பூமியின் கடைசி பரியந்தமும் சாட்சிகள்
எடா
தூல்
கோதாவ்ன்
காட்தப்
ஜூலியன்ஹாப்
அங்மக்சலிக்
தூல் என்பது ஒரு பெயரின் பகுதியாக இருக்கிறது, அது நிலயியல் சார்ந்த அல்லது வேறு ஏதாவது இறுதியான இலக்கை விவரிப்பதற்கு பண்டைய காலங்களிலிருந்து பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. இன்று உலகின் மிகப் பெரிய தீவான கிரீன்லாந்தின் வடகோடியில் உள்ள குடியேற்றத்தின் பெயர் தூல். அந்தக் குடியேற்றம் 1910-ல் அவ்வாறு பெயரிடப்பட்டது, ஆய்வுப்பயணம் மேற்கொண்ட டென்மார்க்கைச் சேர்ந்த நட் ராஸ்முஸன் என்பவர் துருவப்பகுதிகளின் சுற்றுப்பயணத்துக்கு அவ்விடத்தை இடையில் தங்கும் தளமாக பயன்படுத்தினார். இன்றும்கூட, தூலுக்கு செல்வது இன்பப்பயணமாக இருப்பதைக் காட்டிலும் ஆய்வுப்பயணமாகவே இருக்கிறது.
அவ்வாறு இருந்தபோதிலும், தூலுக்கு ஆய்வுப்பயணங்கள் செல்வதற்கான அவசரத் தேவை உள்ளது. “பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்,” என்ற இயேசுவின் கட்டளைக்கு இணங்கி, யெகோவாவின் சாட்சிகள் பூமியின் வடகோடியிலுள்ள நிரந்தரமான இந்த மனித குடியேற்றங்களில் ஒன்றுக்கு கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைக் கொண்டுசெல்வதற்கு ஆர்வமுள்ளவர்களாய் இருக்கின்றனர்.—அப்போஸ்தலர் 1:8; மத்தேயு 24:14.
‘நாம் எப்போது தூலுக்கு செல்லலாம்?’
இரண்டு டேனிஷ் சாட்சிகள் 1955-ல் “பூமியின் கடைசிபரியந்தமும்” பிரசங்கிப்பதில் ஒரு பங்கைக் கொண்டிருப்பதற்கென கிரீன்லாந்துக்கு வந்து சேர்ந்தனர். மற்றவர்கள் அதற்குப் பிறகு வந்தனர்; தெற்கத்திய மற்றும் மேற்கத்திய கடற்கரையில் மெல்வில் சிறுகுடா வரையும் கிழக்கத்திய கரையில் சிறிது தூரம் வரையும் அவர்களுடைய பிரசங்க வேலையை படிப்படியாக செய்து முடித்தனர். ஆனால் தேசத்தின் தொலைதூரத்திலிருந்த தூல் போன்ற பகுதிகள் கடிதம், தொலைபேசி மூலம் மட்டுமே சென்றெட்டப்பட்டது.
1991-ல் ஒரு நாள், இரண்டு முழுநேர ஊழியர்கள், போவும் அவருடைய மனைவி ஹெலனும் மெல்வில் சிறுகுடாவை பார்த்தவண்ணமிருந்த ஒரு பாறையின்மீது நின்றுகொண்டிருந்தனர். ‘தூல்வரை தொலைதூரம் சென்று அங்கிருக்கும் ஜனங்களுக்கு நாம் எப்போது ராஜ்ய நற்செய்தியை எடுத்துச் செல்வோம்?’ என்று அவர்கள் வடதிசையை பார்த்தபோது எண்ணினர்.
1993-ல் வெர்னர், மற்றொரு முழுநேர ஊழியர், காமானெர்க் (ஒளி) என்ற தன் 5.5 மீட்டர் இயந்திர விசைப்படகில் இடர்களை மேற்கொண்டு மெல்வில் சிறுகுடாவைக் கடந்து செல்ல புறப்பட்டார். அவர் ஏற்கெனவே காட்தப் என்ற இடத்திலிருந்து உபர்னேவிக் பிராந்தியம் வரை 1,200 கிலோமீட்டர் கடற்பயணம் செய்திருந்தார். இருந்தபோதிலும், மெல்வில் சிறுகுடாவை—400 கிலோமீட்டர் ஆர்க்டிக் பெரும் நீர்ப்பரப்பைக் கடந்துசெல்வது—சுலபமான விஷயமல்ல. ஒரு வருடத்தில் பெரும்பாலான சமயம் அந்த சிறுகுடா பனிக்கட்டியால் வழியடைக்கப்பட்டிருக்கிறது. வெர்னர் பனிக்கட்டியின் காரணமாக படகிலிருந்த ஓர் என்ஜினை இழந்துவிட்டபோதிலும், சிறுகுடாவைக் கடந்துசெல்வதில் வெற்றியடைந்தார். அவர் திரும்பி வருவதற்கு முன் கொஞ்சம் பிரசங்க வேலையை அவரால் செய்யமுடிந்தது.
