“அடக்கமுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு”
அடக்கம் என்பது ஒருவருடைய வரம்புகள் பற்றிய ஒரு விழிப்புணர்வு; தன்னடக்கம், அல்லது தனிப்பட்ட பரிசுத்தம் என்று விளக்கப்படுகிறது. ஒரேதடவை மாத்திரம் மீகா 6:8-ல் (NW) இடம்பெறுகிற ட்ஸானா என்ற எபிரெய மூல வினைச்சொல் “அடக்கமாய் இருக்கும்படி” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஒதுங்கியிருக்கிற, அடக்கமுள்ள, அல்லது மனத்தாழ்மையுள்ள ஒருவரைப்பற்றிய எண்ணத்தை அது கொடுக்கிறது என்று பழைய ஏற்பாட்டின் எபிரெய மற்றும் ஆங்கில பேரகராதி கூறுகிறது. அய்டாஸ் என்ற கிரேக்க வார்த்தை “அடக்கம்” என்று மொழிபெயர்க்கப்படுகிறது. (1 தீமோத்தேயு 2:9, NW) படிப்பினை வகையில் அய்டாஸ் பெருமதிப்பு, பயபக்தி, மற்றவர்களின் உணர்ச்சிகளுக்கான அல்லது அபிப்பிராயத்திற்கான அல்லது தன் சொந்த மனசாட்சிக்கான மரியாதை, என்ற எண்ணத்தை தெரிவிக்கிறதால், நாணம், சுயமரியாதை, நன்மதிப்பின் கடமையுணர்வு, நிதானம் மற்றும் மிதம் என்ற அர்த்தத்தையும் வெளிக்காட்டுகிறது. ஆக, அய்டாஸ் உணர்த்துகிற கட்டுப்படுத்தும் விளைவில் மனசாட்சி குறிப்பாக உட்பட்டிருக்கிறது.
கடவுளுக்கு முன்பு
தன்னையே ஒரு சரியான விதத்தில் எடைபோடும் மனப்பாங்கிலிருக்கும், அடக்கத்தைக் குறித்து வேதவசனங்கள் மிக அதிகமான புத்திமதிகளை கொடுக்கின்றன. “அடக்கமுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு,” என்று நீதிமொழி கூறுகிறது. இது ஏனென்றால், அடக்கத்தை வெளிக்காட்டும் நபர், மேட்டிமை அல்லது தற்பெருமையுடன் வரும் இலச்சையை தவிர்க்கிறார். (நீதிமொழிகள் 11:2, NW) யெகோவா அங்கீகரிக்கிற வழியை அவர் பின்பற்றுகிறதனால், ஞானமானவராக இருக்கிறார். (நீதிமொழிகள் 3:5, 6; 8:13, 14) யெகோவா அப்படிப்பட்டவரை நேசித்து, அவருக்கு ஞானத்தை கொடுக்கிறார். யெகோவாவின் தயவைப்பெற தேவையானவற்றில் ஒன்று, ‘அடக்கத்துடன் அவரோடு நடப்பதாகும்.’ (மீகா 6:8, NW) கடவுளுக்கு முன்னால் இருக்கும் ஒருவருடைய நிலைநிற்கைக்கு சரியான போற்றுதலையும், யெகோவாவின் மகத்துவத்துக்கும், தூய்மைக்கும், பரிசுத்தத்துக்கும் முன்னால் ஒருவருடைய பாவப்பட்ட தன்மையை ஒத்துக்கொள்வதையும் இது உட்படுத்துகிறது. யெகோவாவின் ஒரு படைப்பாக தன்னை ஒரு நபர் புரிந்துகொண்டு, எல்லா வகையிலும் அவர்மேல் சார்ந்திருக்கிறதையும், அவருடைய உன்னத அரசாட்சிக்கு கீழ்ப்படிவதையும் இது அர்த்தப்படுத்துகிறது. இதைப் போற்றத் தவறியவர்களில் ஒருத்தியாக ஏவாள் இருந்தாள். பூரண சுதந்திரத்தையும், தன்னுறுதியையும் அவள் தெரிந்தெடுத்துக் கொண்டாள். “நன்மை தீமை அறிந்து தேவனைப்போல” ஆவதற்கு வந்த எண்ணத்தை அடக்கம் நீக்கியிருக்க உதவியிருக்கும். (ஆதியாகமம் 3:4, 5, NW) மட்டுமீறிய நம்பிக்கைக்கும், மேட்டிமைக்கும் எதிராக அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு ஆலோசனை அளிக்கிறார்: “அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.”—பிலிப்பியர் 2:12.
