உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 10/22 பக். 28-29
  • உலகை கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகை கவனித்தல்
  • விழித்தெழு!—1997
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மருத்துவ “காயகல்பம்” ஏதுமில்லை
  • முதிர்ந்த ஒரு பாலூட்டியின் முதல் குளோன்
  • அதிக அழுத்தம் குறித்து எச்சரிக்கை!
  • மின்னியக்க கோழிக்குஞ்சுகள்
  • குழந்தை துர்ப்பிரயோகம்
  • எதிர்ப்பொருளின் வால்போன்ற புகைமண்டலம் கண்டுபிடிக்கப்பட்டது
  • யானையை விரட்ட
  • மற்றவர்கள் விடும் புகை ஆபத்தானது
  • எதிர்கால தாவரமா?
  • கரப்பான்கள் குழந்தைப்பருவ ஆஸ்துமாவுடன் சம்பந்தப்பட்டவை
  • உலகை கவனித்தல்
    விழித்தெழு!—1997
  • தந்தம்—எந்தளவு மதிப்புமிக்கது?
    விழித்தெழு!—1998
  • உலகை கவனித்தல்
    விழித்தெழு!—1998
  • உலகை கவனித்தல்
    விழித்தெழு!—2005
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 10/22 பக். 28-29

உலகை கவனித்தல்

மருத்துவ “காயகல்பம்” ஏதுமில்லை

வாலிபத்தைக் காப்பதற்காக சில ஹார்மோன்கள் போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்வது, “சில நன்மைகளை கொண்டுவந்தாலும், உங்கள் உடல்நலத்துக்கு அதிக கேட்டையும் விளைவிக்கலாம்” என்று முதுமை மருத்துவரான ஆன்டிரேயா ப்ராட்டஸ் கூறுகிறார். வயதாவதற்கு எதிரான போராட்டத்தில், “புதிய மருந்துகளைவிட புதிய பழக்கவழக்கங்கள் அதிக பயன் தருகின்றன” என்று டாக்டர் ப்ராட்டஸ் அறிவுரைக் கூறுகிறார். வாழ்நாள் காலத்தை அதிகரிக்கக்கூடிய நல்ல பழக்கவழக்கங்களில் சில: போதுமான தூக்கம், அமைதலான மனநிலை, கை, கால்களை நீட்டுவது, மிதமான உடற்பயிற்சி செய்வது, மனதளவில் பிரயாசப்படுவது, கொழுப்பு சத்தை தவிர்ப்பது ஆகியவை என பிரேஸில் நாட்டுப் பத்திரிகையான சுபேரின்டேரசன்டி கூறுகிறது. பழங்களிலும் காய்கறிகளிலும் காணப்படும் வைட்டமின்கள், மினரல்கள் போன்றவற்றை உட்கொள்வதும் முக்கியம். வயதாவது, உடலின் எல்லா செல்களையும் உட்படுத்துகிறது. ஆகவே ஒரு தனிப்பட்ட பொருள் உடலின் வித்தியாசப்பட்ட எல்லா உறுப்புகளுக்கும் ஒரேசமயத்தில் பயனளிக்க முடியாது.

முதிர்ந்த ஒரு பாலூட்டியின் முதல் குளோன்

முதிர்ந்த செம்மறியாட்டின் டிஎன்ஏ-விலிருந்து ஒரு குளோன் ஆட்டுக்குட்டியை உண்டாக்கினார்கள் என்று பிப்ரவரியின் பிற்பகுதியில் அறிவிப்பதன் மூலம் ஸ்காட்லாந்தின் ஆராய்ச்சியாளர்கள் உலகத்தை ஆச்சரியத்துக்குள்ளாக்கினர். கருசார்ந்த செல்களிலிருந்து குளோன்களை உருவாக்குவது பல வருடங்களாக செய்யப்பட்டு வந்தபோதிலும், முதிர்ந்த பாலூட்டியின் மரபியல்சார்ந்த இரட்டையை உண்டாக்குவது முடியாது என்றே இதுவரை அநேக விஞ்ஞானிகள் நினைத்திருந்தனர். கோட்பாட்டளவில், இதே முறையை மனிதர்களுக்கும் பொறுத்தலாம் என்று அந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதாவது, முதிர்ச்சியடைந்த ஒருவரிலிருந்து எடுக்கப்பட்ட செல்லின் டிஎன்ஏ-வை உபயோகித்து, வயதில் சற்று குறைவாக ஆனாலும் மரபியல் அடிப்படையில் ஒரேமாதிரியாக இருக்கும் இரட்டையரை உருவாக்கலாம். என்றாலும், இத்திட்டத்தை முன்னின்று வழிநடத்திய விஞ்ஞானியான ஈயன் வில்மட் இந்த எண்ணத்தை ஒழுக்க ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று எனக் கருதுகிறார் என்று இண்டர்நேஷனல் ஹெரால்ட் ட்ரிப்யூன் கூறுகிறது. மனித குளோன்களை உருவாக்குவது, ‘மட்டுமீறிய பரிசோதனையின் வகை’ என்று கூறுவதன் மூலம் உலக சுகாதார நிறுவனமும் இதை ஒப்புக்கொள்கிறது என அமெரிக்க மருத்துவ சங்க பத்திரிகை (ஆங்கிலம்) அறிவிக்கிறது.

