இடருதவி ஏற்பாடுகள் கிறிஸ்தவ அன்பைப் பிரதிபலிக்கின்றன
“சகோதரரிடத்தில் அன்புகூருங்கள்,” என்று அப்போஸ்தலன் பேதுரு தன் உடன் கிறிஸ்தவர்களை உந்துவித்தார். (1 பேதுரு 2:17) அத்தகைய அன்பு இன, சமூக, மற்றும் தேச எல்லைகளைத் தாண்டிச்சென்று, உண்மையான சகோதரத்துவத்துக்குள் மக்களை ஒன்றாக இணைக்கிறது. ஆரம்பகால கிறிஸ்தவர்கள் மத்தியில் பொருளாதாரத் தேவை ஏற்பட்டபோது, தேவையிலிருப்பவர்களுக்குப் பகிர்ந்தளிக்கும்படியாக அப்போஸ்தலரிடம் நன்கொடைகளைக் கொடுக்கும்படி அநேகரை அன்பு தூண்டியது. “சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது,” என்பதாக பதிவு கூறுகிறது.—அப்போஸ்தலர் 2:41-45; 4:32.
யெகோவாவின் சாட்சிகளின் நிர்வாகக் குழு, 1991-ன் கடைசியில், மேற்கு ஐரோப்பாவிலுள்ள உவாட்ச் டவர் சொஸையிட்டியின் பல கிளைஅலுவலகங்களுக்கு, முன்னாள் சோவியத் யூனியனின் பாகங்கள் உட்பட கிழக்கு ஐரோப்பாவிலுள்ள தேவையிலிருக்கும் சகோதரர்களுக்கு உணவு மற்றும் உடை கொடுக்கும்படியாக அழைப்புவிடுத்தபோது அத்தகைய அன்பு வெளிக்காட்டப்பட்டது. இதில் உட்பட்டிருந்த சில கிளைஅலுவலகங்களின் ஓர் அறிக்கைத் தொடரை இங்கே நாங்கள் அளிக்கிறோம்.
ஸ்வீடன்
டிசம்பர் 5, 1991-ம் நாள், இந்தத் தேவையை விளக்கும் ஒரு கடிதம் ஸ்வீடனிலுள்ள 348 சபைகளுக்கு அனுப்பப்பட்டது. அதற்கான பிரதிபலிப்பு உடனடியாக இருந்தது. சில நாட்களுக்குள், 15 டன் மாவு, சமைக்கும் எண்ணெய், டப்பிகளில் அடைக்கப்பட்ட மாட்டிறைச்சி, உலர்ந்த பால், மற்றும் இதுபோன்ற சாமான்கள் ஏற்றப்பட்ட முதல் சரக்குவண்டி ரஷ்யாவிலுள்ள செ. பீட்டர்ஸ்பர்க்கை நோக்கிச் சென்றது. உள்ளூர் யெகோவாவின் சாட்சிகள் அந்த லாரியிலிருந்து சாமான்களை இறக்கி, விரைவில் 750 பொதிகளைத் தேவையிலிருந்தவர்களுக்குப் பகிர்ந்தளித்தனர். பின்னர், இன்னும் இரண்டு சரக்குவண்டிகள் ரஷ்யாவுக்கு உணவு கொண்டுச் சென்றது. மொத்தத்தில், 51.5 டன் ஸ்வீடனிலிருந்து அனுப்பப்பட்டது.
