ஒரு மேம்பட்ட உலகம்—அருகாமையில்!
“பரதீஸிற்கான பேராவல், மனிதர்களின் மனங்களில் ஓயாது தோன்றும் பலமான பேராவல்களில் உள்ளடங்குகிறது. இது எல்லாவற்றிலும் மிகவும் பலமானதும் உறுதியாக நிலைத்திருப்பதுமாய் இருக்கக்கூடும். மதச் சார்பான வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் பரதீஸிற்கான ஒரு குறிப்பிட்ட ஏக்கம் காணப்படுகிறது,” என்று தி என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் ரிலிஜன் சொல்கிறது.
இனிமேலும் தொடர்ந்து நிலைத்திராத ஒரு சிறந்த ஆரம்ப நிலையைக் குறித்துப் புலம்புவது போன்று, ஒரு மேம்பட்ட உலகில் வாழ்வதற்கான ஆசையை எல்லா பண்பாடுகளும் பொதுவாகக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. இது ஓர் ஆரம்ப பரதீஸின் சாத்தியத்தைக் குறிப்பிடுகிறது, ஆனால் எங்கே? தாயினுடைய கருப்பையின் இழக்கப்பட்ட பாதுகாப்பை மீண்டும் பெறுவதற்கான விருப்பத்தை இந்தப் பலமான ஆவல் வெளிக்காட்டுவதாக ஓர் உளநிலை மருத்துவ ஆய்வாளர் சொல்லக்கூடும். எனினும், இந்த விளக்கம், மதத்தின் வரலாற்றை ஆராயும் அறிஞர்களுக்கு நம்பத்தக்கதாக இல்லை.
“பரதீஸிற்கான பேராவல்”—ஏன்?
சிலர் குறிப்பிடுவதுபோல், அப்படிப்பட்ட பேராவல் இருப்பது, மனித வாழ்க்கையின் கஷ்டங்களையும் நிலையற்ற இயல்பையும் அதிக சகிக்கத்தக்கதாக்க மட்டுமே உதவுகிறதா? அல்லது வேறொரு விளக்கம் இருக்கிறதா?
ஒரு மேம்பட்ட உலகிற்காக ஏன் மனிதவர்க்கம் ஏங்குகிறது? எவ்வளவு எளிமையாக இருக்கிறதோ அவ்வளவு தெளிவாகவும் இருக்கும் ஒரு விளக்கத்தைப் பைபிள் அளிக்கிறது: மனிதவர்க்கம் ஒரு மேம்பட்ட உலகிலிருந்து வருகிறது! ஓர் ஆரம்ப பரதீஸ் நிஜமாகவே இருந்தது. மத்திய கிழக்கிலுள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியில் அமைந்திருந்த ‘ஒரு தோட்டமாக’ கடவுளுடைய வார்த்தை அதை விவரிக்கிறது; அது “பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும்” உடையதாய் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தது. அதைப் பராமரிக்கும்படி கடவுள் முதல் மானிட தம்பதியிடம் ஒப்படைத்தார். (ஆதியாகமம் 2:7-15) மனிதர்கள் உண்மையாகவே மகிழ்ச்சியாக இருந்திருக்கக்கூடிய ஒரு சிறந்த சூழமைவாக அது இருந்தது.
அந்தப் பரதீஸிய நிலைமைகள் ஏன் தொடர்ந்து நிலைத்திருக்கவில்லை? முதலில் ஓர் ஆவி சிருஷ்டியின், பின்னர் அந்த மானிட தம்பதியின் கலகத்தின் காரணமாகவே. (ஆதியாகமம் 2:16, 17; 3:1-6, 17-19) இவ்வாறாக, மனிதன் பரதீஸை மட்டும் அல்ல, பரிபூரணம், ஆரோக்கியம், முடிவில்லாத வாழ்க்கை ஆகியவற்றையும் இழந்துவிட்டான். தொடர்ந்து வந்த நிலைமைகள் நிச்சயமாகவே மனித வாழ்க்கையை முன்னேற்றுவிக்கவில்லை. மாறாக, இது நாம் தற்போது காண்கிற எக்காலத்திலும் மோசமான நிலைக்கு படிப்படியாகச் சீரழிந்திருக்கிறது.—பிரசங்கி 3:18-20; ரோமர் 5:12; 2 தீமோத்தேயு 3:1-5, 13.
