பைபிள் காலங்களிலிருந்த இளமையான ஊழியர்கள்
கடவுளுக்கு தங்கள் சேவையை முக்கியமானதாக கருதி, அவ்விதமாகச் செய்ததற்காக நிறைவாக ஆசீர்வதிக்கப்பட்ட அநேக இளைஞரைப் பற்றி பைபிள் சொல்லுகிறது. நாம் இளைஞராயிருந்தாலும் அல்லது வயதுசென்றவர்களாகவும் நரைத்தும் இருந்தாலும், இந்தச் சிறந்த பைபிள் உதாரணங்கள் பெரும் ஊக்குவிப்பை அளிக்கக்கூடும்.
யோசேப்பு எகிப்தில் அடிமைத்தனத்துக்குள் விற்கப்பட்ட சமயத்தில் அவன் 17 வயதுள்ளவனாகவே இருந்தான். அங்கே, குடும்பத்தை விட்டு வெகுத் தொலைவிலும், அவனை அறிந்திருந்தவர்களின் பார்வையில் இல்லாவிட்டாலும், யோசேப்பு தன் உத்தமத்தன்மையை நிரூபித்தான். போர்த்திபாரின் மனைவி யோசேப்பை தவறு செய்ய தூண்டியபோது அவன், “நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி” என்றான். அவனுடைய நாளில் அதிக வல்லமைமிக்க அரசனாக இருந்த பலம்பொருந்திய பார்வோனுக்கு முன்னாலும்கூட, யோசேப்பு பார்வோனின் கனவுகளுக்கு அர்த்தஞ் சொல்லுவதற்குரிய புகழை கடவுளுக்குக் கொடுக்க அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டான். அவன் நிறைவாக ஆசீர்வதிக்கப்பட்டான். எகிப்தியரையும் அவனுடைய குடும்பத்தையும் பஞ்சத்தினால் சாவதிலிருந்து பாதுகாக்கவும் அவனுடைய தகப்பனாகிய யாக்கோபையும் அவன் வீட்டாரையும் எகிப்துக்கு கொண்டுவருவதற்கும் கடவுள் அவனை பயன்படுத்தினார்.—ஆதியாகமம் 37:2; 39:7–9; 41:15, 16, 32.
மோசேயும் மற்றவர்களும் இளமை பருவத்தில் உண்மையுள்ளவர்களாக இருக்கின்றனர்
பார்வோனுடைய குமாரத்தி மோசேயை எடுத்து தன் சொந்த பிள்ளையாக வளர்த்தாள், ஆனால் மோசேயின் தாயும் தகப்பனும் அவனுக்கு மெய்க் கடவுளைப் பற்றி போதிக்கக்கூடியவர்களாக இருந்தனர். மோசே பெரியவனான போது, “பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து, அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதைப் பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்து கொண்டான்” என்று பைபிள் சொல்லுகிறது. கடவுள், மோசேயை எகிப்திலிருந்து தம்முடைய ஜனங்களை வெளியே கொண்டுவரவும், சீனாயில் நியாயப்பிரமாணத்தைப் பெற்றுக்கொள்ளவும் பைபிளின் பெரும்பகுதியை எழுதவும் பயன்படுத்தினார். உங்கள் வயது என்னவாக இருந்தாலும், மோசேயைப் போல கடவுளை சேவிக்க வேண்டும் என்ற திடதீர்மானத்தை நீங்கள் வளர்த்துக் கொண்டிருக்கிறீர்களா?—எபிரெயர் 11:23-29; யாத்திராகமம் 2:1–10.
