போதையுடன் போராடி ஜெயிக்க முடியுமா?
அது மெச்சத்தக்க லட்சியமே. எந்த லட்சியம்? போதைப் பொருளுடன் போராடி இந்தச் சவாலை சமாளித்தே தீருவேன் என்பது. ஆனால் இது வாயால் பந்தல் போடும் விஷயமல்ல. சட்டவிரோதமான போதைப் பொருட்கள் என்னும் இந்த ரயில்பெட்டிகளை சக்திவாய்ந்த இரண்டு எஞ்ஜின்கள் இழுத்துச்செல்கின்றன. அவற்றில் ஒன்று, கிடைக்கும் அளவு (சப்ளை); மற்றொன்று, தேவைப்படும் அளவு (டிமாண்ட்). ஏனெனில், கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாக, போதைப் பொருட்கள் திருட்டுத்தனமாக கிடைக்கும் அளவை குறைப்பதிலேயே அரசும் காவல்துறையும் தங்கள் கவனத்தைச் செலுத்தியிருக்கின்றன. அவர்கள் நினைத்ததெல்லாம், போதைப் பொருள் இல்லாவிட்டால் அதற்கு அடிமையாவோரும் இல்லாமல் போய்விடுவார்கள் என்பதே.
சப்ளைக்கு ‘வேட்டு’
இந்நோக்குடன், போதைப் பொருள் அழிப்புப் படையினர் மூட்டை மூட்டையாக போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்; இது தொடர்பான சர்வதேச கூட்டமைப்பால், செல்வாக்குமிக்க போதைப் பொருள் கடத்தல்காரர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதில் ஜீரணிக்க முடியாத உண்மை என்னவென்றால், காவல் துறையினர் ஓரிடத்திலிருந்து இவர்களை விரட்டினால், கடத்தல் மன்னர்கள் வேறு புகலிடம் தேடிச் செல்கின்றனர்; இல்லாவிட்டால் அதே இடத்தில் அதே தொழிலில் இன்னும் திறமை பெற்றுவிடுகின்றனர். இவ்வாறு தங்களுக்கு முட்டுக்கட்டை போட நினைப்பவர்களுக்கே ‘கட்டை கொடுத்து’ விடுகின்றனர். “தேசிய பட்ஜெட்டுக்குக் கட்டுப்பட்டுள்ள நாங்கள், பணத்திலேயே புரளும் இந்தப் ‘புலிகளோடு’ மல்லுக்கட்டி ஒருபோதும் ஜெயிக்க முடியாது” என போதைமருந்து கட்டுப்பாட்டுத் துறை நிபுணர் ஒருவர் ஒப்புக்கொண்டார்.
ஜிப்ரால்டர் காவல் படையைச் சேர்ந்த குற்றத் தடுப்பு அதிகாரியான ஜோ டி லா ரோஸா, ஆப்பிரிக்காவுக்கும் ஐபீரியன் தீபகற்பத்திற்கும் இடையே போதைப் பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்துவதில் இருக்கும் சிரமங்களைப் பற்றி விழித்தெழு! நிருபரிடம் பேசினார். “1997-ம் ஆண்டின்போது கிட்டத்தட்ட 400 கிலோ ஹசீஷைப் பறிமுதல் செய்தோம்” என்று அவர் கூறினார். மேலும், “இவற்றுள் பெரும்பான்மையானவை கடத்தல்காரர்களிடமிருந்து நேரடியாக தட்டிப்பறித்தவை அல்ல; கடலில் மிதந்துவரும்போதோ கரைகளில் ஒதுங்கிநிற்கும்போதோ கண்டுபிடிக்கப்பட்டவையே. இதிலிருந்தே, ஒவ்வொரு ஆண்டும் ஜிப்ரால்டர் ஜலசந்தியின் வழியாக எவ்வளவு போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றன என்று தெரியவருகிறது. நாங்கள் பறிமுதல் செய்வதெல்லாம் வெறும் ஒரு துளிதான். ஆப்பிரிக்காவிலிருந்து ஸ்பெய்னுக்கு டிரிப் அடிப்பவர்களிடம் அதிவேக படகுகள் உள்ளதால் சுங்க அதிகாரிகளின் விசைப் படகுகளுக்கு சுலபமாக ‘டாட்டா’ காட்டிவிடுகின்றனர். அப்படியே கையும் களவுமாக தாங்கள் பிடிபடப்போகிறோம் என்று தெரிந்துவிட்டால், மூட்டைகளைக் கடலில் தூக்கி எறிந்துவிடுகின்றனர். ஆகவே அவர்களை எந்தக் குற்றச்சாட்டில் கைது செய்வது!” என்றும் புலம்பினார்.
