உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 1/8 பக். 11-15
  • என் வெறுப்பு அன்பாக மாறியது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • என் வெறுப்பு அன்பாக மாறியது
  • விழித்தெழு!—1995
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஹிட்லருடன் என் சந்திப்பு
  • நாசி கட்சியின் ஆரம்ப செல்வாக்கு
  • புக்கென்வால்ட் சித்திரவதை முகாமில் என் சேவை
  • என் “மேசியாவின்” முடிவு
  • என் வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள்
  • நான் இன்னும் அதிகம் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது
  • நூரெம்பர்க்கிலுள்ள செப்ளின் புல்வெளிக்கு மறுபடியும்
  • நம்பிக்கையோடு எதிர்காலத்தை நோக்கியிருத்தல்
  • நாசிக்கொள்கையின் தீமைகள் அம்பலப்படுத்தப்படுகின்றன
    விழித்தெழு!—1995
  • அந்தப் படுகொலை பலியாட்களா அல்லது இரத்தசாட்சிகளா?
    விழித்தெழு!—1990
  • நாங்கள் ஹிட்லரின் போரை ஆதரிக்கவில்லை
    விழித்தெழு!—1994
  • யெகோவாவின் துணையுடன் சர்வாதிகார ஆட்சிமுறையைச் சகித்தோம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
மேலும் பார்க்க
விழித்தெழு!—1995
g95 1/8 பக். 11-15

என் வெறுப்பு அன்பாக மாறியது

லுட்விக் வெர்ம் என்பவர் சொன்னபடி

நான் அதுவரை அனுபவித்திருந்ததிலேயே மிகவும் குளிரான இரவு அது—-52 டிகிரி செல்ஷியஸ். தேதி: பிப்ரவரி 1942—குளிர்காலம், போர் நடந்து கொண்டிருந்த சமயம். இடம்: லெனின்கிராட் அருகே ரஷ்யப் போர்முனை. ஜெர்மன் வாஃபன்-எஸ்எஸ் (வாஃபன் ஷூட்ஸ்டாஃபெல்) என்ற சிறப்பு ஆயுதப்படையில் படைவீரனாக நான் இருந்தேன். சுமார் 300-க்கும் மேலான உடன் படைவீரர்களைப் புதைக்கும் அச்சமூட்டும் பணி எனக்கும் மற்றொரு சர்ஜென்டுக்கும் கொடுக்கப்பட்டது. இறந்தவர்களில் பெரும்பாலோர் குளிரினாலேயே பதுங்கும் குழிகளில் உயிரிழந்தவர்கள். ஆயினும் தரை குளிரில் அவ்வளவு இறுகி விட்டிருந்ததனால் அவர்களை புதைப்பது என்பது கூடாத காரியம். எனவே அந்த உறைந்துபோன பிணங்களை காலியான கட்டடங்களின் பின்னால் மரக்கட்டைகளை அடுக்குவது போல அடுக்கினோம். அவை புதைக்கப்படுவதற்கு வசந்த காலம் வரை காத்திருக்க வேண்டும்.

சொல்லப்போனால், இந்தக் கொடூரமான வேலை எனக்கு நொந்து போன உணர்ச்சியை தந்தது. மனமுடைந்த நிலையில் நான் கண்ணீரோடு பதறிப்போய் கேட்டேன்: “அன்டர்ஷார்ஃப்யூரர் (சார்ஜென்ட்), இந்த மதிகெட்ட படுகொலைகள் எல்லாம் எதற்காக என்று எனக்கு சொல்ல முடியுமா? உலகில் ஏன் இவ்வளவு வெறுப்புணர்ச்சி இருக்கிறது? எதற்கு நமக்கு போர்கள்?” அவர் தாழ்ந்த குரலில் பதிலளித்தார்: “லுட்விக், உண்மையாகவே எனக்குத் தெரியாது. உலகில் ஏன் இவ்வளவு அதிக துயரமும் வெறுப்பும் இருக்கிறது என்பதை என்னாலும்கூட புரிந்துகொள்ள முடியவில்லை.”

இரண்டு நாட்கள் கழித்து வெடிக்கும் தோட்டா ஒன்று என் கழுத்தைத் தாக்கியது, நான் செயலிழந்தவனாக சுயநினைவற்று மரணம் ஏற்படும் தருவாயில் விடப்பட்டேன்.

