மீட்பு சமீபித்துவருகையில் தைரியங்கொள்ளுங்கள்
‘உன்னை மீட்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று யெகோவா சொல்லுகிறார்.’—எரேமியா 1:19, NW.
1, 2. மனித குடும்பத்துக்கு ஏன் மீட்பு தேவையாக இருக்கிறது?
மீட்பு! என்னே ஆறுதலளிக்கும் ஒரு வார்த்தை! மீட்கப்படுவது என்பது காப்பாற்றப்படுவதை, மோசமான, மகிழ்ச்சியற்ற நிலைமையிலிருந்து விடுவிக்கப்படுவதை அர்த்தப்படுத்துகிறது. இது அதிக மேம்பட்ட, மகிழ்ச்சியான ஒரு நிலைமைக்குள் கொண்டுவரப்படுவதையும் உட்படுத்துகிறது.
2 மனித குடும்பத்துக்கு இந்தச் சமயத்தில் இத்தகைய ஒரு மீட்பு எவ்வளவு அவசரமாக தேவைப்படுகிறது! எல்லா இடங்களிலுமுள்ள ஆட்கள் ஒடுக்கப்பட்டும் கடினமான பிரச்சினைகளால்—பொருளாதார, சமுதாய, சரீரப்பிரகாரமான, மனதின் பிரகாரமான மற்றும் உணர்ச்சிகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் பாரமடைந்தும் இருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் உலகம் போகும் போக்கைக் குறித்து அதிருப்தியுள்ளவர்களாயும் ஏமாற்றமடைந்தவர்களாயும் மேம்பட்ட ஒரு மாற்றத்தை விரும்புகிறவர்களாயும் இருக்கிறார்கள்.—ஏசாயா 60:1; மத்தேயு 9:36.
“கையாளுவதற்கு கடினமான கொடிய காலங்கள்”
3, 4. ஏன் இப்பொழுது மீட்புக்கான அதிக தேவை இருக்கிறது?
3 இந்த 20-ஆம் நூற்றாண்டு வேறு எந்த நூற்றாண்டைக் காட்டிலும் அதிகமான துன்பங்களுக்கு ஆளாகியிருக்கும் காரணத்தால், மீட்புக்கான தேவை வேறு எப்போதும் இருந்ததைவிட இப்போது அதிகமாக உள்ளது. இன்று, நூறு கோடிக்கும் அதிகமான ஆட்கள் மோசமான வறுமையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்; ஆண்டுதோறும் சுமார் 2 கோடியே 50 லட்சம் என்ற ரீதியில் அந்த எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 கோடியே 30 லட்சம் பிள்ளைகள் ஊட்டச்சத்துக் குறைவினால் அல்லது வறுமையின் காரணங்களால் இறந்துபோகின்றனர்—நாள் ஒன்றுக்கு 35,000-க்கும் அதிகமானவர்கள்! லட்சக்கணக்கான வயதான ஆட்களும் பல்வேறு நோய்களின் காரணமாக அகால மரணத்தை அடைகின்றனர்.—லூக்கா 21:11; வெளிப்படுத்துதல் 6:8.
4 போர்களும் உள்நாட்டுக் கலகங்களும் சொல்லமுடியாத துயரத்தை உண்டுபண்ணியிருக்கின்றன. போர்கள், இன மற்றும் மத சண்டைகள், அரசாங்கங்கள் தங்கள் சொந்த குடிமக்களையே படுகொலைகள் செய்வது ஆகியவற்றால் “இந்த நூற்றாண்டில் 20 கோடியே 30 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆட்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்,” என்பதாக அரசாங்கத்தினால் மரணம் என்ற ஆங்கில புத்தகம் சொல்கிறது. அது மேலுமாகச் சொல்வதாவது: “உண்மையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 36 கோடியாக இருக்கலாம். நம்முடைய மனித இனம் நவீன நாளைய ‘கொள்ளை நோயால்’ பாழாக்கப்பட்டிருப்பது போல உள்ளது. ஆம், கிருமிகளால் அல்ல ஆனால் பலத்தினால் ஏற்படும் கொள்ளைநோய்.” எழுத்தாளர் ரிச்சர்ட் ஹார்வுட் இவ்விதமாக குறிப்பிட்டார்: “கடந்த நூற்றாண்டுகளில் நடைபெற்றுள்ள காட்டுமிராண்டித்தனமான போர்களை இதோடு ஒப்பிடுகையில் அவை வெறும் வெத்து வேட்டுகளே.”—மத்தேயு 24:6, 7; வெளிப்படுத்துதல் 6:4.
5, 6. நம்முடைய காலத்தை இத்தனை வேதனையுள்ளதாக ஆக்குவது எது?
