுக்கல்லாக நாட்டி அதன்மேல் எண்ணெய் ஊற்றினார்.+ 19 அந்த இடத்துக்கு பெத்தேல்* என்று பெயர் வைத்தார். முன்பு அந்த நகரம் லஸ்+ என்று அழைக்கப்பட்டது.
20 அங்கே யாக்கோபு, “யெகோவா தொடர்ந்து என்னோடு இருந்து, பயணத்தில் என்னைப் பாதுகாத்து, உணவும் உடையும் தந்து, 21 என் அப்பாவின் வீட்டுக்கு என்னைப் பத்திரமாகத் திரும்பிவர வைத்தால், அவர் உண்மையிலேயே என்னுடைய கடவுள் என்பதை நிரூபிப்பார். 22 நான் நாட்டிய இந்த நினைவுக்கல் கடவுளுடைய வீடாக இருக்கும்.+ என்னிடம் இருக்கிற எல்லாவற்றிலும் பத்திலொரு பாகத்தை நிச்சயமாகவே கடவுளுக்குக் கொடுப்பேன்” என்று நேர்ந்துகொண்டார்.
29 அதன்பின், யாக்கோபு அங்கிருந்து புறப்பட்டு, கிழக்கத்திய தேசத்துக்குப் போனார். 2 அங்கே வயல்வெளியில் ஒரு கிணற்றைப் பார்த்தார். அதன் பக்கத்தில் மூன்று ஆட்டு மந்தைகள் படுத்துக் கிடந்தன. வழக்கமாக, அந்தக் கிணற்றிலிருந்துதான் ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவார்கள். அந்தக் கிணறு ஒரு பெரிய கல்லால் மூடப்பட்டிருந்தது. 3 மந்தைகளெல்லாம் அங்கு வந்துசேர்ந்ததும், மேய்ப்பர்கள் அந்தக் கல்லை உருட்டிவிட்டு, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவார்கள். பின்பு, மறுபடியும் அந்தக் கல்லால் கிணற்றை மூடிவிடுவார்கள்.
4 யாக்கோபு அந்த மேய்ப்பர்களிடம், “சகோதரர்களே, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “நாங்கள் ஆரானிலிருந்து+ வருகிறோம்” என்றார்கள். 5 அவர்களிடம் அவர், “நாகோரின்+ பேரன் லாபானை+ உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார். அவர்கள், “தெரியும்” என்றார்கள். 6 அதற்கு யாக்கோபு, “அவர் எப்படி இருக்கிறார்?” என்று கேட்டார். “நன்றாக இருக்கிறார். இதோ! அவருடைய மகள் ராகேல்+ ஆடுகளை ஓட்டிக்கொண்டு வருகிறாள்” என்றார்கள். 7 பின்பு அவர், “மத்தியானம்தான் ஆகிறது. ஆடுகளைப் பட்டியில் அடைக்க இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. அதனால், இந்த ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டிவிட்டு மேயவிடலாம், இல்லையா?” என்றார். 8 அதற்கு அவர்கள், “முதலில் எல்லா மந்தைகளும் வந்துசேர வேண்டும். அப்புறம்தான் கிணற்றின் மேலிருக்கிற கல்லை உருட்டி, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவோம்” என்று சொன்னார்கள்.
9 இப்படி அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, ஆடு மேய்ப்பவளான ராகேல் தன் அப்பாவின் ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்தாள். 10 யாக்கோபு தன்னுடைய தாய்மாமன் லாபானின் மகளான ராகேல் ஆடுகளுடன் வருவதை பார்த்ததும், கிணற்றின் மேலிருந்த கல்லை உருட்டி, லாபானின் ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினார். 11 பின்பு, ராகேலுக்கு முத்தம் கொடுத்துவிட்டு, ஓவென்று அழுதார். 12 அதன்பின், தான் அவளுடைய அத்தை ரெபெக்காளின் மகன் என்று சொன்னார். உடனே அவள் ஓடிப்போய்த் தன்னுடைய அப்பாவிடம் விஷயத்தைச் சொன்னாள்.
13 லாபான்+ தன்னுடைய தங்கையின் மகன் யாக்கோபைப் பற்றிக் கேட்டவுடன், அவரைப் பார்க்க ஓடினார். பின்பு, யாக்கோபைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வந்தார். நடந்த எல்லாவற்றையும் லாபானிடம் யாக்கோபு சொன்னார். 14 அப்போது லாபான், “நீ எனக்கு இரத்த சொந்தம்”* என்றார். யாக்கோபு அவருடன் ஒரு மாதம் முழுவதும் தங்கியிருந்தார்.
15 பின்பு லாபான் யாக்கோபிடம், “நீ என் சொந்தக்காரன்+ என்பதற்காக எனக்குச் சும்மா வேலை செய்ய வேண்டியதில்லை. சொல், உனக்கு என்ன சம்பளம்+ வேண்டும்?” என்று கேட்டார். 16 லாபானுக்கு இரண்டு மகள்கள் இருந்தார்கள். பெரியவள் பெயர் லேயாள், சின்னவள் பெயர் ராகேல்.+ 17 லேயாளுடைய கண்கள் வசீகரமாக இல்லை. ஆனால், ராகேல் ரொம்ப அழகாகவும் லட்சணமாகவும் இருந்தாள். 18 யாக்கோபு ராகேலைக் காதலித்தார். அதனால் அவர் லாபானிடம், “உங்களுடைய இரண்டாவது பெண் ராகேலுக்காக உங்களிடம் ஏழு வருஷம் வேலை செய்கிறேன்,+ அவளை எனக்குக் கொடுப்பீர்களா?” என்று கேட்டார். 19 அதற்கு லாபான், “யாரோ ஒருவனுக்கு அவளைக் கொடுப்பதைவிட உனக்குக் கொடுப்பது நல்லதுதான். சரி, என்னுடனேயே தங்கியிரு” என்று சொன்னார். 20 யாக்கோபு ராகேலுக்காக ஏழு வருஷங்கள் வேலை செய்தார்.+ ஆனாலும், அவள்மேல் இருந்த காதலால் அந்த ஏழு வருஷங்கள் சில நாட்கள் போல உருண்டோடிவிட்டன.
21 பின்பு யாக்கோபு லாபானிடம், “ஏழு வருஷங்கள் முடிந்துவிட்டன, என் மனைவியை எனக்குக் கொடுங்கள். நான் அவளோடு குடும்பம் நடத்த* வேண்டும்” என்றார். 22 அதனால், லாபான் அந்த ஊர் ஜனங்களைக் கூப்பிட்டு கல்யாண விருந்து வைத்தார். 23 ஆனால், சாயங்காலத்தில் ராகேலுக்குப் பதிலாக லேயாளைக் கூட்டிக்கொண்டு போய் யாக்கோபிடம் விட்டார். யாக்கோபு அவளோடு உறவுகொண்டார். 24 லாபான் தன்னுடைய வேலைக்காரி சில்பாளைத் தன் மகள் லேயாளுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தார்.+ 25 காலையில் யாக்கோபு எழுந்து பார்த்தபோது அவருடன் லேயாள் படுத்திருந்தாள்! அதனால் அவர் லாபானிடம் போய், “ஏன் இப்படிச் செய்தீர்கள்? நான் ராகேலுக்காகத்தானே உங்களிடம் வேலை செய்தேன்? ஏன் என்னை ஏமாற்றினீர்கள்?”+ என்று கேட்டார். 26 அதற்கு லாபான், “பெரியவள் இருக்கும்போது சின்னவளைக் கொடுப்பது எங்கள் ஊர் வழக்கம் இல்லை. 27 இந்த வாரம் முழுக்க இவளோடு இரு. அதற்கு அப்புறம் அவளையும் உனக்குக் கொடுக்கிறேன். ஆனால், இன்னும் ஏழு வருஷங்கள் நீ எனக்கு வேலை செய்ய வேண்டும்”+ என்றார். 28 யாக்கோபு அந்த வாரம் அவளோடு இருந்தார். பின்பு லாபான், தன்னுடைய மகள் ராகேலையும் அவருக்கு மனைவியாகக் கொடுத்தார். 29 லாபான் தன்னுடைய வேலைக்காரி பில்காளைத்+ தன் மகள் ராகேலுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தார்.+
30 அதன்பின், யாக்கோபு ராகேலுடனும் உறவுகொண்டார். அவர் லேயாளைவிட ராகேலை அதிகமாக நேசித்து, லாபானிடம் இன்னும் ஏழு வருஷங்கள் வேலை செய்தார்.+ 31 லேயாளுக்கு அன்பு கிடைக்காததை யெகோவா பார்த்தபோது அவளுக்குக் குழந்தை பாக்கியம் தந்தார்.+ ஆனால் ராகேலுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை.+ 32 லேயாள் கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். “யெகோவா என்னுடைய கஷ்டத்தைப் பார்த்திருக்கிறார்,+ இப்போது என் கணவர் என்னை நேசிப்பார்” என்று சொல்லி அவனுக்கு ரூபன்*+ என்று பெயர் வைத்தாள். 33 அவள் மறுபடியும் கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். “அன்பு கிடைக்காத இந்தப் பெண்ணின் புலம்பலைக் கேட்டு யெகோவா இவனையும் தந்திருக்கிறார்” என்று சொல்லி அவனுக்கு சிமியோன்*+ என்று பெயர் வைத்தாள். 34 அவள் திரும்பவும் கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். “என் கணவருக்கு நான் மூன்று மகன்களைப் பெற்றுக் கொடுத்திருக்கிறேன், இனிமேல் அவர் என்னிடம் நெருக்கமாக இருப்பார்” என்று சொல்லி அவனுக்கு லேவி*+ என்று பெயர் வைத்தாள். 35 அவள் இன்னொரு தடவையும் கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். “இந்தத் தடவை நான் யெகோவாவைப் புகழ்வேன்” என்று சொல்லி அவனுக்கு யூதா*+ என்று பெயர் வைத்தாள். அதன்பின், கொஞ்சக் காலம் அவளுக்குக் குழந்தை பிறக்கவில்லை.
30 ராகேலுக்குக் குழந்தை இல்லாததால் அவள் தன்னுடைய அக்காவைப் பார்த்துப் பொறாமைப்பட்டாள். பின்பு யாக்கோபிடம், “எனக்குக் குழந்தை வேண்டும், இல்லாவிட்டால் நான் செத்துப்போவேன்” என்று புலம்பினாள். 2 அதனால், யாக்கோபுக்கு ராகேல்மேல் கோபம் பற்றிக்கொண்டு வந்தது. “நான் என்ன கடவுளா? அவர்தானே உனக்குக் குழந்தை பாக்கியம் தராமல் இருக்கிறார்” என்று சொன்னார். 3 அதற்கு அவள், “என் அடிமைப் பெண் பில்காளை+ உங்களுக்குக் கொடுக்கிறேன். அவள் மூலமாக எனக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கட்டும்” என்று சொல்லி, 4 தன் வேலைக்காரி பில்காளை அவருக்கு மனைவியாகக் கொடுத்தாள். யாக்கோபு அவளோடு உறவுகொண்டார்.+ 5 பில்காள் கர்ப்பமாகி யாக்கோபுக்கு ஒரு மகனைப் பெற்றுக் கொடுத்தாள். 6 அப்போது ராகேல், “கடவுள் என்னுடைய நீதிபதியாக இருந்து, என் அழுகையைக் கேட்டு, ஒரு மகனைத் தந்திருக்கிறார்” என்று சொல்லி அவனுக்கு தாண்*+ என்று பெயர் வைத்தாள். 7 ராகேலின் வேலைக்காரி பில்காள் மறுபடியும் கர்ப்பமாகி யாக்கோபுக்கு இரண்டாவது மகனைப் பெற்றுக் கொடுத்தாள். 8 அப்போது ராகேல், “என் அக்காவோடு கஷ்டப்பட்டுப் போராடி, வெற்றியும் பெற்றிருக்கிறேன்!” என்று சொல்லி அவனுக்கு நப்தலி*+ என்று பெயர் வைத்தாள்.
9 லேயாளுக்குக் கொஞ்சக் காலமாகக் குழந்தை பிறக்காததால் தன் வேலைக்காரி சில்பாளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தாள்.+ 10 லேயாளின் வேலைக்காரி சில்பாள் யாக்கோபுக்கு ஒரு மகனைப் பெற்றுக் கொடுத்தாள். 11 அப்போது லேயாள், “எப்பேர்ப்பட்ட பாக்கியம் கிடைத்திருக்கிறது!” என்று சொல்லி அவனுக்கு காத்*+ என்று பெயர் வைத்தாள். 12 பின்பு, லேயாளின் வேலைக்காரி சில்பாள் யாக்கோபுக்கு இரண்டாவது மகனைப் பெற்றுக் கொடுத்தாள். 13 அப்போது லேயாள், “எனக்கு ரொம்பச் சந்தோஷமாக இருக்கிறது! பெண்கள் கண்டிப்பாக என்னைச் சந்தோஷமானவள் என்று புகழ்வார்கள்”+ என்று சொல்லி அவனுக்கு ஆசேர்*+ என்று பெயர் வைத்தாள்.
14 கோதுமை அறுவடை நடந்த காலத்தில், ரூபன்+ ஒருநாள் காட்டுவெளியில் நடந்து போய்க்கொண்டிருந்தான். அங்கே சில பழங்களை* பார்த்து, அதைக் கொண்டுவந்து தன்னுடைய அம்மா லேயாளிடம் கொடுத்தான். அப்போது ராகேல், “உன் மகன் கொண்டுவந்த பழங்களைத் தயவுசெய்து எனக்கும் கொஞ்சம் தா” என்று லேயாளிடம் கேட்டாள். 15 அதற்கு லேயாள், “நீ என் கணவனை எடுத்துக்கொண்டது போதாதா?+ இப்போது என் மகன் கொண்டுவந்த பழங்களையும் கேட்கிறாயா?” என்றாள். அப்போது ராகேல், “சரி சரி, உன் மகன் கொண்டுவந்த பழங்களுக்குப் பதிலாக இன்று ராத்திரி அவர் உன்னோடு படுத்துக்கொள்ளட்டும்” என்று சொன்னாள்.
16 சாயங்காலத்தில் யாக்கோபு வயல்வெளியிலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தபோது லேயாள் அவரிடம் போய், “இன்றைக்கு ராத்திரி நீங்கள் என்னோடுதான் படுத்துக்கொள்ள வேண்டும். அதற்குக் கூலியாக, என் மகன் கொண்டுவந்த பழங்களைக் கொடுத்துவிட்டேன்” என்று சொன்னாள். அதனால் அவர் அன்றைக்கு ராத்திரி அவளோடு படுத்தார். 17 லேயாளுடைய ஜெபத்துக்குக் கடவுள் பதில் தந்தார். அவள் கர்ப்பமாகி யாக்கோபுக்கு ஐந்தாவது மகனைப் பெற்றுக் கொடுத்தாள். 18 அப்போது லேயாள், “என்னுடைய வேலைக்காரியை என் கணவருக்குக் கொடுத்ததால் கடவுள் எனக்கு நல்ல கூலியைக் கொடுத்திருக்கிறார்” என்று சொல்லி அவனுக்கு இசக்கார்*+ என்று பெயர் வைத்தாள். 19 லேயாள் மறுபடியும் கர்ப்பமாகி யாக்கோபுக்கு ஆறாவது மகனைப் பெற்றுக் கொடுத்தாள்.+ 20 அப்போது லேயாள், “கடவுள் எனக்கு அருமையான பரிசைக் கொடுத்திருக்கிறார். என் கணவர் இனி என்னை ஏற்றுக்கொள்வார்.+ அவருக்கு நான் ஆறு மகன்களைப் பெற்றுத் தந்திருக்கிறேன்”+ என்று சொல்லி அந்த மகனுக்கு செபுலோன்*+ என்று பெயர் வைத்தாள். 21 பிற்பாடு ஒரு மகளைப் பெற்றெடுத்து, அவளுக்கு தீனாள்+ என்று பெயர் வைத்தாள்.
22 கடைசியில், ராகேலுக்குக் கடவுள் கருணை காட்டினார்.* அவளுடைய ஜெபத்தைக் கேட்டு, அவளுக்குக் குழந்தை பாக்கியம் தந்தார்.*+ 23 அவள் ஒரு மகனைப் பெற்றெடுத்தபோது, “கடவுள் என் அவமானத்தை நீக்கிவிட்டார்!”+ என்று சொன்னாள். 24 பின்பு, “யெகோவா எனக்கு இன்னும் ஒரு மகனைச் சேர்த்துக் கொடுத்திருக்கிறார்” என்று சொல்லி அவனுக்கு யோசேப்பு*+ என்று பெயர் வைத்தாள்.
25 ராகேல் யோசேப்பைப் பெற்றெடுத்ததும் லாபானிடம் யாக்கோபு, “நான் என்னுடைய தேசத்துக்கே திரும்பிப் போக வேண்டும்,+ அனுமதி கொடுங்கள். 26 என் மனைவிகளையும் பிள்ளைகளையும் என்னோடு அனுப்பி வையுங்கள். அவர்களுக்காகத்தானே உங்களிடம் வேலை செய்தேன்.+ அதுவும் எவ்வளவு நேர்மையாக வேலை செய்தேன் என்று உங்களுக்கே தெரியும்” என்றார். 27 அதற்கு லாபான், “தயவுசெய்து என்னுடனேயே இரு. உன்னால்தான் யெகோவா என்னை ஆசீர்வதிக்கிறாரென்று சகுனம்* பார்த்துத் தெரிந்துகொண்டேன்” என்றார். 28 “உனக்கு எவ்வளவு சம்பளம் வேண்டுமோ கேள், தருகிறேன்”+ என்றும் சொன்னார். 29 அதற்கு யாக்கோபு, “நான் உங்களுக்கு எப்படியெல்லாம் வேலை செய்தேன், உங்கள் மந்தைகளை எப்படியெல்லாம் பார்த்துக்கொண்டேன் என்று உங்களுக்கே தெரியும்.+ 30 நான் வருவதற்கு முன்பு உங்கள் மந்தையில் கொஞ்சம் ஆடுகள்தான் இருந்தன. ஆனால், அதற்குப்பின் ஏராளமாகப் பெருகிவிட்டன. நான் வந்த சமயத்திலிருந்து யெகோவா உங்களை நிறைய ஆசீர்வதித்திருக்கிறார். இப்போது நான் என்னுடைய குடும்பத்துக்காக உழைக்க வேண்டாமா?”+ என்றார்.
31 அதற்கு லாபான், “உனக்கு நான் என்ன தர வேண்டும்?” என்று கேட்டார். அப்போது யாக்கோபு, “எனக்கு ஒன்றும் தர வேண்டாம்! நான் எப்போதும்போல் உங்கள் மந்தைகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள+ வேண்டுமென்றால் ஒரேவொரு காரியம் மட்டும் செய்யுங்கள். 32 இன்றைக்கு உங்களுடைய எல்லா ஆடுகளையும் போய்ப் பார்க்கலாம். புள்ளிகளோ கலப்புநிறத் திட்டுகளோ இருக்கிற செம்மறியாடுகளையும் பெண் வெள்ளாடுகளையும், கரும்பழுப்பு நிறத்தில் இருக்கிற செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளையும் தனியாகப் பிரித்துவிடுங்கள். இனிமேல் பிறக்கிற இந்த மாதிரியான ஆடுகளை என் சம்பளமாகக் கொடுங்கள்.+ 33 அப்படி எனக்குச் சம்பளமாகக் கிடைக்கும் ஆடுகளை நீங்கள் பார்க்க வரும்போது என்னுடைய நேர்மையைத் தெரிந்துகொள்வீர்கள். புள்ளிகளோ கலப்புநிறத் திட்டுகளோ இல்லாத பெண் வெள்ளாடுகளும், கரும்பழுப்பு நிறத்தில் இல்லாத செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளும் என்னுடைய மந்தையில் இருந்தால், அவற்றை நான் திருடியதாக வைத்துக்கொள்ளலாம்” என்று சொன்னார்.
34 அதற்கு லாபான், “சரி, நீ சொன்னபடியே செய்யலாம்”+ என்றார். 35 அன்றைக்கே, வரிகளோ கலப்புநிறத் திட்டுகளோ இருந்த வெள்ளாட்டுக் கடாக்களையும், புள்ளிகளோ கலப்புநிறத் திட்டுகளோ இருந்த பெண் வெள்ளாடுகளையும், வெள்ளைத் திட்டுகள் இருந்த எல்லா ஆடுகளையும், கரும்பழுப்பு நிறத்தில் இருந்த செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளையும் பிரித்து தன் மகன்களிடம் ஒப்படைத்தார். 36 அதன்பின், மூன்று நாள் பயண தூரத்தில் இருக்கும் ஓர் இடத்துக்கு அந்த மந்தையைக் கொண்டுபோனார். மிச்சமிருந்த லாபானின் ஆடுகளை யாக்கோபு மேய்த்துவந்தார்.
37 பின்பு, வாதுமை மரத்திலிருந்தும் அர்மோன் மரத்திலிருந்தும் மற்ற மரங்களிலிருந்தும்* பச்சைக் கொம்புகளை வெட்டி, இடையிடையே பட்டைகளை உரித்தார். அதனால் அங்கங்கே வெள்ளையாகத் தெரிந்தன. 38 தண்ணீர் குடிக்க வரும் ஆடுகள் அந்த மரக்கொம்புகளுக்கு முன்னால் இணைசேர வேண்டும் என்பதற்காக அவற்றைத் தண்ணீர்த் தொட்டிகளில் போட்டுவைத்தார்.
39 அந்த மரக்கொம்புகளுக்கு முன்னால் ஆடுகள் இணைசேர்ந்து, வரிகளோ புள்ளிகளோ கலப்புநிறத் திட்டுகளோ உள்ள குட்டிகளைப் போட்டன. 40 பின்பு, செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளை யாக்கோபு பிரித்து வைத்தார். பிற்பாடு, லாபானின் மந்தைகளில் இருந்த வரிகளுள்ள ஆடுகளையும் கரும்பழுப்பு நிற ஆடுகளையும் பார்த்தபடி மற்ற ஆடுகளை நிற்க வைத்தார். அதன்பின் தன்னுடைய ஆடுகளை லாபானுடைய ஆடுகளோடு சேர்க்காமல் தனியாகப் பிரித்து வைத்தார். 41 கொழுத்த ஆடுகள் இணைசேர்ந்த சமயங்களில் அவற்றின் கண்களில் படுமாறு அந்த மரக்கொம்புகளைத் தண்ணீர்த் தொட்டிகளில் போட்டுவைத்தார். 42 ஆனால், நோஞ்சான் ஆடுகளுக்கு முன்பாக அவற்றைப் போடவில்லை. அதனால், நோஞ்சான் ஆடுகள் எல்லாமே லாபானுக்குப் போய்ச் சேர்ந்தன, கொழுத்த ஆடுகள் எல்லாமே யாக்கோபுக்கு வந்து சேர்ந்தன.+
43 இப்படி, யாக்கோபு பெரிய பணக்காரராக ஆனார். அவருக்கு ஏராளமான ஆடுகளும் ஒட்டகங்களும் கழுதைகளும் இருந்தன, நிறைய வேலைக்காரர்களும் வேலைக்காரிகளும் இருந்தார்கள்.+
31 பிற்பாடு லாபானின் மகன்கள், “நம்முடைய அப்பாவுக்குச் சொந்தமான எல்லாவற்றையும் யாக்கோபு எடுத்துக்கொண்டான். அப்பாவுடைய சொத்துகளை வைத்து அவன் பெரிய பணக்காரனாகிவிட்டான்”+ என்று பேசிக்கொண்டதை யாக்கோபு கேட்டார். 2 அதோடு, லாபானின் முகம் முன்புபோல இல்லாமல்+ கடுகடுப்பாக இருந்ததை யாக்கோபு கவனித்தார். 3 ஒருநாள் யெகோவா யாக்கோபிடம், “உன்னுடைய முன்னோர்களின் தேசத்துக்குப் போய் உன்னுடைய சொந்தபந்தங்களோடு குடியிரு.+ நான் எப்போதும் உன்னோடு இருப்பேன்” என்றார். 4 அதன்பின் யாக்கோபு ஆள் அனுப்பி, தான் மந்தைகளை மேய்த்துக்கொண்டிருந்த இடத்துக்கு ராகேலையும் லேயாளையும் வர வைத்தார். 5 அவர் அவர்களிடம்,
“உங்கள் அப்பா முன்புபோல் இல்லை, என்னிடம் கடுகடுப்பாக நடந்துகொள்கிறார்.+ ஆனால், என்னுடைய அப்பாவின் கடவுள் எப்போதும் என்னோடு இருக்கிறார்.+ 6 உங்கள் அப்பாவுக்காக நான் எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்தேன் என்று உங்களுக்கே தெரியும்.+ 7 அவர் என்னை ஏமாற்ற நினைத்தார், என் சம்பளத்தை 10 தடவை மாற்றினார். ஆனால், எனக்குக் கெடுதல் செய்ய கடவுள் அவரை விடவில்லை. 8 ‘புள்ளியுள்ள ஆடுகள்தான் உன்னுடைய சம்பளம்’ என்று அவர் சொன்னபோது ஆடுகளெல்லாம் புள்ளியுள்ள குட்டிகளைப் போட்டன. ‘வரியுள்ள ஆடுகள்தான் உன் சம்பளம்’ என்று அவர் சொன்னபோது ஆடுகளெல்லாம் வரியுள்ள குட்டிகளைப் போட்டன.+ 9 கடவுள்தான் உங்கள் அப்பாவுடைய ஆடுகள் எல்லாவற்றையும் எடுத்து எனக்குத் தந்தார். 10 ஆடுகள் இணைசேரும் காலத்தில், நான் ஒரு கனவு கண்டேன். அதில், வெள்ளாடுகளோடு இணைசேரும் கடாக்கள் வரிகளுடனோ புள்ளிகளுடனோ கலப்பு நிறத்துடனோ இருந்ததைப் பார்த்தேன்.+ 11 அந்தக் கனவில் உண்மைக் கடவுளுடைய தூதர், ‘யாக்கோபே!’ என்று கூப்பிட்டார். நான் உடனே, ‘சொல்லுங்கள், எஜமானே!’ என்றேன். 12 அப்போது அவர், ‘கொஞ்சம் நிமிர்ந்து பார். வெள்ளாடுகளோடு இணைசேருகிற எல்லா கடாக்களும் வரிகளுடனோ புள்ளிகளுடனோ கலப்பு நிறத்துடனோ இருக்கின்றன. ஏனென்றால், லாபான் உனக்குச் செய்கிற எல்லா கெடுதலையும் நான் பார்த்தேன்.+ 13 நீ பெத்தேலில்+ நினைவுக்கல்லை அபிஷேகம் பண்ணி நேர்ந்துகொண்டபோது+ உன்முன் தோன்றிய உண்மைக் கடவுள் நான்தான். இப்போது நீ இந்தத் தேசத்திலிருந்து புறப்பட்டு உன்னுடைய சொந்த தேசத்துக்கே திரும்பிப் போ’+ என்று சொன்னார்” என்றார்.
14 அதற்கு ராகேலும் லேயாளும், “எங்கள் அப்பாவுடைய சொத்திலிருந்து இனி எங்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது? 15 அவர் எங்களை முன்பின் தெரியாதவர்கள்* போல விற்றுவிட்டார், விற்ற பணத்தையும் விழுங்கிக்கொண்டாரே.+ 16 கடவுள்தான் எங்களுடைய அப்பாவிடம் இருந்த எல்லா சொத்துகளையும் எடுத்து நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் கொடுத்திருக்கிறார்.+ அதனால், கடவுள் உங்களிடம் சொன்னபடியெல்லாம் செய்யுங்கள்”+ என்றார்கள்.
17 பின்பு, யாக்கோபு எழுந்து தன்னுடைய பிள்ளைகளையும் மனைவிகளையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றினார்.+ 18 பதான்-அராமிலே சேர்த்த எல்லா பொருள்களையும் எடுத்துக்கொண்டு,+ அங்கே சம்பாதித்த எல்லா மந்தைகளையும் ஓட்டிக்கொண்டு, கானான் தேசத்திலுள்ள தன்னுடைய அப்பா ஈசாக்கிடம் போவதற்குப் புறப்பட்டார்.+
19 அந்தச் சமயத்தில் லாபான் தன்னுடைய ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்கப் போயிருந்தார். அப்போது, அவருடைய மகள் ராகேல் அவருடைய+ குலதெய்வச் சிலைகளைத்+ திருடிக்கொண்டாள். 20 யாக்கோபும் தான் போகிற விஷயத்தைப் பற்றி அரமேயனான லாபானிடம் சொல்லாமல் சாமர்த்தியமாக நழுவினார். 21 யாக்கோபு தன்னுடன் இருந்தவர்களோடும் தனக்குச் சொந்தமான எல்லாவற்றோடும் ஆற்றை*+ கடந்து, கீலேயாத் மலைப்பகுதிக்குத்+ தப்பித்துப் போனார். 22 அவர் தப்பித்துப் போன விஷயம் மூன்றாம் நாளில் லாபானுக்குத் தெரியவந்தது. 23 உடனே, அவர் தன்னுடைய சொந்தக்காரர்களோடு சேர்ந்து யாக்கோபைத் துரத்திக்கொண்டு போனார். ஏழு நாட்கள் கழித்து, யாக்கோபு இருந்த கீலேயாத் மலைப்பகுதிக்குப் போய்ச் சேர்ந்தார். 24 அன்றைக்கு ராத்திரி அரமேயனான லாபானின்+ கனவில் கடவுள் வந்து,+ “நீ யாக்கோபின் விஷயத்தில் தலையிடாதே,* ஜாக்கிரதை!” என்று சொன்னார்.+
25 யாக்கோபு கூடாரம் போட்டிருந்த கீலேயாத் மலைப்பகுதியில்தான் லாபான் தன்னுடைய சொந்தக்காரர்களோடு தங்கினார். அவர் யாக்கோபிடம் போய், 26 “ஏன் இப்படிச் செய்தாய்? ஏன் என்னிடம் சொல்லாமல் சாமர்த்தியமாகத் தப்பித்து வந்தாய்? என் மகள்களை ஏன் போர்க்கைதிகளைப் போலப் பிடித்துக்கொண்டு வந்தாய்? 27 ஏன் என்னை ஏமாற்றினாய்? என்னிடம் சொல்லாமல் ஏன் ரகசியமாக ஓடி வந்தாய்? சொல்லியிருந்தால், நானே மேளதாளத்தோடும்* பாடல்களோடும் உன்னைச் சந்தோஷமாக அனுப்பி வைத்திருப்பேனே. 28 என் பேரப்பிள்ளைகளையும் மகள்களையும் முத்தம்கொடுத்து அனுப்பக்கூட நீ எனக்குச் சந்தர்ப்பம் கொடுக்கவில்லை. முட்டாள்தனமாக நடந்துகொண்டாய். 29 நான் நினைத்தால் உங்களையெல்லாம் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். ஆனால் உங்களுடைய முன்னோர்களின் கடவுள் நேற்று ராத்திரி என்னிடம், ‘நீ யாக்கோபின் விஷயத்தில் தலையிடாதே, ஜாக்கிரதை!’ என்றார்.+ 30 உன்னுடைய அப்பாவின் வீட்டுக்குத் திரும்பிப் போக வேண்டுமென்ற ஏக்கத்தில் நீ கிளம்பி வந்திருக்கலாம், ஆனால் என் சிலைகளை ஏன் திருடிக்கொண்டு வந்தாய்?”+ என்றார்.
