வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
ஈசாய் மற்றும் தாவீதின் மரபுவழியிலிருந்து இயேசு வந்திருக்கையில், அவர் ஏன் தம்முடைய முன்னோர்களாகிய ஈசாய் மற்றும் தாவீதின் ‘வேர்’ என்று அழைக்கப்படுகிறார்?
ஒரு மரத்தின் அல்லது ஒரு செடியின் வேர், அடிமரமோ கிளைகளோ எழும்புவதற்குமுன் வருவதாக நீங்கள் பொதுவாக யோசிப்பீர்கள். ஆகவே, கடைசியில் இயேசு எழும்பிய வேராக ஈசாய் (அல்லது அவருடைய மகன் தாவீது) சொல்லப்படுவார்கள் என்று தோன்றக்கூடும். இருந்தாலும், வரக்கூடிய மேசியா ‘ஈசாயின் வேராக’ இருப்பார் என்பதாக ஏசாயா 11:10 முன்னறிவித்தது; மேலும் ரோமர் 15:12 இந்தத் தீர்க்கதரிசனத்தை இயேசு கிறிஸ்துவுக்குப் பொருத்தியது. பின்னர் வெளிப்படுத்துதல் 5:5 அவரை “யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர்” என்று அழைத்தது. இந்தப் பட்டப்பெயர்களுக்குக் காரணங்கள் உள்ளன.
பைபிள் பெரும்பாலும் ஒரு தாவரத்தை, மரத்தைப் போன்ற ஒன்றை உவமானமாகப் பயன்படுத்துகிறது. ஒரு விதை முளைத்து வளரும்போது, கொப்புகள், மற்ற கிளைகள், அல்லது பழம் தோன்றுவதற்குமுன் வேர்கள் வளர்ந்து, இவை அனைத்தையும் வேர்கள் தாங்குகின்றன என்ற உண்மையை அது சிலவேளைகளில் பயன்படுத்துகிறது. உதாரணமாக, ஏசாயா 37:31 இவ்வாறு வாசிக்கிறது: “யூதா வம்சத்தாரில் தப்பி மீந்திருக்கிறவர்கள் மறுபடியும் கீழே வேர்பற்றி மேலே கனிகொடுப்பார்கள்.”—யோபு 14:8, 9; ஏசாயா 14:29.
வேருக்குக் கேடு வந்தால், மரத்தின் மீதி பாகமும் பாதிக்கப்படும். (ஒப்பிடவும் மத்தேயு 3:10; 13:6.) அதற்கிசைவாகவே மல்கியா எழுதினார்: “வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற்போகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.” (மல்கியா 4:1) அர்த்தம் தெளிவாக இருக்கிறது—முழுமையான அழிவு. பெற்றோர் (வேர்கள்) அழிக்கப்படுவார்கள்; அவர்களுடைய பிள்ளைகளும் (கொப்புகள்) அழிக்கப்படுவார்கள்.a வயதுக்கு வராத சிறிய பிள்ளைகளிடமாக பெற்றோர் கொண்டிருக்கும் உத்தரவாதத்தை இது அழுத்திக்காட்டுகிறது; வயதுக்கு வராத சிறிய பிள்ளைகளுடைய நிரந்தரமான எதிர்காலம், கடவுளுக்கு முன்பாக அவர்களுடைய பெற்றோர் கொண்டிருக்கும் நிலைநிற்கையை வைத்து தீர்மானிக்கப்படலாம்.—1 கொரிந்தியர் 7:14.
கொப்புகளும் (துணை கிளைகளிலுள்ள கனியும்) வேரிலிருந்து உயிர்பெறுகின்றன என்ற உண்மையின் அடிப்படையை ஏசாயா 37:31 மற்றும் மல்கியா 4:1-ன் மொழிநடை பயன்படுத்துகிறது. இயேசு எவ்வாறு ‘ஈசாயின் வேராக’ மற்றும் ‘தாவீதின் வேராக’ இருப்பார் என்பதைப் புரிந்துகொள்ள இது ஒரு முக்கிய குறிப்பாக இருக்கிறது.