கடவுளுடைய நியாயப்பிரமாணம் இஸ்ரவேலுக்கு வாசிக்கப்பட்ட போது தேசத்திலுள்ள மற்ற எல்லாருடனும் கூட செவிசாய்த்துக் கொண்டிருந்த “பிள்ளைகளைப்” பற்றி வேதாகமம் நமக்குச் சொல்லுகிறது. (உபாகமம் 31:10–13) நியாயப்பிரமாணம் வாசிக்கப்படுவதைக் கேட்க, நெகேமியாவின் நாட்களில் “கேட்டு அறியத்தக்க அனைவரும்” “காலமே தொடங்கி மத்தியானமட்டும்” நின்றுகொண்டிருந்தார்கள். (நெகேமியா 8:1–8) சிறு பிள்ளைகள் எதையும் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும்கூட, அவர்கள் தாங்கள் யெகோவாவை நேசிக்கவும், வணங்கவும், கீழ்ப்படியவும் வேண்டும் என்பதை போற்றக்கூடும். உங்கள் வயது என்னவாக இருந்தாலும், கடவுளுடைய வார்த்தை சிந்திக்கப்படுகிற மாநாடுகளிலும் அசெம்பிளிகளிலும் நீங்கள் செவிகொடுத்திருக்கிறீர்களா? அந்த இளம் இஸ்ரவேலரைப் போல, அவருக்கு கீழ்ப்படிந்திருப்பதன் முக்கியத்துவத்தை நீங்கள் கற்றுக்கொண்டிருக்கிறீர்களா?
தாவீது, யோசியா மற்றும் எரேமியா
கடவுள் எட்டு சகோதரர்களில் இளையவனான தாவீதை விசேஷித்த சேவைக்காக தெரிந்துகொண்டு அவனிடமாக இவ்விதமாகச் சொன்னார்: “ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான்.” கடவுள் தம்முடைய ஜனங்களுக்கு “மேய்ப்பனாக” அவனைத் தெரிந்து கொண்டார், தாவீது அநேக ஆண்டுகளாக யெகோவாவுக்கு தன்னுடைய அன்பை நிரூபிப்பவனாய் அந்தச் சேவையைச் செய்தான். அவன் 70-க்கும் மேற்பட்ட சங்கீதங்களை எழுதி, இயேசு கிறிஸ்துவின் முற்பிதாவானான். இளைஞராயிருந்தாலும் அல்லது வயதானவராய் இருந்தாலும், நீங்கள் கடவுளுடைய வழிகளை மதித்துணர்ந்து, தாவீது செய்தது போல அவர் விரும்புகிற காரியங்களை நீங்கள் செய்கிறீர்களா?—அப்போஸ்தலர் 13:22; சங்கீதம் 78:70, 71; 1 சாமுவேல் 16:10, 11; லூக்கா 3:23, 31.
யோசியாவுக்கு எட்டு வயதாக மாத்திரமே இருக்கையில் அவன் ராஜாவானான். அவனுக்கு 15 வயதாக இருக்கையில், “தன் தகப்பனாகிய தாவீதின் தேவனைத் தேட ஆரம்பித்தான்.” அவனுக்கு 20 வயதாவதற்கு முன், யோசியா பொய் வணக்கத்துக்கு எதிராக நடவடிக்கையை ஆரம்பித்தான். பின்னால் அவன் ஆலயத்தைப் பழுதுபார்க்கச் செய்து தேசத்தில் மெய் வணக்கத்தை மீண்டும் நிலைநாட்டினான். நாம் வாசிக்கிறோம்: “அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய யெகோவாவை [NW] விட்டுப் பின்வாங்கினதில்லை.” நாம் அனைவருமே யோசியாவைப் போல ஓர் அரசனாக இருக்க முடியாது, ஆனால் நம்முடைய வயது என்னவாக இருந்தாலும் நாம் கடவுளைச் சேவித்து, பொய் வணக்கத்துக்கு எதிராக உறுதியாக நிற்கலாம்.—2 நாளாகமம் 34:3, 8, 33.
சர்வ வல்லமையுள்ள கடவுள் எரேமியாவிடம் சொன்னார்: “நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம் பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன்.” எரேமியா தான் ஒரு தீர்க்கதரிசியாக இருப்பதற்கு வயதில் மிகவும் குறைந்தவன் என்பதாக ஆட்சேபித்தான்: “ஆ கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, நான் பேச அறியேன்; சிறுபிள்ளையாயிருக்கிறேன்.” அதற்கு யெகோவா: “நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே, நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய், நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக.” 40-க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக எரேமியா அதையே தான் செய்தான். அவன் அதை நிறுத்திவிட விரும்பியபோதும் அவனால் அதை செய்ய முடியவில்லை. கடவுளுடைய வார்த்தை “எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப் போல” இருந்தது. அவன் பேசியே ஆகவேண்டும்! உங்கள் வயது என்னவாக இருந்தாலும், எரேமியா செய்தது போல கடவுளுடைய சேவையில் முன்னேறிக்கொண்டு அவனுக்கிருந்ததைப் போன்ற விசுவாசத்தை வளர்த்துக்கொண்டு வருகிறீர்களா?—எரேமியா 1:4–8; 20:9.