அதிக அழுத்தம் குறித்து எச்சரிக்கை!

“லட்சக்கணக்கான பிரேஸில் நாட்டவர் தொடர்ந்து அழுத்தத்தை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கின்றனர்” என்று வேஷா பத்திரிகை அறிவிக்கிறது. தங்கள் உச்சக்கட்ட செயலாற்றலில் நீண்டநேரம் வேலைசெய்வது தங்களுடைய திறமையை வெளிக்காட்டும் ஒன்று என இவர்களில் அநேகர் நம்புகின்றனர்; ஆனால் இந்த மனப்பான்மை கேடு விளைவிப்பதாக இருக்கலாம். பான்டிஃபிக்கல் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தின் டாக்டர் மரிள்டா லிப் இவ்வாறு விளக்குகிறார்: “நியாயமான அளவு அழுத்தத்திற்கு உட்படும்போது ஒரு வேலையாள் நல்லவிதமாக செயலாற்றுகிறார்; அவர் தன்னையறியாமலே தன்னுடைய எல்லையை ஏற்கெனவே தாண்டி செல்லும்போதுதான் மிகவும் அதிகமான உற்பத்தித் திறனை அடைகிறார். மிகவும் அதிகமான அழுத்தத்தின் கீழ், ஒருவர் குறுகிய காலத்திற்கு மிகவும் திறம்பட செயலாற்றுகிறார். பிறகு அவர் நிலைகுலைந்து விடுகிறார்.” பொறுப்பை பகிர்ந்தளிக்க இயலாதவர்கள் அதிக அழுத்தத்தை உணருகிறார்கள் என்று அந்த அறிக்கை சொல்கிறது. டாக்டர் லிப் கூறுகிறபடி, “உணர்ச்சிகளை வெளிப்படுத்த இயலாதவர்களும், அழுத்தத்தின்போது கோபத்தினால் வெடித்துவிட்டு, பின்னர் அமைதியாகவும் நல்லவிதமாகவும் நடந்துகொள்ள முயற்சிக்கும் சுபாவமுள்ளவர்களும்” மிக அதிகமான அழுத்தத்தால் பாதிக்கப்படுவார்கள்.

