“நாம் ஒரு ஹோஷதா டி ஷுஃபஸை அருந்துவோம்!”
உங்களுக்கு இந்த அழைப்பு அநேகமாக பழக்கமற்றதாக இருக்கும். ஆனால் நீங்கள் ஸ்பெய்னில் முக்கியமாக அதன் கிழக்கு கடற்கரையில் வாழ்ந்தீர்களென்றால், நிச்சமாகவே பழக்கமானதாக இருக்கும். வருடமுழுவதும், முக்கியமாக வெப்பமான கோடைநாட்களில், திரளானோர் இந்த இனிப்பான, புத்துணர்வூட்டும் மதுக்கலப்பற்ற பானமானத் தனித்தன்மை வாய்ந்த ஹோஷதா டி ஷுஃபஸை அருந்திக் களிக்கின்றனர்!
ஹோஷதா, வாதுமைக்கொட்டை மற்றும் பூசனிகள் அல்லது முலாம்பழங்களின் கொட்டைகளைக் கொண்டும், அரிசி, ஆப்ரிகாட், ஆப்பிள்கள், செர்ரிகள், முந்திரிப் பழங்கள், வெர்ஜீஸ் திராட்சைகள், மல்பெரிகள், ப்ளம்கள், லிக்கோரிஸ் ஆகியவற்றைக் கொண்டும் தயாரிக்கப்படலாம் என்று அறிய அநேக ஸ்பெய்ன் நாட்டவரே ஆச்சரியப்படுகின்றனர். எனினும், இந்தப் பானத்தின் அடிப்படையான தேவையான பொருளாக, ஸ்பெய்ன் தேசத்தவர் பொதுவாக ஷுஃபஸையே நினைக்கின்றனர்.
ஆனால், ஷுஃபஸ் என்பவை என்ன? அவைகள் பூமி அல்லது தரை வாதுமைக்கொட்டைகள் அல்லது ரஷ் கொட்டைகள் ஆகும். அந்த வார்த்தை குறிப்பாக, ஐரோப்பிய செட்ஜ் (சைப்ரஸ் எஸ்குலேன்டஸ்) செடி விளைவிக்கும் சிறிய கொட்டை போன்ற தரைக்கடியில் வரும் ஒவ்வொரு கிழங்குக்கும் பொருந்தும். அவைகள் தரைமட்டத்திற்கு கீழ் சுமார் ஐந்திலிருந்து எட்டு சென்டிமீட்டர் கீழே காணப்படுகின்றன. ஸ்பெய்னில் மட்டுமன்றி மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவிலும் செட்ஜ் செடி ஜூலை முதல் அக்டோபர் வரை வளர்க்கப்படுகின்றது. அங்கிருந்து அரேபியர்கள் அதை ஸ்பெய்னுக்கு கொண்டு வந்தனர். முதலில் நாட்டின் தென் பகுதியில் இது பயிரிடப்பட்டாலும், பெரிய அளவில் இது வளர்க்கப்படும் ஸ்பெய்னின் மத்தியதரைக் கடற்கரையிலுள்ள வாலென்ஸியாவின் நீர்பாசன வசதி நிரம்பிய வயல்களைவிட இதை வளர்க்க அதிகப் பொருத்தமான இடம் இல்லை.
நாம் ஹோஷதாவை எப்படி தயாரிக்க வேண்டும்? ஷுஃபஸ்கள் அநேக மணிநேரம் ஊறவைக்கப்படுகின்றன. சரியாக எவ்வளவு நேரம் என்பது பற்றி ஒவ்வொரு ஹோஷதா தயாரிப்பாளரும் தங்கள் சொந்த அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கின்றனர். இது, ஷுஃபஸ்கள் அதிக அளவு தண்ணீரை உறிஞ்சுவதால், அவைகளைப் பெரியதாக ஆக்குகின்றன. இப்பொழுது அவைகளை நசுக்குவதற்கான நேரம், அப்போது மேலும் தண்ணீர் சேர்க்கப்படுகிறது. நசுக்குவது முடிந்தபின் கூழாக இருக்கும் பொருள் ஒரு பாத்திரத்திலிடப்பட்டு, நன்றாகக் கலக்கப்பட்டு, 15 நிமிடம் அது அமருவதற்கு நேரம் கொடுக்கப்பட்டபின், கூழிலிருந்து சாற்றை தனியாகப் பிரிப்பதற்காக பிழியும் கருவியினுள்ளாக அனுப்பப்படுகின்றது. பின்னர் சாறு வடிக்கப்பட்டு சர்க்கரை சேர்க்கப்படுகின்றது (ஒவ்வொரு கிலோகிராம் காய்ந்த ஷுஃபஸ்க்கும் சுமார் ஒரு கிலோகிராம்).
சிலர் பட்டை, திருவப்பட்ட எலுமிச்சைத் தோல் அல்லது ஆரஞ்சு பூவின் நீர் இவற்றையும்கூட சேர்க்கின்றனர். பானம் தயாரிக்கப்பட்ட பின் அது உடனடியாக குளிர்பதனம் செய்வதன் மூலம் பாதுகாக்கப்பட வேண்டும். எனினும் எந்தக் காரணத்தாலும் 48 மணிநேரங்களுக்கு மேற்பட்டு அல்ல; இல்லாவிட்டால் ஷுஃபஸிலுள்ள செறிமான பொருள்வகை செயல்பட்டு மணத்தை மாற்றிவிடும். நீங்கள் ஒரு பானமாகக் குடிக்க விரும்பினால் அதை 37-லிருந்து 39 டிகிரிகள் பாரன்ஹீட்டில் (3-4 டிகிரி C) குளிர்பதனப்படுத்த வேண்டும். குளிர்ந்த பானம் விரும்பப்பட்டால் அது சுமார் 30 டிகிரி பாரன்ஹீட்டில் (-1 டிகிரி C) வைக்கப்பட வேண்டும்.
ஹோஷதா டி ஷுஃபஸ் ஒரு புத்துணர்வூட்டும், இனிப்பான, ஊட்டச்சத்து நிறைந்த பானம். எனவே, ஸ்பெய்னின் கிழக்குக் கடற்கரைக்குச் செல்ல சந்தர்ப்பம் கிடைத்தால், “நாம் ஒரு ஹோஷதா டி ஷுஃபஸை அருந்துவோம்!” என்ற அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.—அளிக்கப்பட்டது. (g90 11/8)