நுரையீரல்கள் ஓர் அதிசய வடிவமைப்பு
நீங்கள் பல வாரங்கள் உணவில்லாமல் பிழைத்திருக்கலாம். நாட்கணக்காக தண்ணீரில்லாமல் உயிர் வாழலாம். ஆனால் மூச்சுவிடாமல் நீங்கள் இருந்தீர்களேயானால், ஒருசில வினாடிகளில் மிகவும் அசெளகரியமான நிலையை அனுபவிப்பீர்கள். நான்கு நிமிடத்திற்கு பிராணவாயுவை சுவாசிக்காமலிருப்பது மூளைச் சேதத்தையும் மரணத்தையும் உண்டுபண்ணக்கூடும். ஆம், பிராணவாயு மனித உடலின் இன்றியமையாத தேவையாகும்!
சுவாசிக்கும் காற்றின் தரத்தை உங்களால் ஒருவேளை அதிகம் கட்டுப்படுத்த முடியாது. இருந்தபோதிலும், உங்களுக்குக் காற்று தேவையாயிருக்கிறது. அது உங்களுக்கு இப்பொழுதே தேவைப்படுகிறது! காற்று மிகவும் குளிராகவும் உஷ்ணமாகவும் உலர்ந்ததாகவும் அசுத்தமானதாகவும் இருக்கையில் உங்களால் எப்படி வாழ முடிகிறது? அப்பேர்ப்பட்ட காற்றிலிருந்து, உயிரை நீடிக்கச் செய்யும் பிராணவாயுவை நீங்கள் எவ்வாறு சுவாசிக்கிறீர்கள், பிராணவாயு உடலிலுள்ள எல்லா பாகத்தையும் எவ்வாறு சென்றெட்டுகிறது? உடலிலிருந்து கரியமிலவாயுவை எவ்வாறு வெளிவிடுகிறீர்கள்? எல்லாவற்றையும் நிகழச்செய்கிற, அதிசயமாய் வடிவமைக்கப்பட்ட உங்கள் நுரையீரலுக்கு நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும்.
நுரையீரல்கள் பேரில் கண்ணோட்டம் செலுத்துதல்
சுவாசித்தலுக்கு உங்களுடைய நுரையீரல்களே இரண்டு முக்கிய உறுப்புகளாகும். இருதயத்தின் இரு பக்கத்திலும் விலாவெலும்புக் கூட்டினுள் சரியாகவே அவை அமைக்கப்பட்டுள்ளது. உங்கள் வலது நுரையீரல் மூன்று பிரிவுகளையும் அல்லது மடல்களையும், உங்கள் இடது நுரையீரல் இரண்டு மடல்களையும் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மடலும் மற்ற மடல்களை அவ்வளவாக சார்ந்தில்லை. ஆகவே, மற்ற மடல்களை எடுத்து அவை பயன்படாதவாறு செய்வதற்கு பதிலாக இரண சிகிச்சையாளர்கள் நோய்ப்பட்ட அந்த மடலை தனியே எடுத்து அப்புறப்படுத்துகிறார்கள். நுரையீரல் திசுவின் அமைப்பு முதலில் பார்ப்பதற்கு ஒரு கடற்பஞ்சைப் போன்று தோற்றம் அளிக்கக்கூடும்.
இந்த நுரையீரல்கள் கீழ்பாகத்திலுள்ள உதரவிதானம் வரை நீடிக்கின்றன, இது மார்புக்குழிக்கும் வயிற்றுக் குழிக்குமிடையேயுள்ள தடித்த தசைச் சுவராகும். இந்த உதரவிதானம், சுவாசத்திற்கு மிக முக்கியமான தசையாகும், தொடர்ந்து நுரையீரலில் காற்று நிறையவும் காற்று வெளியேறவும் இது உதவுகிறது. உதரவிதானத்திலிருந்து உங்களுடைய நுரையீரல்கள் கழுத்தின் அடிபாகம் வரையாக நீடிக்கின்றன. ஒரு மெல்லிய சவ்வு ஒவ்வொரு நுரையீரலையும் மூடுகிறது. இந்தச் சவ்வு அல்லது நுரையீரல் சவ்வு மார்பகச் சுவரின் உட்புறத்தை எல்லையிடுகிறது. இந்த நுரையீரல் சவ்வாலான இரண்டு படலங்களுக்கு இடையிலுள்ள இடைவெளி ஓர் உராய்வுத்தடுப்புத் திரவத்தால் நிரப்பப்பட்டிருக்கிறது. இந்தத் திரவம், சுவாசித்தலின் போது, நுரையீரல்களும் விலாவெலும்புக் கூடும் உராய்தல் இல்லாமல் எளிதில் இழைந்து செல்ல உதவுகின்றன.