31 அப்போது யாக்கோபு லாபானிடம், “உங்களுடைய மகள்களைப் பிடித்து வைத்துக்கொள்வீர்களோ என்று பயந்துதான் நான் சொல்லாமல் வந்தேன். 32 உங்களுடைய சிலைகளை யார் திருடியிருந்தாலும் அவன் கொல்லப்படுவான். உங்களுடைய பொருள்கள் ஏதாவது என்னிடம் இருக்கிறதா என்று இங்கு இருக்கிறவர்களுக்கு முன்னால் தேடிப் பாருங்கள், இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னார். ஆனால், அவற்றை ராகேல் திருடியிருந்தது யாக்கோபுக்குத் தெரியாது. 33 லாபான் யாக்கோபுடைய கூடாரத்துக்கும் லேயாளுடைய கூடாரத்துக்கும் இரண்டு அடிமைப் பெண்களுடைய+ கூடாரத்துக்கும் போய்த் தேடிப் பார்த்தார். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. அதனால், லேயாளின் கூடாரத்தைவிட்டு வெளியே வந்து ராகேலின் கூடாரத்துக்குள் போனார். 34 ராகேல் அந்தக் குலதெய்வச் சிலைகளை எடுத்துத் தன்னுடைய ஒட்டகச் சேணத்துக்குள்* வைத்து, அதன்மேல் உட்கார்ந்திருந்தாள். அதனால், லாபான் அந்தக் கூடாரம் முழுக்கத் தேடிப் பார்த்தும் அவற்றைக் கண்டுபிடிக்கவில்லை. 35 அப்போது அவள், “கோபித்துக்கொள்ளாதீர்கள் அப்பா, என்னால் எழுந்து நிற்க முடியவில்லை, எனக்கு இப்போது மாதவிலக்கு”+ என்று சொன்னாள். அவர் நன்றாகத் தேடிப் பார்த்தும் அந்தச் சிலைகள்+ கிடைக்கவில்லை.
36 அதனால் யாக்கோபு கோபத்தோடு லாபானிடம் பொரிந்து தள்ளினார். “நான் என்ன தப்பு செய்தேன்? ஏன் இப்படி ஆவேசமாக என்னைத் துரத்திக்கொண்டு வந்தீர்கள்? நான் உங்களுக்கு என்ன பாவம் செய்தேன்? 37 என்னுடைய எல்லா பொருள்களையும் தேடிப் பார்த்தீர்களே, உங்களுடைய வீட்டிலிருந்து நான் ஏதாவது எடுத்து வந்திருக்கிறேனா? என்னுடைய சொந்தக்காரர்களுக்கும் உங்களுடைய சொந்தக்காரர்களுக்கும் முன்னால் காட்டுங்கள், பார்க்கலாம். நம்முடைய பிரச்சினைக்கு அவர்களே ஒரு முடிவு சொல்லட்டும். 38 உங்களோடு நான் இருந்த இந்த 20 வருஷ காலத்தில், உங்களுடைய மந்தையில் ஒரு ஆட்டுக்குட்டிகூட செத்துப் பிறக்கவில்லை.+ ஒரு செம்மறியாட்டுக் கடாவைக்கூட நான் அடித்துச் சாப்பிடவில்லை. 39 காட்டு மிருகங்களிடம் சிக்கி செத்துப்போன எந்த ஆட்டையாவது நான் உங்களிடம் கொண்டுவந்தேனா?+ அந்த நஷ்டத்தை நான்தானே ஏற்றுக்கொண்டேன்? உங்களுடைய ஆடுகள் பகலில் திருடுபோயிருந்தாலும் சரி, ராத்திரியில் திருடுபோயிருந்தாலும் சரி, என்னிடம்தானே நஷ்ட ஈடு கேட்டீர்கள்? 40 காலையில் வெயிலில் காய்ந்தேன், ராத்திரியில் குளிரில் நடுங்கினேன்; எனக்குத் தூக்கமே இல்லாமல் போனது.+ 41 இப்படி 20 வருஷமாக உங்கள் வீட்டில் பாடுபட்டேன். உங்களுடைய இரண்டு மகள்களுக்காக 14 வருஷமும் உங்கள் ஆடுகளுக்காக 6 வருஷமும் வேலை செய்தேன். 10 தடவை என்னுடைய சம்பளத்தை மாற்றினீர்கள்.+ 42 என்னுடைய தாத்தா ஆபிரகாமும் அப்பா ஈசாக்கும் பயபக்தியோடு வணங்கிய கடவுள்+ என் பக்கம் இருந்திருக்காவிட்டால், என்னை வெறுங்கையோடுதான் அனுப்பியிருப்பீர்கள். நான் பட்ட வேதனையையும் சிந்திய வேர்வையையும் கடவுள் பார்த்திருக்கிறார். அதனால்தான், நேற்று ராத்திரி உங்களை எச்சரித்திருக்கிறார்”+ என்றார்.
43 அப்போது லாபான் யாக்கோபிடம், “இந்தப் பெண்கள் என்னுடைய பெண்கள், இந்தப் பிள்ளைகள் என்னுடைய பிள்ளைகள், இந்த மந்தைகள் என்னுடைய மந்தைகள். உன்னுடைய கண் முன்னால் இருக்கிற எல்லாமே எனக்கும் என் மகள்களுக்கும் சொந்தமானதுதான். இவர்களுக்கும் இவர்கள் பிள்ளைகளுக்கும் இன்று நான் என்ன கெடுதல் செய்துவிடப்போகிறேன்? 44 நானும் நீயும் சமாதானமாக இருப்போம் என்பதற்கு சாட்சியாக இப்போது ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளலாம், வா” என்றார். 45 அதனால், யாக்கோபு ஒரு கல்லை எடுத்து அதை நினைவுக்கல்லாக நாட்டினார்.+ 46 பின்பு தன்னுடைய சொந்தக்காரர்களிடம், “கற்களைக் கொண்டுவாருங்கள்!” என்றார். அப்படியே அவர்களும் கற்களைக் கொண்டுவந்து குவித்தார்கள். பின்பு, அதன்மேல் உணவை வைத்து சாப்பிட்டார்கள். 47 லாபான் அதற்கு ஜெகர்-சகதூதா* என்று பெயர் வைத்தார், யாக்கோபு அதற்கு கலயெத்* என்று பெயர் வைத்தார்.
48 அதன்பின் லாபான், “இன்று எனக்கும் உனக்கும் இடையில் சாட்சியாக இருப்பது இந்தக் கற்குவியல்தான்” என்று சொன்னார். அதனால்தான், யாக்கோபு அதற்கு கலயெத்+ என்றும், 49 காவற்கோபுரம்* என்றும் பெயர் வைத்தார். அப்போது லாபான், “நாம் ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்துபோன பின்பு என்னையும் உன்னையும் யெகோவா கண்காணிக்கட்டும். 50 நீ என்னுடைய மகள்களைக் கொடுமைப்படுத்தினாலோ இன்னும் நிறைய மனைவிகளை வைத்துக்கொண்டாலோ, மனுஷர்கள் பார்க்காவிட்டாலும் கடவுள் பார்ப்பார். உனக்கும் எனக்கும் இடையில் அவர் சாட்சியாக இருப்பார் என்பதை மறந்துவிடாதே” என்று சொன்னார். 51 அதுமட்டுமல்ல, “இதோ, உனக்கும் எனக்கும் நடுவில் நான் இந்தக் கற்குவியலையும் நினைவுக்கல்லையும் வைத்திருக்கிறேன். 52 நான் இந்தக் கற்குவியலைத் தாண்டி வந்து உனக்குக் கெடுதல் செய்ய மாட்டேன், நீயும் இந்தக் கற்குவியலையும் நினைவுக்கல்லையும் தாண்டி வந்து எனக்குக் கெடுதல் செய்யக் கூடாது. இதற்கு இந்தக் கற்குவியலும் நினைவுக்கல்லும் சாட்சியாக இருக்கும்.+ 53 ஆபிரகாமின் கடவுளும்+ நாகோரின் கடவுளும் அவர்களுடைய அப்பாவின் கடவுளும் நமக்குத் தீர்ப்பு கொடுக்கட்டும்” என்று லாபான் சொன்னார். அப்போது, யாக்கோபு தன்னுடைய அப்பா ஈசாக்கு பயபக்தியோடு வணங்கிய கடவுள்மேல்+ சத்தியம் செய்தார்.
54 பின்பு, அந்த மலையில் யாக்கோபு பலி செலுத்திவிட்டு, சாப்பிடுவதற்குத் தன்னுடைய சொந்தக்காரர்களைக் கூப்பிட்டார். அவர்கள் எல்லாரும் சாப்பிட்டுவிட்டு, ராத்திரி அங்கேயே தங்கினார்கள். 55 லாபான் விடியற்காலையிலேயே எழுந்து தன்னுடைய பேரப்பிள்ளைகளுக்கும் மகள்களுக்கும் முத்தம் கொடுத்து+ அவர்களை ஆசீர்வதித்தார்.+ அதன்பின், லாபான் தன்னுடைய வீட்டுக்குப் புறப்பட்டுப் போனார்.+
32 பின்பு, யாக்கோபும் அங்கிருந்து புறப்பட்டுப் போனார். வழியில் தேவதூதர்கள் அவரைச் சந்தித்தார்கள். 2 யாக்கோபு அவர்களைப் பார்த்தவுடன், “இதுதான் கடவுளுடைய முகாம்!” என்று சொல்லி, அந்த இடத்துக்கு மக்னாயீம்* என்று பெயர் வைத்தார்.
3 அதன்பின் யாக்கோபு, ஏதோமில் உள்ள+ சேயீர் தேசத்தில்+ இருந்த தன்னுடைய அண்ணன் ஏசாவைப் போய்ப் பார்க்கச் சொல்லி ஆட்களை* அனுப்பினார். 4 அவர்களிடம், “நீங்கள் என்னுடைய எஜமான் ஏசாவிடம் போய், ‘உங்கள் அடிமை யாக்கோபு இப்படிச் சொல்லி அனுப்பியிருக்கிறார்: “நான் இத்தனை வருஷமாக+ லாபானுடன் தங்கியிருந்தேன். 5 காளைகளையும் கழுதைகளையும் செம்மறியாடுகளையும் வேலைக்காரர்களையும் வேலைக்காரிகளையும் சம்பாதித்திருக்கிறேன்.+ என் எஜமானே, உங்களுடைய கருணை கிடைப்பதற்காக இந்தச் செய்தியைச் சொல்லி அனுப்புகிறேன்” என்று சொல்லுங்கள்’” என்றார்.
6 அந்த ஆட்கள் யாக்கோபிடம் திரும்பி வந்து, “உங்கள் அண்ணன் ஏசாவை நாங்கள் பார்த்தோம், இப்போது அவர் உங்களைப் பார்ப்பதற்காக வந்துகொண்டிருக்கிறார், அவரோடு 400 பேர் வருகிறார்கள்”+ என்று சொன்னார்கள். 7 அதைக் கேட்டதும் யாக்கோபு பயத்தில் பதறினார்.+ உடனே, தன்னுடன் இருந்தவர்களையும் ஆடுமாடுகளையும் ஒட்டகங்களையும் மற்ற கால்நடைகளையும் இரண்டு கூட்டமாகப் பிரித்து, 8 “ஏசா ஒரு கூட்டத்தைத் தாக்கினாலும், இன்னொரு கூட்டத்தால் தப்பித்து ஓட முடியும்” என்றார்.
9 அதோடு கடவுளிடம், “யெகோவாவே, என் தாத்தா ஆபிரகாமின் கடவுளே, என் அப்பா ஈசாக்கின் கடவுளே, ‘உன்னுடைய தேசத்துக்குப் போய் உன் சொந்தக்காரர்களோடு குடியிரு, நான் உன்னை ஆசீர்வதிப்பேன்’ என்று சொன்னவரே,+ 10 உங்கள் அடிமையாகிய என்னிடம் நீங்கள் இவ்வளவு காலமாகக் காட்டிய மாறாத அன்புக்கும் உண்மைத்தன்மைக்கும்+ நான் தகுதி இல்லாதவன். இந்த யோர்தானைத் தாண்டிப் போனபோது என்னிடம் ஒரு தடி மட்டும்தான் இருந்தது, ஆனால் இப்போது இரண்டு பெரிய கூட்டங்களுக்குச் சொந்தக்காரனாக இருக்கிறேன்.+ 11 கடவுளே, உங்களிடம் கெஞ்சிக் கேட்கிறேன்,+ என் அண்ணன் ஏசாவிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள். அவன் வந்து என்னையும் என் பிள்ளைகளையும் மனைவிகளையும் தீர்த்துக்கட்டிவிடுவானோ+ என்று பயமாக இருக்கிறது. 12 நீங்கள் என்னை ஆசீர்வதிப்பதாகவும், என்னுடைய சந்ததியை கடற்கரை மணலைப் போல எண்ண முடியாத அளவுக்குப் பெருக வைப்பதாகவும் சொன்னீர்களே”+ என்று ஜெபம் செய்தார்.
13 அந்த ராத்திரி அவர் அங்கேயே தங்கினார். பின்பு, தன்னுடைய அண்ணன் ஏசாவுக்கு அன்பளிப்பாகக் கொடுப்பதற்கு,+ 14 200 பெண் வெள்ளாடுகளையும், 20 வெள்ளாட்டுக் கடாக்களையும், 200 பெண் செம்மறியாடுகளையும், 20 செம்மறியாட்டுக் கடாக்களையும், 15 30 ஒட்டகங்களையும், அவற்றின் குட்டிகளையும், 40 பசுக்களையும், 10 காளைகளையும், 20 பெட்டைக் கழுதைகளையும், 10 ஆண் கழுதைகளையும் பிரித்தெடுத்தார்.+
16 ஒவ்வொரு மந்தையையும் தன்னுடைய வேலைக்காரர்களிடம் தனித்தனியாக ஒப்படைத்து, “எனக்கு முன்னால் போங்கள், ஒவ்வொரு மந்தைக்கும் நடுவில் இடைவெளி விட்டு அவற்றை ஓட்டிக்கொண்டு போங்கள்” என்று சொன்னார். 17 அதோடு, முதலாம் வேலைக்காரனிடம், “ஒருவேளை என்னுடைய அண்ணன் ஏசா உன்னிடம் வந்து, ‘நீ யாருடைய வேலைக்காரன், எங்கே போகிறாய், உனக்கு முன்னால் போகிற இந்த மந்தை யாருடையது?’ என்று கேட்டால், 18 ‘உங்கள் அடிமை யாக்கோபுடையது. எஜமானாகிய ஏசாவுக்கு அன்பளிப்பாக அனுப்பினார்.+ அவரும் எங்களுக்குப் பின்னால் வருகிறார்’ என்று நீ சொல்ல வேண்டும்” என்றார். 19 அதுபோலவே, இரண்டாம் மூன்றாம் வேலைக்காரர்களிடமும் மந்தைகளுக்குப் பின்னால் போன மற்ற எல்லாரிடமும், “ஏசாவைப் பார்க்கும்போது இதேபோல் நீங்கள் சொல்ல வேண்டும். 20 ‘உங்கள் அடிமை யாக்கோபு எங்களுக்குப் பின்னால் வருகிறார்’ என்றும் சொல்ல வேண்டும்” என்றார். அதன்பின், ‘அன்பளிப்புகளை முதலில் அனுப்பி அவரைச் சமாதானப்படுத்தினால்,+ நான் அவரைப் பார்க்கும்போது ஒருவேளை அவர் என்னிடம் அன்பாக நடந்துகொள்வார்’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டார். 21 இப்படி, அன்பளிப்புகளை முன்னால் அனுப்பிவிட்டு அன்றைக்கு ராத்திரி அங்கே அவர் தங்கினார்.
22 அந்த ராத்திரியிலேயே அவர் எழுந்து தன்னுடைய இரண்டு மனைவிகளையும்+ இரண்டு வேலைக்காரிகளையும்+ 11 மகன்களையும் கூட்டிக்கொண்டு யாபோக்+ ஆற்றுத்துறையை* கடந்தார். 23 அவர்களையும் தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் அவர் கரைசேர்த்தார்.*
24 கடைசியில், யாக்கோபு மட்டும் தனியாக இருந்தார். அப்போது, ஒரு மனிதர்* வந்து விடியற்காலைவரை அவரோடு போராடினார்.+ 25 யாக்கோபை ஜெயிக்க முடியாததால் அந்த மனிதர் அவருடைய இடுப்புமூட்டை* தொட்டார். அந்த மனிதரோடு போராடியதில் யாக்கோபின் இடுப்புமூட்டு பிசகியது.+ 26 அப்போது அந்த மனிதர் அவரிடம், “என்னைப் போகவிடு, விடிந்துவிட்டது” என்றார். அதற்கு அவர், “நீங்கள் என்னை ஆசீர்வதித்தால்தான் உங்களைப் போகவிடுவேன்”+ என்று சொன்னார். 27 அதனால் அந்த மனிதர், “உன்னுடைய பெயர் என்ன?” என்று கேட்டார். அதற்கு அவர், “யாக்கோபு” என்றார். 28 அப்போது அந்த மனிதர், “இனிமேல் உன் பெயர் யாக்கோபு அல்ல, இஸ்ரவேல்.*+ ஏனென்றால், நீ கடவுளோடும் மனிதரோடும் போராடி+ கடைசியில் ஜெயித்துவிட்டாய்” என்று சொன்னார். 29 அதற்கு யாக்கோபு, “உங்களுடைய பெயர் என்ன, தயவுசெய்து சொல்லுங்கள்” என்று கேட்டார். ஆனால் அந்த மனிதர், “என்னுடைய பெயரை எதற்காகக் கேட்கிறாய்?”+ என்றார். பின்பு, அவரை ஆசீர்வதித்தார். 30 அப்போது யாக்கோபு, “கடவுளுடைய* முகத்தை நேரில் பார்த்தேன், ஆனாலும் உயிர் பிழைத்தேன்”+ என்று சொல்லி, அந்த இடத்துக்கு பெனியேல்*+ என்று பெயர் வைத்தார்.
31 அவர் பெனூவேலை* கடந்தவுடனே சூரியன் உதித்தது. அவர் நொண்டி நொண்டி நடந்துபோனார்.+ 32 ஏனென்றால், அந்த மனிதர் யாக்கோபுடைய இடுப்புமூட்டின் மேல் இருந்த தசைநாணைத் தொட்டிருந்தார். அதனால்தான் இடுப்புமூட்டின் மேல் உள்ள தசைநாணை இன்றுவரை இஸ்ரவேல் ஜனங்கள் சாப்பிடுவதில்லை.
33 யாக்கோபு நிமிர்ந்து பார்த்தபோது, ஏசா 400 ஆட்களுடன் வந்துகொண்டிருந்தார்.+ அதனால், லேயாளிடமும் ராகேலிடமும் இரண்டு வேலைக்காரிகளிடமும் அவரவர் பிள்ளைகளை ஒப்படைத்தார்.+ 2 பின்பு, வேலைக்காரிகளையும் அவர்களுடைய பிள்ளைகளையும் முதலில் நிறுத்தினார்.+ அடுத்து, லேயாளையும் அவளுடைய பிள்ளைகளையும் நிறுத்தினார்.+ அவர்களுக்குப் பின்னால் ராகேலையும் யோசேப்பையும் நிறுத்தினார்.+ 3 அதன்பின், அவர்கள் எல்லாருக்கும் முன்னால் நடந்து போனார். அவருடைய அண்ணனின் பக்கத்தில் போகப்போக ஏழு தடவை மண்டிபோட்டு தரைவரைக்கும் குனிந்து வணங்கினார்.
4 அப்போது ஏசா அவரிடம் ஓடிவந்து, அவரைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். அவர்கள் கண்ணீர்விட்டு அழுதார்கள். 5 யாக்கோபுடன் வந்த பெண்களையும் பிள்ளைகளையும் ஏசா பார்த்தபோது, “இவர்கள் யார்?” என்று கேட்டார். அதற்கு யாக்கோபு, “உங்கள் அடியேனுக்குக் கடவுள் தந்திருக்கிற பிள்ளைகள்”+ என்றார். 6 அப்போது, வேலைக்காரிகள் தங்களுடைய பிள்ளைகளுடன் முன்னால் வந்து தலைவணங்கினார்கள். 7 பின்பு, லேயாளும் அவளுடைய பிள்ளைகளும் முன்னால் வந்து தலைவணங்கினார்கள். அதன்பின், யோசேப்பும் ராகேலும் முன்னால் வந்து தலைவணங்கினார்கள்.+
8 பின்பு ஏசா, “எதற்காக உன்னுடைய ஆட்களிடம் இதையெல்லாம் கொடுத்து அனுப்பினாய்?”+ என்று கேட்டார். அதற்கு அவர், “என் எஜமானுடைய கருணை கிடைப்பதற்காகத்தான்”+ என்று சொன்னார். 9 அப்போது ஏசா, “என்னிடமே ஏராளமான சொத்துப்பத்துகள் இருக்கின்றன.+ அதனால் உன்னுடையதை நீயே வைத்துக்கொள்” என்றார். 10 ஆனால் யாக்கோபு அவரிடம், “அப்படிச் சொல்லாதீர்கள். எனக்குக் கருணை காட்ட நினைத்தால், நான் தரும் அன்பளிப்புகளைத் தயவுசெய்து வாங்கிக்கொள்ளுங்கள். உங்கள் முகத்தைப் பார்க்க வேண்டுமென்ற ஆசையில் இதையெல்லாம் கொண்டுவந்தேன். நீங்கள் என்னைச் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டதால், இப்போது உங்களுடைய முகத்தைப் பார்க்கும்போது கடவுளுடைய முகத்தைப் பார்ப்பதுபோல் இருக்கிறது.+ 11 தயவுசெய்து, நான் அன்போடு தருகிற இந்தப் பரிசுகளை வாங்கிக்கொள்ளுங்கள்.+ கடவுள் என்னை ஆசீர்வதித்திருக்கிறார், தேவையான எல்லாவற்றையும் எனக்குக் கொடுத்திருக்கிறார்”+ என்று சொன்னார். யாக்கோபு அவரை வற்புறுத்திக்கொண்டே இருந்ததால், அவரும் அவற்றை வாங்கிக்கொண்டார்.
12 பிற்பாடு ஏசா, “நாம் புறப்படலாம், வா; நான் உனக்குத் துணையாக வருகிறேன்” என்றார். 13 ஆனால் யாக்கோபு, “எஜமானே, என்னுடைய பிள்ளைகள் சின்னஞ்சிறுசுகள்+ என்று உங்களுக்கே தெரியும். அதோடு, என்னுடைய மந்தையில் கறவை* ஆடுகளும் மாடுகளும் இருக்கின்றன. ஒரேவொரு நாள் வேகமாய் ஓட்டிக்கொண்டு போனால்கூட மந்தையெல்லாம் செத்துப்போகும். 14 அதனால் எஜமானே, தயவுசெய்து நீங்கள் உங்களுடைய அடியேனுக்கு முன்னால் போங்கள். நான் என்னுடைய ஆடுமாடுகளோடும் பிள்ளைகளோடும் சேர்ந்து மெதுவாக வருகிறேன். சேயீர் தேசத்தில்+ என் எஜமானாகிய உங்களைச் சந்திக்கிறேன்” என்றார். 15 அப்போது ஏசா, “அப்படியானால், என்னுடைய ஆட்களில் சிலரை உனக்காக விட்டுவிட்டுப் போகட்டுமா?” என்று கேட்டார். அதற்கு யாக்கோபு, “என் எஜமானுடைய கருணை கிடைத்தாலே எனக்குப் போதும், இதெல்லாம் எதற்கு?” என்றார். 16 அதனால் ஏசா அன்றைக்கே புறப்பட்டு, சேயீர் தேசத்துக்குத் திரும்பிப் போனார்.
17 யாக்கோபு சுக்கோத்துக்குப்+ போய் அங்கே தனக்காக ஒரு வீடு கட்டினார், மந்தைகளுக்குக் கொட்டகைகளும் போட்டார். அதனால், அந்த இடத்துக்கு சுக்கோத்* என்று பெயர் வைத்தார்.
18 பதான்-அராமிலிருந்து புறப்பட்டு வந்திருந்த+ யாக்கோபு, கானான் தேசத்திலுள்ள+ சீகேம் நகரத்துக்குப்+ பத்திரமாகப் போய்ச் சேர்ந்தார். அந்த நகரத்துக்குப் பக்கத்தில் கூடாரம் போட்டுத் தங்கினார். 19 பின்பு, கூடாரம் போட்டுத் தங்கிய நிலத்தை சீகேமின் அப்பாவான ஏமோரின் மகன்களிடமிருந்து 100 வெள்ளிக் காசுகளுக்கு வாங்கினார்.+ 20 அங்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, ஏல் எல்லோகே இஸ்ரவேல்* என்று அதற்குப் பெயர் வைத்தார்.+
34 யாக்கோபுக்கும் லேயாளுக்கும் பிறந்த தீனாள்,+ அந்தத் தேசத்திலிருந்த இளம் பெண்களோடு+ பொழுதைக் கழிப்பதற்காக* அடிக்கடி போய்வந்தாள். 2 அங்கே ஏவியர்களின்+ தலைவனான ஏமோரின் மகன் சீகேம் அவளைக் கவனித்தான். அவன் அவளைக் கொண்டுபோய்ப் பலாத்காரம் செய்தான். 3 அதன்பின், யாக்கோபின் மகளான தீனாளின் மேல் பைத்தியமாக இருந்தான். அவளைக் காதலித்ததால் அவளுடைய மனதை மயக்கும் விதத்தில் பேசினான். 4 கடைசியில், தன்னுடைய அப்பா ஏமோரிடம்+ போய், “இந்தப் பெண்ணை எப்படியாவது எனக்குக் கல்யாணம் செய்து வையுங்கள்” என்று சொன்னான்.
5 தன்னுடைய மகள் தீனாளை சீகேம் கெடுத்துவிட்டான் என்ற விஷயத்தை யாக்கோபு கேள்விப்பட்டார். ஆனால், அவருடைய மகன்கள் மந்தையை மேய்ப்பதற்காகப் போயிருந்ததால் அவர்கள் வரும்வரை அமைதியாக இருந்தார். 6 அதற்குள், நடந்த விஷயத்தைப் பற்றிப் பேசுவதற்காக சீகேமின் அப்பா ஏமோர் யாக்கோபிடம் வந்தார். 7 யாக்கோபின் மகன்களும் நடந்ததைக் கேள்விப்பட்டு, பயங்கர கோபத்தோடு உடனே கிளம்பி வந்தார்கள். சீகேம் யாக்கோபுடைய மகளைப் பலாத்காரம் செய்து இஸ்ரவேலை அவமானப்படுத்தியது+ பெரிய அட்டூழியம்+ என்று அவர்கள் நினைத்தார்கள்.
8 ஏமோர் அவர்களைப் பார்த்து, “என் மகன் சீகேம் உங்கள் மகள்மேல் உயிரையே வைத்திருக்கிறான். தயவுசெய்து அவளை அவனுக்குக் கல்யாணம் பண்ணி வையுங்கள். 9 எங்களோடு சம்பந்தம் பண்ணுங்கள். நாம் ஒருவருக்கொருவர் பெண் கொடுத்து, பெண் எடுத்துக்கொள்ளலாம்.+ 10 நீங்கள் எங்களுடைய தேசத்தில் எங்கு வேண்டுமானாலும் தங்கலாம். இங்கேயே குடியிருந்து, வியாபாரம் செய்து, சொத்துகளைச் சேர்த்துக்கொள்ளலாம்” என்றார். 11 அப்போது சீகேம் தீனாளுடைய அப்பாவிடமும் அண்ணன்களிடமும், “கொஞ்சம் பெரியமனதுபண்ணுங்கள். நீங்கள் என்ன கேட்டாலும் தருகிறேன். 12 பணமும்* பொருளும் எவ்வளவு வேண்டுமானாலும் கேளுங்கள்.+ அதைத் தருவதற்கு நான் தயார். உங்கள் பெண்ணை மட்டும் எனக்கு மனைவியாகத் தந்தால் போதும்” என்று சொன்னான்.
13 தீனாளை சீகேம் கெடுத்துவிட்டதால் அவளுடைய அண்ணன்கள் சீகேமிடமும் அவனுடைய அப்பா ஏமோரிடமும் இப்படித் தந்திரமாகப் பதில் சொன்னார்கள்: 14 “விருத்தசேதனம் செய்யாத ஒருவனுக்கு+ எங்களுடைய தங்கையைக் கொடுப்பது எங்களுக்குப் பெரிய அவமானம். அதனால், நீங்கள் கேட்கிறபடி அவளைத் தர முடியாது. 15 நீங்களும் உங்களுடைய ஆண்கள் எல்லாரும் எங்களைப் போலவே விருத்தசேதனம் செய்தால்தான்+ இந்தக் கல்யாணத்துக்கு நாங்கள் சம்மதிப்போம். 16 அப்போதுதான், எங்களுடைய பெண்களை உங்களுக்குக் கொடுத்து உங்களுடைய பெண்களை எங்களுக்கு எடுத்துக்கொள்வோம். உங்களோடு குடியிருந்து, ஒன்றுக்குள் ஒன்றாக இருப்போம். 17 ஆனால், நாங்கள் சொல்கிறபடி நீங்கள் விருத்தசேதனம் செய்யவில்லை என்றால், எங்களுடைய தங்கையைக் கூட்டிக்கொண்டு போய்விடுவோம்.”
18 அவர்கள் சொன்ன விஷயம் ஏமோருக்கும்+ அவருடைய மகன் சீகேமுக்கும்+ நல்லதாகத் தெரிந்தது. 19 சீகேம் கொஞ்சம்கூட காலம் தாழ்த்தவில்லை.+ ஏனென்றால், அவன் யாக்கோபுடைய மகள்மேல் கொள்ளை ஆசை வைத்திருந்தான். அதோடு, அவனுடைய அப்பாவின் குடும்பத்திலேயே அவனுக்குத்தான் அதிக மதிப்பும் மரியாதையும் இருந்தது.
