உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • be பக். 21-பக். 26 பாரா. 5
  • சிரத்தையோடு வாசியுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சிரத்தையோடு வாசியுங்கள்
  • தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்
  • சரியான உள்நோக்கத்தோடு வாசியுங்கள்
  • வேகத்திற்குக் கவனம் செலுத்துங்கள்
  • கூர்ந்து கவனம் செலுத்த கற்றுக்கொள்ளுங்கள்
  • பொது வாசிப்பு
  • வாசிப்பதற்கு நேரமெடுங்கள்
  • எவ்விதமாக வாசித்து நினைவில் வைப்பது
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
  • தினந்தோறும் பைபிளை வாசிப்பதிலிருந்து பயனடைதல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • வாசிக்கும் பழக்கம் பிள்ளைகளுக்கு முக்கியம்—பகுதி 1: வாசிப்பதா பார்ப்பதா?
    குடும்ப ஸ்பெஷல்
  • உங்களுடைய வாசிப்பை முன்னேற்றுவியுங்கள்—நீங்கள் அதைச் செய்ய முடியும்!
    விழித்தெழு!—1986
மேலும் பார்க்க
தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
be பக். 21-பக். 26 பாரா. 5

சிரத்தையோடு வாசியுங்கள்

நீங்கள் இப்போது செய்வதை மிருகங்களால் செய்ய முடியாது. பெரும்பாலும் பள்ளிக்கு செல்ல வாய்ப்பு கிடைக்காததால் 6 பேரில் ஒருவருக்கு வாசிக்கக் கற்றுக்கொள்ள முடியாமல் போயிருக்கிறது. அப்படியே கற்றுக்கொண்டவர்களும் தவறாமல் வாசிப்பதில்லை. இருந்தாலும் வாசிக்கும் திறன் உங்களை பல்வேறு தேசங்களுக்கு அழைத்துச் செல்லும், பல்வேறு மக்களை அறிமுகப்படுத்தும், அவர்களது வாழ்க்கையால் உங்கள் வாழ்க்கையை மெருகூட்டும், வாழ்க்கைப் பிரச்சினைகளை சமாளிக்க உதவும் நடைமுறை ஞானத்தையும் தரும்.

பக்கம் 22-ன் படம்

நீங்கள் பிள்ளைகளுக்கு வாசித்துக் காட்டும் விஷயங்கள், அவர்களது குணாதிசயத்தை செதுக்கி சீராக்கலாம்

ஓர் இளைஞன் பள்ளிப் படிப்பிலிருந்து எந்தளவு பயன் பெற முடியும் என்பது வாசிக்கும் திறமையையே சார்ந்திருக்கிறது. படிப்பை முடித்து வேலை தேடும்போது, அதே வாசிக்கும் திறன்தான் என்ன வகையான வேலை கிடைக்கும் என்பதையும் வயிற்றுப் பிழைப்பிற்காக எவ்வளவு நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும் என்பதையும் தீர்மானிக்கும். சரளமாக வாசிக்கத் தெரிந்த குடும்பப் பெண்கள், சரியான ஊட்டச்சத்து, சுகாதாரம், நோய் தடுப்பு போன்ற விஷயங்களில் தங்கள் குடும்பத்தாரை பொறுப்பாக கவனித்துக் கொள்ள முடிகிறது. நன்கு வாசிக்கத் தெரிந்த தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளின் அறிவு வளர்ச்சியிலும் பெரும் பங்கு வகிக்க முடியும்.

வாசிப்பதால் வரும் மிகப் பெரிய நன்மை, ‘தேவனை அறியும் அறிவைக் கண்டடைய’ அது உங்களுக்கு உதவும் என்பதே. (நீதி. 2:5) நாம் கடவுளை சேவிக்கும் வழிகள் பலவற்றிற்கு, வாசிக்கும் திறன் அவசியமாக இருக்கிறது. பைபிள் வசனங்களும் பைபிள் பிரசுரங்களும் சபைக் கூட்டங்களில் வாசிக்கப்படுகின்றன. திறமையாக வெளி ஊழியம் செய்வதும் வாசிக்கும் திறனையே பெரிதும் சார்ந்திருக்கிறது. இவற்றிற்காக தயாரிக்கும்போதும் வாசிக்க வேண்டியிருக்கிறது. ஆகவே உங்கள் ஆன்மீக வளர்ச்சி உங்கள் வாசிக்கும் பழக்கங்களையே பெரிதும் சார்ந்திருக்கிறது.

வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்

பக்கம் 22-ன் படம்

உணர்ச்சியோடு வாசிக்க கற்றுக்கொள்ளுங்கள்

கடவுளுடைய வழிகளைப் பற்றி கற்றுக்கொண்டிருக்கும் சிலர் அதிக படிப்பறிவு இல்லாதவர்கள். எனவே ஆன்மீக வளர்ச்சியடைவதற்கு அவர்களுக்கு வாசிக்க கற்றுக்கொடுப்பது அவசியமாக இருக்கலாம். அல்லது வாசிக்கும் திறமையை மேம்படுத்துவதற்கு அவர்களுக்கு தனிப்பட்ட உதவி தேவைப்படலாம். தேவை இருக்கும்போது, எழுத்தறிவு வகுப்புகளை நடத்த சபைகள் ஏற்பாடு செய்கின்றன. வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் சிரத்தையுடன் முயலுங்கள் என்ற ஆங்கில பிரசுரத்தை இதற்காக பயன்படுத்துகின்றன. இந்த ஏற்பாட்டிலிருந்து ஆயிரக்கணக்கானோர் மிகுந்த பயனடைந்திருக்கிறார்கள். சரளமாக வாசிக்கத் தெரிந்திருப்பதன் முக்கியத்துவத்தை அறிந்து, சில சபைகள், தேவராஜ்ய ஊழியப் பள்ளி நடைபெறும் அதேசமயத்தில் வாசிப்புப் பயிற்சி வகுப்புகளையும் நடத்துகின்றன. அப்படிப்பட்ட வகுப்புகள் இல்லையென்றாலும், சத்தமாக வாசிப்பதற்கு தினமும் நேரம் ஒதுக்குவதன் மூலமும் தவறாமல் ஊழியப் பள்ளிக்கு சென்று பங்குபெறுவதன் மூலமும் நன்றாக முன்னேறலாம்.

காமிக்ஸுகளாலும் டிவியாலும் மற்ற காரியங்களாலும் அநேகர் வாசிப்பதை புறக்கணித்திருப்பது வருத்தமான விஷயம். டிவி பார்ப்பதாலும் குறைவாக வாசிப்பதாலும் ஒருவரது வாசிக்கும் திறனின் வளர்ச்சி குன்றலாம். அதுமட்டுமல்ல, தெளிவாக யோசிப்பதற்கும், நியாயப்படுத்தி பார்ப்பதற்கும், உணர்ச்சிகளை நன்கு வெளிப்படுத்துவதற்கும் தேவையான திறமைகள் வளராது.

‘உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரர்’ பைபிளைப் புரிந்துகொள்ள உதவும் பிரசுரங்களை அளிக்கின்றனர். இவை முக்கியமான ஆன்மீக விஷயங்களைப் பற்றிய ஏராளமான தகவலை அள்ளி வழங்குகின்றன. (மத். 24:45; 1 கொ. 2:12, 13) முக்கிய உலக சம்பவங்களையும் அவற்றின் அர்த்தத்தையும்கூட அவை தெரிவிக்கின்றன, இயற்கையைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள உதவுகின்றன, நமக்கு கவலைதரும் பிரச்சினைகளை சமாளிப்பதற்கான வழிகளைக் கற்றுத்தருகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, கடவுளுக்குப் பிரியமான வழியில் அவரை சேவித்து அவரது அங்கீகாரத்தைப் பெறுவது எப்படி என்பதன்பேரில் நம் கவனத்தை ஒருமுகப்படுத்துகின்றன. இப்படிப்பட்ட நன்மை பயக்கும் பிரசுரங்களை வாசிப்பது உங்கள் ஆன்மீக முதிர்ச்சிக்கு கைகொடுக்கும்.

