சாரை பாம்பு—ஏறுவதற்காக உண்டாக்கப்பட்டது
அலபாமாவில் உள்ள பாம்புகளைப் பற்றிய ஒரு கையேடு சாரை பாம்பை, ஏறுவதில் சாதனை படைத்த ஒன்றாக விவரிக்கிறது. இவன் கட்டடத்தின் செங்கல் தெரியும் பக்கத்தில் ஏறி தனது திறமையை வெளிக்காட்டுகிறான். இவன் ஒரு குட்டிப் பாம்பைப் போன்று தோன்றுகிறான். காரணம் செங்கற்களுக்கு இடையேயுள்ள பள்ளங்களில் மிகவும் வசதியாக நுழைந்துகொள்கிறான். எலிகளையும் சுண்டெலிகளையும் சாப்பிடுவதென்றால் இவனுக்கு அலாதிப் பிரியம்.
ஏறுவதற்கு இவனுக்குள்ள விசேஷ திறமையை தி ஆடபன் சொஸைட்டி என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் அனிமல் லைஃப் இவ்வாறு வெளிப்படுத்துகிறது: “சாரை பாம்புகளுக்கு சிறிய முகடுகளைக்கொண்ட வயிற்றுப்பகுதி தகடுகள் இருக்கின்றன. மரப்பட்டையில் நன்கு அழுத்திப் பிடித்துக்கொண்டு, இவ்வாறாக உறுதியாகப் பற்றிக் கொள்ளுவதற்கான அனுகூலத்தைப் பெறுவதற்கு ஏற்ற வகையில் கூரான மூலையை உருவாக்குவதோ அல்லது நீட்டிக்கொண்டிருக்கச் செய்வதோ இத்தகடுகள் செய்யும் வேலைகளில் குறைந்தபட்சம் ஒரு வேலையாக இருக்கிறது. நீட்டிக்கொண்டிருக்கும் மரப்பட்டை ஓரங்களுக்கு இடையே அதன் உடலை நுழைத்து வைத்துக்கொண்டு, முகடுகளைக்கொண்ட வயிற்றுப்பகுதி தகடுகளின் ஓரளவு உதவியைக் கொண்டாவது, மேல்நோக்கி உந்தித் தள்ளுவதன்மூலம் ஒரு பெரிய மரத்தின் அடிமரத்தில் இதனால் ஏறமுடிகிறது.”
இவன் ஒரு மரத்தின்மேல் இருப்பது, பெருங்கூச்சலோடு பாய்ந்துவந்து தாக்கும் காக்கையினங்களின் கும்பலுக்கு இவனை இலக்காக ஆக்கலாம். இந்தக் கட்டடத்தின் சுவரில் ஏறிப்போனால் சாப்பிடுவதற்கு ஒருவேளை பறவைகளோ பறவைகளின் முட்டைகளோ கிடைக்காது, ஆனால் வெதுவெதுப்பான செங்கற்களின்மீது ஒரு நடுப்பகல் குட்டித்தூக்கம் போடமுடியும்.