ஜானிக்கு இப்பொழுது ஒரு கம்ப்யூட்டர் தேவையா?
நம்முடைய பிள்ளைகளின் கல்வியில் கம்ப்யூட்டர் வகிக்கும் பாகம் என்ன?
அது எத்தனை நல்ல ஆசிரியராக இருக்கின்றது?
ஜானியின் தாய், அவனுடைய ஆசிரியை சொல்வதை அமைதியாகக் கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். ஜானி, பள்ளியில் சரியாகப் படிப்பதில்லை என்பதாக ஆசிரியை அவளிடம் சொன்னாள்.
“சரி, அதற்கு உங்கள் யோசனை என்ன?” என்பதாகத் தாய் கேட்டாள்.
“குடும்பக் கம்ப்யூட்டர் பற்றி நீங்கள் யோசித்ததுண்டா?” என ஆசிரியை பதிலளித்தாள்.
மேலே விளக்கப்பட்டுள்ளதைப் போன்று ஒரு காட்சியை வரைந்து காட்டும் விளம்பரங்கள், தங்கள் பிள்ளைகளுக்கு சரியான கல்வியையும்—எதிர்கால வேலை வாய்ப்புகளையும் நிச்சயப்படுத்திக் கொள்ள, கம்ப்யூட்டர்களைப் பற்றி எல்லாவற்றையும் தங்களுடையப் பிள்ளைகள் கற்றுக்கொள்வதைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதாக கவலையுள்ள அநேக பெற்றோரை நம்பும்படிச் செய்ய அதிகத்தைச் செய்திருக்கின்றன. மேலுமாக கம்ப்யூட்டர்கள் வகுப்பறைகளில் வேகமாக அதிகரித்துவரும் விகிதத்தில் காட்சியளிக்கின்றன.
நிச்சயமாகவே, கம்ப்யூட்டர், முன்னொரு சமயம் சாத்தியமற்றதாக இருந்த வழிகளில் கற்பிப்பதற்கும் ஆக்கத்திறனையும் சிக்கல்களுக்கு தீர்வுகாணும் திறனையும் வளர்ப்பதற்கு உள்ளடங்கிய ஆற்றலைக் கொண்டிருக்கிறது.
உதாரணமாக ஒரு கம்ப்யூட்டர் வழியமைப்பு, ஒரு மாணவனை, ஒரு தவளையை அறுத்து ஆய்வு செய்வதற்கு மட்டுமல்லாமல் அதை மீண்டும் ஒன்று சேர்ப்பதற்கும் அனுமதிக்கிறது. மாணவன், “அறுவையை” சரியாக செய்து முடிப்பானேயானால், தவளை உயிர்பெற்று திரையிலிருந்து குதித்து வெளியே வருவதைக் காண்பதை வெகுமதியாகப் பெற்றுக் கொள்கிறான். மற்ற அலுவல் திட்டங்கள் கிரகங்களின் இயக்கத்தைத் தூண்டி பூமியின் நிலயியலின் உருவப்படமெழுதி, அல்லது மாணவனை ஒரு விமானத்தை ஓட்ட அல்லது காரை ஓட்ட அல்லது இரசாயன பரிசோதனையைச் செய்ய உதவி செய்கிறது.
கம்ப்யூட்டர் பயன்படுத்தப்படும் மற்றொரு வழி பொதுவாக கம்ப்யூட்டர்–உதவி கல்வி என்றழைக்கப்படுகிறது. கம்ப்யூட்டர் ஒரு கேள்வியைக் கேட்கிறது. மாணவன் சரியாக பதில் சொன்னால், அது அடுத்தக் கேள்விக்குச் செல்கிறது. இல்லையென்றால் மாணவனுக்கு துணைக்குறிப்புகளைக் கொடுத்து நினைவுபடுத்துகிறது. இது ஒன்றன்பின் ஒன்றாக கற்றுக்கொள்ளும் அனுபவத்தை மாணவனுக்குக் கொடுத்து அவனுடைய சொந்த வேகத்தில் செல்ல அவனை அனுமதிக்கிறது. தவிர ஒரு கம்ப்யூட்டருக்கு எல்லையில்லா “பொறுமை” இருக்கிறது. தவறான பதில்கள் கொடுக்கப்படுகையில் ஓர் ஆசிரியை போன்று “நிலைகுலைந்து” போவதில்லை. இதுவும்கூட கற்றுக்கொள்வதற்கு உகந்ததாக இருக்கிறது.
