சபை பேச்சுக்களைத் தயாரித்தல்
தேவராஜ்ய ஊழியப் பள்ளி நிகழ்ச்சி முழு சபையின் நன்மையை மனதில் வைத்து தயாரிக்கப்படுகிறது. மற்ற சபைக் கூட்டங்களிலும் அசெம்பிளிகளிலும் மாநாடுகளிலும்கூட மதிப்புமிக்க தகவல்கள் அளிக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் நீங்கள் நியமிப்பைப் பெற்றிருந்தால் ஒரு முக்கிய பொறுப்பை பெற்றிருக்கிறீர்கள். தன் போதனைக்கு இடைவிடாத கவனம் செலுத்துமாறு கிறிஸ்தவ கண்காணியான தீமோத்தேயுவை அப்போஸ்தலனாகிய பவுல் ஊக்கப்படுத்தினார். (1 தீ. 4:16, NW) கிறிஸ்தவ கூட்டங்களுக்கு வருகிறவர்கள், கடவுளோடு உள்ள தங்கள் உறவை பலப்படுத்திக் கொள்வது சம்பந்தமான போதனைகளைப் பெற தங்கள் மதிப்பு வாய்ந்த நேரத்தை ஒதுக்குகிறார்கள்; சிலர் அதற்காக பெருமளவு முயற்சியும் எடுத்து வருகிறார்கள். அப்படிப்பட்ட போதனையை அளிப்பது எத்தனை அரியதோர் வாய்ப்பு! அந்த நல்வாய்ப்பை எப்படி சரிவர பயன்படுத்துவது?
பைபிள் வாசிப்பு பகுதியிலிருந்து சிறப்புக் குறிப்புகள்
அந்த வாரத்திற்குரிய பைபிள் வாசிப்பு பகுதியின் அடிப்படையில் இப்பேச்சு கொடுக்கப்படும். அப்பகுதியிலுள்ள விஷயம் இன்று நமக்கு எப்படி பொருந்துகிறது என்பது வலியுறுத்தப்பட வேண்டும். நெகேமியா 8:8-ல் சொல்லப்பட்டிருக்கும் விதமாக, எஸ்றாவும் அவரது கூட்டாளிகளும் கடவுளுடைய வார்த்தையை சத்தமாக வாசித்து, விளக்கி, ‘அர்த்தஞ்சொல்லி,’ புரிய வைத்தார்கள். பைபிள் சிறப்புக் குறிப்புகள் பகுதியைக் கையாளுவது, அவற்றைச் செய்ய உங்களுக்கும் வாய்ப்பளிக்கிறது.
இந்தப் பேச்சை நீங்கள் எப்படி தயாரிக்கலாம்? கூடுமானால், நியமிக்கப்பட்டிருக்கும் பைபிள் பகுதியை ஒரு வாரத்திற்கு அல்லது அதற்கு முன்பாகவே வாசியுங்கள். அதன்பின் உங்கள் சபையைப் பற்றியும் அதன் தேவைகளைப் பற்றியும் யோசியுங்கள். அதைக் குறித்து ஜெபம் செய்யுங்கள். கடவுளுடைய வார்த்தையின் இந்தப் பகுதியிலுள்ள என்ன அறிவுரைகள், என்ன உதாரணங்கள், என்ன நியமங்கள் அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன?
ஆராய்ச்சி செய்வது அவசியம். சிடி-ராமில் உவாட்ச்டவர் லைப்ரரி அல்லது உவாட்ச்டவர் பப்ளிகேஷன்ஸ் இன்டெக்ஸ் உங்களுக்கு தெரிந்த மொழியில் கிடைக்கிறதா? இல்லையென்றால், காவற்கோபுரத்தின் டிசம்பர் இதழிலுள்ள அவ்வருடத்திற்குரிய பொருளடக்க அட்டவணையை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் வசனங்களின் பேரில் என்ன விஷயங்கள் பிரசுரமாகியிருக்கின்றன என்பதை ஆராய்ச்சி செய்தால், அறிவொளியூட்டும் பின்னணி தகவலை கண்டுபிடிப்பீர்கள். அதுமட்டுமல்ல, தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தைக் குறித்த விளக்கங்கள், யெகோவாவைப் பற்றி குறிப்பிட்ட வசனங்கள் வெளிப்படுத்தும் விஷயங்கள், அவற்றிலிருந்து புரிந்துகொள்ள வேண்டிய நியமங்கள் ஆகியவற்றையும் கண்டடைவீர்கள். ஏகப்பட்ட குறிப்புகளை சொல்லாதீர்கள். ஒரு சில வசனங்களுக்கு மட்டும் முழு கவனம் செலுத்துங்கள். ஒரு சில வசனங்களை நன்கு விளக்கிச் சொல்வதே சிறந்தது.
