நீங்கள் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவீர்களா?
அநேக ஆட்கள், தாங்கள் மரிக்கையில் பரலோகத்துக்குச் செல்வர் என்று நம்புகிறார்கள். ஆனால் சிலர் பரவசம் என்றழைக்கப்படும் ஒன்றில் அவர்கள் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவர் என்று நினைக்கிறார்கள். உங்களுடைய எதிர்பார்ப்பு அதுவா?
பரவசம் என்பது “அவர்கள் எங்கு சென்றார்கள் என்பதற்கு எந்தத் தடயமுமில்லாத லட்சோபலட்ச மக்களின் திடீர் மறைவு!” இவ்வாறு ஒரு புராட்டஸ்டன்டு சுவிசேஷகர் சொன்னார். இறையியலின் சுவிசேஷ அகராதி [Evangelical Dictionary of Theology] பிரகாரம், “பரவசம்” என்ற பதம் “கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது சர்ச் அவரோடு ஐக்கியமாகிவிடுவதைக்” குறிக்கிறது.
இயேசு கிறிஸ்துவைச் சந்திப்பதற்காக நண்பர்களையும் குடும்ப அங்கத்தினர்களையும் பின்னால் விட்டுச்செல்வதைப்பற்றி யோசிக்கையில் அது நிலைகுலையச் செய்வதாக சிலர் காண்கின்றனர். என்றபோதிலும், பரவசம் நிகழ்ந்தே ஆகவேண்டும் என்று அநேகர் நம்புகின்றனர். அது நிகழுமா? அப்படியானல் எப்போது?
பரவசத்தைப்பற்றி வித்தியாசமான கருத்துக்கள்
பைபிள், வாக்களிக்கப்பட்ட கிறிஸ்துவின் ஆயிரவருட ஆட்சி ஆரம்பமாவதற்கு முன், “மிகுந்த உபத்திரவம்” என்றழைக்கப்படும் ஒரு காலப்பகுதி இருக்குமென்று காண்பிக்கிறது. இயேசு சொன்னார்: “உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்.” (மத்தேயு 24:21; வெளிப்படுத்துதல் 20:6) சிலர் மிகுந்த உபத்திரவத்துக்கு முன்பு பரவசம் நிகழும் என்று கருதுகிறார்கள். மற்றவர்கள் அதை மிகுந்த உபத்திரவத்தின்போது எதிர்பார்க்கிறார்கள். இன்னும் மற்றவர்கள் ஈடிணையற்ற அந்த வேதனைக்குப் பின்னர் பரவசம் நிகழும் என்று நம்புகிறார்கள்.
உபத்திரவத்துக்குப் பின் பரவசம் நிகழும் என்ற கருத்து 19-ம் நூற்றாண்டின் ஆரம்பகாலம் வரை பிரபலமாக இருந்தது. பின்னர், இங்கிலாந்தில் ஐயர்லாந்து சர்ச்சின் முன்னாள் பாதிரி ஜான் நெல்சன் டார்பீ தலைமையில் ஓர் இயக்கம் தோன்றியது. அவரும் கருத்து ஒற்றுமையுள்ள ஆங்கில நாட்டுத் திருச்சபை அங்கத்தினர்களும் பிரதரன் என்றழைக்கப்படலானார்கள். ப்ளைமெளத்தில் ஸ்தாபிக்கப்பட்ட சர்ச்சிலிருந்துகொண்டு டார்பீ ஸ்விட்ஸர்லாந்துக்கும் ஐரோப்பாவிலுள்ள மற்ற இடங்களுக்கும் பயணித்தார். கிறிஸ்து திரும்பிவருதல் இரண்டு கட்டங்களில் நிகழும் என்று அவர் உறுதியாகச் சொன்னார். அது ஓர் இரகசிய பரவசத்தோடு ஆரம்பமாகும், அதில் ஓர் ஏழு-ஆண்டு உபத்திரவக் காலம் பூமியைப் பாழாக்குவதற்கு முன்பாக “புனிதர்கள்” எடுத்துக்கொள்ளப்படுவார்கள். பின்னர் கிறிஸ்து இந்தப் புனிதர்கள் சகிதமாகக் காணக்கூடிய வகையில் தோன்றுவார். இவர்கள் சேர்ந்து பூமியின்மீது ஓர் ஆயிரமாண்டுகளுக்கு ஆட்சிசெய்வர்.
