சபைநீக்கம்செய்தல் ஓர் அன்பான ஏற்பாடா?
“சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்.” (வெளிப்படுத்துதல் 4:8) அந்த விவரிப்புக்கு இசைவாக, யெகோவா பரிசுத்த தராதரங்களுக்கு ஊற்றுமூலராயிருக்கிறார். இவை ‘பரிசுத்த வேத எழுத்துக்களில்’ கொடுக்கப்பட்டிருக்கின்றன. கிறிஸ்தவர்கள் இப்படிப்பட்ட வழிகாட்டு குறிப்புகளைப் பின்பற்ற கடமைப்பட்டிருக்கின்றனர். உண்மையில் அவர்கள் யெகோவாவின் பார்வையில் அசுத்தமாயிருக்கும் எதையும் தவிர்க்க வேண்டும்.—2 தீமோத்தேயு 3:15; ஏசாயா 52:11.
பைபிள் தெளிவாக கட்டளையிடுகிறது: “உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே.” (1 பேதுரு 1:15, 16) 19 நூற்றாண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவ சபை ஸ்தாபிக்கப்பட்ட சமயத்திலிருந்து ஆவிக்குரிய மற்றும் ஒழுக்கசம்பந்தமான அசுத்தத்திலிருந்து அதைப் பாதுகாக்க மெய்க் கிறிஸ்தவர்கள் கடினமாகப் போராடியிருக்கின்றனர்.—யூதா 3.
பாதுகாப்பு ஏன் தேவையாயிருக்கிறது
கடவுளுடைய ஊழியர்கள் அனைவருமே தங்களை ஒழுக்கப்பிரகாரமாகவும் ஆவிக்குரியப்பிரகாரமாகவும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டிய சவாலை எதிர்ப்படுகின்றனர். அந்த நோக்கத்துக்காக மூன்று வல்லமைவாய்ந்த எதிரிகளை எதிர்த்து நிற்க வேண்டும்—சாத்தான், அவனுடைய உலகம், நம்முடைய பாவமுள்ள மாம்சப்பிரகாரமான மனச்சாய்வுகள். (ரோமர் 5:12; 2 கொரிந்தியர் 2:11; 1 யோவான் 5:19) சாத்தானின் உலகம் உங்களை ஒழுக்கயீனமாயிருக்கும்படி சோதிக்கும், அதனுடைய வழிகளை ஏற்றுக்கொள்ளும்படி உங்களுக்கு சவால்விடும், பொருளாதார செல்வம், புகழ், பதவி, முதன்மையான நிலை, அதிகாரம் போன்றவற்றை உங்களுக்கு அளிக்கும். ஆனால் மெய் வணக்கத்தைப் பின்பற்ற தீர்மானமாயிருப்பவர்கள் சாத்தான் அளிப்பவற்றை எதிர்த்து நின்று ‘உலகத்தால் கறைபடாமல்’ நிலைத்திருக்க வேண்டும். ஏன்? ஏனென்றால் அவர்கள் யெகோவாவின் சுத்தமான அமைப்பின் பாதுகாப்பான மற்றும் அன்பான கவனிப்பின்கீழ் தங்கியிருக்க விரும்புகின்றனர்.—யாக்கோபு 1:27; 1 யோவான் 2::15-17.
மனித பெலவீனத்தின் காரணமாக சாத்தானின் சோதனைகளுக்கு பலியாகி விடும் கிறிஸ்தவ சபையிலிருக்கும் எந்தவொரு அங்கத்தினருக்கும் உதவியளிக்க யெகோவா ஏற்பாடு செய்திருக்கிறார். சபையைப் பாதுகாப்பதற்கும் தவறு செய்பவர்கள் தங்கள் பாவத்தைவிட்டு மனந்திரும்பி, முன்பு இருந்த நிலையை அடைவதற்குத் தேவையான சரிப்படுத்தல்களைச் செய்துகொள்ளும்படி அன்பாக உதவிசெய்ய ஆவிக்குரியப்பிரகாரமாய் தகுதியுள்ள மூப்பர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். தவறு செய்திருக்கும் எந்தவொரு கிறிஸ்தவனும் மனந்திரும்பி, தன்னுடைய வழிகளை மாற்றிக்கொள்வதற்கு பொறுமையாக உதவப்பட வேண்டும்.—கலாத்தியர் 6:1, 2; யாக்கோபு 5:13-16.