உடைகளையும் ஷூக்களையும் நன்கொடையாக அளிப்பதற்கான மனமுவந்தத் தன்மை எல்லா எதிர்பார்ப்புகளுக்கும் மேலோங்கி நின்றது. விரைவில், ராஜ்ய மன்றங்களில் உடை பொதிகளின் அடுக்குகள் குவிந்துவிட்டன. அநேக கிறிஸ்தவர்கள் தங்கள் சொந்த அலமாரிகளிலிருந்து உடைகளை நன்கொடையாக அளித்தனர். இன்னும் மற்றவர்கள் புதிய உருப்படிகளை வாங்கினர். ஒரு சகோதரர் ஐந்து ஸூட்டுகளை வாங்கினார். ஆச்சரியப்பட்ட கடைக்காரர், அதன் நோக்கத்தை அறிந்தபோது, அவர் இன்னும் ஐந்து ஸூட்டுகளை நன்கொடையாக அளித்தார். இன்னொரு சகோதரர் ஒரு பெட்டி காலுறைகள், கையுறைகள் மற்றும் ஸ்கார்ஃப்களை வாங்கினார். அவற்றிற்கான நோக்கத்தை விவரித்தபோது, அந்தக் கடையின் சொந்தக்காரர், 30 புதிய ஸூட்டுகளை இரண்டின் விலைக்கு அளித்தார். ஒரு விளையாட்டு அணிகலன்களின் கடைக்காரர் 100 ஜோடி ஷூக்களையும் பூட்ஸ்களையும் நன்கொடையாக அளித்தார்.
பின்பு, இந்த எல்லா சாமான்களும் பிரித்து, திரும்பவும் பொதிகளாக்கப்பட்டு, ஏற்றி அனுப்பப்படுவதற்காக கிளைஅலுவலகத்திற்குக் கொண்டுவரப்பட்டது. உடைகள்—40 சரக்குவண்டிகளில் பிடிக்கும் அளவிற்கு சமமானது—கிளைஅலுவலகத்தின் மிகுதியான இடங்களை நிரப்பியது! அவற்றை ஆண்களுக்கு, பெண்களுக்கு, பிள்ளைகளுக்கு என்று குவியல்களாக பிரித்து, அட்டைப்பெட்டிகளில் வைத்துக்கட்டுவதற்கு சகோதர சகோதரிகள் பல வாரங்களாக வேலை செய்தனர். ரஷ்யா, உக்ரேன் மற்றும் எஸ்டோனியாவிற்கு உடைகளைக் கொண்டுச்செல்ல பதினைந்து தனித்தனி சரக்குவண்டிகள் பயன்படுத்தப்பட்டன.
சங்கத்தின் லாரிகளை எட்டுமுறை முன்னாள் சோவியத் யூனியனுக்கு ஓட்டிச்சென்ற ஒரு சகோதரர் சொன்னார்: “சென்றடைந்த இடங்களில் நம்முடைய சகோதரர்கள் கொடுத்த வரவேற்பு ஒரு பெரிய பரிசாகும். அவர்கள் கட்டியணைத்து எங்களை முத்தமிட்டார்கள்; தங்களுடைய பற்றாக்குறையின் மத்தியிலும், கிறிஸ்தவ தாராள குணத்தைப்பற்றி எங்களுக்கு ஒரு நல்ல பாடத்தைக் கற்பித்தார்கள்.”
பின்லாந்து
பின்லாந்தின் கடுமையான பின்னடைவுநிலை, பரவலான வேலையின்மை மற்றும் பொருளாதார பிரச்னைகள் மத்தியிலும், பின்லாந்திலுள்ள 18,000 சகோதரர்கள் முன்னாள் சோவியத் யூனியனிலுள்ள தங்கள் சகோதரர்களுக்கு உதவிசெய்ய மிகவும் மனமுவந்தவர்களாய் இருந்தனர். செ. பீட்டர்ஸ்பர்க், எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா மற்றும் கலினின்க்ராட்டிற்கு அவர்கள் 4,850 அட்டைப்பெட்டிகளில் 58 டன்னிற்கும்மேல் உணவை அனுப்பினர். அவர்கள் லாரிகளிலுள்ள காலி இடங்களை 12 கனசதுர மீட்டர் துணியால் நிரப்பினர். சுமார் 25 பயன்படுத்தப்பட்ட கார்களும் வேன்களும் ராஜ்ய வேலையில் பயன்படுத்தப்படுவதற்காக நன்கொடையாக அளிக்கப்பட்டன.
