உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g 4/11 பக். 23-25
  • ஒற்றைத் தலைவலி வந்தால்...

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஒற்றைத் தலைவலி வந்தால்...
  • விழித்தெழு!—2011
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • உங்களுக்கு ஒற்றைத் தலைவலி வந்தால்...
  • ஒற்றைத் தலைவலிக்கு மருந்து இருக்கிறதா?
  • உலகை கவனித்தல்
    விழித்தெழு!—2003
  • கவலை—“மெல்லக் கொல்லும் விஷம்”
    விழித்தெழு!—1998
  • உலகை கவனித்தல்
    விழித்தெழு!—2000
  • உலகை கவனித்தல்
    விழித்தெழு!—1996
மேலும் பார்க்க
விழித்தெழு!—2011
g 4/11 பக். 23-25

ஒற்றைத் தலைவலி வந்தால்...

ஜாய்ஸ் என்ற பெண்மணி உற்சாகமும் துடிப்பும் நிறைந்தவர்; அவருடைய அலுவலகத்தில்... கையில் இருந்த ஒரு டாக்குமென்ட்டைக் கூர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறார். திடீரென்று எந்த எழுத்தும் அவர் கண்களுக்குத் தெரிவதில்லை. அதன்பிறகு, அவருடைய கண்களுக்கு முன் புள்ளி புள்ளியாக வெளிச்சம் தோன்றி நடனமாடுவதுபோல் தெரிகிறது. போகப் போக, அதுவே கோணல்மாணலான கோடாக... வினோதமான வடிவங்களாக... மாற ஆரம்பிக்கிறது. சற்று நேரத்திற்கெல்லாம் அவருக்குக் கண்ணே தெரியாததுபோல் ஆகிவிடுகிறது. என்ன பிரச்சினை என்பது அவருக்குப் புரிந்துவிடுகிறது! சட்டென்று ஒரு மாத்திரையைப் போடுகிறார்; இதுபோன்ற சமயத்திற்கென்றே தயாரிக்கப்பட்ட மாத்திரை அது!

ஜாய்ஸ் இப்படியெல்லாம் அவதிப்படுவதற்குக் காரணம்? ஒற்றைத் தலைவலி! இந்தத் தலைவலிக்கும் சாதாரண தலைவலிக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. ஒரு வித்தியாசம் என்னவென்றால், இது எப்பொழுதாவது வந்துபோகிற தலைவலியைப்போல் இருக்காது; திரும்பத்திரும்ப ஒரேமாதிரி வருகிற ஒரு தலைவலி. அதோடு, இந்தத் தலைவலி ஒருவருக்கு வந்துவிட்டால்... அவரால் எந்த வேலையும் செய்ய முடியாது.

ஒற்றைத் தலைவலிக்கான அறிகுறிகள்? தலை விண்விண்ணென்று தெறிக்கும், அதுவும் ஒரே பக்கமாக! இந்த வலியால் அவதிப்படுபவருக்கு குமட்டிக்கொண்டு வரும், பளிச்சென்ற வெளிச்சத்தைப் பார்க்க முடியாது. சிலருக்கு இந்த வலி மணிக்கணக்காக இருக்கும்; சிலருக்கு நாள்கணக்காகவும்கூட நீடிக்கும்.

பெரும்பாலோருக்கு அவ்வப்போது டென்ஷன்-தலைவலி வருகிறதுதான்; என்றாலும், பத்தில் ஒருவருக்கு அடிக்கடி ஒற்றைத் தலைவலி வருகிறது. இது ஆண்களைவிட பெண்களுக்கே அதிகமாய் வருகிறது. சிலருக்கு இந்த வலி தாங்கிக்கொள்கிற அளவுக்கு இருக்கும்; ஒருசிலருக்கு மண்டையைப் பிளப்பதுபோல இருக்கும். என்றாலும், இந்த வலி காரணமாக முக்கால்வாசிப் பேருக்கு வருடத்தில் பல நாட்கள் வேலை செய்ய முடியாமல் போய்விடுகிறது. இதனால் வருமான இழப்பு ஏற்படுவதோடு குடும்ப மற்றும் சமுதாய வாழ்க்கையும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. அதனால்தான், வேலை செய்ய முடியாதபடி ஒருவரை முடக்கிவிடுகிற 20 முக்கியக் காரணங்களில் ஒன்றாக ஒற்றைத் தலைவலியும் சேர்க்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

