ஜப்பானில் மத சுயாதீனம் நிலைநிறுத்தப்பட்டது
ஜப்பானில், யெகோவாவின் சாட்சிகளாக இருக்கிற இளம் மாணவர்கள், பல ஆண்டுகளாக ஓர் இரண்டக நிலையை எதிர்ப்பட்டு வந்திருக்கின்றனர்: பைபிளால் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிற தங்கள் மனச்சாட்சியைப் பின்பற்ற வேண்டுமா, அல்லது தங்கள் மனச்சாட்சியை மீறச் செய்கிற பள்ளி பாடத் திட்டத்தைப் பின்பற்ற வேண்டுமா? ஏன் இந்த இரண்டக நிலை? ஏனெனில் போருக்குரிய தற்காப்பு பயிற்சி கலைகள், உடற்பயிற்சி கல்வியின் பாகங்களாக அவர்களுடைய பள்ளிகளில் இருந்தன. அத்தகைய பயிற்சிகள், ஏசாயா 2-ம் அதிகாரம் 4-ம் வசனத்தில் காணப்படுகிறதைப்போன்ற பைபிள் நியமங்களுக்கு ஒத்தில்லை என்று இளம் சாட்சிகள் உணர்ந்தனர். இது வாசிப்பதாவது: “அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அறிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.”
மற்றொருவருக்குத் தீங்கிழைப்பதை உட்படுத்தும் போர் செய்வதைப்போன்ற கலைகளைக் கற்க விரும்பாமல், இளைஞரான கிறிஸ்தவ சாட்சிகள், போருக்குரிய அந்தத் தற்காப்பு பயிற்சிகளில் தாங்கள் மனச்சாட்சியுடன் பங்குகொள்ள முடியாதென்று, தங்கள் ஆசிரியர்களிடம் விளக்கிக் கூறினர். பள்ளித் திட்டத்தை ஏற்கும்படி இந்த மாணாக்கர்களை இணங்க வைக்க முயற்சிசெய்தபின்பு, புரிந்துகொண்ட ஆசிரியர்கள் பலர், மாணவர்களுடைய மனச்சாட்சிகளை மதிக்க முடிவில் ஒப்புக்கொண்டு, அதற்குப் பதிலாக வேறு நடவடிக்கைகளில் அவர்களை ஈடுபடுத்துவதற்குச் சம்மதித்தனர்.
எனினும், சில ஆசிரியர்கள் கோபமடைந்தனர். சாட்சிகளாயிருந்த இளைஞருக்கு, உடற்பயிற்சி கல்விக்குரிய தேறுதல் சான்றுகள் அளிக்க சில பள்ளிகள் மறுத்தன. போருக்குரிய கலைகளில் பங்குகொள்ளாததற்காக, 1993-ல், குறைந்தது ஒன்பது சாட்சிகள், மேல் வகுப்புக்குச் செல்ல தேறுதலளிப்பு மறுக்கப்பட்டு, பள்ளியிலிருந்து விலகும்படி வலுக்கட்டாயப்படுத்தப்பட்டனர் அல்லது விலக்கப்பட்டனர்.
கிறிஸ்தவ இளைஞர்கள், தங்கள் மனச்சாட்சிக்கு விரோதமான ஒன்றை செய்யாமல், கல்வி பெறுவதற்கான உரிமையைக் காப்பதற்கு, நடவடிக்கை எடுக்க காலமாயிற்றேன்பது தெளிவாயிருந்தது. கோப் முனிசிபல் இன்டஸ்ட்ரியல் டெக்னிக்கல் (சுருக்கமாக கோப் டெக் என்று அழைக்கப்படும்) கல்லூரியில் இரண்டாவது படிநிலைக்கு தேறுதலளிக்க மறுக்கப்பட்ட ஐந்து மாணாக்கர்கள், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க தீர்மானித்தார்கள்.
பிரச்சினை என்ன?