தூலுக்குச் செல்லுதல்
அந்தப் பயணத்திற்குப் பின், வெர்னர் புதிய திட்டங்களைப் போட ஆரம்பித்தார். அவர் ஆர்னி மற்றும் கேரனிடம் ஒன்றுசேர்ந்து தூலுக்குச் செல்வதைப் பற்றி பேசினார்; அவர்களிடமும் ஒரு படகு இருந்தது, அது நான்கு பேருக்கு உறங்குமிடத்தையுடைய ஏழு மீட்டர் நீளத்தில், நவீன கடற்பயணத்துக்கேற்ற சாதனங்களைக் கொண்டிருந்தது. அப்படகுகளில் தங்குவதற்கு வசதிகள் இருக்கும், இரண்டு படகுகளும் ஒன்றுசேர்ந்து பயணம் செய்தால் மெல்வில் சிறுகுடாவை கடந்து செல்வது அவ்வளவு ஆபத்தானதாக இருக்காது. 600 குடிமக்களையுடைய முக்கிய பட்டணத்திலும் அந்தப் பிராந்தியத்தில் இருந்த ஆறு குடியேற்றங்களிலும் சாட்சி கொடுத்து முடிப்பதற்கு அவர்களுக்கு கூடுதலான உதவி தேவைப்பட்டது. ஆகையால் அவர்கள் போ, ஹெலன், யோர்ன், இன் ஆகியோரை வரவழைத்தனர், இவர்கள் அனைவரும் இந்தத் தேசத்தில் பயணம் செய்வதில் அனுபவமுள்ள ஊழியர்களாக இருந்தனர். இந்தத் தொகுதியில் இருக்கும் ஐந்து பேர் கிரீன்லான்டிக் மொழியும்கூட பேசுகின்றனர்.
அவர்கள் ஏராளமான பைபிள் பிரசுரங்களை முன்னமே அனுப்பி வைத்தனர். பிரசுரங்கள், உணவு, தண்ணீர், எரிபொருள், கூடுதலாக ஓர் என்ஜின், ஒரு ரப்பர் படகு ஆகியவற்றால்கூட படகுகள் நிரப்பப்பட்டிருந்தன. பின்னர், ஆகஸ்ட் 5, 1994, அன்று பல மாத ஏற்பாட்டுக்கு பின்பு, குழு ஒன்றுகூடியது, இலுலிசாட் துறைமுகத்தில் இரண்டு படகுகளும் சரக்கேற்றப்பட்டு தயாராக இருந்தன. வடதிசை நோக்கிச் செல்லும் பயணம் ஆரம்பித்தது. வெர்னர், போ, ஹெலன் ஆகியோர் சிறியதாக இருந்த படகில் பயணம் செய்தனர். “பயணம் செய்யும்போது உங்கள் படுக்குமிடத்தில் உட்கார்ந்துகொண்டு அல்லது படுத்துக்கொண்டு ஏதோவொன்றை பிடித்துக்கொள்வதைத் தவிர வேறு எதுவும் செய்வதற்கில்லை,” என்று போ எழுதுகிறார். கடற்பயணத்தின்போது என்ன நடந்தது என்பதைப் பற்றி நாம் பார்ப்போம்.
“நீண்டு பரந்துகிடந்த அமைதலான கடல் இருந்தது. மாறி மாறி வரும் அழகான பரந்த இயற்கைக்காட்சி எங்கள் கண்களுக்கு முன் படிப்படியாக தெரிய ஆரம்பித்தது—விட்டு விட்டு மங்கலாகப் பிரகாசிக்கும் கடல், பட்டை பட்டையாகத் தென்படும் மூடுபனி, பிரகாசமான சூரியனும் நீலநிற வானும், அதிக கவர்ச்சியூட்டும் வடிவங்களிலும் வித்தியாசமான வண்ணங்களிலும் பனிக்கட்டிகள், மிதக்கும் பனிக்கட்டிப்பாளத்தின்மீது பழுப்புநிற கடற்குதிரை வெயிலில் காய்ந்து கொண்டிருத்தல், இருண்ட மலைச்சரிவுகளும் சிறு சமவெளிகளும் உள்ள கரையோரம்—இத்தகைய காட்சிக்கு முடிவேயில்லை.
