முதல் கிளை நூறாண்டுகளுக்கு முன்னால்
உவாட்ச்டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டியின் சட்டப்பூர்வமான சாசனம் அ.ஐ.மா., பென்சில்வேனியாவில் 1884 டிசம்பர் 15 அன்று அதிகாரப்பூர்வமாக பதிவுசெய்யப்பட்டது.a அங்குதான் இந்தச் சங்கத்தின் தலைமை அலுவலகம் நிறுவப்பட்டது. அதன்பின்பு, 1900 ஏப்ரல் 23 அன்று முதல் கிளை அலுவலகத்துக்காக இங்கிலாந்திலுள்ள லண்டனில் இடம் வாங்கப்பட்டது. இங்கே காட்டப்பட்டுள்ளபடி, அப்போது அது கிழக்கு லண்டனில் 131 ஜிப்ஸி லேன், ஃபாரஸ்ட் கேட் என்ற இடத்தில் அமைந்திருந்தது.
நூறு வருடங்களுக்கு முன்பாக முதல் கிளை அலுவலகம் நிறுவப்பட்ட அந்த சமயத்தில், இங்கிலாந்தில் மொத்தம் 138 பைபிள் மாணாக்கர்கள் இருந்தனர், அப்போது யெகோவாவின் சாட்சிகள் இவ்வாறுதான் அழைக்கப்பட்டனர். இரண்டு வருடங்களுக்குப்பின், 1902-ல் இரண்டாவது கிளை ஜெர்மனியில் திறக்கப்பட்டது. 1904-ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலியாவிலும் சுவிட்ஸர்லாந்திலும் கூடுதலாக கிளைகள் ஸ்தாபிக்கப்பட்டன.
1918-ல் முதல் உலகப் போர் முடிவுக்கு வந்தது, அப்போது உலகம் முழுவதிலும் 3,868 பைபிள் மாணாக்கர்கள் பிரசங்க வேலையை அறிக்கை செய்து வந்தனர். அதற்கு அடுத்த ஆண்டில் உவாட்ச் டவர் சொஸைட்டியின் ஐந்தாவது கிளை கனடாவில் திறக்கப்பட்டது. அதன்பிறகு பைபிளின் செய்தி வேகமாக அறிவிக்கப்பட ஆரம்பித்தபோது பல்வேறு நாடுகளிலும் புதிய கிளைகள் திறக்கப்பட்டன, 1921-ல் மட்டுமே ஆறு கிளைகள் திறக்கப்பட்டன.
1931-ல் பைபிள் மாணாக்கர்கள் யெகோவாவின் சாட்சிகள் என்ற பைபிள் அடிப்படையிலான பெயரை ஏற்றுக்கொண்ட சமயத்தில், உலகம் முழுவதிலும் 40 கிளை அலுவலகங்கள் இருந்தன. (ஏசாயா 43:10-12) அடுத்த மூன்று ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை 49 ஆனது! 1938-ல் சாட்சிகளின் உச்சநிலை 59,047; 52 நாடுகளில் பிரசங்கித்துக் கொண்டிருந்தனர், ஆனால் அதற்குள் அநேக இடங்களில் அவர்கள் செய்து வந்த கிறிஸ்தவ வேலைக்கு அச்சுறுத்தலாக கடும் எதிர்ப்பு கிளம்பியது.
சர்வாதிகார ஆட்சி ஒரு நாட்டிலிருந்து மற்றொன்றுக்கு பரவ ஆரம்பித்து 1939 செப்டம்பரில் இரண்டாம் உலகப் போர் ஆரம்பமானபோது, யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மூடப்பட்டன. 1942-ல் 25 கிளைகள் மாத்திரமே செயல்பட்டு வந்தன. ஆனால் மனித வரலாற்றிலேயே பயங்கரமான நாசத்தை விளைவித்த அந்தப் போர் நடந்த சமயத்தில் உலகம் முழுவதும் யெகோவாவின் சாட்சிகள் தொடர்ந்து சுறுசுறுப்பாக செயல்பட்டு நவீன வரலாற்றில் மிக அதிகமான வளர்ச்சிகளில் ஒன்றை அனுபவித்து சாதனை படைத்தது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.
