லாபிரிந்து—புரியாப் புதிர்
பிரிட்டனிலிருந்து விழித்தெழு! நிருபர்
“லாபிரிந்து” என்பது புதிர் விளையாட்டுகளில் வருவதுபோன்ற சிக்கலான பாதைகளை கொண்ட வியூக அமைப்பாகும். இது தரைக்கு மேலும் கீழும் அமைக்கப்பட்டது. இது பழங்காலத்து மன்னர்களால் கட்டப்பட்ட பாதாள சிறை அல்லது ரகசிய வழி எனக் கூறலாம். இதனுள் நுழைவது எளிது; ஆனால் வெளியேறுவது என்பது சாமானிய மனிதனையும் தடுமாற வைக்கும். இதன் மையத்திற்குச் செல்ல ஒரேவொரு வழி மட்டுமே இருக்கும். ஆனால் உள்ளே போனால் பல பாதைகள் பிரிந்து எந்த பாதை எங்கே போகிறது எனத் தெரியாமல் சுற்றி சுற்றி மண்டை காய வேண்டியதுதான். அனுபவசாலிகளின் உதவியோடு வந்த வழியில் மட்டுமே இதிலிருந்து வெளியேற முடியும்.
ஆகவே, இந்த பாதையில் காலெடுத்து வைப்பவர்களின் பாடு திண்டாட்டம்தான். இதனுள்ளே செல்ல செல்ல மர்மமும் திகிலும் கூடிக்கொண்டே போகும். வந்த பாதையும் மறந்து போகும், பாதை தெரியாமல் குழம்பி ஏன் தான் வந்தோமோ என நுழைந்தவர் வாழ்க்கையே வெறுத்துவிடுவார். இந்த புதிர் பாதைகள் புராணக்கதைகளின் மூடநம்பிக்கைகளிலே வேர்கொண்டுள்ளன. அப்படியென்றால் சர்ச்சுகளில் லாபிரிந்துவின் மாதிரிகளை வடித்திருப்பது ஏன்? இந்தப் புதிருக்கான விடை உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும்.
பூர்வ எகிப்தியரின் பிரசித்திப்பெற்ற கட்டிட சாதனை என்னவென்று உங்களுக்கு தெரியுமா? ஓ! தெரியுமே, பிரமிடுகள்தானே என நீங்கள் டக்-கென்று பதில் சொல்வீர்கள். ஆனால், அதுதான் இல்லை. சில எழுத்தாளர்கள் குறிப்பிடுகிறபடி பிரமாண்டமான லாபிரிந்தே இந்த பெருமையை தட்டிச்செல்கிறது. பாய்ந்துவரும் நைல் நதியின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மைரூஸ் ஏரிக்கு அருகில் இது கட்டப்பட்டது. தற்போது இந்த ஏரியின் பெயர் க்குவாரன். நவீன நகரமாகிய கெய்ரோவின் தென்புறத்தில் 80 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஏரி அமைந்துள்ளது.
“நான் இந்த இடத்திற்கு [லாபிரிந்து] விஜயம் செய்தபோது ஆச்சரியத்தால் மலைத்துப்போனேன். கிரேக்கர்கள் கட்டிய எல்லா மதில்களையும் பிரமாண்டமான கட்டடங்களையும் ஒன்றுசேர்த்தாலும் இந்த லாபிரிந்துக்கு இணையாகாது. கூலியாட்களின் எண்ணிக்கை, கட்டுமான செலவு ஆகியவற்றைப் பொறுத்தவரை இதுவே உண்மை. பிரமிடுகளை காட்டிலும் இந்த லாபிரிந்து தனிச் சிறப்புமிக்கது” என்பதாக பொ.ச.மு. ஐந்தாம் நூற்றாண்டை சேர்ந்த கிரேக்க சரித்திர ஆசிரியர் ஹேரடெட்டஸ் எழுதினார். நான்கு நூற்றாண்டுகளுக்கு பிறகு, மற்றொரு கிரேக்க வரலாற்று ஆசிரியர் ஸ்ட்ராபோ, “பிரமிடுகளுக்கு சமமாக இந்த லாபிரிந்துவின் வேலைபாடுகள்” இருப்பதாக அறிவித்தார். இதற்குள்ளாக அந்த லாபிரிந்து பெருமளவு சிதைந்து சின்னாபின்னமாகி இருந்தது.