மாம்சப்பிரகாரமான வழியில், ஈசாயும் தாவீதும் இயேசுவின் முன்னோர்கள்; அவர்கள் வேர்களாக இருந்தனர், அவர் பக்கக்கிளையாக அல்லது கொப்பாகவும் இருந்தார். வருகிற மேசியாவைக் குறித்து ஏசாயா 11:1 இவ்வாறு சொன்னது: “ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்.” அதேவிதமாக, வெளிப்படுத்துதல் 22:16-ல், இயேசு தம்மைத் ‘தாவீதின் சந்ததி’ என்று அழைக்கிறார். ஆனால் அவர் தம்மை ‘தாவீதின் வேர்’ என்றும் அழைக்கிறார். ஏன்?
ஈசாய் மற்றும் தாவீதின் ‘வேராக’ இயேசு இருக்கக்கூடிய ஒரு வழி என்னவென்றால், அவர் மூலமாகவே அவர்களுடைய வம்சாவழி காக்கப்பட்டிருக்கிறது. லேவி, தாண், அல்லது யூதா கோத்திரத்தைச் சேர்ந்தவன் என்று இன்று எந்த மனிதனும் தன்னை நிரூபிக்க முடியாது; ஆனால் ஈசாய் மற்றும் தாவீதின் வம்சாவழி இன்றும் நிலைத்திருக்கிறது என்று நாம் நிச்சயமாய் இருக்கலாம், ஏனென்றால் இயேசு இப்போது பரலோகத்தில் உயிரோடு இருக்கிறார்.—மத்தேயு 1:1-16; ரோமர் 6:9.
இயேசு பரலோக அரசரின் ஸ்தானத்தையும் பெற்றார். (லூக்கா 1:32, 33; 19:12, 15; 1 கொரிந்தியர் 15:25) இது அவருடைய முன்னோர்களுடன் அவர் கொண்டுள்ள உறவுக்கும் பொருந்துகிறது. தீர்க்கதரிசனமாக, இயேசுவைத் தன்னுடைய ஆண்டவர் என்று தாவீது அழைத்தார்.—சங்கீதம் 110:1; அப்போஸ்தலர் 2:34-36.
கடைசியாக, இயேசு கிறிஸ்து நியாயாதிபதியாகவும் அதிகாரமளிக்கப்பட்டிருக்கிறார். வரப்போகும் ஆயிர வருட ஆட்சியில், இயேசுவுடைய மீட்பின் கிரயத்தின் பலன்கள் ஈசாய்க்கும் தாவீதுக்கும்கூட கிடைக்கும். அவர்கள் அதற்குப்பின் பூமியில் வாழ்வது இயேசுவைச் சார்ந்தே இருக்கும்; அவர் அவர்களுடைய “நித்திய பிதா”வாக இருப்பார்.—ஏசாயா 9:6.
ஆகவே, மொத்தத்தில், ஈசாய் மற்றும் தாவீதின் வம்சாவழியிலிருந்து இயேசு வந்தபோதிலும், அவர் என்னவாகியிருக்கிறார் என்பதும் இன்னும் என்ன செய்வார் என்பதும் அவரை ‘ஈசாயின் வேர்’ மற்றும் ‘தாவீதின் வேர்’ என்றழைக்கப்படுவதை தகுதியுள்ளதாக்குகின்றன.
[அடிக்குறிப்புகள்]
a பெனிக்கேயாவிலுள்ள பண்டைய சவக்கல்லறை பொறிப்பு ஒன்று இதேவிதமான மொழிநடையைப் பயன்படுத்தியது. புதைக்கப்பட்ட இடத்தைத் திறக்கிற எவரையும்பற்றி அது சொன்னது: “அவர்கள் கீழே வேர் கொள்ளாமல் அல்லது மேலே கனிகொடாமல் இருப்பார்களாக!”—வீடுஸ் டெஸ்டாமென்டும், ஏப்ரல் 1961.