அபேக்கஸ் மணிச்சட்டம் மீண்டும்பிழைக்குமா?
அபேக்கஸ் மணிச்சட்டம் (abacus) மீண்டும் பிழைப்பது அல்லது பயன்படுத்தப்படுவது ஆபத்தான கட்டத்தை அடைந்திருப்பதாகத் தெரிகிறது. இந்த முறை அது விலைமலிவானதும் பாக்கட் அளவானதுமான மின்னணுக் கணக்குப் பொறியால், அதாவது எலக்ட்ரானிக் கால்க்குலேட்டர்களின் வியாபாரம் அந்த நிலைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஜப்பானில் கால்க்குலேட்டர்கள் 1970-ல் 14 இலட்சமாக இருந்தது. 1983-ல் 6.8 கோடியாக அதிகரித்திருக்கிறது. 1983-ல் அபேக்கஸ் மணிச்சட்டம் வியாபாரம் 20 இலட்சமாக மட்டுமே இருந்தது.
ஒரு சமயத்தில் பிரபலமாயிருந்ததும் கணக்குகள் போடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட இந்த எளிய சாதனத்தை நீங்கள் நிராகரித்துவிடுவதற்கு முன்பு, இது புதிய கண்டுபிடிப்புகளுக்கு எதிராகப் பிழைத்திருக்கப் போராடுவது முதன்முறை அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா?
அபேக்கியானிலிருந்து சோரோபானுக்கு
அபேக்கஸ் மணிச்சட்டம் முற்றிலும் ஒரு கிழக்கத்திய கண்டுபிடிப்பு அல்ல. கிரேக்கர்கள் அபேக்கியானையும் ரோமர்கள் அபேக்கஸையும் கொண்டிருந்தனர். இவை பலகை அல்லது பளிங்குக்கல்லில் வரிசையாகக் கோடுகள் அல்லது வரிப்பள்ளங்கள் கொண்டவை. இந்த வரிகளுக்கு மேலும் கீழும் மணிகளைத் தள்ளுவதன் மூலம் கணக்குகள் போடப்பட்டன. ரோம எண்களைக் கொண்டு கணக்குப் போடுவதிலிருக்கும் கஷ்டத்தை சற்று நினைத்துப் பாருங்கள். அப்பொழுது இப்படிப்பட்ட ஒரு சாதனத்திற்கான அவசியத்தை நீங்கள் காணமுடியும். அப்படியாக ஐரோப்பாவில் கணக்குப் பலகைகளின் உபயோகம் அதிகமாக இருந்தது. இடைக்காலங்களின் பிற்பகுதியில் இந்து-அரபு எண்கள் அறிமுகமாகும்வரை இந்நிலைமை இருந்தது.
அதைத் தொடர்ந்து தாளில் அரபு கணக்குகளைக் கணக்கிடும் அரபிய கணித வல்லுநர்கள் வந்தனர். அபேக்கியர்களோ தங்கள் மணிச்சட்டத்திலும் ரோம எண்களிலுமே தொடர்ந்தனர். இந்த முரண்நிலை தாளின் உபயோகம் அதிகமான 16-வது நூற்றாண்டுவரை தொடர்ந்தது. கடைசியாக தாளில் கணக்குப் போட்ட அரபு கணித வல்லுநர்களின் கைதானே ஓங்கியது, அபேக்கஸ் மணிச்சட்டம் பிழைப்பது ஆபத்தான நிலையை அடைந்தது.
இந்தப் போராட்டம் ஐரோப்பாவில் நடந்துகொண்டிருக்க, அபேக்கஸ் மணிச்சட்டம் கிழக்கத்திய தேசங்களில் புத்துயிர் பெற்றது. 15-ம் நூற்றாண்டில் சீனர்கள் அதற்கு ஒரு புதிய வடிவைக் கொடுத்தனர், அதாவது கம்பிகளில் மணிகளை வைத்து அதை சுவான் பான் அல்லது கணக்குத் தட்டு என்று அழைத்தனர். அங்கிருந்து மஞ்சள் கடல் வழியே ஜப்பானில் பிரவேசித்து, ஒரு எளிய வடிவை எடுத்தது—சோரோபான்.
மின்னணு சகாப்தத்தில் சவால்
இன்னொரு 500 ஆண்டுகளுக்குப் பிழைத்திருந்த அபேக்கஸ் மணிச்சட்டம் ஒரு புதிய சவாலை எதிர்ப்படுகிறது—மின்னணுக் கணக்குப் பொறி, அதாவது எலக்ட்ரானிக் கால்க்குலேட்டர். இந்த எலக்ட்ரானிக் கால்க்குலேட்டர்கள் அதிக விலையுள்ளதாக இருந்த சமயத்தில், ஒரு சிலரே அவற்றை வாங்க முடிந்ததால் சோரோபான் தன்னை சிறிய கடைகளிலும் அலுவலகங்களிலும் பாதுகாப்பாக உணர்ந்தது. ஆனால் கால்க்குலேட்டர்களின் விலை சரிந்ததும் விற்பனை பெருகினதும் சோரோபான் மீண்டும் கைவிடப்பட்ட நிலைக்குள்ளானது. அல்லது கைவிடப்பட்டதா?
சரி, 20 இலக்கங்களையுடைய 15 எண்களை நீங்கள் 20 வினாடிகளில் கூட்ட முடியுமா? 12 இலக்க எண்களை 6-இலக்க எண்களால் பெருக்கும் 30 பெருக்கல் கணக்குகளை நான்கு நிமிடங்களில் செய்து முடிப்பதைப் பற்றியதென்ன? அதை மணிச்சட்ட நிபுணர்கள் செய்ய முடியும். ஆனால் அத்தனை இலக்கங்களைக் கையாளுவதே அநேகருக்குக் கடினம். அந்த இலக்கங்களை எண்ணுவது சிலருக்கு அதிக நேரத்தை எடுக்க, அவர்கள் கணக்குப் போடுவதற்கான நேரத்தை சொல்வதற்கில்லை. ஆனால் சாதாரண கணக்குகளைக் குறித்ததில், அவற்றைச் செய்ய தாங்கள் கால்க்குலேட்டர்களை உபயோகிப்பதைவிட சோரோபானை உபயோகிப்பதையே அநேக ஜப்பானியர் எளிதாகக் காண்கின்றனர்.
இதைக் கண்டு உற்பத்தியாளர் ஒருவர் ஒரு பக்கத்தில் கால்க்குலேட்டரும் மறு பக்கத்தில் மணிச்சட்டமும் கொண்ட ஒரு கணக்குப் பொறியை உற்பத்தி செய்து, இப்படியாக கணக்கு உலகத்தின் இரு சிறந்த முறைகளையும் ஒன்றாகக் கொண்டிருக்கச் செய்திருக்கிறார். இவற்றின் விற்பனை கடந்த பத்து ஆண்டுகளில் 15 இலட்சமாக இருந்தது என்று அறிக்கை செய்யப்படுகிறது. எனவே அபேக்கஸ் மணிச்சட்டம் புது முனைப்புப் பெற்றிருப்பதை நாம் காண முடிகிறதா? அப்படி இருக்கக்கூடும். என்ன இருந்தாலும், கால்க்குலேட்டரைவிட அபேக்கஸ் மணிச்சட்டம் எப்பொழுதுமே ஒரு சிறந்த அம்சத்தைக் கொண்டிருக்கிறது: மின் சக்தி இல்லாமற் போய்விடுமோ என்ற கவலை வேண்டாம். (g86 12⁄8)