யார் மனிதவர்க்கத்தைச் சமாதானத்துக்கு வழிநடத்துவார்?
மனிதர்கள் சமாதானத்தைக் கொண்டுவர முடியாது என்ற உண்மை, நாம் ஒருபோதும் சமாதானத்தைக் காணமாட்டோம் என்பதை அர்த்தப்படுத்துகிறதா? இல்லை. நம்மைவிட அதிக வல்லமைவாய்ந்தவனாக இருக்கும் சாத்தான் பூமியின் மீது சமாதானத்துக்கு முக்கியமான இடையூறாக இருப்பது போலவே, சாத்தானைவிடவும்கூட அதிக வல்லமைவாய்ந்த ஒருவர் இருக்கிறார். இவர் கடைசியாக மனிதவர்க்கத்தை சமாதானத்துக்கு வழிநடத்துவார். சாத்தானைப் பற்றிச் சொல்லும் பைபிள், இவரைப் பற்றியும்கூட சொல்கிறது. அது சொல்வதாவது: “கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப் பிரபு என்னப்படும்.” (ஏசாயா 9:6, 7) இந்தச் சமாதானப் பிரபு யார்? இவர் இயேசு கிறிஸ்துவேயன்றி வேறு எவரும் இல்லை. அவர் சமாதானத்தைக் கொண்டுவர முடியும், ஏனென்றால், நம்மைவிட அவர் மிக அதிகமாக தகுதிப் பெற்றவராயிருக்கிறார். என்ன வழிகளில்?
மனித தகுதிகளைவிட அதிகம்
ஒரு காரியமானது இயேசு மரணத்துக்கு உட்பட்டவராக, இறக்கும் தன்மையுள்ளவர் அல்ல. உண்மைதான், அவர் மனிதனாக வாழ்ந்து பலிக்குரிய ஒரு மரணத்தை அனுபவித்தார். ஆனால் பின்னர், அவர் சாவாமையுள்ள பரலோக வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்பட்டார், இந்த நிலையில்தானே, அவர் சமாதானப் பிரபுவாகிறார். இதன் காரணமாகவே, தீர்க்கதரிசனம் சொல்கிறது: “அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது.” (லூக்கா 1:32, 33) கிழக்கத்திய நாட்டைச் சேர்ந்த மாமன்னன் அசோகரை போலில்லாமல், இயேசு தம்முடைய நற்கிரியைகள், தரம் குறைந்த வாரிசுகளால் பாழாக்கப்படாதிருப்பதை உறுதி செய்யும் பொருட்டு அவர் என்றென்றுமாக வாழ்ந்திருப்பார்.
மேலுமாக இயேசு, பாவத்தால் கறைபடாதவராக இருக்கிறார். அவருடைய ஆட்சி, தெய்வீக ஞானத்தையும் சரியான நியமங்களையும் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. ஏசாயா தீர்க்கதரிசி முன்னுரைத்தான்: “ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் யெகோவாவுக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய யெகோவாவுடைய ஆவி அவர்மேல் தங்கியிருக்கும். . . . அவர் தமது கண்கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்பு செய்யாமலும், நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரிப்பார்.” (ஏசாயா 11:2–4, NW) பண்டையக் காலத்திய ஐரோப்பியர்களைப் போல இயேசு, அந்நிய தேசங்களில் போர் செய்வதற்காகத் தாயகத்தில் சமாதானத்தைக் காக்கிறவராக இருக்க மாட்டார். அவர் கீழ், சமாதானம் உலகம் முழுவதிலும் இருக்கும்.