அந்த வாரத்திற்குரிய பைபிள் வாசிப்பிலிருந்து சபையார் எப்படி நன்மை அடைந்திருக்கிறார்கள் என அவர்களைக் கேட்பதையும் உங்கள் நியமிப்பு தேவைப்படுத்தலாம். தனிப்பட்ட அல்லது குடும்ப படிப்பிற்கோ, ஊழியத்திற்கோ, வாழ்க்கைக்கோ பயனளிக்கும் என்ன குறிப்பை அவர்கள் அதிலிருந்து கற்றுக்கொண்டார்கள்? ஜனங்களையும் தேசங்களையும் யெகோவா கையாண்ட விதத்திலிருந்து அவரது என்ன குணங்களை புரிந்துகொண்டார்கள்? என்ன விஷயங்கள் அவர்களது விசுவாசத்தைப் பலப்படுத்தி யெகோவாவிற்கான போற்றுதலை அதிகரித்தன? நுணுக்க விவரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள். தெரிவுசெய்யப்பட்ட குறிப்புகளின் அர்த்தத்தையும் நடைமுறை மதிப்பையும் வலியுறுத்துங்கள்.
போதனா பேச்சு
பிரசுரிக்கப்பட்ட தகவலின்பேரில் கொடுக்கப்படும் பேச்சாக இது இருக்கலாம். உதாரணமாக காவற்கோபுரம் அல்லது விழித்தெழு! பத்திரிகைகளிலுள்ள ஒரு கட்டுரையை அல்லது ஏதேனும் புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை தழுவியதாக இருக்கலாம். பெரும்பாலும், நியமிக்கப்படும் நேரத்திற்கு தேவைப்படுவதற்கும் அதிகமான தகவல் இருக்கும். பேச்சை நீங்கள் எப்படி கொடுக்க வேண்டும்? தகவலை சொன்னால் மட்டும் போதாது, ஆனால் ஒரு போதகராக பேச்சை கொடுக்க வேண்டும். கண்காணி, ‘கற்பிப்பதற்கு தகுதியுள்ளவராக’ இருக்க வேண்டும்.—1 தீ. 3:2, NW.
பேச்சைத் தயாரிப்பதற்கு முதல் படியாக, நியமிக்கப்பட்டுள்ள தகவலை படியுங்கள். பிறகு வசனங்களை எடுத்துப் பாருங்கள். தியானியுங்கள். பேச்சு கொடுக்க வேண்டிய நாளுக்கு வெகு முன்னதாகவே இதைச் செய்யுங்கள். பேச்சிற்காக ஒதுக்கப்பட்டுள்ள தகவலை சகோதர சகோதரிகள் படித்து வரும்படி உற்சாகப்படுத்தப்படுவதை ஞாபகம் வையுங்கள். அதை மறுபார்வை செய்வதோ சுருக்கிச் சொல்வதோ அல்ல, ஆனால் எப்படி கடைப்பிடிப்பது என காட்டுவதே உங்கள் பொறுப்பு. சபைக்கு உண்மையிலேயே பயனளிக்கும் விதத்தில் பொருத்தமான குறிப்புகளைப் பயன்படுத்துங்கள்.
ஒவ்வொரு பிள்ளைக்கும் தனிப் பண்புகள் இருப்பதுபோல, ஒவ்வொரு சபைக்கும் தனி இயல்புகள் உண்டு. திறமையோடு போதிக்கும் தந்தை அல்லது தாய், ஒழுக்க சம்பந்தப்பட்ட கட்டளைகளை பிள்ளையிடம் வெறுமனே ஒப்பிப்பதில்லை. அவர் பிள்ளையிடம் நியாயங்காட்டிப் பேசுவார். அந்தப் பிள்ளைக்கே உரிய பண்புகளையும் என்னென்ன பிரச்சினைகளோடு போராடுகிறது என்பதையும் மனதில் வைத்து பேசுவார். அதே விதமாக, சபையில் போதிப்பவர்களும் சபையாரின் தேவைகளை புரிந்துகொண்டு பேச முயல்வார்கள். இருந்தாலும் விவேகமுள்ள போதனையாளர், சபையில் உள்ள எவரையாவது தர்மசங்கடப்படுத்திவிடும் உதாரணங்களை தவிர்ப்பார். யெகோவாவின் வழியில் நடப்பதால் கிடைத்திருக்கும் பயன்களை சுட்டிக்காட்டி, பிரச்சினைகளை வெற்றிகரமாக சமாளிக்க சபையாருக்கு உதவும் ஆலோசனைகளை வசனங்களிலிருந்து வலியுறுத்திக் காட்டுவார்.