பரதீஸிற்கான தேடுதல்—ஒரு கருத்தின் வரலாறு
நினைத்துப்பார்க்கக்கூடியபடி, “பரதீஸிற்கான பேராவல்” மிக நீண்ட ஒரு சரித்திரத்தை உடையதாய் இருக்கிறது. முழு பிரபஞ்சத்திலும் இசைவு ஆட்சிசெய்த ஒரு காலத்தைச் சுமேரியர்கள் நினைவுகூர்ந்தனர்: “எந்தப் பயமும், எந்தத் திகிலும் இருக்கவில்லை, மனிதன் எந்தப் போட்டியாளனையும் கொண்டிருக்கவில்லை. . . . முழு பிரபஞ்சமும், மக்கள் ஒத்திசைவாக, என்லிலுக்கு ஒரே மொழியில் துதி பாடினர்,” என்று பண்டைய மெஸபெட்டேமிய கவிதை ஒன்று நினைவுபடுத்தியது. சிலர், பண்டைய எகிப்தியர்களைப்போல், தங்களுடைய மரணத்திற்குப்பின் ஒரு மேம்பட்ட உலகைச் சென்றடையலாம் என நம்பினர். ஆரூவின் நிலங்கள் என்று பெயரிடப்பட்டிருந்ததை ஓர் அழியாத ஆத்துமா சென்றடைந்தது என்று அவர்கள் நம்பினார்கள். ஆனால் குறைந்தபட்சம் ஆரம்பத்திலாவது, இந்த நம்பிக்கை உயர்குடியாட்சி வகுப்பினருக்கு மட்டுமே திறந்துவைக்கப்பட்டதாய் இருந்தது; ஏழ்மையானவர்கள் பேரின்பமான ஓர் உலகை சென்றடையலாமென கனவிலும் நினைக்க முடியாது.
ஒரு வித்தியாசப்பட்ட மதப்பகுதியில், இந்துக்கள் ஒரு மேம்பட்ட உலகின் காலம் (யுகம்) வருவதற்காக நூற்றாண்டுகளாகக் காத்திருந்திருக்கின்றனர். இந்து போதனைகளின்படி, நான்கு யுகங்கள் ஒரு தொடர்ச்சியான சுழற்சியில் திரும்பத் திரும்ப வருகின்றன; நாம் தற்போது மிகவும் மோசமானதில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். கவலைக்குரியவிதத்தில், இந்தக் கலி யுகம் (இருண்ட காலம்), அதன் எல்லா துன்பங்கள் மற்றும் துன்மார்க்கத்துடன், சிலர் சொல்லுகிறபடி, 4,32,000 வருடங்கள் அளவு நீண்டதாகத் தொடர்ந்திருக்கும். இருந்தபோதிலும், உண்மையுள்ள இந்துக்கள் பொற்காலம், கிருத யுகம் வருமென காத்திருக்கின்றனர்.
மறுபட்சத்தில், கிரேக்கர்களும் ரோமர்களும், அட்லான்டிக் பெருங்கடலிலுள்ள கற்பனையான வளம்பொருந்திய தீவுகளை அடைவதுபற்றி கனவு கண்டனர். மேலும் ஹிஸியட், வர்ஜல், ஆவெட் போன்ற பல எழுத்தாளர்கள், ஒரு மகத்தான ஆரம்ப பொற்காலத்தைப்பற்றி பேசினர்; அது என்றோ ஒரு நாள் மீண்டும் நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையுடன் பேசினர். பொ.ச.மு. முதல் நூற்றாண்டின் கடைசியில், லத்தீன் கவிஞரான வர்ஜல், ஒரு புதிய மற்றும் நிரந்தரமான ஐடாஸ் ஆரியா (பொற்காலம்) சீக்கிரத்தில் வரப்போவதாக முன்னறிவித்தார். பின்தொடர்ந்துவந்த நூற்றாண்டுகளில், “குறைந்தது பதினாறு ரோம பேரரசர்கள், தங்களுடைய ஆட்சிகள் பொற்காலத்தைத் திரும்ப நிலைநாட்டியிருந்ததாக உரிமைபாராட்டினர்” என்று தி என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் ரிலிஜன் சொல்லுகிறது. ஆனால் இன்று நாம் நன்கு அறிந்திருக்கிறபடி, அது அரசியல்சார்ந்த பிரச்சாரம் மட்டுமே.