பெரும்பாலான பள்ளிகள் இப்பொழுது கம்ப்யூட்டர்–படிப்பு வகுப்புகளைக் கொண்டிருக்கின்றன. இந்த வகுப்புகள் இயந்திரத்தை எவ்விதமாக இயக்குவது வழித்திட்டமிடுவது என்பதை மாணவர்களுக்குக் கற்பிக்கின்றன. கம்ப்யூட்டர் துறையில் ஒரு வாழ்க்கைப் பணியில் அக்கறையுள்ளவர்களாக இருப்பவர்களுக்கு இது அதிமுக்கியமானதாக இருக்கக்கூடும். இவ்வகையான பாடத்திட்டத்தை ஆதரிப்பவர்கள் எல்லா மாணவர்களும் கம்ப்யூட்டர்களைப் பற்றி ஓரளவு தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று ஆணித்தரமாக நம்புகிறார்கள். உண்மையான அல்லது கற்பனையான வேலைவாய்ப்புகளும்கூட இப்படிப்பட்ட வகுப்புகளை வெகுவாக கவர்ச்சியானதாக்குகின்றன.
எழுத்துக் கலையும் ஆராய்ச்சியும் பள்ளி கம்ப்யூட்டர்களின் மற்ற நடைமுறை பயன்களாகும். எழுத்துக் கலை வகுப்புகளிலுள்ள ஆசிரியர்கள், கம்ப்யூட்டர்களை வார்த்தைகளைத் தொகுத்திடும் கருவிகளாகப் பயன்படுத்தும் மாணவர்கள், தங்கள் சொந்த குறிப்புரையை மறுபடியும் எழுதவும் திருத்தி அமைக்கவும் அதிக மனமுள்ளவர்களாக இருப்பதாகக் காண்கிறார்கள். இவ்விதம் செய்வது நல்ல எழுத்துக்கலையின் இன்றியமையாத பாகமாகும். இதற்குக் காரணம் அவர்கள் எப்பொழுதும் தங்கள் முன்னால் நிறைவளிக்கும் நேர்த்தியான தோற்றமுள்ள விளைவைக் கொண்டிருக்கிறார்கள்.
கம்ப்யூட்டர் மாணவனுக்கு மிக அதிகமானத் தகவலின் ஊற்றுமூலத்தையும்கூட திறந்துவைக்கக்கூடும். பொருத்தமான கருவிகளை பயன்படுத்தி, ஒரு பள்ளியிலுள்ள மாணவர்கள் விசேஷித்த திட்டங்களுக்கு மற்ற பள்ளிகளிலுள்ள மாணவர்களோடு தொடர்பு கொள்ள முடியும். அவர்கள் பெரிய மத்திய நூலகங்களோடும், செய்திக் குறிப்பு வங்கிகளோடும்கூட தொடர்பு கொண்டு அவர்களுடைய சொந்த பள்ளி நூலகங்களில் ஒருபோதும் பராமரிக்க முடியாத பல்வேறு பொருள்களின் பேரில் காலத்தோடு வளர்ச்சியடைந்துள்ள தகவலைப் பெறும் வாய்ப்பைக் கொண்டிருக்கலாம்.
சரியாகப் பயன்படுத்தப்படுகையில் கம்ப்யூட்டர் ஒரு போதனா கருவியாக இருப்பது தெளிவாக இருக்கிறது. போதிய கம்ப்யூட்டர்கள் இருக்குமிடங்களில் கிடைக்கும் நடைமுறை அனுபவமும் ஒன்றன் பின் ஒன்றாகப் படிப்பதும் இளம் மாணவர்களுக்குப் பயனுள்ளவையாகும். உயர் வகுப்பு மாணவர்கள், பாடபுத்தகத்தை அடிப்படையாகக் கொண்ட பாடத்திட்டத்துக்கும் அப்பால் சென்று, கம்ப்யூட்டரால் சாத்தியமாக்கப்பட்டிருக்கும் புதிய கல்வி முறைகளிலிருந்து பயனடையலாம்.
