கிறிஸ்மஸ் ஜப்பானில் ஏன் இவ்வளவு பிரசித்திப்பெற்றுள்ளது?
புத்த–ஷின்டோ நாடான ஜப்பானில், கிறிஸ்மஸ் தாத்தாவில் நம்பிக்கை, பிள்ளைகளிடையே ஆழமாக வேர்கொண்டிருக்கிறது. 1989-ல் சுவீடனிலுள்ள ஸான்டா உலகத்திற்கு ஜப்பானியப் பிள்ளைகள் 1,60,000 கடிதங்களை எழுதினார்கள். வேறு எந்த நாடும் இதைவிட அதிகம் அனுப்பவில்லை. அவர்கள் தங்கள் இருதய ஆசையை நிறைவு செய்யும் நோக்கத்துடன், அது 18,000-யென் (136 ஐ.மா. டாலர்கள்) மதிப்புள்ள ஒரு பொம்மை “கிராஃபிக் கம்ப்யூட்டராக” இருப்பினும், அல்லது 12,500-யென் (95 ஐ.மா. டாலர்கள்) மதிப்புள்ள கையடக்கமான ஒரு வீடியோ விளையாட்டுக் கருவியாயினும் சரி, அதற்காக அந்தக் கடிதங்களை எழுதினார்கள்.
ஐப்பானிய இளம் பெண்களுக்கு, கிறிஸ்மஸ் முன்மாலையில், ஒரு காதல் சந்திப்பு தனி அர்த்தத்தைக் கொண்டுள்ளது. மைநிஷி டேய்லி நியூஸ் சொல்வதுபடி, “இளம் பெண்களை வைத்து செய்யப்பட்ட ஒரு சுற்றாய்வின்படி கிறிஸ்மஸ் முன்மாலைக்காக ஒரு மாதத்திற்கு முன்பே தாங்கள் திட்டமிட்டதாக 38 சதவீதத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.” கிறிஸ்மஸ் முன்மாலையில் தங்களுடைய பெண்சிநேகிதிகளுடன் இருப்பதற்கு ஆசைப்படுவதில் இளம் ஆண்கள் இரகசியமான உள்நோக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். “உங்கள் பெண் சிநேகிதியுடன் அமைதியாக ஜெபிப்பது ஒரு நல்ல விஷயமாகும். அதை நாகரிகமான ஓர் இடத்தில் செய்யுங்கள். உங்கள் உறவு வெகு விரைவில் மேலுமதிக நெருக்கமானதாகும்” என்று இளம் ஆண்களுக்குரிய ஒரு பத்திரிகை கருத்து தெரிவிக்கின்றது.
வேலையிலிருந்து வீடு திரும்பும் போது வழியில் ஓர் “அலங்காரக் கேக்கை” வாங்கி வரும் தங்களுடைய கிறிஸ்மஸ் பாரம்பரியத்தினால் ஜப்பானிய கணவர்கள் மந்திர சக்தியை வரவழைக்க எதிர்பார்க்கின்றனர். வருடத்தின் மற்ற சமயங்களில் குடும்பத்தை கவனியாது அசட்டை செய்வதை, கிறிஸ்மஸ் தாத்தாவின் பாகத்தை எடுத்துச் செய்வது சரியீடு செய்துவிடும் என்று கருதப்படுகிறது.
மெய்யாகவே, கிறிஸ்தவரல்லாத ஜப்பானியர் மத்தியில் கிறிஸ்மஸ் வேர் ஊன்றி உள்ளது. உண்மை என்னவெனில், ஒரு பொருளங்காடித் தொடரினால் நடத்தப்பட்ட சுற்றாய்வில் 78 சதவீதத்தினர் தாங்கள் கிறிஸ்மஸுக்கு சிறப்பாக ஏதாவது செய்வதாகக் கூறினர். ஜனத்தொகையில் 1 சதவீதத்தினர் மட்டுமே கிறிஸ்தவத்தை நம்புவதாக உரிமைப்பாராட்டும் நாட்டில் இந்த விகிதமானது திணறவைக்கும் அளவு பெரியதாக இருக்கிறது. புத்த மதத்தினராகவோ அல்லது ஷின்டோ மதத்தினராகவோ தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள் ஒரு “கிறிஸ்தவ” விடுமுறையைக் களிப்பதை மிகவும் சுலபமானதாக உணருகின்றனர். பிரசித்திப் பெற்ற ஷின்டோ ஐஸி கோயில், அதனுடைய பஞ்சாங்க அட்டவணையில், ஜப்பானிய பண்டிகைகளுடன், டிசம்பர் 25-ஐ “கிறிஸ்துவின் பிறந்தநாள்” என்று வரிசைப்படுத்துகின்றது. என்றபோதிலும் கிறிஸ்தவரல்லாதோர் கிறிஸ்மஸின் போது களியாட்டங்களில் ஆழ்ந்து போயிருக்கும் காட்சிகள் பின்வரும் கேள்வியை எழுப்புகிறது:
கிறிஸ்மஸ் யாருடைய கொண்டாட்டம்?