கெல்டிய இனத்தவர் பலர், கடலுக்கு அப்பால், ஒரு தீவில் (அல்லது ஒரு தீவுக்கூட்டத்தில்) ஒரு சிறந்த இடமாக இருப்பதாகத் தாங்கள் நினைத்ததை அடையும்படி விரும்பினர்; அங்கு மக்கள் பரிபூரண மகிழ்ச்சியுடன் வாழ்ந்ததாக நம்பினர். ஒரு புராணக்கதையின்படி, அரசனாகிய ஆர்த்தர், உயிர்போகும் அளவிற்குக் காயப்பட்டிருந்தபோதிலும், அவலன் என்ற அற்புதமான தீவைக் கண்டடைந்தபின் தொடர்ந்து வாழ்ந்தான்.
சொல்லர்த்தமாக இன்பங்களாலான ஒரு தோட்டம், ஏதேன் தோட்டம், இன்னும் எங்கோ ஓர் இடத்தில், “எட்டக்கூடாத மலை உச்சி ஒன்றின்மேல் அல்லது கடந்துசெல்லமுடியாத பெருங்கடல் ஒன்றின் மறுகரையில்” இருந்தது என்று பண்டைய காலங்களிலும் இடைக்காலங்களிலும் அநேகர் எண்ணினர் என்று வரலாற்று ஆசிரியர் ஷான் டெலூமோ விளக்குகிறார். இத்தாலிய கவிஞர் டான்டே ஒரு பரலோக பரதீஸில் நம்பிக்கை வைத்திருந்தபோதிலும், எருசலேம் நகரத்தின் எதிரெதிர் முகடுகளில், தன்னுடைய உத்தரிக்கும் ஸ்தலத்தின் மலை உச்சியின்மேல் ஒரு பூமிக்குரிய பரதீஸ் இன்னும் இருந்தது என்று அவர் எண்ணினார். அது ஆசியாவில், மெஸபெட்டேமியாவிலோ இமயத்திலோ காணப்படவேண்டும் என்று சிலர் நம்பினர். மேலும் ஓர் ஏதேனிய பரதீஸைக்குறித்த இடைக்கால புராணக்கதைகள் ஏராளமாக இருந்தன. அந்தப் பரதீஸுக்கு அருகாமையில், பக்தியுள்ள ப்ரெஸ்டர் ஜான் என்பவரால் ஆட்சிசெய்யப்பட்ட புகழ்பெற்ற ஒரு ராஜ்யம் இருந்தது என்று அநேகர் நம்பினர். பூமிக்குரிய பரதீஸ் அருகாமையில் இருந்ததால், ப்ரெஸ்டர் ஜானின் ராஜ்யத்தில் வாழ்க்கை நீண்டதாகவும் பேரின்பமுடையதாகவும் மிகுதியான வளம் மற்றும் செழிப்பின் நிலையான ஊற்றுமூலமாகவும் இருந்ததாக நம்பப்பட்டது. பண்டைய கிரேக்க புராணக்கதைகளைக் கருத்தில்கொண்டிருந்த மற்றவர்கள், அட்லான்டிக்கில் பரதீஸிய தீவுகள் காணப்படும் என்று இதுவரையிலும் நினைத்தார்கள். ஏதேன் தோட்டம் இருந்திருக்கும் என்ற அப்படிப்பட்ட ஒரு நம்பிக்கையின் நிச்சயத்தைக் காண்பிப்பதாய் இடைக்கால நிலப்படங்கள், அதன் ஊகிக்கப்பட்ட இட அமைவைக்கூட குறிப்பிட்டுக்காட்டின.