நன்றாக வாசிக்கத் தெரிந்திருப்பதையே ஒரு நற்பண்பு என சொல்லிவிட முடியாது. அந்தத் திறமை சரியான விதத்தில் பயன்படுத்தப்பட வேண்டும். உணவை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது போல் விஷயங்களை தேர்ந்தெடுத்து வாசிக்க வேண்டும். எந்த ஊட்டச்சத்தும் இல்லாத அல்லது உயிருக்கே உலை வைக்கும் உணவை ஏன் உண்ண வேண்டும்? அதேபோல், மனதையும் இருதயத்தையும் கறைப்படுத்தும் விஷயங்களை எப்போதாவதுகூட ஏன் வாசிக்க வேண்டும்? பைபிள் நியமங்களின் அடிப்படையிலேயே வாசிக்கும் விஷயங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். எதை வாசிப்பது என்பதை தீர்மானிப்பதற்கு முன் இதுபோன்ற வசனங்களை நினைவில் வையுங்கள்: பிரசங்கி 12:12, 13; எபேசியர் 4:22-24; 5:3, 4; பிலிப்பியர் 4:8; கொலோசெயர் 2:8; 1 யோவான் 2:15-17; 2 யோவான் 10.

சரியான உள்நோக்கத்தோடு வாசியுங்கள்

சரியான உள்நோக்கத்தோடு வாசிப்பதன் அவசியம் சுவிசேஷ பதிவுகளை ஆராய்வதிலிருந்து தெளிவாகிறது. உதாரணத்திற்கு, வேதவாக்கியங்களை நன்கு அறிந்திருந்த மதத்தலைவர்களிடம், “நீங்கள் வாசிக்கவில்லையா?” “நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா”? போன்ற கேள்விகளை இயேசு கேட்டதாக மத்தேயுவின் சுவிசேஷத்தில் காண்கிறோம். தந்திரமான அவர்களுடைய கேள்விகளுக்கு வேதப்பூர்வ பதிலளிப்பதற்கு முன்பு இயேசு இப்படி கேட்டார். (மத். 12:3, 5; 19:5; 21:16, 42; 22:31) இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்: வாசிப்பதற்கான உள்நோக்கம் சரியில்லை என்றால் தவறான முடிவுக்கு வந்துவிடுவோம் அல்லது சொல்லப்பட்டிருக்கும் முக்கிய குறிப்பையே தவறவிட்டு விடுவோம். வேதவசனங்களை வாசித்தால் நித்திய ஜீவன் கிடைக்கும் என நினைத்து பரிசேயர்கள் அவற்றை வாசித்தனர். ஆனால் இயேசு குறிப்பிட்டுக் காட்டியபடி கடவுளை நேசிக்காதவர்களுக்கும் இரட்சிப்பிற்கான அவரது ஏற்பாட்டை ஏற்காதவர்களுக்கும் அந்தப் பரிசு வழங்கப்படாது. (யோவா. 5:39-43) பரிசேயர்களின் உள்நோக்கத்தில் சுயநலம் மேலோங்கியிருந்தது; ஆகவே, அவர்கள் எடுத்த முடிவுகள் பெரும்பாலும் தவறாக இருந்தன.

யெகோவாவிற்கான அன்பே அவரது வார்த்தையை வாசிப்பதற்கு மிகத் தூய்மையான உள்நோக்கமாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட அன்பு அவருடைய சித்தத்தை கற்றுக்கொள்ள நம்மைத் தூண்டுகிறது; ஏனெனில் அன்பு “சத்தியத்தில் சந்தோஷப்படும்.” (1 கொ. 13:6) ஒருவேளை வாசிப்பதில் நமக்கு ஆர்வம் இல்லாதிருக்கலாம்; ஆனால் “முழு மனதோடு” யெகோவாவை நேசித்தோமானால் அவரைப் பற்றிய அறிவைப் பெறுவதற்காக நம் மனதை சிரத்தையோடு பயன்படுத்துவோம். (மத். 22:37) அன்பு ஆர்வத்தைத் தூண்டுகிறது, ஆர்வமோ கற்றுக்கொள்ளத் தூண்டுகிறது.