விஞ்ஞானிகள் இப்போது சுமார் 25 முதல் 30 வித்தியாசப்பட்ட வகையான உயிரணுக்களை நுறையீரல்களில் கண்டுபிடித்திருக்கிறார்கள். வெவ்வேறு தசைகளும் நரம்புகளும், எலும்புகளும் குருத்தெலும்புகளும், இரத்தக் குழாய்கள், திரவங்கள், உட்சுரப்பிகள், மற்றும் இரசாயனப் பொருட்கள் ஆகியவை எல்லாமே நுரையீரல்கள் செயல்படுவதற்கு முக்கிய பங்கை வகிக்கின்றன. நுரையீரல்களைப் பற்றிய ஒருசில காரியங்களை விஞ்ஞானிகள் இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளாவிட்டாலும் அறிந்த பல அம்சங்களில் சிலவற்றை நாம் தெரிந்துகொள்வோமாக.
காற்றுவழிகளைக் கொண்ட “மரம்”
உங்களுடைய சுவாச அமைப்புமுறை, உண்மையில் உள்ளிணைக்கப்பட்ட குழாய்களின் மற்றும் வழிகளின் தொடர்களாலானது. காற்று உங்கள் நுரையீரல்களை சென்றடையுமுன், அது ஒரு நெடுந்தூரப் பிரயாணத்தை மேற்கொள்ளவேண்டியுள்ளது. முதலாவதாகக், காற்று உங்கள் மூக்கு அல்லது வாயிலிருந்து முன்தொண்டை அல்லது தொண்டைக்குள் செல்கிறது. முன்தொண்டை, உணவை விழுங்குவதற்கும், சுவாசிப்பதற்கும் உபயோகிக்கப்படுகிறது. உணவும் பானமும் உங்களுடைய காற்று வழிகளில் உட்பிரவேசிப்பதைத் தடுப்பதற்காக நீங்கள் விழுங்கும்போது குரல்வளைமூடி என்ற ஒரு சிறிய அசையக்கூடிய மூடி உட்புகும் வழியை அடைக்கிறது.
பின்பு குரல் நாண்கள் அமைந்திருக்கிற வழியாக, குரல்வளையின் வழியாக அந்தக் காற்று செல்கிறது. அடுத்து, அதன் முழு நீளத்தில் இடைவெளிப்படுத்தப்பட்ட குருத்தெலும்புகளாலான சுமார் 20 C-வடிவ வார்ப்பட்டைகளால் பலப்படுத்தப்பட்ட, ஏறக்குறைய 11.5 சென்டிமீட்டர் நீள மூச்சுக்குழல் அல்லது சுவாசக் குழாய் உள்ளது. பின்பு இந்தச் சுவாசக்குழாய் பிரதான மூச்சுக்கிளைக்குழல்கள் எனப்படும் 2.5 சென்டிமீட்டர் நீளமுள்ள குழாய்களாகப் பிரிகிறது. ஒரு மூச்சுக்கிளைக்குழல் இடது நுரையீரலினுள் பிரவேசிக்கிறது, மற்றொன்று வலது நுரையீரலினுள் பிரவேசிக்கிறது, நுரையீரல்களினுள் இந்தக் குழாய்கள் இன்னும் பல கிளைகளாகப் பிரிகின்றன.