20 அதனால் ஏமோரும் அவருடைய மகன் சீகேமும் நகரவாசலுக்குப் போய் அங்கிருந்த ஆண்களிடம்,+ 21 “அந்த மனிதர்கள் நம்மோடு சமாதானமாக இருக்க விரும்புகிறார்கள். அவர்கள் இந்த இடத்தில் குடியிருந்து வியாபாரம் செய்துகொள்ளட்டும். இந்தத் தேசத்தில்தான் இடத்துக்குப் பஞ்சமே இல்லையே! நம்முடைய பெண்களை அவர்களுக்குக் கொடுத்து, அவர்களுடைய பெண்களை நமக்கு எடுத்துக்கொள்ளலாம்.+ 22 ஆனால், நம்முடைய ஆண்கள் எல்லாரும் அவர்களைப் போலவே விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும்.+ இதற்குச் சம்மதித்தால் மட்டும்தான் அவர்கள் நம்மோடு சேர்ந்து வாழ்வார்கள், ஒன்றுக்குள் ஒன்றாக இருப்பார்கள். 23 அப்போது, அவர்களுடைய எல்லா ஆடுமாடுகளும் சொத்துப்பத்துகளும் நமக்குச் சொந்தமாகிவிடும். அதனால், அவர்களுக்குச் சம்மதம் சொல்லிவிடலாம். அவர்கள் நம்மோடு சேர்ந்து வாழட்டும்” என்றார்கள். 24 ஏமோரும் அவருடைய மகன் சீகேமும் சொன்ன ஆலோசனையை நகரவாசலில் இருந்த எல்லாரும் ஏற்றுக்கொண்டார்கள். பின்பு, அந்த நகரத்திலிருந்த ஆண்கள் எல்லாரும் விருத்தசேதனம் செய்துகொண்டார்கள்.
25 ஆனால், மூன்றாம் நாளில் அவர்கள் இன்னமும் வலியில் இருந்தபோது யாக்கோபின் மகன்களும் தீனாளின் அண்ணன்களுமான சிமியோனும் லேவியும்+ ஆளுக்கொரு வாளை எடுத்துக்கொண்டு புறப்பட்டார்கள். யாருக்கும் சந்தேகம் வராதபடி அந்த நகரத்துக்குள் நுழைந்து, அங்கிருந்த எல்லா ஆண்களையும் கொன்றுபோட்டார்கள்.+ 26 ஏமோரையும் அவருடைய மகன் சீகேமையும் வாளால் வெட்டிவிட்டு, சீகேமின் வீட்டிலிருந்த தீனாளைக் கூட்டிக்கொண்டு வந்தார்கள். 27 யாக்கோபுடைய மற்ற மகன்கள் அந்த நகரத்துக்குள் புகுந்தபோது எல்லாரும் செத்துக் கிடப்பதைப் பார்த்தார்கள். அந்த நகரத்தில் தங்களுடைய தங்கை கெடுக்கப்பட்டதால்+ அங்கிருந்த எல்லாவற்றையும் சூறையாடினார்கள். 28 ஆடுமாடுகளையும், கழுதைகளையும் பிடித்துக்கொண்டு போனார்கள். அந்த நகரத்திலும் வயல்வெளியிலும் இருந்த மற்ற எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போனார்கள். 29 அவர்களுடைய சொத்துகளையெல்லாம் எடுத்துக்கொண்டு, அவர்களுடைய மனைவிகளையும் பிள்ளைகளையும் பிடித்துக்கொண்டு போனார்கள். அவர்களுடைய வீடுகளில் எதையுமே விட்டுவைக்கவில்லை.
30 அப்போது யாக்கோபு சிமியோனிடமும் லேவியிடமும்,+ “என்னை எவ்வளவு பெரிய பிரச்சினையில் சிக்க வைத்துவிட்டீர்கள்! இந்தத் தேசத்தில் இருக்கிற கானானியர்கள் மத்தியிலும் பெரிசியர்கள் மத்தியிலும் என்னுடைய பெயரைக் கெடுத்துவிட்டீர்கள்.* என்னோடு கொஞ்சம் பேர் மட்டுமே இருப்பதால், அவர்கள் கும்பலாக வந்து என்னைத் தீர்த்துக்கட்டிவிடுவார்கள். என்னையும் என் குடும்பத்தையும் நிச்சயம் அழித்துவிடுவார்கள்” என்று சொன்னார். 31 ஆனால் அந்த இரண்டு பேரும், “அவர்கள் மட்டும் எங்கள் தங்கையை விபச்சாரிபோல் நடத்தலாமா?” என்றார்கள்.
35 அதன்பின் யாக்கோபிடம் கடவுள், “நீ புறப்பட்டுப் போய் பெத்தேலில்+ குடியிரு. உன் அண்ணன் ஏசாவிடமிருந்து நீ தப்பித்து ஓடியபோது+ உன் முன்னால் தோன்றிய உண்மைக் கடவுளுக்கு அங்கே ஒரு பலிபீடம் கட்டு” என்றார்.
2 அப்போது, யாக்கோபு தன்னுடைய குடும்பத்தாரையும் தன்னோடு இருந்த எல்லாரையும் பார்த்து, “நீங்கள் வைத்திருக்கிற பொய் தெய்வங்களின் சிலைகளைத் தூக்கிப்போடுங்கள்.+ உங்களைச் சுத்தமாக்குங்கள், உங்களுடைய துணிமணிகளை மாற்றிக்கொள்ளுங்கள். 3 நாம் பெத்தேலுக்குப் புறப்பட்டுப் போகலாம். அங்கே நான் உண்மைக் கடவுளுக்கு ஒரு பலிபீடம் கட்டப்போகிறேன். ஏனென்றால், வேதனையில் நான் செய்த வேண்டுதல்களை அவர் கேட்டார். நான் போன இடமெல்லாம் எனக்குத் துணையாக இருந்தார்”+ என்றார். 4 அப்போது, எல்லாரும் தங்களிடம் இருந்த பொய் தெய்வங்களின் சிலைகளையும் தங்கள் காதுகளில் போட்டிருந்த தோடுகளையும் எடுத்து யாக்கோபிடம் கொடுத்தார்கள். அவர் அவற்றை சீகேமுக்குப் பக்கத்தில் இருந்த பெரிய மரத்தின் கீழ் புதைத்துவைத்தார்.*
5 அவர்கள் அங்கிருந்து கிளம்பியபோது, அவர்களைச் சுற்றியிருந்த எல்லா ஊர்க்காரர்களின் மனதிலும் கடவுள் திகிலை உண்டாக்கினார். அதனால், அவர்கள் யாக்கோபின் மகன்களைத் துரத்திக்கொண்டு போகவில்லை. 6 கடைசியில், யாக்கோபும் அவருடன் இருந்த எல்லாரும் கானான் தேசத்திலுள்ள லஸ்+ என்ற பெத்தேலுக்கு வந்துசேர்ந்தார்கள். 7 அங்கே அவர் ஒரு பலிபீடத்தைக் கட்டி அந்த இடத்துக்கு எல்-பெத்தேல்* என்று பெயர் வைத்தார். ஏனென்றால், அவர் தன்னுடைய அண்ணனிடமிருந்து தப்பித்து ஓடியபோது உண்மைக் கடவுள் அங்கேதான் அவர்முன் தோன்றினார்.+ 8 பிற்பாடு, ரெபெக்காளுக்குத் தாதியாக இருந்த தெபொராள்+ இறந்துபோனாள். பெத்தேலின் அடிவாரத்திலிருந்த கருவாலி மரத்தின் கீழ் அவள் அடக்கம் செய்யப்பட்டாள். அதனால், அந்த இடத்துக்கு அவர் அலொன்-பாகத்* என்று பெயர் வைத்தார்.
9 பதான்-அராமிலிருந்து வந்துகொண்டிருந்த யாக்கோபின் முன்னால் கடவுள் மறுபடியும் தோன்றி அவரை ஆசீர்வதித்தார். 10 கடவுள் அவரிடம், “இப்போது உன்னுடைய பெயர் யாக்கோபு.+ ஆனால், இனிமேல் உன் பெயர் இஸ்ரவேல்” என்று சொன்னார். பின்பு, அவரை இஸ்ரவேல் என்று கூப்பிட ஆரம்பித்தார்.+ 11 அதோடு, “நான் சர்வவல்லமையுள்ள கடவுள்.+ நீ பிள்ளைகளைப் பெற்று ஏராளமாகப் பெருகு. உன்னிடமிருந்து நிறைய ஜனக்கூட்டங்கள் உருவாகும்,+ உன்னிடமிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள்.+ 12 ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் கொடுப்பதாகச் சொன்ன தேசத்தை நான் உனக்குக் கொடுப்பேன், உன்னுடைய சந்ததிக்கும் கொடுப்பேன்”+ என்றார். 13 அதன்பின் கடவுள், அவருடன் பேசிய இடத்தைவிட்டு மேலே போனார்.
14 கடவுள் தன்னுடன் பேசிய இடத்தில் யாக்கோபு ஒரு நினைவுக்கல்லை நாட்டி, அதன்மேல் திராட்சமதுவைக் காணிக்கையாக ஊற்றினார், எண்ணெயையும் ஊற்றினார்.+ 15 கடவுள் தன்னோடு பேசிய அந்த இடத்தை யாக்கோபு மறுபடியும் பெத்தேல்+ என்று அழைத்தார்.
16 பின்பு, அவர்கள் பெத்தேலிலிருந்து புறப்பட்டார்கள். எப்பிராத்துக்குப் போய்ச் சேர இன்னும் கொஞ்சத் தூரம் இருந்தபோது, ராகேலுக்குப் பிரசவ வலி வந்தது. பிரசவம் மிகவும் கஷ்டமாக இருந்தது. 17 வலியில் அவள் துடித்துக்கொண்டிருந்தபோது மருத்துவச்சி அவளிடம், “பயப்படாதே, உனக்கு இந்தத் தடவையும் ஒரு மகன் பிறப்பான்”+ என்று சொன்னாள். 18 அவளுடைய (உயிர் ஊசலாடிக்கொண்டிருந்ததால்) உயிர் போகும் நேரத்தில், அவள் தன்னுடைய மகனுக்கு பெனொனி* என்று பெயர் வைத்தாள். அவனுடைய அப்பாவோ அவனுக்கு பென்யமீன்*+ என்று பெயர் வைத்தார். 19 ராகேல் இறந்துபோனாள். எப்பிராத்துக்கு, அதாவது பெத்லகேமுக்கு,+ போகும் வழியில் அவள் அடக்கம் செய்யப்பட்டாள். 20 அங்கே யாக்கோபு ஒரு பெரிய கல்லை நாட்டினார். இன்றுவரை அது ராகேலுடைய கல்லறைக்கு நினைவுக்கல்லாக இருக்கிறது.
21 அதன்பின், இஸ்ரவேல் அங்கிருந்து புறப்பட்டு ஏதேர் கோபுரத்துக்கு அப்பால் கூடாரம் போட்டுத் தங்கினார். 22 இஸ்ரவேல் அந்தத் தேசத்தில் குடியிருந்தபோது, அவருடைய மகன் ரூபன் ஒருநாள் அவருடைய மறுமனைவி பில்காளோடு உறவுகொண்டான். இதை இஸ்ரவேல் கேள்விப்பட்டார்.+
யாக்கோபுக்கு 12 மகன்கள். 23 லேயாள் பெற்ற மகன்கள்: யாக்கோபின் மூத்த மகன் ரூபன்,+ அடுத்து சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன். 24 ராகேல் பெற்ற மகன்கள்: யோசேப்பு, பென்யமீன். 25 ராகேலின் வேலைக்காரி பில்காள் பெற்ற மகன்கள்: தாண், நப்தலி. 26 லேயாளின் வேலைக்காரி சில்பாள் பெற்ற மகன்கள்: காத், ஆசேர். பதான்-அராமில் யாக்கோபுக்குப் பிறந்த மகன்கள் இவர்கள்தான்.
27 கடைசியில், யாக்கோபு தன்னுடைய அப்பா ஈசாக்கு இருந்த மம்ரே என்ற இடத்துக்கு வந்துசேர்ந்தார்.+ இது கீரியாத்-அர்பாவில், அதாவது எப்ரோனில், இருந்தது. முன்பு ஆபிரகாமும் ஈசாக்கும் எப்ரோனில்தான் அன்னியர்களாகக் குடியிருந்தார்கள்.+ 28 ஈசாக்கு 180 வருஷங்கள் வாழ்ந்தார்.+ 29 அவர் நிறைய காலம் மனநிறைவோடு வாழ்ந்து, கடைசியில் இறந்துபோனார்.* அவருடைய மகன்களான ஏசாவும் யாக்கோபும் அவரை அடக்கம் செய்தார்கள்.+
36 ஏசாவின், அதாவது ஏதோமின்,+ வரலாறு இதுதான்.
2 ஏசா கல்யாணம் செய்த கானானியப் பெண்கள்: ஏத்தியனான ஏலோனின் மகள்+ ஆதாள்,+ ஏவியனான சிபியோனின் பேத்தியும் ஆனாகுவின் மகளுமான அகோலிபாமாள்,+ 3 இஸ்மவேலின் மகளும் நெபாயோத்தின்+ சகோதரியுமான பஸ்மாத்.+
4 ஏசாவின் மனைவி ஆதாளுக்கு எலிப்பாஸ் பிறந்தான், பஸ்மாத்துக்கு ரெகுவேல் பிறந்தான்.
5 அகோலிபாமாளுக்கு எயூஷ், யாலாம், கோராகு+ என்ற மகன்கள் பிறந்தார்கள்.
இவர்கள்தான் கானான் தேசத்தில் ஏசாவுக்குப் பிறந்த மகன்கள். 6 பின்பு, ஏசா தன்னுடைய மனைவிகளையும் மகன்களையும் மகள்களையும் தன்னுடைய வீட்டிலிருந்த எல்லாரையும் கூட்டிக்கொண்டு, தன்னுடைய தம்பி யாக்கோபைவிட்டுத் தூரமாக வேறொரு தேசத்துக்குப் போனார்.+ அப்போது, தன்னுடைய ஆடுமாடுகளையும் மற்ற எல்லா கால்நடைகளையும் ஓட்டிக்கொண்டு, கானான் தேசத்தில் தான் சம்பாதித்திருந்த சொத்துகள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போனார்.+ 7 ஏனென்றால், ஏசாவும் யாக்கோபும் ஒன்றாகச் சேர்ந்து வாழ முடியாதளவுக்கு அவர்களுடைய உடைமைகள் ஏராளமாகப் பெருகியிருந்தன. அதோடு, அவர்கள் குடியிருந்த தேசத்தில் அவர்களுடைய மந்தைகளுக்குப் போதுமான இடம் இருக்கவில்லை. 8 அதனால், சேயீர் மலைப்பகுதியில்+ ஏசா குடியேறினார். ஏசாவின் இன்னொரு பெயர் ஏதோம்.+
9 சேயீர் மலைப்பகுதியில்+ வாழ்ந்த ஏதோமியர்களின் தகப்பனான ஏசாவுடைய வரலாறு இதுதான்.
10 ஏசாவுடைய மகன்கள்: ஏசாவின் மனைவியான ஆதாளுக்குப் பிறந்த எலிப்பாஸ், ஏசாவின் மனைவியான பஸ்மாத்துக்குப் பிறந்த ரெகுவேல்.+
11 எலிப்பாசின் மகன்கள்: தேமான்,+ ஓமார், செப்போ, கத்தாம், கேனாஸ்.+ 12 ஏசாவின் மகன் எலிப்பாசுக்கு திம்ணா மறுமனைவியானாள். அவள் எலிப்பாசுக்கு அமலேக்கைப்+ பெற்றுக் கொடுத்தாள். இவர்கள்தான் ஏசாவின் மனைவியான ஆதாளின் பேரன்கள்.
13 ரெகுவேலின் மகன்கள்: நாகாத், சேராகு, சம்மா, மீசா. இவர்கள்தான் ஏசாவின் மனைவியான பஸ்மாத்தின்+ பேரன்கள்.
14 சிபியோனின் பேத்தியும் ஆனாகுவின் மகளும் ஏசாவின் மனைவியுமான அகோலிபாமாளுக்குப் பிறந்த மகன்கள்: எயூஷ், யாலாம், கோராகு.
15 ஏசாவின் வம்சத்தில் வந்த குலத்தலைவர்கள்+ இவர்கள்தான்: ஏசாவின் மூத்த மகன் எலிப்பாசின் மகன்களான தேமான், ஓமார், செப்போ, கேனாஸ்,+ 16 கோராகு, கத்தாம், அமலேக். இவர்கள்தான் ஏதோம் தேசத்தில் எலிப்பாசின் வம்சத்தில் வந்த குலத்தலைவர்கள்.+ இவர்கள்தான் ஆதாளின் பேரன்கள்.
17 ஏசாவின் மகன் ரெகுவேலின் மகன்கள்: நாகாத், சேராகு, சம்மா, மீசா. இவர்கள்தான் ஏதோம் தேசத்தில்+ ரெகுவேலின் வம்சத்தில் வந்த குலத்தலைவர்கள். இவர்கள்தான் ஏசாவின் மனைவியான பஸ்மாத்தின் பேரன்கள்.
18 ஏசாவுடைய மனைவி அகோலிபாமாளின் மகன்கள்: எயூஷ், யாலாம், கோராகு. இவர்கள்தான் ஆனாகுவின் மகளும் ஏசாவின் மனைவியுமான அகோலிபாமாளின் மகன்களில் குலத்தலைவர்களாக இருந்தவர்கள்.
19 ஏசாவின் மகன்களும் அவர் வம்சத்தில் வந்த குலத்தலைவர்களும் இவர்கள்தான். ஏசாவின் இன்னொரு பெயர் ஏதோம்.+
20 அந்தத் தேசத்தில் குடியிருந்த ஓரியனான சேயீரின் மகன்கள்:+ லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு,+ 21 திஷோன், ஏத்சேர், திஷான்.+ இவர்கள்தான் ஏதோம் தேசத்திலிருந்த சேயீரின் மகன்களான ஓரியர்களின் குலத்தலைவர்கள்.
22 லோத்தானின் மகன்கள்: ஓரி, ஏமாம். லோத்தானின் சகோதரி: திம்ணா.+
23 சோபாலின் மகன்கள்: அல்வான், மானகாத், ஏபால், செப்போ, ஓனாம்.
24 சிபியோனின் மகன்கள்:+ அயா, ஆனாகு. இந்த ஆனாகு தன்னுடைய அப்பா சிபியோனின் கழுதைகளை மேய்த்துக்கொண்டிருந்த சமயத்தில் வெந்நீர் ஊற்றுகளை வனாந்தரத்தில் கண்டுபிடித்தான்.
25 ஆனாகுவின் பிள்ளைகள்: மகன் திஷோன், மகள் அகோலிபாமாள்.
26 திஷோனின் மகன்கள்: எம்தான், எஸ்பான், இத்தரான், கேரான்.+
27 ஏத்சேரின் மகன்கள்: பில்கான், சகவான், அக்கான்.
28 திஷானின் மகன்கள்: ஊத்ஸ், அரான்.+
29 ஓரியர்களின் குலத்தலைவர்கள்: லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு, 30 திஷோன், ஏத்சேர், திஷான்.+ இவர்கள்தான் சேயீர் தேசத்தில் இருந்த ஓரியர்களின் குலத்தலைவர்கள்.
31 இஸ்ரவேலர்களை ராஜாக்கள் ஆட்சி செய்வதற்குமுன்+ ஏதோம் தேசத்தை ஆட்சி செய்த ராஜாக்களின்+ விவரம் இதுதான்: 32 பெயோரின் மகன் பேலா ஏதோமில் ஆட்சி செய்தான். அவன் ஆட்சி செய்த நகரத்தின் பெயர் தின்காபா. 33 பேலா இறந்தபின், போஸ்றாவைச் சேர்ந்த சேராகுவின் மகன் யோபாப் ஆட்சிக்கு வந்தான். 34 யோபாப் இறந்தபின், தேமானியர்களின் தேசத்தைச் சேர்ந்த ஊசாம் ஆட்சிக்கு வந்தான். 35 ஊசாம் இறந்தபின், பேதாத்தின் மகன் ஆதாத் ஆட்சிக்கு வந்தான். அவன் மோவாப் பிரதேசத்தில் மீதியானியர்களைத்+ தோற்கடித்திருந்தான். அவன் ஆட்சி செய்த நகரத்தின் பெயர் ஆவீத். 36 ஆதாத் இறந்தபின், மஸ்ரேக்காவைச் சேர்ந்த சம்லா ஆட்சிக்கு வந்தான். 37 சம்லா இறந்தபின், ஆற்றுக்குப் பக்கத்தில் இருந்த ரெகொபோத்தைச் சேர்ந்த சாவூல் ஆட்சிக்கு வந்தான். 38 சாவூல் இறந்தபின், அக்போரின் மகன் பாகால்-கானான் ஆட்சிக்கு வந்தான். 39 அக்போரின் மகன் பாகால்-கானான் இறந்தபின், ஹாதார் ஆட்சிக்கு வந்தான். அவன் ஆட்சி செய்த நகரத்தின் பெயர் பாகு. அவனுடைய மனைவியின் பெயர் மெகேதபேல்; இவள் மத்ரேத்தின் மகள், மேசகாப்பின் பேத்தி.
40 அவரவர் வம்சங்களின்படியும் அவரவர் இடங்களின்படியும், ஏசாவின் சந்ததியில் வந்த குலத்தலைவர்களின் பெயர்கள்: திம்ணா, ஆல்வா, ஏதேத்,+ 41 அகோலிபாமா, ஏலா, பினோன், 42 கேனாஸ், தேமான், மிப்சார், 43 மக்தியேல், இராம். ஏதோமியர்கள் உரிமையாக்கிக்கொண்ட தேசத்தில்+ அவரவர் குடியேறிய பகுதிகளின்படி குலத்தலைவர்களாக இருந்தவர்கள் இவர்கள்தான். இந்த ஏதோமியர்களின் மூதாதை ஏசா.+
37 யாக்கோபு கானான் தேசத்திலேயே வாழ்ந்துவந்தார். அங்குதான் அவருடைய அப்பாவும் அன்னியராக வாழ்ந்திருந்தார்.+
2 யாக்கோபின் வரலாறு இதுதான்.
அவருடைய மகன் யோசேப்பு,+ 17 வயதாக இருந்தபோது பில்காளின் மகன்களோடும் சில்பாளின் மகன்களோடும் சேர்ந்து ஆடுகளை மேய்த்துவந்தான்.+ பில்காளும் சில்பாளும் யாக்கோபின் மனைவிகள். அவர்களுடைய மகன்கள்+ செய்த தவறுகளைப் பற்றி யோசேப்பு ஒருமுறை தன்னுடைய அப்பாவிடம் சொன்னான். 3 இஸ்ரவேல் வயதானவராக இருந்தபோது யோசேப்பு பிறந்ததால் மற்ற எல்லா மகன்களையும்விட+ அவனை அவர் அதிகமாக நேசித்தார். அவனுக்கு அழகான, நீளமான அங்கியையும் செய்து கொடுத்தார். 4 அவர் யோசேப்புக்கு அதிக பாசம் காட்டியதை அவனுடைய சகோதரர்கள் பார்த்தபோது அவனை வெறுக்கத் தொடங்கினார்கள். அதனால் அவனிடம் முகம்கொடுத்துக்கூட* பேசவில்லை.
5 ஒருநாள் யோசேப்பு ஒரு கனவு கண்டான், அதைத் தன்னுடைய சகோதரர்களிடம் சொன்னபோது,+ அவர்கள் அவனை இன்னும் அதிகமாக வெறுக்க ஆரம்பித்தார்கள். 6 அவன் அவர்களிடம், “நான் பார்த்த கனவைப் பற்றிச் சொல்கிறேன், தயவுசெய்து கேளுங்கள். 7 வயல் நடுவே நாம் எல்லாரும் கதிர்களைக் கட்டிக்கொண்டிருந்தோம். அப்போது, என்னுடைய கதிர்க்கட்டு நிமிர்ந்து நின்றது. உங்களுடைய கதிர்க்கட்டுகள் என்னுடைய கதிர்க்கட்டைச் சுற்றிநின்று தலைவணங்கின”+ என்று சொன்னான். 8 அப்போது அவனுடைய சகோதரர்கள், “அப்படியென்றால் நீ ராஜாவாகி, எங்களை அடக்கி ஆளப்போகிறாயோ?”+ என்று கேட்டார்கள். அவன் பார்த்த கனவைப் பற்றிக் கேட்ட பின்பு அவர்கள் இன்னும் அதிகமாக அவனை வெறுத்தார்கள்.
9 அதன்பின், அவன் இன்னொரு கனவு கண்டான். உடனே தன்னுடைய சகோதரர்களிடம் போய், “நான் இன்னொரு கனவு கண்டேன். இந்தத் தடவை சூரியனும் சந்திரனும் 11 நட்சத்திரங்களும் எனக்கு முன்னால் தலைவணங்கின”+ என்று சொன்னான். 10 பின்பு, அதைத் தன் சகோதரர்களுக்கு முன்பாகத் தன்னுடைய அப்பாவிடமும் சொன்னான். அப்போது அவர் அவனைக் கண்டித்து, “உன் கனவுக்கு என்ன அர்த்தம்? நானும் உன் அம்மாவும் உன் சகோதரர்களும் உனக்கு முன்னால் தலைவணங்குவோம் என்று சொல்கிறாயா?” என்றார். 11 அதேசமயத்தில், அவன் சொன்ன விஷயத்தைத் தன்னுடைய மனதில் வைத்துக்கொண்டார். ஆனால் அவனுடைய சகோதரர்களுக்கு ஒரே வயிற்றெரிச்சலாக இருந்தது.+
12 பின்பு, அவனுடைய சகோதரர்கள் தங்கள் அப்பாவின் ஆடுகளை மேய்க்க சீகேமுக்குப்+ பக்கத்தில் போனார்கள். 13 பிறகு இஸ்ரவேல் யோசேப்பிடம், “சீகேமுக்குப் பக்கத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருக்கிற உன் சகோதரர்களைப் போய்ப் பார்த்துவிட்டு வருவாயா?” என்று கேட்டார். அதற்கு அவன், “சரி அப்பா, பார்த்துவிட்டு வருகிறேன்!” என்று சொன்னான். 14 அப்போது அவர், “உன் சகோதரர்கள் பத்திரமாக இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு வா. ஆடுகள் எப்படி இருக்கின்றன என்றும் தயவுசெய்து பார்த்துவிட்டு வந்து சொல்” என்றார். பின்பு, அந்த எப்ரோன் பள்ளத்தாக்கிலிருந்து+ அவனை அனுப்பி வைத்தார், அவன் சீகேம் பக்கமாகப் போனான். 15 அவன் வயல்வெளியில் நடந்து போய்க்கொண்டிருந்த சமயத்தில் ஒருவர் அவனைப் பார்த்து, “யாரைத் தேடுகிறாய்?” என்று கேட்டார். 16 அதற்கு அவன், “என் சகோதரர்களைத் தேடுகிறேன். அவர்கள் எங்கே ஆடு மேய்க்கிறார்கள் என்று தெரியுமா? தெரிந்தால் தயவுசெய்து சொல்லுங்கள்” என்றான். 17 அப்போது அவர், “அவர்கள் இங்கிருந்து போய்விட்டார்கள். ‘தோத்தானுக்குப் போகலாம்’ என்று அவர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டேன்” என்றார். அதனால், யோசேப்பு தன்னுடைய சகோதரர்களைத் தேடி தோத்தானுக்குப் போனான். அங்கே அவர்களைக் கண்டுபிடித்தான்.
18 அவன் வருவதை அவனுடைய சகோதரர்கள் தூரத்திலிருந்து பார்த்தார்கள். அவன் பக்கத்தில் வருவதற்குள், அவனை எப்படிக் கொலை செய்யலாம் என்று திட்டம் தீட்ட ஆரம்பித்தார்கள். 19 அவர்கள் ஒருவருக்கொருவர், “இதோ, கனவு மன்னன் வருகிறான்!+ 20 வாருங்கள், அவனைத் தீர்த்துக்கட்டி, இங்கே இருக்கிற ஒரு தண்ணீர்த் தொட்டிக்குள் போட்டுவிடலாம். ஒரு காட்டு மிருகம் அவனைத் தின்றுவிட்டது என்று சொல்லிவிடலாம். அவன் கனவெல்லாம் என்ன ஆகிறதென்று அப்புறம் பார்க்கலாம்” என்று சொல்லிக்கொண்டார்கள். 21 ரூபன்+ அதைக் கேட்டபோது அவர்களிடமிருந்து அவனைக் காப்பாற்ற நினைத்தான். அதனால் அவர்களிடம், “நாம் அவனைச் சாகடிக்க வேண்டாம்”+ என்றான். 22 எப்படியாவது அவர்களிடமிருந்து அவனைக் காப்பாற்றித் தன்னுடைய அப்பாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நினைத்து, “அவனைக் கொன்றுவிடாதீர்கள்.+ வனாந்தரத்தில் இருக்கிற இந்தத் தொட்டிக்குள் அவனைத் தள்ளிவிடுங்கள். அவனுக்கு வேறு ஒன்றும் செய்துவிடாதீர்கள்”+ என்றான்.
23 யோசேப்பு பக்கத்தில் வந்தவுடனே அவன் போட்டிருந்த அழகான அங்கியை+ அவர்கள் உருவிக்கொண்டார்கள். 24 பின்பு, அவனைப் பிடித்து அந்தத் தண்ணீர்த் தொட்டிக்குள் தள்ளினார்கள். அந்தச் சமயத்தில் அந்தத் தொட்டி தண்ணீர் இல்லாமல் வறண்டிருந்தது.
