‘அடைக்கலப்பட்டணத்தில்’ நிலைத்திருந்து உயிர்வாழுங்கள்!
“கொலைசெய்தவன் பிரதான ஆசாரியன் மரணமடையுமட்டும் அடைக்கலப்பட்டணத்திலிருக்கவேண்டும்”—எண்ணாகமம் 35:28.
1. இரத்தப் பழிவாங்குபவர் யார், சீக்கிரத்தில் அவர் என்ன நடவடிக்கை எடுப்பார்?
யெகோவா நியமித்த, இரத்தப் பழிவாங்குபவராகிய இயேசு கிறிஸ்து, தாக்கும் நிலையில் இருக்கிறார். பழிவாங்குபவரான இவர், மனந்திரும்பாமல் இரத்தப்பழியுடனிருக்கிற எல்லாருக்கும் எதிராக, சீக்கிரத்தில் தம்முடைய தேவதூதர் சேனைகளோடுகூட நடவடிக்கை எடுப்பார். ஆம், விரைவில் நெருங்கிக்கொண்டிருக்கிற ‘மிகுந்த உபத்திரவத்தின்போது’ இயேசு, கடவுள் அளித்த ஆக்கினைத் தீர்ப்பை நிறைவேற்றுபவராகச் சேவிப்பார். (மத்தேயு 24:21, 22; ஏசாயா 26:21) அப்போது மனிதகுலம் தங்கள் இரத்தப்பழியின் விளைவை நேருக்குநேர் எதிர்ப்பட செய்யப்படுவர்.
2. அடைக்கலத்திற்கான ஒரே உண்மையான இடம் எது, என்ன கேள்விகளுக்குப் பதில்கள் தேவைப்படுகின்றன?
2 பாதுகாப்புக்கான வழியானது, மாதிரி முன்குறித்த அடைக்கலப்பட்டணத்துக்குச் செல்லும் பாதையை அடைந்து தன் உயிரைக் காப்பதற்காக ஓடுவதேயாகும்! அந்தப் பட்டணத்தில் ஏற்கப்பட்டால், அடைக்கலம் புகுபவன் அங்கே நிலைத்திருக்க வேண்டும், ஏனெனில் அதுவே அடைக்கலத்திற்குரிய உண்மையான ஒரே இடம். ஆனால் நீங்கள் இவ்வாறு சிந்திக்கலாம், ‘நம்மில் பெரும்பான்மையர், எவரையும் ஒருபோதும் கொன்றதில்லையாதலால், நாம் உண்மையில் இரத்தப்பழியுடையவர்களா? இயேசு ஏன் இரத்தப் பழிவாங்குபவராக இருக்கிறார்? நவீனநாளைய அந்த அடைக்கலப்பட்டணம் எது? எவராவது தீங்கு ஏற்படாமல் அதைவிட்டு என்றாவது செல்லக்கூடுமா?’
நாம் உண்மையில் இரத்தப்பழியுடையவர்களா?
3. பூமியின் கோடிக்கணக்கானோர் இரத்தப்பழியில் பங்குடையவர்கள் என்பதைக் காண மோசேயுடைய நியாயப்பிரமாணத்தின் எந்தப் பகுதி நமக்கு உதவிசெய்யும்?
3 பூமியின் கோடிக்கணக்கானோர் இரத்தப்பழியில் பங்குடையவர்கள் என்பதைக் காண மோசேயின் நியாயப்பிரமாணத்திலுள்ள ஒரு பகுதி நமக்கு உதவிசெய்யும். இரத்தம் சிந்தப்பட்டதற்கான ஒரு கூட்டுப் பொறுப்பைக் கடவுள் இஸ்ரவேலின்மீது வைத்தார். ஒருவன் கொல்லப்பட்டிருந்ததைக் கண்டு, அவனைக் கொலைசெய்தவன் யாரென்று அறியாதிருந்தால், நியாயாதிபதிகள், அதற்கு மிக அருகிலுள்ள பட்டணம் எதுவெனத் தீர்மானிக்க, சுற்றிலுமிருந்த பட்டணங்களின் தூரத்தை அளக்க வேண்டியிருந்தது. இரத்தப்பழியுடையதாகத் தோன்றும் அந்தப் பட்டணத்தின் மூப்பர்கள், குற்றப் பழியை நீக்குவதற்கு, வேலைக்கு உட்படுத்தப்பட்டிராத ஓர் இளம் கிடாரியின் கழுத்தை, பயிரிடப்படாத நீரோட்டமுள்ள ஒரு பள்ளத்தாக்கில் முறிக்க வேண்டியிருந்தது. இது லேவிய ஆசாரியர்களுக்கு முன்பாகச் செய்யப்பட்டது, ‘அவர்கள் சொற்படியே எந்த வழக்கும் எந்தக் காயச் சேதமும் தீர்க்கப்படும்படி யெகோவா அவர்களைத் தெரிந்துகொண்டபடியால்,’ அவ்வாறு செய்யப்பட்டது. அந்தப் பட்டணத்தின் மூப்பர்கள் அந்தக் கிடாரியின்மேல் தங்கள் கைகளைக் கழுவி: “எங்கள் கைகள் அந்த இரத்தத்தைச் சிந்தினதுமில்லை, எங்கள் கண்கள் அதைக் கண்டதுமில்லை; யெகோவாவே, நீர் மீட்டுக்கொண்ட உமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மன்னிப்புத்தாரும், குற்றமில்லாத இரத்தம் உமது ஜனமாகிய இஸ்ரவேலரின் நடுவிலிருக்க வொட்டாதேயும்,” என்று சொன்னார்கள். (உபாகமம் 21:1-9, திருத்திய மொழிபெயர்ப்பு) இஸ்ரவேல் தேசம் இரத்தத்தால் கறைபடவோ அதன் ஜனங்கள் கூட்டு இரத்தப்பழியைச் சுமக்கவோ யெகோவா தேவன் விரும்பவில்லை.