எதில் பெருமைப்படுவது
அடக்கத்திற்கு நேரெதிரானது பெருமைப்படுவது. சட்டம் என்னவென்றால்: “உன் வாய் அல்ல, புறத்தியானே உன்னைப் புகழட்டும்; உன் உதடு அல்ல, அந்நியனே உன்னைப் புகழட்டும்.” (நீதிமொழிகள் 27:2) “ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக் குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன்,” என்று யெகோவாவின் சொந்த வார்த்தைகள் கூறுகின்றன.—எரேமியா 9:23, 24; ஒப்பிடுக: நீதிமொழிகள் 12:9; 16:18, 19.
அடக்கமுள்ளவர்களுக்காக கடவுளுடைய மதிப்புயர்வு
அடக்கமுள்ளவர்களுக்காக கடவுளுடைய மதிப்புயர்வை அப்போஸ்தலனாகிய பவுல் சுட்டிக்காட்டி, அப்படிப்பட்ட தாழ்மையான மனப்பான்மையை பின்பற்றத்தக்க விதத்தில் சபையிலிருக்கும் தன் சொந்த நடத்தையையும்கூட மேற்கோள் காட்டுகிறார். கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு அவர் இவ்வாறு எழுதினார்: “எப்படியெனில், சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை. ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார். மாம்சமான எவனும் தேவனுக்குமுன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார். . . . எழுதியிருக்கிறபடி மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டத்தக்கதாக, . . . சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்தபோது, தேவனைப்பற்றிய சாட்சியைச் சிறந்த வசனிப்போடாவது ஞானத்தோடாவது அறிவிக்கிறவனாக வரவில்லை. இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன். அல்லாமலும், நான் பலவீனத்தோடும் பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும் உங்களிடத்தில் இருந்தேன். உங்கள் விசுவாசம் மனுஷருடைய ஞானத்திலல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு, என் பேச்சும் என் பிரசங்கமும் மனுஷ ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல், ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாயிருந்தது.”—1 கொரிந்தியர் 1:26–2:5.
எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டாம்
தன்னைப்பற்றியே ஒரு சரியான மதிப்பீட்டை செய்து, அடக்கத்தை அவர் எப்படி வெளிக்காட்டினாரோ அதேபோல எல்லாரும் இருக்கவேண்டியதன் அவசியத்தை பவுல் பின்பு தன் கடிதத்தில் அழுத்திக்கூறினார். குறிப்பிட்ட சில மனிதர்களைப்பற்றி, அப்பொல்லோ மற்றும் பவுலைப் பற்றியும்கூட, பெருமைப்படுகிற கண்ணியில் கொரிந்தியர்கள் விழுந்துவிட்டிருந்தார்கள். இதைச் செய்வதில் ஆவியின்படி அல்ல, மாம்சத்தின்படி அவர்கள் செயல்படுகிறார்கள் என்று பவுல் அவர்களை சரிப்படுத்தி இவ்வாறு கூறினார்: “சகோதரரே, எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டாமென்று [அதாவது, ஒருவர்பேரில் ஒருவர் கொண்டிருக்கும் அல்லது தங்கள் பேரிலேயே கொண்டிருக்கும் மனப்பான்மையைக் குறித்து மனிதர்களுக்கு வேதாகமம் வைத்திருக்கும் வரம்பை மீறிச் செல்ல வேண்டாமென்று] நீங்கள் எங்களாலே கற்றுக்கொள்ளவும், ஒருவனும் ஒருவனிமித்தம் மற்றொருவனுக்கு விரோதமாய் இறுமாப்படையாதிருக்கவும், நான் உங்கள்நிமித்தம் என்னையும் அப்பொல்லோவையும் திருஷ்டாந்தமாகவைத்து, இவைகளை எழுதினேன். அன்றியும் உன்னை விசேஷித்தவனாகும்படி செய்கிறவர் யார்? உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது யாது? நீ பெற்றுக்கொண்டவனானால் பெற்றுக்கொள்ளாதவன்போல் ஏன் மேன்மைபாராட்டுகிறாய்?” இதை மனதில் வைத்திருந்தால், அகந்தை, தன்னைப்பற்றிய அல்லது மற்றவர்களின் வம்சாவளியைப்பற்றிய பெருமை, இனம், தோல்நிறம் அல்லது தேசியம், சரீர அழகு, திறமை, அறிவு, கூரறிவு போன்றவற்றைப் பற்றிய பெருமையைத் தடுக்கும்.—1 கொரிந்தியர் 4:6, 7.