வரலாற்று ஆசிரியரான எஃப் பார்ஹாம் ட்ஷிங்கே என்பவர் 1871-ல் இப்பகுதியைச் சுற்றிப்பார்த்தார். தொல்பொருள் ஆராய்ச்சியாளரான ஃபிளின்டர்ஸ் பெட்ரி என்பவரால் 1888-ல் கடைசியாக இந்த இடம் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டது. இந்தச் சமயத்தில் லாபிரிந்தில் ஏதோ கொஞ்ச நஞ்சந்தான் எஞ்சியிருந்தது. இன்றைய கைடு புத்தகங்களும் அத்திப்பூத்தார்போல் எப்போதாவதே இதைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. இருந்தபோதிலும் இந்த லாபிரிந்து ஒரு காலத்தில் புகழிலில் எவரெஸ்டாக திகழ்ந்தது. அதுசரி, பார்ப்பதற்கு இது உண்மையில் எப்படி இருந்தது? இது ஏன் கட்டப்பட்டது?
இதன் அமைப்பும் நோக்கமும்
எகிப்து வரலாற்றில் இடம்பெற ஆரம்பித்த காலத்திலேயே இந்த லாபிரிந்து கட்டப்பட்டது. ஒருவேளை எபிரெயர்கள் எகிப்தில் குடியேறுவதற்கு முன்பே இது கட்டப்பட்டிருக்கலாம். (ஆதியாகமம் 46:1-27) லாபிரிந்தினுடைய இரண்டு தள கட்டிட அமைப்பில் 3,000 அறைகள் இருந்தன. அவை இரண்டு தளங்களிலும் சரிபாதியாக பிரிக்கப்பட்டிருந்தன. இதில் தரைமட்டத்திற்கு கீழே ஒரு தளம் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதன் மொத்த பரப்பளவு ஏறக்குறைய 70,000 சதுர மீட்டர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
இந்த லாபிரிந்தின் புரியாப் புதிரான பாதை அமைப்பும், வளாகமும், அறைகளும், நெடுக நின்ற தூண்களும் சிக்கலானதாகவும் குழப்பமூட்டுவதாகவும் இருந்தன. அதன் காரணமாக புதியவர்கள் யாராவது நுழைந்துவிட்டால், அவ்வளவுதான். தலை எது, வால் எது என்ற தெரியாமல் தலைசுற்றிவிடும். பழக்கப்பட்ட வழிகாட்டி ஒருவர் இல்லையென்றால் உள்ளே நுழைவதை மறந்துவிட வேண்டியதுதான். அப்படியே தப்பித் தவறி நுழைந்தாலும் வெளியே வர முடியாது. இதன் பெரும்பாலான இடங்களில் கு. . .ம் இருட்டுதான். யாரேனும் கதவுகளைத் திறந்தால் இடிமுழக்கம் போன்ற ஓசை அடிவயிற்றைக் கலக்கும் அளவுக்கு இருக்கும் என்பதாக சொல்லப்படுகிறது. உலக வல்லரசு என்ற ஸ்தானம் எகிப்திடமிருந்து கைநழுவியபோது லாபிரிந்துவிற்கு என்ன நிலை ஏற்பட்டது? திகைக்கவைக்கும் சிகப்பு கிரானைட் தூண்களும், மிகப்பெரிய கல் பாளங்களும், கண்ணும் கருத்துமாய் மெருகூட்டப்பட்ட சுண்ணாம்பு கற்களும் கொள்ளையடிக்கப்பட்டன; அவை மறுபடியும் வேறு வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்டன.
லாபிரிந்தை மையமாக வைத்து எகிப்திய அரசர்கள் நாட்டை ஆண்டதாக சொல்லப்பட்டாலும் இது மதசம்பந்தமான விஷயங்களுக்காகவே உண்மையில் பயன்படுத்தப்பட்டது. அனைத்து எகிப்திய கடவுட்களுக்கு பலி செலுத்த கோயில்கள் இங்கிருந்தன. லாபிரிந்துவின் அடித்தளத்திலுள்ள அறைகளை பார்வையிட யாருக்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை. அங்கே அரசர்களுக்கும் பரிசுத்த முதலைகளுக்கும் கல்லறைகள் இருந்தன.
எகிப்திய கடவுளாகிய ஆசிரிஸோடு சம்பந்தப்பட்ட மதசடங்குகளை சற்று நோட்டமிட்டாலே போதும், லாபிரிந்தினுடைய புராணக்கதையின் சிறப்பம்சத்தை நன்றாக புரிந்துகொள்ள முடியும். ஒருகாலத்தில் ஆசிரிஸ் எகிப்தியர்களின் அரசனாக இருந்ததாக அவர்கள் நம்பினார்கள். ஆசிரிஸை கீழ் உலகத்தின் தெய்வமாக அல்லது இறந்தவர்களின் தெய்வமாக மக்கள் வணங்கினார்கள்.