5 சமீப ஆண்டுகளின் வேதனையான நிலைமைகளோடுகூட, அங்கே வன்முறையான குற்றச்செயல், ஒழுக்கக்கேடு மற்றும் குடும்ப சீர்குலைவிலும் பிரமாண்டமான அதிகரிப்பு இருந்துவருகிறது. ஐக்கிய மாகாணங்களின் முன்னாள் கல்வி செயலர் வில்லியம் பென்னட், 30 ஆண்டுகளில் ஐ.மா.-வின் மக்கள்தொகை 41 சதவீதம் வளர்ந்திருக்கிறது, ஆனால் வன்முறையான குற்றச்செயலோ 560 சதவீதமாகவும், சட்டவிரோதமான பிறப்புகள் 400 சதவீதமாகவும், திருமண விலக்குகள் 300 சதவீதமாகவும், பருவ வயது தற்கொலைகள் 200 சதவீதமாகவும் வளர்ந்திருப்பதாக குறிப்பிட்டார். பிரின்ஸ்டன் பல்கலைக்கழக பேராசிரியர் இளையவர் ஜான் டெயில்யோ, இளம் வயதில் “கொலைசெய்து, தாக்கி, கற்பழித்து, வழிபறிசெய்து, கொள்ளையடித்து, சமுதாயத்தில் கவலைக்குரிய குழப்பங்களை உண்டுபண்ணும் சூப்பர் கொள்ளைக்காரர்களின்” பட்டியல் நீண்டுகொண்டே போவதைக் குறித்து எச்சரித்தார். “கைது செய்யப்படுவதால் ஏற்படும் களங்கம், சிறைவாசத்தின் வேதனை, அல்லது மனச்சாட்சியின் உறுத்தல் ஆகிய எதை குறித்தும் அவர்கள் கவலைப்படுவது இல்லை.” அந்தத் தேசத்தில் 15 முதல் 19 வயதிலுள்ளவர்களின் இறப்புக்கு மனித கொலையே இப்பொழுது இரண்டாவது முக்கிய காரணமாக இருந்துவருகிறது. மேலுமாக, நான்கு வயதுக்குட்பட்ட அதிகமான பிள்ளைகள் நோய்வாய்ப்பட்டு இறப்பதைவிட பலாத்காரத்துக்கு பலியாகியே இறக்கின்றனர்.
6 இத்தகைய குற்றச்செயலும் வன்முறையும் ஒரே ஒரு நாட்டுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டதாயில்லை. இதேபோன்ற போக்கையே அநேக நாடுகள் குறிப்பிடுகின்றன. லட்சக்கணக்கானோரை கெடுக்கும் சட்டவிரோதமான போதைப்பொருட்களின் உபயோகம் வளர்ந்துவருவது இதற்கு காரணமாயிருக்கிறது. ஆஸ்திரேலியாவின் சிட்னி மார்னிங் ஹெரால்ட் இவ்விதமாகச் சொன்னது: “போர் ஆயுதங்களின் விற்பனைக்கு அடுத்ததாக சர்வதேசிய போதைப்பொருள் கள்ளச்சந்தை வியாபாரமே உலகில் இரண்டாவது அதிக லாபகரமான வியாபாரமாக ஆகியிருக்கிறது.” இதற்கு பங்களிக்கும் மற்றொரு காரியம், இப்பொழுதுதெல்லாம் டெலிவிஷனில் காட்டப்படும் அதிகமான வன்முறையும் ஒழுக்கக்கேடுமாகும். அநேக தேசங்களில், ஒரு பிள்ளை 18 வயதை எட்டுவதற்குள், டிவியில் எண்ணற்ற வன்முறைச் செயல்களையும் ஒழுக்கக்கேடான செயல்களையும் பார்த்துவிடுகிறான். அது குறிப்பிடத்தக்கவிதத்தில் கறைபடுத்தும் செல்வாக்காக இருக்கிறது, ஏனென்றால், நாம் வழக்கமாக நம்முடைய மனங்களை போஷிக்கும் காரியங்களே நம்முடைய ஆளுமையை உருப்படுத்தி அமைக்கின்றன.—ரோமர் 12:2; எபேசியர் 5:3, 4.
7. தற்போதுள்ள மோசமான நிலைமைகளை பைபிள் தீர்க்கதரிசனம் எவ்வாறு முன்னுரைத்தது?