மேலுமாக, இயேசு சமாதானத்தைக் கொண்டு வருவதற்கு வல்லமையுள்ளவராக இருக்கிறார். தீர்க்கதரிசனம் சொல்கிறது: “யெகோவாவுடைய ஆவியும் . . . , ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும்,” அவர் மேல் இருக்கிறது. இந்த ஆவி, பிரபஞ்சத்தின் சிருஷ்டிப்புக்கும், பைபிளில் அறிவிக்கப்பட்டுள்ள நீதியுள்ள எல்லா வல்லமையான செயல்களுக்கும் பின்னால் இருந்தது. பெரிய சத்துருவாகிய சாத்தானும்கூட கடவுளுடைய ஆவியின் வல்லமையை வெற்றிகரமாக எதிர்க்கக்கூடிய எந்தக் கருவியையும் கொண்டில்லை.
சமாதானத்துக்கு நடவடிக்கைகள்
இயேசு எவ்விதமாக மனிதவர்க்கத்தைச் சமாதானத்துக்கு வழிநடத்திச் செல்வார்? அவர் ஏற்கெனவே அதை ஆரம்பித்துவிட்டார் என்பதை அறிந்துகொள்வதில் நீங்கள் ஆச்சரியமடையக்கூடும். தீர்க்கதரிசன புத்தகமாகிய வெளிப்படுத்துதலில், இயேசு, பரலோக ராஜ்யத்தில் கடவுளிடமிருந்து ராஜ்யபாரத்தைப் பெற்றுக்கொள்வதாக காணப்படுகிறார். (வெளிப்படுத்துதல் 11:15) நாம் பைபிள் தீர்க்கதரிசனங்களை கவனமாக ஆராய்ந்து நம்முடைய நூற்றாண்டில் நடைபெறும் சம்பவங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால், ராஜாவாக இயேசு சிங்காசனத்திலேற்றப்பட்டது பரலோகத்தில் 1914-ல் நடைபெற்றது என்பதை நாம் காண்போம். (மத்தேயு 24:3–42) அது பூமிக்கு சமாதானத்தைக் கொண்டுவருவதில் ஒரு முக்கிய படியாக இருந்தது.
அது அப்படியாக இருக்குமானால், 1914-ல் ஏன் முதல் உலகப் போர் ஆரம்பமானது? மேலும் நம்முடைய நூற்றாண்டு, ஏன் சரித்திரத்தில் வேறு எதையும் காட்டிலும் அதிக மோசமான போர்களை பார்த்திருக்கிறது? ஏனென்றால் சாத்தானைப் பரலோகங்களிலிருந்து எல்லாக் காலத்துக்குமாக அப்புறப்படுத்தி பூமியினிடமாக அவனைத் தள்ளுவது பரலோக ராஜாவின் முதல் செயலாக இருந்தது. விளைவு? தீர்க்கதரிசனம் சொல்லுகிறது: “பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக் காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங் கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்து வரும்.” (வெளிப்படுத்துதல் 12:7–12) நம்முடைய நூற்றாண்டின் பெரிய யுத்தங்கள் சாத்தானுடைய கோபத்தோடு சம்பந்தப்பட்டவையாக இருக்கின்றன. ஆனால் கவனியுங்கள்: சாத்தானின் கோபம், “கொஞ்சக்கால மாத்திரமே.” ஆபத்து விரைவில் கடந்துவிடும்!
ஆனால் அதற்கு முன்பாக சமாதானப் பிரபு சமாதானத்துக்காக கூடுதலான இன்றியமையாத ஆயத்தங்களைச் செய்கிறார். முதலில், கிறிஸ்துவின் மூலமாக சமாதானத்தைக் கொண்டுவருவது கடவுளுடைய நோக்கம் என்பதை மனிதவர்க்கம் அறிந்துகொள்ள வேண்டும். இதன் தொடர்பாக நம்முடைய காலத்தில், “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்,” என்பதாக இயேசு முன்னுரைத்தார். (மத்தேயு 24:14) இதன் நிறைவேற்றமாக, நற்செய்தி இன்று பூகோளத்தின் ஒவ்வொரு மூலையிலும் யெகோவாவின் சாட்சிகளால் பிரசங்கிக்கப்பட்டு வருகிறது.