ஆனால் என் விடாப்பிடியான கேள்விகள் நாளடைவில் வெறுப்பும் மனமுறிவும் எவ்வாறு அன்பும் நம்பிக்கையுமாக மாறமுடியும் என்பதை நேருக்கு நேர் அனுபவிக்கும்படி செய்தன. இதை விளக்கும்படி அனுமதியுங்கள்.

ஹிட்லருடன் என் சந்திப்பு

நான் 1920-ல் ஆஸ்திரியாவில் பிறந்தேன். என் தகப்பன் லூத்தரன் பிரிவைச் சேர்ந்தவர், என் தாய் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்கள். நான் ஒரு தனியார் லூத்தரன் பள்ளிக்குச் சென்றேன். அங்கு ஒரு மதகுருவின் மூலம் ஒழுங்கான மதபோதனையைப் பெற்றேன். ஆனால் இயேசு கிறிஸ்துவே இரட்சகர் என்று எனக்குக் கற்பிக்கப்படவில்லை. எப்போதுமே முக்கிய கவனம் “கடவுள் அனுப்பிய தலைவர்,” அடால்ஃப் ஹிட்லரின் பேரிலும் முன்தீர்மானம் செய்யப்பட்ட சர்வ ஜெர்மன் பேரரசின் பேரிலும் செலுத்தப்பட்டது. என்னுடைய பாடப்புத்தகம் பைபிளுக்குப் பதிலாக ஹிட்லரின் புத்தகமான மைன் காம்ப் (என் போராட்டம்) என்பதாக இருந்தது. ரோசன்பெர்க் எழுதிய டெர் மியூதாஸ் டெஸ் ட்ஸ்வான்ட்சிக்ஸ்டன் யார்ஹுன்டர்ட்ஸ் (இருபதாம் நூற்றாண்டின் கட்டுக்கதை) என்ற புத்தகத்தையும் நான் படித்தேன். அதில் அவர் இயேசு கிறிஸ்து ஒரு யூதன் அல்ல, இளம் பொன்மேனி கொண்ட ஆரிய வம்சத்தைச் சேர்ந்தவர் என்று நிரூபிக்க முயற்சிக்கிறார்!

ஹிட்லர் உண்மையாகவே கடவுளால் அனுப்பப்பட்டவர் என்ற தீர்மானத்துக்கு நான் வந்தேன், பிறகு 1933-ல் ஹிட்லர் இளைஞர் இயக்கத்தில் சேர்ந்து பெருமிதம் அடைந்தேன். அவரை நேர்முகமாக சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கொடுக்கப்பட்ட போது எவ்வளவு பரவசமடைந்திருப்பேன் என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்க்கக்கூடும். அவர் என்னை தன்னுடைய அசாதாரணமான கூர்ந்த கண்களினால் பார்த்த விதம் இன்றைக்கும் தெளிவாக எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. அது அத்தனை ஆழ்ந்தவிதத்தில் என்னை பாதித்ததால் நான் வீட்டுக்குச் சென்றபோது தாயிடம் சொன்னேன்: “இதுமுதல் என் உயிர் உங்களுக்குச் சொந்தமானதல்ல. என் உயிர் என் தலைவரான அடால்ஃப் ஹிட்லருக்குச் சொந்தமானது. அவரை எவராவது கொல்ல முயற்சிப்பதை பார்த்தால், நான் முன்சென்று அவருடைய உயிரைக் காப்பேன்.” என் தாய் வெறுமனே அழுது என்னை நெருங்க அணைத்துக்கொண்டது ஏன் என்பதை பல வருடங்கள் கழித்துதான் புரிந்துகொண்டேன்.

நாசி கட்சியின் ஆரம்ப செல்வாக்கு

1934-ல் தேசிய சோஷியஸ்டுகள் ஆஸ்திரிய அரசுக்கு எதிராக கலகம் எழுப்பினர். இந்தப் போராட்டத்தின் போது ஆஸ்திரியாவும் ஜெர்மனியும் சேர்க்கப்படுவதை எதிர்த்த உயர் முறைமன்ற முதல்வர் எங்கல்பர்ட் டால்ஃப்யூஸ் நாசிக்களினால் படுகொலை செய்யப்பட்டார். கலகத்திற்குக் காரணமாயிருந்த தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டனர். இதன் பிறகு ஆஸ்திரிய அரசாங்கம் இராணுவ சட்டத்தைப் புகுத்தியது, நான் தலைமறைவாக இயங்கிய தேசிய சோஷியலிஸ்ட் ஜெர்மானிய தொழிலாளர்கள் கட்சி—நாசி கட்சியில் மும்முரமாக செயல்பட ஆரம்பித்தேன்.