சபைநீக்கம்செய்வது எவ்வாறு அன்பானதாய் உள்ளது
ஒரு பொல்லாப்பான வழியை வேண்டுமென்றே பின்பற்றி, மாற்றம் செய்வதற்கு மறுக்கும் யெகோவாவின் முழுக்காட்டப்பட்ட ஊழியர்கள், மனந்திரும்பாதவர்கள் என்றும் இதனால் கிறிஸ்தவ தோழமைக்குத் தகுதியற்றவர்கள் என்றும் கருதப்பட வேண்டும். (1 யோவான் 2:19-ஐ ஒப்பிடுக.) அப்படிப்பட்ட கிறிஸ்தவர்கள் சுத்தமான கிறிஸ்தவ சபையில் இருந்துகொண்டு அதைக் கறைபடுத்துவதற்கு அனுமதிக்கப்பட முடியாது. அவர்களைக் கட்டாயம் வெளியேற்ற வேண்டும்.
பொல்லாத செயல்களை வழக்கமாக செய்வோரை நீக்குவதற்கான தகுதியைப் பின்வரும் சூழ்நிலைமையால் விளக்கிக் காண்பிக்கலாம்: மாணவர்களுக்கு விரோதமாக செய்யப்படும் திடீர்தாக்குதல்களும் வன்முறையான குற்றச்செயல்களும் அதிகரித்து வருவதால், “ஆயுதங்களை உபயோகிக்கும் அல்லது ஆயுதங்களை உபயோகிக்கப்போவதாக பயமுறுத்தும் மாணவர்களை வாழ்நாள் முழுவதும் பள்ளியிலிருந்து நீக்கி வைப்பதை” தேவைப்படுத்தும் ஒரு கொள்கையை சில பள்ளிகள் ஏற்றுக்கொண்டிருக்கின்றன என்று கனடா, டோரன்டோ-வில் உள்ள தி குளோப் அண்ட் மெய்ல் என்ற ஒரு செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. வன்முறையான செயல்களுக்கு உட்படாமல் கல்வித்திட்டத்திலிருந்து பயனடைய விரும்பும் மாணவர்களைப் பாதுகாப்பதற்கு அந்த நீக்கம் செய்யப்படுகிறது.
தவறுசெய்து மனந்திரும்பாமல் இருப்பவரை சபையிலிருந்து நீக்கம் செய்வது ஏன் அன்பான காரியம்? அவ்வாறு செய்வது யெகோவாவுக்கும் அவருடைய வழிகளுக்கும் அன்பை வெளிப்படுத்திக்காட்டுவதாய் இருக்கிறது. (சங்கீதம் 97:10) இச்செயல் ஒரு நீதியான போக்கைப் பின்பற்றுபவர்களின் பேரிலுள்ள அன்பைக் காண்பிக்கிறது, ஏனென்றால் அவர்கள் பேரில் ஒரு கெட்ட செல்வாக்கை ஏற்படுத்தக்கூடிய ஒரு நபரை அவர்கள் மத்தியிலிருந்து அது நீக்குகிறது. அது சபையின் தூய்மையையும்கூட பாதுகாக்கிறது. (1 கொரிந்தியர் 5: 1-13) மோசமான ஒழுக்கயீனம் அல்லது ஆவிக்குரிய அசுத்தம் தொடர்ந்து சபைக்குள் இருக்கும்படி அனுமதித்தால், அது கறைபடுத்தப்பட்டுவிடும், பரிசுத்தராயிருக்கும் யெகோவாவுக்கு பரிசுத்த சேவை செய்வதற்கு தகுதியற்றதாகிவிடும். கூடுதலாக, தவறு செய்தவரை நீக்கிவிடுவதானது, அவர் தன்னுடைய ஏறுமாறான போக்கின் வினைமையானத் தன்மையை உணர்ந்து, மனந்திரும்பி, தேவையான மாற்றங்களை செய்து, மறுபடியுமாக சபைக்குள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு அவருக்கு உதவிசெய்யும்.