புராணக்கதையும் ஆத்துமா அழியாமையும்
வருடா வருடம் எகிப்தியர்களால் நடத்தப்பட்ட மர்ம நாடகத்தில் ஆசிரிஸினுடைய மரணம் நடித்துக்காட்டப்பட்டது. அதில், தாளாத துக்கத்தில் தாரை தாரையாய் கண்ணீர் வடிக்கையில் பரிசுத்த காளையாகிய ஏப்பிஸ், உரிய சடங்கு முறைப்படி கொல்லப்பட்டது. இந்த நிகழ்ச்சியை தலைமை தாங்கும் பூசாரி, ஆசிரிஸ் உயிர்த்தெழுந்து விட்டதால் மக்கள் இனி சந்தோஷமாக இருக்கலாம் என்ற செய்தியை இறுதியில் அறிவிக்கிறான். துக்ககோலம், மகிழ்ச்சியான வைபவமாய் அங்கே அரங்கேறுகிறது. இந்த மர்மமான சம்பவங்கள் எகிப்தியர்களுடைய வாழ்க்கையில் நம்பிக்கையெனும் ஒளியேற்றும் முக்கிய அம்சங்களாக விளங்கின. அரசன் மாத்திரம் அல்ல, ஒவ்வொரு மனிதனும் ஆசிரிஸினுடைய மரணத்தோடு சம்பந்தப்பட்டுள்ளான் என்பதாக அவர்கள் நம்பினார்கள்.
த லாபிரிந்து என்ற புத்தகத்தின் பதிப்பாசிரியரான பேராசிரியர் ஹெச். ஹூக் குறிப்பிட்டார்: “கடவுளாக கருதப்பட்ட அரசனின் வாழ்க்கையை அச்சுறுத்தும் சக்திகள் பூமியிலும் மறுவுலகத்திலும் இருந்ததாக ஆசிரிஸை பற்றிய ஆரம்பகால புராணக்கதைகள் குறிப்பிடுகின்றன.” திகிலூட்டுவதும், வளைந்து நெளிந்து செல்லும் பாதை அமைப்பு உடையதுமான லாபிரிந்து, கடவுளாக கருதப்பட்ட அரசனை எதிரிகளிடமிருந்தும் இந்த உலகிலிருந்தும் மறுவுலகிலிருந்தும்—ஏன் மரணத்திலிருந்தும்கூட பாதுகாப்பதாக நம்பப்பட்டது.
இந்த சமயத்திற்குள் மனித ஆத்துமா அழியாது என்ற நம்பிக்கை பண்டைய எகிப்தில் மாத்திரமல்லாமல் பண்டைய உலகம் முழுவதிலும் தனது நங்கூரத்தை பலமாக போட்டது. தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளில் மனித ஆத்துமா அழியாது என்ற போதனை வேரூன்றி வளர ஆரம்பித்தது. அரசர்கள் மாத்திரமல்ல மனிதவர்க்கத்தினர் அனைவரும் இந்த போதனையை தழுவினர்.
கிரேத்தாவிலுள்ள லாபிரிந்து
எகிப்தில் லாபிரிந்து கட்டப்பட்டு சில வருடங்களுக்கு பிறகு கிரேத்தா தீவிலுள்ள நோஸ்சஸிலும் அதேபோல் ஒன்று கட்டப்பட்டது. கிரேத்தாவில் இது கட்டப்பட்டதாய் கருதப்படும் இடம் ஆதாரப்பூர்வமாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும் எகிப்திலிருந்ததைப் பார்க்கிலும் உருவில் இது மிகவும் சிறியது என்பதாக பதிவுகள் காண்பிக்கின்றன.a இரண்டு கொம்புகளையுடைய பரிசுத்த காளையை பிரதிநிதித்துவம் செய்த லாவ்ரிஸ் (laʹbrys) என்ற இருதலை கோடரியின் பெயருக்கும் நாம் உபயோகிக்கும் லாபிரிந்து என்ற பெயருக்கும் தொடர்பிருப்பதாய் நம்பப்படுகிறது. புராணத்தில் ஆழமாக வேர்கொண்டுள்ள மினோயன் (கிரேத்தா) வணக்கத்தில் இந்த காளை சித்தரிக்கப்படுகிறது.
