யெகோவாவைப் போல நீங்களும் மன்னிக்கிறீர்களா?
“மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.”—மத்தேயு 6:14, 15.
1, 2. எப்படிப்பட்ட ஒரு கடவுள் நமக்குத் தேவையாக இருக்கிறார், ஏன்?
“கர்த்தர் [யெகோவா, NW] உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர். அவர் எப்பொழுதும் கடிந்துகொள்ளார்; என்றைக்கும் கோபங்கொண்டிரார். அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார். பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது. மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார். தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார். நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.”—சங்கீதம் 103:8-14.
2 பாவத்தில் கர்ப்பம் தரிக்கப்பட்டு துர்க்குணத்தில் உருவானவர்களாக, பாவப்பிரமாணத்துக்குச் சிறையாக்குவதற்கு நம்மை வழிநடத்த எப்பொழுதும் முயற்சிசெய்யும் சுதந்தரிக்கப்பட்ட அபூரணங்களோடு இருப்பதால், ‘நம்மை மண்ணென்று நினைவுகூருகிற’ ஒரு கடவுள் நமக்கு மிகவும் தேவையாக இருக்கிறார். தாவீது சங்கீதம் 103-ல் யெகோவாவை அத்தனை அழகாக வருணித்து முன்னூறு ஆண்டுகளானபின், மற்றொரு பைபிள் எழுத்தாளரான மீகா, இந்த அதே கடவுளை ஒரு சமயம் செய்யப்பட்ட பாவங்களுக்கு அவர் கிருபையாய் மன்னிப்பதை அதே விதமாக மிக உயர்வாக புகழ்ந்துபேசுகிறார்: “பாவத்தைப் பொறுத்து, அக்கிரமத்தை மன்னிக்கிற உமக்கு நிகரான கடவுள் உண்டோ? அவர் தம் கோபத்தை என்றென்றுமாய்ப் பாராட்ட மாட்டார்; ஏனெனில் நிலையான அன்பில் அவர் விருப்பமுள்ளவர். திரும்பவும் அவர் நம்மீது இரக்கம் கொள்வார், நம் அக்கிரமங்களைத் தம் காலடியில் மிதித்துப்போடுவார்; நம் பாவங்களையெல்லாம் ஆழ்கடலில் எறிந்துவிடுவார்.”—மிக்கேயாஸ் 7:18, 19, கத்.பை.
3. மன்னித்துவிடுவது எதை அர்த்தப்படுத்துகிறது?
3 கிரேக்க வேதாகமத்தில், “மன்னித்துவிடு” என்பதற்குரிய வார்த்தை “தண்டிக்காமல் விட்டு விடு” என்பதை அர்த்தப்படுத்துகிறது. மேலே மேற்கோள் காண்பிக்கப்பட்ட தாவீதும் மீகாவும் கவர்ச்சியான, விளக்கமான வார்த்தைகளில் அதே கருத்தையே சொல்கின்றனர். யெகோவாவின் மன்னிக்கும் மனநிலையின் ஆச்சரியமான அளவை முழுமையாக மதித்துணருவதற்கு, செயலில் காண்பிக்கப்பட்ட அநேக உதாரணங்களில் சிலவற்றை நாம் மறுபார்வை செய்வோமாக. யெகோவாவின் மனது அழிவிலிருந்து மன்னிப்பதற்கு மாறமுடியும் என்பதை முதலாவது உதாரணம் காண்பிக்கிறது.
மோசே பரிந்து பேசுகிறார்—யெகோவா செவிசாய்க்கிறார்
4. யெகோவாவின் என்ன வல்லமையான செயல்களுக்குப் பின்னும்கூட இஸ்ரவேலர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசிக்க பயந்தார்கள்?