“அதிக ஆர்வத்துக்குரிய விஷயம், வழியில் இருந்த குடியேற்றங்களுக்குச் செல்வதாகும். ஜனங்கள் அங்கு எப்போதும் இருந்தார்கள், பொதுவாக பிள்ளைகள், கடலுக்குள்ளிருந்த மேடையில் காத்திருந்து வந்திருப்பவர்கள் யார் என்பதைக் கண்டு அவர்களை வரவேற்பர். நாங்கள் பைபிள் பிரசுரங்களை விநியோகித்தோம், நம்முடைய அமைப்பைப் பற்றிய வீடியோவை ஜனங்களுக்கு இரவல் கொடுத்தோம். நாங்கள் புறப்பட்டுச் செல்வதற்கு முன் அநேகர் அதை காண முடிந்தது. தென் உபர்னேவிக்-ல் நாங்கள் செல்வதற்கு முன்பே அநேக ஜனங்கள் எங்கள் படகுகளை நோக்கி வந்தனர். ஆகையால் அம்மாலை நேரம் முழுவதும் எங்கள் படகுக்குள் விருந்தினர் இருந்தனர், நாங்கள் அநேக பைபிள் கேள்விகளுக்கு பதிலளித்தோம்.”
இப்போது, முதல் 700 கிலோமீட்டர் பயணத்திற்குப் பின், இரண்டு படகுகளும் மெல்வில் சிறுகுடாவை கடந்து செல்வதற்கு தயாராக இருந்தன.
இக்கட்டான சவால்
“இது பயணத்தின் மிகவும் இக்கட்டான பாகம் என்று பரவலாக கருதப்பட்டது. நாங்கள் இடையே நிறுத்தாமல் கடந்து செல்ல வேண்டியிருந்தது, ஏனென்றால் சவிசிவிக் குடியேற்றம் (பிராந்தியம் ஆரம்பிக்குமிடமும் நாங்கள் தங்கியிருந்திருக்கக்கூடிய இடமும்) இன்னும் பனிக்கட்டியால் அடைபட்டிருந்தது.
“நாங்கள் கடந்து செல்ல ஆரம்பித்தோம். ஏராளமான பனிக்கட்டி அங்கு இருந்ததால், நாங்கள் பரந்த கடலுக்குள் நெடுந்தூரம் செல்ல ஆரம்பித்தோம். நல்ல காலமாக கடல் அமைதலாக இருந்தது. முதல் பல மணிநேரங்களில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் எதுவும் சம்பவிக்கவில்லை—கடலில் ஒவ்வொரு மைலாக வழி உண்டுபண்ணிக்கொண்டு சென்றோம். மாலை நேரத்துக்குள் நாங்கள் யார்க் முனையை காணத் தொடங்கினோம், மெதுவாக வடதிசை திரும்பி நிலப்பரப்புக்கு அருகே வந்தோம். இப்போது மறுபடியும் பனிக்கட்டி இருந்தது—ஏற்கெனவே கெட்டியாகவும் சிதைவுற்றும் இருந்த மிதக்கும் பனிக்கட்டிப்பாளம் கண்கள் காணும் வரை தெரிந்தது. நாங்கள் நெடுந்தூரம் பனிக்கட்டியின் விளிம்பில் சென்றோம், சில சமயங்களில் பனிக்கட்டிகளுக்கு இடையே இருந்த தண்ணீர்களில் சென்றோம். பின்னர் கெட்டியான சாம்பல்நிற குழம்பு போன்ற மூடுபனி இருந்தது, கதிரவன் மறையும் வெளிச்சத்தில் விசேஷமாய் அழகாக இருந்தது. கடல் அலைகளும்கூட அழகாக இருந்தன! மூடுபனி, அலைகள், பனிக்கட்டி எல்லாம் ஒரே சமயத்தில்—இவற்றில் ஏதாவது ஒன்றே பொதுவாக சமாளிப்பதற்கு சவாலாக இருக்கும்.”