4. மகா பாபிலோன் என்ன இரத்தப்பழியுடைய பதிவைக் கொண்டிருக்கிறது?
4 ஆம், கூட்டு, அல்லது சமுதாய இரத்தப்பழி எனப்படும் ஒன்று உள்ளது. பொய்மத உலகப் பேரரசாகிய மகா பாபிலோனின்மீது தங்குகிற மிகப்பெரும் இரத்தப்பழியைச் சிந்தித்துப் பாருங்கள். யெகோவாவின் ஊழியர்களுடைய இரத்தத்தால் அவள் வெறிகொண்டிருக்கிறாளே! (வெளிப்படுத்துதல் 17:5, 6; 18:24) கிறிஸ்தவமண்டலத்தின் மதங்கள் சமாதானப் பிரபுவைப் பின்பற்றுவதாக உரிமைபாராட்டுகின்றன, ஆனால் போர்களும், மதசம்பந்தக் கொடூர விசாரணைகளும், கொன்றழிக்கும் சிலுவைப் போர்களும் அவற்றைக் கடவுளுக்கு முன்பாக இரத்தப்பழியுடையவை ஆக்கியிருக்கின்றன. (ஏசாயா 9:6; எரேமியா 2:34) உண்மையில், இந்த நூற்றாண்டின் இரண்டு உலகப் போர்களிலும் உண்டான பல கோடிக்கணக்கான மரணங்களுக்குப் பெரும்படியான இரத்தப்பழியை அவை சுமக்க வேண்டும். ஆகையால் பொய்மதத்தைக் கடைப்பிடிப்போரும், அதோடு மனிதப் போர் நடவடிக்கைகளை ஆதரிப்போரும் அவற்றில் பங்குகொள்வோரும் கடவுளுக்கு முன்பாக இரத்தப்பழியுடையோராக இருக்கின்றனர்.
5. எவ்வாறு சில ஆட்கள், இஸ்ரவேலில் வேண்டுமென்றே செய்யாத கொலைபாதகனைப்போல் இருந்திருக்கின்றனர்?
5 சிலர் வேண்டுமென்றே அல்லது கவனக்குறைவால் மனிதருக்கு மரணத்தை விளைவித்திருக்கின்றனர். மற்றவர்கள் மொத்தமாய்க் கொல்லுதலில் பங்கெடுத்திருக்கின்றனர். இது கடவுளுடைய சித்தம் என்று மதத் தலைவர்களால் நம்பவைக்கப்பட்டு அவ்வாறு செய்திருக்கலாம். இன்னும் சிலர் கடவுளுடைய ஊழியரைத் துன்புறுத்திக் கொன்றிருக்கின்றனர். இத்தகைய காரியங்களை நாம் செய்யவில்லை என்றாலும்கூட, கடவுளுடைய சட்டத்தையும் சித்தத்தையும் நாம் அறியாததால், மனித உயிர் இழக்கப்பட்டதற்குப் பொதுச் சமுதாயப் பொறுப்பில் பங்குகொள்கிறோம். “தான் முன்னே பகைத்திராத பிறனொருவனை மனதறியாமல் கொன்ற” வேண்டுமென்றே செய்யாத கொலைபாதகனைப்போல் நாம் இருக்கிறோம். (உபாகமம் 19:4) இத்தகைய ஆட்கள் இரக்கத்திற்காகக் கடவுளை மன்றாடிக் கேட்டு அடையாளம் முன்குறித்த அந்தப் பட்டணத்திற்குள் ஓடிப்போக வேண்டும். மற்றப்படி அவர்கள் உயிருக்கு ஆபத்துண்டாக இரத்தப் பழிவாங்குபவரை எதிர்ப்படுவார்கள்.
இயேசு வகிக்கும் முக்கிய பாகங்கள்
6. இயேசு, மனிதகுலத்தின் நெருங்கிய உறவினரென்று ஏன் சொல்லக்கூடும்?