7 நம்முடைய நூற்றாண்டில் காணப்படும் இந்தச் சம்பவங்களின் பயங்கரமான போக்கை பைபிள் தீர்க்கதரிசனம் துல்லியமாக முன்னறிவித்தது. உலகளாவிய போர்கள், பெருவாரியாக பரவும் நோய்கள், உணவு பற்றாக்குறைகள் மற்றும் அக்கிரமங்களின் அதிகரிப்பு ஆகியவை இருக்கும் என்பதாக அது சொன்னது. (மத்தேயு 24:7-12; லூக்கா 21:10, 11) மேலுமாக 2 தீமோத்தேயு 3:1-5-ல் பதிவாகியுள்ள தீர்க்கதரிசனத்தை நாம் சிந்தித்துப் பார்க்கையில், அது தினசரி செய்தி அறிக்கைகளைக் கேட்பது போல இருக்கிறது. அது நம்முடைய சகாப்தத்தை ‘கடைசி நாட்கள்’ என்பதாக அடையாளங்காட்டி, மக்களை ‘தற்பிரியராயும், பணப்பிரியராயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்,’ விவரிக்கிறது. சரியாகச் சொல்லப்போனால் உலகம் இப்படித்தானே இருக்கிறது. வில்லியம் பென்னட் ஒப்புக்கொண்டவிதமாகவே: “நாகரிகம் சீரழிந்துவிட்டிருப்பதற்கு . . . தேவைக்கு அதிகமான அடையாளங்கள் உள்ளன.” முதல் உலகப் போரோடு நாகரிகத்திற்கு சமாதி கட்டியாகிவிட்டது என்பதாகவும்கூட சொல்லப்பட்டிருக்கிறது.
8. நோவாவின் நாளில் கடவுள் ஏன் ஜலப்பிரளயத்தைக் கொண்டுவந்தார், இது நம்முடைய நாளுடன் எவ்வாறு சம்பந்தப்பட்டிருக்கிறது?
8 நோவாவின் நாளின் ஜலப்பிரளயத்துக்கு முன்பாக “பூமி கொடுமையினால் நிறைந்திருந்த”போது இருந்ததைவிட நிலைமை இன்று மிகவும் மோசமாக உள்ளது. அப்போது, பொதுவில் ஜனங்கள் தங்கள் கெட்ட வழிகளைவிட்டு மனந்திரும்ப மறுத்துவிட்டார்கள். இதன் காரணமாக, கடவுள் இவ்வாறு சொன்னார்: “அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது; நான் அவர்களைப் பூமியோடுங்கூட அழித்துப்போடுவேன்.” பிரளயம் அந்த வன்முறை நிறைந்த உலகத்துக்கு முடிவைக் கொண்டுவந்தது.—ஆதியாகமம் 6:11, 13; 7:17-24.
மனிதர்கள் மீட்பது கூடாத காரியம்
9, 10. மீட்புக்காக நாம் ஏன் மனிதர்களை நம்பியிருக்கக்கூடாது?
9 மனிதரின் முயற்சிகள் இந்த மோசமான நிலைமைகளிலிருந்து நம்மை மீட்க முடியுமா? கடவுளுடைய வார்த்தை பதிலளிக்கிறது: “பிரபுக்களையும் இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள்.” “தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்ல.” (சங்கீதம் 146:3; எரேமியா 10:23) ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் சரித்திரம் இந்த உண்மைகளை உறுதிசெய்திருக்கின்றன. மனிதர்கள் தங்களால் முடிந்த எல்லா விதமான அரசியல், பொருளாதார மற்றும் சமுதாய அமைப்பு முறைகளை முயற்சி செய்துவிட்டிருக்கின்றனர், ஆனால் நிலைமைகள் மோசமாகிக்கொண்டே இருக்கின்றன. மனிதர்களால் கொண்டுவரமுடிகிற தீர்வு ஒன்று இருந்திருந்தால், இதற்குள் அது தெரிந்திருக்க வேண்டும். மாறாக, “மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளு”வதே உண்மை நிலையாக உள்ளது.—பிரசங்கி 8:9; நீதிமொழிகள் 29:2; எரேமியா 17:5, 6.