வெப்ஸ்டரின் புதிய ஒன்பதாவது காலேஜியேட் அகராதி கிறிஸ்மஸுக்கு, “கிறிஸ்துவின் பிறப்பை நினைவுபடுத்தும் . . . டிசம்பர் 25-ல் கொண்டாடப்படும் ஒரு கிறிஸ்தவ விழாவிருந்து” என்று விளக்கமளிக்கிறது. “கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவின் பிறந்த நாளில் தங்களுடைய சந்தோஷ உணர்வில் ஒன்றுபடும்” ஒரு காலமாக அது நோக்கப்படுகிறது.
கிறிஸ்மஸை ஒரு சுத்தமான மதப் பண்டிகையாக கொண்டாடுபவர்கள், அந்த நாளை களியாட்டங்களினாலும், அன்பளிப்புகள் கொடுக்கப்பதினாலும் அதை உலகப்பிரகாரமாக ஆக்குபவர்களைக் காணும்போது, அது திகைப்பூட்டுவதாகவும் தேவதூஷணமாகவும்கூட காண்கின்றனர். “ஜப்பானில் மொத்த வியாபாரமயத்தின் உச்சத்தை நாம் கொண்டு இருக்கிறோம்: கிறிஸ்து இல்லை” என்று ஜப்பானில் வாழும் ஓர் அமெரிக்கர் எழுதினார். ஜப்பானியர்களின் கிறிஸ்மஸ் பற்றி வேறொருவர் இவ்விதமாக எழுதுகிறார்: “மேற்கத்திய கண்ணிற்கு, காணாமல் போனது வான்கோழியல்ல (ஜப்பானிய அங்காடிகளில் அது சாதாரணமாகக் காணப்படுவதில்லை), ஆனால் மிகத் தேவையான பொருளான அந்த ஆவியே.”
அப்படியென்றால், அந்தக் கிறிஸ்மஸ் ஆவி என்ன? அது கிறிஸ்மஸ் பாடல்களும், இலையுதிர் பசுங்கொடிகளும் அநேகர் சர்ச்சுக்கு தங்களுடைய ஒரே வருடாந்தர யாத்திரையில் பயன்படுத்தும் மெழுகுவர்த்திகளுடனும் கூடிய சர்ச் ஆராதனையின் சூழமைவா? அல்லது அநேகரைத் தாராளகுணமுடையவர்களாக்கும் அன்பு, நல்ல மகிழ்ச்சி மற்றும் அன்பளிப்பு கொடுத்தலா? போர் வீரர்கள் சில நாட்கள் “பூமியில் சமாதானத்தை” அனுசரிப்பதால் போர்முனையில் நிலவும் அமைதியா?
வியப்பூட்டும் வண்ணமாக, அநேக நேரங்களில் கிறிஸ்மஸ் ஆவி வீட்டு முனையிலும்கூட அமைதியை கொண்டுவருவதில்லை. இங்கிலாந்தில் 1987-ல் செய்யப்பட்ட சுற்றாய்வின்படி, அந்த வருடத்தில் கிறிஸ்மஸ் சமயத்தில் சுமார் 70 சதவீத பிரிட்டன் வீடுகளில் ‘உள்நாட்டு போர்‘ தொடங்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. பணத்தைப் பற்றிய சண்டைதான் முக்கிய காரணமாகும். அதிகமாக குடித்து, குடும்பத்தில் ஒருவருடைய பாகத்தைச் செய்யாது இருப்பதும் சண்டைக்கு வழிநடத்துகிறது.