வேகத்திற்குக் கவனம் செலுத்துங்கள்

வாசிப்பதும் அடையாளம் கண்டுகொள்வதும் எப்போதும் கைகோர்த்துச் செல்கின்றன. இப்போது நீங்கள் வாசிக்கையில்கூட வார்த்தைகளை அடையாளம் கண்டுகொள்கிறீர்கள், அவற்றின் அர்த்தம் உங்கள் ஞாபகத்திற்கு வருகிறது. இன்னும் அதிகமான வார்த்தைகளை பார்த்து அடையாளம் கண்டுகொள்ள முயன்றால் வாசிக்கும் வேகம் அதிகரிக்கும். ஒவ்வொரு வார்த்தையாக பார்ப்பதற்குப் பதிலாக பல வார்த்தைகளை கோர்வையாக பார்க்க முயலுங்கள். இந்தத் திறமையை வளர்த்துக்கொள்ளும்போது, வாசிப்பதை இன்னும் தெளிவாக புரிந்துகொள்வீர்கள்.

பக்கம் 24-ன் படம்

ஒன்றுசேர்ந்து வாசிப்பது, குடும்ப அங்கத்தினர்களை நெருங்கி வரச் செய்கிறது

என்றாலும் கருத்தாழமிக்க விஷயங்களை வாசிக்கும்போது இன்னுமதிக பலனைப் பெற, வேறொரு முறையை பயன்படுத்தலாம். வேத வசனங்களை வாசிப்பதைக் குறித்து யோசுவாவிடம் யெகோவா பின்வருமாறு அறிவுரை வழங்கினார்: “இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; . . . அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக.” (யோசு. 1:8) தியானிக்கும்போது ஒரு நபர் ஆழமாகவும் நிதானமாகவும் யோசிக்கிறார். ஆழ்ந்து சிந்தித்தபடி வாசிப்பது கடவுளுடைய வார்த்தை நம் மனதிலும் இருதயத்திலும் பலமான தாக்கத்தை ஏற்படுத்த வழிவகுக்கும். தீர்க்கதரிசனங்கள், ஆலோசனைகள், நீதிமொழிகள், கவிதைகள், தெய்வீக நியாயத்தீர்ப்பின் எச்சரிப்புகள், யெகோவாவின் நோக்கத்தைப் பற்றிய விவரங்கள், ஏராளமான நிஜ வாழ்க்கை உதாரணங்கள் ஆகியவை பைபிளில் அடங்கியுள்ளன. இவை அனைத்தும், யெகோவாவின் வழிகளில் நடக்க விரும்புவோருக்கு மதிப்புமிக்கவை. உங்கள் மனதிலும் இருதயத்திலும் ஆழமாக பதியும் விதத்தில் பைபிளை வாசிப்பது எப்பேர்ப்பட்ட நன்மை பயக்கும்!