15-ம், 16-ம் நூற்றாண்டுகளில், அட்லான்டிக்கைக் கடந்துசென்ற திறம்பட்ட கப்பலோட்டிகள், அவ்வாறு செய்கையில் ஒரு புதிய அதேசமயத்தில் பூர்வமானதாக இருந்த ஓர் உலகிற்காகத் தேடிக்கொண்டிருந்தனர். பெருங்கடலின் மறுகரையில், இன்டீஸை மட்டுமல்ல, ஆனால் ஏதேன் தோட்டத்தையும் கண்டுபிடிக்கப்போவதாக அவர்கள் நினைத்தனர். உதாரணமாக, கிறிஸ்டஃபர் கொலம்பஸ், நடுவெப்பநிலை மண்டலத்திலுள்ள மலைகளுக்குள்ளும் தெற்கு மற்றும் மத்திய அமெரிக்க வெப்பமண்டல நாடுகளுக்குள்ளும் அதற்காகத் தேடினார். பிரேஸிலுக்கு வந்துசேர்ந்த புதுநிலந்தேடும் ஐரோப்பிய பயணிகள், அங்குள்ள மிதமான தட்பவெப்பநிலை, உணவு மற்றும் தாவர வளர்ச்சியின் செழுமையின் காரணமாக இழந்த பரதீஸ் அங்கு இருக்கவேண்டும் என்று நிச்சயமாக இருந்தனர். என்றாலும், கூடியவிரைவில், கடுமையான உண்மையை அவர்கள் உணரும்படி வற்புறுத்தப்பட்டனர்.
கற்பனை உலகங்கள்—மிகச் சிறந்த இடங்களா?
மிகச் சிறந்த உலகத்தை, பூமியில் மிகத் தொலைவான ஓர் இடத்தில் கண்டுபிடிக்க முயற்சிசெய்வதற்குப் பதிலாக, மற்றவர்கள் அதைத் திட்டமிட முயன்றிருக்கின்றனர். இவ்வாறாக, 1516-ல் ஆங்கிலேயரான மனித இனவியல் ஆய்வாளர் தாமஸ் மோர், கற்பனை உலகத் தீவு என்பதை அவர் அறிந்திருந்த சீர்கெட்ட உலகத்திற்கு மிக வித்தியாசமான ஓர் அதிசயமான, சமாதானமான, கருத்துச் சுதந்திரமுள்ள ஓர் இடம் என்று விவரித்தார். மற்றவர்கள் இன்னும் மேம்பட்ட உலகங்களுக்காகவும் அதிக நேர்மையான உலகங்களுக்காகவும் திட்டமிட முயன்றனர்: பொ.ச.மு. ஆறாம் நூற்றாண்டில், பிளாட்டோ அவருடைய குடியாட்சியின்மூலமும்; 1602-ல், இத்தாலிய மடத்துறவியான டாம்மாஸோ காம்பானெல்லாவும் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட அவருடைய சன் நகரத்திலும்; வெகு சில வருடங்களுக்குப்பின், ஆங்கிலேய தத்துவ அறிஞரான ஃபிரான்ஸிஸ் பேக்கன் தன்னுடைய நியூ அட்லான்டிஸின் “மகிழ்ச்சியும் செழுமையுமுள்ள எஸ்டேட்டை” விவரிப்பதிலும் முயன்றனர். நூற்றாண்டுகள் கடந்துசென்றபோது, எல்லா வகையான சிந்தனையாளர்களும் (மதநம்பிக்கை உடையவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும்) எத்தனையோ கற்பனை உலகங்களைக் குறித்து விவரித்திருக்கின்றனர். என்றாலும், அவற்றில் ஏதாவது நம்பப்பட்டன என்றால், வெகு சிலவே நம்பப்பட்டன.