எங்களுக்கு கிடைத்த வரவேற்பு
“நாங்கள் பிட்டுஃபிக்கை நெருங்கியபோது, அமைதலாயிருந்த தண்ணீர்களுக்குள் வந்தோம். படைப்பு எங்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு அளித்தது: நீலநிற வானில் சூரியன் கடல் மட்டத்துக்கு மேல் காணப்பட்டது; எங்களுக்கு எதிரே பரந்த, பளபளப்பான ஜலசந்திகளின் இடையிடையே சிதறிக்கிடந்த மிதக்கும் பனிக்கட்டி மலைகள்; தொலைதூரத்தில் டென்டெஸ், பழைய தூலில் உள்ள பாறையின் தனிச்சிறப்பான நிழலுருவம்!” வடதிசையில் இன்னும் சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் பயணம் செய்தவர்கள் தற்போதுள்ள தூல் குடியேற்றத்துக்கு வந்து சேர்ந்தனர்.
அவர்கள் இப்போது வீட்டுக்கு வீடு பிரசங்க வேலையை ஆரம்பிப்பதற்கு ஆவலாயிருந்தனர். அவர்களில் இரண்டு பேர் முதல் வீட்டில் பண்பற்ற பிரதிபலிப்பை பெற்றுக்கொண்டனர். “நாங்கள் டென்மார்க்கில் இருந்தபோது ஒதுக்கிவைக்கப்பட்டது போலவே உணர்ந்தோம்,” என்று அவர்கள் சொன்னார்கள். “ஆனால் பெரும்பாலானோர் எங்களுக்கு உளங்கனிந்த வரவேற்பைக் கொடுத்தனர். மக்கள் சிந்திக்கிறவர்களாகவும் விஷயம் தெரிந்தவர்களாகவும் இருந்தனர். எங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம் என்று சிலர் கூறினர், நாங்கள் கடைசியில் வந்ததைக் குறித்து மகிழ்ச்சியடைந்தனர். வடதுருவத்துக்கு ஆய்வுப்பயணம் மேற்கொண்ட கடல்நாய் வேட்டையாடுபவர்கள், அந்நாட்டவர்கள், நவீன நாகரிகத்தைக் குறித்து ஒருவிதமான ஐயுறவாத எண்ணத்தை பெற்று திருப்தியோடு சிக்கனமாக இருந்தவர்கள் போன்ற சில அருமையான மக்களை நாங்கள் சந்தித்தோம்.”
அடுத்த சில நாட்கள் எல்லாருக்கும் அருமையான அனுபவங்களைக் கொண்டுவந்தன. பைபிள் பிரசுரங்கள் எல்லா இடங்களிலும் போற்றுதலோடு ஏற்றுக்கொள்ளப்பட்டன. அநேக வீடுகளில் சாட்சிகள் உடனடியாக பைபிள் படிப்புகளை ஆரம்பித்தனர். இன் என்பவர் அக்கறை காண்பித்த வீட்டை தான் கண்டுபிடித்த அனுபவத்தைக் கூறுகிறார்: “அது சுத்தமும் சௌகரியமுள்ள ஒரே அறையுடைய வீடாக இருந்தது. நாங்கள் அங்கு வசித்துவந்த சாந்தமான மனிதரை அடுத்தடுத்து மூன்று நாட்கள் சந்தித்தோம், அவர்மீது அதிக பிரியங்கொள்ள ஆரம்பித்தோம். அவர் மெய்யான கடல்நாய் வேட்டையாடுபவராக இருந்தார், அவருடைய வீட்டுக்கு வெளியே பனிக்கடல் படகை வைத்திருந்தார். அவர் அநேக துருவ கரடிகள், கடற்குதிரைகள், கடல்நாய்கள் ஆகியவற்றை வேட்டையாடியிருந்தார். எங்களுடைய கடைசி சந்திப்பின்போது நாங்கள் அவரோடு சேர்ந்து ஜெபம் செய்தோம், அவருடைய கண்கள் கண்ணீரால் நிறைந்தன. இப்போது நாம் எல்லாவற்றையும் யெகோவாவின் கைகளில் விட்டுவிட வேண்டும், திரும்பி வரும் நேரத்துக்காகவும் சந்தர்ப்பத்துக்காகவும் எதிர்பார்த்திருக்க வேண்டும்.”