இவை அனைத்துமே கேட்பதற்கு ஆச்சரியமாயிருக்கின்றன. ஆனால் நிஜ வாழ்க்கையில் காரியங்கள் எவ்வாறு இருக்கின்றன. கம்ப்யூட்டர் அதன் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்பட்டிருக்கிறதா?
எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பவையா?
கல்வியில் கம்ப்யூட்டர்களை நற்பயனுள்ளதாகச் செய்வது உண்மையில் எந்த ஒரு பள்ளி பாடத்திட்டத்தையும் நற்பயனுள்ளதாகச் செய்வதிலிருந்து உண்மையில் வித்தியாசமாக இல்லை. தகுதி வாய்ந்த ஆசிரியர்களால் சரியான வகையான வழித்திட்டமிடல்கள் கற்பிக்கப்படுவதே தேவையாக இருக்கிறது. இந்த நியதி நிறைவு செய்யப்பட்டிருக்கிறதா?
சில பள்ளிகள் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை விலைகொடுத்து வாங்கும் அவசரத்தில், இவை எவ்விதமாக பயன்படுத்தப்படும் மற்றும் மாணவர்களின் தேவைகள் என்ன என்பதையெல்லாம் கவனமாக சிந்தித்துப் பார்க்காமல், கம்ப்யூட்டர்களை வாங்கியிருக்கின்றன. அநேகப் பள்ளிகள் தங்கள் கம்ப்யூட்டர்களுக்கு மதிப்புள்ள பயன்களை கண்டுபிடிக்கும் வருத்தம் தரும் வேலையில் மாட்டிக்கொண்டு தவிப்பதே இதன் விளைவாகும்.
பள்ளி கம்ப்யூட்டர்கள் தற்போது எவ்விதமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதில் இந்நிலைமை தெரிகிறது. கவர்ச்சியூட்டும் வழித்திட்டங்களும் கற்பிப்பதற்கு கூர்மதியான வழிமுறைகளும் இருந்தபோதிலும் பள்ளிகளில் மொத்தத்தில் பயன்படுத்தப்படுவதில் குறைந்தபட்சமே இப்படிப்பட்ட திட்டங்களாக இருப்பதை சுற்றாய்வுகள் காண்பிக்கின்றன. வகுப்பறைகளில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான திட்டங்கள் பழக்கத்துக்கும் பயிற்சிக்கும் அல்லது கம்ப்யூட்டர் அறிவுக்காகவுமே.
பழக்கமும் பயிற்சியும் நிச்சயமாகவே பள்ளியில் தங்களுடைய இடத்தைக் கொண்டிருக்கின்றன. ஆனால் பள்ளி ஆசிரியரும் கம்ப்யூட்டர்–கல்வி போதகருமானவரால் எழுப்பப்படும் கேள்வியிலுள்ள நியாயத்தை மறுத்து வாதிடுவது கடினமாக இருக்கிறது: “அதிகமான பழக்கத்துக்கும் பயிற்சிக்கும் தாள்களைக் கொண்ட எளிய, பழைய, 2.95 டாலர் பாட பயிற்சி செய்யக்கூடிய அதே காரியத்துக்காக, ஏன் 2,000 அல்லது 1,200 டாலர்களை அல்லது 600 டாலர்களையும்கூட ஓர் எலக்ட்ரானிக் பாடப்பயிற்சிக்காகச் செலவழிப்பது?” மேலுமாக இப்படிப்பட்ட பயன்கள் வகுப்பறையில் கம்ப்யூட்டர்களை உபயோகப்படுத்துவதன் முழு நோக்கத்தையுமே கெடுத்துவிடுகின்றன. ஏனென்றால் அவை சிந்தனையையும் ஆக்கத்திறனையும் தூண்டுவிப்பதற்குப் பதிலாக சரி மற்றும் தவறு விடைகளைத் தேடுவதற்கு கல்வியின் வலிமையைக் குறைத்துவிடுகின்றன.