25 பின்பு, அவர்கள் சாப்பிட உட்கார்ந்தார்கள். அப்போது, கீலேயாத்திலிருந்து வந்துகொண்டிருந்த இஸ்மவேலர்களின்+ கூட்டத்தைப் பார்த்தார்கள். மலைரோஜா பிசினையும் பரிமளத் தைலத்தையும் பிசின் பட்டையையும்+ ஒட்டகங்களில் ஏற்றிக்கொண்டு அவர்கள் எகிப்துக்குப் போய்க்கொண்டிருந்தார்கள். 26 யூதா தன்னுடைய சகோதரர்களிடம், “நம்முடைய தம்பியைக் கொலை செய்துவிட்டு அதை மூடி மறைப்பதில் நமக்கு என்ன லாபம்?+ 27 வாருங்கள், அவனை இந்த இஸ்மவேலர்களிடம் விற்றுவிடுவோம்.+ நாம் அவனைச் சாகடிக்க வேண்டாம். அவன் நம்முடைய தம்பிதானே, நம்முடைய சொந்த இரத்தம்தானே”* என்றான். அதற்கு அவர்கள் சம்மதித்தார்கள். 28 யோசேப்பைத் தண்ணீர்த் தொட்டியிலிருந்து வெளியே தூக்கி, அந்தப் பக்கமாக வந்த மீதியானிய+ வியாபாரிகளான இஸ்மவேலர்களிடம்* 20 வெள்ளிக் காசுகளுக்கு விற்றார்கள்.+ அந்த ஆட்கள் யோசேப்பை எகிப்துக்குக் கொண்டுபோனார்கள்.
29 பிற்பாடு, ரூபன் அந்தத் தண்ணீர்த் தொட்டியின் பக்கமாகத் திரும்பி வந்தபோது, யோசேப்பு அங்கு இல்லாததைப் பார்த்து துக்கத்தில் தன்னுடைய உடையைக் கிழித்துக்கொண்டான். 30 பின்பு தன்னுடைய சகோதரர்களிடம் போய், “தம்பியைக் காணோமே! ஐயோ! இப்போது நான் என்ன செய்வேன்?” என்று பதற்றத்தோடு கேட்டான்.
31 அவர்கள் ஒரு வெள்ளாட்டுக் கடாவை வெட்டி, அதன் இரத்தத்தில் யோசேப்பின் அங்கியை முக்கியெடுத்தார்கள். 32 பின்பு, அந்த அங்கியைத் தங்களுடைய அப்பாவிடம் அனுப்பி, “இதை நாங்கள் எதேச்சையாகப் பார்த்தோம். இது உங்கள் மகனுடைய அங்கிதானா+ என்று தயவுசெய்து பாருங்கள்” என்று சொல்லச் சொன்னார்கள். 33 அவர் அதைப் பார்த்ததும், “இது என் மகனுடைய அங்கிதான்! ஐயோ! ஏதோவொரு காட்டு மிருகம் அவனை அடித்துப்போட்டிருக்கும்! அவனைக் கடித்துக் குதறியிருக்கும்!” என்று சொல்லி, 34 துக்கத்தில் தன்னுடைய உடையைக் கிழித்துக்கொண்டார். பின்பு, இடுப்பில் துக்கத் துணியை* கட்டிக்கொண்டு, தன்னுடைய மகனுக்காகப் பல நாட்கள் துக்கம் அனுசரித்தார். 35 அவருடைய மகன்களும் மகள்களும் அவருக்கு எவ்வளவோ ஆறுதல் சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் அவர் ஆறுதலடையாமல், “என் மகனுக்காக அழுது அழுதே நான் கல்லறைக்குள்* போய்விடுவேன்!”+ என்று சொல்லிப் புலம்பினார். அவனையே நினைத்துக் கண்ணீர்விட்டுக்கொண்டிருந்தார்.
36 அந்த மீதியானியர்கள் யோசேப்பை எகிப்துக்குக் கொண்டுபோய், பார்வோனின் அரண்மனை அதிகாரியாகவும் காவலர்களின் தலைவராகவும்+ இருந்த போத்திபாரிடம்+ விற்றுப்போட்டார்கள்.
38 கிட்டத்தட்ட அந்தச் சமயத்தில்தான், யூதா தன்னுடைய சகோதரர்களைவிட்டுப் பிரிந்துபோனார். அதுல்லாம் ஊரைச் சேர்ந்த ஹிரா என்பவர் குடியிருந்த இடத்துக்குப் பக்கத்தில் அவர் கூடாரம் போட்டுத் தங்கினார். 2 அங்கே சூவா என்ற ஒரு கானானியனின் மகளைப்+ பார்த்தார். அவளைக் கல்யாணம் செய்துகொண்டார். 3 அவள் கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். யூதா அவனுக்கு ஏர்+ என்று பெயர் வைத்தார். 4 அவள் மறுபடியும் கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். அவனுக்கு ஓனேன் என்று பெயர் வைத்தாள். 5 அதன்பின், அவள் இன்னொரு மகனையும் பெற்றெடுத்தாள். அவனுக்கு சேலா என்று பெயர் வைத்தாள். சேலா பிறந்தபோது அவர்* அக்சீப்பில்+ இருந்தார்.
6 சில காலம் கழித்து, யூதா தன்னுடைய மூத்த மகன் ஏருக்கு தாமார்+ என்ற பெண்ணைக் கல்யாணம் செய்துவைத்தார். 7 ஆனால், யூதாவின் மூத்த மகன் ஏர் யெகோவாவுக்குப் பிடிக்காததைச் செய்துவந்தான். அதனால் யெகோவா அவனைக் கொன்றுபோட்டார். 8 அவன் இறந்துவிட்டதால் யூதா தன்னுடைய மகன் ஓனேனிடம், “கொழுந்தனுடைய* கடமைப்படி நீ உன் அண்ணன் மனைவியைக் கல்யாணம் செய்துகொண்டு அவனுக்கு வாரிசு உண்டாக்கு”+ என்றார். 9 அது தன்னுடைய வாரிசாக இருக்காது+ என்று ஓனேனுக்குத் தெரிந்ததால், தன்னுடைய அண்ணனின் மனைவியோடு உறவுகொண்ட எல்லா சமயத்திலும் தன் விந்துவைத் தரையில் விழவைத்தான்.+ 10 அவன் செய்தது யெகோவாவுக்குப் பிடிக்கவே இல்லை. அதனால், அவனையும் கொன்றுபோட்டார்.+ 11 அப்போது யூதா தன்னுடைய மருமகள் தாமாரிடம், “என் மகன் சேலா பெரியவனாகும்வரை நீ உன்னுடைய அப்பா வீட்டுக்குப் போய் விதவையாகத் தங்கியிரு” என்றார். ஏனென்றால், சேலாவும் அவனுடைய சகோதரர்களைப் போலச் செத்துவிடுவானோ+ என்று யூதா பயந்தார். அவர் சொன்னபடியே, தாமார் தன்னுடைய அப்பாவின் வீட்டுக்குப் போய்த் தங்கியிருந்தாள்.
12 கொஞ்சக் காலம் கழித்து, சூவாவின்+ மகளான யூதாவின் மனைவி இறந்துபோனாள். யூதா அவளுக்காகத் துக்கம் அனுசரித்தார். பின்பு, தன்னுடைய ஆடுகளுக்கு மயிர் கத்தரிப்பதற்காக அதுல்லாம் ஊரைச்+ சேர்ந்த தன்னுடைய நண்பர் ஹிராவைக் கூட்டிக்கொண்டு திம்னாவுக்குப்+ புறப்பட்டுப் போனார். 13 அப்போது ஒருவர் தாமாரிடம், “ஆடுகளுக்கு மயிர் கத்தரிப்பதற்காக உன்னுடைய மாமனார் திம்னாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்” என்று சொன்னார். 14 உடனே அவள் விதவையின் உடைகளை மாற்றிவிட்டு, முக்காடு போட்டுக்கொண்டு, ஒரு சால்வையால் தன்னைப் போர்த்திக்கொண்டாள். பின்பு, திம்னாவுக்குப் போகும் வழியிலிருந்த ஏனாயிம் ஊர்வாசலில் உட்கார்ந்துகொண்டாள். சேலா பெரியவனாகியும் யூதா அவனை அவளுக்குக் கல்யாணம் செய்து வைக்காததால்தான்+ அப்படிச் செய்தாள்.
15 யூதா அவளைப் பார்த்தவுடனே அவள் ஒரு தாசி என்று நினைத்துக்கொண்டார். ஏனென்றால், அவள் தன்னுடைய முகத்தை மூடியிருந்தாள். 16 அவள் தன்னுடைய மருமகள்+ என்று தெரியாமல் அவள் பக்கமாகப் போய், “இன்றைக்கு ராத்திரி நாம் சேர்ந்து இருக்கலாமா?” என்று கேட்டார். “நீங்கள் எனக்கு என்ன தருவீர்கள்?” என்று அவள் கேட்டாள். 17 அதற்கு அவர், “என்னுடைய மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக் குட்டியை அனுப்பி வைக்கிறேன்” என்றார். ஆனால் அவள், “அதை அனுப்பும்வரை எதையாவது எனக்கு அடமானமாகத் தருவீர்களா?” என்று கேட்டாள். 18 அதற்கு அவர், “அடமானமாக உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார். அப்போது அவள், “உங்கள் முத்திரை மோதிரத்தையும்+ அதன் கயிற்றையும் உங்கள் கையிலுள்ள கோலையும் கொடுங்கள்” என்றாள். அவர் அவற்றைக் கொடுத்து, அன்றைக்கு ராத்திரி அவளோடு சேர்ந்து இருந்தார். அதனால் அவள் கர்ப்பமானாள். 19 அதன்பின் அவள் எழுந்துபோய், தன்னுடைய சால்வையை எடுத்துவிட்டு விதவையின் உடைகளைப் போட்டுக்கொண்டாள்.
20 பின்பு யூதா, அதுல்லாம் ஊரைச் சேர்ந்த தன்னுடைய நண்பரின்+ கையில் அந்த வெள்ளாட்டுக் குட்டியைக் கொடுத்து, அந்தப் பெண்ணிடமிருந்த அடமானத்தை வாங்கிவரச் சொன்னார். ஆனால், அவரால் அவளைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. 21 அதனால் அவர் அந்த ஊரிலிருந்த ஆண்களிடம் போய், “ஏனாயிமில் வழியோரமாக உட்கார்ந்திருந்த கோயில் தாசி* எங்கே?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “கோயில் தாசி யாரும் இந்த ஊரில் இருந்ததே கிடையாது” என்றார்கள். 22 கடைசியில் அவர் யூதாவிடம் திரும்பிப் போய், “அவளைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அதுமட்டுமல்ல, ‘கோயில் தாசி யாரும் இந்த ஊரில் இருந்ததே கிடையாது’ என்று அந்த ஊர்க்காரர்கள் சொன்னார்கள்” என்றார். 23 அதற்கு யூதா, “அவற்றை அவளே வைத்துக்கொள்ளட்டும். இனியும் அவளைத் தேடிப்போனால் நமக்குத்தான் அவமானம். சொன்னபடியே நான் இந்த வெள்ளாட்டுக் குட்டியை அனுப்பி வைத்தேன். என்ன செய்வது, உன்னால் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை” என்றார்.
24 சுமார் மூன்று மாதம் கழித்து, “உங்கள் மருமகள் தாமார் விபச்சாரம் செய்திருக்கிறாள், அதனால் கர்ப்பமாகிவிட்டாள்” என்று யாரோ யூதாவிடம் சொன்னார்கள். யூதா அதைக் கேட்டதும், “அவளை இழுத்து வந்து சுட்டெரியுங்கள்”+ என்றார். 25 அவள் இழுத்து வரப்பட்டபோது, அடமானப் பொருள்களைத் தன்னுடைய மாமனாரிடம் அனுப்பி, “இந்தப் பொருள்களுக்கு யார் சொந்தக்காரரோ அவரால்தான் நான் கர்ப்பமானேன். இந்த முத்திரை மோதிரமும், கயிறும், கோலும்+ யாருடையது என்று தயவுசெய்து பாருங்கள்” என்று சொல்லச் சொன்னாள். 26 யூதா அவற்றைப் பார்த்தவுடன், “அவள் என்னைவிட நீதியுள்ளவள். அவளை என் மகன் சேலாவுக்குக் கொடுக்காததால்தான்+ அவள் இப்படி நடந்துகொண்டாள்” என்று சொன்னார். அதற்குப்பின், அவளை அவர் தொடவே இல்லை.
27 அவளுக்குப் பிரசவ நேரம் நெருங்கியது. அவள் வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் இருந்தன. 28 பிரசவ நேரத்தில், ஒரு குழந்தை தன் கையை வெளியே நீட்டியது. உடனே மருத்துவச்சி அடையாளத்துக்காக ஒரு சிவப்பு நூலை அதன் கையில் கட்டி, “இதுதான் முதலில் வந்த குழந்தை” என்று சொன்னாள். 29 அந்தக் குழந்தை தன் கையை உள்ளே இழுத்துக்கொண்டது. உடனே, இன்னொரு குழந்தை வெளியே வந்தது. அப்போது அவள், “நீ கருப்பையைக் கிழித்துக்கொண்டு வந்திருக்கிறாய்!” என்று சொன்னாள். அதனால், அவனுக்கு பாரேஸ்*+ என்று பெயர் வைக்கப்பட்டது. 30 அதன்பின், கையில் சிவப்பு நூல் கட்டப்பட்டிருந்த அவன் சகோதரன் வெளியே வந்தான். அவனுக்கு சேராகு+ என்று பெயர் வைக்கப்பட்டது.
39 யோசேப்பை இஸ்மவேலர்கள்+ எகிப்துக்குக் கொண்டுபோனார்கள்.+ எகிப்தியரான போத்திபார்+ யோசேப்பை அவர்களிடமிருந்து விலைக்கு வாங்கினார். போத்திபார், பார்வோனுடைய அரண்மனை அதிகாரியாகவும் காவலர்களின் தலைவராகவும் இருந்தார். 2 யெகோவா யோசேப்போடு இருந்தார்.+ அதனால், யோசேப்பு செய்த எல்லாவற்றிலும் அவருக்கு வெற்றி கிடைத்தது. எகிப்தியரான அவருடைய எஜமானின் வீட்டில் அவருக்குப் பொறுப்புகள் கொடுக்கப்பட்டன. 3 யெகோவா யோசேப்போடு இருந்ததையும், அவர் செய்கிற எல்லாவற்றிலும் யெகோவா அவருக்கு வெற்றி தந்ததையும் அவருடைய எஜமான் பார்த்தார்.
4 போத்திபாருக்கு யோசேப்பை மிகவும் பிடித்திருந்தது. அதனால், போத்திபார் அவரைத் தன்னுடைய முக்கிய உதவியாளராக நியமித்து, தன்னுடைய வீட்டையும் தனக்குச் சொந்தமான எல்லாவற்றையும் அவருடைய பொறுப்பில் ஒப்படைத்தார். 5 அந்தச் சமயத்திலிருந்து, யோசேப்புக்காக அந்த எகிப்தியரின் வீட்டை யெகோவா ஆசீர்வதித்தார். அவருடைய வீட்டிலும் வெளியிலும் இருந்த எல்லாவற்றையும் யெகோவா ஆசீர்வதித்தார்.+ 6 போத்திபார் தனக்குச் சொந்தமான எல்லாவற்றையுமே யோசேப்பின் பொறுப்பில் விட்டுவிட்டதால், சாப்பிடுகிற உணவைத் தவிர வேறு எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. யோசேப்பு அழகான, வாட்டசாட்டமான வாலிபராக ஆனார்.
7 அப்போது, அவருடைய எஜமானின் மனைவி அவரைக் காமக் கண்ணோடு பார்க்க ஆரம்பித்தாள். “என்னோடு படு!” என்றும் கூப்பிட்டாள். 8 ஆனால் அவர் அதற்கு ஒத்துக்கொள்ளாமல், “என் எஜமான் இந்த வீட்டிலுள்ள எல்லாவற்றையும் என் கையில் ஒப்படைத்திருக்கிறார். என் பொறுப்பில் இருக்கிற எதைப் பற்றியும் அவர் கவலைப்படுவதில்லை. 9 இந்த வீட்டிலேயே எனக்குத்தான் நிறைய அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார். எதையுமே அவர் எனக்குத் தராமல் இருக்கவில்லை, உங்களைத் தவிர! ஏனென்றால், நீங்கள் அவருடைய மனைவி! அப்படியிருக்கும்போது, நான் எப்படி இவ்வளவு பெரிய தவறு செய்து, கடவுளுக்கு விரோதமாகப் பாவம் பண்ணுவேன்?”+ என்று சொன்னார்.
10 தினமும் அவள் யோசேப்பிடம் குழைந்துகொண்டே இருந்தாள். ஆனால், அவளோடு படுக்கவோ பொழுதைக் கழிக்கவோ அவர் சம்மதிக்கவே இல்லை. 11 ஒருநாள், வேலையைக் கவனிக்க வீட்டுக்குள் அவர் போனபோது, அங்கு வேலைக்காரர்கள் யாரும் இல்லை. 12 அப்போது அவள் அவருடைய அங்கியைப் பிடித்திழுத்து, “என்னோடு படு!” என்று கூப்பிட்டாள். ஆனால், அவர் தன்னுடைய அங்கியை அவளுடைய கையில் விட்டுவிட்டு வெளியே ஓடிப்போனார். 13 அவர் தன்னுடைய அங்கியை விட்டுவிட்டு ஓடிப்போனதைப் பார்த்ததும், 14 அவள் கூச்சல் போட்டு தன்னுடைய வேலைக்காரர்களைக் கூப்பிட்டு, “பாருங்கள்! என் கணவர் கூட்டிக்கொண்டுவந்த இந்த எபிரெயன் நம் மானத்தை வாங்கப் பார்த்தான். என்னைக் கெடுக்க வந்தான். ஆனால், நான் பயங்கரமாகக் கத்திக் கூச்சல் போட்டேன். 15 நான் போட்ட கூச்சலில், அவனுடைய அங்கியை இங்கேயே போட்டுவிட்டு ஓடிவிட்டான்” என்று சொன்னாள். 16 அதன்பின், போத்திபார் வரும்வரை அவள் அந்த அங்கியைத் தன்னிடம் வைத்திருந்தாள்.
17 யோசேப்பின் எஜமான் வந்ததும், “நீங்கள் கூட்டிக்கொண்டுவந்த அந்த எபிரெய வேலைக்காரன் என் மானத்தை வாங்கப் பார்த்தான். 18 நான் கத்திக் கூச்சல் போட்டவுடனே, தன்னுடைய அங்கியை இங்கே போட்டுவிட்டு ஓடிவிட்டான்” என்று சொன்னாள். 19 “உங்கள் வேலைக்காரன் எனக்கு இப்படிச் செய்தான்” என்று தன்னுடைய மனைவி சொன்னதைக் கேட்டதும் அவருக்குப் பயங்கர கோபம் வந்தது. 20 அதனால் யோசேப்பைப் பிடித்து, அரசு கைதிகள் வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலையில் போடக் கட்டளையிட்டார். யோசேப்பு அந்தச் சிறைச்சாலையிலேயே அடைபட்டுக் கிடந்தார்.+
21 ஆனால், யெகோவா யோசேப்புடனேயே இருந்தார். அவரைக் கைவிடாமல் மாறாத அன்பை எப்போதும் காட்டிவந்தார். சிறைச்சாலையின் முக்கிய அதிகாரியுடைய பிரியம் யோசேப்புக்குக் கிடைக்கும்படி செய்தார்.+ 22 அதனால், அந்த அதிகாரி அங்கிருந்த எல்லா கைதிகளையும் யோசேப்பின் கண்காணிப்பில் விட்டுவிட்டார். கைதிகள் செய்த எல்லா வேலைகளையும் யோசேப்புதான் மேற்பார்வை செய்துவந்தார்.+ 23 யோசேப்பின் பொறுப்பில் விடப்பட்ட எதைப் பற்றியும் அந்த அதிகாரி கவலைப்படவில்லை. ஏனென்றால், யெகோவா யோசேப்புடனேயே இருந்தார். யோசேப்பு செய்த எல்லாவற்றிலும் யெகோவா அவருக்கு வெற்றி தந்தார்.+
40 பிற்பாடு, எகிப்து ராஜாவுக்குப் பானம் பரிமாறுபவர்களின் தலைவனும்+ ரொட்டி சுடுபவர்களின் தலைவனும் ராஜாவுக்கு எதிராகப் பாவம் செய்தார்கள். 2 அதனால், அந்த இரண்டு அதிகாரிகள்மேலும் பார்வோனுக்குப் பயங்கர கோபம் வந்தது.+ 3 அவர்களைக் காவலர்களுடைய தலைவரின்+ பொறுப்பிலிருந்த சிறைச்சாலையில்* தள்ளினார். அங்குதான் யோசேப்பும் கைதியாக இருந்தார்.+ 4 காவலர்களுடைய தலைவர் அந்த இரண்டு பேரையும் கவனித்துக்கொள்கிற பொறுப்பை யோசேப்புக்குக் கொடுத்தார்.+ அந்த இரண்டு பேரும் கொஞ்சக் காலம் அந்தச் சிறைச்சாலையில் இருந்தார்கள்.
5 எகிப்து ராஜாவுடைய அந்த இரண்டு அதிகாரிகளும் சிறைச்சாலையில் இருந்தபோது, ஒருநாள் ராத்திரி ஆளுக்கொரு கனவு கண்டார்கள். ஒவ்வொருவருடைய கனவுக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருந்தது. 6 அடுத்த நாள் காலையில் யோசேப்பு உள்ளே வந்து பார்த்தபோது, அவர்களுடைய முகம் வாடிப்போயிருந்தது. 7 அதனால், சிறைச்சாலையில் தன்னோடு அடைக்கப்பட்டிருந்த அந்த அதிகாரிகளைப் பார்த்து, “இன்றைக்கு ஏன் உங்கள் முகம் வாடியிருக்கிறது?” என்று கேட்டார். 8 அதற்கு அவர்கள், “நாங்கள் இரண்டு பேரும் கனவு கண்டோம். ஆனால், அதற்கு அர்த்தம் சொல்ல யாரும் இல்லை” என்று சொன்னார்கள். அப்போது யோசேப்பு, “கடவுளால் மட்டும்தானே கனவுகளுக்கு அர்த்தம் சொல்ல முடியும்?+ நீங்கள் என்ன கனவு கண்டீர்கள் என்று தயவுசெய்து சொல்லுங்கள்” என்றார்.
9 அப்போது, பானம் பரிமாறுபவர்களின் தலைவன் தன்னுடைய கனவை யோசேப்பிடம் சொன்னான். அவன், “என் முன்னால் ஒரு திராட்சைக் கொடி இருப்பதைப் பார்த்தேன். 10 அந்தத் திராட்சைக் கொடியில் மூன்று கிளைகள் இருந்தன. அவை துளிர்விட்டு, பூ பூத்தன. அவற்றில் திராட்சைகள் கொத்துக்கொத்தாகப் பழுத்துத் தொங்கின. 11 பார்வோனுடைய கோப்பை என் கையில் இருந்தது. அப்போது, நான் அந்தத் திராட்சைப் பழங்களைப் பறித்து பார்வோனின் கோப்பையில் பிழிந்தேன். பின்பு, அந்தக் கோப்பையை பார்வோனின் கையில் கொடுத்தேன்” என்று சொன்னான். 12 யோசேப்பு அவனிடம், “இந்தக் கனவின் அர்த்தம் இதுதான்: மூன்று கிளைகள் என்பது மூன்று நாட்கள். 13 இன்னும் மூன்று நாட்களில் பார்வோன் உங்களை விடுதலை செய்து மறுபடியும் அதே பதவியைக் கொடுப்பார்.+ முன்பு போலவே பார்வோனுக்கு நீங்கள் பானம் பரிமாறுவீர்கள்.+ 14 அப்படி உங்களுக்கு நல்லது நடக்கும்போது என்னை நினைத்துக்கொள்ளுங்கள். தயவுசெய்து எனக்கு விசுவாசமாக இருங்கள். என்னைப் பற்றி பார்வோனிடம் சொல்லி இந்தச் சிறையிலிருந்து வெளியே வர உதவி செய்யுங்கள். 15 எபிரெயர்களுடைய தேசத்திலிருந்து நான் கடத்திவரப்பட்டேன்.+ சிறைச்சாலையில் போடுமளவுக்கு நான் எந்தத் தவறும் செய்யவில்லை”+ என்று சொன்னார்.
16 பானம் பரிமாறுபவர்களின் தலைவனுக்கு நல்லது நடக்குமென்று யோசேப்பு சொன்னதைக் கேட்டு, ரொட்டி சுடுபவர்களின் தலைவன் அவரிடம், “நானும் ஒரு கனவு கண்டேன். என்னுடைய தலையில் மூன்று ரொட்டிக் கூடைகள் இருந்தன. 17 பார்வோனுக்காகச் சுட்ட எல்லா வகையான ரொட்டிகளும் மேல் கூடையில் இருந்தன. ஆனால், பறவைகள் அவற்றைத் தின்றுவிட்டன” என்றான். 18 அதற்கு யோசேப்பு, “இந்தக் கனவின் அர்த்தம் இதுதான்: மூன்று கூடைகள் என்பது மூன்று நாட்கள். 19 இன்னும் மூன்று நாட்களில் பார்வோன் உங்கள் தலையை வெட்டி, உங்கள் உடலை மரக் கம்பத்தில் தொங்கவிடுவார். உங்கள் சதையைப் பறவைகள் தின்னும்”+ என்றார்.
20 மூன்றாம் நாளில் பார்வோனின் பிறந்த நாள் விழா நடந்தது.+ அவன் தன்னுடைய ஊழியர்கள் எல்லாருக்கும் விருந்து வைத்தான். அப்போது, பானம் பரிமாறுபவர்களின் தலைவனையும் ரொட்டி சுடுபவர்களின் தலைவனையும் தன்னுடைய ஊழியர்களுக்கு முன்னால் கொண்டுவந்து நிறுத்தினான். 21 பானம் பரிமாறுபவர்களின் தலைவனுக்கு மறுபடியும் அதே பதவியைக் கொடுத்தான். அவன் பார்வோனுடைய கையில் முன்பு போலவே கோப்பையைக் கொடுத்தான். 22 ஆனால், ரொட்டி சுடுபவர்களின் தலைவனை பார்வோன் மரக் கம்பத்தில் தொங்கவிட்டான். யோசேப்பு அவர்களுக்குச் சொன்னபடியே எல்லாம் நடந்தது.+ 23 இருந்தாலும், பானம் பரிமாறுபவர்களின் தலைவனுக்கு யோசேப்பைப் பற்றிய ஞாபகம் வரவில்லை, அவரை மறந்துவிட்டான்.+
41 இரண்டு வருஷங்களுக்குப் பின்பு பார்வோன் ஒரு கனவு கண்டான்.+ அதில், அவன் நைல் நதிக்கரையில் நின்றுகொண்டிருந்தான். 2 அப்போது, புஷ்டியாக இருந்த அழகான ஏழு பசுக்கள் நைல் நதியிலிருந்து வெளியே வந்து நதிக்கரையில் இருந்த புல்லை மேய்ந்துகொண்டிருந்தன.+ 3 அதற்குப்பின் நைல் நதியிலிருந்து இன்னும் ஏழு பசுக்கள் வெளியே வந்தன. அவை பார்ப்பதற்கு அசிங்கமாகவும், எலும்பும் தோலுமாகவும் இருந்தன. அவை நைல் நதிக்கரையில் இருந்த புஷ்டியான பசுக்களின் பக்கத்தில் நின்றன. 4 பின்பு, எலும்பும் தோலுமாக இருந்த அசிங்கமான பசுக்கள், புஷ்டியாக இருந்த அழகான ஏழு பசுக்களை விழுங்க ஆரம்பித்தன. உடனே, பார்வோன் தூக்கத்திலிருந்து எழுந்துகொண்டான்.
5 அவன் மறுபடியும் தூங்கியபோது இன்னொரு கனவைக் கண்டான். அதில், ஒரே தாளில் ஏழு கதிர்கள் செழிப்பாக வளர்ந்திருந்தன.+ 6 அதற்குப்பின் முளைத்த ஏழு கதிர்கள் கிழக்கிலிருந்து வீசிய வெப்பக்காற்றினால் தீய்ந்துபோய்ப் பதராக இருந்தன. 7 பதராக இருந்த கதிர்கள் செழிப்பாக வளர்ந்திருந்த கதிர்களை விழுங்க ஆரம்பித்தன. உடனே பார்வோன் தூக்கத்திலிருந்து எழுந்துகொண்டான். அது ஒரு கனவு என்று புரிந்துகொண்டான்.
8 காலையில் அவனுக்கு ஒரே பதற்றமாக இருந்தது. அதனால், எகிப்திலிருந்த எல்லா மந்திரவாதிகளையும் ஞானிகளையும் வரச் சொல்லி, தான் கண்ட கனவுகளை அவர்களிடம் சொன்னான். ஆனால், அவற்றின் அர்த்தத்தை யாராலும் பார்வோனுக்குச் சொல்ல முடியவில்லை.
9 அப்போது, பானம் பரிமாறுபவர்களின் தலைவன் பார்வோனிடம், “நான் செய்த பாவங்களை இன்றைக்கு உங்களிடம் சொல்லிவிடுகிறேன். 10 பார்வோன் அவர்களே, நீங்கள் ஒருசமயம் ரொட்டி சுடுபவர்களின் தலைவன்மேலும் என்மேலும் பயங்கரமாகக் கோபப்பட்டு, காவலர்களின் தலைவருடைய கண்காணிப்பில் இருந்த சிறைச்சாலையில் போட்டீர்கள் இல்லையா?+ 11 அதன் பின்பு, நாங்கள் இரண்டு பேரும் ஒரே ராத்திரியில் கனவு கண்டோம். ஒவ்வொருவருடைய கனவுக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருந்தது.+ 12 அங்கே, எபிரெயனான ஒரு வாலிபன் எங்களோடு இருந்தான். அவன் காவலர்களின் தலைவருடைய ஊழியன்.+ எங்கள் கனவை அவனிடம் சொன்னபோது,+ ஒவ்வொரு கனவுக்கும் ஒவ்வொரு அர்த்தத்தை அவன் சொன்னான். 13 எல்லாம் அவன் சொன்னபடியே நடந்தது. எனக்கு மறுபடியும் அதே பதவி கிடைத்தது. ஆனால், ரொட்டி சுடுபவர்களின் தலைவன் மரக் கம்பத்தில் தொங்கவிடப்பட்டான்”+ என்று சொன்னான்.
14 உடனே, யோசேப்பைக் கூட்டிக்கொண்டு வருவதற்கு பார்வோன் தன்னுடைய ஆட்களை அனுப்பினான்.+ அவர்கள் வேகமாகப் போய் சிறைச்சாலையிலிருந்து+ யோசேப்பைக் கூட்டிக்கொண்டு வந்தார்கள். யோசேப்பு சவரம்* செய்து, தன் உடைகளை மாற்றிக்கொண்டு பார்வோனிடம் போனார். 15 பார்வோன் யோசேப்பிடம், “நான் ஒரு கனவு கண்டேன், அதற்கு யாராலும் அர்த்தம் சொல்ல முடியவில்லை. ஆனால், நீ கனவுகளுக்கு அர்த்தம் சொல்வாய் என்று கேள்விப்பட்டேன்”+ என்றான். 16 அதற்கு யோசேப்பு, “நான் இல்லை, பார்வோனாகிய உங்களுக்குக் கடவுள்தான் நல்ல செய்தி சொல்வார்”+ என்றார்.