மின்னியக்க கோழிக்குஞ்சுகள்

ஜப்பானில் மின்னியக்க கோழிக்குஞ்சுகள் தேசிய புதுப்பாணி ஆகிவிட்டன என்று இந்த வருடத்தின் ஆரம்பத்தில் ஆஷாஹி ஈவ்னிங் நியூஸ் அறிவித்தது. பல்வேறு வளர்ச்சி நிலைகளில் இருக்கும் ஒரு கோழிக்குஞ்சின் உருவங்களை காட்டும் திரை அந்த முட்டை வடிவ பொம்மையில் இருக்கிறது. ஒரு பொத்தானை அழுத்தினால், ஐந்து நிமிடங்கள் கழித்து கோழிக்குஞ்சு ஒன்று அதன் ஓட்டை உடைத்துக்கொண்டு திரையில் தோன்றும். அந்த “கோழிக்குஞ்சு” பீப் பீப் என்று சப்தமிட்டு, பல்வேறு பொத்தான்களை அழுத்துவதன் மூலம் அதற்கு “உணவளிக்க”வும் மற்ற தேவைகளை கவனித்துக்கொள்ளவும் அதன் உரிமையாளரை கேட்கும். இரவு நேரம் உட்பட எந்த நேரத்திலும் அது சப்தமிடலாம். அதை உடனடியாக கவனிக்கவில்லையென்றால் அந்தக் கோழிக்குஞ்சு சீக்கிரத்தில் “இறக்க” நேரிடும். எப்படியிருந்தாலும், ஏறக்குறைய ஒருவாரத்தில் அந்தக் கோழிக்குஞ்சு இறந்துவிடும். வித்தியாசமான பண்புகளையுடைய மற்றொரு கோழிக்குஞ்சு “பிறக்கும்படி” அந்தப் பொம்மை மறுபடியும் ப்ரோகிராம் செய்யப்படலாம். சிலர் தங்கள் குழந்தையுடன் ஏற்படும் பிணைப்பைப்போலவே அந்த மின்னியக்க கோழிக்குஞ்சுடன் பிணைப்பு ஏற்பட்டதாக உணர்ந்தனர் என்று அறிவிக்கப்படுகிறது. ஒரு டாக்டர் தன் கோழிக்குஞ்சைப் பற்றி இவ்வாறு சொல்லும் அளவுக்கு சென்றார்: “என்னிடமிருந்த நோயாளிகளில் ஒருவர் இறந்தபோது வருத்தப்பட்டதைவிட, அது இறந்தபோது நான் அதிகமாக வருத்தமடைந்தேன்.”

குழந்தை துர்ப்பிரயோகம்

“உலகமுழுவதிலும் ஏறக்குறைய 20 லட்சம் குழந்தைகள் செக்ஸ் வியாபாரத்தின் பலியாட்களாக இருக்கலாம் என்று எண்ணப்படுகிறது” என ENI புல்லட்டீன் கூறுகிறது. ஆசிய பகுதிகளில் ஏற்கெனவே பரவலாக காணப்படும் இந்த ஒழுங்கமைக்கப்பட்ட குழந்தை துர்ப்பிரயோகம், இப்போது அமெரிக்காக்களிலும் அதிகரித்து வருகிறது. கடந்த பத்துவருடங்களில், இந்தப் பிரச்சினை லத்தீன் அமெரிக்காவில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்திருக்கிறது என இன்டர்-அமெரிக்கன் இன்ஸ்ட்டியூட் ஆஃப் த சைல்ட்-ல் ஒரு வல்லுநராக இருக்கும் ரோட்ரீகோ கீன்டானா கூறுகிறார். லத்தீன் அமெரிக்க நாடுகள் முழுவதும் வயதுவராத சிறுவர்கள் லட்சக்கணக்கில் இப்போது விபச்சாரத்திற்கு பயன்படுத்தப்படுகின்றனர் எனக் காட்டும் புள்ளிவிவரங்களை கீன்டானா மேற்கோள்காட்டுகிறார்.

எதிர்ப்பொருளின் வால்போன்ற புகைமண்டலம் கண்டுபிடிக்கப்பட்டது

பால்வீதி மண்டலத்தின் மையப்பகுதியிலிருந்து வெளிவரும், 3,500 ஒளியாண்டு நீளமான எதிர்ப்பொருளின் வால்போன்ற புகைமண்டலமாக இருக்கலாமென தோன்றுவதை வான்-இயற்பியலாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்தனர் என த நியூ யார்க் டைம்ஸ் அறிவிக்கிறது. சாதாரண பொருளைப் போன்றே ஆனால் எதிர் மின்சக்தியுள்ள அணுக்களைக் கொண்டதே எதிர்ப்பொருளாகும். சாதாரண பொருட்களை எதிர்ப்படுகையில் இவை ஒன்றையொன்று அழித்து, குறிப்பிட்ட சக்தியுடைய காமா கதிர்களை வெளியிடும். காம்டன் காமா கதிர் ஆய்வுக்கூட செயற்கைக்கோளை அந்த ஆற்றல் நிலைக்கு இயைவிப்பதன் மூலம், வால்போன்ற இந்த புகைமண்டலத்தை எதிர்ப்பொருள் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். அந்தப் புகைமண்டலத்தின் பாதிப்பை பற்றி, “அது பூமியை அச்சுறுத்தவில்லை, மாறாக பால்வீதி மண்டலத்தை பற்றிய அவர்களுடைய எண்ணத்தைத்தான் மாற்றியது என வான்-இயற்பியலாளர்கள் கூறினர்.”