1990-ன் வசந்தகாலத்தில் அந்த ஐந்து மாணாக்கர்கள் கோப் டெக் கல்லூரியில் பிரவேசித்தபோது, பைபிளில் ஆதாரங்கொண்ட தங்கள் கருத்துக்களினிமித்தமாக, கென்டோ (ஜப்பானிய வாட்போர்த்திறம்) படைப்பயிற்சிகளில் தாங்கள் பங்குகொள்ள முடியாது என்று தங்கள் ஆசிரியர்களிடம் விளக்கிக் கூறினர். உடற்பயிற்சி கல்வி கலையியற் குழுவினர், கண்டிப்பாய் எதிர்ப்போராக, உடற்பயிற்சி கல்வியில் தேறுதல் சான்று பெற, அதற்குப் பதிலாக வேறு எந்தச் சலுகையும் அவர்களுக்கு அளிக்க மறுத்துவிட்டனர். முடிவில், அந்த உடற்பயிற்சி கல்வி வகுப்பில் அந்த மாணாக்கர்கள் தேறுதல் பெறவில்லை, இதன் விளைவாக அதே முதல் படிநிலையில் (முதல் ஆண்டுக்குரிய கல்லூரி படிப்பை) திரும்பவும் படிக்க வேண்டியதாயிற்று. அந்தப் பள்ளி எடுத்த நடவடிக்கை, மத சுயாதீனம் அளிப்பதாக அரசியலமைப்பு உறுதிசெய்ததற்கு எதிராகச் சென்றதென்று கூறி, கோப் மாவட்ட நீதிமன்றத்தில், ஏப்ரல் 1991-ல், உரிமைகோரிக்கை வழக்கு ஒன்றை அவர்கள் பதிவு செய்தனர்.a
அதற்குப் பதிலாக வேறு ஏற்பாடு செய்து கொடுப்பது, ஒரு தனிப்பட்ட மதத்தின் சார்பாகச் சலுகை காட்டுவதற்கு ஒப்பாயிருக்கும், இவ்வாறு பொது பள்ளியின் நடுநிலைவகிப்பை மீறுவதாயிருக்கும் என்று அந்தப் பள்ளி அதிகாரிகள் விவாதித்தனர். அதுமட்டுமல்லாமல், வேறு உடற்பயிற்சி கல்வி திட்டம் ஒன்றை பதிலாக அளிக்க, தங்களுக்கு வசதிகளுமில்லை ஆட்களுமில்லை என்றும் கூறினார்கள்.
மாவட்ட நீதிமன்ற தீர்ப்பு, தகவல் அறிந்தவர்களை அதிர்ச்சியுற செய்கிறது
இந்த வழக்கு விசாரிக்கப்படுகையில், அந்த ஐந்து மாணாக்கர்களில் இருவர், உடற்பயிற்சி கல்விக்குரிய தேறுதல் தரத்தில் மறுபடியும் தவறினர். மற்ற மூவரும் ஓரளவாகத் தேறி அடுத்த வகுப்புக்குச் சென்றனர். கல்விக்குரிய சாதனைகள் மோசமாயிருந்து இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக ஒரே வகுப்பில் இருக்கும் மாணாக்கர்கள் பள்ளியிலிருந்து விலக்கப்படலாமென பள்ளி விதிகள் கூறின. இதை மனதில் கொண்டு, அந்த இரு மாணாக்கரில் ஒருவன், தான் விலக்கப்படுவதற்கு முன்பாக, பள்ளியை விட்டுச் செல்ல தீர்மானித்தான். ஆனால், மற்றவனாகிய குனிஹிட்டோ கோபயாஷி பள்ளியை விட்டுச் செல்ல மறுத்துவிட்டான். ஆகையால் அவன் வெளியேற்றப்பட்டான். கவனிப்புக்குரியதாக, 48 மார்க்குகளுடன் அவன் தவறிய உடற்பயிற்சி கல்வி உட்பட, எல்லா பாடங்களிலும் குனிஹிட்டோவின் சராசரி 100-க்கு 90.2 ஆகவிருந்தது. 42 மாணாக்கரைக் கொண்ட தன் வகுப்பில் அவன் முதல் நிலையில் இருந்தான்.