கனடாவைச் சேர்ந்த எஸ்கிமோவிடமிருந்து தூல் அவ்வப்போது சந்திப்புகளை பெற்றுக்கொள்கிறது. இன் அறிக்கை செய்கிறார்: “நானும் ஹெலனும் கனடாவிலிருந்து வந்த அநேக எஸ்கிமோக்களை சந்தித்தோம். அவர்கள் கிரீன்லாந்து நாட்டவரிடம் தொடர்புகொள்ள முடிந்தது ஆர்வத்துக்குரியதாய் இருந்தது; ஆர்ட்டிக் பகுதியில் உள்ள ஜனங்களும்கூட அதற்குத் தொடர்புள்ள மொழிகளை பேசுவதாக தோன்றுகிறது. கனடாவைச் சேர்ந்த எஸ்கிமோக்களுக்கு தங்கள் சொந்த எழுதும் மொழி இருந்தபோதிலும், அவர்கள் கிரீன்லாந்து மொழியிலிருந்த நம் பிரசுரங்களை வாசிக்க முடிந்தது. இது அவர்களுக்கு ஒருவேளை கிளர்ச்சியூட்டும் வாய்ப்புகளை திறந்து வைக்கலாம்.”
படகில் சென்று 50-லிருந்து 60 கிலோமீட்டர் தொலைவிலுள்ள குடியேற்றங்களும் சந்திக்கப்பட்டன. “கெக்கெர்டாட் குடியேற்றத்துக்கு செல்லும் வழியில் நாங்கள் கரையோரத்தை மிகவும் நெருக்கமாக பின்பற்றினோம், கொம்பன் திமிங்கலத்தை வேட்டையாடும் ஜனங்களைக் காண வேண்டும் என்ற எண்ணத்துடன் சென்றோம். நாங்கள் நினைத்தபடியே, ஒரு பாறை மேட்டின்மீது ஒரு கூடாரத்தைக் கண்டோம், அதில் மூன்று அல்லது நான்கு குடும்பங்கள் இருந்தன, அவர்கள் மென்மயிராலான ஆடைகளை அணிந்திருந்தனர், கூடாரங்களையும் கடற்படகுகளையும் வைத்திருந்தனர். மிகவும் அதிகமாக விரும்பப்படும் திமிங்கலங்களை உன்னிப்பாய் கவனிப்பதற்காக ஆண்கள் மாறி மாறி ஒரு பாறையின்மீது உட்கார்ந்துகொண்டு கையில் ஈட்டிபோன்ற எறிபடையை வைத்திருந்தனர். ஏற்கெனவே அநேக நாட்களாக வீணாக காத்திருந்ததால், நாங்கள் திமிங்கலங்களைப் பயப்படுத்தி விரட்டி விடுவோம் என்று எங்களைப் பார்ப்பதற்கு அவர்களுக்கு அவ்வளவு பிரியமில்லாமல் இருந்தது! அவர்கள் தங்கள் சொந்த வேலைகளிலேயே முழுவதுமாக ஈடுபட்டிருந்தனர். பெண்கள் சில பிரசுரங்களை ஏற்றுக்கொண்டனர், ஆனால் கூடுதலாக பேசுவதற்கு அது பொருத்தமான சமயமாக இல்லை. நாங்கள் கடைசியில் கெக்கெர்டாட்டுக்கு இரவு 11 மணிக்கு வந்து சேர்ந்தோம், அந்தக் குடியேற்றத்தில் இருந்த கடைசி சந்திப்பை நாங்கள் காலை 2 மணிக்கு முடித்து விட்டோம்!”
“இறுதியில் வடகோடியிலிருந்த சியோராபாலுக் குடியேற்றத்தை நாங்கள் அடைந்தோம். பொதுவாக வறண்ட சூழல் இல்லாத சில பச்சை நிற புல் மூடிய பாறைகளின் அடியில் அது மணல் நிரம்பிய கடற்கரையில் அமைந்திருக்கிறது.” சாட்சிகள் தங்கள் பிரசங்க வேலையில் சொல்லர்த்தமாகவே பூமியின் கடைசிபரியந்தம் வரை சென்றிருக்கின்றனர், வடதிசையிலாவது சென்றிருக்கின்றனர்.