1945-ல் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்துகொண்டிருந்த சமயத்தில் உலகின் பல பகுதிகள் பாழடைந்து கிடந்தன, சாட்சிகளுடைய கிளை அலுவலகங்களோ திரும்ப திறக்கப்பட்டன, புதிய கிளைகளும் ஸ்தாபிக்கப்பட்டன. 1946-ல் உலகம் முழுவதிலும் 57 கிளைகள் இருந்தன. எத்தனை சாட்சிகள் சுறுசுறுப்பாய் வேலை செய்துகொண்டிருந்தனர் தெரியுமா? 1,76,456! 1938-ல் இருந்தவர்களைவிட ஏறக்குறைய மூன்று மடங்கு அதிகம்!
முதலில் திறக்கப்பட்ட கிளைகள் விரிவானது எப்படி
1911-ல் இங்கிலாந்தில் லண்டனிலிருந்த உவாட்ச் டவர் சொஸைட்டி 34 கிரேவன் டெரஸ் என்ற இடத்துக்கு மாற்றப்பட்டது. இங்கே அலுவலகத்துக்கும் தங்குவதற்கும் இடவசதி அதிகமாய் இருந்தது. பின்னர் 1959, ஏப்ரல் 26 அன்று, லண்டனில் மில் ஹில் என்ற இடத்தில் புதிய கிளை கட்டடங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அதற்குப்பின் தங்கும் இடங்கள் விரிவுபடுத்தப்பட்டன, கடைசியில் (1993-ல்) 18,500 சதுர மீட்டர் இடத்தில் அச்சாலையும் நிர்வாக அலுவலக காம்ப்ளெக்ஸும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இங்கே வருடந்தோறும் காவற்கோபுரம், விழித்தெழு! பிரதிகள் 23 மொழிகளில் 9 கோடிக்கும் அதிகமாக அச்சிடப்படுகின்றன.
சொஸைட்டியின் இரண்டாவது கிளை அலுவலகம் விரிவாக்கப்பட்டது இன்னும் சுவாரஸ்யமானது. 1923-ல் மேக்டிபர்க் என்ற இடத்துக்கு ஜெர்மன் கிளை மாற்றப்பட்டது. அங்கே சங்கத்துக்கு சொந்தமான அச்சாலையில் வெளியான முதல் பத்திரிகை 1923, ஜூலை 15 தேதியிட்ட காவற்கோபுரம். அடுத்த சில வருடங்களில், இதையொட்டி இருந்த இடமும் வாங்கப்பட்டது, கூடுதலாக கட்டடங்கள் கட்டப்பட்டன, பைண்டிங் மிஷினும் கூடுதலாக அச்சு இயந்திரங்களும் வாங்கப்பட்டன. 1933-ல் கிளை அலுவலகத்தை நாசிக்கள் கைப்பற்றினர், சாட்சிகள் தடை செய்யப்பட்டனர், அதன்பிறகு அவர்களில் இரண்டாயிரம் பேர் சித்திரவதை முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
1945-ல் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தபோது, மேக்டிபர்க்கிலிருந்த சொஸைட்டிக்கு சொந்தமான இடம் கிழக்கு ஜெர்மனியின் பாகமாக இருந்தது, அது திருப்பி தரப்பட்டது, மீண்டும் கிளை ஸ்தாபிக்கப்பட்டது. ஆனால் 1950, ஆகஸ்ட் 30-ம் தேதி கம்யூனிஸ்ட் போலீஸார் கட்டடங்களுக்குள் திடீரென புகுந்து அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்களை கைது செய்தனர். சாட்சிகள் கிழக்கு ஜெர்மனியில் தடைசெய்யப்பட்டனர். இதற்கிடையில் 1947-ல் மேற்கு ஜெர்மனியில் விஸ்பேடன் என்ற இடத்தில் இடம் வாங்கப்பட்டது. பின்வந்த ஆண்டுகளில் அங்கே கிளை அலுவலக கட்டடங்கள் கட்டப்பட்டு, பிரசுரங்களின் தேவைக்கேற்ப விரிவுபடுத்தப்பட்டு வந்தன.