உலகின் பிற பகுதிகளிலும் காவல்துறையினருக்கு இதே சவால்தான். சந்தேகிக்க முடியாத பயணிகளும் போதைப் பொருட்களை கடத்திச் செல்கின்றனர்; லேசான சரக்கு விமானங்களும், கன்டெய்னர் கப்பல்களும், நீர்மூழ்கிக் கப்பல்களும்கூட சமுத்திர மார்க்கமாய் போதைப் பொருட்களை கடத்திச் செல்கின்றன. ஏன், எல்லையில் ஊடுருவிச் செல்ல முடிந்தால் அதற்கும் இவை தயார். “போதைப் பொருள் கடத்தும் தொழிலில் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்த வேண்டுமானால், உலகளவில் கடத்தப்படும் போதைப் பொருட்களில் 75 சதவீதத்தையாவது பறிமுதல் செய்ய வேண்டும்” என ஐக்கிய நாட்டுச் சங்க அறிக்கையொன்று கணக்கிட்டது. தற்சமயம், சொல்லப்போனால் 30 சதவீத கொகெயின் மட்டுமே பறிமுதல் செய்யப்படுகிறது. மற்றவை இதைவிடக் குறைவாகவே பறிமுதல் செய்யப்படுகின்றன.
ஆகவே இந்தப் பிரச்சினையின் தலையைக் கிள்ளி எறியும் வகையில், அரசாங்கங்கள் கஞ்சா செடிகளையும் அபினிச் செடிகளையும் கொகோ புதர்களையும் ஏன் அழித்துவிடக்கூடாது? இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஐக்கிய நாட்டுச் சங்கம் சமீபத்தில் பரிந்துரை செய்துள்ளது. ஆனால் இது அத்தனை எளிதல்ல. நினைத்தால், கஞ்சா செடியை எந்தத் தோட்டத்திலும் வளர்க்கலாம். ஆண்டிஸ் பகுதியில் பெருமளவான கொகோவை “அரசு கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட” இடத்திலேயே வளர்க்கின்றனர். அபினையும் ஹெராயினையும் முக்கியமாக சப்ளை செய்யும் ஆப்கானிஸ்தானிலும் பர்மாவிலும் இதுவே நடக்கிறது; இங்கு, இவற்றை உற்பத்தி செய்யும் செடிகளை கண்காணா இடங்களில்தான் வளர்க்கின்றனர்.
இதைவிட சிக்கல் என்னவென்றால், போதைப் பொருள் கடத்தல்காரர்கள் மனதுவைத்தால் டிஸைனர் போதைமருந்துகளுக்குத் தாவிவிடுகின்றனர். அதற்கோ ஏகப்பட்ட கிராக்கி! இந்த செயற்கை போதைமருந்துகளை உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் இரகசிய ஆய்வுக்கூடங்கள் உற்பத்தி செய்யலாம்.
சரி, இன்னும் திறமையாக காவல்துறையினர் செயல்பட்டாலோ, கடும் தண்டனை விதித்தாலோ இந்தப் போதை ‘விலங்கின்’ வாலை நறுக்க முடியுமா? கடத்தல் மன்னர்களும் போதைக்குமுன் மண்டியிடுபவர்களும் ‘கடலளவாக’ இருக்க, காவல்துறையினர் ‘கையளவாகவே’ இருக்கின்றனர்; உதாரணமாக, ஐக்கிய மாகாணங்களில், கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் ‘கம்பி எண்ணிக்கொண்டு’ இருக்கின்றனர். இந்த எண்ணிக்கையில் பெருவாரியானது போதைப் பொருள் கடத்தல் சம்பந்தமானதே. ஜெயில், ஜெயில் என்று ‘பூச்சாண்டி’ காட்டுவது போதைமருந்தைத் தொட்டுப் பார்ப்பதிலிருந்து மக்களைத் தடுக்கவில்லை. போதைமருந்து விற்பனையில் ‘கொடிகட்டிப் பறக்கும்’ அநேக முன்னேறிவரும் நாடுகளில், காவல்துறை பணியாளர்களோ ரொம்ப ரொம்ப கொஞ்சம். அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளமோ அதைவிட கொஞ்சம். ஆக, இந்தக் களையைப் பிடுங்கி எறிய முடியாமல் காவல்துறை தவிக்கிறது.