சில உணவு பெட்டிகள், செ. பீட்டர்ஸ்பர்க் பகுதியிலுள்ள ஸ்லான்டீ என்ற 14 பிரஸ்தாபிகளை உடைய சபையைச் சென்றடைந்தன. அவர்கள் தங்களுடைய மிகுந்த போற்றுதலை ஒரு கடிதத்தில் தெரிவித்தனர். “எங்களுடைய சபையில் பத்து வயதான சகோதரிகளை நாங்கள் கொண்டிருக்கிறோம். எங்களில் அநேகர் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருப்பதால் நீண்ட வரிசைகளில் பல மணிநேரங்கள் உணவிற்காகக் காத்துநிற்க முடிவதில்லை. இருப்பினும், எங்களுடைய பரலோக தகப்பன், இந்தக் கஷ்டமான காலங்களில் நாங்கள் சோர்ந்துபோவதற்கு எந்தக் காரணத்தையும் கொடுப்பதில்லை; ஆனால் எங்களுடைய இருதயங்களைச் சந்தோஷத்தால் நிரப்புகிறார். நாங்கள் 43 வீட்டு பைபிள் படிப்புகளை நடத்துகிறோம்.” செ. பீட்டர்ஸ்பர்க்கிலுள்ள ஒரு சகோதரி தன்னுடைய இடருதவி பொட்டலத்தைப் பெற்றதும், அதைத் திறப்பதற்குமுன் இரண்டு மணிநேரங்கள் அழும் அளவிற்கு அசைவிக்கப்பட்டாள்.
டென்மார்க்
பால்டிக் கடலின் நுழைவாயிலில் இருக்கும் இந்தச் சிறிய தேசத்தில், சுமார் 16,000 யெகோவாவின் சாட்சிகள் ஒன்றுசேர்ந்து, 4,200 பெட்டிகளில் 64 டன் உணவு, 4,600 பெட்டிகளில் உயர்ரக துணிகள், மற்றும் 2,269 ஜோடி புது ஷூக்களையும் கொள்ளும் 19 லாரிகளை உக்ரேனுக்கு அனுப்பினர். அந்தக் கிளைஅலுவலகம் ஐந்து சரக்குவண்டிகளைப் பயன்படுத்துமாறு ஜெர்மனியிலுள்ள ஒரு சகோதரர் அனுமதித்தார்; பின்னர் அவற்றை உக்ரேன் சகோதரர்களுக்கு நன்கொடையாக அளித்தார். வீடு திரும்பும்போது, அவர்களில் ஓர் ஓட்டுநர் சொன்னார்: “நாங்கள் கொண்டுச்சென்றதைவிட அதிகத்தைக் கொண்டுவந்திருக்கிறோம் என்பதாக நாங்கள் கண்டுபிடித்தோம். உக்ரேனிய சகோதரர்களால் காண்பிக்கப்பட்ட அன்பும் சுய தியாக ஆவியும் எங்கள் விசுவாசத்தை மிகவும் பலப்படுத்தியது.”
முன்னாள் சோவியத் யூனியனில் ஓட்டுநர்கள், பாதையில் திருடர்களைக் குறித்து கவனமாக இருக்கவேண்டியதாய் இருந்தது. டென்மார்க்கிலுள்ள ஒரு லாரி செல்வதற்கு சில நாட்களுக்கு முன்னர், அந்தப் பாதையில் ஒரு கொள்ளை சம்பவித்திருந்தது. மற்றொரு இடருதவி அமைப்பிலிருந்து பயணப்பாதுகாப்பிற்காக ஒன்றாகச்சேர்ந்து உணவு கொண்டுச்சென்ற ஐந்து லாரிகள் திருடர்களால் ஹெலிக்காப்டர்கள் மற்றும் இயந்திரக் கைத்துப்பாக்கிகளால் சுட்டு நிறுத்தப்பட்டன. அவர்கள் ஓட்டுநர்களை ரோட்டோரத்தில் விட்டுவிட்டு எல்லா ஐந்து லாரிகளையும் எடுத்துச்சென்றனர். அத்தகைய ஆபத்தின் மத்தியிலும், டென்மார்க் கிளைஅலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்ட எல்லா பொருட்களும் சகோதரர்களைப் பத்திரமாகச் சென்றடைந்தது. அதற்குப் பதிலாக, அதிக கஷ்டத்துடன் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பின்வரும் குறிப்பை ஓர் ஓட்டுநர் தன்னாட்டிற்கு எடுத்துச்செல்லும்படியாக அவர்கள் கொடுத்தனர்: “அன்புள்ள டென்மார்க் சகோதர சகோதரிகளே: நாங்கள் உங்கள் உதவியைப் பெற்றுக்கொண்டோம். யெகோவா உங்களுக்குப் பலனளிப்பார்.”
