பைபிளின் கருத்து
யூஎஃப்ஓ-க்கள்—கடவுளிடமிருந்து வரும் தூதுவரா?
இந்த 20-வது நூற்றாண்டு முடிவை நோக்கி மெதுவாகச் சென்றுகொண்டிருக்கையிலும், பூமியில் நிலைமைகள் நிலையாக சீர்கெட்டுப் போய்க்கொண்டிருக்கையிலும், இனம்காணா விண்வெளிப் பொருள்களிலும் [பறக்கும் தட்டு (UFO’s)] அவற்றின் பயணிகளான நில உலகுக்குப் புறம்பானவர்களிலும் நம்பிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. யூஎஃப்ஓ-க்கள் என்பது வெறுமனே ஒரு கதையா, ஒரு மோசடியா, பொதுமக்கள் ஏமாறுவதைக் கண்டு சிரிக்க விரும்பும் மக்களால் செய்யப்படும் ஒரு குறும்புத்தனமான ஏமாற்றுவேலையா?
யூஎஃப்ஓ-க்களை, அல்லது அவற்றின் நில உலகுக்குப் புறம்பானவர்களைப் பார்த்திருப்பதாக அடித்துக்கூறுபவர்களில் சாதாரணமாய்த் தோன்றும், நம்பிக்கைக்குப் பாத்திரமான மக்களும் உள்ளடங்குவர்; உண்மையில், பிற கிரகங்களிலிருந்து வரும் இப் பார்வையாளர்களில் நம்பிக்கை கொள்வோரில், கற்றுத்தேர்ந்த பேராசிரியர்களும் விஞ்ஞானிகளும் உள்ளடங்குவர். நில உலகுக்குப் புறம்பானவர்கள் மனிதரைக் கண்காணித்துவருகிறார்கள் என்றும், சில சமயங்களில் அவர்களோடு தகவல் தொடர்பு கொள்கிறார்கள் என்றும் அவர்கள் உறுதியாக நம்புகின்றனர். விண்வெளியிலிருந்து வரும் பார்வையாளர்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக அடித்துக்கூறும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க நில உலகுக்குப் புறம்பானவர்களின் ஆதரவுத் தொகுதிகள் என அழைக்கப்படுபவை உள்ளன. a
நில உலகுக்குப் புறம்பானவர்களின் தப்பிப்பிழைப்புத் திட்டம்
நம்மிடையே உள்ள நில உலகுக்குப் புறம்பானவர்கள்-ல், தாங்கள் மனித உடல்களில் வாழும் நில உலகுக்குப் புறம்பான பார்வையாளர்கள் என்று உறுதியாக நம்பும், எண்ணிக்கையில் அதிகரித்துவரும் மக்களில் சிலரை ரூத் மன்ட்கமரி பேட்டிகாண்கிறார். மனிதப்பண்புடைய நில உலகுக்குப் புறம்பானவர்களாய் அடித்துக்கூறும் இவர்களில் சிலர் 2000-வது ஆண்டில், “தூதர்கள் மற்றும் ஆளுநர்களைக் கொண்ட அதிகாரம் செலுத்தும் ஒரு குழுமம் முன்னேற்பாடு செய்திருக்கும் அண்டம் சார்ந்ததோர் நிகழ்ச்சி நடைபெறும்” என்று முன்னுரைக்கின்றனர். நில உலகுக்குப் புறம்பானோர் சிலர் தாவரம் மற்றும் விலங்கின் மாதிரிகளைக் கூட்டிச் சேர்த்துப் பாதுகாக்க யூஎஃப்ஓ-க்களைப் பயன்படுத்திவருகின்றனர், அல்லது பூமியின்மீது வந்துகொண்டிருக்கும் அழிவிலிருந்து கோடிக்கணக்கான மானிடரை இடமாற்றம் செய்ய மீட்பு விண்வெளிக்கப்பல்களாக யூஎஃப்ஓ-க்கள் பயன்படுத்தப்படும் என்று சில மக்கள் நம்புகின்றனர். மகா அழிவுக்குப் பிறகு, ஆன்மீக உணர்வோடு “புதிய சகாப்தம் மற்றும் புதிய ஒழுங்கு” என்பதை ஆரம்பிக்க மானிடர் திரும்பிவரவேண்டியவர்களாய் இருக்கின்றனர். அ.ஐ.மா.-வைச் சேர்ந்த கொலராடோவிலிருந்து வந்த, “நில உலகுக்குப் புறம்பான இளைஞர்” என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஒரு தொகுதியின் உறுப்பினரான ஓர் இளைஞர், “நானும் என் நண்பர்களும் நில உலகுக்குப் புறம்பான எங்கள் முன்னோர்கள் விண்வெளிக்கப்பலில் எங்களை மீட்பதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறோம்” என்று மெய்யான உறுதியோடு விழித்தெழு!-விடம் கூறினார்.