பிறகு 1938-ல் ஜெர்மனியோடு ஆஸ்திரியா சேர்க்கப்பட்டபோது நாசி கட்சி சட்டப்பூர்வமாக ஆனது. சீக்கிரத்தில் செப்ளின் புல்வெளியில், நூரெம்பர்கில் நடைபெற்ற வருடாந்தர கட்சி அணிவகுப்புக்கு ஹிட்லரினால் அழைக்கப்பட்ட பற்றுமாறாத கட்சித் தோழர்களுள் நானும் ஒருவனாக இருந்தேன். அங்கு ஹிட்லர் வளர்ந்து வரும் தன் அதிகாரத்தை வெளிக்காட்டியதைக் கண்டேன். கேட்போரைக் கட்டுண்ட நிலையில் வைத்த அவருடைய பகட்டான பேச்சுக்கள், சர்வதேசத்திலுமிருந்த யூதர்கள், இப்போது யெகோவாவின் சாட்சிகள் என்றறியப்படும் சர்வதேச பைபிள் மாணாக்கர்கள் உட்பட நாசி கட்சியின் எதிர்ப்பாளர்கள் அனைவருக்கும் விரோதமான வெறுப்புணர்ச்சி நிறைந்ததாக இருந்தன. அவர் பின்வருமாறு பெருமையடித்துக் கொண்டது எனக்கு தெளிவாக நினைவிருக்கிறது: “மகா ஜெர்மனியின் இந்த எதிரி, சர்வதேச பைபிள் மாணாக்கர்களின் இந்த வர்க்கம் ஜெர்மனியிலிருந்து பூண்டோடு ஒழிக்கப்படும்.” எந்த யெகோவாவின் சாட்சியையும் நான் சந்தித்தது கிடையாது. எனவே அவர் அத்தனை விஷமத்தன்மையோடு பேசிய இந்த பயங்கரமான ஆட்கள் யார் என்று யோசித்தேன்.

புக்கென்வால்ட் சித்திரவதை முகாமில் என் சேவை

இரண்டாவது உலக யுத்தம் 1939-ல் ஆரம்பித்த போது ஜெர்மனியின் சிறப்பு ஆயுதப் படையான வாஃபன்-எஸ்எஸ்-ஐ சேர்ந்துகொள்ள உடனடியாக முன்வந்தேன். இந்தப் போரில் நான் செய்யும் எந்தத் தியாகமும் நியாயமானதே என்று நிச்சயமாயிருந்தேன், ஏனெனில் எங்கள் தலைவர் கடவுளால் அனுப்பப்பட்டவர் அல்லவா? ஆனால் எங்கள் படைகள் 1940-ல் லக்ஸம்பர்க், பெல்ஜியம் வழியாக பிரான்ஸுக்குள் சென்ற போது, மரித்துப் போயிருந்த ஒரு படைவீரனை முதல் முறையாக மிகவும் அருகில் கண்டேன்—நேர்த்தியான உருவமுள்ள ஒரு இளம் ஃபிரெஞ்சு மனிதன். கடவுள் எங்கள் பக்கத்தில், அதாவது ஜெர்மனியரோடு இருந்ததால் நிச்சயமாக வெற்றி பெறுவர் என்றிருந்தபோதிலும் ஏன் இளம் பிரெஞ்சு மனிதர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்ய விரும்புகின்றனர் என்பதை என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.