4 யெகோவா இஸ்ரவேல் ஜனத்தாரை எகிப்தைவிட்டு விடுதலையாக்கி, தாயகமாக தாம் வாக்களித்திருந்த வாக்குப்பண்ணின தேசத்துக்கு அருகே அவர்களைப் பத்திரமாக கொண்டுவந்தார், ஆனால் கானானிலுள்ள வெறும் மனிதர்களுக்கு பயந்து முன்னேறிச்செல்ல அவர்கள் மறுக்கிறார்கள். யெகோவா, அழிவுண்டாக்கும் பத்து வாதைகளின் மூலம் எகிப்திலிருந்து அவர்களை விடுவித்து, சிவந்த சமுத்திரத்தின் வழியாக தப்பிவர ஒரு வழியை உண்டுபண்ணி, அவர்களைப் பின்தொடர முயற்சித்த எகிப்திய சேனையை அழித்து, அவர்களை யெகோவாவின் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனமாக ஆக்கிய அந்த நியாயப்பிரமாண உடன்படிக்கையை சீனாய் மலையில் அவர்களோடு செய்து, அவர்களைக் காக்க அற்புதமாக மன்னாவை தினந்தோறும் வானத்திலிருந்து வழங்கியதைப் பார்த்த பின்னரும், ஒருசில “இராட்சதப் பிறவி”களான கானானியரை முன்னிட்டு வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசிக்க பயந்தார்கள்!—எண்ணாகமம் 14:1-4.
5. உண்மையுள்ள இரண்டு வேவுகாரர்கள் எவ்விதமாக இஸ்ரவேலரை ஒன்றுதிரட்ட முயற்சி செய்தார்கள்?
5 ஜனங்கள் மனுஷருக்குப் பயப்பட்டதன் காரணமாக மோசேயும் ஆரோனும் மிகவும் குழம்பிப்போய் முகங்குப்புற விழுந்தார்கள். உண்மையுள்ள வேவுகாரர்களாகிய யோசுவாவும் காலேபும் இஸ்ரவேலரை ஒன்றுதிரட்ட ஆரம்பித்தார்கள்: ‘தேசம் மகா நல்ல தேசம். பாலும் தேனும் ஓடுகிற தேசம். ஜனங்களுக்கு நீங்கள் பயப்படாதீர்கள்; யெகோவா நம்மோடே இருக்கிறார்!’ இப்படிப்பட்ட வார்த்தைகளினால் ஊக்குவிக்கப்பட்டவர்களாவதற்கு பதிலாக, பயந்துபோயிருந்த கலகக்கார ஜனங்கள் யோசுவாவையும் காலேபையும் கல்லெறிய முயற்சிசெய்தார்கள்.—எண்ணாகமம் 14:5-10.
6, 7. (அ) வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் அணிவகுத்துச் செல்வதை இஸ்ரவேலர் எதிர்த்தபோது யெகோவா என்ன செய்ய தீர்மானித்தார்? (ஆ) இஸ்ரவேலர்மீது யெகோவாவின் நியாயத்தீர்ப்பை மோசே ஏன் ஆட்சேபித்தார், என்ன விளைவோடு?
6 யெகோவாவுக்கு கோபம் மூண்டது! “கர்த்தர் மோசேயை நோக்கி: எதுவரைக்கும் இந்த ஜனங்கள் எனக்குக் கோபம் உண்டாக்குவார்கள்? தங்களுக்குள்ளே நான் காட்டின சகல அடையாளங்களையும் அவர்கள் கண்டும், எதுவரைக்கும் என்னை விசுவாசியாதிருப்பார்கள்? நான் அவர்களை கொள்ளைநோயினால் வாதித்து, சுதந்தரத்துக்குப் புறம்பாக்கிப்போட்டு, அவர்களைப்பார்க்கிலும் உன்னைப் பெரிதும் பலத்ததுமான ஜாதியாக்குவேன் என்றார். மோசே கர்த்தரை நோக்கி: எகிப்தியர் இதைக் கேட்பார்கள், அவர்கள் நடுவிலிருந்து உம்முடைய வல்லமையினாலே இந்த ஜனங்களைக் கொண்டுவந்தீரே. . . . இந்த தேசத்தின் குடிகளுக்கும் சொல்லுவார்கள். ஒரே மனிதனைக் கொல்லுகிறதுபோல இந்த ஜனங்களையெல்லாம் நீர் கொல்வீரானால், அப்பொழுது உம்முடைய கீர்த்தியைக் கேட்டிருக்கும் புறஜாதியார்: கர்த்தர் அந்த ஜனங்களுக்குக் கொடுப்போம் என்று ஆணையிட்டிருந்த தேசத்திலே அவர்களைக் கொண்டுபோய்விடக்கூடாதேபோனபடியினால், அவர்களை வனாந்தரத்திலே கொன்றுபோட்டார் என்பார்களே.”—எண்ணாகமம் 14:11-16.