நெதர்லாந்து
நெதர்லாந்து கிளைஅலுவலகம் 2,600 பொட்டலங்களில் 52 டன் உணவை அனுப்பியது. இரண்டு வெவ்வேறு லாரி தொகுதிகள் மூலமாக அவை உக்ரேனில் வழங்கப்பட்டது. ஒவ்வொரு தடவையும் அந்த ஆறு லாரிகள் அங்கேயே விட்டுவிடப்பட்டன; ஏனென்றால் அவை ஜெர்மனியிலுள்ள சகோதரர்களால் கிழக்கிலுள்ள ராஜ்ய வேலைக்கென்று நன்கொடையாக அளிக்கப்பட்டன. உக்ரேன் சகோதரர்கள், உணவின் பெரும்பகுதியை மாஸ்கோ, ஸைபீரியா, மற்றும் தேவை அதிகமிருந்த இடங்களுக்கு அனுப்பிவைத்தனர். மேலுமாக, டச் சகோதரர்களால் 736 கனசதுர மீட்டர் அளவுள்ள உடைகளும் ஷூக்களும் நன்கொடை அளிக்கப்பட்டன. அவை உக்ரேனிலுள்ள லெவீஃப்பிற்கு 11 லாரிகளில் ஒரு தனியார் காரின் பாதுகாப்புத்துணையுடன் கொண்டுவரப்பட்டது.
ஜெர்மனி மற்றும் போலந்து வழியாக ஒரு நீண்ட பயணத்திற்குப்பின், உக்ரேனின் சுங்கத்தைச் சுமூகமாகக் கடந்து சென்று அந்தத் தொகுதி லெவீஃப்பின் புறநகர் பகுதிகளை விடியற்காலை மூன்று மணிக்கு சென்றெட்டியது. அந்த ஓட்டுநர்கள் பின்வருமாறு அறிக்கை செய்தனர்: “சிறிது நேரத்திற்குள், 140 சகோதரர்கள் அடங்கிய படை அந்த லாரிகளிலிருந்து சாமான்களை இறக்கும்படி வந்தனர். வேலையைத் துவங்கும் முன்னர், இந்த மனத்தாழ்மையான சகோதரர்கள் ஒன்றுசேர்ந்து ஒரு ஜெபம் செய்வதன்மூலம் யெகோவாவின்மேல் அவர்கள் சார்ந்திருந்ததைக் காண்பித்தனர். அந்த வேலை முடிந்ததும், அவர்கள் மறுபடியுமாக ஜெபத்தில் யெகோவாவுக்கு நன்றி சொல்வதற்காக ஒன்றுகூடினர். தங்களுக்கு இருந்த கொஞ்சத்திலிருந்து மிக அதிகத்தைக் கொடுத்த உள்ளூர் சகோதரர்களின் உபசரிப்பை அனுபவித்தபின், அவர்கள் எங்களைப் பிரதான சாலை வரைக் கொண்டுவந்துவிட்டு, எங்களிடமிருந்து விடைபெறும்முன் சாலையோரத்தில் ஒரு ஜெபம் செய்தனர்.
“வீட்டிற்குத் திரும்பும் அந்த நீண்ட பயணத்தின்போது, நாங்கள் நினைத்துப்பார்ப்பதற்கு அதிகம் இருந்தது—ஜெர்மனி மற்றும் போலந்து சகோதரர்கள், இன்னும் லெவீஃப் சகோதரர்களின் உபசரிப்பு, அவர்களுடைய பலமான விசுவாசம் மற்றும் ஜெப சிந்தை; அவர்கள் தாமே தேவையான சூழ்நிலைகளில் இருந்தபோதும் தங்கும் வசதிகள் மற்றும் உணவை அளிப்பதில் அவர்களுடைய உபசரிப்பு; அவர்களுடைய ஐக்கியம் மற்றும் நெருக்கத்தின் வெளிக்காட்டு; அவர்களுடைய நன்றியுணர்வு. அவ்வளவு தாராளமாகக் கொடுத்த எங்கள் நாட்டிலிருந்த சகோதர சகோதரிகளையும் நினைத்தோம்.”