எனக்கு பிரான்ஸில் காயம் ஏற்பட்டது, ஜெர்மனியில் சிகிச்சை பெறுவதற்காக திரும்பவும் கொண்டு வரப்பட்டேன். குணமடைந்த பிறகு வேமர் அருகே இருந்த புக்கென்வால்ட் சித்திரவதை முகாமின் வெளிச் சுற்றுவட்டத்தில் வேலை செய்யும்படி மாற்றப்பட்டேன். டோட்டன்காப்வெர்பான்டி (மரணத்தின் தலைவர்) என்ற எஸ்எஸ் முகாம் காவலர்களோடு அல்லது சிறைவாசிகளோடு பழகக்கூடாது என்று எங்கள் அதிகாரிகளிடமிருந்து நாங்கள் கண்டிப்பான கட்டளைகளைப் பெற்றிருந்தோம். விசேஷமாக சிறைவாசிகளின் குடியிருப்பு பகுதிக்குள் செல்ல நாங்கள் தடை செய்யப்பட்டிருந்தோம், அது ஒரு பெரிய வாயிலை உடையதும் உயரமான சுவரால் சூழப்பட்டதுமாயிருந்தது. வாயிலுக்கு மேலே ஒரு அறிவிப்புக் குறி: “ஆர்பைட் மாக்ட் ஃபிரை” (வேலை விடுதலையாக்கும்). இப்பகுதிக்குள் செல்வதற்கு எஸ்எஸ் காவலர்கள் மட்டுமே விசேஷ நுழைவுச் சீட்டுகளைக் கொண்டிருந்தனர்.

சிறைவாசிகள் தங்கள் வேலைகளுக்கு அணிவகுத்துச் செல்கையில் ஒரு எஸ்எஸ் காவலரும் காப்போ என்றழைக்கப்பட்ட மற்றொரு சிறை அதிகாரியும் வழிநடத்தியதை நாங்கள் ஒவ்வொரு நாளும் முகாமில் பார்ப்போம். தங்கள் சிறை சட்டைகளில் தாவீதின் நட்சத்திரத்தை அடையாளக்குறியாக கொண்டிருந்த யூதர்கள், சிவப்பு முக்கோணத்தைக் கொண்டிருந்த அரசியல் சிறைவாசிகள், கரும் புள்ளிகளைக் கொண்டிருந்த குற்றவாளிகள், கருஞ்சிவப்பு முக்கோணத்தைக் கொண்டிருந்த யெகோவாவின் சாட்சிகள் அனைவரும் அங்கிருந்தனர்.

அசாதாரணமாக ஒளிவீசிக் கொண்டிருந்த சாட்சிகளின் முகங்களைக் காண்பதற்கு நான் கட்டாயப்படுத்தப்பட்டேன். அவர்கள் மோசமான நிலைமைகளில் வாழ்ந்து கொண்டிருந்தனர் என்பதை அறிந்திருந்தேன்; என்றாலும் அவர்கள் எலும்பும் தோலுமாக இருந்த தோற்றத்துக்கு முற்றிலும் வித்தியாசமான ஒரு கண்ணியத்தோடு காட்சியளித்தனர். எனக்கு அவர்களைப் பற்றி ஒன்றுமே தெரியாததால், யெகோவாவின் சாட்சிகள் ஏன் சித்திரவதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றனர் என்று என் உயர் அதிகாரிகளைக் கேட்டேன். கம்யூனிஸ்டுகளோடு நெருக்கமாகத் தொடர்பு கொண்டிருந்த யூத-அமெரிக்க தனிப்பிரிவினராக அவர்கள் இருந்தனர் என்பதுதான் அதற்குப் பதில். அவர்களுடைய குற்றமற்ற நடத்தை, இணங்கிப் போகாத நியமங்கள், ஒழுக்க சம்பந்தமான சுத்தம் ஆகியவை என் ஆவலைத் தூண்டியன.

என் “மேசியாவின்” முடிவு

நான் நம்பிக்கொண்டிருந்த உலகம் 1945-ல் அழிந்து போனது. என் “கடவுள்,” அடால்ஃப் ஹிட்லர், கடவுளால் அனுப்பப்பட்ட தலைவர் என்று குருமார்களால் போற்றப்பட்டவர் பொய் மேசியாவாக நிரூபித்தார். அவர் திட்டம் தீட்டியிருந்த டவ்ஸன்ட்ஜரிக் ரைக் (ஆயிர வருட ஆட்சி) வெறும் 12 வருடங்களுக்குப் பிறகு முழுவதுமாக அழிந்து விட்டது. அவர் ஒரு கோழையாகவும் இருந்தார், இலட்சக்கணக்கான ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் படுகொலை செய்யப்பட்ட உத்தரவாதத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள தற்கொலை செய்து கொண்டார். அதற்குப் பின் ஜப்பானின் மீது வெடித்த முதல் அணுகுண்டுகளைப் பற்றிய செய்தி எனக்கு மனமுறிவு ஏற்படும் அளவுக்குச் சென்றது.

என் வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள்

இரண்டாம் உலக யுத்த நடவடிக்கைகள் முடிந்தபின், அ.ஐ.மா. சிஐசி (Counterintelligence Corps)-யிடம் குற்றம் சாட்டப்பட்டு ஒப்படைக்கப்பட்டேன். ஒரு நாசியாகவும், வாஃபன்-எஸ்எஸ் அங்கத்தினனாகவும் கைது செய்யப்பட்டேன். நான் மணம் செய்துகொள்ளப் போவதாக நிச்சயிக்கப்பட்டிருந்த என் அன்பான ட்ருடி, இறுதியில் ஒரு மருத்துவரைக் கண்டுபிடித்தாள். முதுகுத்தண்டு காயத்தின் பின்விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருந்ததன் காரணமாக—என் ஆரோக்கியத்தின் காரணமாக சிறையிலிருந்து என்னை விடுவிக்கும்படி அவர் சிஐசி-யை நம்ப வைத்தார். பிறகு போர்க் குற்றவாளியாக என் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றங்கள் அனைத்தும் நீக்கப்படும் வரை வீட்டிலேயே காவலில் வைக்கப்பட்டேன்.

போர் நோயாளியாக ஆஸ்திரிய ஆல்ப்ஸ் மலைகளில் இருந்த புனர்வாழ்வு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டேன். பிறகு ஒரு குறிப்பிட்ட அழகான இளவேனிற்கால காலையில் மெய்சிலிர்க்கப் பண்ணுகிற இயற்கைக் காட்சியையும், வெதுவெதுப்பான சூரிய ஒளியையும், பறவைகளின் இன்னிசைப் பாடல்களையும் கேட்டு மகிழ்ந்துகொண்டிருக்கையில், என் இருதயத்தின் ஆழத்திலிருந்து ஒரு சிறு ஜெபத்தைச் சொன்னேன்: “கடவுளே, நீர் உண்மையிலேயே உயிரோடிருந்தால், என்னை கலக்கமுறச் செய்யும் அநேக கேள்விகளுக்கு நீர் கட்டாயம் பதிலளிக்க வேண்டும்.”

வீடு திரும்பிய சில வாரங்களுக்குப்பின், யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் என் வீட்டுக்கு வந்தார்கள். அவர்களிடமிருந்து பைபிள் பிரசுரத்தைப் பெற்றுக் கொண்டேன். ஒவ்வொரு ஞாயிறு காலையும் அவர்கள் ஒழுங்காக வந்து சந்தித்த போதிலும், நான் அதைக் குறித்து கருத்தூன்றிய விதத்தில் சிந்திக்கவில்லை, அந்தச் சமயத்தில் அவர்கள் விட்டுச்சென்ற பிரசுரத்தையும் வாசிக்கவில்லை. என்றாலும், ஒரு நாள் வேலையிலிருந்து சாதாரணமாக இருப்பதைக் காட்டிலும் அதிக மனச்சோர்வுடன் வீடு திரும்பி வந்தேன். என் மனதுக்கு ஓய்வு கொடுப்பதற்காக ஏதாவது ஒன்றை, சாட்சிகள் விட்டுச் சென்றிருந்த சமாதானம்—அது நீடித்திருக்குமா? (ஆங்கிலம்) என்ற சிறுபுத்தகத்தை வாசிக்கும்படி என் மனைவி ஆலோசனை கூறினாள்.

அப்புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன், அதை முழுவதுமாக வாசித்து முடிக்கும் வரை அதை என்னால் நிறுத்த முடியவில்லை. என் மனைவியிடம் சொன்னேன்: “இச்சிறு புத்தகம் 1942-ல் வெளியிடப்பட்டது. அச்சமயத்தில் ஹிட்லரும் முசோலினியும் போரில் தோல்லியடைவர் என்றும், சர்வதேச சங்கம் ஐக்கிய நாட்டுச் சங்கம் வடிவில் மறுபடியுமாகத் தோன்றும் என்று தெருவில் உள்ள யாரோ ஒருவர் சொல்லியிருந்தால், அவர் மனக்குழப்பமுற்றிருக்கிறார் என்று மக்கள் எண்ணியிருப்பர். ஆனால் கடந்த காலங்களில் நடந்த உண்மையான சம்பவங்களைத் தான் இப்புத்தகம் உண்மையில் நடக்கும் என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறது. இந்த வேதவசனங்களை எடுத்துப் பார்ப்பதற்கு நம்மிடம் பைபிள் எங்காவது இருக்கிறதா?”