6 இஸ்ரவேலில் இரத்தப் பழிவாங்குபவன் கொல்லப்பட்டவனின் மிக நெருங்கிய உறவினனாக இருந்தான். பூமியில் கொல்லப்பட்ட யாவருக்காகவும், முக்கியமாய்க் கொல்லப்பட்ட யெகோவாவின் ஊழியருக்காகவும் பழிவாங்குவதற்கு, தற்கால இரத்தப் பழிவாங்குபவர் மனிதகுலம் முழுவதற்கும் உறவினராக இருக்க வேண்டும். இந்தப் பாகத்தை இயேசு கிறிஸ்து நிரப்பியிருக்கிறார். அவர் பரிபூரண மனிதனாகப் பிறந்தார். தம்முடைய பாவமற்ற உயிரை மீட்கும் விலைமதிப்பாக மரணத்தில் ஒப்புக்கொடுத்தார். அவர் உயிர்த்தெழுந்து பரலோகத்திற்குச் சென்றபின், அதன் விலைமதிப்பை ஆதாமின் பாவமுள்ள மரிக்கும் சந்ததியாருக்காகக் கடவுளுக்குச் செலுத்தினார். இவ்வாறு கிறிஸ்து மனிதகுலத்தின் மீட்பரானார், நம்முடைய மிக நெருங்கிய உறவினராக—உரிமையுள்ள இரத்தப் பழிவாங்குபவரானார். (ரோமர் 5:12; 6:23; எபிரெயர் 10:12, NW) இயேசு, தம்முடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றும் அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்குச் சகோதரராக அடையாளம் காட்டப்படுகிறார். (மத்தேயு 25:40, 45; எபிரெயர் 2:11-17) பரலோக அரசராக அவர், பூமிக்குரிய தம்முடைய குடிமக்களாக, தம்முடைய பலியிலிருந்து பயன்பெறுவோருக்கு “நித்திய பிதா” ஆகிறார். இவர்கள் என்றென்றும் வாழ்வார்கள். (ஏசாயா 9:6, 7) ஆகவே மனிதகுலத்தின் இந்த உறவினரை இரத்தப் பழிவாங்குபவராக யெகோவா பொருத்தமாய் நியமித்திருக்கிறார்.
7. பெரிய பிரதான ஆசாரியராக இயேசு, மனிதருக்காக என்ன செய்கிறார்?
7 மேலும் இயேசு, பாவமற்ற, பரீட்சிக்கப்பட்ட, பரிவிரக்கமுள்ள பிரதான ஆசாரியராகவும் இருக்கிறார். (எபிரெயர் 4:15) அந்த நிலையில் அவர், மனிதகுலத்திற்குப் பாவ நிவிர்த்தி செய்யும் தம்முடைய பலியின் மதிப்பைப் பயன்படுத்துகிறார். அடைக்கலப்பட்டணங்கள் ‘இஸ்ரவேல் புத்திரருக்கும் அவர்கள் நடுவே இருக்கும் பரதேசிக்கும் அந்நியனுக்கும்’ ஏற்படுத்தப்பட்டன. (எண்ணாகமம் 35:15) ஆகவே பெரிய பிரதான ஆசாரியர் தம்முடைய பலியின் பயன்மதிப்பை தம்மைப் பின்பற்றும் அபிஷேகம் செய்யப்பட்டவர்களாகிய ‘இஸ்ரவேல் புத்திரருக்கு’ முதலாவதாகப் பயன்படுத்தினார். இப்போது, மாதிரி முன்குறித்த அடைக்கலப்பட்டணத்திலுள்ள ‘பரதேசிகளுக்கும்’ ‘அந்நியருக்கும்’ பயன்படுத்தப்படுகிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இந்த “மற்ற செம்மறியாடுகள்” பூமியில் என்றென்றும் வாழும்படியான நம்பிக்கை உடையோராக இருக்கின்றனர்.—யோவான் 10:16, NW; சங்கீதம் 37:29, 34.
இன்றைய அடைக்கலப்பட்டணம்
8. மாதிரி முன்குறித்த அடைக்கலப்பட்டணம் எது?
8 மாதிரி முன்குறித்த அந்த அடைக்கலப்பட்டணம் எது? இது, லேவிய அடைக்கலப்பட்டணங்கள் ஆறில் ஒன்றும் இஸ்ரவேலின் பிரதான ஆசாரியனுடைய வீடுமான எபிரோனைப் போன்ற புவியியல் சார்ந்த இடமல்ல. இன்றைய அடைக்கலப்பட்டணமானது, இரத்தத்தின் பரிசுத்தத் தன்மையைப்பற்றிய கடவுளுடைய கட்டளையை மீறினதற்காக மரணமடைவதிலிருந்து நம்மைப் பாதுகாப்பதற்குரிய கடவுளுடைய ஏற்பாடாகும். (ஆதியாகமம் 9:6) வேண்டுமென்றே அல்லது வேண்டுமென்றில்லாமல் அந்தக் கட்டளையை மீறின ஒவ்வொருவரும் கடவுளுடைய மன்னிப்பையும், பிரதான ஆசாரியராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தில் வைக்கும் விசுவாசத்தின் மூலம் தன் பாவம் நீக்கப்படுவதையும் நாடித்தேட வேண்டும். பரலோக நம்பிக்கைகளையுடைய அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களும் பூமிக்குரிய எதிர்பார்ப்புகளையுடைய ‘திரள் கூட்டத்தாரும்’ பாவநிவிர்த்தி செய்யும் இயேசுவின் பலியினுடைய நன்மைகளைத் தங்களுக்குப் பயன்படுத்திக்கொண்டு, மாதிரி முன்குறித்த அடைக்கலப்பட்டணத்தில் இருக்கின்றனர்.—வெளிப்படுத்துதல் 7:9, 14; 1 யோவான் 1:7; 2:1, 2.