டிமாண்டுக்கு ‘வெட்டு’
சப்ளைக்கு வேட்டு வைக்கும் முயற்சிகள் தோல்வியுற்றிருக்க, டிமாண்டை வெட்டுவது பற்றியென்ன? “போதையுடன் மல்லுக்கட்டி ஜெயிப்பது என்று பேசுகையில், அது காவல்துறை, நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டுமே அல்ல, மாறாக அது, இதயமும் மனதும் சம்பந்தப்பட்ட போராட்டமே” என்று டைம் பத்திரிகை அடித்துக்கூறுகிறது.
வேறு வார்த்தையில் சொன்னால், சட்டவிரோதமான போதைப் பொருட்களுடன் போராடி ஜெயிப்பதற்கு கல்வி மட்டுமே சிறந்த வழி என்பதாக முன்பு குறிப்பிடப்பட்ட ஜோ டி லா ரோஸா நினைக்கிறார். “போதைப் பழக்கத்துக்கு அடிமையாவது சமுதாயத்தால் உருவாக்கப்பட்ட ஒரு பிரச்சினை; ஆதலால் சமுதாயத்தையே நாம் மாற்ற வேண்டும்; அல்லது, மக்கள் சிந்திக்கும் முறையையாவது மாற்ற வேண்டும்” என்கிறார் அவர். “நாங்கள் பள்ளிகளையும் பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் ஒன்றுதிரட்டி, ஆபத்து பதுங்கியிருக்கிறது என்றும், போதைமருந்துகள் எங்கும் கிடைக்கின்றன என்றும், அவர்களுடைய பிள்ளைச்செல்வங்கள் வசமாக மாட்டிக்கொள்ளப் போகிறார்கள் என்றும் எச்சரித்து, அவர்கள் மத்தியில் போதைமருந்து பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்று வருகிறோம்.”
சாதனை படைத்துள்ள யெகோவாவின் சாட்சிகள்
‘போதைமருந்தைக் கையில் எடுத்தால் அது உங்களையே சுட்டுவிடும்’ என்று கற்பித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளவர்கள் யெகோவாவின் சாட்சிகள். நேற்று இன்றல்ல, பல்லாண்டுகளாக இவ்வேலை தொடர்ந்து சாட்சிகளால் செய்யப்பட்டு வருகிறது. போதைமருந்தால் வரும் ஆபத்தைப் பற்றி பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு போதிக்க உதவுவதற்காகவே அவர்கள் புத்தகம் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். a அத்துடன், போதை மருந்துகளுடன் உழலும் அநேகர் புத்தி தெளிந்து முகம் மலர உதவுவதில் அவர்களது ஊழியமும் முத்திரை பதித்துள்ளது.
முந்தின கட்டுரையில் குறிப்பிடப்பட்ட ஆனா, யெகோவாவின் சாட்சிகளுடன் அறிமுகம் செய்துவைக்கப்பட்டாள். எப்படியென்றால், அவளுடைய சகோதரி, யெகோவாவின் சாட்சிகள் போதைமருந்துக்கு அடிமையானவர்களின் வாழ்க்கையை மறுமலர்ச்சியடையச் செய்வதில் வெற்றிக்கல் நாட்டுவதைப் பற்றி கேள்விப்பட்டிருந்தாள். ஆனாவுக்கு பைபிளில் அப்படியொன்றும் நாட்டம் இல்லை. ஆனால், சாட்சிகளால் நடத்தப்பட்ட ஒரு மாநாட்டிற்கு, தயக்கத்துடன் ‘கடனுக்காக’ சென்றாள். அங்கு ஒரு மனிதனைக் கண்டாள். அவரோ ஒரு பெரும் கடத்தல் புள்ளியாய் இருந்தவர்! இப்போது அவரைப் பார்த்தால் அடையாளமே தெரியாமல், தோற்றத்திலும் வாழ்க்கை முறையிலும் சுத்தமாக மாறியிருந்தார். “இவரே இவ்வளவு மாறிவிட்டாரென்றால் நான் மாறுவதற்கென்ன என்று நினைத்தேன்” என ஆனா அசைபோடுகிறாள். “அவரது மாற்றத்தைக் கண்டுதான் பைபிள் படிப்புக்கு இணங்கினேன்.