கிரேத்தாவின் லாபிரிந்து மிகவும் பிரபலமான ஒன்று. இதற்கு காரணம், காளை தலையுடன் இங்கு வாழ்ந்ததாக சொல்லப்படும் மினோட்டார் என்ற புராண மனிதனே. கிரேத்தாவின் அரசனாகிய மினோஸுக்கும் அவன் மனைவி பாசிபாயிக்கும் இந்த ஆபூர்வ ஜீவன் பிறந்ததாக புராணம் சொல்கிறது. ஆகவே “மினோஸின் காளை” என்பதை அர்த்தப்படும் மினோட்டார் என்று இதற்கு பெயர் சூட்டப்பட்டது. தொடர்ந்து அந்த புராணக்கதை சொல்வதை கவனியுங்கள். கிரேத்தாவுடன் நடந்த போரில் ஏதேன்ஸ் நகரம் தோல்வியைத் தழுவியது. ஆகவே ஒன்பது வருடத்திற்கு ஒருமுறை ஏழு வாலிபர்களையும் ஏழு இளம் கன்னிகளையும் மினோட்டாருக்கு பலியாக அனுப்பி வைக்கும்படி ஏதேன்ஸின் மக்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர். இந்த இளம் சிட்டுகள் ‘கண்ணை கட்டி காட்டில் விட்டதுபோல’ லாபிரிந்துக்குள் விடப்பட்டார்கள். வழியறியாமல் திண்டாடிய இவர்களை மினோட்டார் கபளீகரம் செய்து ஏப்பம் விட்டுவிடுமாம்.
காலம் கடந்து சென்றது. இதைப் பார்த்து திஸ்யூஸ் என்ற வாலிபன் கொதித்தெழுந்தான். இந்த பழங்கதையில் வரும் அந்த மினோட்டாரை கொல்வதற்காக லாபிரிந்துவுக்குள் தைரியமாக அவன் நுழைகிறான். அவன் லாபிரிந்துவுக்குள் போகும்போது வழிநெடுகிலும் தங்க நூலை விட்டுக் கொண்டே செல்கிறான். இறுதியில் அந்த மினோட்டாரை தன் வாளுக்கு திஸ்யூஸ் இரையாக்குவதாக சொல்லப்படுகிறது. வந்த வழியாகவே தப்பித்துச் செல்வதற்கு, தான் விட்டுவந்த தங்க நூலை பின்பற்றி லாபிரிந்துவின் வாயிலுக்கு வந்துசேருகிறான். திஸ்யூஸிடம் அந்த நூற்கண்டை அரசன் மினோஸின் மகளாகிய அரியாடினி கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
கிரேத்தாவிலிருந்த லாபிரிந்தை போலவே தோராயமான ஒன்றை உருவாக்கிய மைக்கேல் ஜர்டன் விளக்கினார்: “ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையுமே லாபிரிந்துதான். அதன் மையத்திலிருப்பது மரணமே. ஆனால் மரணமே எல்லாவற்றின் முடிவல்ல. மரணத்திற்கு பின்பும் அவன் சிக்கலான வழிகளில் போகவேண்டியிருக்கிறது. அதன் பின்பே அவனுடைய வாழ்க்கை முடிவடையும்.” இதன்படி புராணக்கதையின் நாயகனாகிய திஸ்யூஸ், லாபிரிந்திலிருந்து தப்பியது அவனுடைய மறுபிறப்பை, அதாவது மரணத்திலிருந்து தப்புவதை குறிக்கிறது. இதன் மூலம், மனித ஆத்துமா அழியாது என்ற கிரேக்க போதகம் இங்கே வெட்ட வெளிச்சமாகிறது.
கிரீஸும் ரோமும்
கலைநயமிக்க கிரேத்தாவிலுள்ள லாபிரிந்துவின் உருவம் பொரிக்கப்பட்ட நாணயங்கள் நோஸ்சஸில் கண்டெடுக்கப்பட்டன. சீக்கிரத்தில் இந்த உருமாதிரி கிரேக்கர்களாலும் ரோமர்களாலும் அப்படியே காப்பியடிக்கப்பட்டது. மத்தியதரை கடல் தீவான சாமோஸில் லாபிரிந்து ஒன்று இருப்பதாக பிளைனி குறிப்பிடுகிறார். லெம்னோஸ் தீவில் 150 தூண்களுடைய அழகிற்கு பேர்போன மற்றொரு லாபிரிந்து இருப்பதைப் பற்றியும் அவர் குறிப்பிடுகிறார். வெகு கவனத்தோடு உருவாக்கப்பட்ட எட்ரூரியர்களின் கல்லறையைப் பற்றி முற்காலத்திய எழுத்தாளரான வர்ரோ என்பவர் எழுதினார். அக்கல்லறைகளுக்குக் கீழே மறைவாக லாபிரிந்து இருந்ததாக சொல்லப்படுகிறது. இதைப் பற்றியும் பிளைனி குறிப்பிடுகிறார்.