டார்பீ உலகத்திலிருந்து பிரிந்திருக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். அவருடைய அதே கருத்துக்களைக் கொண்டிருந்தவர்கள் எக்ஸ்குளூசிவ் பிரதரன் என்றழைக்கப்படலானார்கள். B. W. நியுட்டன், மிகுந்த உபத்திரவத்துக்கு முன்நிகழாத ஒரு பரவசத்தில் நம்பிக்கை வைத்த வித்தியாசமான ஒரு பிரிவை தலைமைத்தாங்கி நடத்தினார். மிகுந்த உபத்திரவத்துக்குப் பின் பரவசம் நிகழும் என்பதை ஆதரித்த அலெக்ஸாண்டர் ரீஸ், “இரகசிய-பரவச கோட்பாடுகள், கிறிஸ்துவின் வருகையில் நம்பிக்கைக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன,” என்று உறுதியாகச் சொன்னார்.
உபத்திரவத்துக்கு முன் பரவசம் நிகழும் என்ற கோட்பாட்டாளர்கள், நோக்குநிலையிலிருக்கும் இந்தக் கருத்துவேறுபாடு, “கிறிஸ்துவினுடைய வருகையின் சம்பந்தமாக [அவர்களுடைய] நம்பிக்கையின் தன்மையைப்” பாதிப்பதற்குப் போதிய அளவு வினைமையானதாக இருப்பதாக நம்புகிறார்கள். மற்றவர்கள், “பகுதியளவான பரவசக் கோட்பாட்டில்” நம்பிக்கை வைத்தவர்களாய், கிறிஸ்துவுக்கு மிக அதிகமாக உண்மையுடனிப்பவர்கள் முதலில் பரவசமடைவர் என்றும் அதிக உலகப்பிரகாரமாக இருப்பவர்கள் பின்னால் எடுத்துக்கொள்ளப்படுவர் என்றும் நம்புகின்றனர்.
அநேக சுவிசேஷத் தொகுதிகள் உண்மையுள்ள கிறிஸ்தவர்களின் அண்மையில் நிகழவிருக்கும் பரவசத்தை அறிவிக்கிறார்கள். இருப்பினும் வித்தியாசமானக் கருத்துக்களை முன்னிட்டுப் பார்க்கையில், பிரிட்டனின் ஈலிம் பெந்தெகொஸ்தே சர்ச் வெளியிட்டுள்ள ஒரு சிறுபுத்தகம் இவ்வாறு சொல்கிறது: “கர்த்தராகிய இயேசுவின் திரும்பிவருதலோடு சம்பந்தப்பட்ட சம்பவங்களின் பொதுத்தன்மையுள்ள முக்கிய குறிப்புகளை நாம் நம்புகிறபோதிலும் . . . , தனிப்பட்ட நபரின் திடநம்பிக்கைக்கு ஏற்ப தீர்க்கதரிசனத்துக்கு அர்த்தஞ்சொல்லுவதற்கு சுதந்திரம் அனுமதிக்கப்படுகிறது. அநேகர், சம்பவங்கள்தாமே தீர்க்கதரிசன நிகழ்ச்சிநிரலை வெளிப்படுத்திடட்டும் என்பதாக பொறுமையாகக் காத்திருந்து, கொள்கையில் உறுதியில்லாத ஒரு நிலைநிற்கையை ஏற்றிருக்கிறார்கள்.”
கடவுளுடைய ஏவப்பட்ட வார்த்தையாகிய பைபிளே எல்லா நம்பிக்கைகளின் உண்மைத்தன்மையையும் நாம் அளவிடுவதற்கானத் தராதரமாக இருக்கிறது. (2 தீமோத்தேயு 1:13; 3:16, 17) ஆகவே, அது பரவசத்தைப்பற்றி என்ன சொல்லுகிறது?