மற்றவர்கள் மீது பாதிப்பு
சபையின் அங்கத்தினர் ஒருவர் வேசித்தனம் போன்ற வினைமையான பாவத்தைச் செய்கிறாரென்றால் அவர் யெகோவாவின் இருதயத்தைச் சந்தோஷப்படுத்துவதில்லை. (நீதிமொழிகள் 27:11) பாலின ஒழுக்கயீனத்துக்கு ஆளாகிவிடும் எந்த ஒரு கிறிஸ்தவரும், போத்திபாரின் மனைவி யோசேப்போடு பாலுறவு கொள்வதற்கு முயற்சி செய்தபோது யோசேப்பு யோசித்தது போல் நிச்சயமாகவே நினைப்பதில்லை. யோசேப்பின் பிரதிபலிப்பு: “நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான்.” (ஆதியாகமம் 39:6-12) யோசேப்பு யெகோவாவின் பரிசுத்த தராதரங்களை மதித்து அவ்விடத்திலிருந்து ஓடிப்போனான். மறுபட்சத்தில், ஒரு விபசாரி தன் மாம்ச இச்சையை திருப்திசெய்வதிலிருந்து விலகியிருப்பதற்கு கடவுளிடம் போதுமான அன்பு இல்லாததாகத் தெரிகிறது.—கலாத்தியர் 5:19, 21.
கடவுளுடைய கட்டளைகளை மீறும் ஒரு முழுக்காட்டப்பட்ட நபர், விசுவாசத்திலிருக்கும் தன் உறவினர்களுக்கு உண்டாக்கப்போகும் சேதத்தையும் வேதனையையும் குறித்து கவலைப்படுவதில்லை. உணர்ச்சிப்பூர்வமான அழுத்தம் சிலருக்கு தாங்கிக்கொள்ள முடியாதபடி இருக்கிறது. தன் மகன் ஒழுக்கங்கெட்டவனாய் இருந்ததைக் குறித்து கேள்விப்பட்ட பிறகு ஒரு கிறிஸ்தவ சகோதரி இவ்வாறு புலம்பினாள்: “நாங்கள் எவ்வாறு புண்படுத்தப்பட்டு மனமுடைந்து போயிருக்கிறோம் என்பதை வெகு சில சகோதரர்களும் சகோதரிகளுமே புரிந்துகொள்வதாகத் தோன்றுகிறது. . . . எங்களுடைய இருதயம் நொறுங்கிவிட்டிருக்கிறது.” ஒரு முழு குடும்பத்தின் நற்பெயரே சந்தேகத்துக்கு உட்படுத்தப்படலாம். மனச்சோர்வும் ஓரளவு குற்றப்பொறுப்பும் உண்மையாய் நிலைத்திருக்கும் குடும்ப அங்கத்தினர்களைத் தொல்லைப்படுத்தும். இவ்வாறு தவறுசெய்தவரின் பொல்லாப்பான போக்கு குடும்பத்துக்கு மனவேதனையைக் கொண்டுவருகிறது.
குடும்ப அங்கத்தினர்களுக்கு அன்பான உதவி
சபைநீக்கம் செய்வது அன்பானது மற்றும் பாதுகாக்கும் தன்மையுடையது என்பதை சபைநீக்கம் செய்யப்பட்ட நபர்களின் உண்மையுள்ள கிறிஸ்தவ குடும்ப அங்கத்தினர்கள் ஞாபகத்தில் வைக்க வேண்டும். தவறு செய்தவருக்கு முடிந்த அளவு உதவிசெய்ய எல்லா முயற்சியும் எடுக்கப்படுகிறது. ஆனால் அவர் கடவுளுக்குக் கீழ்ப்படியாமலும் பிடிவாதமாக மனந்திரும்பாமலும் இருந்தால், சபை பாதுகாக்கப்பட வேண்டியுள்ளது, கடவுளுடைய வார்த்தை கட்டளையிடுவது போல் செயல்படுவதைத் தவிர வேறு வழியில்லை: “அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டுத் தள்ளிப்போடுங்கள்.” (1 கொரிந்தியர் 5:13) ஒரு சாட்சி சொன்னார்: “சபைநீக்கம் செய்யப்படுதல் யெகோவாவுக்கு பற்றுமாறாத்தன்மையைக் காண்பிப்பதில் சம்பந்தப்பட்ட விஷயம்.”