“கென்டோ உடற்பயிற்சிகளில் பங்குகொள்ளும்படி பள்ளி தேவைப்படுத்தினதால், வழக்காடுபவரின் வணக்கச் சுயாதீனம் ஒருவாறு கட்டுப்படுத்தப்பட்டதென்பதை மறுக்கமுடியாது” என கோப் மாவட்ட நீதிமன்றம் ஒப்புக்கொண்டபோதிலும், பிப்ரவரி 22, 1993-ல், கோப் டெக்கின் ஆதரவாக அது தீர்வுசெய்து இவ்வாறு கூறியது: “பள்ளி எடுத்த நடவடிக்கைகள், ஸ்தாபிக்கப்பட்ட சட்டத்தை மீறவில்லை.”
முதல் நூற்றாண்டில் அப்போஸ்தலன் பவுல் செய்ததைப்போல், வழக்காடுபவர்கள், அதற்குமேல் உயர்ந்த சட்டப்பூர்வ மேலதிகாரிகளிடம் மேல் வழக்குத்தொடுக்க தீர்மானித்தனர். (அப்போஸ்தலர் 25;11, 12) ஒசாகா உயர் நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு சென்றது.
வழக்காடுபவர்களின் தன்னலமற்ற மனப்பான்மை
ட்சுக்கூபா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பெயர்பெற்ற ஓர் அறிஞரான, பேராசிரியர் டெட்சுவோ ஷிமோமூரா, ஒசாகா உயர் நீதிமன்றத்தில் திறம்பட்ட ஒரு சாட்சியாக சாட்சிகொடுக்க ஒப்புக்கொண்டார். கல்வித்துறையிலும் சட்டத்துறையிலும் தனிச் சிறப்புற்றவராக, மாணாக்கரைக் கையாளுவதில் அந்தப் பள்ளியின் நடவடிக்கைகள் எவ்வளவு அன்பாதரவற்றதாக இருந்திருக்கின்றன என்பதை அறிவுறுத்தினார். குனிஹிட்டோ கோபயாஷி தன் உணர்ச்சிகளை நீதிமன்றத்தில் வெளிப்படுத்திக் கூறினான். அவனுடைய உள்ளார்ந்த மனப்பான்மை நீதிமன்றத்திலிருந்தவர்களின் இருதயங்களைக் கனிவித்தது. மேலும், பிப்ரவரி 22, 1994-ல், கோப் பார் அஸோஸியேஷன், அந்தப் பள்ளியின் நடவடிக்கைகள் குனிஹிட்டோவின் வணக்க சுயாதீனத்தின்பேரிலும், கல்வி பெறுவதற்கான அவனுடைய உரிமையின்பேரிலும் வரம்பு மீறி தலையிட்டனவென்று அறிவித்து, அந்தப் பள்ளி அவனைத் திரும்ப சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று சிபாரிசு செய்தது.
ஒசாகா உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிப்பதற்கான நேரம் நெருங்கியபோது, உட்பட்ட கிறிஸ்தவ இளைஞர் எல்லாரும் முடிவுவரையாக அந்தப் போராட்டத்தின் பாகமாயிருக்கும்படி ஆவலுள்ளோராக இருந்தனர். ஜப்பான் முழுவதிலுமுள்ள பள்ளிகளில் இதே பிரச்சினையை எதிர்ப்படுகிற ஆயிரக்கணக்கான இளைஞராகிய சாட்சிகளின் சார்பில், தாங்கள் சட்டப்பூர்வமான ஒரு போரிடுவதாக அவர்கள் உணர்ந்தனர். ஆனால் பள்ளியிலிருந்து அவர்கள் விலக்கப்படவில்லையாதலால், நீதிமன்றம் அவர்களுடைய வழக்கை பெரும்பாலும் தள்ளிவிடும் என்பதாக தெரிந்தது. மேலும், அவர்கள் தங்கள் வழக்குத் தொடுப்பை பின்வாங்கிக்கொண்டால், குனிஹிட்டோவை வெளியேற்றினதில் அந்தப் பள்ளியின் நியாயமற்ற நடவடிக்கை விளக்கமாகத் தெரியும்படி செய்யும். இவ்வாறு, குனிஹிட்டோவைத் தவிர மற்ற எல்லாரும் வழக்கை விட்டுவிட தீர்மானித்தனர்.