ஸ்விட்ஸர்லாந்து
யாக்கோபு 2:15, 16-ஐ மேற்கோள்காட்டி, ஸ்விட்ஸர்லாந்து கிளைஅலுவலகம் தன்னுடைய அறிக்கையைத் துவங்குகிறது: “ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அநுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது, உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன?” அந்த அறிக்கை மேலும் தொடர்கிறது: “தேவையிலிருக்கும் சகோதரர்களுக்கு பொருள்சம்பந்தமாக உதவும்படியாக யெகோவாவின் சாட்சிகளின் நிர்வாகக் குழுவிடமிருந்து அழைப்பு வந்தபோது, இந்த வசனம் எங்கள் மனதிற்கு வந்தது.
“உடனடியாக ஒவ்வொருவரும் முழுமையாக ஈடுபட்டனர்! இரண்டே நாட்களில், 12 டன் உணவைக்கொண்ட 600 பொதிகள், உக்ரேனுக்கு அங்குள்ள வேலைக்காக ஜெர்மனியிலிருந்து நன்கொடையாக அளிக்கப்படுவதாய் இருந்த மூன்று லாரிகளில் அனுப்பப்பட்டன. எல்லாம் பத்திரமாக சென்றடைந்தன என்ற செய்தி இங்குள்ள சகோதரர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கியது. அதேநேரத்தில், சபைகள் துணிகளைத் திரட்டினர்; சீக்கிரத்தில் எங்கள் கிளைஅலுவலகம் அட்டைப்பெட்டிகள், ஸூட்கேஸ்கள் மற்றும் பைகளால் நிரம்பிவழிந்தது! குழந்தைகளுக்கான உடைகளைக் கொண்டிருந்தவைகளில், தொலைதூர வடக்கிலிருக்கும் தங்களுடைய அறியாத நண்பர்களுக்கென்று ஸ்விட்ஸர்லாந்து குழந்தைகளிடமிருந்து சில விளையாட்டுச் சாமான்களும் இருந்தன. பல சாக்கலேட் கட்டிகளும் துணிஅடுக்குகளின் இடையில் இடம் கொண்டிருந்தன.”
இவை யாவும் எவ்வாறு அவர்களுக்கு வழங்கப்படும்? அந்த அறிக்கை சொல்லுகிறது: “இரண்டு சரக்குவண்டிகளையும் நான்கு ஓட்டுநர்களையும் எங்களுக்குக் கொடுப்பதன்மூலம் பிரான்சிலுள்ள கிளைஅலுவலகம் எங்கள் உதவிக்கு வந்தது. இதோடுகூட, எங்களுடைய கிளைஅலுவலகத்திலிருந்து ஒரு லாரியும் உள்ளூர் சகோதரர்களுக்குச் சொந்தமான இன்னும் நான்கு லாரிகளும் அந்த 72 டன் பொருட்களை உக்ரேனுக்கு இழுத்துச் செல்வதற்குத் தேவைப்பட்டது.” அந்த 15 மீட்டர் நீளமான லாரி தொகுதி லெவீஃப் நிலையத்தைப் பத்திரமாகச் சென்றடைந்தது; அங்கு லாரிகளிலிருந்து சாமான்களை இறக்குவதற்காக நூற்றுக்கணக்கான உள்ளூர் சகோதரர்கள் காத்திருந்தனர். மொழி ஒரு தடங்கலாக இருக்கவில்லை ஏனென்றால் அவர்களுடைய முகங்கள் ஆழ்ந்த போற்றுதலைப் பிரதிபலித்தன என்பதாக அந்த ஓட்டுநர்கள் அறிவித்தனர்.