ஒரு குடும்ப அங்கத்தினர் சபைநீக்கம் செய்யப்படும்போது, கிறிஸ்தவ உறவினர்கள் வேதனையை அனுபவிக்கின்றனர். ஆகையால் நியமிக்கப்பட்ட மூப்பர்கள் அவர்களுக்கு ஆவிக்குரியப்பிரகாரமாய் புத்துணர்ச்சி அளிப்பதற்கு தங்களாலான மிகச் சிறந்ததை செய்ய வேண்டும். (1 தெசலோனிக்கேயர் 5:14) மூப்பர்கள் அவர்களுக்காக ஜெபம் செய்யலாம், அவர்களோடு ஜெபம் செய்யலாம். இப்படிப்பட்ட உண்மையுள்ள கிறிஸ்தவர்களை அடிக்கடி சந்தித்து கட்டியெழுப்பும் வேதப்பூர்வமான கருத்துக்களை கலந்தாலோசிப்பது கூடியகாரியமாயிருக்கிறது. மந்தையின் மேய்ப்பர்கள் இந்த அன்பானவர்களை கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு முன்பும் பின்பும் ஆவிக்குரியப்பிரகாரமாய் பலப்படுத்துவதற்கு ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்த வேண்டும். வெளி ஊழியத்தில் அவர்களோடு செல்வதன் மூலம் கூடுதலான உற்சாகம் அளிக்கப்படலாம். (ரோமர் 1:11, 12) ஆவிக்குரிய மேய்ப்பர்கள் இப்படிப்பட்ட உண்மையுள்ள யெகோவாவின் ஊழியர்களுக்குத் தகுதியாயிருக்கும் அன்பையும் கவனத்தையும் காண்பிக்க வேண்டிய தேவை இருக்கிறது.—1 தெசலோனிக்கேயர் 2:7, 8.
ஒரு நபரின் பாவமுள்ள போக்கு, அவருடைய குடும்பத்தில் யெகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருக்கும் மற்றவர்களை அசட்டை செய்வதற்கு எந்தக் காரணமும் இல்லை. இஸ்ரவேலின் பொல்லாத அரசனாகிய சவுல் கடவுளால் நிராகரிக்கப்பட்டார், ஆனால் தாவீது சவுலின் மகனாகிய யோனத்தானிடம் தன் சொந்த பாசத்தைக் காண்பிப்பதற்குத் தடையாக இருக்க இதை அனுமதிக்கவில்லை. உண்மையில், தாவீதுக்கும் யோனத்தானுக்கும் இடையே இருந்த உறவு அதிக பலமாக ஆனது. (1 சாமுவேல் 15:22, 23; 18:1-3; 20:41) ஆகையால் சபையில் இருக்கும் அனைவரும் யெகோவாவுக்கு விரோதமாக பாவம்செய்யும் கிறிஸ்தவர்களின் உறவினர்களிடம் அன்பாகவும் அவர்களுக்கு ஆதரவாகவும் இருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட உண்மைத்தன்மையுள்ள நபர்களை அசட்டை செய்வதோ அல்லது தயவு காண்பிக்காமல் இருப்பதோ எவ்வளவு அன்பற்றதாய் இருக்கும்! உண்மைத்தன்மையுள்ள குடும்ப அங்கத்தினர்களுக்கு உற்சாகம் பெற்றுக்கொள்ள விசேஷ தேவை இருக்கிறது. அவர்கள் தனிமையாக உணரலாம், அவர்களுடைய நிலைமையை அதிகக் கடினமானதாக காணலாம். நீங்கள் அவர்களோடு தொலைபேசியின் மூலம் ஒரு ஆவிக்குரிய மகிழ்வூட்டும் கருத்தை அல்லது கட்டியெழுப்பும் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளலாம். சபைநீக்கம் செய்யப்பட்ட நபர் தொலைபேசியில் பதிலளித்தாரென்றால், கிறிஸ்தவ உறவினரிடம் பேசும்படி வெறுமனே கேளுங்கள். அப்படிப்பட்ட குடும்பத்திலுள்ள உண்மையுள்ள அங்கத்தினர்களை ஒரு தோழமைக் கூட்டத்துக்கோ அல்லது உங்களுடைய வீட்டில் உணவுக்கோ நீங்கள் அழைக்கலாம். கடையில் பொருட்களை வாங்கும்போது அவர்களை சந்தித்தால், அந்தச் சந்தர்ப்பத்தைக் கட்டியெழுப்பும் கூட்டுறவுக்காகப் பயன்படுத்தலாம். சபைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் உறவினர்களைக் கொண்டிருக்கும் உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் யெகோவாவின் சுத்தமான அமைப்பின் பாகமாக இன்னும் இருக்கின்றனர் என்பதை நினைவில் வையுங்கள். அவர்கள் எளிதில் தனிமையாகி உற்சாகமிழந்துவிடக்கூடும். ஆகையால், அவர்களிடம் அன்பையும் தயவையும் காண்பிக்க விழிப்புள்ளவர்களாய் இருங்கள். ‘விசுவாச குடும்பத்தார்களுக்கு’ தொடர்ந்து நன்மை செய்யுங்கள்.—கலாத்தியர் 6:10.