“பைபிளைப் படிக்க ஆரம்பித்த நாள் முதலே, வீட்டில் இருந்துவிட தீர்மானித்தேன். ஏனெனில், வீட்டைவிட்டு வெளியே போனால், போதை பார்ட்டிகள் கண்ணில்பட நேரிடும்; பிறகு பழையபடி நானும் அந்த உலகுக்கே சென்றுவிடுவேன் என்று எனக்குத் தெரிந்தது. போதைமருந்துகளை உட்கொள்வது தவறு என்றும், இந்தப் பழக்கம் கடவுளுக்குப் பிடிக்காது என்றும் ஏற்கெனவே எனக்குத் தெரியும். போதையின் பிடியிலிருக்கும் மக்களை அது எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கிறது என்றும் நான் பார்த்திருக்கிறேன். என் வீட்டுக்கே நான் செய்த துரோகத்தைவிட, அது செய்யும் தீங்குக்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும்! என்னதான் புரிந்தாலும், போதைச்சிறையில் நானே மாட்டிக்கொண்ட விலங்கை உடைத்து சுதந்திரப்பறவையாய் சிறகடித்துப் பறக்க எனக்கு ஆன்மீக தெம்பு தேவைப்பட்டது. ஏற்கெனவே என் உடலில் ஏறியிருந்த போதை தெளிவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. கொஞ்ச நாளாகவே, வேறொன்றும் செய்யாமல் நாள்முழுக்க ஒரே தூக்கம்தான்! பிறகு அந்தப் போதை கொஞ்சம் கொஞ்சமாக இறங்கியது. மனமும் தெளிந்தது.”
நிஜ வாழ்க்கை, நிஜ நம்பிக்கை
முந்தின கட்டுரையில் குறிப்பிடப்பட்ட, ஆனாவின் கணவர் பேத்ரூவுக்கும் விடிவு கிடைத்தது! “என் அண்ணனின் வீட்டில் வைத்து ஹசீஷை இழுத்துக்கொண்டிருக்கையில், ஒரு புத்தகம் என் கண்ணில் பட்டது. அதன் தலைப்போ என்னை வருடியது” என பேத்ரூ மெல்ல ஆரம்பிக்கிறார். “நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம்” என்பதே அதன் தலைப்பு. அதை நான் வீட்டுக்கு எடுத்துச்சென்று வாசித்தேன், அதிலுள்ள வசனங்களையெல்லாம் பைபிளிலிருந்து எடுத்துப் பார்த்தேன். இதுதான் சத்தியம் என்ற மின்னல் எனக்குள் பளிச்சிட்டது.
“பைபிளை வாசித்து வருவதும், கற்றுவந்ததை மற்றவர்களிடம் பேசுவதுமாய் என் காலத்தைத் தள்ளியதால், இந்தப் போதைமருந்தின் மீதிருந்த ஏக்கம் தணிந்து, மனதிற்குள் திருப்தி பிறந்தது. ஆயுதமணிந்து பெட்ரோல் பங்க்கை கொள்ளையடிக்கும் திட்டத்தையும் கைவிட்டேன். என் நண்பர் ஒருவர் யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளைப் படித்துவந்தார். நானும் அவரைப் பார்த்து காப்பியடித்தேன். ஒன்பதே மாதத்தில் என் வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டு முழுக்காட்டுதல் பெற்றேன். இந்தச் சமயத்தின்போது, முன்னாள் நண்பர்கள் பலர் போதைக்கரத்தை என்னிடம் நீட்டினர். நானோ அந்தக் கரத்தை தட்டிவிட்டு, உடனே பைபிளைப் பற்றி அவர்களிடம் பேச ஆரம்பித்தேன். இதற்கு சிலர் அசைந்தும் கொடுத்தார்கள். ஒருவர் தன் அடிமைத்தனத்திலிருந்து முற்றிலும் விடுபட்டார்.
“போதை ‘விலங்கை’ உடைத்தெறிய, நம்பிக்கை பிறக்க வேண்டும். அந்த நம்பிக்கையைத்தான் பைபிள் எனக்கு கொடுத்தது. அது என் வாழ்க்கையை நிஜ வாழ்க்கையாக மாற்றியது. கடவுளின் பார்வையில் போதையும் வன்முறையும் எப்படி இருக்கும் என்பதை கண்ணாடிபோல் தெளிவாகக் காட்டியது. எல்லாம் வல்ல இறைவனைப் பற்றி கற்றுக்கொண்டதால் என் உள்ளமெல்லாம் இன்பமயம்! இவ்வாறு திடீரென்று போதையைக் கைவிட்டதால் அது என் கையைக் கடிக்கவில்லை. பிறகு, யெகோவாவின் சாட்சிகளின் கூட்டங்களில், சுத்தமான பழக்கவழக்கமுடைய ஜனங்களின் கையோடு கைசேர்த்து நடந்ததால் இடையில் தடுமாறிவிடாமல் என் வாழ்க்கைப் பயணத்தை இனிதாய் தொடர முடிந்தது.”