சிலருக்கு, ஒற்றைத் தலைவலி வருவதற்குக் கொஞ்சம் முன்னதாக... கைகள் சில்லென்று ஆகிவிடுகிறது, களைப்பு ஏற்படுகிறது, பசியெடுக்க ஆரம்பிக்கிறது, அல்லது மனநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. தலைவலி ஆரம்பிப்பதற்குச் சற்றுமுன்பு... தலை சுற்றல், காதுகளுக்குள் இரைச்சல், ஊசிகுத்துவதைப் போன்ற உணர்வு, எல்லாமே இரண்டிரண்டாகத் தெரிவது, பேச்சுக் குளறுவது, தசைகள் பலவீனமடைவது போன்ற அறிகுறிகள் இருக்கலாம்.

ஒற்றைத் தலைவலி வருவதற்கான காரணங்கள் என்னவென்று யாருக்குமே முழுமையாகத் தெரியாது; என்றாலும், நரம்பு மண்டலக் கோளாறு காரணமாக தலையிலுள்ள இரத்தக் குழாய்கள் பாதிக்கப்படுவதால் இந்த வலி ஏற்படுவதாகக் கருதப்படுகிறது. அவ்வாறு பாதிக்கப்பட்ட இரத்தக் குழாய்கள் வழியாக இரத்த ஓட்டம் நடைபெறுவதாலேயே விண்விண்ணென்று தெறிப்பது போன்ற வலி ஏற்படுவதாகச் சொல்லலாம். எமர்ஜென்சி மெடிஸின் என்ற பத்திரிகை இவ்வாறு குறிப்பிடுகிறது: “ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகிறவர்களுக்கு... எளிதில் பாதிக்கப்படும் இயல்புடைய நரம்பு மண்டலம் பிறவியிலேயே அமைந்திருக்கும். அதனால்தான்... தூக்கம் கெடுவது, கடும் வாசனையை முகர்வது, பயணம் செய்வது, வேளாவேளைக்குச் சாப்பிடாமல் இருப்பது, கவலைப்படுவது, ஹார்மோன் அளவுகள் மாறுவது... போன்றவை அவர்களுடைய நரம்பு மண்டலத்தை உடனே பாதித்துவிடலாம்.” ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகிறவர்கள்... குடல் உறுத்தல் நோய், வாட்டியெடுக்கும் கவலை, மனச்சோர்வு போன்றவற்றுக்கும் எளிதில் ஆளாகிவிடலாம்.

உங்களுக்கு ஒற்றைத் தலைவலி வந்தால்...

பரம்பரையாக வருகிற நரம்பு மண்டல அமைப்பை உங்களால் மாற்ற முடியாது. ஆனால், ஒற்றைத் தலைவலியைத் தூண்டிவிடுகிற சில காரியங்களை வேண்டுமானால் நீங்கள் தவிர்க்கலாம். சிலர், ஒற்றைத் தலைவலி வருவதற்குச் சற்றுமுன் தாங்கள் சாப்பிட்ட உணவு வகைகளை அல்லது எதிர்ப்பட்ட சந்தர்ப்ப சூழ்நிலைகளை ஒரு டைரியில் எழுதி வைத்துக்கொள்கிறார்கள்; அதிலிருந்து, தங்களுக்கு வந்த ஒற்றைத் தலைவலிக்கான காரணத்தைக் கண்டுகொள்கிறார்கள்.

ஒற்றைத் தலைவலி வருவதற்கான காரணம் ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது. லராண் என்ற பெண்... மாதவிடாய்ச் சுழற்சியை ஒட்டியே தனக்கு ஒற்றைத் தலைவலி வருவதாகத் தெரிந்துகொண்டார். அவர் சொல்கிறார்: “எனக்கு மாதவிலக்கு வந்து... அடுத்த மாதவிலக்கு வருவதற்கு இடையே, அதாவது கிட்டத்தட்ட சரிபாதியில்... கூடுதலாக வேலை செய்தால், பலத்த சத்தத்தைக் கேட்டால், காரசாரமான சாப்பாடு எதையாவது சாப்பிட்டால், அல்லது அதிகளவு சூடோ குளிரோ இருந்தால்... உடனே ஒற்றைத் தலைவலி வந்துவிடும். அதனால், இந்தச் சமயத்தில் ஓர் அமைதியான சூழலை ஏற்படுத்திக்கொள்வேன், எதையுமே அளவோடு வைத்துக்கொள்வேன்.” ஜாய்ஸ் 60 வருடங்களுக்கும் மேலாக ஒற்றைத் தலைவலியைச் சமாளித்து வந்திருக்கிறார். அவர் சொல்வதாவது: “சிவப்பு ஒயின், ஆரஞ்சுப் பழம், அன்னாசிப் பழம் ஆகியவற்றைச் சாப்பிட்டால் போதும், உடனே எனக்கு இந்தத் தலைவலி வந்துவிடும்; அதனால் அதையெல்லாம் தொடவே மாட்டேன்.”