9. தர்சு பட்டணத்து சவுல், இரத்தத்தைப்பற்றிய கடவுளுடைய கட்டளையை எவ்வாறு மீறினார், ஆனால் எவ்வாறு மனமாற்றத்தைக் காட்டினார்?
9 அப்போஸ்தலன் பவுல், தான் கிறிஸ்தவராவதற்கு முன்னால், இரத்தத்தைப் பற்றிய இந்தக் கட்டளையை மீறியிருந்தார். தர்சு பட்டணத்து சவுலாக அவர், இயேசுவைப் பின்பற்றினவர்களைத் துன்புறுத்தி அவர்கள் கொலைசெய்யப்படுவதையும் சம்மதித்தார். “அப்படியிருந்தும், நான் அறியாமல் அவிசுவாசத்தினாலே அப்படிச் செய்தபடியினால் இரக்கம் பெற்றேன்” என்று பவுல் சொன்னார். (1 தீமோத்தேயு 1:13; அப்போஸ்தலர் 9:1-19) மனம்வருந்தி மாறின மனப்பான்மை சவுலுக்கு இருந்தது. பின்னால் இது, விசுவாசச் செயல்கள் பலவற்றால் நிரூபிக்கப்பட்டது. ஆனால், மாதிரி முன்குறித்த அடைக்கலப்பட்டணத்திற்குள் பிரவேசிப்பதற்கு, மீட்கும் பலியில் விசுவாசம் வைப்பதைப் பார்க்கிலும் அதிகம் தேவைப்படுகிறது.
10. நல்மனச்சாட்சியை அடைவது எவ்வாறு கூடியதாயுள்ளது, அதைக் காத்துவர என்ன செய்ய வேண்டும்?
10 வேண்டுமென்றே செய்யாத கொலைபாதகன், இரத்தம் சிந்துதல் சம்பந்தமாய்த் தனக்குக் கடவுளிடமாக நல்மனச்சாட்சி இருந்ததென்று தான் நிரூபிக்கக்கூடுமானால் மாத்திரமே இஸ்ரவேலின் அடைக்கலப்பட்டணங்கள் ஒன்றில் தங்கியிருக்கக்கூடும். நல்மனச்சாட்சியை அடைய நாம் இயேசுவின் பலியில் விசுவாசம் வைத்து, நம்முடைய பாவங்களைவிட்டு மனந்திரும்பி, நம்முடைய நடத்தைப்போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். கிறிஸ்துவின் மூலமாகக் கடவுளுக்கு ஜெபத்துடன் ஒப்புக்கொடுத்தலில் நல்மனச்சாட்சிக்காக நாம் வேண்டிக்கொண்டு, தண்ணீரில் முழுக்காட்டப்படுவதால் இதை அடையாளப்படுத்த வேண்டும். (1 பேதுரு 3:20, 21) இந்த நல்மனச்சாட்சி யெகோவாவுடன் சுத்தமான ஓர் உறவை அடைய நம்மை அனுமதிக்கிறது. நல்மனச்சாட்சியைக் காத்துவருவதற்கு ஒரே வழியானது, கடவுள் கட்டளையிட்டிருப்பவற்றிற்குக் கீழ்ப்படிந்து, மாதிரி முன்குறித்த அடைக்கலப்பட்டணத்தில் நமக்கு நியமிக்கப்பட்ட வேலையை நிறைவேற்றி வருவதேயாகும். பூர்வ அடைக்கலப்பட்டணங்களில் அடைக்கலம் புகுந்தவர்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படியவும் தங்கள் வேலை நியமிப்புகளை நிறைவேற்றிவரவும் வேண்டியதாக இருந்ததைப்போலவே நாமும் செய்ய வேண்டும். ராஜ்ய செய்தியை அறிவிப்பதே இன்று யெகோவாவின் ஜனங்களுக்குரிய முக்கியமான வேலை. (மத்தேயு 24:14; 28:19, 20) இந்த வேலையைச் செய்து வருவது, இந்நாளைய அடைக்கலப்பட்டணத்தின் பயனுள்ள குடியிருப்பாளராக இருக்கும்படி நமக்கு உதவிசெய்யும்.
11. இன்றைய அடைக்கலப்பட்டணத்திற்குள் பாதுகாப்புடன் நாம் நிலைத்திருக்க வேண்டுமானால் எதைத் தவிர்க்க வேண்டும்?
