மரணம் அன்பானவரை பறித்துக்கொள்ளும்போது
“என் அம்மா 1981-ல் புற்றுநோயினால் மரித்தார். அவர்கள் என்னை தத்து எடுத்து வளர்த்த தாயாக இருந்தார்கள். அவர்களுடைய மரணம் எனக்கும் தத்து எடுத்து வளர்க்கப்பட்ட என் தம்பிக்கும் பேரிடியாக இருந்தது. எனக்கு வயது 17, என் தம்பிக்கு வயது 11. என் அம்மாவை நான் இழந்து தவித்தேன். நான் ஒரு கத்தோலிக்கப் பெண்ணாக வளர்க்கப்பட்டிருந்தேன், அவர்கள் பரலோகத்தில் இருப்பதாக கற்பிக்கப்பட்டிருந்ததன் காரணமாக, அவர்களோடு இருப்பதற்காக என் சொந்த உயிரை மாய்த்துக் கொள்ள நான் விரும்பினேன். எனக்கு மிகச் சிறந்த சிநேகிதியாக அவர்கள் இருந்தார்கள்.”—ராபர்டா, 25 வயது.
இதுபோன்ற அனுபவம் உங்களுக்கு இருந்திருக்கிறதா? அப்படியானால் அன்பான ஒருவரின் இழப்பினால் ஏற்படும் துயரத்தை நீங்கள் நேரடியாக அறிந்தவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் நேசிக்கும் ஒருவரை உங்களிடமிருந்து பறித்துக் கொள்ளும் வல்லமை மரணத்துக்கு இருப்பது அநியாயமாகத் தோன்றுகிறது. அது சம்பவிக்கையில், உங்களுடைய அன்பானவரோடு பேசவும், சேர்ந்து சிரிக்கவும், அல்லது அவரை பற்றிக்கொள்ளவும் முடியாது என்ற எண்ணமே தாங்கிக் கொள்ள மிகக் கடினமானதாக இருக்கக்கூடும். ராபர்டாவின் வார்த்தைகள் காண்பிப்பது போல, நீங்கள் நேசிக்கும் ஒருவர் மேலே பரலோகத்தில் இருக்கிறார் என்று சொல்லப்படுவதால் துயரம் மறைந்துவிடுவதில்லை.
ஆனால், மரித்த அன்பார்ந்தவருடன் மேலே பரலோகத்தில் அல்ல, ஆனால் சமாதானமுள்ள, நீதியுள்ள நிலைமைகளின் கீழ், இங்கே, இந்தப் பூமியிலேயே, அண்மையில் உள்ள எதிர்காலத்தில் மறுபடியும் ஒன்றுசேருவது கூடிய காரியம் என்பதை நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், எப்படி உணருவீர்கள்? அந்தச் சமயத்தில் மனிதர்கள் பரிபூரண ஆரோக்கியத்தை உடையவர்களாய் ஒருபோதும் மரிக்க வேண்டி இருக்காது என்பதையும்கூட நீங்கள் அறியவந்தால் அப்போது என்ன? ‘நிச்சயமாகவே விருப்பங்களை அடிப்படையாகக் கொண்ட எண்ணம்’ என்பதாக நீங்கள் ஒருவேளை சொல்லக்கூடும்.
என்றபோதிலும், பொ.ச. முதல் நூற்றாண்டில், இயேசு கிறிஸ்து தைரியமாகச் சொன்னார்: “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்.” (யோவான் 11:25) மரித்தவர்கள் மறுபடியுமாக உயிர் வாழ்வார்கள் என்ற ஒரு வாக்குறுதியாக அது இருந்தது—நிச்சயமாகவே கிளர்ச்சியூட்டும் ஓர் எதிர்பார்ப்பு!
என்றாலும் ஒருவேளை நீங்கள் இவ்வாறு யோசிக்கலாம்: ‘இப்படிப்பட்ட ஒரு வாக்குறுதியில் நம்பிக்கை வைப்பதற்கு சரியான ஓர் ஆதாரம் இருக்கிறதா? அது வெறுமென விருப்பங்களை அடிப்படையாகக் கொண்ட எண்ணம் அல்ல என்று நான் எப்படி நிச்சயமாயிருக்கலாம்? அதில் நம்பிக்கை வைப்பதற்கு ஓர் ஆதாரம் இருக்குமேயானால், இந்த வாக்குறுதியின் நிறைவேற்றம் எனக்கும் நான் நேசிக்கும் ஆட்களுக்கும் எதை அர்த்தப்படுத்தக்கூடும்?’ இவைகளையும் மற்ற கேள்விகளையும் பின்வரும் கட்டுரை கலந்தாலோசிக்கும். (w90 5/1)