இப்படி கிளைகளாகப் பிரிவது, நுரையீரல்களினுள் அடிமரம், கிளைகள், சிறுகிளைகள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு மரம் போன்ற அமைப்பு உருவாகும் வரையாக பிரிந்துகொண்டே இருக்கிறது. கிளைகளாக ஒவ்வொருமுறை பிரியும்போதும் காற்று வழிகள் மெலிந்து கொண்டே போகின்றன என்பது உண்மையே. பின்னர் அந்தக் காற்று, ஒவ்வொன்றும் சுமார் 1 மில்லிமீட்டர் விட்டம் கொண்ட மூச்சுக்கிளைச் சிறுகுடல்கள் என்றழைக்கப்படும் வலைப்பின்னலமைப்புடைய மிகச் சிறியளவுக் குழாய்களாகிய சிறுகிளைகளினுள் பிரவேசிக்கிறது. இந்த மூச்சுக்கிளைச் சிறுகுடல்கள், அந்தக் காற்றை மூச்சுச்சிற்றறைகள் எனப்படும் சில 300 மில்லியன் சிறிய காற்றுப் பைகளுக்கு அனுப்பக்கூடிய இன்னும் சிறிய நாளங்களுக்கு வழிநடத்துகிறது. இந்தக் காற்றுப் பைகள் குலைகளாக அமைக்கப்பட்டு தொங்கும் திராட்சக் கொத்துகள் அல்லது சிறிய பலூன்களைப்போல் காணப்படுகின்றன. இங்குதானே காற்று வழிகளைக் கொண்ட இந்த மரம்போன்ற அமைப்புமுறை முடிவுபெற்று, காற்று கடைசியாக சென்றடைய வேண்டிய இடத்தை அடைகிறது.
இறுதியான வாயில்
நீங்கள் சுவாசிக்கும் காற்று அதன் இறுதியான வாயிலை அடையும்போது, மூச்சுச்சிற்றறைகளின் மிகவும் மெல்லிய சுவர்களில் அடைக்கப்பட்டுள்ளது. அவை குறுக்கே, 0.5 மைக்ரான் அளவே உடையவை. மூச்சுச்சிற்றறைச் சுவர்களின் பருமனைவிட இந்தப் பத்திரிகையில் உபயோகிக்கப்பட்டுள்ள தாள் சுமார் 150 மடங்கு பருமனைக் கொண்டிருக்கிறது!
இந்தச் சிறிய மூச்சுச்சிற்றறைகள் ஒவ்வொன்றும் நுரையீரலைச் சார்ந்த தந்துகிகள் எனப்படும் நெய்யப்பட்ட இரத்தக் குழாய்களால் மூடப்பட்டிருக்கின்றன. இந்தத் தந்துகிகள் ஒரு முறைக்கு ஒரே ஒரு சிவந்த இரத்த உயிரணுவே கடந்து செல்லக்கூடிய அளவிற்கு குறுகலானவை! மேலும் இரத்தத்திலுள்ள கரியமிலவாயு மூச்சுச்சிற்றறைகளினுள் கசிந்து செல்லக்கூடிய அளவிற்கு இந்தச் சுவர்கள் அவ்வளவு மெல்லியவையாயிருக்கின்றன. பிராணவாயு, எதிர்த் திசையில் கடந்து செல்கிறது. அது சிவந்த இரத்த உயிரணுக்களால் உறிஞ்சிக்கொள்ளப்படுவதற்காக மூச்சுச்சிற்றறைகளை விட்டு வெளியேறுகிறது.
ஒற்றை வரிசையில் செல்லும் இந்த ஒவ்வொரு சிவந்த இரத்த அணுக்களும் அல்லது இரத்தத்திலுள்ள மிகச்சிறிய உயிரணுக்களும் சுமார் ஒரு வினாடியில் முக்காற்பங்கு நேரம் நுரையீரலைச் சார்ந்தத் தந்துகிகளில் தங்குகிறது. இது கரியமிலவாயுவும் பிராணவாயுவும் இடமாற்றம் செய்வதற்கு அதிக நேரத்தைக் கொடுக்கிறது. இந்த வாயுக்கள் இடம் மாறுவது பரவுதல் என்ற ஒரு செய்முறையின் மூலமாகும். பின்னர் பிராணவாயுக் கலந்த இரத்தம் நுரையீரல்களிலுள்ள பெரிய இரத்தக்குழாய்களினுள் கடந்து, முடிவாக இருதயத்தின் இடது பக்கத்தைச் சென்றடைகிறது, இங்கிருந்துதானே ஜீவிப்பதற்கான எரிபொருளாக இரத்தம் முழு உடலுக்கும் இறைக்கப்படுகிறது. இப்படி எல்லாம் சொல்லப்பட்டாலும், உங்கள் உடலில் உள்ள எல்லா இரத்தமும் இந்தச் சிக்கலாக வடிவமைக்கப்பட்ட அமைப்பினுள் கடந்து செல்வதற்கு சுமார் ஒரு நிமிடமே எடுக்கிறது!