நில உலகுக்குப் புறம்பானவர்களாக உறுதியுடன் கூறுபவர்களில் ஒருசிலர், தாங்கள் கடவுளால் வழிநடத்தப்படுவதாக அடித்துக் கூறுகின்றனர், பிறர், மனிதவர்க்கத்துக்கு உதவுவதில் ஆலோசனைக்காக அவரோடு தாராளமாகப் பேசுவதாய் அடித்துக் கூறுகின்றனர். வந்துகொண்டிருக்கும் ஓர் உலகப் பேரழிவிலிருந்து மனிதகுலத்தைக் காப்பாற்ற, பிற கிரகங்களிலிருந்து வரும் பார்வையாளர்களின் மூலமாகக் கடவுள் தொடர்பு கொள்கிறாரா?
மனிதகுலத்துடன் கடவுளின் பேச்சுத்தொடர்புகள்
மனிதனுடைய சரித்திரத்தின் ஆரம்பத்தில், கடவுள் மானிடரோடு பேச்சுத்தொடர்பு கொண்டார். ஆதாம் ஏவாள், நோவா, ஆபிரகாம், மற்றும் பிறரோடு பேசப்பட்ட தெய்வீக உரையாடல்களை பைபிள் பதிவு விவரிக்கிறது. b (ஆதியாகமம் 3:8-10; 6:13; 15:1) கடவுளுடைய விருப்பத்தைத் தெரியப்படுத்தவும் பைபிளை உருவாக்கவும் கனவுகள், குரல்கள், தரிசனங்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. என்றபோதிலும், பைபிள் முடிக்கப்பட்டபிறகு, மனிதகுலத்துடன் பரலோகத்திலிருந்து நேரடித்தொடர்பு கொள்வதற்கான ஒரு தேவை இருந்ததா? இல்லை, ஏனெனில் “தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக” பரிசுத்த வேதாகமம் ஆக்குகிறது என்று பைபிள் கூறுகிறது. (2 தீமோத்தேயு 3:16) பைபிளின்படி, துன்பம் நிறைந்த இக்காலங்களில் தேவையான வழிநடத்துதல், எழுதப்பட்ட கடவுளுடைய வார்த்தையிலிருந்து வரவிருக்கிறது. இருந்தபோதிலும், நில உலகுக்குப் புறம்பான ஒரு பிரதிநிதியின் மூலமாகக் கடவுளிடமிருந்து நேரடியாக தகவல் தொடர்பு அல்லது விசேஷ புத்திமதிகளை நாம் பெறுவோம் என்று நம்புவதற்குக் காரணம் ஏதேனும் இருக்கிறதா? இல்லை, ஏனெனில் “நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்” என்று அப்போஸ்தலன் பவுல் கூறினார்.—கலாத்தியர் 1:8.
நில உலகுக்குப் புறம்பானவர்களாகக் கருதப்படுபவர்களின் அறிவிப்புகள், பூமி சீக்கிரத்தில் பேரழிவு சம்பந்தப்பட்ட பெரியளவிலான மாற்றங்களுக்கு உட்படவிருப்பதாகக் கூறும் பைபிள் தீர்க்கதரிசனங்களுடன் ஒத்துப்போவதாகத் தோன்றினாலும், சிருஷ்டிகளின்மீது சார்ந்திருக்கும் தப்பிப்பிழைப்பதற்கான ஒரு முறையை அவை அளிக்கின்றன. நில உலகுக்குப் புறம்பான விண்வெளிக்கப்பலை, அல்லது பாதுகாப்பு அளிப்பதாகக் கருதப்படும் வேறெந்த இடத்தையாவது தேடி ஓடுவதற்கு மனிதரை பைபிள் வலியுறுத்துவதில்லை. மாறாக, கடவுளோடு ஓர் ஒப்புக்கொடுக்கப்பட்ட உறவில் பாதுகாப்பைத் தேடும்படி பைபிள் நமக்குச் சொல்கிறது, அந்த ஒப்புக்கொடுத்தல் தண்ணீர் முழுக்காட்டுதலால் அடையாளப்படுத்தப்படுகிறது. (1 பேதுரு 3:21; சங்கீதம் 91:7-ஐ ஒப்பிடுக; மத்தேயு 28:19, 20; யோவான் 17:3.) மேலும் “முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்” என்று இயேசு கூறினார்.—மத்தேயு 24:13.
தப்பிப்பிழைப்பதற்கு, இயற்பியல் சார்ந்ததோர் அடைக்கலமான இடத்தைக்காட்டிலும் கடவுளுடன் ஓர் ஆவிக்குரிய உறவை இவ் வசனங்கள் அழுத்திக்காட்டவில்லையா? ஆகவே, ‘மானிடரல்லாதவர்கள்’-ஐப் பற்றிய கதைகள், தப்பிப்பிழைக்க மனிதகுலத்துக்கு உதவுவதற்கு பதிலாக, அவர்களின் நிலைவரமான நலத்துக்காகக் கடவுள் உண்மையில் எதை எதிர்பார்க்கிறார் என்பதிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைத்திருப்புகின்றன.