கூர்ந்து கவனம் செலுத்த கற்றுக்கொள்ளுங்கள்

பக்கம் 22-ன் படம்

வாசிப்பு பழக்கங்கள் உங்கள் ஆன்மீக வளர்ச்சிக்கு கைகொடுக்கின்றன

ஒவ்வொரு பகுதியை வாசிக்கும்போதும் அதிலொரு கதாபாத்திரமாகவே மாறிவிடுங்கள். எல்லா கதாபாத்திரங்களையும் மனக்கண்களில் பாருங்கள், அவர்களது வாழ்க்கை அனுபவங்களில் உட்பட்டுள்ள உணர்ச்சிகளை உணர்ந்து பாருங்கள். ஒருசில பதிவுகளை வாசிக்கும்போது இதைச் செய்வது சற்று சுலபம். உதாரணத்திற்கு, 1 சாமுவேல் 17-ஆம் அதிகாரத்திலுள்ள தாவீதையும் கோலியாத்தையும் பற்றிய பதிவு. ஆனால் கூடாரம் அமைக்கப்படுவதைப் பற்றி அல்லது ஆசாரியத்துவம் ஸ்தாபிக்கப்படுவதைப் பற்றி யாத்திராகமத்திலும் லேவியராகமத்திலும் உள்ள விவரங்களுக்கும் உயிரூட்ட முடியும். எப்போது? அளவுகளையும் கட்டுமானப் பொருட்களையும் கற்பனை செய்து பார்க்கையில்; தூபவர்க்கத்தின் நறுமணத்தையும், வறுக்கப்பட்ட தானியங்களின் வாசனையையும், தகன பலியாக செலுத்தப்படும் மிருக பலிகளின் மணத்தையும் கற்பனையில் முகர்ந்து பார்க்கையில். ஆசாரிய சேவை எப்பேர்ப்பட்ட பயபக்தியூட்டும் பணியாக இருந்திருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்! (லூக். 1:8-10) வாசிக்கும் விஷயத்தில் உங்கள் புலன்களும் உணர்ச்சிகளும் இவ்வாறு ஒன்றிப்போகும்போது, அதன் முக்கியத்துவத்தை நீங்கள் கிரகித்துக்கொள்வீர்கள், ஞாபகம் வைப்பதற்கும் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

என்றாலும் வாசிக்கும்போது நீங்கள் கவனமாக இல்லையென்றால் மனம் அலைபாய ஆரம்பிக்கலாம். உங்கள் கண்கள் புத்தகத்தின்மீது இருக்கும், மனதோ வேறெங்கோ இருக்கும். இசை ஒலித்துக்கொண்டிருக்கிறதா? டிவி ஓடிக்கொண்டிருக்கிறதா? குடும்பத்திலுள்ளவர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்களா? முடிந்தவரை அமைதியான இடத்தில் வாசிப்பது நல்லது. இருந்தாலும், நம் கவனம் திசைதிரும்புவதற்கு நம் மனமே காரணமாகிவிடலாம். ஒருவேளை நாள் முழுக்க ஓய்வொழிச்சலின்றி வேலை செய்திருக்கலாம். நாள் முடிவில், நடந்ததையெல்லாம் உங்கள் மனதில் அசைபோடுவது வெகு சுலபம்! அவ்வாறு செய்வது நல்லதுதான், ஆனால் வாசிக்கும்போது அதை செய்வது நல்லதல்ல. ஆரம்பத்தில் முழு கவனத்தோடு நீங்கள் வாசிக்க ஆரம்பிக்கலாம், அல்லது ஜெபம் செய்துவிட்டுகூட வாசிக்க ஆரம்பிக்கலாம். ஆனால் மெதுவாக மனம் வேறெங்கோ நழுவ ஆரம்பிக்கும். மறுபடியும் முயற்சி செய்யுங்கள். மனதை அடக்கி, வாசிக்கும் விஷயத்தில் ஒருமுகப்படுத்துங்கள். படிப்படியாக நீங்களே முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

உங்களுக்குப் புரியாத ஒரு வார்த்தை தென்பட்டால் என்ன செய்வீர்கள்? சில கடினமான வார்த்தைகளுக்கு கட்டுரையிலேயே அர்த்தம் அல்லது விளக்கம் தரப்பட்டிருக்கலாம். அல்லது சூழமைவைப் பார்த்து நீங்கள் அர்த்தத்தை புரிந்துகொள்ளலாம். இல்லையென்றால், ஒரு டிக்ஷ்னரி கிடைத்தால் அதை எடுத்துப் பார்க்க நேரம் செலவழியுங்கள், அல்லது வார்த்தையை குறித்து வைத்துக்கொண்டு பிற்பாடு வேறொருவரிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். இது உங்கள் மனதிலிருக்கும் சொற்களஞ்சியத்தை பெருகச் செய்யும், புரிந்து வாசிக்கும் திறனையும் அதிகரிக்கும்.