நல்ல போதனை கேட்பவர்களின் இருதயங்களைத் தொடும். இதற்கு விஷயங்களைச் சொல்வது மட்டும் போதாது, ஆனால் அவை சுட்டிக்காட்டும் கருத்திற்கு போற்றுதலை வளர்ப்பதும் அவசியம். கேட்பவர்கள் மீது உள்ளப்பூர்வமான கரிசனை காட்டுவது தேவைப்படுகிறது. ஆவிக்குரிய மேய்ப்பர்கள் தங்கள் மந்தையை நன்கு அறிந்திருக்க வேண்டும். சபையிலுள்ள தனிப்பட்டவர்கள் எதிர்ப்படும் பிரச்சினைகளை அவர்கள் அக்கறையோடு நினைவில் வைத்தால், புரிந்துகொள்ளுதலோடும் பரிவோடும் இரக்கத்தோடும் பேச்சைக் கொடுத்து உற்சாகப்படுத்த முடியும்.
திறம்பட்ட போதகர்கள் அறிந்துள்ளபடி, ஒரு பேச்சிற்கு திட்டவட்டமான குறிக்கோள் இருக்க வேண்டும். முக்கியமான குறிப்புகளை உடனடியாக கண்டுகொண்டு ஞாபகம் வைக்கும் விதத்தில் பேச்சு கொடுக்க வேண்டும். தங்கள் வாழ்க்கையை பாதிக்கும் நடைமுறையான குறிப்புகளும் சபையாரின் ஞாபகத்தில் நிற்க வேண்டும்.
ஊழியக் கூட்டம்
நம் ராஜ்ய ஊழியத்திலுள்ள ஒரு கட்டுரையின் அடிப்படையில் நீங்கள் பேச்சு கொடுக்கிறீர்கள் என்றால் அது இன்னொரு விதமான சவாலாகும். நீங்கள் மிகப் பொருத்தமான குறிப்புகளை தேர்ந்தெடுத்து அளிக்கும்படி எதிர்பார்க்கப்படுவதில்லை, மாறாக கட்டுரையிலுள்ள அனைத்தையும் சபையாருக்கு தெரியப்படுத்துமாறு எதிர்பார்க்கப்படுகிறது. கொடுக்கப்பட்டிருக்கும் ஆலோசனைக்கு அடிப்படையாக அமையும் வேதவசனங்களிலுள்ள நியாயத்தை பகுத்தறிய சபையாருக்கு உதவுங்கள். (தீத். 1:9) அளவான நேரமே இருக்கும் என்பதால் கூடுதலான தகவலை பெரும்பாலும் அளிக்க முடியாது.
மறுபட்சத்தில், நம் ராஜ்ய ஊழியத்தில் இல்லாத வேறு ஏதேனும் கட்டுரையின் அடிப்படையில் பேச்சு கொடுக்க வேண்டியிருக்கலாம். காவற்கோபுர கட்டுரை ஒன்று கொடுக்கப்பட்டிருக்கலாம் அல்லது சுருக்கமான அறிவுரைகள் மட்டும் கொடுக்கப்பட்டிருக்கலாம். போதிப்பவராக, சபையின் தேவைகளை மனதில் வைத்து அந்தத் தகவலை அளிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. சுருக்கமான, குறிப்பான உதாரணத்தையோ பொருத்தமான அனுபவத்தையோ பயன்படுத்த வேண்டியிருக்கலாம். அந்தப் பொருளின்பேரில் பேசுவது மட்டுமே உங்கள் நியமிப்பு அல்ல. கடவுளுடைய வார்த்தை கட்டளையிடும் பணியை நிறைவேற்றுவதற்கும் அதில் சந்தோஷத்தைக் காண்பதற்கும் சபையாருக்கு உதவும் விதத்தில் பேசுவதும் உங்கள் பொறுப்பு என்பதை நினைவில் வையுங்கள்.—அப். 20:20, 21.