டிசம்பர் 22, 1994 அன்று, ஒசாகா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரேய்ஸூக்கி ஷிமாடா, கோப் மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்றின ஒரு தீர்ப்பளித்தார். கென்டோ உடற்பயிற்சிகளை மறுத்ததற்கான குனிஹிட்டோவின் காரணத்தை அந்த நீதிமன்றம், உள்ளப்பூர்வமானதாகவும், தன் மத நம்பிக்கையின்பேரில் ஆதாரங்கொண்ட அவனுடைய நடவடிக்கையினால் ஏற்பட்ட பாதிப்பு, மிதமீறி அதிகமானதாக இருந்ததாகவும் நீதிமன்றம் கண்டது. அந்தப் பள்ளி அவனுக்கு, அதற்குப் பதிலாக வேறு நடவடிக்கைகளை அளித்திருக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி ஷிமாடா கூறினார். மனித உரிமைகளைப்பற்றி அக்கறையுடையோராக இருந்தவர்களின் இருதயங்களை இந்த மிகச் சிறந்த தீர்ப்பு, ஆதரவாகப் பிரதிபலிக்கச் செய்தது. எனினும் அந்தப் பள்ளி, அந்த வழக்கை தலைமை நீதிமன்றத்துக்கு முறையீடு செய்தது. இவ்வாறு குனிஹிட்டோ இன்னும் ஓர் ஆண்டுக்கு மேற்பட்டு, படிப்பில்லாமல் இருக்கச் செய்தது.
தலைமை நீதிமன்றத்துக்கு
பின்னால், கோப் ஷிம்பூன் செய்தித்தாளில், பதிப்பாசிரியர் கட்டுரை ஒன்று இவ்வாறு கூறியது: “கோப் நகர பள்ளி மன்றக்குழுவும் பள்ளியும், அந்தத் தீர்ப்புக்குப் பின் [ஒசாகா உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்] மிஸ்டர் கோபயாஷியைப் பள்ளியில் திரும்ப ஏற்றிருக்க வேண்டும். . . . அவர்களுடைய அநாவசியமான எதிர்ப்பு மனப்பான்மை, ஒரு மாணவனின் இளைமைக்குரிய ஒரு முக்கிய காலப்பகுதி பயனற்றுப் போகும்படி செய்தது.” இருப்பினும், கோப் டெக் இந்தக் காரியத்தில் பிடிவாதமான நிலைநிற்கையை ஏற்றது. இதன் விளைவாக இது அந்தத் தேசமுழுவதிலும் செய்தி அறிக்கைகளின் விவாதப் பொருளாயிற்று. நாடு முழுவதிலும், ஆசிரியர்களும் பள்ளி அதிகாரிகளும் இதற்குக் கவனம் செலுத்தினார்கள். அந்த நாட்டின் உச்ச நீதிமன்றத்திலிருந்து வரும் ஒரு தீர்ப்பு, எதிர்காலத்தில் இதைப்போன்ற காரியங்களுக்கு உறுதியான சட்டப்பூர்வ முன்மாதிரியாக இருக்கும்.
இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு அந்தப் பள்ளி முறையிட்டு, ஏறக்குறைய ஒரு வாரத்துக்குப் பின்பு, ஜனவரி, 17, 1995 அன்று, குனிஹிட்டோவும் அவனுடைய குடும்பத்தாரும் வாழ்ந்த அஷியா நகரத்தை, கோப் நிலநடுக்கம் தாக்கினது. அந்தக் காலை, அந்த இடப்பகுதியை நிலநடுக்கம் தாக்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால், ஏறக்குறைய ஐந்தரை மணிக்கு குனிஹிட்டோ, தன் பகுதிநேர வேலைக்காக வீட்டைவிட்டு சென்றான். ஹான்ஷின் எக்ஸ்பிரெஸ்வேயின் கீழுள்ள பாதையில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, அந்த நிலநடுக்கம் தாக்கி, திடீரெனத் தகர்ந்து வீழ்ந்த பகுதியை அவன் அப்போதுதான் அணுகிக்கொண்டிருந்தான். உடனடியாக அவன் வீட்டுக்குத் திரும்பி சென்று, அங்கு தன் வீட்டின் முதல் மாடி முற்றிலும் தகர்ந்து நொறுங்கியிருப்பதைக் கண்டான். அந்த நில அதிர்ச்சியில் அவன் எளிதில் தன் உயிரை இழந்திருக்கக்கூடுமென குனிஹிட்டோ கண்டான். தான் தப்பிப்பிழைத்திருப்பதற்கு யெகோவா அனுமதித்ததற்காக அவருக்கு நன்றிசெலுத்தினான். அவன் இறந்திருந்தால், கென்டோ வழக்கு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில்லாமல் ஒருவேளை முடிந்துவிட்டிருக்கும்.
வழக்கு முறையீடுகளை, ஜப்பானிலுள்ள உச்ச நீதிமன்றம் பொதுவாக எழுத்தில் மாத்திரமே ஆராய்ந்து, கீழ் நீதிமன்ற தீர்ப்புகள் சரிதானா சரியில்லையா என்பதைத் தீர்வு செய்கிறது. கீழ் நீதிமன்ற தீர்ப்பை மாற்றுவதற்கு முக்கியமான காரணம் இருந்தால் தவிர, விசாரணை நடத்துகிறதில்லை. அதன் தீர்ப்பளிக்கும் நாளை, சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு அது தெரிவிப்பதில்லை. ஆகையால், அதன் தீர்ப்பு தன்னிடம் கொடுக்கப்படுமென குனிஹிட்டோவிடம் மார்ச் 8, 1996-ன் காலையில் சொன்னபோது அவன் ஆச்சரியப்பட்டான். அவனுக்கு மகிழச்சியும் களிப்புமுண்டாக, ஒசாகா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அந்த உச்ச நீதிமன்றம் ஆதரித்து உறுதிசெய்ததென்று அறிந்தான்.
“[பள்ளி] எடுத்த நடவடிக்கைகள், சமுதாய ஏற்பு நோக்குநிலையிலிருந்து காண, முற்றிலும் தகாதவையெனக் கருதப்பட வேண்டும். சட்டம் அனுமதிக்கும் தனித்தவர் உரிமையைக் கருதாமல் மீறிச் சென்றுவிட்டன. ஆகையால் அவை சட்ட விரோதமானவை” என்று, நீதிபதி ஷினிச்சி காவை தலைமைதாங்குதலோடு, நான்கு நீதிபதிகள் ஒருமனதாகத் தீர்ப்பு செய்தனர். கென்டோ உடற்பயிற்சிகள் செய்ய குனிஹிட்டோ மறுத்ததன் நேர்மையை நீதிமன்றம் ஒப்புக்கொண்டு இவ்வாறு சொன்னது: “வழக்காடுபவர், கென்டோ உடற்பயிற்சிகளில் பங்குகொள்ள மறுத்ததற்கான காரணம் மனப்பூர்வமானது மற்றும் அவனுடைய விசுவாசத்தின் ஆதாரத்தோடு நெருங்க இணைந்துள்ளது.” வழக்காடுபவரின் மத நம்பிக்கையை மதித்து, அதற்குப் பதிலாக வேறு வழிவகைகளைப் பள்ளி அளித்திருக்கலாம், அளித்திருக்கவும் வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு செய்தது.