ஒற்றைத் தலைவலியை எது தூண்டிவிடுகிறது என்பதை எளிதில் கண்டுபிடித்துவிட முடியாது; ஏனென்றால், ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களால் அது வரலாம். உதாரணமாக, ஒரு சமயம் சாக்லேட் சாப்பிடும்போது உங்களுக்குத் தலைவலி வராமல் இருக்கலாம்; ஆனால் வேறொரு சமயம், சாக்லேட் சாப்பிட்டவுடன் தலைவலி வந்துவிடலாம்; ஒருவேளை அந்தச் சமயத்தில் இன்னொன்று ஏதாவது சேர்ந்துகொண்டு தலைவலியை ஏற்படுத்தியிருக்கலாம்.

இந்தத் தலைவலி வருவதற்கான காரணத்தை உங்களால் கண்டுபிடிக்கவோ அதைத் தவிர்க்கவோ முடியாவிட்டாலும்கூட... அது அடிக்கடி வராதவாறு பார்த்துக்கொள்ள முடியும். வாரத்தில் ஏழு நாட்களும் ஒரே நேரத்தில் தூங்கி ஒரே நேரத்தில் எழுந்துவிடும்படி நிபுணர்கள் சிபாரிசு செய்கிறார்கள். சனி, ஞாயிறு தினங்களில் கொஞ்சம் தாமதமாகத் தூங்கியெழ நினைத்தால்... வழக்கமாக எழும் நேரத்திற்கெல்லாம் எழுந்து, சில நிமிடங்களுக்கு ஏதாவது செய்துவிட்டு மீண்டும் தூங்கப்போகும்படி அவர்கள் ஆலோசனை சொல்கிறார்கள். காஃபின் உள்ள பானங்களை அளவுக்குமீறி குடித்தாலும்கூட ஒற்றைத் தலைவலி வரலாம் என்பதால்... ஒரு நாளுக்கு இரண்டு கப் காபி அல்லது இரண்டு ‘கேன்’ கோலா பானங்களைக் குடிப்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள். பசியினாலும்கூட ஒற்றைத் தலைவலி வரலாம் என்பதால்... தவறாமல் வேளா வேளைக்குச் சாப்பிடுங்கள். கவலைப்படுவது ஒற்றைத் தலைவலி வர பெரும்பாலும் காரணமாய் இருக்கிறது; கவலையைத் தவிர்ப்பது அவ்வளவு சுலபமில்லை என்றாலும், சற்று நேரத்தை ஒதுக்கி பைபிளை வாசிக்கலாம், மெல்லிசையைக் கேட்கலாம்; இவ்வாறு, உங்கள் மனதை அமைதிப்படுத்த வழிதேடலாம்.

ஒற்றைத் தலைவலிக்கு மருந்து இருக்கிறதா?

ஒற்றைத் தலைவலியைப் போக்குவதற்குப் பல்வேறு வழிகள் உள்ளன.a உதாரணமாக, நன்றாகத் தூங்கினாலே போதும், சிலருக்கு ஒற்றைத் தலைவலி போய்விடுகிறது. மருந்துச் சீட்டு இல்லாமலேயே கிடைக்கிற வலி நிவாரண மாத்திரைகளைப் போடுவது வலியைப் போக்கி, தூக்கம் வர வைக்கலாம்.