11 இன்றைய அடைக்கலப்பட்டணத்தை விட்டுச் செல்வதானது, அழிவுக்குட்படும் நிலையில் நம்மைப் பாதுகாப்பின்றி வைப்பதாயிருக்கும். ஏனெனில் இரத்தப்பழியுள்ளோர் யாவருக்கும் எதிராக இரத்தப் பழிவாங்குபவர் சீக்கிரத்தில் செயல்படுவார். இந்தப் பாதுகாப்பான பட்டணத்திற்கு வெளியில் அல்லது இதன் மேய்ச்சல் நிலங்களின் வெளியோரத்துக்கருகில் உள்ள ஆபத்தான பகுதியில் கண்டுபிடிக்கப்படுவதற்கு இது சமயமல்ல. பாவநிவிர்த்தி செய்யும் பிரதான ஆசாரியனின் பலியில் நாம் விசுவாசத்தை இழந்தால் மாதிரி முன்குறித்த அடைக்கலப்பட்டணத்திற்குப் புறம்பே முடிவடைவோம். (எபிரெயர் 2:1; 6:4-6) உலக வழிகளை ஏற்று, யெகோவாவினுடைய அமைப்பின் விளிம்பில் நிற்போராக, அல்லது நம்முடைய பரலோகத் தகப்பனின் நீதியுள்ள தராதரங்களைவிட்டு விலகிய நிலையில் இருந்தால் நாமும் பாதுகாப்பாக இருக்க முடியாது.—1 கொரிந்தியர் 4:4.
அடைக்கலப்பட்டணத்திலிருந்து விடுதலை பெறுதல்
12. முந்நாளில் இரத்தப்பழியுடையோராக இருந்தவர்கள், மாதிரி முன்குறித்த அடைக்கலப்பட்டணத்தில் எவ்வளவு காலம் தங்கியிருக்க வேண்டும்?
12 இஸ்ரவேலில் வேண்டுமென்று செய்யாத கொலைபாதகன், “பிரதான ஆசாரியன் மரணமடையுமட்டும்” அடைக்கலப்பட்டணத்திற்குள் தங்கியிருக்க வேண்டும். (எண்ணாகமம் 35:28) அவ்வாறெனில் முன்பு இரத்தப்பழியுடையவர்களாக இருந்தவர்கள் மாதிரி முன்குறித்த அடைக்கலப்பட்டணத்தில் எவ்வளவு காலம் தங்கியிருக்க வேண்டும்? பிரதான ஆசாரியராகிய இயேசு கிறிஸ்துவின் சேவைகள் தங்களுக்கு இனிமேலும் தேவையில்லாத சமயம் வரையில் அங்கிருக்க வேண்டும். அவர் “தமது மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்க[ளை] . . . முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்,” என்று பவுல் சொன்னார். (எபிரெயர் 7:25) ஏதாவது பாவக் கறைகளும் முன்னாள் இரத்தப்பழியும் தொடர்ந்துகொண்டிருக்கும் வரையில், அபூரண மனிதர் கடவுளுடன் சரியான நிலைநிற்கையை உடையோராக இருக்கக் கூடும்படி, பிரதான ஆசாரியனின் சேவைகள் தேவைப்படுகின்றன.
13. தற்கால “இஸ்ரவேல் புத்திரர்” யார், இவர்கள் எவ்வளவு காலம் “அடைக்கலப்பட்டணத்தில்” தங்கியிருக்க வேண்டும்?
13 பூர்வ கால அடைக்கலப்பட்டணங்கள், ‘இஸ்ரவேல் புத்திரருக்காகவும்,’ பரதேசிகளுக்காகவும், அந்நியருக்காகவும் ஸ்தாபிக்கப்பட்டனவென்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். ‘இஸ்ரவேல் புத்திரர்’ ஆவிக்குரிய இஸ்ரவேலராவர். (கலாத்தியர் 6:16) இவர்கள் பூமியில் வாழும் வரையில் மாதிரி முன்குறித்த அடைக்கலப்பட்டணத்தில் தங்கியிருக்க வேண்டும். ஏன்? ஏனெனில் அவர்கள் அபூரண மாம்சத்தில் இன்னும் இருந்துகொண்டிருக்கின்றனர், ஆகவே, தங்கள் பரலோகப் பிரதான ஆசாரியரின் நிவிர்த்தி செய்யும் விலைமதிப்பு அவர்களுக்குத் தேவைப்படுகிறது. ஆனால் அபிஷேகம் செய்யப்பட்ட இந்தக் கிறிஸ்தவர்கள் இறந்து பரலோகத்தில் ஆவி வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்படும்போது, பிரதான ஆசாரியனின் நிவிர்த்தி செய்யும் சேவைகள் அவர்களுக்கு அதற்கு மேலும் தேவையில்லை; மாம்சத்தையும் அதோடு சேர்ந்த இரத்தப்பழியையும் அவர்கள் என்றென்றுமாக விட்டுவிலகியவர்களாக இருப்பர். உயிர்த்தெழுப்பப்பட்ட அத்தகையோரான அபிஷேகம் செய்யப்பட்டவர்களிடமாகப் பிரதான ஆசாரியர், ஈடுசெய்யும் பாதுகாப்புக்குரிய ஒரு ஆற்றலைக் குறித்ததில் மரித்திருப்பார்.