யெகோவாவின் ஏற்பாட்டை மதித்துணருங்கள்
யெகோவா தேவன் தம் வணக்கத்தார் அடங்கிய உலகளாவிய குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரிடமும் கனிவான அக்கறையைக் காண்பிக்கிறார் என்பதைக் குறித்து நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கலாம். அவருக்கு முன்பாக நீதியான வழியில் நடப்பதற்கு நமக்கு உதவிசெய்ய, அவருடைய அமைப்பின் மூலமாக அவர் அன்பாக ஒரு ஏற்பாட்டைச் செய்திருக்கிறார். குடும்ப அங்கத்தினர் ஒருவர் வேண்டுமென்றே பாவத்தைச் செய்து சபையிலிருந்து நீக்கப்பட வேண்டியதாயிருந்தாலும்கூட, அவர் உண்மையிலேயே மனந்திரும்பினாரேயென்றால் மறுபடியும் திரும்பி வருவதற்கு ஒரு வழி உள்ளது. இது பின்வரும் உதாரணத்தால் விளக்கிக் காட்டப்பட்டிருக்கிறது:
மூப்பர்கள் ஒரு நபருக்கு உதவிசெய்ய முயற்சி செய்திருந்தார்கள், அவளுடைய பெயர் ஆனா என்று வைத்துக்கொள்வோம். ஆனால் அவளோ புகைபிடித்தல், மதுபானம் அருந்துதல், போதை பொருட்களை உட்கொள்ளுதல் போன்ற பழக்கங்களில் ஈடுபட்டாள். அவள் மனந்திரும்பாமல் இருந்தாள், சபையில் நிலைத்திருக்கவுமில்லை. இருந்தபோதிலும் ஆனா விரைவில் யெகோவாவின் சுத்தமான சபையின் அன்பான தோழமையைத் தவற விடுவதைக் குறித்து வருந்த ஆரம்பித்தாள், உதவிக்காக அவரிடம் ஜெபித்தாள். வழிவிலகிப் போகிறவர்கள் பேரில் மூப்பர்கள் எவ்வளவு அக்கறை காண்பிக்கின்றனர் என்பதை அவள் முழுவதுமாக போற்றவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறாள். ஆனா மீண்டும் கூட்டங்களுக்கு ஆஜராக ஆரம்பித்தாள், இது மனந்திரும்புதலுக்கு வழிநடத்தியது. அதற்குப் பிறகு, அவள் மீண்டும் அன்பாகவும் பாதுகாப்பாகவும் இருந்த சபைக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டாள். மீண்டும் ஆனா யெகோவாவின் உயர்ந்த ஒழுக்க தராதரத்தை உறுதியாகக் கடைப்பிடித்து வருகிறாள். மூப்பர்கள் காண்பித்த அன்புக்கு அவள் நன்றியுள்ளவளாய் இருக்கிறாள், இவ்வாறும்கூட குறிப்பிடுகிறாள்: “கிறிஸ்தவ பிரசுரங்கள் எனக்கு எவ்வளவு உதவியாயிருந்தன என்பதைக் குறித்து நீங்கள் கற்பனை செய்ய முடியாது. யெகோவா நிச்சயமாகவே நம்முடைய தேவைகளை நன்றாகக் கவனித்துக்கொள்கிறார்.”
ஆம், சபையிலிருந்து நீக்கப்பட்டு பின்பு மனந்திரும்புகிறவர்களுக்காக யெகோவா ஒரு வழியை ஏற்பாடு செய்திருக்கிறார். சபைநீக்கம் செய்வதே ஓர் அன்பான ஏற்பாடு என்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் நம்முடைய பரிசுத்த கடவுளின் நீதியான வழிகளை எப்போதும் கடைப்பிடிப்பதன் மூலம் இந்த வருத்தமான அனுபவத்தைத் தவிர்ப்பது எவ்வளவு மேலானது! யெகோவாவின் சுத்தமான, அன்பான, பாதுகாப்பான அமைப்பின் பாகமாக அவரைத் துதிக்கும் சிலாக்கியத்தைக் கொண்டிருப்பதற்காக நாம் எப்போதும் நன்றியுள்ளவர்களாய் இருப்போமாக.
[பக்கம் 26-ன் படம்]
சபைநீக்கம் செய்யப்பட்டோரின் உண்மையாய் நிலைத்திருக்கும் உறவினரிடம் நீங்கள் அன்பு காட்டுகிறீர்களா?