17 அப்போது பார்வோன் யோசேப்பிடம், “என் கனவு இதுதான். நைல் நதிக்கரையில் நான் நின்றுகொண்டிருந்தேன். 18 அப்போது, அந்த நைல் நதியிலிருந்து புஷ்டியாக இருந்த அழகான ஏழு பசுக்கள் வெளியே வந்து நதிக்கரையில் இருந்த புல்லை மேய்ந்துகொண்டிருந்தன.+ 19 அதற்குப்பின் இன்னும் ஏழு பசுக்கள் வெளியே வந்தன. அவை பார்ப்பதற்குப் பரிதாபமாகவும், அசிங்கமாகவும், எலும்பும் தோலுமாகவும் இருந்தன. இந்த எகிப்து தேசத்தில் எங்கேயும் அப்படிப்பட்ட அசிங்கமான பசுக்களை நான் பார்த்ததே இல்லை. 20 நோஞ்சானாகவும், அசிங்கமாகவும் இருந்த பசுக்கள், முதலில் நான் பார்த்த புஷ்டியான ஏழு பசுக்களை விழுங்க ஆரம்பித்தன. 21 ஆனால் அவற்றை விழுங்கிய பின்பும், விழுங்கிய அறிகுறியே தெரியவில்லை. அவை முன்பு போலவே எலும்பும் தோலுமாக இருந்தன. அப்போது, நான் தூக்கத்திலிருந்து எழுந்துகொண்டேன்.
22 அதன்பின், நான் மறுபடியும் ஒரு கனவு கண்டேன். ஒரே தாளில் ஏழு கதிர்கள் செழிப்பாக வளர்ந்திருந்தன.+ 23 அதற்குப்பின் முளைத்த ஏழு கதிர்கள் கிழக்கிலிருந்து வீசிய வெப்பக்காற்றினால் வாடி வதங்கி தீய்ந்துபோய்ப் பதராக இருந்தன. 24 பதராக இருந்த கதிர்கள் செழிப்பாக வளர்ந்திருந்த ஏழு கதிர்களை விழுங்கத் தொடங்கின. இந்தக் கனவை நான் மந்திரவாதிகளிடம் சொன்னேன்,+ ஆனால் யாராலும் அதற்கு அர்த்தம் சொல்ல முடியவில்லை”+ என்று சொன்னான்.
25 அதற்கு யோசேப்பு, “பார்வோன் அவர்களே, உங்களுடைய இரண்டு கனவுகளுக்கும் அர்த்தம் ஒன்றுதான். உண்மைக் கடவுள், தான் செய்யப்போவதை பார்வோனாகிய உங்களுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார்.+ 26 புஷ்டியான ஏழு பசுக்கள் ஏழு வருஷங்களைக் குறிக்கின்றன. அதேபோல், செழுமையான ஏழு கதிர்களும் ஏழு வருஷங்களைக் குறிக்கின்றன. இரண்டு கனவுகளுக்கும் ஒரே அர்த்தம்தான். 27 அடுத்து வந்த அசிங்கமான ஏழு நோஞ்சான் பசுக்களும் ஏழு வருஷங்களைக் குறிக்கின்றன. கிழக்கிலிருந்து வீசிய வெப்பக்காற்றினால் தீய்ந்து பதராகிப்போன ஏழு கதிர்கள் ஏழு வருஷங்களுக்கு வரப்போகும் பஞ்சத்தைக் குறிக்கின்றன. 28 பார்வோனாகிய உங்களுக்கு நான் சொன்னது போலவே உண்மைக் கடவுள், தான் செய்யப்போவதை உங்களுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார்.
29 எகிப்து தேசம் முழுக்க ஏழு வருஷங்களுக்கு அமோக விளைச்சல் இருக்கும். 30 ஆனால், அதற்குப்பின் ஏழு வருஷங்களுக்குப் பஞ்சம் வரும். அப்போது, எகிப்து தேசத்தில் அமோக விளைச்சல் கிடைத்த காலத்தையே ஜனங்கள் மறந்துபோவார்கள். அந்தப் பஞ்சம் தேசத்தைப் பாழாக்கும்.+ 31 முன்பிருந்த அமோக விளைச்சல் ஜனங்களுடைய ஞாபகத்துக்கு வராது. அந்தளவுக்குப் பஞ்சம் மிகக் கடுமையாக இருக்கும். 32 உண்மைக் கடவுள் இதை உறுதிசெய்திருக்கிறார் என்பதற்கு அறிகுறியாகவே பார்வோனாகிய உங்களுக்கு இந்தக் கனவு இரண்டு தடவை காட்டப்பட்டிருக்கிறது. இதை உண்மைக் கடவுள் சீக்கிரம் நிறைவேற்றுவார்.
33 அதனால் பார்வோன் அவர்களே, விவேகமும் ஞானமும் உள்ள ஒருவரை நீங்கள் தேடிக் கண்டுபிடித்து அவரை எகிப்து தேசத்துக்கு அதிகாரியாக்குங்கள். 34 பார்வோனாகிய நீங்கள் தேசம் முழுவதும் கண்காணிகளை ஏற்படுத்துங்கள். எகிப்து தேசத்தில் ஏழு வருஷங்கள் அமோக விளைச்சல் கிடைக்கும்போது+ ஐந்திலொரு பாகத்தை அவர்கள் பத்திரமாக எடுத்து வைக்கட்டும். 35 வளமான அந்த வருஷங்களில் விளையும் எல்லா உணவுப் பொருள்களையும் நகரங்களில் உள்ள பார்வோனின் கிடங்குகளில் அவர்கள் பாதுகாத்து வைக்கட்டும்.+ 36 எகிப்தில் ஏழு வருஷங்களுக்குப் பஞ்சம் வரும்போது இந்த உணவுப் பொருள்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அப்போதுதான், தேசம் பஞ்சத்தால் அழிந்துபோகாது”+ என்று சொன்னார்.
37 அவர் சொன்னது பார்வோனுக்கும் அவனுடைய ஊழியர்களுக்கும் நல்லதாகத் தெரிந்தது. 38 அதனால் பார்வோன் தன்னுடைய ஊழியர்களிடம், “இவனைப் போல தெய்வசக்தி உள்ளவன் யாருமே இல்லை!” என்றான். 39 பின்பு யோசேப்பிடம், “இதையெல்லாம் கடவுள்தான் உனக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார். அதனால், உன்னைப் போல விவேகமும் ஞானமும் உள்ளவன் யாருமே கிடையாது. 40 நீ என்னுடைய அரண்மனைக்கு அதிகாரியாக இருப்பாய். என்னுடைய ஜனங்கள் எல்லாரும் மறுபேச்சில்லாமல் உனக்குக் கீழ்ப்படிவார்கள்.+ ராஜாவான நான் மட்டும்தான் உன்னைவிட உயர்ந்தவனாக இருப்பேன்” என்று சொன்னான். 41 அதோடு, “நான் உன்னை எகிப்து தேசம் முழுவதற்கும் அதிகாரியாக நியமிக்கிறேன்”+ என்று சொன்னான். 42 பின்பு, அவனுடைய முத்திரை மோதிரத்தைக் கழற்றி யோசேப்பின் கையில் போட்டுவிட்டான். அவருக்கு விலை உயர்ந்த உடைகளை உடுத்தி, கழுத்தில் தங்கச் சங்கிலியைப் போட்டுவிட்டான். 43 அதுமட்டுமல்ல, அவரைத் தன்னுடைய இரண்டாம் ரதத்தில் ஊர்வலம் போக வைத்துக் கௌரவித்தான். அவருக்கு முன்னால், “அவ்ரேக்!”* என்று கத்திக்கொண்டே ஆட்கள் போனார்கள். இப்படி, பார்வோன் யோசேப்பை எகிப்து தேசம் முழுவதற்கும் அதிகாரியாக்கினான்.
44 அதுமட்டுமல்ல, அவன் யோசேப்பிடம், “பார்வோனாகிய நான் சொல்கிறேன், எகிப்து தேசம் முழுவதிலும் உன்னுடைய உத்தரவு இல்லாமல் யாரும் எதுவும் செய்ய முடியாது”+ என்றான். 45 அதன்பின், யோசேப்புக்கு சாப்நாத்-பன்னேயா என்று பெயர் வைத்தான். ஓன்* நகரத்துப் பூசாரியான போத்திபிராவின் மகள் ஆஸ்நாத்தை+ அவருக்குக் கல்யாணம் செய்து வைத்தான். பின்பு, எகிப்து தேசம் முழுவதையும் சுற்றிப் பார்க்க* யோசேப்பு புறப்பட்டார்.+ 46 எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு வேலை செய்ய ஆரம்பித்தபோது யோசேப்புக்கு 30 வயது.+
யோசேப்பு பார்வோனிடமிருந்து புறப்பட்டு எகிப்து தேசம் முழுவதையும் சுற்றிப் பார்த்தார். 47 வளமான ஏழு வருஷங்களின்போது அந்தத் தேசத்தில் அமோக விளைச்சல் கிடைத்தது. 48 அந்த ஏழு வருஷங்கள் முழுக்க எகிப்து தேசத்தில் விளைந்த உணவுப் பொருள்கள் எல்லாவற்றையும் அவர் சேகரித்து, நகரங்களில் இருந்த கிடங்குகளில் சேமித்து வந்தார். சுற்றியிருந்த வயல்களில் விளைந்த உணவுப் பொருள்களை எல்லா நகரத்திலும் சேமித்து வைத்தார். 49 கடற்கரை மணலைப் போல் தானியங்களை ஏராளமாகக் குவித்து வைத்துக்கொண்டே இருந்தார். கடைசியில், அளக்க முடியாத அளவுக்குத் தானியங்கள் குவிந்ததால் அவர்கள் அதை அளப்பதையே நிறுத்திவிட்டார்கள்.
50 பஞ்ச காலம் ஆரம்பிப்பதற்கு முன்பு யோசேப்புக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள்.+ அவர்களை ஓன்* நகரத்துப் பூசாரியான போத்திபிராவின் மகள் ஆஸ்நாத் பெற்றெடுத்தாள். 51 மூத்த மகன் பிறந்தபோது யோசேப்பு, “என்னுடைய எல்லா பிரச்சினைகளையும் என் அப்பாவின் குடும்பத்தையும் நான் மறக்கும்படி கடவுள் செய்தார்” என்று சொல்லி அவனுக்கு மனாசே*+ என்று பெயர் வைத்தார். 52 இரண்டாவது மகன் பிறந்தபோது, “நான் கஷ்டங்கள் அனுபவித்த இந்தத் தேசத்தில் கடவுள் என் வம்சத்தைத் தழைக்க வைத்தார்”+ என்று சொல்லி அவனுக்கு எப்பிராயீம்*+ என்று பெயர் வைத்தார்.
53 பின்பு, எகிப்து தேசத்தில் அமோக விளைச்சல் கிடைத்த ஏழு வருஷங்கள் முடிவுக்கு வந்தன.+ 54 யோசேப்பு சொன்னபடியே, ஏழு வருஷ பஞ்ச காலம் தொடங்கியது.+ எல்லா தேசத்திலும் பஞ்சம் பரவியது. ஆனால், எகிப்து தேசம் முழுக்க உணவுப் பொருள்கள் இருந்தன.+ 55 கடைசியில், எகிப்து தேசத்திலும் பஞ்சம் வாட்டியெடுத்தது. அப்போது, ஜனங்கள் உணவுப் பொருள்களைக் கேட்டு பார்வோனிடம் கெஞ்சிக் கதறினார்கள்.+ பார்வோன் அந்த ஜனங்களிடம், “யோசேப்பிடம் போங்கள், அவர் என்ன சொல்கிறாரோ அதன்படியே செய்யுங்கள்”+ என்றான். 56 உலகம் முழுவதும் பஞ்சம் வாட்டியது.+ எகிப்து தேசத்திலும் பஞ்சம் ஆட்டிப்படைத்ததால், யோசேப்பு அங்கிருந்த தானியக் கிடங்குகள் எல்லாவற்றையும் திறந்து எகிப்தியர்களுக்குத் தானியங்களை விற்க ஆரம்பித்தார்.+ 57 முழு உலகத்தையும் பஞ்சம் ஆட்டிப்படைத்ததால்+ யோசேப்பிடமிருந்து உணவுப் பொருள்களை வாங்க எல்லா தேசத்து ஜனங்களும் எகிப்துக்கு வந்தார்கள்.
42 எகிப்தில் தானியம் இருக்கிறது என்று யாக்கோபு கேள்விப்பட்டார்.+ அதனால் அவர் தன்னுடைய மகன்களிடம், “ஏன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறீர்கள்? 2 எகிப்தில் தானியம் கிடைக்கிறது என்று கேள்விப்பட்டேன். அங்கு போய் நமக்காகக் கொஞ்சம் தானியம் வாங்கி வாருங்கள். அப்போதுதான், நாம் பட்டினியால் சாக மாட்டோம்”+ என்று சொன்னார். 3 அவர் சொன்னபடியே, யோசேப்பின் 10 அண்ணன்களும்+ தானியம் வாங்க எகிப்துக்குப் போனார்கள். 4 யோசேப்பின் தம்பி பென்யமீனை அவர்களுடன் யாக்கோபு அனுப்பி வைக்கவில்லை.+ ஏனென்றால், அவனுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்று பயந்தார்.+
5 தானியம் வாங்குவதற்காகப் போன ஜனங்களுடன் இஸ்ரவேலின் மகன்களும் போனார்கள். ஏனென்றால், பஞ்சம் கானான் தேசத்திலும் பரவியிருந்தது.+ 6 யோசேப்பு எகிப்து தேசத்துக்கு அதிகாரியாக இருந்தார்.+ அவர்தான் உலகத்திலிருந்த எல்லா ஜனங்களுக்கும் தானியம் விற்றுவந்தார்.+ அதனால், யோசேப்பின் அண்ணன்கள் அவரிடம் வந்து அவர்முன் மண்டிபோட்டு தரைவரைக்கும் குனிந்து வணங்கினார்கள்.+ 7 யோசேப்பு தன்னுடைய அண்ணன்களைப் பார்த்ததுமே அடையாளம் கண்டுகொண்டார். ஆனால், தான் யார் என்று காட்டிக்கொள்ளவே இல்லை.+ அவர்களிடம், “எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கடுகடுப்பாகக் கேட்டார். அதற்கு அவர்கள், “தானியம் வாங்குவதற்காக கானான் தேசத்திலிருந்து வந்திருக்கிறோம்”+ என்று சொன்னார்கள்.
8 அவர்கள் யாரென்று யோசேப்புக்குத் தெரிந்துவிட்டது, ஆனால் யோசேப்பு யாரென்று அவர்களுக்குத் தெரியவில்லை. 9 அவர்களைப் பற்றிக் கனவு கண்டதை உடனே யோசேப்பு நினைத்துப் பார்த்தார்.+ பின்பு அவர்களிடம், “நீங்கள் உளவு பார்க்கிறவர்கள்! எந்தெந்த இடங்களைத் தாக்கினால் நாட்டைப் பிடித்துவிடலாம் என்று பார்க்க வந்திருக்கிறீர்கள்!” என்றார். 10 அதற்கு அவர்கள், “இல்லை எஜமானே! உங்கள் அடிமைகளாகிய நாங்கள் தானியம் வாங்க வந்திருக்கிறோம். 11 நாங்கள் எல்லாரும் அண்ணன் தம்பிகள், நேர்மையானவர்கள். உங்கள் அடிமைகளாகிய நாங்கள் உளவு பார்க்கிறவர்கள் அல்ல” என்றார்கள். 12 ஆனால் அவர், “பொய் சொல்கிறீர்கள்! எந்தெந்த இடங்களைத் தாக்கினால் நாட்டைப் பிடித்துவிடலாம் என்று பார்க்க வந்திருக்கிறீர்கள்!” என்றார். 13 அதற்கு அவர்கள், “எஜமானே, எங்களுடைய அப்பா கானான் தேசத்தில் வாழ்ந்துவருகிறார். அவருக்கு மொத்தம் 12 மகன்கள்.+ எங்களுடைய கடைசித் தம்பி இப்போது அப்பாவுடன் இருக்கிறான்.+ இன்னொருவன் உயிரோடு இல்லை”+ என்று சொன்னார்கள்.
14 ஆனால் யோசேப்பு, “இல்லை! நான் சொன்னதுபோல் நீங்கள் உளவு பார்க்கிறவர்கள்தான்! 15 நீங்கள் எந்தளவுக்கு உண்மை பேசுகிறீர்கள் என்று நான் தெரிந்துகொள்ள வேண்டும். அதனால், பார்வோனுடைய உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்,* உங்களுடைய கடைசித் தம்பி இங்கே வராவிட்டால் உங்களை இங்கிருந்து அனுப்ப மாட்டேன்.+ 16 நீங்கள் யாராவது போய் உங்களுடைய தம்பியைக் கூட்டிக்கொண்டு வாருங்கள். அதுவரை மற்ற எல்லாரும் இங்கே கைதிகளாக இருக்க வேண்டும். நீங்கள் எந்தளவுக்கு உண்மை பேசுகிறீர்கள் என்று அப்போது தெரிந்துவிடும். நான் சொன்னதை நீங்கள் செய்யவில்லை என்றால், பார்வோனுடைய உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன், நீங்கள் உளவு பார்க்கிறவர்கள்தான்” என்று சொன்னார். 17 பின்பு, மூன்று நாட்களுக்கு அவர்கள் எல்லாரையும் ஒன்றாகக் காவலில் வைத்தார்.
18 மூன்றாம் நாள் யோசேப்பு அவர்களிடம், “நான் தெய்வத்துக்குப் பயப்படுகிறவன். நான் சொல்கிறபடி செய்தால் உயிர்தப்புவீர்கள். 19 நீங்கள் நேர்மையானவர்கள் என்றால், உங்களில் ஒருவன் மட்டும் இந்தச் சிறையிலே கைதியாய் இருக்கட்டும். பஞ்சத்தில் தவிக்கிற குடும்பத்தாருக்காக மற்றவர்கள் தானியம் கொண்டுபோகலாம்.+ 20 அதன்பின் உங்களுடைய கடைசித் தம்பியை என்னிடம் கூட்டிக்கொண்டு வாருங்கள். அப்போதுதான், நீங்கள் சொன்னது உண்மை என்று நம்புவேன், உங்களை உயிரோடு விடுவேன்” என்று சொன்னார். அவர்களும் அதற்கு ஒத்துக்கொண்டார்கள்.
21 அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர், “நம் தம்பிக்கு நாம் செய்த துரோகத்துக்குத்தான் இந்தத் தண்டனையை அனுபவிக்கிறோம்.+ அவன் வேதனையில் துடித்ததை நாம் பார்த்தோம். கருணை காட்டச் சொல்லி அவன் எவ்வளவோ கெஞ்சினான். ஆனால், நாம் அதைக் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. அதனால்தான் இப்போது நமக்கு இந்தக் கஷ்டமெல்லாம் வந்திருக்கிறது” என்றார்கள். 22 அதற்கு ரூபன், “தம்பிக்கு விரோதமாக எந்தப் பாவமும் செய்யாதீர்கள் என்று அன்றைக்கே நான் சொன்னேன் இல்லையா? நீங்கள்தான் கேட்கவே இல்லை.+ இப்போது, அவனுடைய சாவுக்காக* நாம் பழிவாங்கப்படுகிறோம்”+ என்று சொன்னார். 23 அவர்கள் பேசியதை யோசேப்பு புரிந்துகொண்டார் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. ஏனென்றால், ஒரு மொழிபெயர்ப்பாளனை வைத்துதான் யோசேப்பு அவர்களோடு பேசினார். 24 யோசேப்பு அவர்களைவிட்டுத் தள்ளிப்போய்க் கண்ணீர்விட்டு அழுதார்.+ திரும்பி வந்து அவர்களிடம் மறுபடியும் பேசினார். பின்பு, அவர்களுடைய கண் முன்னாலேயே சிமியோனைப் பிடித்துக் கட்டிவைத்தார்.+ 25 அதன் பின்பு, அவர்களுடைய சாக்குப் பைகளில் தானியங்களை நிரப்பவும், அவரவர் பணத்தைத் திரும்ப அவரவர் சாக்குப் பையில் போட்டு வைக்கவும், பயணத்துக்குத் தேவையான உணவுப் பொருள்களைக் கொடுக்கவும் யோசேப்பு தன்னுடைய ஊழியர்களுக்குக் கட்டளை கொடுத்தார். அவர்கள் அப்படியே செய்தார்கள்.
26 யோசேப்பின் அண்ணன்கள் தங்களுடைய தானியப் பைகளைக் கழுதைகளின் மேல் ஏற்றி அங்கிருந்து புறப்பட்டுப் போனார்கள். 27 சத்திரத்தில், கழுதைக்குத் தீனிபோட அவர்களில் ஒருவன் தன்னுடைய சாக்குப் பையை அவிழ்த்தபோது அந்தப் பையில் தன்னுடைய பணம் இருப்பதைப் பார்த்தான். 28 உடனே தன்னுடைய சகோதரர்களிடம், “இங்கே பாருங்கள், என்னுடைய பணத்தை என் பையிலேயே திரும்பவும் போட்டிருக்கிறார்கள்!” என்று சொன்னான். அவர்களுக்குப் பகீர் என்றது. எல்லாரும் நடுநடுங்கிப்போய், “கடவுள் ஏன் நம்மை இப்படித் தண்டிக்கிறார்?” என்று ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்டார்கள்.
29 பின்பு, கானான் தேசத்தில் இருந்த தங்களுடைய அப்பா யாக்கோபிடம் வந்து, நடந்த எல்லா விஷயங்களையும் சொன்னார்கள். 30 “அந்த நாட்டின் அதிகாரி எங்களிடம் கடுகடுப்பாகப் பேசினார்,+ நாங்கள் உளவு பார்க்க வந்திருப்பதாகக் குற்றம்சாட்டினார். 31 அப்போது நாங்கள் அவரிடம், ‘நாங்கள் நேர்மையானவர்கள். உளவு பார்க்கிறவர்கள் அல்ல.+ 32 எங்கள் அப்பாவுக்கு மொத்தம் 12 மகன்கள்.+ ஒரு தம்பி உயிரோடு இல்லை,+ கடைசித் தம்பி இப்போது கானான் தேசத்தில் அப்பாவுடன் இருக்கிறான்’+ என்று சொன்னோம். 33 ஆனால் அவர் எங்களிடம், ‘நீங்கள் நேர்மையானவர்களா இல்லையா என்று நான் பார்க்க வேண்டும். அதனால், உங்களில் ஒருவனை மட்டும் என்னிடம் விட்டுவிட்டு,+ பஞ்சத்தில் இருக்கிற உங்கள் குடும்பத்தாருக்காகத் தானியம் கொண்டுபோங்கள்.+ 34 அதன்பின், உங்களுடைய கடைசித் தம்பியை என்னிடம் கூட்டிக்கொண்டு வாருங்கள். அப்போதுதான், நீங்கள் உளவு பார்ப்பவர்கள் அல்ல, நேர்மையானவர்கள் என்று நம்புவேன். உங்கள் சகோதரனையும் உங்களிடம் ஒப்படைப்பேன். பிறகு இந்தத் தேசத்தில் நீங்கள் வியாபாரம்கூட செய்யலாம்’ என்று சொன்னார்” என்றார்கள்.
35 அவர்கள் தங்களுடைய சாக்குப் பைகளை அவிழ்த்துக் கொட்டியபோது ஒவ்வொருவருடைய சாக்கிலும் பணப் பை இருந்தது. அவர்களும் அவர்களுடைய அப்பாவும் அந்தப் பணப் பைகளைப் பார்த்துப் பயந்துபோனார்கள். 36 அவர்களுடைய அப்பா யாக்கோபு அவர்களைப் பார்த்து, “உங்களால் என் பிள்ளைகள் எல்லாரையுமே பறிகொடுத்துவிடுவேன் போலிருக்கிறது!+ யோசேப்பு செத்துவிட்டான்,+ சிமியோனும் இல்லை,+ இப்போது பென்யமீனையும் கொண்டுபோகப் பார்க்கிறீர்கள். எல்லா கஷ்டங்களும் எனக்குத்தான் வந்துசேருகிறது!” என்று புலம்பினார். 37 அப்போது ரூபன், “அப்பா, அவனை என்னுடைய பொறுப்பில் விடுங்கள், நான் உங்களிடம் அவனைப் பத்திரமாகக் கொண்டுவந்து சேர்க்கிறேன்.+ அவனை நான் திரும்பவும் உங்களிடம் கொண்டுவந்து சேர்க்கவில்லை என்றால், என்னுடைய இரண்டு மகன்களைக் கொன்றுவிடுங்கள்”+ என்றார். 38 ஆனால் அவர், “என் மகனை நான் உங்களோடு அனுப்ப மாட்டேன். அவனுடைய அண்ணன் செத்துப்போய்விட்டான், இப்போது இவன் மட்டும்தான் இருக்கிறான்.+ போகும் வழியில் இவனுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிட்டால், அவ்வளவுதான்! இந்த வயதான காலத்தில், உங்களால் நான் துக்கத்தோடுதான்+ கல்லறைக்குள் போவேன்”+ என்றார்.
43 அந்தத் தேசத்தில் பஞ்சம் கடுமையாக இருந்தது.+ 2 எகிப்திலிருந்து வாங்கிவந்த தானியம் தீர்ந்துபோனபோது,+ அவர்களுடைய அப்பா அவர்களிடம், “மறுபடியும் போய், நமக்குக் கொஞ்சம் தானியம் வாங்கிக்கொண்டு வாருங்கள்” என்றார். 3 அப்போது யூதா அவரிடம், “‘உங்களுடைய தம்பியைக் கூட்டிக்கொண்டு வரவில்லை என்றால் என் முகத்திலேயே முழிக்க வேண்டாம்’ என்று அந்த மனுஷர் எங்களைக் கடுமையாக எச்சரித்திருக்கிறார்.+ 4 தம்பியை நீங்கள் எங்களுடன் அனுப்பி வைத்தால்தான் நாங்கள் போய் தானியம் வாங்கிக்கொண்டு வருவோம். 5 இல்லையென்றால் நாங்கள் போக மாட்டோம். ஏனென்றால், ‘உங்களுடைய தம்பியைக் கூட்டிக்கொண்டு வராவிட்டால் என் முகத்திலேயே முழிக்க வேண்டாம்’ என்று அந்த மனுஷர் எங்களிடம் சொல்லியிருக்கிறார்”+ என்றார். 6 அப்போது இஸ்ரவேல்+ அவர்களிடம், “உங்களுக்கு இன்னொரு தம்பி இருக்கிறான் என்று அவரிடம் எதற்காகச் சொன்னீர்கள்? ஏன் எனக்கு இவ்வளவு பெரிய பிரச்சினையைக் கொண்டுவந்தீர்கள்?” என்று கோபமாகக் கேட்டார். 7 அதற்கு அவர்கள், “எங்களைப் பற்றி அவர் நேரடியாகக் கேட்டார். நம் குடும்பத்தில் வேறு யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று விசாரித்தார். ‘உங்களுக்கு அப்பா இருக்கிறாரா? இன்னொரு தம்பி இருக்கிறானா?’ என்றெல்லாம் கேட்டார். அதனால்தான் நாங்கள் இதையெல்லாம் சொன்னோம்.+ தம்பியைக் கூட்டிக்கொண்டு வரச் சொல்வாரென்று எங்களுக்கு எப்படித் தெரியும்?”+ என்றார்கள்.
8 அப்போது, யூதா தன்னுடைய அப்பா இஸ்ரவேலிடம், “நீங்களும் நாங்களும் எங்கள் பிள்ளைகுட்டிகளும்+ சாகாமல் உயிரோடிருக்க வேண்டுமென்றால்,+ அவனை என்னோடு அனுப்பி வையுங்கள்.+ நாங்கள் போகிறோம். 9 அவனுடைய உயிருக்கு நான் உத்தரவாதம் தருகிறேன்.+ அவனுக்கு ஏதாவது ஆகிவிட்டால் அதற்கு நான் பொறுப்பு. நான் அவனைக் கூட்டிக்கொண்டு வந்து உங்கள்முன் நிறுத்தாவிட்டால், நான் சாகும்வரைக்கும் அந்தப் பழி என் தலைமேல் இருக்கட்டும். 10 நீங்கள் எங்களை முன்பே போக விட்டிருந்தால், இந்நேரத்துக்குள் இரண்டு தடவை போய்விட்டு வந்திருப்போம்” என்று சொன்னார்.
11 அதற்கு அவர்களுடைய அப்பா இஸ்ரவேல், “அப்படியென்றால் ஒன்று செய்யுங்கள். இந்தத் தேசத்திலுள்ள சிறந்த பொருள்களை உங்களுடைய பைகளில் எடுத்துக்கொண்டுபோய் அவருக்கு அன்பளிப்பாகக் கொடுங்கள்.+ கொஞ்சம் பரிமளத் தைலத்தையும்,+ கொஞ்சம் தேனையும், மலைரோஜா பிசினையும், பிசின் பட்டையையும்,+ பாதாமையும், பிஸ்தாவையும் கொண்டுபோய்க் கொடுங்கள். 12 இரண்டு மடங்கு பணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் பைகளில் திருப்பி அனுப்பப்பட்ட பணத்தையும்+ எடுத்துக்கொள்ளுங்கள். அதை ஒருவேளை அவர்கள் தவறுதலாக வைத்திருக்கலாம். 13 உங்கள் தம்பியைக் கூட்டிக்கொண்டு அந்த மனுஷரிடம் போங்கள். 14 சர்வவல்லமையுள்ள கடவுள் உங்களுக்கு அந்த மனுஷருடைய இரக்கம் கிடைக்கும்படி செய்யட்டும். உங்களுடைய இன்னொரு சகோதரனை அவர் விடுதலை செய்து, அவனையும் பென்யமீனையும் உங்களோடு அனுப்பி வைக்கட்டும். ஒருவேளை நான் என் பிள்ளைகளைப் பறிகொடுக்க வேண்டுமென்றால் பறிகொடுத்துதான் ஆக வேண்டும்!”+ என்றார்.