ஆஸ்திரியா
ஆஸ்திரியாவிலுள்ள சகோதரர்கள் 48.5 டன் உணவு, 5,114 அட்டைப்பெட்டிகளில் துணிகள் மற்றும் 6,700 ஜோடி ஷூக்களை உக்ரேனில் உள்ள லெவீஃப், ஊஸ்கெராட்டுக்கு அனுப்பினார்கள். அவர்கள் 7 டன் உணவு, 1,418 பெட்டிகளில் துணிகள், 465 ஜோடி ஷூக்களையும் முன்னாள் யுகோஸ்லாவியாவிலுள்ள ஒஸீஜெக், சரஜெவோ, பெல்கிரேட், மோஸ்டார், ஜாக்ரெப் ஆகிய இடங்களுக்கு அனுப்பினர். அந்தக் கிளைஅலுவலக அறிக்கை கூறுகிறது: “நாங்கள் சாமான்கள் ஏற்றப்பட்ட 12 சரக்குவண்டிகளை 34,000 கிலோமீட்டர் பிரயாணப்பட செய்தோம். ஒரு லாரி ஓட்டும் தொழிலைக் கொண்டிருக்கும் ஒரு சகோதரராலும் அவருடைய மகனாலும் இதில் பெரும்பகுதியான போக்குவரத்துச் செய்யப்பட்டது.”
உடைகளின் நன்கொடையைக்குறித்து அந்த அறிக்கை தொடர்கிறது: “ஓர் அசெம்பளி மன்றத்தை நாங்கள் மைய நிலையமாகப் பயன்படுத்தினோம். இடம்கொள்ளாமற்போகுமட்டும் ஒன்றன்பின் ஒன்றாக லாரிசரக்குகள் குவிந்துகொண்டே இருந்தன. மோசேயின் நாட்களில் இருந்ததைப்போலவே, இனிமேலும் கொண்டுவராதபடி மக்களைத் தடுக்கவேண்டியதாய் இருந்தது. (யாத்திராகமம் 36:6) யெகோவாவின் சாட்சிகளாக இல்லாத சிலருங்கூட நன்கொடையாக பணம் கொடுத்தனர், ‘ஏனென்றால்,’ அவர்கள் சொன்னார்கள், ‘இந்த வழியில், தேவையில் இருக்கும் ஆட்கள் அதைப் பெறுவார்கள் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம்.’ தேவையான பல அட்டைப்பெட்டிகளை உலக நிறுவனங்களிலிருந்து இலவசமாகப் பெற்றோம்.” எல்லாவற்றையும் பிரித்தெடுத்து அடுக்கிய சகோதர சகோதரிகள் 9 முதல் 80 வயதுவரையானவர்களாய் இருந்தனர். அவர்கள் ஒவ்வொரு ஸூட்டிற்கும் பொருத்தமான சட்டையையும் டையையும் வைப்பதற்குங்கூட முயன்றனர்.
அந்த அறிக்கை குறிப்பிடுகிறது: “ஆஸ்திரியா மற்றும் எல்லைகளிலுள்ள அதிகாரிகள், பல்வேறு இடருதவி போக்குவரத்துகளைக் கூடியதாக்குவதற்கும் குறைந்தளவு கஷ்டத்தில் சாமானங்களை வழங்குவதற்குத் தேவையான தாள்களைக் கொடுப்பதிலும் மிகவும் உதவியாய் இருந்திருக்கின்றனர்.”
இத்தாலி
ரோமிலிருந்த 188 டன் அளவு உணவு, இரண்டு பெரிய லாரி தொகுதிகளால் ஆஸ்திரியா, செக்கோஸ்லோவாகியா, போலந்து வழியாக முன்னாள் சோவியத் யூனியனுக்கு அனுப்பப்பட்டது. ஒவ்வொரு தொகுதியும் ஆறு ஓட்டுநர்கள், ஒரு மெக்கானிக், ஓர் ஆட்டோ எலக்டிரீஷியன், ஒரு மொழிபெயர்ப்பாளர், சரக்குகளை அனுப்பும் ஓர் ஏஜன்ட், ஒரு சமையற்காரர், ஒரு மருத்துவர், ஜீப்பில் ஒரு தொகுதி தலைவர், மற்றும் ஒரு கூடாரத்தை உடைய ஒரு சகோதரர் ஆகியோரை உட்படுத்தியது.