பயணம் முடிவடைந்துவிட்டது
சாட்சிகள் தங்கள் வேலையை முடித்துவிட்டனர். அவர்கள் வீட்டுக்கு வீடு, கூடாரத்துக்கு கூடாரம் சென்று பிரசங்கித்தனர், பிரசுரங்களை அளித்தனர், சந்தாக்களைப் பெற்றனர், வீடியோக்களை காண்பித்தனர், அநேக கிரீன்லாந்து நாட்டவரிடம் பேசி பைபிள் படிப்புகளை நடத்தினர். இப்போது வீட்டுக்கு திரும்பிச் செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது. “மொரியுசார்க் குடியேற்றத்திலிருந்து அந்த நாள் மாலை நாங்கள் படகில் புறப்பட்டுச் செல்கையில், எங்களுக்கு பிரியாவிடை கொடுப்பதற்கு சில மக்கள் கடற்கரையிலிருந்து தாங்கள் பெற்றுக்கொண்ட புத்தகங்கள் அல்லது சிற்றேடுகளை கையில் பிடித்துக்கொண்டு அசைத்தனர்.”
பின்னர், கடற்கரையின் மனித குடியிருப்பில்லாத ஒரு பகுதியில், ஓர் ஆள் பாறையில் நின்றுகொண்டு கையசைத்துக் கொண்டிருந்ததைக் கண்டு சாட்சிகள் வியப்படைந்தனர்—தொலைக்கோடி தூரத்தில் எங்கோ நின்றுகொண்டிருந்தார்! “நாங்கள் அவரைச் சந்திப்பதற்கு கரை சென்றோம். அவர் பெர்லின், ஜெர்மனியிலிருந்து வந்த இளம் மனிதராக இருந்தார், அவர் தன் படகில் கடற்கரையோரமாய் ஒரு மாதம் பயணம் செய்துகொண்டிருந்தார். யெகோவாவின் சாட்சிகள் ஜெர்மனியில் அவரை அவ்வப்போது சந்தித்தனர், அவர்களிடமிருந்து பெற்ற அநேக புத்தகங்களை அவர் வைத்திருந்தார். நாங்கள் அவரோடு இரண்டு மணிநேரங்கள் செலவழித்தோம், அப்படிப்பட்ட இடத்தில் சாட்சிகளைச் சந்திப்பதில் அவர் உண்மையில் கவரப்பட்டார்.”
திரும்பி வந்த பயணத்தில் பனிக்கட்டியின் காரணமாக சவிசிவிக் குடியேற்றத்துக்கு செல்லவில்லை, அங்கே பயணம் செய்த ஊழியர்கள் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுக்கொண்டனர். அங்கிருந்த சில மக்கள் முந்தின வருடம் பிரசுரங்களை பெற்றுக்கொண்டு வாசித்திருந்தனர், அவர்கள் கூடுதலான ஆவிக்குரிய உணவுக்காக பசியோடிருந்தனர்.
மெல்வில் சிறுகுடாவை திரும்ப கடந்து வீடு வந்து சேருவதற்கு 14 மணிநேரம் எடுத்தது. “நாங்கள் கதிரவனின் அஸ்தமனத்தை நேரில் கண்டோம், அது இந்த இடத்தில் பல மணிநேரத்துக்கு இருக்கிறது, அச்சமயம் அது பார்வையை ஈர்த்து வர்ணஜாலம் புரிகிறது. அதைத் தொடர்ந்து உடனடியாக நிகழும் கதிரவனின் உதயமும்கூட அநேக மணிநேரம் எடுத்தது. கதிரவனின் விசிறி போன்ற செந்நிறமும் திண்சிவப்பு நிறமும் வடகிழக்கு வானை இன்னும் மூடியிருந்த சமயத்தில், தென் திசையில் சிறிது தொலைவில் கதிரவன் வானில் மேலெழும்பியது. அது விவரிக்கமுடியாத காட்சியாக இருக்கிறது—அதை சரியாக போட்டோ எடுக்கவும்கூட முடியவில்லை.” இரவு முழுவதும் படகோட்டிகள் விழித்திருந்தனர்.
“நாங்கள் குலோர்சூயார்க் வந்து சேர்ந்தபோது, மிகவும் களைப்பாக இருந்தோம். ஆனால் நாங்கள் மகிழ்ச்சியோடும் திருப்தியோடும் இருந்தோம். நாங்கள் பயணத்தை வெற்றிகரமாக முடித்திருந்தோம்! பயணத்தின் எஞ்சியிருந்த சமயம், கரையோரத்திலிருந்த பட்டணங்களிலும் குடியேற்றங்களிலும் நாங்கள் மிகுதியான அக்கறையைக் கண்டுபிடித்தோம். ‘உங்களில் சிலர் ஏன் எங்களோடு தங்கக்கூடாது? இவ்வளவு சீக்கிரம் புறப்பட்டுச் செல்வதைக் காண நாங்கள் வருத்தப்படுகிறோம்!’ என்ற கேள்வி அடிக்கடி கேட்கப்பட்டது.”