இப்போது காற்றுத் தன்னுடைய இறுதியானச் சேருமிடத்தை சென்றடைந்திருக்கையில், கரியமிலவாயு சுமையுடன் எவ்விதம் நுரையீரல்களை விட்டு அது வெளியேறுகிறது? சுவாசத்தை வெளிவிட உதவுவதற்கு ஓர் இரண்டாவது காற்றுவழி கோவயின் தேவை இருக்கிறதா? உங்களுடைய நுரையீரல்களிலுள்ள காற்று நாளங்களினாலான இந்த “மரம்,” காற்று நிறைவதற்கும், வெளியேறுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது, ஓர் அதிசய வடிவமைப்பே. அக்கறைக்குரிய விதமாக, சுவாசத்தை வெளிவிடுவதன் மூலம் உங்களுடைய நுரையீரல்களிலிருந்து நீங்கள் கரியமிலவாயுவை விடுவிக்கும் போது, உங்கள் குரல் நாண்களை அதிர வைத்து அதன்மூலம் பேச்சுக்குத் தேவையான ஒலியை உண்டாக்கவும் உங்களால் முடியும்.
தரக் கட்டுப்பாடு
நீங்கள் சுவாசிக்கும் காற்று உங்களுடைய மூக்கு வழியாகவும் வாய் வழியாகவும் செல்லுகையில் அது உண்மையில் ஒரு தரக் கட்டுப்பாட்டு நிலையத்தில் பதப்படுத்தப்படுகிறது. காற்று மிகவும் குளிர்ந்திருக்கும்போது, அது விரைவில் போதுமான உஷ்ணநிலைக்குச் சூடாக்கப்படுகிறது. காற்று மிகவும் உஷ்ணமாயிருக்கும்போது அது குளிராக்கப்படுகிறது. காற்று மிகவும் உலர்ந்திருக்கும்போது என்ன நேரிடுகிறது? உங்களுடைய மூக்கு, அதைச் சார்ந்த சீழ்நிரம்பியக்குழிகள், தொண்டை, மேலும் மற்ற வழிகளின் சுவர்களும், சளி என்றழைக்கப்படும் திரவத்தால் இழையப்படுகிறது. நீங்கள் உலர்ந்தக் காற்றை சுவாசிக்கும்போது, சளியில் உள்ள ஈரம் காற்றினுள் ஆவியாகிவிடுகிறது. காற்று உங்களுடைய நுரையீரல்களிலுள்ள தூரமானப் பகுதியை அடைவதற்குள்ளாக அதற்கு ஏறக்குறைய 100 சதவீத ஈரப்பதம் உள்ளது. அக்கறைக்குரிய விதமாக, உங்களுடைய சுவாசத்தை வெளிவிடும் போது, காற்றிலுள்ள பாதிக்கு மேற்பட்ட ஈரப்பதம் சளியில் திரும்ப ஒட்டிக்கொள்கிறது.
இந்தத் தரக் கட்டுப்பாட்டு அமைப்புமுறை ஒரு சிக்கலானக் காற்று வடிகட்டியையும் உள்ளடக்குகிறது. ஒரு நாளில் சுமார் 9,500 லிட்டர் காற்று நுரையீரல்கள் வழியாய்ச் செல்கிறது. இந்தக் காற்று அடிக்கடி, தொற்றிப் பரவக்கூடியக் காரணிகள், விஷத் துகள்கள், புகைகள் அல்லது மற்ற அசுத்தமான பொருட்களால் நிரப்பப்படுகிறது. இருப்பினும், உங்களுடைய சுவாசமண்டலம் இவற்றின் பெரும்பான்மையான அசுசியாக்கும் பொருட்களை வெளியேற்றும்படி திட்டமைக்கப்பட்டிருக்கிறது.
முதலில், உங்கள் மூக்கில் உள்ள மயிர்களும் சளியாலான சவ்வுகளும் அழுக்கின் பெரிய துகள்களைப் பிடிப்பதில் தங்கள் பாகத்தைச் செய்கின்றன. பிறகு, உங்கள் காற்றுவழிகளின் சுவர்களில் இலட்சக்கணக்கான மிக நுட்பமான நீட்டிய மயிர்களை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள். இவை சிலியா (Cilia) என்றழைக்கப்படுகின்றன. துடுப்புகள் போல, அவை ஒரு வினாடிக்கு சுமார் 16 முறைகள் என்ற வேகத்தில் முன்னும் பின்னுமாக அசைந்து அழுக்குச் சளியை நுரையீரல்களிலிருந்து வெளித் தள்ளுகின்றன. உங்கள் நுரையீரல்கள், பாக்டீரியாக்களை கொல்வதற்கும் கேடுவிளைவிக்கும் துகள்களைப் பிடிப்பதற்கும் மூச்சுச்சிற்றறைகளின் மாக்ரோஃபேஜஸ் (Macrophages) என்றழைக்கப்படும் விசேஷித்த உயிரணுக்களையும் கொண்டிருக்கின்றன.