போதையைத் தொட்டவர் செங்கலைத் தொடுகிறார்
முந்தின கட்டுரையில் குறிப்பிடப்பட்ட போதைமருந்து கடத்திய ஹோஸே, இப்போது மறுபடியும் செங்கல் அடுக்கும் வேலைக்குத் திரும்பிவிட்டார். மடியில் பணம் கொட்டும் அந்தத் தொழிலைக் கைவிடுவது அவருக்கு எளிதாக இருக்கவில்லை. “போதைப் பொருட்களைக் கடத்துவதில் ஏராளமான பணம் புழங்கும்” என்றே அவர் ஒப்புக்கொள்கிறார். “ஆனால் பணம் சம்பாதிக்க சரியான வழி அதுவல்ல. இளசுகள் கைத்துப்பாக்கியை சுழற்றுவதையும் கார்களில் மாயமாய் மறைவதையும் என்னால் பார்க்கமுடிகிறது. குடும்பத்திலோ குழப்பம், வீதியிலோ மலிந்திருக்கும் குற்றம். போதைக்குத் தலைவணங்கியவர்கள் பலர் கார்களை உடைத்தும், கடைகளிலும் திருடுகிறார்கள். தங்களுக்கு ‘கிக்’ ஏற, கனமான மடியுள்ள ஆட்களிடம் வழியில் எகிறுகிறார்கள். இவர்களில் அநேகரின் போதைப் பயணம் ஹசீஷில்தான் தொடங்குகிறது. பின்பு ‘பரவச’ பாய்ண்ட்டுக்கு முன்னேறி, பிற மாத்திரைகளையும் கடந்து, முடிவில் கொகெயின் அல்லது ஹெராயின் வரையிலும் செல்லுகிறது. இந்தப் பயணத்தில்தான் நானும் வலம் வந்தேன் என்பது எனக்குப் புரிகிறது.
“யெகோவாவின் சாட்சிகளுடன் சேர்ந்து பைபிள் படித்ததும், தவறான திசையில் செல்லும் என் போதைப் பயணத்தைக் கண்டுகொண்டேன். சுத்தமான மனசாட்சியை நாடினேன். அதைப் போலவே, பைபிள் படிப்பை மேற்கொண்டிருந்த என் மனைவியும் நாடினாள். போதைப் பயணத்தை இடையில் நிறுத்துவது கடினம்தான். பைபிளைப் படிக்கத் தொடங்கிய நான் போதைப் பயணத்தை நிறுத்திவிட்டேன் என்பதாக என் வாடிக்கையாளர்களிடமும் கடத்தல்காரர்களிடமும் பக்குவமாய் எடுத்துச்சொன்னேன். ஆரம்பத்தில் அவர்கள் என்னை நம்பவே இல்லை; இப்போதும் சிலர் நம்புவதில்லை. என்றாலும், என் போதைப் பயணத்தை நிறுத்தி கிட்டத்தட்ட இரண்டு வருடமாகிவிட்டது. அதை நினைத்து ஒரு கணமும் வருந்தியதில்லை.
“கடந்த ஆண்டு முதற்கொண்டு என் தொழிலாகிய செங்கல் அடுக்கும் வேலையையே செய்துவருகிறேன். இப்பொழுதோ, ஒரு மாதம் முழுக்க உழைத்தாலும் எனக்குக் கிடைக்கும் வருமானம், போதைமருந்து கடத்துகையில் ஒரே நாளில் கிடைத்ததில் கால்வாசிதான்! ஆனால் இந்த வாழ்க்கையில் கைகட்டி, மண்டியிடத் தேவையில்லை; ஆகவே சுதந்திர உணர்வுடன் உலாவருகிறேன்.”