பேச்சைத் தயாரிக்கும்போது உங்கள் சபையாரின் சூழ்நிலைகளைக் குறித்து சிந்தியுங்கள். அவர்கள் ஏற்கெனவே செய்துவரும் காரியங்களுக்காக பாராட்டுங்கள். நியமிக்கப்பட்ட பகுதியிலுள்ள ஆலோசனைகளை கடைப்பிடிப்பது எவ்வாறு இன்னுமதிக திறமையோடும் இன்னுமதிக சந்தோஷத்தோடும் ஊழியம் செய்ய அவர்களுக்கு உதவும்?
உங்கள் பேச்சில் பேட்டியையோ நடிப்பையோ சேர்த்துக்கொள்ளும்படி சொல்லப்பட்டிருக்கிறதா? அப்படியென்றால் வெகு முன்னதாகவே இதற்குத் திட்டமிடுங்கள். இதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு வேறு எவரையேனும் கேட்பது எளிதாக இருக்கலாம், ஆனால் அது எப்போதும் சிறந்த பலனை தருவதில்லை. முடிந்தால் கூட்டத்திற்கு முந்திய நாள் அந்தப் பேட்டியை அல்லது நடிப்பை ஒத்திகை பாருங்கள். உங்கள் பேச்சின் இந்தப் பகுதி, கொடுக்கப்படும் போதனையை மெருகூட்டும் விதத்தில் கையாளப்படுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
அசெம்பிளிகளும் மாநாடுகளும்
நல்ல ஆன்மீக பண்புகளை வளர்த்துக்கொண்டு, திறம்பட்ட பேச்சாளர்களாகவும் போதகர்களாகவும் ஆகும் சகோதரர்கள், காலப்போக்கில் ஒரு அசெம்பிளியிலோ மாநாட்டிலோகூட நியமிப்பைப் பெறலாம். இவை, தேவராஜ்ய கல்விக்கான விசேஷித்த நிகழ்ச்சிகளாகும். இந்நிகழ்ச்சிகளில், வாசிப்புமுறை பேச்சு (manuscript talk), குறிப்புத்தாள் பேச்சு, நவீன நாளுக்கு பொருந்தும் பைபிள் நாடகத்திற்கான அறிவுரைகள், அல்லது வெறுமனே அறிவுரைகள் அடங்கிய பாரா போன்ற ஏதாவது நியமிப்பு கொடுக்கப்படலாம். அப்படிப்பட்ட நிகழ்ச்சியில் பங்குபெறும் பாக்கியம் பெற்றால், கொடுக்கப்படும் தகவலை கவனமாக படியுங்கள். அதன் மதிப்பை நீங்கள் மதித்துணரும் வரை திரும்பத் திரும்ப படியுங்கள்.
வாசிப்புமுறை பேச்சு கொடுப்போர் பேச்சுத்தாளிலிருந்து வார்த்தைக்கு வார்த்தை அப்படியே வாசிக்க வேண்டும். அவர்கள் வார்த்தைகளையும் மாற்றுவதில்லை, வாக்கியங்களின் வரிசைகளையும் மாற்றுவதில்லை. முக்கிய குறிப்புகள் எவை என்பதையும் அவை எவ்வாறு விரிவாக்கப்படுகின்றன என்பதையும் தெளிவாக புரிந்துகொள்ள அதைப் படிக்கிறார்கள். சத்தமாக வாசித்துப் பழகுகிறார்கள்; தகுந்த அழுத்தத்தோடும், உற்சாகத்தோடும், கனிவோடும், உணர்ச்சியோடும், ஊக்கத்தோடும், நம்பிக்கையோடும், அதோடு பெரிய கூட்டத்தாரிடம் பேச தேவைப்படும் சத்தத்தோடும் வலிமையோடும் தங்குதடையின்றி சரளமாக வாசிக்க வரும்வரை தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள்.