தங்களுடைய கற்பனை உலகங்களை உருவாக்க முயன்றவர்களும்கூட இருந்திருக்கின்றனர். உதாரணமாக, 1824-ல் ராபர்ட் ஓயன் என்ற செல்வந்தரான ஓர் ஆங்கிலேயர், நியூ ஹார்மனி என்று தான் பெயரிட்ட கிராமத்தில் தன்னுடைய கற்பனை உலகக் கருத்துக்களை நனவாகச் செய்வதற்காக அ.ஐ.மா.-விலுள்ள இண்டியானாவுக்கு குடியேறிச்செல்ல தீர்மானித்தார். சரியான நிலைமைகளின்கீழ் மக்கள் முன்னேற்றமடைவார்கள் என்று நம்பினவராய், ஒரு புதிய ஒழுக்கநெறி உலகம் என்பதாக தான் எண்ணியதை நிலைநாட்டும் முயற்சியில் கிட்டத்தட்ட தன்னுடைய எல்லா வாய்ப்பு வளங்களையும் பயன்படுத்தினார். ஆனால் புதிய மனிதர்களை உருவாக்க புதிய வாழும் சூழ்நிலைமைகள் போதுமானவை அல்ல என்று விளைவுகள் காண்பித்தன.
பூமியில், கற்பனை செய்யப்பட்ட பரதீஸைக் கொண்டுவருவதற்கு, மனிதன் தன்னுடைய அறிவு மற்றும் எது சரி என்பதைப்பற்றிய தன்னுடைய கணிப்பை வைத்தே உலகத்தைத் திட்டமிடவேண்டும் என்றே கிட்டத்தட்ட எல்லா அரசியல் கருத்துக்களும் வற்புறுத்துகின்றன. இருந்தாலும், எதிர்பார்ப்பிற்கு முரணாக, அப்படிப்பட்ட பேராவல்களை அடையப்பெறுவதற்கான முயற்சிகள், போர்களிலும் 1789-ன் ஃபிரஞ்சு புரட்சி மற்றும் 1917-ன் போல்ஷெவிக் புரட்சி போன்ற புரட்சிகளிலும் விளைவடைந்திருக்கின்றன. பரதீஸிய நிலைமைகளைக் கொண்டுவருவதற்கு மாறாக, இந்த முயற்சிகள் பெரும்பாலும் அதிகமான வேதனைக்கும் துன்பத்திற்கும் வழிநடத்தியிருக்கின்றன.
பேராவல்கள், திட்டங்கள், கற்பனை உலகங்கள், மற்றும் அவற்றை அடைவதற்கான முயற்சிகள்—ஒன்றன்பின் ஒன்றாக ஏமாற்றத்தை அளிக்கும் ஒரு கதையாகும். தற்போதைய காலத்தில், ஒரு “சிதைந்த கனவு” மற்றும் “கற்பனை உலகங்களுடைய சகாப்தத்தின் முடிவு” என்பதைப்பற்றி சிலர் பேசி, “கற்பனை உலகங்களின்றி வாழ்தல்” பற்றி கற்றுக்கொள்ள நம்மை அழைக்கின்றனர். ஒரு மேம்பட்ட உலகைப் பார்ப்பதற்கு எந்த நம்பிக்கையாவது இருக்கிறதா, அல்லது அது வெறும் ஒரு கனவாக இருக்கும்படியே வைக்கப்பட்டிருக்கிறதா?