என் மனைவி மேன்மாடச் சிறு அறைக்குச் சென்று பழைய லூத்தர் மொழிபெயர்ப்பு பைபிளைக் கண்டுபிடித்தாள். அப்புத்தகத்திலிருந்த பைபிள் வசனங்களை நான் சரிபார்த்தேன். இதற்கு முன்பு ஒருபோதும் கேட்டிராத காரியங்களை விரைவில் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். கடவுளின் மேசியானிய ராஜ்யத்தின்கீழ் இப்பூமியிலேயே ஒரு புதிய உலகம் வரும் என்ற பைபிளின் வாக்குறுதியை கற்றறிந்தேன். மகிழ்ச்சியும் பாதுகாப்புமுள்ள எதிர்காலத்துக்கான இந்த மெய்யான நம்பிக்கை இயேசுவின் மாதிரி ஜெபத்தின் வார்த்தைகளில் வெளிப்படுத்தப்பட்டது. அதை சிறு பையனாக இருக்கும் போது அடிக்கடி திரும்பத் திரும்பச் சொன்னேன்: “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.” வானத்தையும் பூமியையும் படைத்த சர்வவல்லமையுள்ள கடவுளின் தனிப்பட்ட பெயர் யெகோவா என்பதை தெரிந்துகொண்ட போது மிகவும் ஆச்சரியமடைந்தேன்.—மத்தேயு 6:9, 10; சங்கீதம் 83:17.

நான் விரைவில் யெகோவாவின் சாட்சிகளின் கூட்டங்களுக்கு ஆஜராக ஆரம்பித்தேன். நான் கூட்டத்துக்கு முதலாவது சென்ற போது ஒரு வயதான பெண்மணியை சந்தித்தேன், அப்பெண்மணியின் மகளும் மருமகனும் ஒரு ஜெர்மன் சித்திரவதை முகாமில் தங்கள் விசுவாசத்துக்காக மரண தண்டனை அடைந்திருந்தனர். குற்றமுணர்ந்து மிகவும் வெட்கப்பட்டேன். கடந்த காலத்தில் நான் கொண்டிருந்த வேலையின் தொடர்பாக அப்பெண்மணியும் அவருடைய குடும்பத்தாரும் அனுபவித்திருந்ததைக் குறித்து நேரடியாக அறிந்திருந்தேன் என்பதை அவர்களிடம் விளக்கினேன். அதற்கு உத்தரவாதமுள்ளவர்களாய் இருந்தவர்களோடு கொண்டிருந்த கூட்டுறவின் காரணமாக, வெறுப்போடு என் முகத்தில் காரித்துப்புவதற்கு அவர்களுக்கு உரிமை இருந்தது.

விரோதத்தை காண்பிப்பதற்கு பதிலாக, அப்பெண்ணின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்கி வழிந்தது. அவர்கள் என்னை அன்பாய் கைகளால் அணைத்துக்கொண்டு சொன்னார்கள்: “ஆ, சர்வவல்லமையுள்ள கடவுளாகிய யெகோவா அப்படிப்பட்ட எதிர்க்கும் மனப்பான்மையுள்ள தொகுதிகளிலிருந்து தனிப்பட்ட நபர்களை தம்முடைய பரிசுத்த அமைப்புக்குள் வர அனுமதிப்பது எவ்வளவு ஆச்சரியமாயிருக்கிறது!”

என்னைச் சுற்றி எல்லா இடங்களிலும் நான் பார்த்த வெறுப்புக்குப் பதிலாக கடவுளுடைய தன்னலமற்ற அன்பை—மெய்யான கிறிஸ்தவ அன்பை—உண்மையாக பிரதிபலித்த இந்த ஆட்களை கண்டேன். இயேசுவின் வார்த்தைகளைப் படித்திருந்ததை நினைவுகூர்ந்தேன்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.” (யோவான் 13:35) நான் தேடிக் கொண்டிருந்ததும் இதுதான். இப்போது நான் கண்ணீர் விட வேண்டியிருந்தது. இத்தகைய அற்புதமான கடவுளாகிய யெகோவாவின் பேரில் போற்றுதலோடு நானும் ஒரு சிறு பிள்ளையைப் போல் அழ ஆரம்பித்தேன்.

