பைபிளின் கருத்து
தனிமையிலிருப்பவர்களுக்கு பைபிள் உதவக்கூடுமா?
தன்னுடைய மனைவி ஒரு மருத்துவ மனையிலுருந்ததால் வயதான இவருக்கு வாழ்க்கை தனிமையின் வாழ்க்கையாக அமைந்தது. வாரங்கள் கடந்து செல்லவே, உயிரோடிருப்பதற்கு ஒரு காரணமுமில்லை என்ற முடிவுக்கு வந்தார். எனவே அவர் ஒரு துப்பாக்கியை எடுத்து . . .
தனிமை “20-வது நூற்றாண்டு நோய்” என்று அழைக்கப்படுகிறது. அது வயதானவர்களை மட்டும் பாதிப்பதில்லை, ஆனால் இளைஞர் மத்தியில் போதை மருந்து துர்ப்பிரயோகம், குடிவெறி மற்றும் தற்கொலைக்கும் காரணமாக இருக்கிறது.
என்றாலும் தனிமை என்பது நவீன நாளைய கொள்ளை நோய். தனிமையின் வெற்றுணர்வை நிரப்புவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் வீண் என்று நிரூபித்துள்ளன. சிலர் தங்களைச் சூழ “நண்பர்களைக்” கொண்டிருக்க முயன்றிருக்கிறார்கள்—அப்படிப்பட்ட உறவுகள் மேலோட்டமானவை, திருப்தியற்றவை என்பதைத்தான் காண்கின்றனர். சிலர் விவாகத்திற்குள் பிரவேசிக்கிறார்கள். பிரபல உளநூலர் மருத்துவர் ஜாய்ஸ் பிரதர்ஸ் குறிப்பிட்டதாவது: “விவாகத்தில் அவசரப்பட்டு பிரவேசிப்பது (தனிமைக்கு) விடை அல்ல. எந்தவிதமான உறவுக்குள்ளும் பிரவேசிப்பதற்கு முன்பு உங்களுடைய சொந்த பிரச்னைகளின்பேரில் உங்களுக்குக் கூடுதலான உட்பார்வை தேவை.”
சரியான நோக்குநிலை
என்றபோதிலும் பைபிள் தனிமையின்பேரில் நடைமுறையான நோக்குநிலை என்ன என்பதைக் காண்பிக்கிறது. தனிமை அதிக வேதனைத் தருவதாக இருக்கக்கூடும் என்பது ஒப்புக்கொள்ளத்தக்கது, ஆனால் தனிமையாக இருப்பதுதானே எல்லா சமயங்களிலும் கெட்ட ஒரு காரியம் அல்ல. இயேசு கிறிஸ்துவுங்கூட சிலசமயங்களில் தனிமையாக இருப்பதில் இன்பம் கண்டார். (மத்தேயு 14:13) தனிமையாகிவிடுவதை அல்லது தன்னை ஒதுக்கிக்கொள்வதைப் பார்க்கிலும், அப்படிப்பட்ட சமயங்களை அவர் அவசியமான ஓய்வுக்கும் ஜெபத்திற்கும் பயன்படுத்தினார்.—மாற்கு 6:31; லூக்கா 9:18.
இதில் என்ன படிப்பினை இருக்கிறது? நீங்கள் தனிமையாக இருப்பதாகக் கண்டால், தனிமையாக இருப்பதாய் உணரவேண்டிய அவசியமில்லை! உண்மையில், சரீரத்தில் நீங்கள் தனிமையாக இருக்கும் காரியத்தைவிட தனிமையின் பேரில் உங்கள் நோக்குநிலை தானே, நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதற்கு முக்கிய அம்சமாக இருக்கிறது. எனவே நீங்கள் தனிமையாக இருக்கும் போது உங்கள் நேரத்தை எப்படி உபயோகிக்கிறீர்கள்? நீங்கள் வெறுமென நேரத்தை வீணாக்குகிறீர்களா? அப்படிப்பட்ட நேரத்தை ஏன் பயனுள்ள விதத்தில் உபயோகிக்கக்கூடாது? தனிமையாக மகிழக்கூடிய சில பயனுள்ள செயல்கள் இருக்கின்றன, உதாரணமாக இன்னிசை கேட்பது அல்லது வெகு நாட்களாக செய்யப்படாதிருக்கும் வீட்டு வேலைகளைச் செய்வது போன்ற காரியங்களைச் செய்யலாம். கடவுளுடைய வார்த்தையை வாசிப்பது விசேஷமாகப் பயனுள்ளது. அது “ஜீவனும் வல்லமையும் உள்ளது,” நம்மைக் குறித்தே நாம் நினைத்துக்கொண்டிருப்பதிலிருந்து நம் மனதைத் திருப்பக்கூடும். (எபிரெயர் 4:12) சரியாகப் பயன்படுத்தப்பட்டால், தனிமையின் நேரங்கள்தானே நீங்கள் உடல் சம்பந்தமாகவும், உணர்ச்சி சம்பந்தமாகவும் ஆவிக்குரிய பிரகாரமும் புத்துயிரடைய உதவக்கூடும்.