விஸ்பேடனில் இன்னும் விரிவுபடுத்த இடம் போதவில்லை என்பதால் 1979-ல் செல்டர்ஸ் அருகே இன்னும் 75 ஏக்கர் இடம் வாங்கப்பட்டது. ஐந்து ஆண்டுகள் கட்டுமான பணி நடந்தது, 1984, ஏப்ரல் 21-ம் தேதி பெரிய கிளை அலுவலகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதற்குப் பிறகும் விரிவுபடுத்தப்பட்டது, இப்போது அங்கே ஓராயிரத்திற்கும் அதிகமான பேர் தங்குவதற்கு வசதி உள்ளது. செல்டர்ஸில் உள்ள இராட்சத ஆஃப்செட் பிரஸ்களிலிருந்து ஒவ்வொரு மாதமும் 30-க்கும் அதிகமான மொழிகளில் 1.6 கோடி பத்திரிகைகள் வெளிவருகின்றன. சமீப ஆண்டில் பைபிள்கள் உட்பட 1.8 கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் பைண்டரியில் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.
அச்சிடும் மற்ற பெரிய கிளைகள்
1927-ல் ஜப்பானிலுள்ள கோப் என்ற இடத்தில் ஒரு கிளை அலுவலகம் முதலில் திறக்கப்பட்டது, ஆனால் இரண்டாம் உலகப் போர் நடந்த சமயத்தில் சாட்சிகள் கடுமையாக துன்புறுத்தப்பட்டதால், அவர்களுடைய வேலை சரியாக நடக்கவில்லை. என்றபோதிலும், போர் முடிந்தபின் டோக்கியோவில் கிளை மீண்டும் திறக்கப்பட்டது. கூடுதலாக கட்டடங்கள் கட்டுவதற்கு அங்கே இடமில்லாமல் போனபோது, நுமாசூவில் ஒரு புதிய கிளை கட்டப்பட்டது. அது 1973-ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்தக் கட்டடங்களும் போதவில்லை, ஆகவே எபினா என்ற இடத்தில் பெரிய அளவில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டன. இவை 1982-ல் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த இடத்தில் 900 பணியாளர்கள் தங்குவதற்கு வசதியுள்ள கட்டடங்கள் சமீபத்தில்தான் கட்டிமுடிக்கப்பட்டன. ஜப்பானிய மொழியில் மாத்திரமே 1999-ல் 9.4 கோடி காவற்கோபுரம், விழித்தெழு! பிரதிகளும் லட்சக்கணக்கான புத்தகங்களும் அச்சிடப்பட்டிருக்கின்றன.
மற்ற நாடுகளிலும் கிளை அலுவலகங்கள் இவ்வாறே விரிவுபடுத்தப்பட்டு வந்திருக்கின்றன. 1929-ல் மெக்ஸிகோ நகரில் ஒரு கிளை அலுவலகம் திறக்கப்பட்டது. அதன்பிறகு சாட்சிகளின் எண்ணிக்கை 60,000-ஐ எட்டியபோது நகரத்துக்கு வெளியே விசாலமான புதிய கட்டடங்கள் கட்டப்பட்டன. அது 1974-ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது, இங்கே 1985-லும் 1989-லும் கூடுதலான கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டிருக்கின்றன. தற்போது அச்சு வேலைக்காக பெரியளவில் ஒரு புதிய கட்டடமும் கூடுதலாக தங்குமிடங்களும் கட்டி முடிக்கப்படும் தருவாயில் உள்ளன. இதனால், விரைவில் மெக்ஸிகோ கிளையில் 1,200 பேர் தங்கி வேலை செய்வதற்கு வசதி இருக்கும். ஏற்கெனவே அங்குள்ள 5 லட்சத்துக்கும் அதிகமான சாட்சிகளுக்கும் மெக்ஸிகோவிலும் அருகிலுள்ள மற்ற நாடுகளிலும் இருக்கும் கோடிக்கணக்கான மற்றவர்களுக்கும் தேவையான பத்திரிகைகளையும் புத்தகங்களையும் இந்தக் கிளை அளித்துவருகிறது.