14. பரலோக எதிர்பார்ப்புகளை உடையவர்கள் இன்றைய அடைக்கலப்பட்டணத்தில் தங்கியிருப்பதை வேறு எதுவும் தேவைப்படுத்துகிறது?
14 மனித இயல்பைக் கொண்டிருப்பது தானேயும், ‘கிறிஸ்துவுடன்’ பரலோக ‘உடன் சுதந்தரராக’ இருக்கப்போகிறவர்கள் உண்மையுள்ளவர்களாய்த் தங்கள் பூமிக்குரிய வாழ்க்கையை மரணத்தில் முடிக்கும் வரையில் இந்த மாதிரி முன்குறித்த அடைக்கலப்பட்டணத்தில் தங்கியிருப்பதை தேவைப்படுத்துகிறது. அவர்கள் மரிக்கும்போது, மனித இயல்பை என்றென்றுமாகப் பலிசெலுத்திவிடுகின்றனர். (ரோமர் 8:17; வெளிப்படுத்துதல் 2:10) மனித இயல்புடையோருக்கு மாத்திரமே இயேசுவின் பலி பயன்படுகிறது. ஆகையால், ஆவிக்குரிய இஸ்ரவேலரானவர்கள் உயிர்த்தெழுப்பப்பட்டு ‘தெய்வ சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாக’ பரலோகத்தில் என்றென்றுமாக வாசம் செய்யப்போகிறவர்களாய், ஆவி சிருஷ்டிகளாக உயிர்த்தெழுப்பப்படும்போது, பிரதான ஆசாரியர் அவர்களைக் குறித்ததில் மரித்தவராகிறார்.—2 பேதுரு 1:4, தி.மொ.
15. இன்றைய ‘பரதேசிகளும்’ ‘அந்நியர்களும்’ யாவர், பெரிய பிரதான ஆசாரியர் அவர்களுக்காக என்ன செய்வார்?
15 தற்கால ‘பரதேசிகளும்’ ‘அந்நியருமானவர்கள்’ மாதிரி முன்குறித்த அடைக்கலப்பட்டணத்தைவிட்டுச் செல்ல அனுமதிக்கப்படுவதற்கு அவர்களைக் குறித்ததில் பிரதான ஆசாரியன் எப்போது ‘மரிக்கிறார்’? இந்தத் திரள் கூட்ட உறுப்பினர் பெரிதான உபத்திரவத்திற்குப் பின் உடனடியாக இந்த அடைக்கலப்பட்டணத்தைவிட்டு வெளிவர முடியாது. ஏன் வெளிவர முடியாது? ஏனெனில், அவர்கள் இன்னும் தங்கள் அபூரண, பாவ மாம்சத்தில் இருப்பார்கள், பிரதான ஆசாரியனுடைய பாதுகாப்பின்கீழ் நிலைத்திருக்க வேண்டியிருக்கும். அவருடைய ஆயிர ஆண்டு அரசாட்சி மற்றும் ஆசாரியத்துவ காலத்தின்போது பாவநிவிர்த்திக்காகச் செய்யும் அவருடைய சேவைகளைத் தங்களுக்குப் பயன்படுத்திக்கொள்வதன் மூலம், அவர்கள் மனித பரிபூரணத்தை அடைவர். சாத்தானையும் அவனுடைய பேய்களையும் கொஞ்சக் காலம் கட்டவிழ்த்து விடுவதால் அவர்களுடைய உத்தமத்தைப் பரீட்சிக்கும் கடைசியும், நித்தியத் தீர்வானதுமான ஒரு பரீட்சைக்காக இயேசு அவர்களைக் கடவுளிடம் ஒப்படைப்பார். அவர்கள் இந்தப் பரீட்சையில் கடவுளுடைய அங்கீகாரத்துடன் தேறுவதனால், யெகோவா அவர்களை நீதியுள்ளவர்களென்று அறிவிப்பார். இவ்விதமாக அவர்கள் மனித பரிபூரணத்தின் முழுமைக்கே சென்றுவிடுவர்.—1 கொரிந்தியர் 15:28; வெளிப்படுத்துதல் 20:7-10.a
16. பெரிதான உபத்திரவத்தைத் தப்பிப் பிழைப்போருக்குப் பாவநிவிர்த்திக்குரிய பிரதான ஆசாரியனின் சேவைகள் எப்போது இனிமேலும் தேவையிராது?
16 ஆகவே, பெரிதான உபத்திரவத்தைத் தப்பிப் பிழைப்போர், கிறிஸ்துவின் ஆயிர ஆண்டு ஆட்சியின் முடிவு வரையாக, மாதிரி முன்குறித்த அடைக்கலப்பட்டணத்தில் தங்கியிருப்பதன்மூலம் நல்மனச்சாட்சியைக் காத்துவரவேண்டும். பரிபூரணமடைந்த மானிடராக, பாவநிவிர்த்திக்குரிய பிரதான ஆசாரியனின் சேவைகள் அதற்கு மேலும் அவர்களுக்குத் தேவையிராது, அவருடைய பாதுகாப்பின்கீழிருந்து வெளிவருவார்கள். அப்போது இயேசு, பிரதான ஆசாரியராக அவர்களுக்கு மரிப்பார், ஏனெனில், சுத்திகரிக்கும் தம்முடைய பலியின் இரத்தத்தைக்கொண்டு அவர்கள் நிமித்தம் அவர் இனிமேலும் செயல்பட வேண்டியதில்லை. அந்தச் சமயத்தில் அவர்கள் மாதிரி முன்குறித்த அடைக்கலப்பட்டணத்தை விட்டுச் செல்வார்கள்.