நான் இன்னும் அதிகம் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது

நாளடைவில் என் வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து 1948-ல் முழுக்காட்டப்பட்டேன். ஆனால் இன்னும் அதிகம் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது என்பதை சீக்கிரத்தில் கண்டுபிடித்தேன். உதாரணமாக, நாசிக் கொள்கையினால் அவ்வளவு முற்றிலுமாக கருத்து மாற்றம் செய்யப்பட்டிருந்ததால் யெகோவாவின் அமைப்பு ஏன் சில சமயங்களில் பழிக்கப்பட்ட எஸ்எஸ்-க்கு விரோதமாக கட்டுரைகளை அச்சிட்டது என என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. தனிப்பட்டவர்களாக நாங்கள் குற்றஞ்சாட்டப்பட வேண்டியவர்கள் அல்லர் என வாதிட்டேன். நாங்கள் வெறுமனே படைவீரர்களாய் இருந்தோம், சித்திரவதை முகாம்களில் என்ன நடந்துகொண்டிருந்தது என்பது எங்களில் பெரும்பாலானோருக்கு ஒன்றுமே தெரியாது.

பின்பு ஒரு நாள் ஒரு சித்திரவதை முகாமில் பல ஆண்டுகளாக துன்புற்றிருந்த ஒரு அன்பார்ந்த சகோதரர் என்னுடைய பிரச்சினையை புரிந்துகொண்டவராய் தன்னுடைய கையை என் தோளின் மேல் போட்டு பின்வருமாறு சொன்னார்: “சகோதரர் லுட்விக், கவனமாக நான் சொல்வதைக் கேளுங்கள்: இந்தக் குறிப்பைப் புரிந்துகொள்வது கடினமாயிருந்தால் அல்லது இது உங்களை உறுத்திக் கொண்டிருந்தால் வெறுமனே அதை உங்கள் மனதில் ஒரு பக்கமாக ஒதுக்கிப்போட்டு விடுங்கள். பிறகு ஜெபத்தில் உங்கள் பிரச்சினையை யெகோவா தேவனிடத்தில் விட்டு விடுங்கள். நான் சொல்வதை நம்புங்கள், அதாவது இதை நீங்கள் செய்தால் இதைப் பற்றியும் அல்லது உங்களைக் குழப்பிக் கொண்டிருக்கும் வேறெந்த விஷயத்தைப் பற்றியும் புரிந்துகொள்ளுதலை யெகோவா திறக்கும் நாள் ஒன்று வரும்.” அவருடைய ஞானமான அறிவுரையை ஏற்றுக் கொண்டேன். வருடங்கள் செல்லச் செல்ல சரியாக இதுவே நடந்தது என்று கண்டேன். தேசிய சோஷியலிஸமும் அதன் எஸ்எஸ்-ம் வெறுமனே பிசாசாகிய சாத்தானின் உலகளாவிய ஒழுங்குமுறையின் மற்றொரு பேய்த்தனமான பாகமே என்பதை நாளடைவில் புரிந்துகொண்டேன்.—2 கொரிந்தியர் 4:4.

நூரெம்பர்க்கிலுள்ள செப்ளின் புல்வெளிக்கு மறுபடியும்

1955-ல் நூரெம்பர்குக்கு மறுபடியும் திரும்பச் சென்று அங்கு யெகோவாவின் சாட்சிகளின் “ட்ரியும்ஃபீரன்டெஸ் கேயினிக்ரைச்” (வெற்றிகரமான ராஜ்யம்) என்ற மாநாட்டில் கலந்துகொள்வது என் வாழ்க்கையில் எப்படிப்பட்ட உச்சக்கட்டமாக இருந்திருக்கும் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா! ஆம், ஜெர்மனியிலுள்ள யெகோவாவின் சாட்சிகளை பூண்டோடு ஒழித்துக் கட்டிவிடுவதாக ஹிட்லர் பெருமை பாராட்டிய அதே இடத்தில் இந்த மாநாடு நடத்தப்பட்டது. இங்கு ஒரு முழு வாரத்துக்கு உலகமுழுவதிலுமிருந்து 1,07,000-க்கும் மேற்பட்ட யெகோவாவின் சாட்சிகளும் நண்பர்களும் வணக்கத்திற்காக கூடி வந்தனர். ஒருவரையொருவர் தள்ளுதலோ கோபத்தால் கூச்சலிடுவதோ அங்கில்லை. சமாதானத்தோடு ஒன்றுசேர்ந்து வாழும் மெய்யாக ஐக்கியப்பட்ட சர்வதேச குடும்பம்.