யானையை விரட்ட

“ஆசியாவில், ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான டாலர் மதிப்புள்ள பயிர்களை யானைகள் சேதப்படுத்துகின்றன” என்று காம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விலங்கியல் நிபுணர் லோகீ ஆஸ்பார்ன் கூறுகிறார். நியூ ஸையன்டிஸ்ட் பத்திரிகையில் அறிவிக்கப்பட்டபடி, ஆப்பிரிக்காவிலும் யானைகள், உணவுக்காக பயிர்களை அதிகம் தேடுகின்றன. யானைகளை விரட்டுவதற்கு, மோளம் அடிப்பது அல்லது கற்களை வீசுவது போன்ற முறைகளையே விவசாயிகள் காலங்காலமாக முயன்று வந்திருக்கின்றனர். அத்துமீறி நுழையும் அநேக யானைகள் சுடப்பட்டும் இருக்கின்றன, “ஆனால் இது பயிர் சேதத்தை குறைக்கவில்லை” என்று ஆஸ்பார்ன் கூறுகிறார். ஆஸ்பார்னும் இன்னொரு ஆராய்ச்சியாளரும் மேம்பட்ட ஒரு தீர்வை கண்டுபிடித்திருப்பதாக நம்புகின்றனர். அது, ஏறக்குறைய ஒரு கிலோகிராம் கார மிளகும் எண்ணெயும் கலந்து, பீச்சாங்குழல் போன்ற ஒரு கருவியை கொண்டு யானைகள் அருகில் பீச்சியடிக்க உதவும் ஒரு தகரக்குவளையை பயன்படுத்துவதே ஆகும். யானையின் நீளமான மூக்கே மிருகங்கள் மத்தியில் அதிக உணர்ச்சிமிக்கது என்று அவர் கூறுகிறார். ஜிம்பாப்வியில் செய்யப்பட்ட பரிசோதனைகளின்போது, “யானைகள் முதலில் அசையாமல் நின்று, பின்னர் தங்கள் மூக்கை சிந்திவிட்டு வேகமாக திரும்பிச் சென்றன.” மிளகு யானைகளுக்கு எந்த நிரந்தரமான சேதத்தையும் உண்டாக்குவதில்லை என்று அந்த அறிக்கை சொல்கிறது.

மற்றவர்கள் விடும் புகை ஆபத்தானது

“ஒவ்வொரு வருடமும் இதய மற்றும் தமனி சம்பந்தப்பட்ட வியாதிகளில், 50,000-க்கும் அதிகமான இறப்புகளுக்கு காரணம் மற்றவர்கள் விடும் புகையை சுவாசித்தலே” அதாவது மற்றவர்கள் புகையிலை உபயோகிப்பதால் ஏற்படும் புகையே, என நல்ல வீட்டுபராமரிப்பு என்ற ஐ.மா.-வை சேர்ந்த ஆங்கில பத்திரிகையில் ஒரு அறிக்கைக் கூறுகிறது. அதுமட்டுமல்ல, புகைபிடிப்பவர்கள் மத்தியில் அதிகநேரம் செலவிடும் புகைபிடிக்காதவர்கள், நுரையீரல் சவ்வு அழற்சியையும், நுரையீரல் வீக்கத்தையும், பல்வேறு வகையான புற்றுநோயையும் பெருவதற்கான அதிக சாத்தியமும் இருக்கிறது. ஒருவர் புகைபிடித்த பிறகு பல நாட்களுக்கு அந்த அறையில் தொடர்ந்திருக்கும் துர்நாற்றம் ஆபத்தானதாக கருதப்படுவதில்லை. என்றபோதிலும், “அதிக போக்குவரத்து நெரிசலுள்ள ஒரு நெடுஞ்சாலையைவிட, ஆறு மடங்கு அதிகளவு காற்றுத் தூய்மைக்கேட்டை புகை நிரம்பிய அறைகள் ஏற்படுத்தலாம்” என்று அந்தக் கட்டுரைக் கூறியது. “புகையிலை புகைப்பதால் ஏற்படும் எட்டு இறப்புகளில் ஒன்று, புகைபிடிப்பவர் விடும் புகையை சுவாசிப்பதன் காரணமாக ஏற்படுகிறது” என்றும் சொல்லப்பட்டது.

எதிர்கால தாவரமா?