கார்சூட்டில் ஒரு சிநேகப்பான்மையான குடும்பத்தினர் வருகையாளர்களில் ஐந்து பேரை அவர்களோடு சாப்பிடும்படி அழைத்தனர். “அந்த குடும்பம் எங்களை அந்த இரவு அவர்களோடு தங்கும்படி விரும்பியது. ஆனால் 40 கிலோமீட்டர் தூரத்தில் நங்கூரமிட்டு தங்க இடங்கள் பல இருந்ததால், நாங்கள் தங்க விரும்பாமல் தொடர்ந்து பயணத்தை மேற்கொண்டோம். நாங்கள் சென்றிருந்த இடத்தில் அடுத்த நாள் விடியற்காலையில் ஒரு பெரிய பனிக்கட்டி உருகி ஓர் அலை 14 சிறிய படகுகளை கவிழ்த்துப்போட்டது என்பதை நாங்கள் பின்னர் கேள்விப்பட்டோம்!”
கடைசியில் அத்தொகுதியினர் தங்கள் தூல் ஆய்வுப்பயணத்தை முடித்துக்கொண்டு இலுலிசாட்டுக்கு திரும்பி வந்தனர். ஏறக்குறைய அதே சமயத்தில், மற்ற இரண்டு பிரஸ்தாபிகளும் கிரீன்லாந்தின் கிழக்கு கரையோரத்தில் ஒதுக்கமாயிருந்த இடங்களுக்கு பயணம் செய்திருந்தனர். அந்த இரண்டு பயணங்களிலும், பிரஸ்தாபிகள் 1,200 புத்தகங்கள், 2,199 சிற்றேடுகள், 4,224 பத்திரிகைகள், 152 சந்தாக்கள் ஆகியவற்றை விநியோகித்தனர். புதிதாக அக்கறை காண்பித்த அநேகரோடு இப்போது தொலைபேசியின் மூலமும் கடிதங்கள் மூலமும் தொடர்பு வைக்கப்பட்டு வருகிறது.
நேரம், சக்தி, பணம் ஆகியவை உட்பட்டிருந்தபோதிலும், ‘பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்’ என்ற தங்கள் எஜமானரின் கட்டளையை யெகோவாவின் சாட்சிகள் நிறைவேற்றி முடிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றனர்.—அப்போஸ்தலர் 1:8.
[பக்கம் 28-ன் பெட்டி]
கிரீன்லாந்தின் கிழக்கு கரையில்
பிரஸ்தாபிகள் அடங்கிய ஒரு தொகுதி தூலுக்குச் சென்ற அதே சமயத்தில், விகோ, சோன்யா என்ற சாட்சி தம்பதியினர் ஊழியம் செய்யப்படாத மற்றொரு பிராந்தியத்துக்கு பயணம் செய்தனர்—கிரீன்லாந்தின் கிழக்கு கரையிலுள்ள இட்டோக்கர்டூர்மிட் (ஸ்கோர்ஸ்பைசுண்ட்). அங்கே செல்வதற்கு அவர்கள் ஐஸ்லாந்துக்கு பயணம் செல்ல வேண்டியிருந்தது, கிரீன்லாந்தின் கரையிலுள்ள கான்ஸ்ட்டபிள் முனைக்கு விமானத்தில் சென்று பின்னர் ஹெலிகாப்டர் மூலம் செல்ல வேண்டியிருந்தது.
“யெகோவாவின் சாட்சிகள் இங்கு வந்தது இதுதான் முதல் முறை,” என்று கிரீன்லாந்து மொழியை தாய்மொழியாகக் கொண்ட இந்த இரண்டு பயனியர்கள் சொல்கின்றனர். “அந்த இடத்திலிருந்த ஜனங்கள் ஒதுக்கமாக இருந்தபோதிலும், விஷயங்களை அறிந்தவர்களாக இருந்ததைக் காண்பது ஆச்சரியமாயிருந்தது. இருப்பினும், அவர்கள் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதற்கு சந்தோஷப்பட்டனர். கதை சொல்வதில் இயல்பாகத் திறமை பெற்றிருக்கும் இவர்கள் தங்கள் நீர்நாய் வேட்டைகளைக் குறித்தும் இயற்கையில் உள்ள மற்ற அனுபவங்களைக் குறித்தும் எங்களிடம் ஆர்வமாய் கூறினர்.” அவர்கள் எவ்வாறு பிரசங்க வேலைக்கு பிரதிபலித்தனர்?