பொ.ச. 79-ல் எரிமலையான வெசூவியஸின் சீற்றத்திற்குள்ளான பாம்ப்பே நகரம் அழிக்கப்பட்டது. இந்நகரத்தில் கண்கவரும் இரண்டு லாபிரிந்துகளாவது இருந்தன. இதில் ஒன்றுதான் ஹவுஸ் ஆஃப் லாபிரிந்து. வியக்கவைக்கும் இதன் மொசைக் தரையில் மினோட்டாருக்கும் திஸ்யூஸுக்கும் இடையே நடந்த போராட்டம் ஓவியமாய் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. எழுத்தாளராகிய மார்ஷல் ப்ரையோன் இது “மனித வாழ்க்கையைப் பற்றிய உருவகக்கதையே. இந்த உலகிலும் மறு உலகிலும் ஆத்துமா கடந்துபோகவேண்டிய கடினமான பயணத்தையும் அதன்பின் அடையப்போகும் ஆத்துமா அழியாமை என்ற ஆசீர்வதிக்கப்பட்ட நிலையை இது குறிக்கிறது” என்பதாக வலியுறுத்துகிறார்.
பூர்வ ரோம உலகில், லாபிரிந்துவின் மாதிரியை பின்பற்றி அமைக்கப்பட்ட தளம் பாவிய தரைகளிலும் வயல்களிலும் பிள்ளைகள் விளையாடினார்கள். ரோமர்களின் நாட்டுப்புற மாளிகைகளும் நகர்புற கட்டிடங்களும் இப்போது தோண்டியெடுக்கப்பட்டன. அங்குள்ள மொசைக் தரையில் லாபிரிந்துவின் மாதிரிகள் காணப்படுகின்றன. இதுபோன்றவை ஐரோப்பா முழுவதிலும் அநேகம் இருக்கின்றன. இருப்பினும் புராணங்களிலிருந்து பிறந்த இந்த கருத்துக்கள் காட்டுத் தீ வேகத்தில் எங்கும் பரவ ஆரம்பித்தன.
அநேக நாடுகளை ஆக்கிரமித்தல்
இந்தியாவிலுள்ள மைசூரில் ஹலபிட் கோயிலில் செதுக்கப்பட்ட சித்திரங்கள் காணப்பட்ட ஒரு பகுதியில் லாபிரிந்தும் அடக்கம். மகாபாரதத்தின் ஒரு சம்பவத்தை விவரிக்கும் இது ஏறக்குறைய பொ.ச. 13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
கெட்ட ஆவிகள் ஒரே திசையில் மட்டுமே பறந்து செல்லமுடியும் என்பதாக சீனர்கள் நம்பினார்கள். ஆகவே தங்களுடைய வீடுகளிலிருந்தும் நகரங்களிலிருந்தும் கெட்ட ஆவிகளை விரட்டியடிப்பதற்காக எளிமையான லாபிரிந்துவின் மாதிரியில் நுழைவாயில்களை கட்டினார்கள்
ஸ்காண்டினேவியாவின் பால்டிக் கடலோரத்தில் கற்களால் அமைக்கப்பட்ட 600-க்கும் அதிகமான லாபிரிந்துகள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை உள்ளூர் மீனவர்களால் கட்டப்பட்டது. மேலும் இந்த லாபிரிந்துகள் வழியே நடந்து சென்றால், அதிக மீன்கள் கிடைக்கும், பத்திரமாக வீடு திரும்பவும் முடியும் என்ற மூட நம்பிக்கை அவர்களிடம் இருந்ததாக சொல்லப்படுகிறது.
லாபிரிந்தும் மேஸும் ஏறக்குறைய ஒரே மாதிரி இருந்தாலும் இவற்றிற்கிடையே உள்ள வித்தியாசத்தை புரிந்துகொண்டால் மேஸ் என்ன என்பது தெளிவாகிவிடும். லாபிரிந்தில் எந்த வழியாக நுழைகிறோமோ அந்த வழியாக மட்டுமே வெளிவர முடியும்; ஆனால் மேஸைப் பொறுத்தவரை நுழையும் பாதை ஒன்று வெளியேறும் பாதை வேறு. மேஸுக்குள் மேற்கொண்டு செல்ல முடியாதபடி ஆங்காங்கே பாதைகள் தடைபட்டிருக்கும். ஆனால் சரியான பாதையை கண்டுபிடித்துவிட்டால் அதிலிருந்து வெளியேறிவிடலாம். இங்கிலாந்திலுள்ள கார்ன்வாலின் தென்மேற்கு கரையில் உள்ளது செயின்ட் ஆக்னஸ் என்ற சிறிய தீவு. முந்தைய மாதிரியை பின்பற்றி அத்தீவில் 1726-ல் கலங்கரை விளக்க காவலாளனால் ஒரு மேஸ் சீர்திருத்தப்பட்டது.