1923-ல் பிரேஸிலில் உள்ள ரியோடி ஜனீரோவில் சிறந்த புதிய கிளை அலுவலகம் ஒன்று அமைக்கப்பட்டு அங்கே புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டன. ஆனால் சாவோ பாலோ பிரேஸிலின் வணிக மற்றும் போக்குவரத்து மையமாக இருப்பதால் 1968-ல் அந்த நகரில் ஒரு புதிய கிளை அலுவலகம் கட்டப்பட்டது. 1970-ன் மத்திபத்திற்குள் பிரேஸிலில் ஏறக்குறைய 1,00,000 சாட்சிகள் இருந்தனர். ஆனால் சாவோ பாலோவில் விரிவாக்கத்திற்கு இடமில்லாமல் போனதால், சாவோ பாலோவுக்கு சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் செசாரியு லான்ஷெ என்ற இடத்தில் 285 ஏக்கர் இடம் வாங்கப்பட்டது. 1981, மார்ச் 21 அன்று அந்தப் புதிய இடத்தில் கிளை அலுவலக கட்டடங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த இடத்தில் வசதிகள் விரிவுபடுத்தப்பட்டிருப்பதால் கிளை அலுவலகத்தில் சுமார் 1,200 பேர் தங்க முடியும். தென் அமெரிக்காவுக்கும் உலகின் மற்ற பகுதிகளுக்கும் தேவையான பத்திரிகைகளும் புத்தகங்களும் பிரேஸிலில் அச்சிடப்படுகின்றன.
அச்சிடும் மற்றொரு பெரிய கிளை அலுவலகம் கொலம்பியாவில் போகோடா அருகே 1990-களின் ஆரம்பத்தில் கட்டி முடிக்கப்பட்டது. அங்கே தென் அமெரிக்காவின் வடமேற்கு பகுதி முழுவதிலும் விநியோகிப்பதற்கு தேவையான காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள் அச்சிடப்படுகின்றன.
வருடந்தோறும் கோடிக்கணக்கான பத்திரிகைகளை அச்சிடும் மற்ற கிளைகள் அர்ஜன்டினா, ஆஸ்திரேலியா, இத்தாலி, கனடா, கொரியா, தென் ஆப்பிரிக்கா, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், பின்லாந்து, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளில் உள்ளன. பைபிள்களையும் கோடிக்கணக்கான புத்தகங்களையும் ஆண்டுதோறும் அநேக மொழிகளில் இத்தாலியிலுள்ள கிளை அச்சிடுகிறது. ஆனால் வருடந்தோறும் நான்கு கோடிக்கும் அதிகமான புத்தகங்களும் நூறு கோடிக்கும் மேலான பத்திரிகைகளும் இன்னும் நியூ யார்க், புரூக்லினிலுள்ள உவாட்ச்டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டியின் தலைமை அலுவலகத்திலும் வட நியூ யார்க்கிலுள்ள அச்சாலையிலுமே அச்சிடப்படுகின்றன.
நூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரேவொரு கிளை அலுவலகம் மாத்திரமே இருந்தது, இன்றோ அது 109 கிளைகளாக வளர்ந்து 234 நாடுகளிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய தேவைகளை பூர்த்தி செய்வது குறிப்பிடத்தக்கதே. இந்தக் கிளை அலுவலகங்களில் வேலைபார்க்கும் 13,000 பேரும் ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவ வாலண்டியர்கள் என்பதை எண்ணிப் பார்க்கையில் பிரமிப்பாக உள்ளது! இவர்களும் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் வேலைபார்க்கும் 5,500 வாலண்டியர்களும் செய்யும் சேவை, ‘முடிவு வருவதற்கு முன்பு ராஜ்யத்தின் இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாக பிரசங்கிக்கப்படும்’ என இயேசு கிறிஸ்து சொன்ன தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுவதற்கு இன்றியமையாததாக இருந்திருக்கிறது.—மத்தேயு 24:14.
(g00 12/22)
[அடிக்குறிப்பு]
a அந்தச் சமயத்தில் அதன் பெயர் ஸையன்ஸ் உவாட்ச் டவர் டிராக்ட் சொஸைட்டி.
[பக்கம் 28-ன் படங்கள்]
டாம் ஹார்ட், இவர் இங்கிலாந்தில் முதல் பைபிள் மாணாக்கர் என்று நம்பப்படுகிறது
[பக்கம் 29-ன் படங்கள்]
34 கிரேவன் டெரஸில் லண்டன் கிளை (வலப்பக்க புகைப்படம்)
[பக்கம் 29-ன் படங்கள்]
லண்டனில் தற்சமயம் பயன்படுத்தப்படும் கட்டடங்கள்