ஆதலால், நீங்கள் சுவாசிக்கும் காற்று உங்களுடைய நுரையீரல்களின் மிக நுண்ணிய திசுக்களை சென்றடைவதற்கு முன் பதப்படுத்தப்பட்டு வடிகட்டப்படுகிறது. உண்மையிலேயே, ஓர் அதிசய வடிவமைப்பு!
ஒரு தானியங்கும் அமைப்புமுறை
உணவையும் தண்ணீரையும் போலில்லாமல், நீங்கள் ஒன்றும் செய்யாமலே பிராணவாயு சுற்றுப்புறத்திலிருந்து சுவாசிக்கப்படலாம். ஓர் ஆரோக்கியமான நுரையீரல் ஜோடி ஒரு நிமிடத்தில் ஏறக்குறைய 14 மூச்சுகள் என்ற வீதத்தில் காற்றிலிருந்து பிராணவாயுவை தானாகவே பிரித்தெடுக்கும். நீங்கள் உணராது தூங்கும்போதுங்கூட நுரையீரல்கள் தொடர்ந்து வேலை செய்கின்றன.
இந்தத் தானாக செயல்படும் அமைப்புமுறையைக் கொஞ்சம் நேரம் நீங்கள் நிறுத்தவும் செய்யலாம். எனவே, விருப்பப்பட்டால், சுவாசித்தலை உங்களுக்கு வேண்டும்போது கட்டுப்படுத்தலாம். மொத்தத்தில், நீங்கள் தண்ணீருக்கு அடியில் நீந்தும்போது சுவாச இயங்குமுறை தானாகத் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பதை நீங்கள் விரும்புவீர்களா? ஒரு நிமிடத்திற்கு 14 மூச்சுகள் என்ற வீதத்தில், ஒரு தீ விபத்தின்போது நீங்கள் மூச்சைப் பிடித்துக் கொள்ள முடியாமல் ஒரு புகை நிறைந்த அறையை விட்டு தப்பித்துக்கொள்ள போதுமான நேரத்தைக் கொண்டிருப்பீர்களா? நிச்சயமாகவே இந்தத் தானியங்கும் அமைப்புமுறை நீண்டக் கால நேரத்திற்கு தவிர்க்கப்பட முடியாது. சில நிமிடங்களுக்குப் பின்னர், உங்களுடைய நுரையீரல்கள் வேறுவழியில்லாமல் திரும்பவும் தானாக செயல்பட தொடங்குகின்றன.
ஆனால் இந்தத் தன்னியக்கத்தின்போது உங்களுடைய நுரையீரல்களில் காற்றை நிரப்பவும் காற்றை வெளியேற்றவும் அந்தத் தசைகளைத் தூண்டுவது எது? கட்டுப்பாட்டு மையம் மூளைத் தண்டில் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு விசேஷித்தக் கொள்கலங்கள் உடலில் உள்ள கரியமிலவாயுவின் அளவை சரிபார்க்கின்றன. கரியமிலவாயுவில் அதிகரிப்பிருக்கும்போது, ஒரு நரம்பு வலைப்பின்னல் மூலம் செய்திகள் அனுப்பப்படுகிறது, இவை சுவாசத்திற்குரியத் தசைகளைத் தூண்டுவிக்கின்றன.