தானியேல், இயேசு மற்றும் தீமோத்தேயு
தானியேலைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பாபிலோன் ராஜாவாகிய வல்லமை பொருந்திய நேபுகாத்நேச்சாரின் அரண்மனைக்கு மற்ற “பிள்ளைகளோடு” கைதியாக அவன் அழைத்துச் செல்லப்பட்டபோது, 20-க்கு குறைவான வயதினனாகவே அவன் இருந்திருக்க வேண்டும். தானியேல் இளமைப் பருவத்திலிருந்த போதும், அவன் கடவுளுக்கு கீழ்ப்படிந்திருக்க தீர்மானமாயிருந்தான். தானியேலும் அவனுடைய தோழர்களும் கடவுளுடைய சட்ட மீறுதலை உட்படுத்தியிருக்கக்கூடிய அல்லது புறமத சடங்குகளால் அசுத்தப்படுத்தப்பட்டிருக்கக்கூடிய உணவினால் தங்களை கறைபடுத்திக்கொள்ள மறுத்தனர். 80 ஆண்டுகளுக்கும் மேலாக, தானியேல் ஒருபோதும் பின்வாங்கவில்லை, கடவுளிடம் ஜெபிப்பது அவன் சிங்கங்களிடம் தூக்கி எறியப்படுவதில் விளைவடையும் என்றாலும்கூட அவ்விதமாகச் செய்வதை நிறுத்திவிட மறுக்கும் அளவுக்கு தன் உத்தமத்தைக் காத்துக் கொண்டான். நீங்கள் கடவுளுக்கு உங்களுடைய சேவையையும் உங்கள் ஜெபங்களையும் அத்தனை முக்கியமானதாக கருதுகிறீர்களா? நீங்கள் கருதவேண்டும்.—தானியேல் 1:3, 4, 8; 6:10, 16, 22.
இயேசு 12 வயதாயிருக்கையில், எருசலேமில் ஆலயத்தில் மதப் போதகர்கள் மத்தியில் உட்கார்ந்து கொண்டிருக்க காணப்பட்டார். “அவர்கள் பேசுகிறதைக் கேட்கவும், அவர்களை வினாவவும்” செய்தார். “அவர் [இளைஞனான இயேசு] பேசக் கேட்ட யாவரும் அவருடைய புத்தியையும் அவர் சொன்ன மாறுத்தரங்களையுங் குறித்துப் பிரமித்தார்கள்.” இயேசுவுக்கு இருந்தது போல ஆலயத்தில் வயதானவர்கள் கொண்டிருந்த வேதபூர்வமான கலந்தாலோசிப்பு உங்களுக்கு அக்கறைக்குரியதாக இருந்திருக்குமா? உங்கள் புரிந்துகொள்ளுதல்களும் உங்கள் பதில்களும் மற்றவர்களை பிரமிக்கச் செய்திருக்குமா? இன்று, படிக்கின்ற, கிறிஸ்தவக் கூட்டங்களில் கவனமாகச் செவிசாய்த்து அதில் பங்குகொள்கின்ற அநேக இளம் சாட்சிகள், வயதானவர்களை வியப்பில் ஆழ்த்தும் வேத அறிவை உடையவர்களாக இருக்கின்றனர்.—லூக்கா 2:42, 46, 47.