மற்றவர்களுடன் நல்ல உறவுகள்
மற்றவர்களுடைய கூட்டுறவை நீங்கள் விரும்பும், மற்றும் உங்களுக்கு தேவைப்படும் சமயங்களும் உண்டு. மற்றவர்களுடன் திருப்தியளிக்கும் உறவை வளர்ப்பது குறித்து பைபிளுங்கூட ஆலோசனை கொடுக்கிறது. உதாரணமாக, நீதிமொழிகள் 18:24 பின்வருமாறு குறிப்பிடுகிறது: “சகோதரனிலும் அதிக சொந்தமாய் சிநேகிப்பனும் உண்டு.” எனவே தனிமையை ஒழித்துக்கட்டுவதற்கு எப்பொழுதுமே ஒரு பெரிய நண்பர் குழாம் தேவையில்லை. நீங்கள் ஒருசில நெருங்கிய நண்பர்களைப் பேணிக் காத்துக்கொள்ளலாம்.
தனிமையில் இருப்பவர்கள் நண்பர்களை ஏற்படுத்துவது கடினமாயிருப்பதைக் காண்கிறார்கள். ஆனால் கானடா தேசத்து குடும்ப ஆலோசகர் கூறுவதாவது: “தனிமையிலிருப்பவர்கள், குறிப்பாகத் தங்கள் 20-களில் இருப்பவர்கள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள், ஆனால் ஒன்றும் கொடுப்பதற்கு மனமற்றவர்களாக இருக்கிறார்கள்.” அதுபோல பைபிளும் குறிப்பிடுவதாவது, ‘பிரிந்துபோகிறவன் தன் இச்சையின்படி செய்யப்பார்க்கிறான்.’—நீதிமொழிகள் 18:1.
எனவே நீங்கள் தனிமையின் உபாதையில் இருக்கிறீர்கள் என்றால், மற்றவர்களில் அதிக அக்கறை காண்பிக்கவேண்டியதாயிருக்கும். உங்களுடைய நண்பர்களாக இருக்கும் வாய்ப்புள்ளவர்களைச் சந்திக்கும்போது, நீங்கள் அவர்களுடைய அக்கறைகளைக்குறித்து கரிசனையுள்ளவர்களாய் இருக்கிறீர்களா, அல்லது சம்பாஷணையை உங்கள் பக்கமாகவே திருப்புகிறீர்களா? தனிமையின் சுழற்சியை முறிப்பதற்கு, நீங்கள் கொடுக்கும் தன்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
பிலிப்பியர் 2:4-ல் பவுல் அப்போஸ்தலன், ‘நம்முடைய சொந்த தனிப்பட்ட அக்கறைக்குரிய காரியங்களில் மட்டுமல்ல, ஆனால் மற்றவர்களுடைய தனிப்பட்ட அக்கறைக்குரிய காரியங்களிலும் நோக்கமாயிருக்கவேண்டும்,’ என்று நம்மைத் துரிதப்படுத்துகிறான். அந்த ஆலோசனை தனிமைக்கு எப்படி நிவாரணமாயிருக்கும்? பைபிளின் மூல மொழியில், “நோக்கமாயிருத்தல்” என்ற வார்த்தைக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் வினைச்சொல், செயல்படுவதற்கு அதிக சாதகமான சமயத்தைக் குறிப்பிடும் நோக்கத்தோடு ‘மனதில் சிந்தனை செய்வது’ அல்லது ‘ஆய்வுசெய்வது’ என்பதைக் குறிக்கிறது. எனவே உங்களைச் சுற்றிப்பார்த்து, யாருக்கு உதவி தேவை, யாருக்கு ஒரு நண்பர் தேவை என்று கண்டுபிடியுங்கள். அப்படிப்பட்ட ஒரு நபரை நீங்கள் கண்டுபிடித்தப் பிறகு—செயல்படுங்கள்! அநேகர் தங்களுக்காக மட்டுமே பார்க்கிறார்கள்; மற்றவர்களெல்லாரும் கடைசியாகிவிடுகிறார்கள். பைபிள் எதிரிடையான காரியத்தைச் சிபாரிசு செய்கிறது: முதலாவது மற்றவர்களுக்காகப் பாருங்கள்.