7 யெகோவாவின் பெயரின் நிமித்தமாக மோசே மன்னிப்புக்காக மன்றாடினார். “உமது கிருபையினுடைய மகத்துவத்தின்படியேயும், எகிப்தை விட்டதுமுதல் இந்நாள்வரைக்கும் இந்த ஜனங்களுக்கு மன்னித்துவந்ததின்படியேயும், இந்த ஜனங்களின் அக்கிரமத்தை மன்னித்தருளும் என்றான். அப்பொழுது கர்த்தர்: உன் வார்த்தையின்படியே மன்னித்தேன்.”—எண்ணாகமம் 14:19, 20.
மனாசேயின் விக்கிரகாராதனையும் தாவீதின் விபசாரமும்
8. யூதாவின் மனாசே அரசன் என்ன வகையான பதிவை உண்டுபண்ணினான்?
8 யெகோவாவின் மன்னிக்கும் குணத்துக்கு குறிப்பிடத்தக்க உதாரணத்தை, நல்ல அரசனாகிய எசேக்கியாவின் மகன் மனாசேயின் விஷயத்தில் காணமுடியும். மனாசே எருசலேமில் ஆட்சிசெய்ய ஆரம்பித்தபோது 12 வயதுநிரம்பியவனாக இருந்தான். அவன் மேடைகளைக் கட்டி, பாகாலுக்கு பலிபீடங்களை அமைத்து, விக்கிரகத்தோப்புகளை உண்டாக்கி, வானத்தின் நட்சத்திரங்களையெல்லாம் பணிந்துகொண்டு, நாளும் நிமித்தமும் பார்த்து, பில்லிசூனியங்களை அநுசரித்து, அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, யெகோவாவுடைய ஆலயத்தில் விக்கிரகமாகிய சிலையை வைத்து, இன்னோம் பள்ளத்தாக்கிலே தன் குமாரரைத் தீமிதிக்கப்பண்ணினான். ‘யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதை அவன் மிகப் பெரிய அளவில் செய்தான்,’ மேலும் “கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அழித்த ஜாதிகளைப் பார்க்கிலும், யூதாவும் எருசலேமின் குடிகளும் பொல்லாப்புச் செய்யத்தக்கதாய், மனாசே அவர்களை வழிதப்பிப்போகப்பண்ணினான்.”—2 நாளாகமம் 33:1-9.
9. மனாசேயிடமாக யெகோவாவின் முகம் கனிந்தது எப்படி, என்ன விளைவோடு?
9 கடைசியாக யெகோவா அசீரியர்களை யூதாவுக்கு விரோதமாக வரப்பண்ணினார், அவர்கள் மனாசேயை பிடித்து பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள். “இப்படி அவன் நெருக்கப்படுகையில், தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கெஞ்சி, தன் பிதாக்களின் தேவனுக்கு முன்பாக மிகவும் தன்னைத் தாழ்த்தினான். அவரை நோக்கி, அவன் விண்ணப்பம் பண்ணிக்கொண்டிருக்கிறபோது, அவர் அவன் கெஞ்சுதலுக்கு இரங்கி, அவன் ஜெபத்தைக் கேட்டு, அவனைத் திரும்ப எருசலேமிலுள்ள தன்னுடைய ராஜ்யத்திற்கு வரப்பண்ணினார்.” (2 நாளாகமம் 33:11-13) அப்பொழுது மனாசே அந்நிய தேவர்களையும் விக்கிரகங்களையும் பலிபீடங்களையும் அகற்றி அவற்றை பட்டணத்துக்குப் புறம்பாக போடும்படிச் செய்தான். யெகோவாவின் பலிபீடத்தில் பலிகளைச் செலுத்த ஆரம்பித்து, மெய்க்கடவுளைச் சேவிப்பதை நோக்கி யூதாவை வழிநடத்த தொடங்கினான். மனத்தாழ்மையும் ஜெபமும் தவறான நடத்தையை சரிசெய்ய எடுக்கப்படும் நடவடிக்கையும் மனந்திரும்புவதற்கேற்ற கனிகளைக் கொடுக்கையில் யெகோவா மன்னிப்பதற்கு மனமுள்ளவராக இருப்பதைக் காட்டும் ஓர் ஆச்சரியமான எடுத்துக்காட்டாக இது இருந்தது.—2 நாளாகமம் 33:15, 16.