கிறிஸ்தவர்களும் ஒரு மேம்பட்ட உலகமும்
ஒரு புதிய உலகம் எவ்விதத்திலும் ஒரு கனவல்ல—அது ஒரு நிச்சயமான நம்பிக்கை! சாத்தியமான எல்லா உலகங்களிலும் தற்போதைய உலகமே மிகச் சிறந்தது அல்ல என்பதை கிறிஸ்தவத்தை நிறுவியவரான இயேசு கிறிஸ்து அறிந்திருந்தார். பூமி சாந்தகுணமுள்ளவர்களால் சுதந்தரிக்கப்படும் என்றும் அங்கு கடவுளுடைய சித்தம் நடக்கும் என்றும் அவர் போதித்தார். (மத்தேயு 5:5; 6:9, 10) இந்த உலகம் கடவுளுடைய எதிரியாகிய பிசாசாகிய சாத்தானால் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறது என்றும் மனிதவர்க்கத்தின் கஷ்டங்களுக்கு முக்கிய காரணம் இதுவே என்றும் அவரும் அவருடைய சீஷர்களும் அறிந்திருந்தனர். (யோவான் 12:31; 2 கொரிந்தியர் 4:4; 1 யோவான் 5:19; வெளிப்படுத்துதல் 12:12) பூமியைச் சமாதான மற்றும் நியாயப் பிரியரால் குடியேற்றும்படியாக போர்கள், வேதனை, மற்றும் நோயிலிருந்து முற்றிலுமாக கடவுள் விடுவிக்கும் ஒரு நாளுக்காக உண்மையுள்ள யூதர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். அதேவிதமாக, இந்தத் தற்போதைய உலகம் ஒரு புதிய காரிய ஒழுங்குமுறையால், ‘புதிய வானங்கள் மற்றும் ஒரு புதிய பூமியால்’ மாற்றீடு செய்யப்படும் என்று முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் உறுதியாக நம்பிக் காத்திருந்தனர்.—2 பேதுரு 3:13; சங்கீதம் 37:11; 46:8, 9; ஏசாயா 25:8; 33:24; 45:18; வெளிப்படுத்துதல் 21:1.
இயேசு கிறிஸ்து கழுமரத்தில் தொங்கிக்கொண்டிருந்தபோது, அவரில் ஓரளவு விசுவாசத்தைக் காண்பித்த குற்றவாளியிடம், அவர் ஒரு மேம்பட்ட உலகத்தைப்பற்றிய வாக்குறுதியை மீண்டும் கூறினார். “இயேசு அவனை நோக்கி: [இன்று நான் உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன், NW] நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்.” (லூக்கா 23:40-43) அந்த வார்த்தைகள் எதை அர்த்தப்படுத்தியதாக அந்தக் குற்றவாளி புரிந்துகொண்டான்? ஒருசில கத்தோலிக்க மற்றும் புராட்டஸ்டன்ட் பைபிள் மொழிபெயர்ப்புகள் சுட்டிக்காண்பிப்பதாகத் தோன்றுவதுபோல், அந்தக் குற்றவாளி அதே நாளில்தானே பரலோகத்தில் ‘தன்னுடன்’ இருக்கப்போவதாக இயேசு குறிப்பிட்டாரா? இல்லை, இயேசு அதை அர்த்தப்படுத்தவில்லை; ஏனென்றால் அவருடைய உயிர்த்தெழுதலுக்குப்பின், இயேசு மகதலேனா மரியாளிடம் தாம் ‘அதுவரையிலும் பிதாவிடத்திற்கு ஏறிச் சென்றிருக்கவில்லை’ என்று கூறினார். (யோவான் 20:11-18) பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தேவிற்கு முன்னர் மூன்றரை வருடங்களாக இயேசுவால் போதிக்கப்பட்டிருந்தபோதிலும், அவருடைய அப்போஸ்தலரும்கூட ஒரு பரலோக பரதீஸை எண்ணியிருக்கவில்லை. (அப்போஸ்தலர் 1:6-11) அந்தச் சமயத்தில் வாழ்ந்துகொண்டிருந்த யூதர்களில் பெரும்பாலானோர் எப்படி புரிந்திருப்பார்களோ அதையே அந்தக் குற்றவாளி புரிந்துகொண்டான்: ஒரு பரதீஸான பூமியில் வரப்போகும் ஒரு மேம்பட்ட உலகையே இயேசு வாக்களித்துக்கொண்டிருந்தார். ஒரு ஜெர்மானிய அறிஞர் ஒத்துக்கொண்டார்: “பிற்கால வாழ்வு ஒன்றில் பழிவாங்குதலைப் பற்றிய போதனை பழைய ஏற்பாட்டில் காணப்படுவதே இல்லை.”