“வீட்டுக்கு வீடு பிரசங்க வேலையில் நாங்கள் கேட்டக்கிஸ்ட்டாக இருந்த ஜே—— என்பவரைச் சந்தித்தோம். ‘என்னையும் வந்து சந்தித்ததற்காக நான் உங்களுக்கு நன்றி சொல்கிறேன்,’ என்று அவர் கூறினார். நாங்கள் அவரிடம் நம் பிரசுரங்களையும் அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதையும் காண்பித்தோம். அடுத்த நாள் அவர் எங்களிடம் வந்து யெகோவா என்ற பெயரைப் பற்றி கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினார். அவருடைய சொந்த கிரீன்லாந்து மொழி பைபிளில் அடிக்குறிப்பிலிருந்த விளக்கத்தை நாங்கள் அவருக்கு காண்பித்தோம். நாங்கள் புறப்பட்டுச் சென்றபின்பு, அவர் நுக்கிலிருந்த எங்கள் நண்பர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு எங்கள் விஜயத்துக்காக நன்றி கூறினார். நாங்கள் இந்த மனிதருக்கு தொடர்ந்து உதவ முயற்சிசெய்ய வேண்டும்.
“நாங்கள் ஓ—— என்பவரையும்கூட சந்தித்தோம், யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி அறிந்திருந்த ஆசிரியர் அவர். அவர், 14-16 வயது வரையுள்ள மாணவர்கள் அடங்கிய தன் வகுப்பு மாணவர்களிடம் பேசுவதற்கு எங்களுக்கு இரண்டு மணிநேரம் கொடுத்தார். ஆகையால் நாங்கள் அவர்களுக்கு எங்கள் வீடியோவைக் காண்பித்தோம், அவர்களுடைய கேள்விகளுக்கு பதிலளித்தோம். இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள்a மற்றும் வேறுசில புத்தகங்களை அவர்கள் ஆர்வத்தோடு உடனடியாக எடுத்துக்கொண்டார்கள். நாங்கள் பின்னர் அந்த வகுப்பிலிருந்த மூன்று பெண்களை சந்தித்தோம். அவர்களுக்கு கேட்பதற்கு ஏராளமான கேள்விகள் இருந்தன, அதில் ஒரு மாணவி விசேஷமாக அக்கறை காண்பித்தாள். அவள் கேட்டாள், ‘ஒருவர் சாட்சியாக ஆவது எப்படி? உங்களைப் போல் இருப்பது நிச்சயமாகவே நன்றாக இருக்கும். என் அப்பாவும்கூட நீங்கள் செய்வதை விரும்புகிறார்.’ நாங்கள் அவளுக்கு கடிதம் எழுதுவதாக வாக்களித்தோம்.
“குடியேற்றங்கள் ஒன்றில் நாங்கள் எம்—— என்ற மற்றொரு கேட்டக்கிஸ்ட்டை சந்தித்தோம், ஆர்வமான கலந்தாலோசிப்பு ஒன்றைக் கொண்டிருந்தோம். வேட்டையாடுவதற்குச் சென்றிருந்த மனிதர்கள் திரும்பி வந்தவுடனேயே நம் பிரசுரங்களைப் பெற்றுக்கொள்வார்கள் என்பதை நிச்சயப்படுத்திக்கொள்வதாக கூறினார். இப்போது அவர் அந்த நெடுந்தொலைவிலுள்ள இடத்தில் நம் ‘பிரஸ்தாபியாக’ இருக்கிறார்.”
அப்பயணம், சுற்றி வளைந்து செல்வதாயும் சக்தியை உறிஞ்சிக்கொண்ட கடினமான பயணமாயும் இருந்தபோதிலும், தங்கள் முயற்சிகள் மிகவும் பலனளிக்கப்பட்டதாக அந்த இரண்டு பயனியர்களும் உணர்ந்தார்கள்.
[அடிக்குறிப்பு]
a உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்டது.