10. தாவீது எவ்வாறு உரியாவின் மனைவியோடு செய்த பாவத்தை மூடிமறைத்தார்?
10 ஏத்தியனான உரியாவின் மனைவியோடு தாவீது அரசனின் வேசித்தன பாவம் நன்கு அறியப்பட்ட ஒன்று. அவளோடு அவர் வேசித்தனம் செய்தது மாத்திரமல்லாமல், அவள் கர்ப்பவதியானபோது அதை மூடி மறைப்பதற்காக விரிவான ஒரு சூழ்ச்சித்திட்டத்தையும் உருவாக்கினார். உரியா வீட்டுக்குச் சென்று தன் மனைவியோடு உடலுறவுக்கொள்வான் என்று எதிர்பார்த்து பணியிலிருந்து அரசன் அவனுக்கு விடுப்புகொடுத்தார். ஆனால் போர்முனையிலிருந்த சகபோர்ச்சேவகர்களிடம் கொண்டிருந்த மரியாதையின் காரணமாக, உரியா இதை ஏற்கமறுத்தான். அப்பொழுது தாவீது அவனைப் புசிக்க அழைத்து வெறிக்கொள்ளும் அளவு குடிக்க வைத்தான், ஆனாலும் உரியா தன் மனைவியிடம் செல்லவில்லை. பின்னர் தாவீது மும்முரமாய் நடக்கிற போர்முகத்திலே உரியாவை நிறுத்தி, அவன் சாகும்படிச் செய்ய தன்னுடைய படைத்தலைவனுக்கு ஒரு செய்தி அனுப்பி வைத்தான். இதுவே நடந்தது.—2 சாமுவேல் 11:2-25.
11. தாவீது அவருடைய பாவத்துக்காக எவ்வாறு மனந்திரும்புதலுக்கு கொண்டுவரப்பட்டார், இருந்தபோதிலும் அவர் என்ன அனுபவித்தார்?
11 அரசனின் பாவத்தை உணர்த்துவதற்காக யெகோவா தம்முடைய தீர்க்கதரிசியாகிய நாத்தானை தாவீதிடம் அனுப்பினார். “அப்பொழுது தாவீது நாத்தானிடத்தில்: நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன் என்றான். நாத்தான் தாவீதை நோக்கி: நீ சாகாதபடிக்கு, கர்த்தர் உன் பாவம் நீங்கச்செய்தார்.” (2 சாமுவேல் 12:13) தாவீது தன்னுடைய பாவத்தைக் குறித்து மிகவும் குற்றமுள்ளவராக உணர்ந்து, யெகோவாவிடம் இருதயப்பூர்வமான ஒரு ஜெபத்தில் தன்னுடைய மனந்திரும்புதலை வெளிப்படுத்தினார்: “பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல. தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.” (சங்கீதம் 51:16, 17) நொறுங்குண்ட ஓர் இருதயத்திலிருந்து வந்த தாவீதின் ஜெபத்தை யெகோவா புறக்கணித்துவிடவில்லை. இருந்தபோதிலும், தாவீது யாத்திராகமம் 34:6, 7-ல் மன்னிப்பைப் பற்றிய யெகோவாவின் கூற்றுக்கு இசைவாக தாவீது கடுமையான தண்டனையை அனுபவிக்கவே செய்தார்: ‘குற்றவாளியை குற்றமற்றவனாக விடார்.’
சாலொமோனின் ஆலய பிரதிஷ்டை
12. ஆலய பிரதிஷ்டையின் சமயத்தில் சாலொமோன் என்ன வேண்டுதல் செய்தார், யெகோவாவின் பதில் என்னவாக இருந்தது?