கிறிஸ்தவ மண்டலத்தின் சர்ச்சுகளிலும் இந்த லாபிரிந்து நுழைந்திருப்பதுதான் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விஷயம். இதோ சில உதாரணங்கள்:
கிறிஸ்தவ மண்டலத்தின் லாபிரிந்துகளும் மேஸுகளும்
இங்கிலாந்தின் பிரிஸ்டலிலுள்ள செயின்ட் மேரி ரெட்க்லிஃப் என்ற சர்ச் 15-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அந்த சர்ச்சின் உயரமான உட்பக்க கூரையில் மரவேலைப்பாட்டுடன் அமைந்த சொக்க வைக்கும் வட்டவடிவ லாபிரிந்து காணப்படுகிறது. கிறிஸ்தவ மண்டலத்தின் கட்டிடங்களில் காணப்படும் தனிச் சிறப்புமிக்க அநேக லாபிரிந்துகளில் இது மிகவும் சிறியது. தங்க நிறத்திலும் கருப்பு நிறத்திலும் பெயிண்ட் அடிக்கப்பட்டிருக்கும் இதனுடைய விட்டம் 20 சென்டிமீட்டர்தான். பிரான்ஸின் சார்ட்ரஸ் நகரத்திலுள்ள கத்தீட்ரலில் பெரும் புகழ்பெற்ற லாபிரிந்து உள்ளது. ஊதா, வெள்ளை நிற கற்களைப் பயன்படுத்தி 1235-ல் இது கட்டப்பட்டது. இதனுடைய விட்டம் 10 மீட்டர்.
இடைக்காலத்தில் கட்டப்பட்ட பிரெஞ்சு, இத்தாலிய கத்தீட்ரல்களிலும் சர்ச்சுகளில் பெரிய மேஸுகள் உள்ள தரைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அமியன்ஸ், பாய்யக்ஸ், ஆர்லேயன், ரவன்னா, டொலோஸி போன்ற இடங்களில் உள்ளவையும் இதில் அடங்கும். 200 ஆண்டுகளுக்கு முன்பாக ரேம்ஸிலுள்ள ஒரு மேஸ் அழிக்கப்பட்டது. மீர்ப்வா கத்தீட்ரலில் இருக்கும் மேஸின் மத்தியில் மினோட்டார் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
பிரபலமான மத கட்டிடங்களில் லாபிரிந்துகள் புகுத்தப்படுவதைப்பற்றி எழுத்தாளர் ஒருவர் எழுதினார்: “இடைக்கால சர்ச்சுகளில் புறமதத்தின் லாபிரிந்துக்கு ஏகப்பட்ட வரவேற்பு. மேலும் அவற்றை வடிவமைக்கையில் தங்களுக்கு வசதியாக கிறிஸ்தவ சின்னங்களை அவை உள்ளே புகுத்தின.” கிறிஸ்தவனின் வாழ்க்கையை வெளிப்படையாக பிரதிநிதித்துவம் செய்வதற்காக, கிறிஸ்தவ மண்டல சர்ச்சுகளில் லாபிரிந்துகள் பயன்படுத்தப்பட்டன; பூர்வ எகிப்தியர்கள் உருவாக்கிய புராணங்களுக்கு இசைவாக இவ்வாறு செய்யப்பட்டது.
சிலுவைப்போர் வீரர்கள் எருசலேமுக்கு மேற்கொண்ட பயணத்தை சித்தரிக்க, சர்ச்சுகளிலுள்ள மேஸின் சிக்கலான பாதைகளில் நடித்துக்காட்டப்பட்டன. இதில் மையப்பகுதியை அடைவது, எருசலேமை அடைந்ததையும் ரட்சிப்பை பெற்றதையும் அடையாளப்படுத்தியது. பாவ மன்னிப்பை வேண்டி பக்தர்கள் மண்டியிட்டு நடப்பதற்கான வட்டமான யாத்திரை பாதையாக அல்லது பரிசுத்த நகரத்திற்கு புனித யாத்திரை மேற்கொள்வதற்கு பதிலாக சம்பிரதாய முறைப்படி நடந்து செல்வதற்கான பாதையாக சிலர் இதை பயன்படுத்தினார்கள்.