கம்ப்யூட்டர் அறிவின் தேவையைப் பொறுத்தவரையில், இது கம்ப்யூட்டர் உற்பத்தியாளர்கள் மற்றும் அதோடு சம்பந்தப்பட்ட தொழில்களின் சாமார்த்தியமான சூழ்ச்சி மாத்திரமே என்பதாக அநேகர் நினைக்கிறார்கள். ஆரம்பத்தில் எடுத்துக்காட்டாகக் கூறப்பட்டது போன்ற விளம்பரங்களினாலும் இந்தப் புதிய உபகரணத்தைப் பற்றி தங்களுடைய சொந்த பயத்தின் காரணமாகவும் தங்களுடைய பிள்ளைகளுக்கு கம்ப்யூட்டர்களைப் பற்றிய செயலறிவு இல்லாவிட்டால் அவர்கள் தோல்வியுறுவர் என்பதாக அநேக பெற்றோர் நினைக்கின்றனர். உண்மையில் எதிர்காலத்தில் வெகு சில வேலைகளுக்கே கம்ப்யூட்டர் அறிவு தேவைப்படும், அதாவது, அலுவல் திட்டம் வரையும் அறிவு, கம்ப்யூட்டர் மொழி போன்றவை. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமானால், கம்ப்யூட்டர்கள் இன்று கணக்குப் பொறி அல்லது மின்தட்டச்சுப் பொறிகள் சாதாரணமாகப் பயன்படுத்தப்படுவது போன்றே கருவிகளாகவே பயன்படுத்தப்படும். நிச்சயமாகவே இந்தக் கருவிகளை எவ்விதமாக பயன்படுத்துவது என்பதை தெரிந்து வைத்திருப்பது விரும்பத்தக்கதாக இருக்கிறது, ஆனால், இத்துறையில் வாழ்க்கைத் தொழிலைக் கொண்டிருப்பதில் ஒருவர் அக்கறையுடையவராக இருந்தாலொழிய அவை எவ்விதமாக வேலைச் செய்கின்றன என்பதை அறியாதிருப்பதைக் குறித்து எவருமே கவலைப்படுவதில்லை. கம்ப்யூட்டர் அறிவு ஒரு விருப்பப் பாடமாகவே கற்பிக்கப்பட வேண்டும் என்பதே தற்போது நிலவி வரும் கருத்தாக உள்ளது.
கம்ப்யூட்டர்கள் ஒப்பிடும்போது வகுப்பறையில் புதிதாக ஏற்பட்டவையாக இருப்பதால், மாணவர்களுக்கு இருப்பது போலவே தொழில்நுட்ப பின்னணி அறிவில்லாத ஆசிரியர்களுக்கும்கூட அநேகமாக ஆழங்காண முடியாததாகத் தோன்றுகிறது. இதன் காரணமாக, மாற்றத்துக்கு வரும் எதிர்ப்பு கம்ப்யூட்டர் போதனையின் அளவை உயர்த்துவதில் முக்கிய இடையூறாக இருப்பதாகப் பள்ளி அதிகாரிகள் காண்கிறார்கள்.
“அநேக ஆசிரியர்கள் கம்ப்யூட்டர்களோடு அசெளகரியமாக உணருகிறார்கள்” என்றார் ஒரு பள்ளி முதல்வர். “கம்ப்யூட்டர்கள் இங்கே இருக்கின்றன, இவைகளில் தாங்கள் அக்கறையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். ஆனால் ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பது இன்னும் மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது.” ஆசிரியர்களுக்கு மறுகல்வி புகட்ட நேரமும் பணமும் எடுக்கிறது. என்றபோதிலும் ஆசிரியர்கள் அதிகமாக அனுபவத்தை அடைந்து அதிகமான கம்ப்யூட்டர் அறிவுள்ள ஆசிரியர்கள் இவர்களைச் சேர்ந்துகொள்கையில், இந்தக் கருவிக்குப் பயனுள்ள உபயோகம் கண்டுபிடிக்கப்படும் என்பதாக பள்ளி அதிகாரிகள் நம்பிக்கைத் தெரிவிக்கிறார்கள்.
பெற்றோர் என்ன செய்வது அவசியம்
ஆகவே ஜானிக்கு இப்போது ஒரு கம்ப்யூட்டர் உண்மையில் தேவையா? பதில், பெற்றோராகிய உங்கள் மேல் சார்ந்திருக்கக்கூடும். கம்ப்யூட்டர் இல்லாவிட்டால் உங்கள் பிள்ளை தோல்வியுறுவான் என்பது உங்கள் கவலையாக இருக்குமானால் அப்போது முன்னால் சொல்லப்பட்ட உண்மைகளை அதிக சமநிலையோடு காண உங்களை அனுமதிக்கும்.