12 சாலொமோன் யெகோவாவின் ஆலயத்தைக் கட்டி முடித்தபோது, தன்னுடைய பிரதிஷ்டை ஜெபத்தில் அவர் இவ்வாறு சொன்னார்: “உமது அடியேனும், இந்த ஸ்தலத்திலே விண்ணப்பம் செய்யப்போகிற உமது ஜனமாகிய இஸ்ரவேலும் பண்ணும் ஜெபங்களைக் கேட்டருளும்; பரலோகமாகிய உம்முடைய வாசஸ்தலத்திலே நீர் அதைக் கேட்பீராக, கேட்டு மன்னிப்பீராக.” யெகோவா இவ்விதமாக பதிலளித்தார்: “நான் மழையில்லாதபடிக்கு வானத்தை அடைத்து, அல்லது தேசத்தை அழிக்க வெட்டுக்கிளிகளுக்குக் கட்டளையிட்டு, அல்லது என் ஜனத்திற்குள் கொள்ளைநோயை அனுப்பும்போது, என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம் பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.”—2 நாளாகமம் 6:21; 7:13, 14.
13. எசேக்கியேல் 33:13-16, ஒரு நபரைப் பற்றிய யெகோவாவின் நோக்குநிலையைக் குறித்து என்ன காண்பிக்கிறது?
13 யெகோவா உங்களை பார்க்கையில், நீங்கள் என்னவாக இருந்தீர்கள் என்பதற்காக அல்ல, நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதற்காக உங்களை ஏற்றுக்கொள்கிறார். எசேக்கியேல் 33:13-16 சொல்கிறவிதமாகவே அது இருக்கும்: “பிழைக்கவே பிழைப்பாய் என்று நான் நீதிமானுக்குச் சொல்லும்போது, அவன் தன் நீதியை நம்பி, அநியாயஞ்செய்தால், அவனுடைய நீதியில் ஒன்றும் நினைக்கப்படுவதில்லை. அவன் செய்த தன் அநியாயத்திலே சாவான். பின்னும் சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லும்போது, அவன் தன் பாவத்தைவிட்டுத் திரும்பி, நியாயமும் நீதியுஞ்செய்து, துன்மார்க்கன் தான் வாங்கின அடைமானத்தையும் தான் கொள்ளையிட்ட பொருளையும் திரும்பக்கொடுத்துவிட்டு, அநியாயம் செய்யாதபடி ஜீவப்பிரமாணங்களில் நடந்தால், அவன் சாகாமல் பிழைக்கவே பிழைப்பான். அவன் செய்த அவனுடைய எல்லாப் பாவங்களும் அவனுக்கு விரோதமாக நினைக்கப்படுவதில்லை; அவன் நியாயமும் நீதியும் செய்தான், பிழைக்கவே பிழைப்பான் என்று சொல்லு.”
14. யெகோவா மன்னிப்பதைப் பற்றியதில் எது தனித்தன்மையாக இருக்கிறது?
14 யெகோவா தேவன் அளிக்கும் மன்னிப்பு தனித்தன்மையுள்ள ஓர் அம்சத்தைக் கொண்டிருக்கிறது, ஒருவரையொருவர் மன்னிக்கையில் மனிதர்கள் ஏற்க கடினமாக காணும் காரியம்—அவர் மன்னிக்கவும் மறந்துவிடவும் செய்கிறார். ‘நீ செய்ததை நான் மன்னித்துவிடுகிறேன், ஆனால் அதை என்னால் மறக்கமுடியாது (அல்லது மறக்கமாட்டேன்)’ என்பதாக சில ஆட்கள் சொல்வார்கள். இதற்கு நேர் எதிர் மாறாக, யெகோவா தாம் என்ன செய்வதாக சொல்கிறார் என்பதைக் கவனியுங்கள்: “நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்.”—எரேமியா 31:34.
15. மன்னிப்பதில் யெகோவா என்ன பதிவைக் கொண்டிருக்கிறார்?
15 யெகோவா ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பூமியில் தம்மை வணங்குபவர்களை மன்னித்துவந்திருக்கிறார். அவர்கள் செய்திருப்பதாக உணர்ந்த பாவங்களை மன்னித்துவந்திருக்கிறார், அவர்கள் உணராதிருக்கிற அநேக பாவங்களையும்கூட மன்னித்து வந்திருக்கிறார். அவருடைய இரக்கம், நீடிய பொறுமை மற்றும் மன்னிப்பின் ஏற்பாடு முடிவில்லாததாக இருந்திருக்கிறது. ஏசாயா 55:7 சொல்கிறது: “துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும்விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கு திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்.”
கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் மன்னிப்பு
16. மன்னிப்பதில் இயேசுவின் பழக்கம் ஏன் யெகோவாவுடையதோடு இணக்கமாயிருப்பதாக நாம் சொல்ல முடியும்?
16 கடவுளுடைய மன்னிப்பைப் பற்றிய பதிவுகள் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் முழுவதிலும் நிரம்பியுள்ளன. இயேசு இந்த விஷயத்தில் யெகோவாவின் மனதோடு தாம் இணக்கமாயிருப்பதை காண்பிக்கிறவராய் அதைக் குறித்து அடிக்கடி பேசுகிறார். இயேசுவின் சிந்தனை யெகோவாவிடமிருந்து வருகிறது, அவர் யெகோவாவைப் பிரதிபலிக்கிறார், அவர் யெகோவாவின் தன்மையின் துல்லியமான சொரூபமாக இருக்கிறார்; அவரைக் காண்பது யெகோவாவைக் காண்பதாக இருக்கிறது.—யோவான் 12:45-50; 14:9; எபிரெயர் 1:3.
17. யெகோவா ‘பெரிய அளவில்’ மன்னிப்பதை இயேசு எவ்விதமாக விளக்கினார்?
17 யெகோவா பெரிய அளவில் மன்னிக்கிறார் என்பது இயேசுவினுடைய உதாரணங்களில் ஒன்றில் சுட்டிக்காண்பிக்கப்படுகிறது. ஒரு ராஜா தன்னுடைய அடிமைக்கு 10,000 தாலந்துகள் (சுமார் 33,000,000 ஐ.மா. டாலர்கள்) கடனை மன்னித்துவிட்டார். ஆனால் அந்த அடிமை ஓர் உடன்அடிமைக்கு நூறு வெள்ளிப்பணம் (சுமார் 60 ஐ.மா. டாலர்கள்) கடனை மன்னிக்காதபோது, ராஜா மூர்க்கமடைந்தார். “பொல்லாத ஊழியக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன். நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி, அவனுடைய ஆண்டவன் கோபமடைந்து, அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான்.” பின்பு இயேசு இவ்வாறு பொருத்திக்காட்டினார்: “நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார்.”—மத்தேயு 18:23-35.
18. மன்னிப்பதில், பேதுருவின் கருத்தை இயேசுவின் கருத்தோடு ஒப்பிட அது எவ்விதமாக இருக்கிறது?
18 மேல் சொல்லப்பட்ட உதாரணத்தை இயேசு கொடுப்பதற்கு சற்று முன்பாக, பேதுரு இயேசுவினிடத்தில் வந்து இவ்வாறு கேட்டார்: “ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான்.” பேதுரு தான் மிகவும் தாராளமாக இருப்பதாக நினைத்தார். வேதபாரகரும் பரிசேயரும் மன்னிப்பதற்கு ஓர் எல்லையை வைத்தபோதிலும் இயேசு பேதுருவிடமாக சொன்னார்: “ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்.” (மத்தேயு 18:21, 22) நாளொன்றுக்கு ஏழு தடவை என்பது போதுமானதாக இராது, ஏனென்றால் இயேசு சொன்னார்: “உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால், அவனைக் கடிந்துகொள்; அவன் மனஸ்தாபப்பட்டால், அவனுக்கு மன்னிப்பாயாக. அவன் ஒருநாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, ஏழுதரமும் உன்னிடத்தில் வந்து: நான் மனஸ்தாபப்படுகிறேன் என்று சொன்னால், அவனுக்கு மன்னிப்பாயாக.” (லூக்கா 17:3, 4) யெகோவா மன்னிக்கும்போது, நம்முடைய பாவங்களைப் பற்றிய பதிவை அவர் வைப்பது கிடையாது என்பது நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
19. யெகோவாவின் மன்னிப்பைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும்?
19 மனந்திரும்புவதற்கு மனத்தாழ்மையுள்ளவர்களாக இருந்து நம்முடைய பாவங்களை அறிக்கை செய்தால், நம்மிடமாக தயவாக நடந்துகொள்ள யெகோவா மனமுள்ளவராக இருக்கிறார்: “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.”—1 யோவான் 1:9.
20. பாவத்தை மன்னிக்க மனமுள்ளவராயிருந்ததை ஸ்தேவான் எவ்வாறு காட்டினார்?