உலகளவில் உதவும் உபாயம்
கரடுமுரடான பாதையில் சென்றுகொண்டிருந்த தங்களுடைய போதைப் பயணத்தையே சில அஞ்சா நெஞ்சங்கள் நிறுத்தியுள்ளன. இதுபோன்ற ஆயிரக்கணக்கானோருக்கு வெவ்வேறு விதமான உபாயங்கள் மறுவாழ்வு அளித்துள்ளன. ஆனால், “நெடுநாளாக அதிகளவில் போதைமருந்து உட்கொண்டவர், போதைமருந்தைத் தொடாமல் விலகியிருக்கும்படி எதிர்பார்க்க முடியாது; அப்படியே அது நடந்தாலும், அது அரிதானதே” என உவர்ல்ட் ட்ரக் ரிப்போர்ட் ஒப்புக்கொள்கிறது. சிலர் மறுவாழ்வு பெற்றுவரும் அதே சமயத்தில், பலர் போதைக்குப் பலியாகிவருவது வருந்தத்தக்கதே. ஏனெனில் சப்ளையும் டிமாண்டும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றன.
போதையுடன் போராடி ஜெயிக்க வேண்டுமானால், உலகளாவிய உபாயம் தேவை. ஏனெனில் இது ஏற்கெனவே உலகளாவிய பிரச்சினை. இதைப் பற்றி போதைமருந்துகளைக் கட்டுப்படுத்தும் ஐக்கிய நாட்டு கமிஷன் குறிப்பிடுவதாவது: “அநேக நாடுகளில், போதைமருந்து உட்கொள்ளுவது, கடத்துவது, போதை அத்துமீறி தலைக்குமேல் ஏறி குற்றத்தில் முடிவது போன்றவை நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று மக்கள் புரிந்துகொள்வது என்னவோ உண்மைதான். ஆனால், சட்டவிரோதமாக போதைப் பொருளை கடத்துவது ஓர் உலகளாவிய பிரச்சினை என்றும், அதைத் தீர்க்க தேசிய அளவில் எடுக்கும் முயற்சிகள் போதாது என்றும் அவர்களுக்குத் தெரியவில்லை.”
கேள்வி என்னவென்றால், இந்த உலகளாவிய போதையைத் தெளிவிக்க உலக அரசுகள் ஒன்றுசேருமா? இதுவரை கிடைத்த பதில் நம்பிக்கையூட்டுவதாய் இல்லை. என்றாலும், ஒரு பரலோக அரசாங்கத்தைப் பற்றி பைபிள் குறிப்பிட்டுக் காட்டுகிறது. அது தேசிய எல்லைகளைக் கடந்து ஆட்சி செய்வதே இதற்கு சரியான தீர்வு என்றும் காட்டுகிறது. இயேசு கிறிஸ்துவால் ஆளப்படும் கடவுளுடைய ராஜ்யமே “சதாகாலங்களிலும்” நிலைத்திருக்கும் என பைபிள் உறுதியளிக்கிறது. (வெளிப்படுத்துதல் 11:15) ஆகவே, கடவுளுடைய ஆட்சியில், தெய்வீக கல்வி புகட்டப்படும்; போதைக்கான தேவை அடியோடு அற்றுப்போய்விடும். (ஏசாயா 54:13) போதைமருந்தை தவறாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு உரம்போடும் உணர்ச்சிப்பூர்வ, சமூக பிரச்சினைகளும் நிரந்தரமாக ஒழிந்துவிடும்.—சங்கீதம் 55:22; 72:12; மீகா 4:4.
உங்களுக்கு உதவி வேண்டுமா?
இப்பொழுதும்கூட, கிறிஸ்துவின் கைகளிலிருக்கும் கடவுளுடைய ராஜ்யம், போதைமருந்துகளுக்கு ‘முடியாது’ என்று சொல்ல மக்களைத் தூண்டுகிறது. நீங்கள் கூடுதலான தகவலைப் பெற விரும்பினால், தயவுசெய்து உங்கள் ஏரியாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளை அணுகவும்.
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்ட, இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் என்ற புத்தகத்தில், “போதை மருந்துகளுக்கு ‘முடியாது’ என்று ஏன் சொல்ல வேண்டும்?” என்ற தலைப்புடைய 34-ம் அதிகாரத்தைக் காண்க.
[பக்கம் 11-ன் படம்]
போதைப் பொருளைக் கடத்தியவர்கள் கைது
[படத்திற்கான நன்றி]
K. Sklute/SuperStock
[பக்கம் 12-ன் படம்]
பேத்ரூவும் அவரது மனைவி ஆனாவும் தங்கள் பிள்ளைகளுடன் பைபிள் படித்தல்
[பக்கம் 13-ன் படம்]
பாதுகாப்பு சாதனங்களை பேத்ரூ பொருத்துகிறார்