ஒற்றைத் தலைவலியைப் போக்குவதற்கென்றே தயாரிக்கப்பட்ட டிரிப்டான் என்ற ஒரு புதிய வகை மருந்து 1993-ல் புழக்கத்திற்கு வந்தது. இதை “சிகிச்சைமுறையில் ஏற்பட்ட ஒரு மாபெரும் முன்னேற்றம்” என த மெடிக்கல் ஜர்னல் ஆஃப் ஆஸ்ட்ரேலியா என்ற பத்திரிகை அழைத்தது; மேலும், “பாக்டீரியா தொற்றை முறியடிப்பதில் பெனிசிலின் மருந்து முக்கியப் பங்கு வகிக்கிறது; அதுபோலவே, ஒற்றைத் தலைவலியையும் அதுபோன்ற பிற தலைவலிகளையும் குணமாக்குவதில் டிரிப்டான்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன” என்றும் அது குறிப்பிட்டது.

ஒற்றைத் தலைவலியால் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. அதனால், தொற்று நோய்க்கான மருந்தைப்போல், ஒற்றைத் தலைவலிக்கான மருந்து உயிர்காக்கும் மருந்து அல்ல. என்றாலும், ஒற்றைத் தலைவலி வந்துவிட்டால், எதுவுமே செய்யமுடியாது என்ற நிலையில் அவதிப்பட்ட சிலருக்கு டிரிப்டான் மாத்திரைகள் அபார நிவாரணம் அளித்திருக்கின்றன. ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுபவர்கள்... முன்பு குறிப்பிடப்பட்ட ஆலோசனைகளையெல்லாம் முயன்றுபார்க்க வேண்டும் என்பது உண்மைதான்; என்றாலும், டிரிப்டான் மாத்திரைகளை அற்புத மருந்து எனச் சிலர் அழைத்திருக்கிறார்கள்.

எல்லா மருந்துகளிலுமே... சாதகங்கள் மட்டுமல்ல, பாதகங்களும் இருக்கின்றன. டிரிப்டான்களின் விஷயத்தில் என்ன பாதகங்கள் உள்ளன? ஒரு பாதகம் என்னவென்றால், டிரிப்டான் மாத்திரையின் விலை மிக அதிகம். ஆகவேதான் தாங்க முடியாமல்... விண்விண்ணென்று தெறிக்கிற வலி ஏற்பட்டால் மட்டுமே இந்த மாத்திரையைப் போடும்படி பரிந்துரைக்கப்படுகிறது. அதோடு, டிரிப்டான் மாத்திரை எல்லாருக்கும் நிவாரணம் அளிப்பதில்லை; ஏன், சிலருடைய உடல்நிலைக்கு அதை எடுக்காமல் இருப்பதே நல்லது. ஒற்றைத் தலைவலிக்காரர்கள் படுகிற அவஸ்தைகளைப் போக்கச் சரியான நிவாரணம் இல்லாதபோதிலும், “புதிய, மேம்பட்ட மருந்துகள் கிடைப்பதால்... அவர்கள் காலமெல்லாம் அவதிப்பட வேண்டியதில்லை” என்றே எமர்ஜென்சி மெடிஸின் கூறுகிறது. (g11-E 01)

[அடிக்குறிப்பு]

a எந்தவொரு குறிப்பிட்ட சிகிச்சை முறையையும் விழித்தெழு! பரிந்துரைப்பதில்லை. ஆகவே, எந்தச் சிகிச்சையைத் தேர்ந்தெடுப்பது எனத் தீர்மானிப்பதற்குமுன் அதைப் பற்றி ஒவ்வொருவரும் கவனமாகச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

[பக்கம் 25-ன் படம்]

தாங்கள் சாப்பிட்ட உணவு வகைகள், எதிர்ப்பட்ட சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஆகியவற்றைச் சிலர் ஒரு டைரியில் எழுதி வைத்துக்கொள்கிறார்கள்; அதிலிருந்து, தங்களுக்கு வந்த ஒற்றைத் தலைவலிக்கான காரணத்தைக் கண்டுகொள்கிறார்கள்

[பக்கம் 25-ன் படம்]

ஒற்றைத் தலைவலி வருவதற்கு... கவலை பெரும்பாலும் காரணமாய் இருப்பதால் மனதை அமைதிப்படுத்த மெல்லிசையைக் கேட்கலாம்

[பக்கம் 25-ன் படம்]

ஒற்றைத் தலைவலி ஒருவரை முடக்கிவிடுகிற பரம்பரை நோய்; அதற்கு மருத்துவர்கள் பெரும்பாலும் சிறந்த சிகிச்சை அளிக்கிறார்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்