பின்னர், நேர்மையான இருதயமுள்ளவர்கள் சமாதான வழிகளில் போதிக்கப்பட வேண்டும். பைபிள் இவ்விதமாக வாக்களிக்கிறது: “உன் பிள்ளைகளெல்லாரும் யெகோவாவால் போதிக்கப்பட்டிருப்பார்கள், உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரியதாயிருக்கும்.” (ஏசாயா 54:13, NW) இலட்சக்கணக்கான நேர்மையான இருதயமுள்ளவர்கள் இப்பொழுதே அந்தக் கல்வியைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
அடுத்த நடவடிக்கை
சமாதானத்தை உண்டுபண்ணும் செயல்முறையில் மற்றொரு முடிவான நடவடிக்கைக்கு இப்பொழுது இது ஏறக்குறைய சமயமாக இருக்கிறது. அது என்ன? அநேகர் பெயரளவில் இதை அறிந்தவர்களாக இருக்கின்றனர், வெகு சிலரே இதன் உண்மையான நோக்கத்தை அறிந்தவர்களாக இருக்கின்றனர். பைபிள் இதை “சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகா நாளில் நடக்கும் யுத்தம்” அல்லது அர்மகெதோன் என்றழைக்கிறது. (வெளிப்படுத்துதல் 16:14, 16) அநேகர் அர்மகெதோன் என்பது நாகரீகத்தை அழித்துவிடும் ஓர் அணுயுத்தம் என்பதாக நினைக்கிறார்கள். மாறாக, இது சமாதானத்துக்கு இன்றியமையாததாக இருக்கும் காரியங்களைச் சாதிக்க சமாதானப் பிரபுவாகிய இயேசுவின் நேரடியான ஒரு செயலாகும்.
முதலாவதாக, அர்மகெதோன், சமாதானத்துக்கு, இருக்கும் எல்லா இடையூறுகளையும் நீக்கிப் போடும். சங்கீதம் 37:10-ல் உள்ள தீர்க்கதரிசனம் சொல்வதாவது: “இன்னுங் கொஞ்ச நேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; அவன் ஸ்தானத்தை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை.” ஆம், இயேசு, “துன்மார்க்கனை,” யுத்தம் பண்ணுகிறவர்களை, குற்றவாளிகளை, பயங்கரவாதிகளை, பெரிய சமாதானப் பிரபுவை ஏற்றுக்கொள்ள மறுக்கும் அனைவரையும்—பூமியிலிருந்து நீக்கிப்போடுவார். இந்தக் கிரகத்தின் மீது தொடர்ந்து உயிர் வாழ்ந்திருக்க அவர்களுக்கு எந்த உரிமையும் இருக்காது.—வெளிப்படுத்துதல் 19:19–21.
இரண்டாவதாக, அர்மகெதோனில், தானியேலின் இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேற்றமடையும்: “அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப் பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; . . . அப்படியே அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.” (தானியேல் 2:44) அடிக்கடி போருக்கு வழிநடத்தியிருக்கும் தேசீய பாகுபாடுகள் மறைந்துவிடும். கடைசியாக நாம் நம்பக்கூடிய ஓர் அரசனின் கீழ் ஓர் உலக அரசாங்கம் இருக்கும்!