ஏழு நிறுவனங்களிலிருந்து உணவு பெறப்பட்டது. அந்தக் கிளைஅலுவலகம் அறிக்கை செய்கிறது: “இந்த முயற்சிக்கான காரணத்தை இந்த நிறுவனங்கள் கேட்டபோது, சிலர் இதில் பங்கெடுக்க விரும்பினர். பல நூற்றுக்கணக்கான கிலோகிராம் பாஸ்டா, அரிசி மற்றும் அவற்றை வைத்துக்கட்டுவதற்கான பெட்டிகளும் உலகப்பிரகாரமான நிறுவனங்களால் நன்கொடையாக அளிக்கப்பட்டன. இன்னும் மற்றவர்கள் லாரிகளுக்காக பனி டையர்களை அல்லது நன்கொடையாக பணம் கொடுக்க மனமுள்ளவர்களாக இருந்தனர்.
“இத்தாலியிலுள்ள சகோதரர்கள் உதவி செய்வதற்கான இந்த வாய்ப்பைப் போற்றினார்கள். பிள்ளைகளும் நன்கொடையளிக்க விரும்பினர். ‘ரஷ்யாவிலுள்ள சகோதரர்களுக்கு வானளாவ உயர்ந்த ஒரு டப்பா நிறைய சூரை மீனை’ வாங்க முடியும் என்று நினைத்து ஒரு ஐந்து வயது சிறுவன் ஒரு சிறிய நன்கொடையை அனுப்பினான். ஒரு சிறுமி, பள்ளியில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றதால் தன்னுடைய பெற்றோருக்கு ஓர் அன்பளிப்பை வாங்குவதற்காகத் தன்னுடைய தாத்தா பாட்டியிடமிருந்து பணத்தைப் பெற்றாள். ‘ஆனால்,’ அவள் எழுதினாள், ‘சாப்பிடுவதற்கு நான் கொண்டிருக்கும் அநேக நல்ல காரியங்களை என்னுடைய சகோதரர்கள் கொண்டிருக்கவில்லை என்பதை உணர்ந்ததும், அந்தச் சகோதரர்களுக்கு உதவி செய்வதே என்னுடைய பெற்றோருக்கு நான் வாங்கிக்கொடுக்கக்கூடிய மிகச் சிறந்த அன்பளிப்பாக இருக்கும் என்று நினைத்தேன்.’ அவள் ஒரு குறிப்பிடத்தக்க தொகையான பணத்தை நன்கொடை பெட்டியில் போட்டாள். ‘நான் அதிகமான பணத்தை அனுப்பும்படியாக தொடர்ந்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவேன் என்று நம்புகிறேன்,’ என்று அவள் சொன்னாள்.” உக்ரேனிலுள்ள சகோதரர்களிடமிருந்து வந்த அனலான போற்றுதல் கடிதங்கள், இத்தாலிய சகோதரர்களின் அநேக போற்றுதல் வார்த்தைகள், அந்தப் பொருட்களை தயாரித்து கொண்டுச்சேர்ப்பதில் ஏற்பட்ட நல்ல அனுபவங்கள் ஆகியவை உள்ளத்தை உருக்குவதாயும், உற்சாகமூட்டுவதாயும், ஐக்கியப்படுத்துவதாயும் இருந்ததாகக்கூறி அந்தக் கிளைஅலுவலக அறிக்கை முடிகிறது.
ஆயிரக்கணக்கான மாநாட்டுப் பிரதிநிதிகளுக்கு உணவு
முன்னாள் சோவியத் யூனியனில் யெகோவாவின் சாட்சிகளின் முதல் சர்வதேச மாநாடு ரஷ்யாவிலுள்ள செ. பீட்டர்ஸ்பர்க்கில் கீராவ் ஸ்டேடியத்தில், ஜூன் 28-30, 1992-ல் நடைபெற்றது. மைல்கல்லாக அமைந்த “ஒளி கொண்டுச்செல்வோர்,” என்ற பொருளை உடைய இந்த மாநாட்டிற்கு 28 நாடுகளிலிருந்து 46,200 பிரதிநிதிகள் வந்திருந்தனர். “சகோதரரிடத்தில்” கிறிஸ்தவ அன்பைக் காண்பிப்பதற்கு அது இன்னொரு வாய்ப்பைக் கொடுத்தது.—1 பேதுரு 2:17.