இப்படியாக, நண்பர்களைக் கொண்டிருப்பதற்கு, முதலாவது நீங்கள் நண்பராக செயல்படவேண்டும்! பைபிள் கூறுகிறது: “கொடுப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள், அப்பொழுது மக்கள் உங்களுக்குக் கொடுப்பார்கள்.” (லூக்கா 6:38, NW) அத்துடன், “வாங்குவதிலிருப்பதைவிட கொடுப்பதில் அதிக மகிழ்ச்சி இருக்கிறது.”—அப்போஸ்தலர் 20:35.
“நான் தனித்திரேன்”
என்றபோதிலும் மனித தொடர்புகள் முழுவதுமாக நம்முடைய தேவையைப் பூர்த்திசெய்ய முடியாது. இதற்குக் காரணம், மனிதன் தன்னுடைய சிருஷ்டிகருக்கு மிக நெருங்கி வாழவேண்டும் என்ற நோக்கத்தோடு சிருஷ்டிக்கப்பட்டான். (மத்தேயு 5:3-ஐ ஒப்பிடவும்.) மனித நட்புகள் தோல்வியுறும்போதுங்கூட, கடவுளுடன் கொண்டிருக்கும் நட்பு பாதுகாப்பானதாயிருக்கக்கூடும். இயேசு கிறிஸ்து ஒருமுறை தன்னுடைய சீஷர்களிடம் சொன்னார்: “இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்; அது இப்பொழுது வந்திருக்கிறது.” என்னே மனமுறிவை ஏற்படுத்தும் காரியம்! ஆனால் இயேசு பின்வருமாறு சொல்ல முடிந்தது: “ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார்.”—யோவான் 16:32.
கடவுளுடன் கொண்டிருக்கும் நட்புதானே தனிமைக்கு மிகச் சிறந்த பரிகாரமாக இருக்கிறது. எனவே அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள நேரமெடுத்துக் கொள்ளுங்கள். பைபிளைப் படிக்க ஆரம்பிப்பதன் மூலம் “யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்.” (சங்கீதம் 34:8; யோவான் 17:3) ஆனால் அதை நீங்கள் தனிமையில் செய்யவேண்டிய அவசியமில்லை.
கடவுள் “தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தைத் தெரிந்துகொண்”டிருக்கிறார். (அப்போஸ்தலர் 15:14) முப்பது இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் யெகோவாவின் சாட்சிகள் என்ற அந்தப் பெயரைப் பெருமிதத்துடன் தாங்கியவர்களாயிருக்கிறார்கள். இந்தக் கடவுளைக் குறித்து நீங்கள் கற்றுக்கொள்ள உங்களுக்கு உதவி செய்ய மனமுள்ளவர்களாயிருக்கிறார்கள். ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட தனிமையாக இருந்த அந்த வயதான மனிதனை நினைத்துப்பாருங்கள். தன்னைத் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னால், அவரை யெகோவாவின் சாட்சிகள் சந்தித்தார்கள். தன்னைக் குறித்து அக்கறை காண்பிக்கும் ஒரு கடவுள் இருக்கிறார் என்பதை அவர் மதித்துணரும்படிச் செய்தனர். (1 பேதுரு 5:7) பைபிளைப் படிக்க ஆரம்பித்ததும் அவருடைய மன முறிவு மன மகிழ்ச்சியாக மாறியது.
அக்கறைக்குரியவிதமாக, உண்மையான கிறிஸ்தவர்களுடன் கூட்டுறவு கொள்வது புதிய நண்பர்களை ஏற்படுத்திக்கொள்ளவும் வழிவகுக்கிறது. இப்படிப்பட்ட நட்பு, கடவுள் பேரிலுள்ள பரஸ்பர அன்பின் அடிப்படயில் அமைவதால், இவை நிரந்தரமாக நிலைக்குந்தன்மை வாய்ந்தவை. எனவே, யெகோவாவின் மக்களைத் தேடிக் கண்டுபிடியுங்கள். அவர்களுடைய உதவிகொண்டும், கடவுளுடைய வார்த்தை அளித்திடும் உதவிகொண்டும் நீங்கள் தனிமையின் வேதனைகளைப் போக்கிட கற்றுக்கொள்ளலாம்.—மத்தேயு 12:48–50; யோவான் 15:14. (g87 11⁄8)