பெரும்படியான நன்மை பயக்குவிக்கிறது
பள்ளிகளில் வணக்க சுயாதீனத்தின் சார்பாக நல்ல முன்மாதிரியை, இந்தத் தீர்ப்பு வைக்குமென்பதில் சந்தேகமில்லை. தி ஜப்பான் டைம்ஸ் இவ்வாறு சொன்னது: “இதுவே, முதல் தடவையாக, கல்வி மற்றும் மத சுயாதீனத்துக்குரிய விவாதத்தின்பேரில் உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பு.” எனினும், விசுவாச பரீட்சைகளை எதிர்ப்படுகையில், ஒவ்வொரு இளம் மாணாக்கனும், தன் சொந்த மனச்சாட்சிக்குரிய நிலைநிற்கையை ஏற்கவேண்டியதன் பொறுப்பை இந்தத் தீர்ப்பு நீக்குகிறதில்லை.
குனிஹிட்டோவுக்கு வெற்றியளிப்பதற்கு அந்த நீதிபதிகளை இயக்குவித்த காரணங்களில் ஒன்றானது, ‘அவன் நேர்மையான மாணாக்கனாக, அவனுடைய கல்வி சம்பந்தமான சாதனை முதன்மையாயிருந்ததே,’ என்று ட்சுக்கூபா பல்கலைக்கழக பேராசிரியர் மாசாயூக்கி யுச்சீனோ குறிப்பிட்டார். தங்கள் விசுவாசத்தின் பரீட்சைகளை எதிர்ப்படுகிற கிறிஸ்தவர்களுக்கு பைபிள் இந்த அறிவுரை அளிக்கிறது: “புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள். (1 பேதுரு 2:12) உண்மையான கிறிஸ்தவ இளைஞர்கள், பைபிள் தராதரங்களின்படி, தங்கள் முழு வாழ்க்கையையும் வாழ்வதன்மூலம், தங்கள் பைபிள்பூர்வ நிலைநிற்கை, ஆட்கள் மதிப்பதற்குத் தகுதியுள்ளதெனக் காட்டலாம்.
உச்ச நீதிமன்ற தீர்மானத்திற்குப் பின், குனிஹிட்டோ கோபயாஷி, கோப் டெக்கில் திரும்ப சேர்க்கப்பட்டான். குனிஹிட்டோவோடு முதன்முதல் பள்ளியில் சேர்க்கப்பட்டிருந்த மாணாக்கரில் பெரும்பான்மையர் ஏற்கெனவே தேறி படிப்பை முடித்துவிட்டிருந்தனர். குனிஹிட்டோ இப்போது, தன்னைப் பார்க்கிலும் ஐந்து ஆண்டுகள் இளைஞராயிருக்கும் மாணாக்கரோடு படித்துக்கொண்டிருக்கிறான். இந்த உலக மக்கள் பலரின் கண்களில் ஐந்து அருமையான ஆண்டுகள் வீணாக்கப்பட்டதுபோல் தோன்றும். எனினும், குனிஹிட்டோவின் உத்தமத்தன்மை யெகோவா தேவனின் பார்வையில் அருமையானதாக உள்ளது. அவன் செய்த தியாகம் நிச்சயமாகவே வீண்போகவில்லை.
[அடிக்குறிப்பு]
a நுட்ப விவரங்களுக்கு, உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட, அக்டோபர் 8, 1995-க்குரிய விழித்தெழு! வெளியீட்டின், 10-லிருந்து 14 வரையான பக்கங்களில் தயவுசெய்து காண்க.
[பக்கம் 20-ன் படங்கள்]
இடது: நில நடுக்கத்துக்குப் பின் குனிஹிட்டோவின் வீடு
கீழே: இன்று குனிஹிட்டோ