“பரிசுத்த வேத எழுத்துக்களில்” சிறுவயது முதல் போதிக்கப்பட்டிருந்த தீமோத்தேயுவைப் போல நீங்கள் இருக்கிறீர்களா? அவன் இளம் மனிதனாக இருந்த போது குறைந்த பட்சம் இரண்டு சபைகளிலாவது “நற்சாட்சி பெற்றவனாயிருந்தான்.” அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுவை தன்னோடு பிரயாணம் செய்ய தெரிந்து கொண்டான், வெறும் ஒரு கூலியாக இருப்பதற்கு அல்ல, ஆனால் மற்றவர்களுக்கு போதிப்பதில் பவுலுக்கு உதவி செய்ய. இப்படிப்பட்ட சிலாக்கியங்களுக்கு நீங்கள் தெரிந்துகொள்ளப்படுவீர்களா? உங்கள் செயல், உங்கள் சொந்த சபையில் மாத்திரம் இல்லாமல் மற்றவைகளிலும்கூட “நற்சாட்சி” பெற்றிருக்கிறதா?—2 தீமோத்தேயு 3:15; அப்போஸ்தலர் 16:1–4.
என்னவிதமான எதிர்காலம் உங்களுக்கு வேண்டும்?
இன்று இளைஞர்கள் யோசேப்பு, மோசே, தாவீது இன்னும் மற்றவர்களைப் போல உண்மையுள்ளவர்களாக இருப்பது சாத்தியமா? ஆம், சாத்தியமே. உண்மைதான், அநேக இளைஞர் ஒரு நல்ல நேரத்தைக் கொண்டிருப்பதில் மாத்திரமே அக்கறையுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால் மற்றவர்கள் கடவுளையும் தங்களுக்கு அவருடைய சித்தத்தையும் அறிந்து கொள்வதில் தங்கள் இளமைப் பருவத்தை ஞானமாக உபயோகித்து வருகிறார்கள். இவர்கள் இந்தப் பைபிள் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுகிறார்கள்: “உமது பராக்கிரமத்தின் நாளிலே உம்முடைய ஜனங்கள் மனப்பூர்வமாய் தங்களை அளிப்பார்கள். . . . விடியற்காலத்துக் கர்ப்பத்தில் பிறக்கும் பனிக்குச் சமானமாய் உம்முடைய யெளவன ஜனம் உமக்குப் பிறக்கும்.”—சங்கீதம் 110:3, NW.
இப்படிப்பட்ட இளம் மனிதர்கள், தங்கள் வயதுக்கு அப்பாற்பட்ட ஞானத்தைக் காண்பிக்கிறார்கள், ஏனென்றால் கடவுள் அவர்களுடைய தற்கால வாழ்க்கையை வெற்றிகரமானதாக்கி, வரப்போகிற புதிய உலகில் அவர்களுக்கு அவர் மகிமையான ஓர் எதிர்காலத்தையும் கொடுக்கமுடியும். (1 தீமோத்தேயு 4:8) ஆனால் பைபிளில் குறிப்பிடப்பட்ட இளைஞர்களுடையதைப் போன்ற விசுவாசத்தை ஒரு நவீன நாளைய இளைஞன் எவ்விதமாக வளர்த்துக் கொள்ளலாம்? நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால், இந்தப் பத்திரிகையில் பக்கம் 27-ல் ஆரம்பமாகும் “யெகோவாவின் சேவையில் மகிழ்ச்சியுள்ள இளைஞர்கள்” கட்டுரையை வாசிக்க உங்களை அழைக்கிறோம். (w90 8/1)
[பக்கம் 5-ன் படம்]
இளம் மோசே எகிப்தின் ஜசுவரியத்தால் கவர்ந்திழுக்கப்படவில்லை
இளம் தாவீது யெகோவாவின் இருதயத்திற்கு ஏற்றவனாயிருந்தான்
[பக்கம் 6-ன் படம்]
தான் “சிறு பிள்ளை” என்பதாக எரேமியா உணர்ந்த போதிலும், வரவேற்கப்படாத ஒரு செய்தியைத் தைரியமாகப் பிரசங்கித்தான்
தம்முடைய 12 வயதில், இயேசு கடவுளுடைய வார்த்தையின்பேரில் தமக்கு இருந்த தெளிந்துணர்வால் பெரியவர்களை வியப்பில் ஆழ்த்தினார்
[பக்கம் 7-ன் படம்]
இஸ்ரவேலில் கடவுளுடைய பிரமாணம் வாசிக்கப்பட்டபோது சிறுவர்கள்கூட கவனமாய்ச் செவிகொடுத்தார்கள். நீங்கள் செய்கிறீர்களா?