“கிறிஸ்மஸின் உண்மையான அர்த்தத்தைப் பற்றி நாம் எதையோ தவறவிடுகிறோமா என நான் ஆச்சரியப்படுகிறேன்” என்று எழுதுகிறார் கிறிஸ்மஸ் காலத்தில் சமீபத்தில் தன் வீட்டிற்குச் சென்று வந்த ஜப்பானில் வசிக்கும் ஒரு மேற்கத்தியர். “ஒவ்வொரு டிசம்பர் 25-ம் வெகு காலத்திற்கு முன்னான அந்தப் பழையபாணி கிறிஸ்மஸுக்கு—மரங்களை வணங்குவதாலும், சிற்றின்பக் களியாட்டுகளை நடத்துவதாலும் கொண்டாடப்பட்ட அந்தப் புறமத விழாவிற்கு—திரும்பிப் போகமாட்டோமா என்ற விழைவை நான் உணர்கிறேன். நாம் இன்னமும்—புல்லுருவிகளையும், இலையுதிர்காலப் பசுங் கொடிகளையும், ஊசியிலை மரங்களையும் இவை போன்ற—புறமத அணிகலன்களையும் கொண்டிருக்கிறோம், ஆனால் கிறிஸ்தவர்களால் கடத்தப்பட்டு, ஒரு மத விழாவாக மாற்றப்பட்டதிலிருந்து கிறிஸ்மஸானது அதேவிதமாக எப்போதும் இருக்கவில்லை.”
மறுக்கமுடியாதபடி, கிறிஸ்மஸ் ஒரு புறமத விடுமுறை நாள். தி உவர்ல்டு புக் என்சைக்ளோபீடியா, ஆதி கிறிஸ்தவர்கள் “எவருடையப் பிறந்தநாளையும் கொண்டாடுவது ஒரு புறமதப் பழக்கம் என்று கருதியதால்” அவர்கள் கிறிஸ்மஸ் கொண்டாடவில்லை என்று சொல்கிறது. களியாட்டும் அன்பளிப்புகளைப் பரிமாற்றம் செய்வதும் புறமத விழாக்களான சாட்டர்னேலியா மற்றும் வருஷபிறப்பில் ஆரம்பமானது.
கிறிஸ்மஸ் அடிப்படையில் புறமதக் காரியமாக இருப்பின், உண்மை கிறிஸ்தவர்கள், கிறிஸ்மஸ் கிறிஸ்தவர்களுக்குரியதா என்ற கேள்வியைக் கேட்க வேண்டும். கிறிஸ்துவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தைக் குறித்து பைபிள் என்ன சொல்கிறது என்று நாம் பார்ப்போம். (w91 12/15)
[பக்கம் 4-ன் பெட்டி]
கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின் ஆரம்பம்
துல்லியமான விவரங்கள் தொல்பழமையில் மறைந்து போனாலும், பொ.ச. 336-ற்குள் ரோமன் சர்ச்சினால் ஒரு வகையான கிறிஸ்மஸ் கொண்டாடப்பட்டு வந்தது என்று தெரிகிறது. “சூரிய கடவுளுக்கு எடுக்கப்பட்ட பெரிய விழாவை பின்னிடத்துக்கு தள்ளுவதற்காகவே கிறிஸ்மஸ் தேதி வேண்டுமென்றே டிசம்பர் 25 ஆக முடிவு செய்யப்பட்டது” என்று தி நியு என்சைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா விளக்குகிறது. ரோம சாட்டர்நேலியா, பனிக்கால கதிர்த்திருப்பத்தின் கெல்ட்டிய மற்றும் ஜெர்மன் விருந்துகளின் போது புறமதஸ்தர்கள் சிற்றின்ப கேளிக்கைக்க் கூத்தில் ஈடுபட்ட ஒரு சமயமாக அது இருந்தது. “இந்தப் பண்டிகைகளை கிறிஸ்தவமாக்கும் சந்தர்ப்பத்தை சர்ச் பற்றிக்கொண்டது” என்பதாக தி நியு கேக்ஸ்டன் என்சைக்ளோபீடியா சொல்லுகிறது.