இது உங்களுடைய சுவாசமண்டலத்திற்கு குறிப்பிடத்தக்க இசைவிணக்கத்தை கொடுக்கிறது. உங்களுடைய செயல்முறையில் ஏற்படும் திடீர் மாற்றங்களையும்கூட நுரையீரல்கள் செய்ய முடியும். உதாரணமாக, கடுமையான உடற்பயிற்சியின் போது, உங்களுடைய உடல் ஓய்விலிருக்கையில் செய்வதைவிட சுமார் 25 மடங்கு அதிக பிராணவாயுவை உபயோகித்து, சில 25 மடங்கு கரியமிலவாயுவை உண்டுபண்ணக்கூடும். இருந்தாலும், பிராணவாயுக்கான தேவைகள் தொடர்ந்து வேறுபடுவதால் அதைப் பூர்த்திசெய்ய உங்களுடைய நுரையீரல்கள் சுவாசத்தின் அதிர்வு வீதத்தையும் ஆழத்தையும் ஓரளவு உடனடியாக சரிப்படுத்திக் கொள்கிறது.
நுரையீரல்கள் ஒழுங்காகச் செயல்பட உதவுவதற்கு வேறு சிக்கலானக் கட்டுப்பாடுகளும் இருக்கின்றன. உதாரணமாக, சுவாசித்தலுக்கு உபயோகிக்கப்படும் சில தசைகள், விழுங்குதல், பேசுதல் போன்ற மற்ற செயற்பாடுகளுக்கும் உபயோகிக்கப்படுகின்றன. இந்தச் செயல்கள் சுவாசித்தலை பெருமளவு தடைசெய்யாதபடி சமநிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் காரியங்கள் எல்லாம் நீங்கள் அறியாமலே செயல்படுகின்றன. ஆம், தானாகவே செயல்படுகிறது!
உங்கள் நுரையீரல்களில், விசேஷமாக எதிர்க்கும் சக்தி உங்களுக்கு குறைவாயிருக்குமானால், அநேக காரியங்கள் ஒழுங்காக செயல்படாமற்போகலாம் என்பது உண்மைதான். ஆஸ்துமா, மார்ச்சளி நோய், சீழ்க்கட்டி, நுரையீரல் புற்றுநோய், எடீமா (edema) போன்ற நுரையீரல் சார்ந்த நோய், நுரையீரற் சவ்வின் அழற்சி, சளிக்காய்ச்சல், சயரோகம் மேலும் பாக்டீரியாவினாலும், வைரஸினாலும் காளான்களினாலும் உண்டாகும் தொற்றுநோய்கள் போன்ற சில கோளறுகள் ஏற்படலாம்.
ஆனால் இந்தக் கோளறுகள் நுரையீரல்களின் வடிவமைப்பில் ஏதோ குறை இருக்கிறது என்பதனாலோ அல்லது சரியாக வடிவமைக்கப்படவில்லை என்பதனாலோ அல்ல. அநேக நுரையீரல் சார்ந்த நோய்கள், சுற்றுப்புறத்தில் மனிதன் குவித்து வைத்துள்ள மாசுப்பொருட்கள், தூசுகள், வாயுக்கள் போன்றவற்றுக்கு வெளிப்படுத்தப்படுவதால் விளைவடைகின்றன. இலட்சக்கணக்கானோர் இன்று புகையிலைப் பிடித்தல் மற்றும் சுவாச மண்டலத்திற்குத் தாங்களே கொண்டுவரும் துர்ப்பிரயோகத்தின் காரணங்களாலும் நுரையீரல் புற்றுநோய், மார்ச்சளி நோய், சீழ்க்கட்டி போன்றவற்றால் அவதிப்படுகிறார்கள்.
என்றாலும், சாதாரணமான சூழ்நிலைகளின் கீழ், உங்களுடைய நுரையீரல்கள் ஓர் அதிசயமான வடிவமைப்புக்கும் மகத்தான வடிவமைப்பாளராகிய யெகோவா தேவனுக்கும் ஓர் உயிருள்ள அத்தாட்சியாக மேலோங்கி நிற்கிறது! நாம், உண்மையிலேயே, சங்கீதக்காரன் சொல்லுகிற விதமாக, ‘பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டிருக்கிறோம்.’—சங்கீதம் 139:14. (g91 6/8)
[பக்கம் 22-ன் பெட்டி]
இவை ஏன் நேரிடுகின்றன?