பொது வாசிப்பு

பக்கம் 22-ன் படம்

பொது வாசிப்பில் தொடர்ந்து சிரத்தையோடு ஈடுபடுங்கள்

தொடர்ந்து சிரத்தையோடு வாசிக்கும்படி தீமோத்தேயுவுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னபோது, முக்கியமாக மற்றவர்களின் நன்மைக்காக வாசிப்பதையே குறிப்பிட்டார். (1 தீ. 4:13, NW) வார்த்தைகளை உரக்க படிப்பது மட்டுமே திறம்பட்ட பொது வாசிப்பு ஆகிவிடாது. வாசிப்பவர், வார்த்தைகளின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு அவை சொல்ல வரும் கருத்தை கிரகிக்க வேண்டும். அப்போதுதான் கருத்துக்களை திருத்தமாக வெளிப்படுத்த முடியும், உணர்ச்சிகளையும் பொருத்தமாக வெளிக்காட்ட முடியும். இதற்கு சிறந்த தயாரிப்பும் பயிற்சியும் நிச்சயம் தேவை. ஆகவேதான் பவுல், “பொது வாசிப்பை தொடர்ந்து சிரத்தையோடு செய்” என அறிவுரை வழங்கினார். இந்தத் திறமையை வளர்த்துக்கொள்ள உதவும் சிறந்த பயிற்றுவிப்பை நீங்கள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் பெறுவீர்கள்.

வாசிப்பதற்கு நேரமெடுங்கள்

“ஊக்கத்துடன் உழைப்பவரின் திட்டங்கள் நிச்சயமாக அனுகூலம் தரும், ஆனால் பதற்றமடைவோர் அனைவரும் பற்றாக்குறையில் இருப்பர்.” (நீதி. 21:5, NW) வாசிப்பதற்கான நம் ஆவலைப் பொறுத்தவரை அது எவ்வளவு உண்மை! “அனுகூலம்” அடைய நாம் ஊக்கமாக திட்டமிட வேண்டும்; அப்போதுதான், மற்ற வேலைகளின் காரணமாக வாசிப்பதற்கு நேரமில்லாமல் போகும் சூழ்நிலை ஏற்படாது.

நீங்கள் எப்போது வாசிக்கிறீர்கள்? அதிகாலையில் வாசிப்பது நன்மை தருகிறதா? அல்லது பகல் நேரங்களில் அதிக கவனம் செலுத்த முடிகிறதா? தினமும் 15 அல்லது 20 நிமிடங்கள் ஒதுக்கினால்கூட போதும், எந்தளவு சாதிக்க முடிகிறது என்பதை பார்த்து நீங்களே ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். தவறாமல் வாசிப்பதே வெற்றிக்கு திறவுகோல்.

யெகோவா தமது மகத்தான நோக்கங்களை ஏன் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்? மக்கள் தம் வார்த்தையை வாசித்து தெரிந்துகொள்வதற்காகவே. யெகோவாவின் வியத்தகு செயல்களுக்கு கவனம் செலுத்தவும் அவற்றை ஞாபகத்தில் வைக்கவும் அவற்றை பிள்ளைகளுக்கு போதிக்கவும் அப்பதிவு உதவுகிறது. (சங். 78:5-7) இந்த விஷயத்தில் யெகோவாவின் தாராள குணத்தைப் போற்றுவதற்கான சிறந்த வழி, உயிரளிக்கும் அவரது வார்த்தையை சிரத்தையோடு வாசிப்பதாகும்.

உங்கள் வாசிப்பு பழக்கம் எப்படி?

  • பைபிளை வாசிப்பதற்கு முதலிடம் தருகிறீர்களா?

  • காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை தவறாமல் வாசிக்கிறீர்களா?

  • பைபிள் படிப்பிற்கான புதிய பிரசுரங்கள் கையில் கிடைத்தவுடன் வாசித்துவிடுகிறீர்களா?

  • நம் ராஜ்ய ஊழியம் கிடைத்தவுடன், ஊழியத்தில் உங்களுக்கு உதவியாயிருக்கும் குறிப்புகளை அதில் வாசிக்கிறீர்களா?

  • யெகோவாவின் சாட்சிகளது பழைய பிரசுரங்களில் எத்தனை பிரசுரங்களை வாசித்திருக்கிறீர்கள்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்