இப்போது யெகோவா தேவனுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட ஊழியர்களாக ஆகியிருந்த என்னுடைய பழைய வாஃபன்-எஸ்எஸ் உடன் தோழர்கள் சிலரை அந்த மாநாட்டில் சந்தித்த போது அடைந்த உணர்ச்சிகளை விளக்குவது கடினம். உண்மையாகவே மகிழ்ச்சி நிறைந்த ஒன்றுகூடலாக இது இருந்தது!

நம்பிக்கையோடு எதிர்காலத்தை நோக்கியிருத்தல்

என்னுடைய ஒப்புக்கொடுத்தல் மற்றும் முழுக்காட்டுதல் முதற்கொண்டு ஆஸ்திரியாவில் இருந்த முற்கால நாசிக்களோடு அநேக வீட்டு பைபிள் படிப்புகளை நடத்தும் சிலாக்கியம் எனக்கு இருந்திருக்கிறது. இவர்களில் சிலரும்கூட இப்போது யெகோவாவுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட சாட்சிகளாக இருக்கின்றனர். 1956-ல் ஆஸ்திரியாவை விட்டு வெளியேறி இப்போது ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறேன். இங்கு முழுநேர ஊழியத்தில் சேவை செய்யும் சிலாக்கியத்தை அனுபவித்திருக்கிறேன். ஆயினும் சமீப காலத்தில் முதிர்ந்த வயதும் குறையும் ஆரோக்கியமும் என்னுடைய வேலைகளை மட்டுப்படுத்தியுள்ளன.

தீய நாசி ஒழுங்குமுறைக்கு இணங்க மறுத்து தங்களுடைய உத்தமத்தன்மையின் காரணமாக சித்திரவதை முகாம்களில் கொலை செய்யப்பட்ட உண்மையுள்ள ஆண்கள், பெண்கள் சிலரை மரித்தோரிலிருந்து மறுபடியும் வரவேற்பது என்னுடைய தீவிரமான நம்பிக்கைகளில் ஒன்று ஆகும்.

இதற்கிடையில், அழிக்கும் தன்மையுள்ள குணமாகிய வெறுப்பு, அன்பாகவும் நம்பிக்கையாகவும் மாறுவதை அதிக சொல்லர்த்தமாகவே கண்டு அனுபவித்திருக்கிறேன். இப்போது என்னுடைய பலமான நம்பிக்கை மனித பரிபூரணத்தோடு, வியாதியும் மரணமுமின்றி ஒரு பரதீஸான பூமியில்—நான் மட்டுமன்றி இப்போது ஆண்டுகொண்டிருக்கும் யெகோவாவின் அரசராகிய கிறிஸ்து இயேசுவுக்கு மனத்தாழ்மையோடு கீழ்ப்படியும் அனைவரும் அந்த நம்பிக்கையில்—என்றென்றும் வாழ்வதே. என்னுடைய விஷயத்தில் உறுதியோடு அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகளைத் திரும்பச் சொல்லக்கூடும்: “நமக்கு அருளப்பட்ட பரிசுத்தஆவியினாலே தேவஅன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.”—ரோமர் 5:5.

[பக்கம் 13-ன் படம்]

என்னுடைய எஸ்எஸ் சீருடையில்

[பக்கம் 14,15-ன் படங்கள்]

ஹிட்லர் தன்னுடைய வருடாந்தர நாசிஸ அணிவகுப்புகளை நடத்திய நூரெம்பர்கில் யெகோவாவின் சாட்சிகளுடைய 1955-ம் ஆண்டின் “வெற்றிகரமான ராஜ்யம்” மாநாடு

[படத்திற்கான நன்றி]

U.S. National Archives photo

[பக்கம் 15-ன் படம்]

ஆஸ்திரேலியாவில் பிரசங்கிப்பதற்கு தயாராக என் கைப்பெட்டியுடன்

[பக்கம் 11-ன் படத்திற்கான நன்றி]

UPI/Bettmann

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்