டர்ப் மேஸுகள்
தரையின் மேல் வெட்டப்பட்ட லாபிரிந்துகளே டர்ப் மேஸ் என்பதாக அழைக்கப்படுகிறது. முக்கியமாய், 12-ம் 13-ம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்தில் இவை கட்டப்பட்டன. போகப் போக அவை சந்தேகமில்லாமல் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காகவே பயன்படுத்தப்பட்டன. ஆனால் சர்ச் கட்டிடங்களிலுள்ள லாபிரிந்துகளோடு இவை ஒத்திருந்தன. ஆகவே சிலர் இவற்றிற்கு மதசம்பந்தமான முக்கியத்துவத்தை கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். உலகிலேயே மிகப்பெரிய டர்ப் மேஸ், ஈசக்ஸ் மாகாணத்திலுள்ள சாப்ரன் வால்டனில் பொதுத்திடலில் உள்ளது. இதை 800 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது என்பதாக சில அதிகாரப்பூர்வமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் நான்கு மூலைகளிலும் உயர்த்தப்பட்ட முகப்புகள் இருப்பது மிகவும் ஆச்சரியத்திற்குரியது. இதன் நடைபாதையின் தூரம் சுமார் 2 கிலோமீட்டர்.
மதசம்பந்தப்பட்ட மேஸ் அல்லது லாபிரிந்துகளின் வரலாற்றுப்பூர்வமான/புராண விஷயங்களை இணைத்து பேசுகிறவராக டபிள்யூ. ஹெச். மாத்தியூஸ் இவ்வாறு சொல்கிறார்: “லாபிரிந்துவிலிருந்து பாதுகாப்பாக தப்பிச்செல்வதற்கான வழியை கண்டுபிடிப்பதற்கு திஸ்யூஸுக்கு அரியாடினி நூற்கண்டை கொடுத்தாள். அடையாள அர்த்தத்தில், கவர்ச்சி மிகுந்த இந்த உலக வாழ்க்கையெனும் லாபிரிந்துவிலிருந்து தப்பி வெளியேறுவதற்கான ஒரே வழி தெய்வீக வழிநடத்துதலே.”—மேஸுகள் மற்றும் லாபிரிந்துகள்—இவற்றின் வரலாறும் வளர்ச்சியும் (ஆங்கிலம்).
மேஸுகளுக்கும் லாபிரிந்துகளுக்கும் பொய்மதங்களே பிறப்பிடமாக இருந்தாலும் இவை கிறிஸ்தவ மண்டலத்தில் வேரூன்றி இருப்பது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். உண்மை கிறிஸ்தவம் பொய்மத மூடநம்பிக்கை பழக்கவழக்கங்களோடு கைகோர்க்க முடியுமா?
கிறிஸ்தவ விசுவாசத்தோடு சமரசமா?
லாபிரிந்துவின் வரலாறு உங்களுக்கு பெரும் ஆச்சரியமளிக்கலாம் என்பது உண்மைதான். ஆனால் இதனுடைய மத நம்பிக்கைகள் உண்மையான கிறிஸ்தவ விசுவாசத்தோடு சமரசமாக முடியாது. மனிதன் வேறு, அவனுக்குள் இருக்கும் ஆத்துமா வேறு என்பதாகவும் அவன் இறந்த பிறகு அது தொடர்ந்து வாழ்கிறது என்பதாகவும் பைபிளில் எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. மாறாக மனித ஆத்துமா இறந்துபோகும் என்பதாகத்தான் பைபிள் போதிக்கிறது. அது சொல்கிறது: “பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.”—எசேக்கியேல் 18:4.
கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் அதிக வலிமை வாய்ந்தது. ‘ஆவியின் பட்டயம்’ என்பதாக இது குறிப்பிடப்படுகிறது. உண்மை கிறிஸ்தவர்கள் இந்த பட்டயத்தை திறம்பட்ட முறையில் பயன்படுத்த வேண்டும். எதற்காக என்று யோசிக்கிறீர்களா? புராணக்கதையில் வரும் இராட்சத மினோட்டாரோடு போரிட்டு அதை அழிப்பதற்காக அல்ல. ஆனால் உண்மையான, மீமானிட, கண்ணுக்குத் தெரியாத ஆவி சிருஷ்டியையும் அவனுடைய பேய்களையும் வெற்றி சிறப்பதற்காக நாம் அவ்வாறு செய்ய வேண்டும். (எபேசியர் 6:12, 17) இதுவே அவர்களிடம் காணப்படும் தோல்வி காணா விசுவாசத்திற்கும் அசைக்க முடியாத நம்பிக்கைக்கும் அச்சாணியாகும். சீக்கிரத்தில் வரவிருக்கும் இந்த உலகத்தின் அழிவெனும் புயலிலிருந்து தப்பி, நீதியுள்ள புதிய உலகமெனும் கரையை சேர இது அவர்களுக்கு வழிதிறக்கும். புராண இலக்கியங்கள் ஒருபோதும் சாதிக்கமுடியாத சாதனை இது.—2 பேதுரு 3:13.
