விசேஷ அர்த்தமுடைய கல்வெட்டுகள்
“யேஹோவா சிட் டீபி குஸ்டோஸ்”
கிழக்கத்திய ஸ்விட்ஸர்லாந்தில் உள்ள செலரீனாவைச் சேர்ந்த 17-ம் நூற்றாண்டு வீட்டின் முன் சுவரில் செதுக்கப்பட்டிருக்கும் இந்தச் சொற்களின் அர்த்தம் “யெகோவா உன் பாதுகாப்பாளராக இருப்பாராக” என்பதாகும். இந்த மலைப்பகுதியில், பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட வீடுகளிலும் சர்ச்சுகளிலும் பங்குத்தந்தையின் வீடுகளிலும் கடவுளுடைய பெயர் செதுக்கப்பட்டோ மையினால் எழுதப்பட்டோ இருப்பதைப் பார்ப்பது அசாதாரணமானதல்ல. யெகோவா என்ற பெயர் எப்படி அவ்வளவு பிரஸ்தாபமானது?
பூர்வ ரீஷியா (இப்போது தென்கிழக்கத்திய ஜெர்மனி, ஆஸ்திரியா, மற்றும் கிழக்கத்திய ஸ்விட்ஸர்லாந்தின் பகுதிகளால் ஆனது), பொ.ச.மு. 15-ல் ரோம மாகாணமானது. அதில் குடியிருந்தவர்கள் ரோமான்ச் மொழி பேச ஆரம்பித்தனர். இது லத்தீன் அடிப்படையிலான மொழியாக பல்வேறு கிளைமொழிகளாக வளர்ந்தது. இம்மொழிகள் இப்போதும் ஸ்விட்ஸர்லாந்தின் ஆல்பைன் பள்ளத்தாக்கைச் சேர்ந்த சில பகுதிகளிலும் வடக்கத்திய இத்தாலியிலும் பேசப்பட்டு வருகின்றன.
காலவோட்டத்தினூடே, பைபிள் பகுதிகள் ரோமான்ச் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. பிப்லியா பிட்ஷ்னா என்ற பதிப்பில் சங்கீதமும் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமங்களும் அடங்கியிருந்தன. 1666-ல் பிரசுரிக்கப்பட்ட இந்தப் பைபிளில் யேஹோவா என்ற பெயர் சங்கீதம் முழுவதும் அநேக முறைகள் காணப்பட்டது. வீட்டில் பைபிளே முதன்மையான வாசிப்பு புத்தகமாக இருந்ததால், பிப்லியா பிட்ஷ்னா-வை வாசித்தவர்கள் படைப்பாளரின் பெயரை நன்கு அறியலாயினர்.
என்றாலும், அடுத்துவந்த தலைமுறைகள் பைபிள் காரியங்களில் அக்கறை காட்டவில்லை. “யேஹோவா” என்ற சொல்லின் அர்த்தத்தை விளங்கிக்கொள்ள அநேகர் அக்கறை கொள்ளவில்லை. மதக்குருமாரும் அதை விளக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எனவே, இந்தக் கல்வெட்டுகள், கடந்துபோன சகாப்தத்தைச் சேர்ந்த, வெறும் ஒப்பனைப் பொருட்களாக ஆயின.
சமீப பத்தாண்டுகளில் புரிந்துகொள்வதன்பேரில் அசாதாரண மாற்றம் நடைபெற்று வந்திருக்கிறது. யெகோவாவின் சாட்சிகள் தாழ்நிலப்பகுதிகளிலிருந்து இந்த அழகான பள்ளத்தாக்குகளில் விடுமுறைகளைக் கழிக்க வந்து, யெகோவா என்ற பெயரையுடைய கடவுளைப் பற்றி அங்கு வசிப்பவர்களுக்கு போதிக்க விசேஷ முயற்சியெடுக்கின்றனர். சாட்சிகளில் சிலர் பூமிக்கும் மனிதனுக்குமான படைப்பாளரின் மகத்தான நோக்கங்களைப் பற்றி சொல்வதில் அதிக நேரத்தைச் செலவழிக்க இந்தப் பகுதியில் குடியேறியும் இருக்கின்றனர். இவ்வாறு, இந்தப் பண்டைய ரோமான்ச் கல்வெட்டுகள் மக்கள் மெய்க் கடவுளாகிய யெகோவாவைப் பற்றி கற்று வருகையில் புதிய அர்த்தத்தை ஏற்கின்றன.
[பக்கம் 32-ன் படங்கள்]
யெஹோவா பார்டியோ மேயா: யெகோவாவே என் பங்கு.—சங்கீதம் 119:57-ஐ பாருங்கள்