தப்பிப்பிழைப்பதற்காகக் கடவுள் வைத்திருக்கும் ஏதுக்களிலிருந்து மனிதகுலத்தைத் திசைத்திருப்ப முயன்றுகொண்டு, அதே சமயத்தில், கடவுளைப் பிரதிநிதித்துவம் செய்வதாகவும் எவராலாவது அடித்துக்கூற முடியுமா? “உளவியல் சார்ந்த மற்றும் சமூக அறிவியல் பயிற்சியுடன், இனம்காணா விண்வெளிப் பொருள்களைப் பற்றிய உள்ளார்ந்த ஆய்வாளர்கள் [யூஎஃப்ஓ-க்களைப் பற்றி ஆய்வு செய்பவர்கள்], தங்கள் ஆய்வில், ‘படுக்கையறைக்கு விஜயம் செய்வோர்,’ பேய்கள், விளக்க இயலா ஒலிகளை எழுப்பும் பேய்கள், பேய்த்தோற்றங்கள், மதசம்பந்தமான காட்சிகள், மற்றும் குட்டிச்சாத்தான்களாகக் கருதப்பட்டுவருபவை” ஆகியவற்றைப் பற்றிய ஓப்பீட்டு ஆய்வுகளையும் உள்ளடக்குகின்றனர் என்பதாக ரிப்போர்ட் ஆன் கம்யூனியன் என்ற தனது புத்தகத்தில் எட் கான்ரோய் கூறுகிறார். இனம்காணா விண்வெளிப் பொருள்களைப் பற்றி ஆய்வு செய்வோரில் பலர் மற்றும் மனித உருவில் இருக்கும் நில உலகுக்குப் புறம்பானவர்களாக அடித்துக்கூறுபவர்கள், பயணம் செய்ய விண்வெளிக்கப்பல்களைப் பயன்படுத்துவது பெரும்பாலும் தேவையற்றது என்று கூறுகின்றனர். இவர்கள் காணக்கூடாமல் பயணம் செய்ய முடியும் என்றும், விண்வெளிக்கப்பலின் உதவியில்லாமலே பூமியின்மீது எங்கு வேண்டுமென்றாலும் மானிட உருவெடுக்க முடியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
சாத்தானும் அவனைச் சேர்ந்த பேய்களும் மனிதகுலத்தைத் தவறாக வழிநடத்தும் நோக்கம் கொண்டுள்ளதாக பைபிள் எச்சரிக்கிறது. கவர்ச்சியான, ஆனால் தவறான தீர்வுகளை அளிப்பதற்கு, மனிதகுலத்தின் ஏமாற்றத்தையும் நம்பிக்கையிழந்த நிலையையும் அவர்கள் சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றனர். (2 கொரிந்தியர் 11:14) எனவே, “பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள்” என்று பைபிள் எச்சரிக்கிறது.—1 தீமோத்தேயு 4:1.
அதைப்போலவே இன்றும், இத்தகைய படைப்புகளுடைய விஜயமாகக் கருதப்படுகிறவையும், அவற்றிலிருந்து வரும் பயனுள்ளதாகத் தோன்றும் வழிநடத்துதலும், எந்த உருவை அவை எடுத்தாலும், ஒதுக்கித்தள்ளிவிட வேண்டும். கடவுளுடைய வார்த்தைக்கு மாறாக, “நில உலகுக்குப் புறம்பானவர்கள்”-ன் ஆலோசனையைப் பின்பற்றுவோர், நிச்சயமாகவே தவறாக வழிநடத்தப்படுவர்—இக் கொடிய காலங்களில் ஒரு பயங்கரமான தவற்றைச் செய்வதாகும்.
[அடிக்குறிப்புகள்]
a யூஎஃப்ஓ-க்கள், நில உலகுக்குப் புறம்பான வாழ்க்கை இவற்றைப் பற்றிய ஒரு கலந்தாலோசிப்புக்கு, ஆங்கில விழித்தெழு!-வின் ஏப்ரல் 8, 1990, மற்றும் நவம்பர் 8, 1990 வெளியீடுகளைக் காண்க.
b ஓர் யூஎஃப்ஓ-வாகச் சிலர் புரிந்துகொண்டிருக்கிறதை பைபிள் எழுத்தாளர் எசேக்கியேல் பார்த்தார். (எசேக்கியேல், அதிகாரம் 1) என்றபோதிலும், எசேக்கியேலாலும் பிற தீர்க்கதரிசிகளாலும் விவரிக்கப்பட்ட அடையாளப்பூர்வமான பல தரிசனங்களில் ஒன்றாக இது இருந்தது, நவீன காலங்களில் உறுதியாகக் கூறப்படுவதன்படி, ஓர் உண்மையான இயற்பியல் சார்ந்த தோற்றம் அல்ல.