17. கிறிஸ்துவின் ஆயிர ஆண்டு ஆட்சியின்போது உயிர்த்தெழுப்பப்படுபவர்கள், மாதிரி முன்குறித்த அடைக்கலப்பட்டணத்தில் பிரவேசித்து அங்கே தங்கியிருப்பதற்கு ஏன் அவசியமிராது?
17 இயேசுவின் ஆயிர ஆண்டு ஆட்சியின்போது உயிர்த்தெழுப்பப்படுவோர், மாதிரி முன்குறித்த அடைக்கலப்பட்டணத்திற்குள் பிரவேசித்து, பிரதான ஆசாரியனின் மரணம் வரையில் அங்கே தங்கியிருக்க வேண்டுமா? இல்லை, ஏனெனில் மரித்ததன்மூலம் அவர்கள் தங்கள் பாவத்தன்மைக்கான தண்டனையைப் பெற்றுவிட்டனர். (ரோமர் 6:7; எபிரெயர் 9:27) இருப்பினும், பரிபூரணமடைவதற்குப் பிரதான ஆசாரியர் அவர்களுக்கு உதவிசெய்வார். அந்த ஆயிர ஆண்டுகளுக்குப் பின்னான கடைசி பரீட்சையை அவர்கள் வெற்றிகரமாய்த் தேறினால், பூமியில் நித்திய ஜீவ வாக்குடன் கடவுளும் அவர்களை நீதியுள்ளோராகத் தீர்ப்பார். கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியத் தவறுவது, உத்தமத்தைக் காப்பவர்களாகக் கடைசி பரீட்சையில் தேறாத எந்த மனிதரின்மீதும் நிச்சயமாகவே கண்டனத் தீர்ப்பையும் அழிவையும் கொண்டுவரும்.
18. இயேசுவின் அரச மற்றும் ஆசாரிய பொறுப்புகளைக் குறித்ததில், எது மனிதகுலத்துடன் என்றென்றுமாக நிலைத்திருக்கும்?
18 இஸ்ரவேலரான பிரதான ஆசாரியர்கள் முடிவில் மரித்தார்கள். ஆனால் இயேசு, “மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியராய்” இருக்கிறார். (நேரெழுத்துக்கள் எங்களுடையவை.) (எபிரெயர் 6:19, 20; 7:3) ஆகையால், மனிதகுலத்திற்காக மத்தியஸ்துவம் செய்யும் பிரதான ஆசாரியராக, இயேசுவின் வேலைப்பொறுப்பு முடிவதானது, அவருடைய வாழ்க்கையை முடிவுசெய்கிறதில்லை. அரசராகவும் பிரதான ஆசாரியராகவும் அவருடைய சேவையின் நல்ல பலன்கள் மனிதகுலத்துடன் என்றென்றுமாக நிலைத்திருக்கும். இந்தப் பதவிகளில் அவர் சேவித்ததற்காக மனிதர் அவருக்கு நித்தியகாலமும் நன்றிசெலுத்தக் கடமைப்பட்டவர்களாக இருப்பார்கள். மேலும், நித்திய காலமெல்லாம் இயேசு, யெகோவாவின் தூய்மையான வணக்கத்தில் தலைமை வகித்து நடத்துவார்.—பிலிப்பியர் 2:5-11.
நமக்கு முக்கியத்துவம் வாய்ந்த படிப்பினைகள்
19. பகையையும் அன்பையும் குறித்து, இந்த அடைக்கலப்பட்டண ஏற்பாட்டிலிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்?
19 இந்த அடைக்கலப்பட்டண ஏற்பாட்டிலிருந்து பல்வேறு பாடங்களை நாம் கற்றுக்கொள்ளலாம். உதாரணமாக, கொடும் பகையுடன் ஒருவனைப் பகைத்துக் கொலைசெய்த எவனும் அடைக்கலப்பட்டணம் ஒன்றில் தங்குவதற்கு அனுமதிக்கப்படவில்லை. (எண்ணாகமம் 35:20, 21) அவ்வாறெனில், மாதிரி முன்குறித்த அடைக்கலப்பட்டணத்தில் இருக்கும் எவராவது ஒரு சகோதரனின்பேரில் பகையைத் தன் இருதயத்தில் வளரும்படி எவ்வாறு அனுமதிக்கக்கூடும்? “தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள்,” என அப்போஸ்தலன் யோவான் எழுதினார். ஆகையால் நாம் தொடர்ந்து “ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது.”—1 யோவான் 3:15; 4:7.