அர்மகெதோன் எப்போது வரும்? பைபிள் சொல்வதில்லை. ஆனால் தீர்க்கதரிசினத்தின் நிறைவேற்றமாக நடந்துவரும் உலக சம்பவங்கள் அது வெகு சீக்கிரத்தில் இருக்கும் என்பதை சுட்டிக் காட்டுகிறது. அடுத்து வர இருக்கும் முற்போந்த அறிகுறியாக இருக்கும் ஒரு சம்பவத்தை பைபிள் தெளிவாக முன்னறிவிக்கிறது. அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிறார்: “சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, அழிவு சடிதியாய் அவர்கள் மேல் வரும்.” (1 தெசலோனிக்கேயர் 5:3) பின்னர், அர்மகெதோனில் உச்சக்கட்டத்தைக் காணும் சடிதியான அழிவுக்குப் பின் உடனடியாக, சமாதானத்தின் மிகப் பெரிய இடையூறு நீக்கப்படும். சாத்தானின் “கொஞ்சக் காலம்” முடிவடைந்திருக்கும். அவன் இனிமேலும் இங்கே பூமியில் தொந்தரவுகளை உண்டுபண்ண முடியாத ஒரு நிலையில் வைக்கப்படுவான். (வெளிப்படுத்துதல் 20:1–3) என்னே ஒரு நிம்மதி!
சமாதானமான ஓர் உலகம்
அந்தச் சமயத்தில் நிலைமையைக் கற்பனைச் செய்து பாருங்கள். சங்கீதக்காரன் முன்னுரைத்தான்: “சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.” (சங்கீதம் 37:11) இந்தச் சாந்த குணமுள்ள ஆட்கள், ஏசாயாவின் அழகிய தீர்க்கதரிசனத்தைத் தொடர்ந்து நிறைவேற்றுவார்கள்: “அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.”—ஏசாயா 2:4.
கடைசியாக, ஏதேன் முதற்கொண்டு முதல்முறையாக, உயிர்வாழும் எல்லா மனிதர்களும் யெகோவா தேவனின் ஆசீர்வாதத்தை அனுபவித்து மகிழ்வர். அவர் தம்முடைய வாக்கை நிறைவேற்றுவார்: “இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்து போயின.”—வெளிப்படுத்துதல் 21:3, 4.
உறுதியான ஒரு நம்பிக்கை
யார் அப்போது மனிதவர்க்கத்தை சமாதானத்துக்கு வழிநடத்திச் செல்வார்? நியமிக்கப்பட்ட சமாதானப் பிரபுவாகிய இயேசு கிறிஸ்துவே. இது நமக்கு இன்று நடைமுறைக்கு ஏற்ற நம்பிக்கையா? ஆம், பைபிளின் வாக்குறுதிகள் நம்பத்தகாதவைகள் என்றால், சமாதானத்துக்கு உண்மையான நம்பிக்கை எதுவுமிராது. மனிதர்கள் தொடர்ந்து சண்டைப் போட்டுக்கொண்டு எந்த முடிவுமில்லாமல் ஒருவரையொருவர் கொலைசெய்து கொண்டிருப்பார்கள். ஆனால் பைபிள் நம்பத்தகுந்தது, கிறிஸ்துவின் கீழ் கடவுளுடைய ராஜ்யம் சமாதானத்தைக் கொண்டுவரும். யெகோவாவின் சாட்சிகள் உங்கள் வீட்டுக்கு கொண்டுவரும் ராஜ்யத்தின் நற்செய்திக்கு செவிசாய்த்து இதை நீங்களே பார்க்கும்படியாக நாங்கள் உங்களை உற்சாகப்படுத்துகிறோம். பின்னர் காலம் வரும்போது, பூமியைச் சுதந்தரித்துக் கொண்டு மிகுந்த சமாதானத்தில் மனமகிழ்ச்சியாயிருக்கப் போகும் சாந்தகுணமுள்ளவர்கள் மத்தியில் நீங்களும் இருப்பீர்களாக. (w90 4/1)
[பக்கம் 8-ன் சிறு குறிப்பு]
மனிதவர்க்கத்தைச் சமாதானத்துக்கு வழிநடத்திச் செல்ல இயேசுவுக்கு மாத்திரமே தகுதிகள் உண்டு
[பக்கம் 9-ன் சிறு குறிப்பு]
இன்று ராஜ்யத்தின் நற்செய்தி பூகோளத்தின் ஒவ்வொரு மூலையிலும் பிரசங்கிக்கப்பட்டு வருகிறது