குறிப்புத்தாள் பேச்சு கொடுக்க வேண்டிய சகோதரர்கள் குறிப்புத்தாளை மிக நெருக்கமாக பின்பற்றி தங்கள் பேச்சை தயாரிப்பது அவசியம். பேச்சின்போது நேரடியாக குறிப்புத்தாளிலிருந்து வாசிக்கக்கூடாது, பேச்சை வார்த்தைக்கு வார்த்தை எழுதி வைத்து வாசிக்கவும் கூடாது. மாறாக, இருதயத்திலிருந்து பேச வேண்டும். குறிப்புத்தாளில் கொடுக்கப்பட்டிருக்கும் நேரத்தைப் பின்பற்றுவது அவசியம்; அப்போதுதான் ஒவ்வொரு முக்கிய குறிப்பையும் தெளிவாக எடுத்துரைக்க முடியும். அவற்றின் கீழ் பட்டியலிடப்பட்டிருக்கும் கருத்துக்களையும் வசனங்களையும் பேச்சாளர் நன்கு பயன்படுத்த வேண்டும். பேச்சாளர் தனக்குப் பிடித்த, கூடுதலான குறிப்புகளை புகுத்தக்கூடாது, அப்படி செய்தால் குறிப்புத்தாளில் கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகள் விடுபட்டுப் போகலாம். போதனைக்கான அஸ்திவாரம் கடவுளுடைய வார்த்தை என்பதில் சந்தேகமில்லை. ‘திருவசனத்தைப் பிரசங்கிப்பதே’ கிறிஸ்தவ மூப்பர்களின் பொறுப்பாகும். (2 தீ. 4:1, 2) ஆகவே குறிப்புத்தாளில் கொடுக்கப்பட்டுள்ள வசனங்களுக்கு பேச்சாளர் விசேஷ கவனம் செலுத்த வேண்டும். அவற்றைக் குறித்து நியாயங்காட்டிப் பேச வேண்டும், வாழ்க்கையில் எவ்வாறு கடைப்பிடிக்கலாம் என்பதையும் காட்ட வேண்டும்.
தள்ளிப்போட வேண்டாம்
உங்கள் சபையில் அடிக்கடி பேச்சு கொடுக்க வேண்டிய சந்தர்ப்பம் வருகிறதா? அவை எல்லாவற்றிற்கும் எப்படி போதிய கவனம் செலுத்தலாம்? கடைசி நிமிடத்தில் அவசர அவசரமாக தயாரிப்பதை தவிருங்கள்.
நன்கு யோசித்து தயாரிக்கப்படும் பேச்சுக்களே சபைக்கு உண்மையில் பயனளிக்கும். ஆகவே ஒவ்வொரு நியமிப்பையும் பெற்றவுடனேயே அதை வாசித்துப் பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மற்ற வேலைகளை கவனிக்கும்போதும் இந்தப் பேச்சைக் குறித்து சிந்திக்க இது உதவும். உங்கள் பேச்சைக் கொடுப்பதற்கு முன்னான வாரங்களில் அல்லது நாட்களில், அந்தத் தகவலை எப்படி சிறப்பாக பயன்படுத்தலாம் என கண்டுகொள்ள உதவும் குறிப்புகளை நீங்கள் கேள்விப்படலாம். புதிய சூழ்நிலைகள் எழும்புவதால் தகவல் காலத்திற்கு ஏற்றதாகலாம். நியமிப்பைப் பெற்றவுடன் அதை வாசிப்பதற்கும் பின் அதைக் குறித்து சிந்திப்பதற்கும் அதிக நேரமெடுக்கும், ஆனால் அதற்கேற்ற பலன் நிச்சயம் கிடைக்கும். இறுதியில் நீங்கள் குறிப்புத்தாளை தயாரிக்கும்போது முன்னதாகவே சிந்தித்ததன் பலன்களை அறுவடை செய்வீர்கள். இவ்வாறு பேச்சுக்களைத் தயாரிப்பது பெருமளவு டென்ஷனைக் குறைக்கும். நடைமுறையான விதத்தில் பேசவும் சபையிலுள்ளவர்களின் இருதயத்தை எட்டவும் இது உங்களுக்கு உதவும்.
யெகோவா தமது மக்களுக்காக ஏற்பாடு செய்திருக்கும் கல்வித்திட்டத்தில் உங்களுக்கு அளித்திருக்கும் பங்கை பரிசாக மதித்து எந்தளவுக்கு போற்றுகிறீர்களோ அந்தளவுக்கு அவரை மகிமைப்படுத்துவீர்கள், அவரை நேசிப்பவர்களுக்கு ஆசீர்வாதமாகவும் திகழ்வீர்கள்.—ஏசா. 54:13; ரோ. 12:6-8.