தும்மல்: வாய் மற்றும் மூக்கின் வழியாக, தானாக வருகிற, தீவிரமானக் காற்றின் பாய்ச்சல். மூக்கிலுள்ள நரம்பு முனைகள் உங்களுடைய மூக்கிலிருந்து எரிச்சலூட்டும் துகள்களை வெளியகற்றுவதற்காக உங்களைத் தும்ம வைக்கின்றன. குளிர்ந்த காற்றும்கூட தும்மலைத் தூண்டக்கூடும். ஒரு தும்மல் ஒரு மணிநேரத்திற்கு 166 கிலோமீட்டர் அளவு வரையானக் காற்று வேகத்தை உருவாக்கவும், 1,00,000 சளிச்சொட்டுகளையும் நுண்ணுயிரிகளையும் வெளியேற்றவும் முடியும். இந்தக் காரணத்திற்காக, உங்களுடைய வாயையும் மூக்கையும் போதிய அளவிற்கு நீங்கள் மூடாவிட்டால், உங்களுடைய தும்மல் மற்றவர்களுக்கு கேடுவிளைவிக்கக்கூடும்.
இருமல்: சுவாச அமைப்புமுறையின் இழைமம் எரிச்சலடையும்போது நுரையீரல்களைக் கேடுவிளைவிக்கும் பொருட்களிலிருந்து விடுவிக்க, காற்றின் ஒரு திடீர் வெளியேற்றம். இருமுவது, தொண்டை அல்லது மூச்சுக்கிளைக்குழல்களை சரிசெய்வதற்கு தெரிந்தும் செய்யப்படலாம். தும்மலைப்போலவே, இருமலும் நோயுண்டாக்கும் கிருமிகளைப் பரப்பக்கூடும்.
விக்கல்: உதரவிதானத்தின் விட்டுவிட்டு நிகழ்கிற சுருங்குதல் காரணமாக திடீரென்று தானாக வருகிற காற்றின் ஓர் உள்ளிழுப்பு. இந்தத் திடீர்ச் சுருங்குதல்கள், உதரவிதானத்தின் அருகிலுள்ள உறுப்புகள் எரிச்சலடைவதால் உண்டாகலாம். இந்த வலிப்பு குரல்வளை வழியாக காற்றை நுரையீரல்களினுள் இழுக்கிறது. இந்தக் காற்று குரல்வளையினுள் இழுக்கப்பட்டதும் அது குரல்வளைமூடியைத் தாக்கி, குரல் நாண்களை அதிரச் செய்கிறது. இது விக் என்ற ஒலியை உண்டாக்குகிறது.
குறட்டைவிடுதல்: சாதாரணமாக, ஓர் ஆள் தூங்கும்போது வாயின் மூலமாக சுவாசிப்பதன் காரணமாக உண்டாக்கப்படும் ஒரு கடுமையான சத்தம். தொண்டை அருகில் வாயின் மேற்பகுதியிலுள்ள மென்மையான திசு, காற்று கடந்து செல்லும்போது அதிருகிறது. உதடுகள், கன்னங்கள், நாசித்துவாரங்களும்கூட அதிரலாம். நீங்கள் மல்லாக்காக படுத்துத் தூங்கினால், வாய் திறந்திருக்க நேரிட்டு, நாக்கு காற்றுப் போக்கை தடுக்கிறது. ஒரு பக்கமாய்ச் சரிந்து படுப்பது குறட்டைவிடுவதை நிறுத்தக்கூடும்.
கொட்டாவி: நுரையீரல்களில் கரியமிலவாயு கட்டப்பட்டதற்கான பிரதிபலிப்பு, ஓர் ஆழ்ந்த, தானாக வரும் உட்சுவாசம் என்று நம்பப்படுகிறது. மற்றொருவர் கொட்டாவிவிடுவதைப் பார்க்கும் போதா கேட்கும் போதா கொட்டாவிவிடுவதற்கான உந்துதல் இருக்கிறது என்பதால் கொட்டாவிவிடுதல் சகவாசத்தில் தொற்றும் ஒரு பழக்கம் என்று குறிப்பிடப்படுகிறது. விஞ்ஞானிகளால் இந்த இயல் நிகழ்ச்சியை விவரிக்க முடிவதில்லை.
[பக்கம் 23-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
முன்தொண்டை
மூச்சுக்குழல்
பிரதான
மூச்சுக்கிளைக்குழல்
வலது நுரையீரல்
மூக்குச்சம்பந்தமான
சீழ்நிரம்பிய குழிகள்
குரல்வளைமூடி
குரல்வளை
குரல் நாண்கள்
நுரையீரல் சார்ந்தத்
தந்துகிகள்
மூச்சுச்சிற்றறைகள்
ஒரு மூச்சுக்கிளைச் சிறுகுடலின் விளக்கம்
இடது நுரையீரல்