[அடிக்குறிப்புகள்]
a கிரேத்தா நாட்டவர் கட்டிய லாபிரிந்தை எகிப்திலுள்ளதோடு ஒப்பிடும்போது அதன் அளவு நூறில் ஒரு பங்கு மாத்திரமே என்பதாக பொ.ச. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த பிளைனி என்ற இயற்கை நிபுணர் குறிப்பிட்டார்.
[பக்கம் 22-ன் பெட்டி]
விளையாட்டு மேஸ்
புதுவகையான மேஸ் ஒன்று 600 ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கப்பட்டது. இதற்கு மதசம்பந்தமான சிறப்பம்சங்கள் எதுவுமில்லை. ஆனால் இது கண்ணைக் கவருவதற்காக வடிவமைக்கப்பட்டது. சீக்கிரத்தில் இங்கிலாந்து முழுவதும் எளிமையாக தோற்றமளித்த தோட்டங்களில் இப்படிப்பட்ட பாதைகளை அமைப்பது சர்வசாதாரணமாகி விட்டது. காலப்போக்கில் இந்த பாதைகள் படு சிக்கலானவையாய் அமைக்கப்பட்டன. மிகவும் கச்சிதமாக வெட்டிவிடப்படும் பாக்ஸ்வுட் என்ற செடிகள் அதன் பாதை ஓரங்களில் நடப்பட்டன.
சமீப வருடங்களில் நவீனமயமானதும் கடும்சிக்கலானதுமான அமைப்பையுடைய இப்படிப்பட்ட அநேக பாதைகள் உலகெங்கும் முளைத்திருக்கின்றன. பிள்ளைகளும் பெரியவர்களும் இதை விரும்புகின்றனர். அவை சந்தோஷத்தையும் அளிக்கலாம்.
[பக்கம் 24-ன் பெட்டி/படம்]
கிறிஸ்தவமண்டலத்தில் லாபிரிந்து
பூசை மேசையில் விரிப்பதற்கு பூவேலைப்பாடுடைய துணியை லண்டனின் வெஸ்ட்மினிஸ்டர் அபே அறிமுகப்படுத்தியது. அதனுடைய மையத்திலிருந்த லாபிரிந்துவிற்கு ஒரு பக்கத்தில் “Α” (ஆல்ஃபா, “ஆரம்பம்”) இருப்பதையும், மறுபக்கத்தில் “Ω” (ஒமேகா, “முடிவு”) இருப்பதையும் கவனியுங்கள். இந்த லாபிரிந்தினுடைய மையத்தின் வடிவமைப்பில் யெகோவாவை பிரதிநிதித்துவம் செய்யும் “I AM” என்ற சொற்கள் இருப்பதை கவனியுங்கள். கிங் ஜேம்ஸ் வர்ஷன்-ல் யாத்திராகமம் 3:14-ல் குறிப்பிடப்பட்டுள்ள “I AM” மகா உன்னதரான யெகோவாவையே குறிக்கிறது. இது லாபிரிந்துக்கும் மதத்திற்கும் இடையேயான உறவை வெளிப்படுத்தும் நவீன நாளைய உதாரணமாகும்.
[படத்திற்கான நன்றி]
Photo: David Johnson
[பக்கம் 21-ன் படம்]
கிரேத்தாவிலுள்ள நோஸ்சஸில் கண்டுபிடிக்கப்பட்ட பொ.ச.மு. நான்காவது, ஐந்தாவது நூற்றாண்டுகளின் நாணயங்கள். லாபிரிந்துவின் மாதிரியையும் மினோட்டாரை பிரதிநிதித்துவம் செய்யும் காளையின் தலையையும் கவனிக்கவும்
[படத்திற்கான நன்றி]
Copyright British Museum
[பக்கம் 23-ன் படம்]
இங்கிலாந்தின் சாப்ரன் வால்டனிலுள்ள உலக மகா டர்ப் மேஸ்
[படத்திற்கான நன்றி]
Courtesy Saffron Walden Tourist Office