15 அவர்கள் அந்த அன்பளிப்புகளையும் இரண்டு மடங்கு பணத்தையும் எடுத்துக்கொண்டு பென்யமீனோடு எகிப்துக்குப் புறப்பட்டுப் போய், மறுபடியும் யோசேப்பின் முன்னால் நின்றார்கள்.+ 16 யோசேப்பு பென்யமீனைப் பார்த்தவுடன், தன்னுடைய வீட்டு நிர்வாகியிடம், “இவர்களை வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போ. மத்தியானம் இவர்கள் என்னோடு சாப்பிடுவார்கள். அதனால், ஆடுமாடுகளை அடித்து விருந்துக்கு ஏற்பாடு செய்” என்று சொன்னார். 17 உடனே அந்த நிர்வாகி, யோசேப்பு சொன்னபடி அவர்களை அவருடைய வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போனார்.+ 18 யோசேப்பின் வீட்டுக்குக் கொண்டுபோகப்பட்டதால் அவர்கள் பயந்துபோய், “போன தடவை நம்முடைய பைகளில் பணம் இருந்ததென்று சொல்லி இப்போது அவர்கள் நம்மை அடித்து உதைத்து அடிமைகளாக்கிவிடுவார்கள். நம்முடைய கழுதைகளையும் பிடுங்கிக்கொள்வார்கள்!”+ என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள்.
19 அதனால், யோசேப்பின் வீட்டு வாசலில் நின்றபடி அவர்கள் அந்த நிர்வாகியிடம், 20 “எஜமானே! தானியம் வாங்க முன்பு ஒருமுறை நாங்கள் இங்கே வந்திருந்தோம்.+ 21 திரும்பிப்போகும் வழியில் ஒரு சத்திரத்திலே எங்களுடைய பைகளைத் திறந்து பார்த்தபோது, அவரவர் பையில் அவரவர் பணம் அப்படியே இருந்தது.+ அதை எங்கள் கையாலேயே உங்களிடம் திருப்பிக் கொடுக்க விரும்புகிறோம். 22 தானியம் வாங்க இன்னும் நிறைய பணம் கொண்டுவந்திருக்கிறோம். யார் எங்களுடைய பையில் பணத்தைத் திருப்பி வைத்தார்கள் என்று எங்களுக்குத் தெரியாது”+ என்று சொன்னார்கள். 23 அதற்கு அவர், “பரவாயில்லை, பயப்படாதீர்கள்! உங்கள் முன்னோர்களுக்கும் உங்களுக்கும் கடவுளாக இருப்பவர்தான் உங்களுடைய பைகளில் இந்தப் பணத்தை வைத்திருப்பார். நீங்கள் கொடுத்த பணம் எனக்கு ஏற்கெனவே கிடைத்துவிட்டது” என்றார். அதன்பின், சிமியோனை அவர்களிடம் கூட்டிக்கொண்டு வந்தார்.+
24 பிறகு, அந்த நிர்வாகி அவர்களை யோசேப்பின் வீட்டுக்குள் கூட்டிக்கொண்டுபோய், பாதங்களைக் கழுவ தண்ணீர் தந்தார். அவர்களுடைய கழுதைகளுக்குத் தீவனமும் தந்தார். 25 அவர்கள் யோசேப்புக்காக அன்பளிப்புகளை+ எடுத்துத் தயாராக வைத்தார்கள். ஏனென்றால், அவர்களோடு சாப்பிடுவதற்கு அவர் மத்தியானம் வரப்போகிறார் என்று கேள்விப்பட்டார்கள்.+ 26 யோசேப்பு வீட்டுக்குள் வந்தபோது, அவருக்கு அன்பளிப்புகளைக் கொண்டுவந்து கொடுத்து, அவர்முன் சாஷ்டாங்கமாக விழுந்தார்கள்.+ 27 அவர் அவர்களிடம் நலம் விசாரித்தார். அதன்பின், “உங்களுக்கு வயதான அப்பா இருப்பதாகச் சொல்லியிருந்தீர்களே, அவர் நன்றாக இருக்கிறாரா?”+ என்று கேட்டார். 28 அதற்கு அவர்கள், “உங்கள் அடிமையாகிய எங்கள் அப்பா நன்றாக இருக்கிறார்” என்று சொன்னார்கள். பின்பு, அவர்முன் சாஷ்டாங்கமாக விழுந்தார்கள்.+
29 அவர் தன்னுடைய கூடப்பிறந்த தம்பி பென்யமீனைப்+ பார்த்தபோது, “நீங்கள் சொன்ன கடைசித் தம்பி இவன்தானா?”+ என்று கேட்டார். பின்பு, “என் மகனே, கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும்” என்றார். 30 தம்பியைப் பார்த்த பின்பு யோசேப்பினால் அழுகையை அடக்கவே முடியவில்லை. அதனால், வேகமாக ஓர் அறைக்குள் போய் அங்கே கண்ணீர்விட்டு அழுதார்.+ 31 அதன்பின் தன்னுடைய உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக்கொண்டு, தன்னுடைய முகத்தைக் கழுவினார். பிறகு வெளியே வந்து தன்னுடைய வேலைக்காரர்களிடம், “உணவு பரிமாறுங்கள்” என்று சொன்னார். 32 அவர்கள் யோசேப்புக்குத் தனியாகவும், அவருடைய சகோதரர்களுக்குத் தனியாகவும், அங்கிருந்த எகிப்தியர்களுக்குத் தனியாகவும் பரிமாறினார்கள். ஏனென்றால், எபிரெயர்களுடன் உணவு சாப்பிடுவதை எகிப்தியர்கள் அருவருப்பாக நினைத்தார்கள்.+
33 யோசேப்பின் சகோதரர்கள் அவர்முன் உட்கார வைக்கப்பட்டார்கள். அவர்களில் மூத்தவன் மூத்த மகனின் உரிமைப்படி+ முதலாவதாகவும், மற்றவர்கள் அவரவர் வயதின்படி வரிசையாகவும் உட்கார வைக்கப்பட்டார்கள். அப்போது, அவர்கள் ஒருவரை ஒருவர் ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டார்கள். 34 அவர் தன்னுடைய மேஜையிலிருந்து உணவு வகைகளை அவர்களுக்கு அனுப்பிக்கொண்டே இருந்தார். மற்ற எல்லாரையும்விட பென்யமீனுக்கு ஐந்து பங்கு அதிகமாக அனுப்பினார்.+ அவர்கள் திருப்தியாகச் சாப்பிட்டார்கள், குடித்தார்கள்.
44 பின்பு யோசேப்பு தன்னுடைய வீட்டு நிர்வாகியிடம், “அந்த மனுஷர்களால் எவ்வளவு கொண்டுபோக முடியுமோ அவ்வளவு தானியத்தை அவரவர் பைகளில் நிரப்பு. அதற்கு மேலாக அவரவர் பணத்தைப் போட்டுவிடு.+ 2 ஆனால், சின்னவனுடைய பையில் மட்டும் தானியத்துக்காக அவன் கொடுத்த பணத்தோடு சேர்த்து என்னுடைய வெள்ளிக் கோப்பையையும் போட்டுவிடு” என்று சொன்னார். அந்த நிர்வாகியும் அப்படியே செய்தார்.
3 பொழுது விடிந்தவுடன், அவர்கள் தங்களுடைய கழுதைகளோடு அனுப்பி வைக்கப்பட்டார்கள். 4 அவர்கள் அந்த நகரத்தைவிட்டுக் கொஞ்ச தூரம்தான் போயிருப்பார்கள். அப்போது யோசேப்பு அந்த நிர்வாகியிடம், “சீக்கிரம்! அவர்களைத் துரத்திப் பிடித்து, ‘நாங்கள் நல்லது செய்ததுக்கு இப்படியா எங்களுக்குக் கெடுதல் செய்வது? 5 எங்களுடைய எஜமான் குடிப்பதற்கும் குறிபார்ப்பதற்கும் வைத்திருக்கிற கோப்பையை ஏன் எடுத்துக்கொண்டு வந்தீர்கள்? பெரிய மோசடி செய்திருக்கிறீர்கள்!’ என்று சொல்” என்றார்.
6 அந்த நிர்வாகி அவர்களைத் துரத்திப் பிடித்து, யோசேப்பு சொன்னபடியே அவர்களிடம் சொன்னார். 7 அதற்கு அவர்கள், “எங்கள் எஜமான் இப்படிப் பேசலாமா? உங்கள் அடிமைகளாகிய நாங்கள் இப்படியொரு காரியத்தைச் செய்வோமா? 8 எங்கள் பைகளில் இருந்த பணத்தைக்கூட கானான் தேசத்திலிருந்து திரும்பக் கொண்டுவந்து தந்தோமே!+ அப்படியிருக்கும்போது, உங்கள் எஜமானுடைய வீட்டிலிருந்து வெள்ளியையோ தங்கத்தையோ திருடிக்கொண்டு வருவோமா? 9 எங்கள் யாரிடமாவது அது இருந்தால் அவனைக் கொன்றுவிடுங்கள். மற்றவர்களும் உங்கள் எஜமானுக்கு அடிமைகளாக ஆகிவிடுகிறோம்” என்று சொன்னார்கள். 10 அதற்கு அவர், “நீங்கள் சொன்னபடியே செய்யலாம். யாரிடம் அது இருக்கிறதோ அவன் எனக்கு அடிமையாவான். மற்ற எல்லாரும் நிரபராதிகள்” என்று சொன்னார். 11 உடனே எல்லாரும் அவரவர் பைகளைத் தரையில் இறக்கி வைத்து அதை அவிழ்த்தார்கள். 12 மூத்தவன் தொடங்கி சின்னவன் வரைக்கும், ஒவ்வொருவருடைய பையையும் அவர் கவனமாகத் தேடினார். கடைசியில், அந்தக் கோப்பை பென்யமீனின் பையில் கண்டுபிடிக்கப்பட்டது.+
13 அப்போது, அவர்கள் தங்களுடைய உடையைக் கிழித்துக்கொண்டு, தங்கள் பைகளை மறுபடியும் கழுதைகள்மேல் ஏற்றி நகரத்துக்குத் திரும்பி வந்தார்கள். 14 யூதாவும்+ அவருடைய சகோதரர்களும் யோசேப்பின் வீட்டுக்குள் போனார்கள். அதுவரை யோசேப்பு அங்கேதான் இருந்தார். அவர்கள் அவர்முன் சாஷ்டாங்கமாக விழுந்தார்கள்.+ 15 யோசேப்பு அவர்களைப் பார்த்து, “ஏன் இப்படிச் செய்தீர்கள்? நான் எல்லாவற்றையும் குறிபார்த்துக்+ கண்டுபிடித்துவிடுவேன் என்று உங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டார். 16 அதற்கு யூதா, “எங்கள் எஜமானே, உங்களிடம் என்ன சொல்வோம்? என்ன பேசுவோம்? நாங்கள் நிரபராதிகள்* என்று எப்படி நிரூபிப்போம்? உங்கள் அடிமைகளாகிய நாங்கள் முன்பு தப்பு செய்ததால் இப்போது உண்மைக் கடவுள் எங்களைத் தண்டிக்கிறார்.+ இதோ, நாங்களும் இந்தக் கோப்பையை வைத்திருந்தவனும் உங்களுக்கு அடிமைகள்!” என்றார். 17 ஆனால் அவர், “உங்கள் எல்லாரையும் நான் அடிமையாக்க மாட்டேன். யாருடைய பையில் இந்தக் கோப்பை இருந்ததோ அவன் மட்டும்தான் எனக்கு அடிமையாக இருப்பான்.+ மற்றவர்கள் உங்களுடைய அப்பாவிடம் சமாதானத்தோடு திரும்பிப் போகலாம்” என்று சொன்னார்.
18 அப்போது யூதா அவருக்குப் பக்கத்தில் போய், “என் எஜமானே, உங்களிடம் கெஞ்சிக் கேட்கிறேன், அடியேன் பேசுவதைக் கொஞ்சம் கேளுங்கள். இந்த அடிமைமேல் கோபப்படாதீர்கள். நீங்கள் பார்வோனுக்குச் சமமானவர்.+ 19 எஜமானாகிய நீங்கள் இந்த அடிமைகளிடம், ‘உங்களுக்கு அப்பா இருக்கிறாரா, இன்னொரு சகோதரன் இருக்கிறானா?’ என்று கேட்டீர்கள். 20 அதற்கு நாங்கள், ‘ஆமாம், ரொம்பவே வயதாகிவிட்ட அப்பாவும், வயதான காலத்தில் அவருக்குக் கடைசியாகப் பிறந்த ஒரு மகனும் இருக்கிறார்கள்.+ அவனுடைய அண்ணன் இறந்துவிட்டான்.+ அவனுடைய அம்மாவுக்குப் பிறந்தவர்களில் இப்போது அவன் மட்டும்தான் உயிரோடு இருக்கிறான்.+ அதனால், எங்கள் அப்பா அவன்மேல் உயிரையே வைத்திருக்கிறார்’ என்று சொன்னோம். 21 அதற்கு நீங்கள் இந்த அடிமைகளிடம், ‘அவனை நான் பார்க்க வேண்டும், என்னிடம் கூட்டிக்கொண்டு வாருங்கள்’ என்று சொன்னீர்கள்.+ 22 ஆனால் நாங்கள் எஜமானாகிய உங்களிடம், ‘அவன் எங்கள் அப்பாவைவிட்டு வர முடியாது. அப்படி வந்தால், அவர் நிச்சயம் செத்துப்போய்விடுவார்’+ என்று சொன்னோம். 23 அப்போது நீங்கள் இந்த அடிமைகளிடம், ‘உங்கள் தம்பியைக் கூட்டிக்கொண்டு வராவிட்டால் என் முகத்திலேயே முழிக்க வேண்டாம்’ என்று சொன்னீர்கள்.+
24 அதனால், உங்களுடைய அடிமையாகிய எங்கள் அப்பாவிடம் போய், எஜமானாகிய நீங்கள் சொன்னதையெல்லாம் சொன்னோம். 25 பின்பு எங்களுடைய அப்பா எங்களிடம், ‘மறுபடியும் போய், நமக்குக் கொஞ்சம் தானியம் வாங்கிக்கொண்டு வாருங்கள்’ என்றார்.+ 26 அப்போது நாங்கள், ‘எங்களால் போக முடியாது. கடைசித் தம்பி எங்களுடன் வந்தால்தான் போவோம். அவன் எங்களோடு வராவிட்டால் எங்களால் அவருடைய முகத்தில் முழிக்க முடியாது’ என்று சொன்னோம்.+ 27 அப்போது உங்களுடைய அடிமையாகிய எங்கள் அப்பா எங்களிடம், ‘உங்களுக்கே தெரியும், என் மனைவி எனக்கு இரண்டு மகன்களைப் பெற்றுக் கொடுத்தாள்.+ 28 ஆனால், அவர்களில் ஒருவன் என்னைவிட்டுப் போய்விட்டான். அவனை ஏதோவொரு காட்டு மிருகம் கடித்துக் குதறியிருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.+ இதுவரைக்கும் நான் அவனைப் பார்க்கவில்லை. 29 இவனையும் நீங்கள் என்னிடமிருந்து கூட்டிக்கொண்டு போய், வழியில் இவனுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிட்டால், அவ்வளவுதான்! இந்த வயதான காலத்தில், உங்களால் நான் மிகுந்த துக்கத்தோடுதான்+ கல்லறைக்குள்+ போவேன்’ என்றார்.
30 உங்கள் அடிமையாகிய எங்கள் அப்பா இவனை உயிருக்கு உயிராக நேசிக்கிறார். அதனால், இவன் இல்லாமல் நான் திரும்பிப் போனால், 31 உடனே அவருடைய உயிர் போய்விடும். இந்த வயதான காலத்தில் எங்கள் அப்பா எங்களால் துக்கத்தோடுதான் கல்லறைக்குள் போவார். 32 உங்கள் அடிமையாகிய நான் என்னுடைய அப்பாவிடம் இவனுக்காக உத்தரவாதம் கொடுத்திருக்கிறேன். ‘இவனைத் திரும்பவும் கூட்டிக்கொண்டுவந்து உங்கள்முன் நிறுத்தாவிட்டால், சாகும்வரைக்கும் அந்தப் பழி என் தலைமேல் இருக்கட்டும்’ என்று சொல்லியிருக்கிறேன்.+ 33 அதனால் என் எஜமானே, தயவுசெய்து இவனுக்குப் பதிலாக என்னை உங்கள் அடிமையாக வைத்துக்கொள்ளுங்கள். இவனை மற்ற சகோதரர்களுடன் அனுப்பி வையுங்கள். 34 இவன் இல்லாமல் நான் எப்படி என் அப்பாவிடம் திரும்பிப் போவேன்? என் அப்பா துக்கத்தோடு செத்துப்போவதை என்னால் பார்க்க முடியாது!” என்று சொன்னார்.
45 யோசேப்பினால் அதற்கு மேலும் தன்னை அடக்கிக்கொள்ள முடியவில்லை. அதனால் அங்கிருந்த தன் ஊழியர்களிடம், “எல்லாரும் இங்கிருந்து வெளியே போங்கள்!”+ என்று சத்தமாகச் சொன்னார். தான் யாரென்று தன் சகோதரர்களுக்கு அவர் வெளிப்படுத்தியபோது யாருமே அவருடன் இல்லை.+
2 அவர் சத்தமாக அழுதார். அதை எகிப்தியர்களும் பார்வோனின் அரண்மனையில் இருந்தவர்களும் கேட்டார்கள். 3 கடைசியில் யோசேப்பு தன்னுடைய சகோதரர்களிடம், “நான்தான் யோசேப்பு. அப்பா நன்றாக இருக்கிறாரா?” என்று கேட்டார். அதிர்ச்சியில் அவர்களால் எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை. 4 அதனால் யோசேப்பு அவர்களிடம், “தயவுசெய்து என் பக்கத்தில் வாருங்கள்” என்று கூப்பிட்டார். அவர்கள் அவருக்குப் பக்கத்தில் போனார்கள்.
பின்பு அவர், “நான்தான் உங்கள் சகோதரன் யோசேப்பு, எகிப்தியர்களிடம் நீங்கள் விற்றுப்போட்ட அதே யோசேப்புதான்.+ 5 என்னை விற்றதற்காக நீங்கள் வருத்தப்பட வேண்டாம், ஒருவர்மேல் ஒருவர் பழிபோட வேண்டாம். உங்கள் உயிரைக் காப்பாற்றத்தான் கடவுள் என்னை உங்களுக்கு முன்னால் இங்கே அனுப்பியிருக்கிறார்.+ 6 தேசத்தில் பஞ்சம் ஆரம்பித்து இப்போதுதான் இரண்டு வருஷம் ஆகியிருக்கிறது.+ இன்னும் ஐந்து வருஷத்துக்கு எதையும் விதைக்கவும் முடியாது, அறுக்கவும் முடியாது. 7 உங்களையும் உங்களுடைய வம்சத்தையும்*+ அற்புதமாக விடுவிப்பதற்குத்தான் கடவுள் என்னை உங்களுக்கு முன்னால் அனுப்பியிருக்கிறார். 8 அதனால், என்னை இங்கு அனுப்பியது நீங்கள் அல்ல. உண்மைக் கடவுள்தான் என்னை அனுப்பியிருக்கிறார். பார்வோனுடைய முக்கிய ஆலோசகராக* இருந்து, அவருடைய வீட்டையும் நாட்டையும் கவனித்துக்கொள்கிற முழு பொறுப்பைக் கடவுள் எனக்குக் கொடுத்திருக்கிறார்.+
9 நீங்கள் சீக்கிரமாக அப்பாவிடம் போய் இப்படிச் சொல்லுங்கள்: ‘உங்கள் மகன் யோசேப்பு உங்களுக்கு இந்தச் செய்தியை அனுப்பியிருக்கிறான்: “கடவுள் என்னை எகிப்து தேசம் முழுவதற்கும் ஆளுநராக நியமித்திருக்கிறார்.+ உடனே புறப்பட்டு வாருங்கள். நேரம் கடத்தாதீர்கள்.+ 10 நீங்களும் உங்கள் மகன்களும் பேரன்களும், ஆடுமாடுகளோடும் மற்ற எல்லாவற்றோடும் எனக்குப் பக்கத்திலேயே கோசேன் பிரதேசத்தில் குடியிருக்கலாம்.+ 11 அங்கு நான் உங்களுக்கு உணவு தருவேன். ஏனென்றால், இன்னும் ஐந்து வருஷத்துக்குப் பஞ்சம் இருக்கும்.+ நீங்கள் வராவிட்டால், நீங்களும் உங்களுடைய வீட்டில் இருக்கிற எல்லாரும் வறுமையில் வாடுவீர்கள், எல்லாவற்றையும் இழந்துவிடுவீர்கள்.” ’ இதை நான் சொன்னதாகச் சொல்லுங்கள். 12 உங்களிடம் பேசுவது நான்தான் என்பதை நீங்களும் என் தம்பி பென்யமீனும் கண்கூடாகப் பார்க்கிறீர்களே.+ 13 அதனால், எகிப்தில் எனக்கு இருக்கிற பேரையும் புகழையும், நீங்கள் பார்த்த எல்லாவற்றையும் அப்பாவிடம் சொல்லுங்கள். சீக்கிரமாகப் போய் அப்பாவைக் கூட்டிக்கொண்டு வாருங்கள்” என்று சொன்னார்.
14 பின்பு, அவர் தன்னுடைய தம்பி பென்யமீனைக் கட்டிப்பிடித்து அழுதார். பென்யமீனும் அவருடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதார்.+ 15 யோசேப்பு தன்னுடைய அண்ணன்கள் எல்லாருக்கும் முத்தம் கொடுத்துவிட்டு அழுதார். அதன்பின், அவர்கள் அவரோடு பேசினார்கள்.
16 “யோசேப்பின் சகோதரர்கள் வந்திருக்கிறார்கள்!” என்ற செய்தி பார்வோனின் அரண்மனையை எட்டியது. பார்வோனும் அவருடைய ஊழியர்களும் அதைக் கேட்டு சந்தோஷப்பட்டார்கள். 17 பின்பு பார்வோன் யோசேப்பிடம், “உன்னுடைய சகோதரர்களிடம் இப்படிச் சொல்: ‘எல்லாவற்றையும் கழுதைகள்மேல் ஏற்றிக்கொண்டு கானான் தேசத்துக்குப் போங்கள். 18 அப்பாவையும் வீட்டிலுள்ள எல்லாரையும் கூட்டிக்கொண்டு வாருங்கள். எகிப்தில் இருக்கிற நல்ல நல்ல பொருள்களை நான் உங்களுக்குத் தருவேன். இங்கு விளைகிற அருமையான உணவை நீங்கள் சாப்பிடலாம்.’+ 19 அதோடு நீ அவர்களிடம்,+ ‘உங்கள் பிள்ளைகளையும் மனைவிகளையும் கூட்டிக்கொண்டு வருவதற்காக எகிப்து தேசத்திலிருந்து மாட்டு வண்டிகளைக்+ கொண்டுபோங்கள். அப்பாவையும் ஒரு வண்டியில் ஏற்றிக்கொண்டு வாருங்கள்.+ 20 நீங்கள் சேர்த்து வைத்திருக்கிற பொருள்களைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்.+ எகிப்து தேசத்தில் இருக்கிற சிறந்த பொருள்களை எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று சொல். இது என் கட்டளை” என்றார்.
21 இஸ்ரவேலின் மகன்கள் அப்படியே செய்தார்கள். பார்வோனுடைய ஆணைப்படி யோசேப்பு அவர்களுக்கு மாட்டு வண்டிகளையும் பயணத்துக்குத் தேவையான உணவுப் பொருள்களையும் தந்தார். 22 அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு புதிய உடையைத் தந்தார். பென்யமீனுக்கு மட்டும் 300 வெள்ளிக் காசுகளும் ஐந்து புதிய உடைகளும் தந்தார்.+ 23 அதோடு, தன்னுடைய அப்பாவுக்காக எகிப்திலிருந்த மிகச் சிறந்த பொருள்களை 10 ஆண் கழுதைகள்மேல் அனுப்பி வைத்தார். அவருடைய பயணத்துக்குத் தேவையான தானியங்களையும் ரொட்டிகளையும் மற்ற உணவுப் பொருள்களையும் 10 பெட்டைக் கழுதைகள்மேல் அனுப்பி வைத்தார். 24 அதேசமயம், “வழியில் சண்டை போட்டுக்கொள்ளாதீர்கள்” என்று தன்னுடைய சகோதரர்களிடம் சொல்லி அனுப்பினார்.+
25 அவர்கள் எகிப்து தேசத்திலிருந்து கிளம்பி கானான் தேசத்திலிருந்த தங்களுடைய அப்பா யாக்கோபிடம் வந்துசேர்ந்தார்கள். 26 அவர்கள் அவரிடம், “யோசேப்பு இன்னும் உயிரோடு இருக்கிறான்! எகிப்து தேசம் முழுவதையும் அவன்தான் ஆளுகிறான்!”+ என்றார்கள். அவர் அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார். அவர்கள் சொன்னதை அவரால் நம்பவே முடியவில்லை.+ 27 ஆனால், யோசேப்பு சொல்லி அனுப்பியதைக் கேட்டபோதும், தன்னைக் கூட்டிக்கொண்டுவர யோசேப்பு அனுப்பிய மாட்டு வண்டிகளைப் பார்த்தபோதும் உற்சாகம் அடைந்தார். 28 பின்பு இஸ்ரவேல், “இப்போது நான் நம்புகிறேன்! என்னுடைய மகன் யோசேப்பு இன்னும் உயிரோடுதான் இருக்கிறான்! நான் சாவதற்கு முன்னால் அவனைப் போய்ப் பார்க்க வேண்டும்!” என்று சொன்னார்.+
46 இஸ்ரவேல் தன்னிடமிருந்த எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு* புறப்பட்டார். அவர் பெயெர்-செபாவுக்கு+ வந்துசேர்ந்தபோது தன்னுடைய அப்பா ஈசாக்குடைய கடவுளுக்குப்+ பலிகளைச் செலுத்தினார். 2 அன்றைக்கு ராத்திரி கடவுள் ஒரு தரிசனத்தில், “யாக்கோபே, யாக்கோபே!” என்று கூப்பிட்டார். அதற்கு யாக்கோபு, “சொல்லுங்கள், எஜமானே!” என்றார். 3 அப்போது அவர், “நான்தான் உண்மைக் கடவுள், நான்தான் உன்னுடைய அப்பாவின் கடவுள்.+ எகிப்துக்குப் போக நீ பயப்படாதே. ஏனென்றால், அங்கே நான் உன்னை மாபெரும் தேசமாக்குவேன்.+ 4 நான் உன்னோடு எகிப்துக்கு வருவேன். உன்னை மறுபடியும் அங்கிருந்து கூட்டிக்கொண்டு வருவேன்.+ நீ சாகும்போது யோசேப்பு உன் கண்களை மூடுவான்”+ என்றார்.
5 அதன்பின் யாக்கோபு பெயெர்-செபாவிலிருந்து புறப்பட்டார். அவருடைய மகன்கள் அவரையும் தங்களுடைய பிள்ளைகளையும் மனைவிகளையும் பார்வோன் அனுப்பியிருந்த மாட்டு வண்டிகளில் ஏற்றினார்கள். 6 கானான் தேசத்தில் தாங்கள் சேர்த்திருந்த பொருள்களையும் மந்தைகளையும் கொண்டுபோனார்கள். இப்படி, யாக்கோபு குடும்பமாக எகிப்துக்கு வந்துசேர்ந்தார். 7 அவர் தன்னுடைய மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள் எல்லாரோடும் எகிப்துக்கு வந்துசேர்ந்தார்.
8 எகிப்துக்கு வந்துசேர்ந்த இஸ்ரவேலின், அதாவது யாக்கோபின், மகன்கள்+ இவர்கள்தான்: யாக்கோபின் மூத்த மகன் ரூபன்.+
9 ரூபனின் மகன்கள்: ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ.+
10 சிமியோனின்+ மகன்கள்: எமுவேல், யாமின், ஓகாத், யாகீன், சோகார், கானானியப் பெண்ணின் மகன் சாவூல்.+
11 லேவியின்+ மகன்கள்: கெர்சோன், கோகாத், மெராரி.+
12 யூதாவின்+ மகன்கள்: ஏர், ஓனேன், சேலா,+ பாரேஸ்,+ சேராகு.+ ஏரும் ஓனேனும் கானான் தேசத்தில் இறந்துபோனார்கள்.+
பாரேசின் மகன்கள்: எஸ்ரோன், ஆமூல்.+
13 இசக்காரின் மகன்கள்: தோலா, புவா, யோபு, சிம்ரோன்.+
14 செபுலோனின்+ மகன்கள்: சேரேத், ஏலோன், யாலேயேல்.+
15 இவர்கள்தான் பதான்-அராமில் லேயாள் யாக்கோபுக்குப் பெற்றெடுத்த மகன்கள். தீனாள்+ என்ற மகளையும் அங்கே அவள் பெற்றெடுத்தாள். யாக்கோபின் மகன்களும் மகள்களும் மொத்தம் 33 பேர்.
16 காத்தின்+ மகன்கள்: சிப்பியோன், ஹகி, சூனி, இஸ்போன், ஏரி, ஆரோதி, அரேலி.+
17 ஆசேரின்+ மகன்கள்: இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா. இவர்களுடைய சகோதரி சேராள்.
பெரீயாவின் மகன்கள்: ஹேபெர், மல்கியேல்.+
18 லாபான் தன் மகள் லேயாளுக்குக் கொடுத்த வேலைக்காரியான சில்பாள்+ பெற்ற மகன்கள் இவர்கள்தான். இவள் வழிவந்த யாக்கோபின் வம்சத்தார் மொத்தம் 16 பேர்.
19 யாக்கோபின் மனைவி ராகேல் பெற்றெடுத்த மகன்கள்: யோசேப்பு,+ பென்யமீன்.+
20 யோசேப்புக்கு எகிப்து தேசத்தில் பிறந்த மகன்கள்: மனாசே,+ எப்பிராயீம்.+ இவர்களை ஓன்* நகரத்துப் பூசாரியான போத்திபிராவின் மகள் ஆஸ்நாத்+ பெற்றெடுத்தாள்.
21 பென்யமீனின் மகன்கள்:+ பேலா, பெகேர், அஸ்பேல், கேரா,+ நாகமான், ஏகி, ரோஷ், முப்பிம், உப்பிம்,+ ஆரேத்.+
22 ராகேல் வழிவந்த யாக்கோபின் வம்சத்தார் மொத்தம் 14 பேர்.
24 நப்தலியின்+ மகன்கள்: யாத்சியேல், கூனி, எத்செர், சில்லேம்.+
25 லாபான் தன் மகள் ராகேலுக்குக் கொடுத்த வேலைக்காரியான பில்காள் பெற்ற மகன்கள் இவர்கள்தான். யாக்கோபுக்கு இவள் பெற்றெடுத்தவர்கள் மொத்தம் ஏழு பேர்.
