அந்தச் சுவிசேஷ சத்தியம்
மத்தேயு சுவிசேஷ கையெழுத்துப் பிரதியின் மூன்று சிறு துண்டுகள் P64 என்று அறியப்படுகின்றன; அவை 1901-லிருந்து இங்கிலாந்தின், ஆக்ஸ்ஃபர்டிலுள்ள மெக்டெலன் கல்லூரியின் கைவசம் இருந்துவருகின்றன. அவை பொ.ச. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியை சார்ந்தவை என்று சில காலம் அறிஞர்கள் நம்பினார்கள்.
சமீபத்தில், ஜெர்மனியிலுள்ள பேடர்பார்னை சேர்ந்த, பண்டைய புல்தாள் வரைவு ஆய்வுத்துறையில் (papyrology) நிபுணரான கார்ஸ்டன் பி. தீடெ, P64 பற்றி ஒரு முழுமையான ஆய்வை நடத்தினார். அதில் மத்தேயு 26-ம் அதிகாரத்திலிருந்து 10 வசனங்களின் பகுதிகள் அடங்கியிருந்தன. அதன் விளைவு? டஸைட்ஷிரிஃப்ட ஃபுர் பேப்புரோலோஜீ அன்ட் எப்பிகிராஃபிக் (பண்டைய புல்தாள் வரைவு ஆய்வுத்துறை மற்றும் கல்வெட்டுகளின் இதழ்) என்பதில் எழுதுகையில், ஆக்ஸ்ஃபர்டின் அந்தத் துண்டுகளை தீடெ “முதல் நூற்றாண்டின், ஒருவேளை (அவ்வாறு இருக்க அவசியமுமில்லை) கி.பி. 70-க்கும் முந்திய ஒரு கிறிஸ்தவ கையெழுத்துச் சுவடியின் துண்டு,” என்பதாக விவரித்தார்.
தீடெ கண்டுரைத்தவை செய்தித்துறையிலும் அறிஞர் வட்டாரங்களிலும் முழுவளவில் கவனத்தை ஈர்த்து பேசவைத்தன. ஏன்? ஏனென்றால், யோவான் சுவிசேஷத்தின் பொ.ச. 125-க்கும் முந்தைய அல்லது இரண்டாம் நூற்றாண்டுக்கு முன் எழுதப்பட்டிராத ஒரு துண்டு P52தான் மீதமிருக்கும் சுவிசேஷங்களிலேயே மிகவும் பழமையானது என்று தற்போதுவரை ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.
இந்தப் புல்தாளில் எழுதப்பட்ட துண்டுகளான P64-க்கு அளிக்கப்பட்டுள்ள புதிய தேதி பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுமா இல்லையா என்பது பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். எப்படியிருந்தாலும், முந்தைய தேதியானது P64-ஐ, இருக்கின்ற சுவிசேஷங்களிலேயே மிகவும் பழமையானதாக ஆக்குகிறது; அதோடுகூட மத்தேயு சுவிசேஷம் உண்மையிலேயே முதல் நூற்றாண்டில், ஒருவேளை பொ.ச. 70-க்கு முன்பே எழுதப்பட்டது என்று சுட்டிக்காட்டுவதற்குக் கூடுதலான அத்தாட்சியையும் அளிக்கிறது; சுவிசேஷ சத்தியத்தை முறைப்படி உறுதிப்படுத்த இயேசுவின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் கண்ணாரக்கண்ட ஏராளமான சாட்சிகள் அப்போது உயிரோடு இருந்தார்கள்.
[பக்கம் 32-ன் படத்திற்கான நன்றி]
By permission of the President and Fellows of Magdalen College,