குடியேற்றக்காரர்கள் பண்ணை நிலத்திற்காக அவற்றை வெட்டுவதற்கு முன்பு, நிலநடுக்கோட்டை சுற்றிலும் மூங்கில் மிகவும் அதிகமாக இருந்தது என த யுனெஸ்கோ கூரியர் கூறுகிறது. ஆப்பிரிக்காவில் மட்டும் 1,500 வகையான மூங்கில்கள் இருக்கின்றன. இந்தத் தாவரத்தை அநேக வித்தியாசமான வேலைகளுக்கு உபயோகிக்கலாம். எஃகைவிட அதிக இழுதாங்கு வலிமை (tensile strength) உடையதாக இருப்பதால், இது கட்டுமானத்திற்கு ஏற்ற மிகச்சிறந்த பொருள். கொலம்பியாவில் மூங்கிலால் கட்டப்பட்ட மூன்று மாடிக்கட்டடங்கள் சில, நூறு வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் உபயோகத்தில் இருக்கின்றன. பைப் வேலைகளுக்கும், எரிபொருளுக்கும் மற்ற அநேக வேலைகளுக்கும் மூங்கில் உபயோகமாக இருக்கிறது. மூங்கில் தளிர்கள் சீன மற்றும் ஜப்பானிய சமையலில்கூட உபயோகிக்கப்படுகின்றன. மூங்கிலின் சிறப்புத் தன்மைகள் முற்காலங்களில் குறைவாக மதிப்பிடப்பட்டிருக்கலாம். ஆனால் அதன் உபயோகமான தன்மைகளும், வேகமான வளர்ச்சியும்—ஐந்தே வருடங்களில் அது முதிர்ந்துவிடுகிறது—அதை வித்தியாசமான கோணத்தில், “மீண்டும் உபயோகிக்கக்கூடிய எதிர்கால தாவரம்” என நோக்கும்படி அநேகரை வழிநடத்தியிருக்கிறது.

கரப்பான்கள் குழந்தைப்பருவ ஆஸ்துமாவுடன் சம்பந்தப்பட்டவை

நகரின் உட்பகுதியில் வசிக்கும் குழந்தைகள் மத்தியில் அதிகரித்துவரும் ஆஸ்துமாவிற்கு கரப்பான்பூச்சிகள்தான் காரணம் என்று ஐ.மா.-வின் நேஷனல் இன்ஸ்ட்யூட்ஸ் ஆஃப் ஹேல்த்-க்காக ஐந்து வருடமாக செய்யப்பட்ட ஒரு ஆராய்ச்சி காட்டுகிறது என நியூ யார்க்கின் டெய்லி நியூஸ் அறிவிக்கிறது. ஏழு நகரங்களில் ஆராய்ச்சி செய்யப்பட்ட 1,528 ஆஸ்துமா குழந்தைகளில், 37 சதவீதத்தினர் கரப்பான்களுக்கு அதிக ஒவ்வாமை உள்ளவர்களாக இருந்தனர். ஒவ்வாமை உள்ளவர்கள் தங்கள் படுக்கை அறைகளில் அதிக கரப்பான்களை எதிர்ப்படும்போது, மற்ற ஆஸ்துமா குழந்தைகளைவிட ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுவதற்கான தேவை மூன்று மடங்கு அதிகமாக இருந்தது. பொறிகள், பூச்சிக்கொல்லிகள், போரிக் அமிலம், முழுமையாக சுத்தம் செய்தல் போன்றவற்றின் மூலம் கரப்பான்களை ஒழிக்கும்படி இந்த ஆராய்ச்சியை வழிநடத்தியவரான டாக்டர் டேவிட் ரோசன்ஸ்ட்ரைக் கூறினார். தூசியிலுள்ள கரப்பான் எச்சங்களை நீக்குவதற்கு முழு வீட்டையும் வாக்கூம் (vacuum) சுத்தம் செய்வது அவசியம் என்று கூறினார். “முக்கியமாக, ஒழுக்கு அல்லது கசிந்துகொண்டிருக்கும் தண்ணீர் உட்பட கரப்பான்களை கவர்ந்திழுக்கும் எந்த உணவையும் தண்ணீரையும் நீக்கிவிட வேண்டும். உயிர்வாழ கரப்பான்கள் தண்ணீர் குடிக்க வேண்டும்” என்றும் அவர் கூறுகிறார்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்