26 யாக்கோபின் மருமகள்களைத் தவிர, அவருடன் எகிப்துக்குப் போன அவருடைய வம்சத்தார் மொத்தம் 66 பேர்.+ 27 யோசேப்புக்கு எகிப்தில் பிறந்த மகன்கள் இரண்டு பேர். இப்படி, எகிப்துக்கு வந்துசேர்ந்த யாக்கோபின் குடும்பத்தார் மொத்தம் 70 பேர்.+
28 யாக்கோபு யூதாவைத் தனக்கு முன்னால் அனுப்பி,+ தான் கோசேனுக்கு வந்துகொண்டிருப்பதாக யோசேப்பிடம் சொல்லச் சொன்னார். அவர்கள் கோசேன் பிரதேசத்துக்கு+ வந்துசேர்ந்தபோது, 29 யோசேப்பு தன்னுடைய ரதத்தைத் தயார்படுத்தி, தன் அப்பா இஸ்ரவேலைப் பார்ப்பதற்காக கோசேனுக்குப் போனார். அவரைப் பார்த்ததும் கட்டிப்பிடித்து வெகு நேரம் அழுதார்.* 30 பின்பு இஸ்ரவேல் யோசேப்பிடம், “இனி எனக்குச் சாவு வந்தாலும் கவலைப்பட மாட்டேன். உன்னுடைய முகத்தைப் பார்த்துவிட்டேன், நீ உயிரோடு இருப்பதைத் தெரிந்துகொண்டேன்” என்றார்.
31 யோசேப்பு தன்னுடைய சகோதரர்களையும் தன்னுடைய அப்பாவின் குடும்பத்தாரையும் பார்த்து, “நான் பார்வோனிடம்+ போய், ‘என் சகோதரர்களும் என் அப்பாவின் குடும்பத்தாரும் கானான் தேசத்திலிருந்து இங்கே வந்திருக்கிறார்கள்.+ 32 அவர்கள் மேய்ப்பர்கள்,+ ஆடுமாடுகளை வளர்ப்பது அவர்களுடைய தொழில்.+ அவர்கள் தங்களுடைய மந்தைகளையும் தங்களுக்குச் சொந்தமான எல்லாவற்றையும் கொண்டுவந்திருக்கிறார்கள்’+ என்று சொல்லப்போகிறேன். 33 பார்வோன் உங்களைக் கூப்பிட்டு, ‘என்ன தொழில் செய்கிறீர்கள்?’ என்று கேட்டால், 34 ‘உங்கள் அடிமைகளாகிய நாங்கள் சிறு வயதிலிருந்தே எங்கள் முன்னோர்களைப் போல ஆடுமாடுகளை வளர்த்துவருகிறோம்’+ என்று சொல்லுங்கள். அப்போதுதான், நீங்கள் கோசேன் பிரதேசத்தில் குடியிருக்க முடியும்.+ ஏனென்றால், ஆடு மேய்க்கிறவர்களைக் கண்டாலே எகிப்தியர்களுக்குப் பிடிக்காது”+ என்று சொன்னார்.
47 பின்பு யோசேப்பு பார்வோனிடம் வந்து,+ “என் அப்பாவும் சகோதரர்களும் தங்களுடைய மந்தைகளோடும் மற்ற எல்லாவற்றோடும் கானான் தேசத்திலிருந்து வந்திருக்கிறார்கள். இப்போது அவர்கள் கோசேனில்+ இருக்கிறார்கள்” என்று சொன்னார். 2 அதன்பின், தன்னுடைய சகோதரர்களில் ஐந்து பேரைக் கூட்டிக்கொண்டு போய் பார்வோனின் முன்னால் நிறுத்தினார்.+
3 அப்போது பார்வோன் யோசேப்பின் சகோதரர்களிடம், “நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள்?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “உங்கள் அடிமைகளாகிய நாங்கள் எங்களுடைய முன்னோர்களைப் போல ஆடு மேய்த்துவருகிறோம்”+ என்றார்கள். 4 அதோடு, “கானான் தேசத்தில் பஞ்சம் கடுமையாக இருக்கிறது.+ எங்கள் மந்தைகளுக்கு மேய்ச்சல் நிலம் இல்லை. அதனால், இந்தத் தேசத்தில் அன்னியர்களாய்க் குடியிருப்பதற்காக வந்திருக்கிறோம்.+ உங்கள் அடிமைகளாகிய நாங்கள் கோசேனில் குடியிருப்பதற்குத் தயவுசெய்து அனுமதி கொடுங்கள்”+ என்றார்கள். 5 அப்போது பார்வோன் யோசேப்பைப் பார்த்து, “உன்னுடைய அப்பாவும் சகோதரர்களும் உன்னைத் தேடி வந்திருக்கிறார்கள். 6 எகிப்து தேசமே உன் கையில் இருக்கிறது. இங்கு இருக்கிற இடங்களிலேயே நல்ல இடமான கோசேனில்+ அவர்களைக் குடி வை. அவர்களில் திறமைசாலிகள் யாராவது இருந்தால், என்னுடைய மந்தைகளைக் கவனிக்கும் அதிகாரிகளாக நியமனம் செய்” என்றான்.
7 பின்பு, யோசேப்பு தன்னுடைய அப்பா யாக்கோபை பார்வோனிடம் கூட்டிக்கொண்டு வந்து அறிமுகப்படுத்தினார். யாக்கோபு பார்வோனை வாழ்த்தினார். 8 அப்போது பார்வோன் யாக்கோபைப் பார்த்து, “உங்களுக்கு என்ன வயதாகிறது?” என்று கேட்டான். 9 அதற்கு யாக்கோபு, “எனக்கு 130 வயதாகிறது. இத்தனை வருஷங்களாக என் முன்னோர்களைப் போலவே நாடோடியாக* வாழ்ந்துவருகிறேன்.+ அவர்களைப் போல நான் நிறைய காலம் வாழாவிட்டாலும், வாழ்ந்த இந்தக் கொஞ்சக் காலத்திலேயே நிறைய கஷ்டங்களை அனுபவித்துவிட்டேன்”+ என்றார். 10 அதன்பின், யாக்கோபு பார்வோனை வாழ்த்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டுப் போனார்.
11 பார்வோன் கட்டளை கொடுத்தபடியே, யோசேப்பு தன்னுடைய அப்பாவையும் சகோதரர்களையும் எகிப்து தேசத்தில் குடிவைத்தார். தேசத்திலேயே மிகச் சிறந்த இடமாகிய ராமசேஸ் பகுதியில்+ ஓர் இடத்தை அவர்களுக்குக் கொடுத்தார். 12 யோசேப்பு தன்னுடைய அப்பாவுக்கும் சகோதரர்களுக்கும் அப்பாவின் குடும்பத்தாருக்கும், அவரவருடைய பிள்ளைகளின் எண்ணிக்கைப்படி தொடர்ந்து உணவு தந்தார்.
13 எகிப்து தேசத்திலும் கானான் தேசத்திலும் பஞ்சம் கடுமையாக இருந்ததால் உணவு இல்லாமல்போனது. அங்கிருந்த ஜனங்கள் பஞ்சத்தால் வாடினார்கள்.+ 14 எகிப்திலும் கானானிலும் இருந்த ஜனங்களுக்குத் தானியம் விற்றதன் மூலம் கிடைத்த பணத்தையெல்லாம்+ யோசேப்பு பார்வோனுடைய அரண்மனை கஜானாவில் சேர்த்துவைத்தார். 15 எகிப்திலும் கானானிலும் இருந்த ஜனங்களிடம் பணம் தீர்ந்துபோனபோது, எகிப்தியர்கள் எல்லாரும் யோசேப்பிடம் வந்து, “எங்கள் பணமெல்லாம் தீர்ந்துவிட்டது! எங்களுக்கு உணவு கொடுங்கள். உங்கள் கண் முன்னால் நாங்கள் ஏன் சாக வேண்டும்?” என்றார்கள். 16 அதற்கு யோசேப்பு, “பணம் தீர்ந்துபோயிருந்தால், உங்கள் கால்நடைகளைக் கொண்டுவந்து கொடுங்கள். அவற்றை வாங்கிக்கொண்டு உணவைக் கொடுக்கிறேன்” என்றார். 17 அதனால், அவர்கள் தங்களுடைய கால்நடைகளை யோசேப்பிடம் கொண்டுவரத் தொடங்கினார்கள். யோசேப்பு அவர்களுடைய குதிரைகளையும் ஆடுமாடுகளையும் கழுதைகளையும் வாங்கிக்கொண்டு உணவுப் பொருள்களைத் தந்தார். இப்படி, அந்த வருஷம் முழுவதும் அவர்களுடைய கால்நடைகளை வாங்கிக்கொண்டு உணவு தந்துகொண்டே இருந்தார்.
18 அடுத்த வருஷம் அவர்கள் அவரிடம் வந்து, “எஜமானே, எங்கள் பணத்தையும் மந்தைகளையும் எஜமானாகிய உங்களிடம் ஏற்கெனவே கொடுத்துவிட்டோம் என்று உங்களுக்குத் தெரியும். இப்போது உங்களிடம் கொடுப்பதற்கு எங்களையும் எங்களுடைய நிலங்களையும் தவிர வேறு ஒன்றும் இல்லை. 19 உங்கள் கண் முன்னால் நாங்களும் எங்கள் நிலங்களும் ஏன் அழிய வேண்டும்? எங்களையும் எங்கள் நிலங்களையும் வாங்கிக்கொண்டு உணவு கொடுங்கள். நாங்கள் பார்வோனுக்கு அடிமைகளாவோம், எங்கள் நிலங்களும் அவருக்குச் சொந்தமாகும். விதைப்பதற்கு விதைகளை எங்களுக்குக் கொடுங்கள். அப்போதுதான் நாங்கள் சாகாமல் இருப்போம், எங்கள் நிலங்களும் அழியாமல் இருக்கும்” என்றார்கள். 20 அதனால், யோசேப்பு எகிப்தியர்களுடைய எல்லா நிலங்களையும் பார்வோனுக்காக வாங்கினார். பஞ்சம் மிகவும் கடுமையாக இருந்ததால் எகிப்தியர்கள் எல்லாரும் தங்களுடைய வயல்களை விற்றார்கள். அவை பார்வோனுக்குச் சொந்தமாயின.
21 பின்பு யோசேப்பு, எகிப்தின் ஓர் எல்லையிலிருந்து இன்னொரு எல்லைவரை இருந்த ஜனங்களைப் பக்கத்து நகரங்களுக்குக் குடிமாற்றினார்.+ 22 பூசாரிகளுடைய நிலங்களை மட்டும் அவர் வாங்கவில்லை.+ அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை பார்வோன் கொடுத்துவந்ததால், அவர்கள் தங்களுடைய நிலங்களை விற்கவில்லை. 23 அப்போது யோசேப்பு ஜனங்களிடம், “உங்களையும் உங்கள் நிலங்களையும் பார்வோனுக்காக இன்று வாங்கியிருக்கிறேன். இப்போது உங்களுக்கு விதைகளைத் தருகிறேன், கொண்டுபோய் நிலத்தில் விதையுங்கள். 24 விளைச்சலில் ஐந்திலொரு பாகத்தை நீங்கள் பார்வோனுக்குக் கொடுக்க வேண்டும்.+ மீதி நான்கு பாகத்தை வயலில் விதைப்பதற்காகவும், நீங்களும் உங்கள் பிள்ளைகளும் வீட்டில் இருப்பவர்களும் சாப்பிடுவதற்காகவும் வைத்துக்கொள்ளுங்கள்” என்றார். 25 அதற்கு அவர்கள், “நீங்கள் எங்களுடைய உயிரைக் காப்பாற்றியிருக்கிறீர்கள்.+ எங்கள் எஜமானே, நீங்கள் கருணை காட்டினால், நாங்கள் பார்வோனுக்கு அடிமைகளாக இருக்கிறோம்”+ என்றார்கள். 26 ஐந்திலொரு பாகம் பார்வோனுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை யோசேப்பு சட்டமாக்கினார். இன்றுவரை அந்தச் சட்டம் எகிப்து தேசத்தில் இருந்துவருகிறது. பூசாரிகளின் நிலங்கள் மட்டும்தான் பார்வோனுக்குச் சொந்தமாகவில்லை.+
27 இஸ்ரவேலர்கள் எகிப்து தேசத்திலுள்ள கோசேனில் தொடர்ந்து குடியிருந்தார்கள்.+ அவர்கள் அங்கேயே வாழ்ந்து, பிள்ளைகளைப் பெற்று, ஏராளமாகப் பெருகினார்கள்.+ 28 யாக்கோபு எகிப்து தேசத்தில் 17 வருஷங்கள் வாழ்ந்தார். அவர் மொத்தம் 147 வருஷங்கள் உயிர்வாழ்ந்தார்.+
29 சாவு நெருங்கிவிட்டதை இஸ்ரவேல் உணர்ந்ததால்+ தன்னுடைய மகன் யோசேப்பைக் கூப்பிட்டு, “நீ எனக்கு ஏதாவது நல்லது செய்ய நினைத்தால், என்மேல் இருக்கிற அன்பை விட்டுவிடாமல் எப்போதும் எனக்கு விசுவாசத்தோடு இருப்பாய் என்று தயவுசெய்து என்னுடைய தொடையின் கீழ் கையை வைத்து சத்தியம் செய்து கொடு.* நீ என்னை எகிப்தில் அடக்கம் செய்யக் கூடாது.+ 30 நான் இறந்த பின்பு தயவுசெய்து என்னை எகிப்திலிருந்து கொண்டுபோய் என்னுடைய முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே* அடக்கம் செய்”+ என்றார். அதற்கு யோசேப்பு, “நீங்கள் சொல்கிறபடியே செய்கிறேன்” என்றார். 31 அப்போது இஸ்ரவேல், “எனக்குச் சத்தியம் செய்து கொடு” என்றார். யோசேப்பும் சத்தியம் செய்து கொடுத்தார்.+ பின்பு, இஸ்ரவேல் தன்னுடைய கட்டிலின் தலைமாட்டிலே சாய்ந்து ஜெபம் செய்தார்.+
48 பிற்பாடு, “உங்களுடைய அப்பாவின் உடல்நிலை மோசமாகிக்கொண்டே வருகிறது” என்று யோசேப்பிடம் சொல்லப்பட்டது. உடனே, அவர் தன்னுடைய இரண்டு மகன்களான மனாசேயையும் எப்பிராயீமையும் கூட்டிக்கொண்டு தன்னுடைய அப்பாவைப் பார்க்கப் போனார்.+ 2 “உங்கள் மகன் யோசேப்பு வந்திருக்கிறார்” என்று யாக்கோபிடம் சொல்லப்பட்டது. அவர் தன்னுடைய பலத்தையெல்லாம் திரட்டி படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தார். 3 பின்பு யோசேப்பிடம்,
“சர்வவல்லமையுள்ள கடவுள் கானான் தேசத்திலுள்ள லஸ் நகரத்தில் எனக்குத் தோன்றி என்னை ஆசீர்வதித்தார்.+ 4 அப்போது அவர் என்னிடம், ‘நான் உன்னை ஏராளமாகப் பெருக வைப்பேன். உன்னுடைய சந்ததியை ஒரு பெரிய ஜனக்கூட்டமாக ஆக்குவேன்.+ உனக்குப்பின் வரும் உன் வம்சத்துக்கு இந்தத் தேசத்தை நிரந்தர சொத்தாகத் தருவேன்’+ என்றார். 5 எகிப்து தேசத்துக்கு நான் வருவதற்குமுன் உனக்குப் பிறந்த இரண்டு மகன்களும் என்னுடைய மகன்கள்.+ ரூபனையும் சிமியோனையும்+ போலவே எப்பிராயீமும் மனாசேயும் என்னுடைய மகன்களாக இருப்பார்கள். 6 ஆனால், இவர்களுக்குப்பின் உனக்குப் பிறக்கும் பிள்ளைகள் உன் பிள்ளைகளாக இருப்பார்கள். அந்தப் பிள்ளைகளுக்கு அவர்களுடைய சகோதரர்களின் நிலத்தில் ஒரு பங்கு கிடைக்கும்.+ 7 பதானைவிட்டு நான் வரும்போது, கானான் தேசத்தில் உன் அம்மா ராகேல் இறந்துபோனாள்.+ அப்போது, நான் அவள் பக்கத்தில்தான் இருந்தேன். எப்பிராத்து+ என்ற பெத்லகேம்+ ரொம்பத் தூரத்தில் இருந்ததால் எப்பிராத்துக்குப் போகும் வழியிலேயே அவளை அடக்கம் செய்தேன்” என்றார்.
8 பின்பு, இஸ்ரவேல் யோசேப்பின் மகன்களைப் பார்த்து, “இவர்கள் யார்?” என்று கேட்டார். 9 அப்போது யோசேப்பு தன் அப்பாவிடம், “இந்தத் தேசத்தில் கடவுள் எனக்குத் தந்த மகன்கள்”+ என்றார். அதற்கு அவர், “தயவுசெய்து அவர்களை என் பக்கத்தில் கொண்டுவா, நான் அவர்களை ஆசீர்வதிக்க வேண்டும்”+ என்றார். 10 இஸ்ரவேல் வயதானவராக இருந்ததால் அவருடைய பார்வை மங்கியிருந்தது, அவரால் சரியாகப் பார்க்க முடியவில்லை. அதனால், யோசேப்பு அவர்களை அவர் பக்கத்தில் கொண்டுபோய் நிற்க வைத்தார். அவர் அவர்களைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். 11 இஸ்ரவேல் யோசேப்பிடம், “உன்னுடைய முகத்தைப் பார்ப்பேன் என்று நான் நினைத்தே பார்க்கவில்லை.+ ஆனால், இப்போது கடவுள் உன்னுடைய வாரிசுகளைப் பார்க்கும் பாக்கியத்தைக்கூட தந்திருக்கிறார்” என்றார். 12 அதன்பின், யோசேப்பு இஸ்ரவேலின் முழங்கால் பக்கத்திலிருந்த தன்னுடைய மகன்களைப் பின்னால் தள்ளி நிற்க வைத்துவிட்டு, மண்டிபோட்டு தரைவரைக்கும் குனிந்து வணங்கினார்.
13 பின்பு, யோசேப்பு அவர்கள் இரண்டு பேரையும் இஸ்ரவேலுக்குப் பக்கத்தில் நிற்க வைத்தார். எப்பிராயீமைத்+ தன்னுடைய வலது கையால் பிடித்து இஸ்ரவேலின் இடது பக்கத்திலும், மனாசேயைத்+ தன்னுடைய இடது கையால் பிடித்து இஸ்ரவேலின் வலது பக்கத்திலும் நிற்க வைத்தார். 14 ஆனால், இஸ்ரவேல் தன்னுடைய வலது கையை எப்பிராயீமின் தலையிலும் இடது கையை மனாசேயின் தலையிலும் வைத்தார். மனாசேதான் மூத்தவன்+ என்று தெரிந்திருந்தும் அப்படிச் செய்தார். 15 பின்பு அவர் யோசேப்பை ஆசீர்வதித்து,+
“என் தாத்தா ஆபிரகாமும் என் அப்பா ஈசாக்கும் வணங்கிய+ உண்மைக் கடவுள்
என் வாழ்நாள் முழுவதும் என்னை வழிநடத்தி* வந்திருக்கிறார்.+
16 எல்லா துன்பத்திலும் தேவதூதர் மூலம் என்னைக் காப்பாற்றியிருக்கிறார்.+ அந்த உண்மைக் கடவுள் இந்தப் பிள்ளைகளை ஆசீர்வதிக்கட்டும்.+
என் பெயரும் என் தாத்தா ஆபிரகாமின் பெயரும் என் அப்பா ஈசாக்கின் பெயரும் இவர்கள் மூலமாக நிலைத்திருக்கட்டும்.
இந்தப் பூமியில் இவர்கள் ஏராளமாகப் பெருகட்டும்”+
என்றார்.
17 எப்பிராயீமின் தலையில் தன்னுடைய அப்பா வலது கையை வைத்தது யோசேப்புக்குப் பிடிக்கவில்லை. அதனால், அவருடைய கையை எப்பிராயீமின் தலையிலிருந்து எடுத்து மனாசேயின் தலையில் வைக்கப் போனார். 18 அப்போது தன் அப்பாவிடம், “அப்பா, நீங்கள் கையை மாற்றி வைத்திருக்கிறீர்கள். இவன்தான் மூத்த மகன்.+ உங்களுடைய வலது கையை இவனுடைய தலையில் வையுங்கள்” என்றார். 19 ஆனால் அவருடைய அப்பா கொஞ்சமும் சம்மதிக்காமல், “தெரியும் மகனே, எனக்குத் தெரியும். இவனும் ஒரு பெரிய ஜனக்கூட்டமாக ஆவான், இவனும் பலம்படைத்தவனாக ஆவான். ஆனால், இவனுடைய தம்பி இவனைவிட அதிக பலம்படைத்தவனாக ஆவான்.+ இவனுடைய தம்பியின் சந்ததி மாபெரும் தேசங்களைப் போலப் பெருகும்”+ என்றார். 20 பின்பு அவர்களைத் தொடர்ந்து ஆசீர்வதித்து,+
“இஸ்ரவேலர்கள் ஒருவரை ஒருவர் வாழ்த்தும்போது,
‘கடவுள் உன்னை எப்பிராயீமைப் போலவும் மனாசேயைப் போலவும் ஆசீர்வதிக்க வேண்டும்’ என்று சொல்லட்டும்”
என்றார். இப்படி, அவர் மனாசேயைவிட எப்பிராயீமை உயர்த்தினார்.
21 அதன்பின் இஸ்ரவேல் யோசேப்பிடம், “சீக்கிரத்தில் நான் சாகப்போகிறேன்.+ ஆனால், கடவுள் எப்போதும் உங்கள் எல்லாரோடும் இருப்பார். உங்களுடைய முன்னோர்களின் தேசத்துக்கே உங்களைத் திரும்பவும் கூட்டிக்கொண்டு போவார்.+ 22 நான் உன் சகோதரர்களுக்குக் கொடுப்பதைவிட ஒரு பங்கு அதிகமான நிலத்தை உனக்குத் தருகிறேன். வாளோடும் வில்லோடும் எமோரியர்களுடன் போராடி நான் பெற்ற நிலம் அது” என்றார்.
49 பின்பு, யாக்கோபு தன்னுடைய மகன்களைக் கூப்பிட்டு, “எல்லாரும் கூடிவந்து நில்லுங்கள். கடைசி நாட்களில் உங்களுக்கு நடக்கப்போவதை நான் சொல்கிறேன். 2 யாக்கோபின் மகன்களே, எல்லாரும் கூடிவந்து கேளுங்கள். உங்களுடைய அப்பா இஸ்ரவேல் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள்.
3 ரூபன்!+ நீ என்னுடைய மூத்த மகன்,+ நீ என்னுடைய வலிமை, நீ என்னுடைய முதல் வாரிசு.* நீ மகா கண்ணியமும் மகா பலமும் பெற்றிருந்தாய். 4 ஆனால், நீ உயர்வடைய மாட்டாய். ஏனென்றால், கொந்தளிக்கும் தண்ணீரைப் போல அடங்காமல் போய்விட்டாய். உன் அப்பாவின் படுக்கைக்கே போய் அதைக் களங்கப்படுத்தினாய்.+ இவன் என்னுடைய படுக்கைக்கே போய்விட்டானே!
5 சிமியோனும் லேவியும் சகோதரர்கள்.+ அவர்கள் ஆயுதங்களைக் கையில் எடுத்துக்கொண்டு வன்முறையில் இறங்குகிறார்கள்.+ 6 என் உயிரே, அவர்களுடைய கூட்டத்தில் சேராதே. என் மேன்மையே,* அவர்களுடைய நட்பைத் தேடாதே. அவர்கள் கோபத்தில் ஆட்களை வெட்டிக் கொன்றார்கள்.+ வீம்புக்காக எருதுகளை நொண்டியாக்கினார்கள்.* 7 அவர்களுடைய கோபம் வெறித்தனமானது, அது சபிக்கப்படட்டும். அவர்களுடைய ஆத்திரம் கண்மூடித்தனமானது, அது சபிக்கப்படட்டும்.+ யாக்கோபின் தேசத்திலும் இஸ்ரவேலின் தேசத்திலும் அவர்களைச் சிதறிப்போகப் பண்ணுவேன்.+
8 யூதா!+ உன் சகோதரர்கள் உன்னைப் புகழ்வார்கள்.+ உன்னுடைய கை எதிரிகளின் கழுத்தைப் பிடிக்கும்.+ உன்னுடைய அப்பாவின் மகன்கள் உனக்கு முன்னால் தலைவணங்குவார்கள்.+ 9 யூதா ஒரு சிங்கக்குட்டி!+ என் மகனே, நீ இரையைத் தின்றுவிட்டு எழுந்துபோவாய். சிங்கத்தைப் போலக் கால்நீட்டிப் படுத்திருப்பாய். அவன் ஒரு சிங்கம், அவனை எழுப்ப யாருக்குத் துணிச்சல் இருக்கிறது? 10 ஷைலோ* வரும்வரை+ யூதாவைவிட்டு செங்கோல் விலகாது,+ அவன் பாதங்களுக்கு இடையிலிருந்து அதிகாரக்கோலும் விலகாது. ஜனங்கள் எல்லாரும் ஷைலோவுக்குக் கீழ்ப்படிவார்கள்.+ 11 யூதா தன்னுடைய கழுதையைத் திராட்சைக் கொடியிலும் கழுதைக்குட்டியைச் செழிப்பான திராட்சைக் கொடியிலும் கட்டிவைப்பான். தன்னுடைய உடையைத் திராட்சமதுவிலும், தன்னுடைய அங்கியைத் திராட்சரசத்திலும் துவைப்பான். 12 அவனுடைய கண்கள் திராட்சமதுவினால் சிவந்திருக்கின்றன. அவனுடைய பற்கள் பாலினால் வெண்மையாக இருக்கின்றன.
13 செபுலோன்,+ கப்பல்கள் நிறுத்தப்பட்டிருக்கிற கடற்கரைக்குப் பக்கத்தில் குடியிருப்பான்.+ அவனுடைய எல்லை சீதோனின் திசையில் இருக்கும்.+
14 இசக்கார்,+ இரண்டு மூட்டைகளைச் சுமந்துகொண்டே படுத்திருக்கிற வலிமையான கழுதை. 15 அவன் குடியிருக்கிற தேசம் அருமையாகவும் அழகாகவும் இருப்பதைப் பார்ப்பான். சுமை சுமப்பதற்காகத் தோளைச் சாய்ப்பான், கொத்தடிமைபோல் வேலை செய்வான்.
16 தாண்,+ இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒரு கோத்திரமாக இருந்து, தன்னுடைய ஜனங்களுக்கு நீதி வழங்குவான்.+ 17 கொம்பு விரியன் பாம்பு எப்படி வழியோரத்தில் படுத்துக்கொண்டு, குதிரையின் குதிங்காலைக் கடித்து, அதன்மேல் சவாரி செய்பவனைப் பின்பக்கமாக விழ வைக்குமோ அப்படித்தான் அவனும் செய்வான்.+ 18 யெகோவாவே, உங்கள் மீட்புக்காக நான் காத்திருப்பேன்.
19 காத்தை+ ஒரு கொள்ளைக்கூட்டம் தாக்க வரும், ஆனால் அவன் அந்தக் கூட்டத்தைத் துரத்திக்கொண்டு போய்த் தாக்குவான்.+
20 ஆசேரிடம்+ உணவு ஏராளமாக இருக்கும், ராஜாக்கள் சாப்பிடும் உணவைத் தருவான்.+
21 நப்தலி,+ பாய்ந்தோடும் மான். இனிமையான வார்த்தைகளைப் பேசுவான்.+
22 யோசேப்பு,+ நீரூற்றுக்குப் பக்கத்திலுள்ள பழ மரத்தின் அடிக்கன்று; அதன் கிளைகள் மதில்மேல் படர்ந்திருக்கும். 23 வில்வீரர்கள் அவனுக்கு எப்போதும் தொல்லை கொடுத்தார்கள். அவன்மேல் அம்புகளை எறிந்தார்கள். அவனைப் பகைத்துக்கொண்டே இருந்தார்கள்.+ 24 ஆனால், அவனும் வில்லைக் கையில் தயாராக வைத்திருந்தான்.+ அவனுடைய கைகள் வலிமையுடனும் துடிப்புடனும் இருந்தன.+ இஸ்ரவேலின் மூலைக்கல்லாகவும் மேய்ப்பராகவும் யாக்கோபுக்கு வலிமைமிக்கவராகவும் இருந்தவர்தான்* அதற்குக் காரணம். 25 அவனை* அவனுடைய அப்பாவின் கடவுள் அன்பளிப்பாகக் கொடுத்தார். கடவுள் அவனுக்குக் கைகொடுப்பார். சர்வவல்லமையுள்ளவரோடு அவன் இருக்கிறான். வானத்திலிருந்தும் பூமியின் ஆழத்திலிருந்தும் கடவுள் அவனுக்கு ஆசீர்வாதங்களைத் தருவார்.+ ஏராளமான பிள்ளைகளையும் ஆடுமாடுகளையும் தந்து ஆசீர்வதிப்பார். 26 உன் அப்பா தந்திருக்கிற ஆசீர்வாதங்கள், நிலையான மலைகளுக்கும் குன்றுகளுக்கும் இருக்கிற சிறப்புகளைவிட சிறந்ததாக இருக்கும்.+ அந்த ஆசீர்வாதங்கள் எப்போதும் யோசேப்பின் மேல் தங்கும். அவன் தன்னுடைய சகோதரர்களிலிருந்து விசேஷமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவன்.+
27 பென்யமீன்,+ ஓநாயைப் போல் எப்போதும் கடித்துக் குதறுவான்.+ காலையில் தன்னுடைய இரையைத் தின்பான்; சாயங்காலத்தில், தான் கைப்பற்றியதைப் பங்குபோடுவான்”+ என்றார்.