20. மாதிரி முன்குறித்த அடைக்கலப்பட்டணத்தில் இருப்பவர்கள், இரத்தப் பழிவாங்குபவரிடமிருந்து பாதுகாப்பாயிருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
20 வேண்டுமென்று செய்யாத கொலைபாதகர்கள், இரத்தப் பழிவாங்குபவனிடமிருந்து பாதுகாப்பாயிருப்பதற்கு, அடைக்கலப்பட்டணத்திற்குள் இருக்க வேண்டும், அதன் மேய்ச்சல்நிலங்களுக்கு அப்பால் திரியக்கூடாது. மாதிரி முன்குறித்த அடைக்கலப்பட்டணத்தில் இருப்போரைப் பற்றியதென்ன? பெரிய இரத்தப் பழிவாங்குபவரிடமிருந்து பாதுகாப்பாயிருப்பதற்கு, அவர்கள் அந்தப் பட்டணத்தைவிட்டு வெளியே போகக்கூடாது. குறிப்பாய்ச் சொல்ல, நிச்சயமாகவே அவர்கள் அந்த மேய்ச்சல் நிலங்களின் ஓரத்தில் செல்லும்படி கவர்ச்சியூட்டி இழுக்கும் காரியங்களுக்கு எதிராகத் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். சாத்தானின் உலகத்திற்கான ஆசை தங்கள் இருதயங்களில் வளர அனுமதிக்காதபடி அவர்கள் கவனமாயிருக்க வேண்டும். இதற்கு ஜெபமும் முயற்சியும் தேவையாயிருக்கும், ஆனால் அவர்களுடைய உயிர் அதன்பேரில் சார்ந்துள்ளதே.—1 யோவான் 2:15-17; 5:19.
21. நற்பயனளிக்கும் என்ன வேலை, இன்றைய அடைக்கலப்பட்டணத்தில் இருப்போரால் செய்யப்பட்டு வருகிறது?
21 பூர்வ அடைக்கலப்பட்டணங்களில் இருந்த, வேண்டுமென்று செய்யாத கொலைபாதகர்கள் பயனுள்ள வேலையாளர்களாக இருக்க வேண்டியிருந்தது. அவ்வாறே, அபிஷேகம் செய்யப்பட்ட ‘இஸ்ரவேல் புத்திரர்’ அறுப்பு வேலையாட்களாகவும் ராஜ்ய பிரஸ்தாபிகளாகவும் சிறந்த முன்மாதிரியை வைத்திருக்கின்றனர். (மத்தேயு 9:37, 38; மாற்கு 13:10) இன்றைய அடைக்கலப்பட்டணத்தில் ‘பரதேசிகளும்’ ‘அந்நியருமாக’ இருப்போரான, பூமிக்குரிய எதிர்பார்ப்புகளையுடைய கிறிஸ்தவர்கள், இன்னும் பூமியிலிருக்கும் அபிஷேகம் செய்யப்பட்டவர்களோடுகூட, உயிரைக் காக்கும் இந்த வேலையைச் செய்வதற்குச் சிலாக்கியமுடையோராக இருக்கின்றனர். இது எத்தகைய நற்பயனளிக்கும் வேலையாயுள்ளது! மாதிரி முன்குறித்த அடைக்கலப்பட்டணத்தில் உண்மையுடன் வேலைசெய்பவர்கள், பழிவாங்குபவரின் கைகளில் நித்திய மரணமடைவதைத் தப்பிக்கொள்வார்கள். அதற்குப் பதில், கடவுளுடைய பெரிய பிரதான ஆசாரியராக அவருடைய சேவையிலிருந்து நித்திய நன்மைகளைப் பெறுவார்கள். நீங்கள் இந்த அடைக்கலப்பட்டணத்தில் நிலைத்திருந்து என்றென்றுமாக உயிர் வாழ்வீர்களா?
[அடிக்குறிப்பு]
a மார்ச் 15, 1992 காவற்கோபுரம், பக்கம் 12-ல் 15, 16 பாராக்களைக் காண்க.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ பூமியின் கோடிக்கணக்கானோர் இரத்தப்பழியுடையோராக இருக்கின்றனரென்று ஏன் சொல்லலாம்?
◻ மனிதகுலம் சம்பந்தமாக என்ன வேலைப்பொறுப்புகளை இயேசு கிறிஸ்து வகிக்கிறார்?
◻ மாதிரி முன்குறித்த அடைக்கலப்பட்டணம் எது, ஒருவர் அதற்குள் பிரவேசிப்பது எவ்வாறு?
◻ மாதிரி முன்குறித்த இந்த அடைக்கலப்பட்டணத்திலிருந்து ஆட்கள் எப்போது விடுதலைசெய்யப்படுவர்?
◻ இந்த அடைக்கலப்பட்டண ஏற்பாட்டிலிருந்து நற்பயனுள்ள என்ன பாடங்களை நாம் கற்றுக்கொள்ளலாம்?
[பக்கம் 16-ன் படம்]
இயேசு கிறிஸ்து வகிக்கிற முக்கிய பாகங்கள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?