பள்ளி பிள்ளைகள் ஓரளவாவது கம்ப்யூட்டர்களை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும் என்பதாகப் பொதுவாக கல்வித்துறையிலுள்ளவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். இதற்காக, இன்று பெரும்பாலான பெருமக்கள் பள்ளி, கம்ப்யூட்டர்களைப் பற்றி மாணவர்களுக்குக் கற்பிக்க ஏதோ ஒருவகையான வழித்திட்டத்தை வரைந்து ஒரு கம்ப்யூட்டரின் இயந்திர நுட்ப, காந்த மற்றும் மின்ம இயக்க, திட்ட அமைப்பு, கட்டமைப்பு மற்றும் கருவிகளின் அடிப்படைக் கூறுகளை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்கள்—கம்ப்யூட்டர் விசைக்கட்டை, வட்டத் தகடு பாதை, அச்சுப் பொறி போன்றவை—மற்றும் அடிப்படை வழிதிட்டமிடலும் உட்படுகிறது. பள்ளிகள் பொதுவாக கம்ப்யூட்டர் வகுப்புகளில் தேவையான கருவிகளை அளிக்கின்றன, மாணவர்களுக்கு நடைமுறை அனுபவம் கொடுக்கப்படுகிறது. கம்ப்யூட்டர் துறையில் அக்கறையுள்ளவர்கள், மற்ற மாணவர்கள் கலை, கணக்கு வைப்பு முறை, செயலாண்மை அல்லது மற்ற பயிற்சிகளைத் தெரிந்துகொள்வது போலவே பிற்பட்ட ஆண்டுகளில் விசேஷ வகுப்புகளைத் தெரிந்துகொள்ளலாம்.
நிச்சயமாகவே, சில பள்ளிகளில் கம்ப்யூட்டர்கள் அதிக விரிவாக பயன்படுத்தப்பட்டு பல்வேறு பாடங்களைப் பற்றி கற்பிக்க புதிய அலுவல் திட்டங்களைப் பயன்படுத்திக்கொள்கின்றன. ஆனால் இப்படிப்பட்ட பாடத் திட்டங்கள் ஒப்பிடப்படுகையில் இன்னமும் புதியவையாகவே இருப்பதால், பழைய கல்வி முறைகளைவிட இது மேம்பட்டதாக இருக்குமா என்பதை எவரும் நிச்சயமாகவே அறியாதிருக்கின்றனர்.
ஒருவேளை நியு யார்க் டைம்ஸ்-ல் வெளியான கட்டுரையில் உயர்நிலைப் பள்ளி இளம்படியினர் ஒருவரின் வார்த்தைகள் நிலைமையைச் சுருக்கிக்கூற உதவுகிறது. அவர் எழுதுகிறார்: “கம்ப்யூட்டர்கள் கருவிகளாக கல்வியில் ஓரிடத்தைக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவை திறமைக் கேட்டுக்கும் அநாகரீகமான சிந்தனைக்கும் எதிராக ஒரு வகையான சமூக காப்புறுதியாக இல்லை.” எவ்விதமாகச் சிந்திப்பது என்பதை மாணவர்களுக்கு கற்பிப்பதன் முக்கியத்துவத்தை அழுத்திக்கூறுகையில் அவர் இவ்விதமாக முடிக்கிறார்: “அந்த இலக்கை அடைய தொழில்நுட்பக் குறுக்கு வழி எதுவுமில்லை.” (g89 7/22)
[பக்கம் 27-ன் பெட்டி]
“பீப் ஒலி செய்யும் பெட்டிக்கு முன்னால் ஒரு மணிநேரம் செலவழிப்பதிலிருந்து கிடைப்பதைக் காட்டிலும், அக்கறையுள்ள ஒரு பெற்றோரோடு செலவழிக்கும் ஒரு மணிநேரத்தில் பிள்ளைக்கு அதிக நன்மை கிடைக்கும்.” தனிநபர் கம்ப்யூட்டர்கள் பத்தி, தி நியு யார்க் டைம்ஸ்