மாநாட்டின்போது உட்கொள்வதற்காக, டென்மார்க், பின்லாந்து, ஸ்வீடன் மற்றும் மேற்கு ஐரோப்பாவிலுள்ள மற்ற நாடுகளிலிருந்து டன் கணக்கான உணவு, முன்னாள் ஐ.சோ.சோ.கு.-லிருந்து வந்த ஆயிரக்கணக்கான மாநாட்டுப் பிரதிநிதிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. முடிவான நிகழ்ச்சிக்குப்பின், அவர்கள் மாநாட்டைவிட்டுச் சென்றபோது, அவர்களது வீடுதிரும்பும் பிரயாணத்திற்காக உணவு பொருட்களடங்கிய ஒரு பொட்டலம் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.
இங்கு குறிப்பிடப்பட்ட அறிக்கைகள், கொடுத்தல் ஒரு பக்கமாக—கிழக்கு நோக்கி—மட்டுமே இருக்கவில்லை என்பதைக் காட்டுகின்றன. கொடுத்தலில் ஒரு பரிமாற்றம் இருந்தது. உணவும் துணிகளும் கிழக்கு நோக்கி, ஆம், ஆனால் மேற்கு நோக்கி அழுத்தங்கள் மற்றும் கஷ்டங்களாலான பத்தாண்டுகளில் இருந்த ஆயிரக்கணக்கான யெகோவாவின் வணக்கத்தாரின் விடாமுயற்சியையும் உண்மைத்தன்மையையும் பிரதிபலிக்கும் விசுவாசத்தைத் தூண்டும் எண்ணிலடங்கா அனுபவங்களும் இருதயத்திற்கு அனலூட்டும் வார்த்தைகளுமாக இருந்தன. இவ்வாறாக, இரு பக்கத்தாரும் இயேசுவின் வார்த்தைகளின் உண்மையை அனுபவித்தனர்: “வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்.”—அப்போஸ்தலர் 20:35.
[பக்கம் 21-ன் படம்/வரைப்படம்]
1. பின்லாந்திலிருந்து: செ. பீட்டர்ஸ்பர்க், ரஷ்யா; டல்லின் மற்றும் டார்டு, எஸ்டோனியா; ரிகா, லாட்வியா; வில்னியஸ் மற்றும் கெளனஸ், லிதுவேனியா; கலினின்க்ராட், ரஷ்யா; பீட்ரோஸவோட்ஸ்க், கரீலியா
2. நெதர்லாந்திலிருந்து: லெவீஃப், உக்ரேன்
3. ஸ்வீடனிலிருந்து: செ. பீட்டர்ஸ்பர்க், ரஷ்யா; லெவீஃப், உக்ரேன்; நைவின்னமிஸ்க், ரஷ்யா
4. டென்மார்க்கிலிருந்து: செ. பீட்டர்ஸ்பர்க், ரஷ்யா; லெவீஃப், உக்ரேன்
5. ஆஸ்திரியாவிலிருந்து: லெவீஃப், உக்ரேன்; பெல்கிரேட், மோஸ்டார், ஒஸிஜெக், சரஜெவோ, ஜாக்ரெப் (முன்னாள் யுகோஸ்லாவியா)
6. ஸ்விட்ஸர்லாந்திலிருந்து: லெவீஃப், உக்ரேன்
7. இத்தாலியிலிருந்து: லெவீஃப், உக்ரேன்
[பக்கம் 23-ன் படங்கள்]
துணிகளையுடைய அட்டைப் பெட்டிகள் ஸ்வீடன் கிளை அலுவலகத்தில்
இடருதவி பொருட்களை ஏற்றுதல்
ஒரு பொட்டலத்திலுள்ள உணவு பொருட்கள்
டென்மார்க்கிலிருந்து பேகன் மற்றும் ஹாம்
11 லாரிகள் மற்றும் 1 காரைக் கொண்ட தொகுதி
பொதிகளும் ஸூட்கேஸ்களும் ஆஸ்திரியா கிளைஅலுவலகத்தில்
லெவீஃப், உக்ரேனில் லாரியிலிருந்து சுமைகளை இறக்குதல்