20 இயேசுவை பின்பற்றின ஸ்தேவான், மூர்க்கமடைந்த ஜனக்கூட்டம் தன் மீது கற்களை எறிந்துகொண்டிருந்தபோது, குறிப்பிடத்தக்க மன்னிக்கும் ஆவியில் பின்வரும் இந்த மன்றாட்டை உரக்கச் சொன்னார்: “கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும்.” பின்னர் “முழங்காற்படியிட்டு: “ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி, நித்திரையடைந்தான்.”—அப்போஸ்தலர் 7:59, 60.
21. ரோம போர்ச்சேவகரை இயேசு மன்னிக்க மனமுள்ளவராயிருந்தது ஏன் பிரமிப்பூட்டுவதாக இருக்கிறது?
21 மன்னிக்க மனமுள்ளவராயிருப்பதற்கு இயேசு இன்னும் அதிக பிரமிப்பூட்டும் முன்மாதிரியை வைத்தார். அவருடைய சத்துருக்கள் அவரை கைதுசெய்து, சட்டவிரோதமாக விசாரணை நடத்தி, அவரை குற்றவாளியென்று தீர்த்து, அவரை ஏளனம்செய்து, அவர் மீது துப்பி, தோல்வாரில் எலும்பும் உலோகத் துண்டுகளும் பதிக்கப்பட்ட சாட்டையால் அவரை அடித்து கடைசியாக கழுமரத்தில் அறையப்பட்டவராக பல மணிநேரங்கள் அவரை விட்டுச்சென்றிருந்தார்கள். என்றபோதிலும் இயேசு அந்தக் கழுமரத்தில் மரித்துக்கொண்டிருக்கையில், தம்மை அறைந்த போர்ச்சேவகர்களைப்பற்றி தம்முடைய பரலோக தந்தையிடம் இவ்வாறு சொன்னார்: “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே.”—லூக்கா 23:34.
22. மலைப்பிரசங்கத்திலிருக்கும் என்ன வார்த்தைகளை செயலில் காண்பிக்க நாம் முயற்சிசெய்யவேண்டும்?
22 இயேசு தம்முடைய மலைப்பிரசங்கத்தில் இவ்வாறு சொல்லியிருந்தார்: ‘தொடர்ந்து உங்கள் சத்துருக்களைச் சிநேகித்துக்கொண்டிருங்கள். உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம் செய்துகொண்டிருங்கள்.’ தம்முடைய பூமிக்குரிய ஊழியம் முடியும்வரையாக அவர்தாமே அந்த நியமத்துக்குக் கீழ்ப்பட்டிருந்தார். நம்முடைய வீழ்ந்துபோன மாம்சத்தின் பலவீனங்களோடு போராடிக்கொண்டிருக்கும் நம்மிடமாக இது அளவுக்கு அதிகமாக கேட்பதாய் இருக்கிறதா? இயேசு தம்மைப் பின்பற்றினவர்களுக்கு மாதிரி ஜெபத்தைக் கொடுத்த பிறகு போதித்த அவருடைய வார்த்தைகளை குறைந்தபட்சம் நாம் செயலில் காண்பிக்க முயற்சி செய்யவேண்டும்: “மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.” (மத்தேயு 5:44; 6:14, 15) யெகோவா மன்னிக்கிறதுபோல நாம் மன்னித்தால், மன்னித்து மறந்துவிடுவோம்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ யெகோவா எவ்விதமாக நம்முடைய பாவங்களைக் கையாளுகிறார், ஏன்?
◻ மனாசேவுக்கு ராஜ்யபாரம் ஏன் திரும்பக்கொடுக்கப்பட்டது?
◻ யெகோவாவின் மன்னிப்பில் காணப்படும் என்ன தனித்தன்மை வாய்ந்த அம்சத்தை மனிதர்கள் பின்பற்றுவது சவாலாக இருக்கிறது?
◻ இயேசு மன்னிப்பதற்கு மனமுள்ளவராயிருந்தது ஏன் பிரமிப்பூட்டுவதாக உள்ளது?
[பக்கம் 24-ன் படம்]
கடவுளுடைய மன்னிப்புக்கான தேவையை காண நாத்தான் தாவீதுக்கு உதவினார்