28 அந்த 12 பேரிலிருந்துதான் இஸ்ரவேலின் 12 கோத்திரங்கள் வந்தன. அவர்களுடைய அப்பா அவர்களை ஆசீர்வதித்தபோது இதைத்தான் சொன்னார். அவரவருக்குத் தகுந்த ஆசீர்வாதத்தைத் தந்தார்.+
29 அதன்பின் அவர்களிடம், “நான் சீக்கிரத்தில் சாகப்போகிறேன்.*+ ஏத்தியனான எப்பெரோனின் நிலத்திலுள்ள குகையில் என்னை அடக்கம் செய்யுங்கள். அங்குதான் என் முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்டார்கள்.+ 30 கானான் தேசத்தில் மம்ரேக்குப் பக்கத்திலே மக்பேலாவில் உள்ள நிலத்தில் அந்தக் குகை இருக்கிறது. ஏத்தியனான எப்பெரோனிடமிருந்து ஆபிரகாம் அந்த நிலத்தைக் கல்லறை நிலமாக விலைக்கு வாங்கினார். 31 அங்கேதான் ஆபிரகாமும் அவர் மனைவி சாராளும் அடக்கம் செய்யப்பட்டார்கள். அங்கேதான் ஈசாக்கும்+ அவர் மனைவி ரெபெக்காளும் அடக்கம் செய்யப்பட்டார்கள். அங்கேதான் லேயாளை நான் அடக்கம் செய்தேன்.+ 32 அந்த நிலமும் அதில் இருக்கிற குகையும் ஏத்தின் மகன்களிடமிருந்து விலைக்கு வாங்கப்பட்டன”+ என்று சொன்னார்.
33 யாக்கோபு தன்னுடைய மகன்களுக்கு இந்த எல்லா அறிவுரைகளையும் கொடுத்துவிட்டு, தன்னுடைய கால்களைத் தூக்கிக் கட்டில்மேல் வைத்துப் படுத்தார். அதன்பின் இறந்துபோனார்.*+
50 யோசேப்பு தன்னுடைய அப்பாவின் உடல்மேல் விழுந்து கதறி அழுதார்,+ அவருக்கு முத்தம் கொடுத்தார். 2 அதன்பின், தன் அப்பாவின் உடலைப் பாடம் செய்யும்படி*+ தன் ஊழியர்களான வைத்தியர்களுக்குக் கட்டளை கொடுத்தார். அவர்களும் இஸ்ரவேலின் உடலைப் பாடம் செய்தார்கள். 3 அதற்கு 40 நாட்கள் பிடித்தன. ஏனென்றால், ஓர் உடலை முறையாகப் பாடம் செய்ய 40 நாட்கள் ஆகும். அவருக்காக எகிப்தியர்கள் 70 நாட்கள் துக்கம் அனுசரித்தார்கள்.
4 துக்கம் அனுசரிக்கும் நாட்கள் முடிந்த பிறகு யோசேப்பு பார்வோனின் அதிகாரிகளிடம்,* “எனக்கு ஒரு உதவி செய்ய நினைத்தால் பார்வோனிடம் நான் இப்படிச் சொன்னதாகத் தயவுசெய்து சொல்லுங்கள்: 5 ‘என் அப்பா என்னிடம், “நான் சீக்கிரத்தில் இறந்துவிடுவேன்.+ கானான் தேசத்தில்+ எனக்காக நான் வெட்டியிருக்கும் கல்லறையில் நீ என்னை அடக்கம் செய்ய வேண்டும்”+ என்று என்னிடம் சத்தியம் வாங்கியிருந்தார்.+ அதனால், தயவுசெய்து எனக்கு அனுமதி கொடுங்கள், நான் போய் என் அப்பாவை அடக்கம் செய்துவிட்டு வருகிறேன்’” என்றார். 6 அதற்கு பார்வோன், “உன் அப்பாவுக்குச் சத்தியம் செய்து கொடுத்தபடியே நீ போய் அவரை அடக்கம் செய்துவிட்டு வா”+ என்றார்.
7 அதனால், யோசேப்பு தன்னுடைய அப்பாவை அடக்கம் செய்யப் புறப்பட்டார். அவருடன் பார்வோனுடைய ஊழியர்களாகிய அரசவைப் பெரியோர்கள்+ எல்லாரும், எகிப்து தேசத்திலிருந்த பெரியோர்கள் எல்லாரும், 8 யோசேப்பின் வீட்டிலிருந்த எல்லாரும், அவருடைய சகோதரர்களும், அவருடைய அப்பாவின் குடும்பத்தாரும்+ போனார்கள். பிள்ளைகளையும் ஆடுமாடுகளையும் மட்டுமே கோசேனில் விட்டுவிட்டுப் போனார்கள். 9 யோசேப்போடு ரதவீரர்களும்+ குதிரைவீரர்களும்கூட போனார்கள். இப்படி, அவர்கள் பெரிய கூட்டமாகப் போனார்கள். 10 யோர்தான் பிரதேசத்திலிருந்த ஆத்தாத்தின் களத்துமேட்டுக்குப் போய்ச் சேர்ந்ததும், அவர்கள் ஒப்பாரி வைத்துக் கதறி அழுதார்கள். யோசேப்பு தன் அப்பாவுக்காக ஏழு நாட்கள் துக்கம் அனுசரித்தார். 11 அவர்கள் ஆத்தாத்தின் களத்துமேட்டில் துக்கம் அனுசரிப்பதை அங்கு குடியிருந்த கானானியர்கள் பார்த்தபோது, “எகிப்தியர்கள் பெரியளவில் துக்கம் அனுசரிக்கிறார்களே!” என்றார்கள். அதனால்தான், யோர்தான் பிரதேசத்தில் இருந்த அந்த இடத்துக்கு ஆபேல்-மிஸ்ராயீம்* என்று பெயர் வைக்கப்பட்டது.
12 யாக்கோபு கட்டளை கொடுத்தது போலவே அவருடைய மகன்கள் செய்தார்கள்.+ 13 அவரை கானான் தேசத்துக்குக் கொண்டுபோய், மம்ரேக்குப் பக்கத்தில் மக்பேலா நிலத்திலிருந்த குகையில் அடக்கம் செய்தார்கள். அந்த நிலத்தை, அடக்கம் செய்வதற்கான நிலமாக ஏத்தியனான எப்பெரோனிடமிருந்து ஆபிரகாம் விலைக்கு வாங்கியிருந்தார்.+ 14 யோசேப்பு தன்னுடைய அப்பாவை அடக்கம் செய்துவிட்டு, தன்னுடைய சகோதரர்களோடும் மற்ற எல்லாரோடும் எகிப்துக்குத் திரும்பினார்.
15 யோசேப்பின் சகோதரர்கள் தங்களுடைய அப்பா இறந்த பின்பு, “யோசேப்புக்கு நம்மேல் முன்விரோதம் இருந்தாலும் இருக்கும். நாம் அவனுக்குச் செய்த எல்லா துரோகத்துக்கும் அவன் ஒருவேளை நம்மைப் பழிவாங்கலாம்”+ என்று பேசிக்கொண்டார்கள். 16 பின்பு யோசேப்புக்குச் செய்தி அனுப்பி, “உன்னுடைய அப்பா சாவதற்குமுன் எங்களைக் கூப்பிட்டு, 17 ‘நீங்கள் யோசேப்பிடம் போய், அவனுக்குச் செய்த கெடுதலையும் பாவத்தையும் துரோகத்தையும் மன்னிக்கச் சொல்லிக் கெஞ்சிக் கேளுங்கள்’ என்றார். அதனால், உன் அப்பாவுடைய கடவுளின் ஊழியர்களான நாங்கள் செய்த துரோகத்தைத் தயவுசெய்து மன்னித்துவிடு” என்றார்கள். இதைக் கேட்டதும் யோசேப்பு கண்ணீர்விட்டு அழுதார். 18 பின்பு, அவருடைய சகோதரர்கள் அவர்முன் வந்து விழுந்து, “நாங்கள் உன் அடிமைகள்!”+ என்றார்கள். 19 அப்போது யோசேப்பு, “பயப்படாதீர்கள். உங்களைத் தண்டிக்க நான் என்ன கடவுளா? 20 நீங்கள் எனக்குக் கெட்டது செய்ய நினைத்தும்,+ அதை நல்லதாக மாற்றி பலருடைய உயிரைக் காப்பாற்ற கடவுள் நினைத்தார்.+ அதைத்தான் இன்று செய்துவருகிறார். 21 அதனால் பயப்படாதீர்கள். உங்களுக்கும் உங்களுடைய பிள்ளைகளுக்கும் நான் தொடர்ந்து உணவுப் பொருள்களைக் கொடுப்பேன்”+ என்றார். இப்படி, அவர்களுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் தந்தார்.
22 யோசேப்பும் அவருடைய அப்பாவின் குடும்பத்தாரும் எகிப்திலேயே வாழ்ந்தார்கள். யோசேப்பு 110 வருஷங்கள் உயிர்வாழ்ந்தார். 23 எப்பிராயீமின் பேரன்களையும்+ மனாசேயின் மகனான மாகீரின் மகன்களையும்+ பார்க்கும்வரை யோசேப்பு உயிர்வாழ்ந்தார். அவர்களைத் தன்னுடைய சொந்த மகன்களாகவே நினைத்தார்.* 24 கடைசியில் யோசேப்பு தன்னுடைய சகோதரர்களிடம், “நான் சீக்கிரத்தில் இறந்துவிடுவேன். ஆனால், கடவுள் கண்டிப்பாக உங்களுக்குக் கருணை காட்டுவார்,+ ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் வாக்குறுதி தந்த தேசத்துக்கு உங்களை இங்கிருந்து கூட்டிக்கொண்டு போவார்”+ என்றார். 25 பின்பு யோசேப்பு, “கடவுள் கண்டிப்பாக உங்களுக்குக் கருணை காட்டுவார். நீங்கள் இங்கிருந்து போகும்போது என்னுடைய எலும்புகளைக் கொண்டுபோக வேண்டும்” என்று சொல்லி, இஸ்ரவேலின் மகன்களிடம் சத்தியம் வாங்கிக்கொண்டார்.+ 26 யோசேப்பு 110 வயதில் இறந்தார். அவருடைய உடல் எகிப்து தேசத்தில் பாடம் செய்யப்பட்டு,+ ஒரு சவப்பெட்டியில் வைக்கப்பட்டது.
வே.வா., “காலியாக.”
வே.வா., “செயல் நடப்பிக்கும் ஆற்றல்.”
நே.மொ., “அசைந்தாடிக்கொண்டு.”
அதாவது, “வகையின்படியே.”
வே.வா., “பகலை ஆள.”
சொல் பட்டியலில் “நெஃபெஷ், சைக்கீ” என்ற தலைப்பைப் பாருங்கள்.
நே.மொ., “பறக்கும் உயிரினங்கள்.” இவை சிறகுள்ள பூச்சிகளையும் குறிக்கலாம்.
நே.மொ., “கீழ்ப்படுத்துங்கள்.”
அதாவது, “அந்த நாளைத் தனது விசேஷ நோக்கத்திற்காக ஒதுக்கி வைத்தார்.”
இங்குதான் கடவுளுடைய பெயர் முதன்முதலில் குறிப்பிடப்படுகிறது. இணைப்பு A4-ஐப் பாருங்கள்.
சொல் பட்டியலில் “நெஃபெஷ், சைக்கீ” என்ற தலைப்பைப் பாருங்கள்.
சில மரங்களிலிருந்து கிடைக்கும் ஒருவித வாசனைப் பிசின்.
வே.வா., “டைகிரீஸ்.”
அதாவது, “ஐப்பிராத்து.”
இதற்கான எபிரெய வார்த்தை, பசைபோல் இறுக ஒட்டிக்கொண்டிருப்பதை அர்த்தப்படுத்துகிறது.
நே.மொ., “சதையாக.”
வே.வா., “தந்திரமுள்ளதாக.”
அதாவது, “தீர்மானித்து.”
வே.வா., “ருசியான.”
வே.வா., “நொறுக்குவார்.”
வே.வா., “காயப்படுத்துவாய்.”
ஆதாம் என்ற பெயரின் அர்த்தம், “மனிதன்; மனித இனம்.”
அர்த்தம், “உயிருள்ளவள்.”
அதாவது, “தீர்மானிப்பதில்.”
வே.வா., “நீ உயர்வடைய மாட்டாயா?”
இது மற்றவர்களை எச்சரிப்பதற்காக கொடுக்கப்பட்ட ஒரு கட்டளையாக இருந்திருக்கலாம்.
வே.வா., “நாடுகடத்தப்படுதல்.”
அர்த்தம், “நியமிப்பது; கொடுப்பது.”
நே.மொ., “யெகோவாவின் பெயரில் அழைக்க.”
நே.மொ., “படைத்த நாளில்.”
நே.மொ., “படைத்த நாளில்.”
வே.வா., “ஆதாம்; மனிதன்.”
சொல் பட்டியலில் “உண்மைக் கடவுள்” என்ற தலைப்பைப் பாருங்கள்.
நே.மொ., “அவர் கடவுளோடு நடந்துவந்தார்.”
நே.மொ., “அவர் கடவுளோடு நடந்துவந்தார்.”
வே.வா., “நிம்மதி.”
அநேகமாக இதன் அர்த்தம், “ஆறுதல்; இளைப்பாறுதல்.”
நே.மொ., “உண்மைக் கடவுளின் மகன்கள்.”
வே.வா., “பாவ இயல்பின்படி நடந்துகொள்கிறான்.”
எபிரெயுவில், “நெபிலிம்கள்.” ஒருவேளை இந்தப் பெயரின் அர்த்தம், “வீழ்த்துபவர்கள்.” அதாவது, “மற்றவர்களை விழச் செய்கிறவர்கள்.” சொல் பட்டியலைப் பாருங்கள்.
வே.வா., “உள்ளம் எப்போதும் கெட்ட எண்ணங்களின் பக்கமாகவே சாய்ந்திருந்ததையும்.”
நே.மொ., “அவர் கடவுளோடு நடந்தார்.”
இது ஒரு பிசின் மரம், ஒருவேளை ஊசியிலை மரம்.
இது கப்பலைப் போல் பெரிதாக இருந்தது, ஆனால் நீளமான ஒரு பெட்டிபோல் இருந்தது.
அதாவது, “நீளம் சுமார் 438 அடியும், அகலம் சுமார் 73 அடியும், உயரம் சுமார் 44 அடியுமாக.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
எபிரெயுவில், “சோஹார்.” இது வெளிச்சத்துக்கான ஜன்னலாகவோ திறப்பாகவோ இல்லாமல், கூரையிலிருந்து ஒரு முழத்துக்கு நீட்டிக்கொண்டிருந்த ஒரு பகுதியாக இருந்திருக்கலாம் என்பது சிலருடைய கருத்து.
நே.மொ., “உயிர்சக்தியுள்ள எல்லாவற்றையும்.”
அதாவது, “வகையில்.”
ஒருவேளை, பலி கொடுப்பதற்கு ஏற்ற மிருகங்களைக் குறிக்கலாம்.
அதாவது, “வகையிலும்.”
அல்லது, “ஜோடிகளை.”
அல்லது, “ஜோடிகளை.”
நே.மொ., “மகா ஆழத்தின் ஊற்றுகளெல்லாம் பிளந்து.”
நே.மொ., “உயிர்சக்தியுள்ள எல்லாமே.”
நே.மொ., “15 முழ.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
நே.மொ., “மகா ஆழத்தின் ஊற்றுகளும்.”
வே.வா., “உள்ளம் கெட்ட காரியங்களின் பக்கமாகச் சாய்கிறது.”
வே.வா., “பொறுப்பில்.”
நே.மொ., “உங்கள் உயிராகிய இரத்தம் சிந்தப்பட்டால்.”
நே.மொ., “ஒரு மனுஷனுடைய இரத்தத்தை எவனாவது சிந்தினால் அவனுடைய இரத்தத்தை இன்னொரு மனுஷன் சிந்துவான்.”
நே.மொ., “கடவுள் தன்னுடைய சாயலில் மனுஷனை உண்டாக்கியிருக்கிறார்.”
நே.மொ., “அடிமையிலும் அடிமையாகட்டும்.”
வே.வா., “கடலோரப் பகுதிகளில்.”
வே.வா., “பலம்படைத்த.”
அநேகமாக, நினிவே, ரெகொபோத்-இர், காலாக், ரெசேன் ஆகிய எல்லா நகரங்களும் சேர்ந்து ஒரு மாநகரமாகக் கருதப்பட்டது.
அல்லது, “அவன் யாப்பேத்தின் அண்ணன்.”
அர்த்தம், “பிரிவு.”
வே.வா., “தன் கவனத்தைத் திருப்பினார்.”
வே.வா., “நம்முடைய கவனத்தைத் திருப்பி.”
அர்த்தம், “குழப்பம்.” பாபேல் என்பது பாபிலோனைக் குறிக்கிறது.
நே.மொ., “வீட்டையும்.”
அதாவது, “தென் திசையில்.”
வே.வா., “அன்னியராக.”
நே.மொ., “துன்பங்களால்.”
“இவர்கள்” என்பது வசனம் 1-ல் குறிப்பிடப்பட்டுள்ள ராஜாக்களாக இருக்கலாம்.
அதாவது, “சவக் கடல்.”
“இவர்கள்” என்பது வசனம் 2-ல் குறிப்பிடப்பட்டுள்ள ராஜாக்களாக இருக்கலாம்.
வே.வா., “நடுவே கூடாரங்களில் தங்கியிருந்தார்.”
நே.மொ., “சிறிய நூலையோ செருப்பு வாரையோகூட.”
இந்த வசனத்தில் எமோரியர்கள் என்பது கானானியர்கள் எல்லாரையும் ஒட்டுமொத்தமாகக் குறிக்கிறது.
அதாவது, “ஐப்பிராத்துவரை.”
வே.வா., “அவமானப்படுத்தினாள்.”
அர்த்தம், “கடவுள் கேட்கிறார்.”
நே.மொ., “காட்டுக் கழுதையைப் போல்.”
அல்லது, “விரோதமாக.”
அர்த்தம், “என்னைப் பார்க்கிற உயிருள்ளவரின் கிணறு.”
அர்த்தம், “தகப்பன் உயர்ந்தவர்.”
அர்த்தம், “திரளான ஜனங்களுக்குத் தகப்பன்.”
சொல் பட்டியலைப் பாருங்கள்.
ஒருவேளை இதன் அர்த்தம், “சண்டைக்காரி.”
அர்த்தம், “இளவரசி.”
அர்த்தம், “சிரிப்பு.”
யெகோவாவிடம் நேரடியாகப் பேசுவதுபோல் யெகோவாவின் தூதரிடம் ஆபிரகாம் பேசினார்.
நே.மொ., “மூன்று சியா அளவு.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
வே.வா., “என் கூரை நிழலில்.”
அதாவது, “மனித உருவில் வந்த தேவதூதர்கள்.”
அதாவது, “மனித உருவில் வந்த தேவதூதர்கள்.”
அதாவது, “மனித உருவில் வந்த தேவதூதர்கள்.”
யெகோவாவிடம் நேரடியாகப் பேசுவதுபோல் யெகோவாவின் தூதர்களிடம் லோத்து பேசினார்.
வே.வா., “மாறாத அன்பை.”
அர்த்தம், “சிறியது.”
இது பெலிஸ்திய ராஜாக்களின் பட்டப்பெயராக இருக்கலாம்.
வே.வா., “அவளுடன் உறவுகொள்ளாமல்.”
வே.வா., “நான் நேர்மையான இதயத்தோடும் சுத்தமான கைகளோடும்தான் இதைச் செய்தேன்.”
வே.வா., “மாறாத அன்பு.”
அல்லது, “என்னைப் பார்த்து.”
ஒருவேளை இதன் அர்த்தம், “உறுதிமொழியின் கிணறு” அல்லது “ஏழின் கிணறு.”
சேணம் என்பது மிருகங்களின் முதுகில் உட்கார்ந்து சவாரி செய்வதற்குப் போடப்படும் தோலினால் ஆன இருக்கை.
வே.வா., “வெட்டுக்கத்தியையும்.”
வே.வா., “வெட்டுக்கத்தியை.”
அர்த்தம், “யெகோவா கொடுப்பார்; யெகோவா பார்த்துக்கொள்வார்.”
நே.மொ., “நகரங்களின் நுழைவாசலை.”
அல்லது, “நீங்கள் மகா அதிபதி.”
ஒரு சேக்கல் என்பது 11.4 கிராம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
ஒரு சேக்கல் என்பது 11.4 கிராம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
பழங்காலத்தில் இப்படித்தான் உறுதிமொழி கொடுத்தார்கள்.
வே.வா., “மாறாத அன்பு.”
வே.வா., “மாறாத அன்பை.”
ஒரு சேக்கல் என்பது 11.4 கிராம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
ஒரு சேக்கல் என்பது 11.4 கிராம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
அநேகமாக, “லாபான்.”
சேணம் என்பது மிருகங்களின் முதுகில் உட்கார்ந்து சவாரி செய்வதற்குப் போடப்படும் தோலினால் ஆன இருக்கை.
வே.வா., “நான் யெகோவாவின் வழியில் நடப்பதால் அவர்.”
நே.மொ., “இதயத்தில்.”
நே.மொ., “தங்கள் சகோதரியான ரெபெக்காளையும்.”
ரெபெக்காள் குழந்தையாக இருந்தபோது அவளுக்குப் பாலூட்டியவள்; இந்தச் சமயத்தில் அவளுடைய பணிப்பெண்.
நே.மொ., “தன் முன்னோர்களுடன் சேர்க்கப்பட்டார்.” எபிரெயுவில் கவிதை நடையிலுள்ள இந்த வார்த்தைகள் மரணத்தைக் குறிக்கின்றன.
நே.மொ., “தன் முன்னோர்களுடன் சேர்க்கப்பட்டார்.” எபிரெயுவில் கவிதை நடையிலுள்ள இந்த வார்த்தைகள் மரணத்தைக் குறிக்கின்றன.
அல்லது, “எல்லா சகோதரர்களையும் பகைத்துக்கொண்டு வாழ்ந்தார்கள்.”
நே.மொ., “இரண்டு தேசங்கள் இருக்கின்றன.”
அர்த்தம், “நிறைய முடி உள்ளவன்.”
அர்த்தம், “குதிங்காலைப் பிடித்துக்கொண்டவன்; இன்னொருவனின் இடத்தை எடுத்துக்கொண்டவன்.”
வே.வா., “குற்றமற்றவனாக.”
வே.வா., “என் வயிறு காய்கிறது.”
வே.வா., “ஒரு வாய்.”
அர்த்தம், “சிவப்பு.”
வே.வா., “கட்டிப்பிடித்துக்கொண்டிருந்தார்.”
அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்கில்.”
அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்கில்.”
அர்த்தம், “வாக்குவாதம்.”
அர்த்தம், “குற்றச்சாட்டு.”
அர்த்தம், “விசாலமான இடங்கள்.”
அர்த்தம், “உறுதிமொழி; ஏழு.”
அர்த்தம், “உறுதிமொழியின் கிணறு; ஏழின் கிணறு.”
அர்த்தம், “குதிங்காலைப் பிடித்துக்கொண்டவன்; இன்னொருவனின் இடத்தை எடுத்துக்கொண்டவன்.”
அதாவது, “உன்னுடைய அடிமைத்தனத்திலிருந்து விடுபடுவாய்.”
வே.வா., “உன்னைக் கொல்லப்போவதை நினைத்து மனதைத் தேற்றிக்கொள்கிறான்.”
நே.மொ., “அம்மாவின் அப்பா.”
அதாவது, “இஸ்மவேலர்களிடம்.” இதற்குள் இஸ்மவேல் இறந்துவிட்டார்; ஏசாவுக்கு சுமார் 77 வயது.
வே.வா., “ஏணி.”
அர்த்தம், “கடவுளுடைய வீடு.”
நே.மொ., “எலும்பும் சதையுமானவன்.”
நே.மொ., “உறவுகொள்ள.”
அர்த்தம், “இதோ, ஒரு மகன்!”
அர்த்தம், “கேட்பது.”
அர்த்தம், “இணைந்திருப்பது; நெருங்கியிருப்பது.”
அர்த்தம், “புகழப்படுவது.”
அர்த்தம், “நீதிபதி.”
அர்த்தம், “என் போராட்டம்.”
அர்த்தம், “பாக்கியம்.”
அர்த்தம், “சந்தோஷம்; சந்தோஷமாக.”
நே.மொ., “காட்டுச்சூட்டிப் பழங்களை.” இந்தப் பழங்கள் கருத்தரிக்க உதவியதாக நம்பப்பட்டது.
அர்த்தம், “இவன்தான் கூலி.”
அர்த்தம், “ஏற்றுக்கொள்வது.”
நே.மொ., “ராகேலைக் கடவுள் நினைத்துப் பார்த்தார்.”
நே.மொ., “அவளுடைய கருப்பையைத் திறந்தார்.”
யொசிபியா என்ற பெயரின் சுருக்கம். அர்த்தம், “‘யா’ சேர்க்கட்டும் (அதிகரிக்கட்டும்).”
வே.வா., “அத்தாட்சி.”
எபிரெயுவில், “லிவ்னே மரங்களிலிருந்தும்.”
வே.வா., “அன்னியர்கள்.”
அதாவது, “யூப்ரடிஸ் ஆற்றை.”
வே.வா., “நல்லதோ கெட்டதோ, நீ யாக்கோபிடம் எதையும் பேசாதே.”
நே.மொ., “கஞ்சிராவோடும் யாழோடும்.”
சேணம் என்பது மிருகங்களின் முதுகில் உட்கார்ந்து சவாரி செய்வதற்குப் போடப்படும் தோலினால் ஆன இருக்கை.
அரமேயிக் மொழியில் இதன் அர்த்தம் “சாட்சிக் குவியல்.”
எபிரெய மொழியில் இதன் அர்த்தம் “சாட்சிக் குவியல்.”
வே.வா., “கண்காணிக்கும் கோபுரம்.”
அர்த்தம், “இரண்டு முகாம்கள்.”
வே.வா., “தூதுவர்களை.”
ஜனங்கள் ஆற்றைக் கடக்கும் ஆழமில்லாத பகுதி.
வே.வா., “காட்டாற்றுப் பள்ளத்தாக்கைக் கடக்கப்பண்ணினார்.”
அதாவது, “மனித உருவில் ஒரு தேவதூதர்.”
வே.வா., “தொடைச்சந்தை.”
அர்த்தம், “கடவுளோடு போராடுபவர்; கடவுள் போராடுகிறார்.”
அதாவது, “கடவுளின் பிரதிநிதியான தூதருடைய.”
அர்த்தம், “கடவுளுடைய முகம்.”
அதாவது, “பெனியேலை.”
அதாவது, “குட்டிகளுக்குப் பாலூட்டுகிற.”
அர்த்தம், “பந்தல்கள்; கொட்டகைகள்.”
அர்த்தம், “இஸ்ரவேலின் கடவுளே கடவுள்.”
வே.வா., “பெண்களைப் பார்ப்பதற்காக.”
நே.மொ., “மணமகள் விலையும்.”
வே.வா., “நாறடித்துவிட்டீர்கள்.”
வே.வா., “மறைத்துவைத்தார்.”
அர்த்தம், “பெத்தேலின் கடவுள்.”
அர்த்தம், “அழுகையின் கருவாலி மரம்.”
அர்த்தம், “என்னுடைய துக்கத்தின் மகன்.”
அர்த்தம், “வலது கையின் மகன்.”
நே.மொ., “தன் முன்னோர்களுடன் சேர்க்கப்பட்டார்.” எபிரெயுவில் கவிதை நடையிலுள்ள இந்த வார்த்தைகள் மரணத்தைக் குறிக்கின்றன.
நே.மொ., “சமாதானமாக.”
நே.மொ., “சதைதானே.”
வே.வா., “மீதியானிய வியாபாரிகளிடம்.”
சொல் பட்டியலைப் பாருங்கள்.
மூலமொழியில், “ஷியோலுக்குள்.” சொல் பட்டியலில் “ஷியோல்” என்ற தலைப்பைப் பாருங்கள்.
அதாவது, “யூதா.”
அதாவது, “கணவனுடைய அண்ணன் அல்லது தம்பியுடைய.”
அநேகமாக, “கானானிய தெய்வ வழிபாட்டின் பாகமாக விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்.”
அர்த்தம், “கிழிதல்.”
வே.வா., “தலைவரின் வீட்டுச் சிறைச்சாலையில்.”
இதற்கான எபிரெய வார்த்தை, முகத்தையும் தலையையும் சவரம் செய்வதைக் குறிக்கலாம்.
மரியாதையும் கௌரவமும் கொடுக்க வேண்டும் என்பதை இந்த வார்த்தை அர்த்தப்படுத்தியிருக்கலாம்.
அதாவது, “ஹெலியோபாலிஸ்.”
வே.வா., “கண்காணிக்க.”
அதாவது, “ஹெலியோபாலிஸ்.”
அர்த்தம், “மறக்கச் செய்கிறவர்; மறக்கடிக்கிறவர்.”
அர்த்தம், “இரண்டு மடங்கு தழைத்தல்.”
வே.வா., “பார்வோன் உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”
நே.மொ., “இரத்தத்துக்காக.”
வே.வா., “நீதிமான்கள்.”
வே.வா., “வம்சத்தில் சிலரையும்.”
நே.மொ., “பார்வோனுக்குத் தகப்பனாக.”
வே.வா., “தனக்குச் சொந்தமான எல்லாரையும் கூட்டிக்கொண்டு.”
அதாவது, “ஹெலியோபாலிஸ்.”
வே.வா., “திரும்பத் திரும்பக் கட்டிப்பிடித்து அழுதார்.”
வே.வா., “அன்னியனாக.”
பழங்காலத்தில் இப்படித்தான் உறுதிமொழி கொடுத்தார்கள்.
வே.வா., “கல்லறையிலேயே.” சொல் பட்டியலைப் பாருங்கள்.
நே.மொ., “மேய்த்து.”
வே.வா., “என்னுடைய ஆண்மையின் முதல் பலன்.”
அல்லது, “மனமே.”
அதாவது, “எருதுகளின் பின்தொடை தசைநார்களை வெட்டினார்கள்.”
அர்த்தம், “உரிமைக்காரர்.”
யெகோவாவையும் குறிக்கலாம் யோசேப்பையும் குறிக்கலாம்.
அதாவது, “யோசேப்பை.”
நே.மொ., “என் முன்னோர்களுடன் சேர்க்கப்படப்போகிறேன்.” எபிரெயுவில் கவிதை நடையிலுள்ள இந்த வார்த்தைகள் மரணத்தைக் குறிக்கின்றன.
நே.மொ., “தன் முன்னோர்களுடன் சேர்க்கப்பட்டார்.” எபிரெயுவில் கவிதை நடையிலுள்ள இந்த வார்த்தைகள் மரணத்தைக் குறிக்கின்றன.
பாடம் செய்வது என்பது, உடல் அழுகிப்போகாதபடி அதைப் பாதுகாக்கும் முறையைக் குறிக்கிறது.
வே.வா., “வீட்டில் உள்ளவர்களிடம்.”
அர்த்தம், “எகிப்தியர்களின் துக்க அனுசரிப்பு.”
நே.மொ., “அவர்கள் யோசேப்பின் முழங்கால்களில் பிறந்தார்கள்.”