நம்முடைய பூமியில் ஒரு பரதீஸ் இருக்கும் என்பது அப்போஸ்தலன் பவுலால் எபிரெயருக்கான அவருடைய கடிதத்தின்மூலம் உறுதியளிக்கப்படுகிறது. ‘இயேசு கிறிஸ்துவின்மூலமாகச் சொல்ல தொடங்கப்பட்ட பெரிய இரட்சிப்பை அசட்டைசெய்ய’ கூடாதென்று தன்னுடைய உடன் விசுவாசிகளை உற்சாகப்படுத்தும்போது, ‘வரவிருக்கும் குடியிருக்கப்பட்ட பூமியின், [கிரேக்கில், ஆய்கெளமீனே, (oi·kou·meʹne)]’ மேலுள்ள அதிகாரத்தை யெகோவா தேவன் இயேசுவுக்குக் கொடுத்தார் என்று பவுல் உறுதியளிக்கிறார். (எபிரெயர் 2:3, 5, NW) கிறிஸ்தவ கிரேக்க வேத எழுத்துக்களில், ஆய்கெளமீனே என்ற பதம் பரலோக உலகத்தையல்ல, மனிதர்களால் குடியேற்றப்பட்ட நம்முடைய பூமியையே எப்போதும் குறித்துக் காட்டுகிறது. (ஒப்பிடவும்: மத்தேயு 24:14; லூக்கா 2:1; 21:26; அப்போஸ்தலர் 17:31.) ஆகவே, கிறிஸ்து இயேசுவால் ஆளப்பட்ட கடவுளுடைய ராஜ்யம் குடியிருக்கப்பட்ட பூமியின் மேல் ஆட்சியைச் செலுத்தும். அது நிஜமாகவே, வாழ்வதற்கு ஒரு மிகச் சிறந்த இடமாக இருக்கும்!
அந்த ராஜ்யம்தானே பரலோகத்தைச் சார்ந்ததாக இருந்தாலும்கூட, அது எப்படியும் பூமிக்குரிய விவகாரங்களில் தலையிடும். என்ன விளைவுகளுடன்? பலவீனங்கள், அட்டூழியங்கள், வறுமை, மரணம் ஆகியவை கடந்தகால நினைவாகியிருக்கும். ஏமாற்றமும் அதிருப்தியும் மறைந்துவிடும். (வெளிப்படுத்துதல் 21:3-5) ‘கடவுள் தம்முடைய கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குவார்,’ என்று பைபிள் சொல்லுகிறது. (சங்கீதம் 145:16) வேலையின்மை, தூய்மைக்கேடு போன்ற பிரச்னைகள் ஒரு நடைமுறையான, நிரந்தரமான தீர்வைக் கொண்டிருக்கும். (ஏசாயா 65:21-23; வெளிப்படுத்துதல் 11:18) ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, உண்மை, நியாயம், மற்றும் சமாதானம்—பெரும்பாலும் மறைந்துவிட்டதாகத் தோன்றுகிற பண்புகள்—கடவுளுடைய ஆசீர்வாதத்தினால் வெற்றி சிறக்கும்!—சங்கீதம் 85:7-13; கலாத்தியர் 5:22, 23.
இவை எல்லாமே ஒரு கனவா, ஒரு கற்பனை உலகா? இல்லை, எல்லா காலங்களிலும் மிகவும் கொடியதான நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் காலம், நாம் இந்த உலகின் “கடைசிநாட்களில்” இருக்கிறோம் என்றும், அதனால் புதிய உலகம் அருகாமையில் இருக்கிறது என்றும் காண்பிக்கிறது. (2 தீமோத்தேயு 3:1-5) அங்கே வாழ உங்களுக்கு விருப்பமா? யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிப்பதன்மூலம் இது எவ்வாறு சாத்தியமாக இருக்கிறது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். நாம் எக்காலத்திலும் கற்பனை செய்திருந்ததைவிட மேம்பட்ட ஓர் உலகம் அருகாமையில் இருக்கிறது. அது ஒரு கற்பனை உலகம் அல்ல—நிஜமான ஒன்று!
[பக்கம் 7-ன் படம்]
ஒரு மேம்பட்ட உலகம்—சீக்கிரத்தில் நிஜமான ஒன்று