இயேசு கிறிஸ்துவின் உதாரணம்
இயேசு கிறிஸ்து அடக்கத்திற்கு மிகச் சிறந்த முன்மாதிரியாக இருக்கிறார். பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார் என்றும் தம் பிதா தம்மைவிட பெரியவர் என்றும் தம் சீஷர்களுக்கு கூறினார். (யோவான் 5:19, 30; 14:28) தமக்குரியதாயிராத பட்டப்பெயர்களை இயேசு ஏற்றுக்கொள்ள மறுத்தார். “நல்ல போதகரே” என்று ஒரு தலைவன் அவரை அழைத்தபோது இயேசு இவ்வாறு பதிலளித்தார்: “நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே.” (லூக்கா 18:18, 19) அவர்கள் யெகோவாவிற்கு அடிமைகளாக இருக்கிறதால், கடவுளிடம் இருக்கும் மதிப்பினாலோ, கடவுளின் சேவையில் நிறைவேற்றின காரியங்களினாலோ பெருமைப்படக்கூடாது என்று அவர் தம்முடைய சீஷர்களுக்கு கூறினார். இன்னும் சரியாக சொன்னால், தங்களுக்கு நியமிக்கப்பட்டதையெல்லாம் செய்தபின்பு, “நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம்,” என்ற மனப்பான்மையை அவர்கள் கொண்டிருக்கவேண்டும்.—லூக்கா 17:10.
கூடுதலாக, பூமியில் ஒரு பரிபூரண மனிதராக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இருந்தபோது, தம் அபூரண சீஷர்களைவிட மேலானவராகவும், தம் தகப்பனிடமிருந்து உயர்ந்த அதிகாரத்தைப் பெற்றவராகவும் இருந்தார். ஆயினும், தம் சீஷர்களை நடத்தும்போது, அவர்களுடைய வரம்புகளைக் குறித்து கரிசனையுள்ளவராக இருந்தார். அவர்களை பயிற்றுவிக்கையில் நேர்த்தியையும், அவர்களுக்கேற்ற தகுதியான பேச்சையும் உபயோகித்தார். அந்தச் சமயத்தில் அவர்கள் தாங்குவதற்கும்மேலாக அவர்கள்மேல் அவர் அதிகத்தை வைக்கவில்லை.—யோவான் 16:12; ஒப்பிடுக: மத்தேயு 11:28-30; 26:40, 41.
உடை மற்றும் மற்ற உடைமைகள்
சபையில் சரியான நடத்தை உள்ளதா என்று பார்ப்பதற்கு கண்காணியான தீமோத்தேயுவை உத்தரவிடுகையில், பவுல் இவ்வாறு கூறினார்: “ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரியாமல், தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும்.” (1 தீமோத்தேயு 2:9, 10) இங்கே, தூய்மையான மற்றும் விரும்பத்தக்க தோற்றத்திற்கு எதிராக அப்போஸ்தலன் ஆலோசனை கொடுக்கவில்லை, ஏனென்றால், ‘தகுதியான வஸ்திரத்தை’ அவர் சிபாரிசு செய்கிறார். ஆனால், தன்னிடத்திற்கோ அல்லது தன்னுடைய வாழ்க்கைமுறைக்கோ கவனத்தை கவரும்விதத்தில் ஆடம்பரமாகவும், கர்வத்தின் காரணமாக கண்ணியமில்லாமலும் உடுத்துவதை அவர் சுட்டிக்காட்டுகிறார். கூடுதலாக, மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கிற அடக்கமும், சுயமரியாதையும், நன்மதிப்பு என்ற ஒரு உணர்ச்சியும் இதில் உட்பட்டிருக்கிறது. ஒழுக்கமுறைக்கு அதிர்ச்சியளிப்பதாகவும், சபையின் ஒழுக்கத்தை சுலபமாக பாதித்து, சிலரைப் புண்படுத்தும் விதத்திலும் கிறிஸ்தவர்களின் உடை உடுத்தும் பாணி இருக்கக்கூடாது. உடையைப் பற்றிய இந்த ஆலோசனை, ஒரு கிறிஸ்தவனுக்கு இருக்கக்கூடிய மற்ற பொருள் உடைமைகளின் உபயோகத்தைக் குறித்தும், சரியான நோக்குநிலையைக் குறித்தும், யெகோவாவின் மனப்பான்மையின்மேல் கூடுதலான வெளிச்சத்தை அளிக்கிறது.
ஞானமற்ற நடத்தைகளிலிருந்தும், மனப்பான்மைகளிலிருந்தும் அடக்கம் நம்மை பாதுகாக்கிறது. நீதிமொழி கூறுகிறபடி, அடக்கம்தான் உண்மையிலேயே ஒரு ஞானமான வழி.