10 சில ஆண்டுகளுக்கு முன்பு, முன்னாள் ஐ.மா. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிபிக்னேவ் பிரேழன்சி இவ்வாறு சொன்னார்: “சமுதாயத்தில் கலகம், அரசியலில் கொந்தளிப்பு, பொருளாதார நெருக்கடி, சர்வதேச மோதல் ஆகியவை இன்னும் அதிகமாக உலகம் முழுவதிலும் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதே உலகின் போக்கைப் பற்றிய எந்த ஒரு பாரபட்சமற்ற பகுப்பாய்வின் தவிர்க்கமுடியாத முடிவாகவும் இருக்கிறது.” அவர் மேலுமாகச் சொன்னதாவது: “மனித சமுதாயத்திற்கு முன்பிருக்கும் அபாயம் உலகம் முழுவதிலும் வியாபித்திருக்கும் அராஜகமே.” உலக நிலைமைகளைப்பற்றிய அந்த மதிப்பீடு இன்று இன்னும் மிகச் சரியாக இருக்கிறது. வன்முறை அதிகரித்திருக்கும் இந்தச் சகாப்தத்தைக் குறித்து, நியூ ஹேவன், கனெடிக்கட், ரெஜிஸ்டர் தலையங்கம் ஒன்று இவ்விதமாக அறிவிப்பு செய்தது: “அதை தடுத்து நிறுத்தமுடியாதபடிக்கு நிலைமை கைமீறி போய்விட்டிருக்கிறது.” இல்லை, இந்த உலகின் சீர்கெட்ட நிலையை நிறுத்துவதற்கில்லை, ஏனென்றால் இந்தக் ‘கடைசி நாட்கள்’ பற்றிய தீர்க்கதரிசனம் பின்வருமாறும்கூட சொன்னது: “பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் மோசம்போக்குகிறவர்களாகவும் மோசம்போகிறவர்களாகவுமிருந்து மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள்.”—2 தீமோத்தேயு 3:13.
11. மோசமாகிக்கொண்டிருக்கும் நிலைமைகளை ஏன் மனித முயற்சிகளால் மாற்றிட முடியாது?
11 மனிதர்களால் இந்தப் போக்கை மாற்ற முடியாது, ஏனென்றால் சாத்தான் ‘இந்தக் காரிய ஒழுங்குமுறையின் கடவுளாக’ இருக்கிறான். (2 கொரிந்தியர் 4:4, NW) ஆம், ‘உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது.’ (1 யோவான் 5:19; யோவான் 14:30-ஐயும் காண்க.) சரியாகவே பைபிள் நம்முடைய நாளைப்பற்றி இவ்விதமாகச் சொல்கிறது: “பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும்.” (வெளிப்படுத்துதல் 12:12) சாத்தான் தன்னுடைய ஆட்சியும் தன்னுடைய உலகமும் முடிவுக்கு வர இருப்பதை அறிவான், ஆகவே அவன் “கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.”—1 பேதுரு 5:8.
மீட்பு சமீபம்—யாருக்கு?
12. யாருக்கு மீட்பு சமீபித்து வருகிறது?
12 பூமியின்மீது அதிகரித்துவரும் கடினமான நிலைமைகள்தானே மிகப் பெரியதோர் மாற்றம்—ஆம், மகத்தான ஒரு மீட்பு—சமீபத்தில் இருக்கிறது என்பதற்கு தெளிவான அத்தாட்சியாக உள்ளது. யாருக்கு? எச்சரிப்பின் அடையாளங்களுக்கு கவனம் செலுத்தி பொருத்தமான நடவடிக்கையை மேற்கொள்ளுபவர்களுக்கு மீட்பு சமீபத்தில் இருக்கிறது. 1 யோவான் 2:17 என்ன செய்யப்பட வேண்டும் என்பதைக் காட்டுகிறது: ‘உலகமும் [சாத்தானுடைய காரிய ஒழுங்குமுறை] அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.’—2 பேதுரு 3:10-13-ஐயும் காண்க.
13, 14. விழித்திருப்பதற்கான அவசியத்தை இயேசு எவ்வாறு வலியுறுத்தினார்?
13 இன்றுள்ள சீரழிந்த சமுதாயமானது வெகு சீக்கிரத்தில் “உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராதததும், இனிமேலும் சம்பவியாததுமான” தொந்தரவான ஒரு காலத்தில் துடைத்தழிக்கப்படவிருக்கிறது என்பதாக இயேசு முன்னுரைத்தார். (மத்தேயு 24:21) அதன் காரணமாகவே அவர் இவ்வாறு எச்சரித்தார்: “உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள். பூமிலெங்கும் குடியிருக்கிற அனைவர்மேலும் அது ஒரு கண்ணியைப்போல வரும். ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள்.”—லூக்கா 21:34-36.
14 ‘எச்சரிக்கை’யாயிருந்து ‘விழித்திரு’ப்பவர்கள் கடவுளுடைய சித்தத்தை ஆராய்ந்து கண்டுபிடித்து அதைச் செய்வார்கள். (நீதிமொழிகள் 2:1-5; ரோமர் 12:2) இவர்களே வெகு சீக்கிரத்தில் சாத்தானுடைய ஒழுங்குமுறையின்மீது கொண்டுவரப்படவிருக்கும் அழிவில் ‘தப்புகிறவர்களாக’ இருப்பார்கள். தாங்கள் மீட்கப்படுவார்கள் என்பதைக் குறித்து அவர்கள் முழு நம்பிக்கையோடிருக்கலாம்.—சங்கீதம் 34:15; நீதிமொழிகள் 10:28-30.
பிரதான மீட்பர்
15, 16. பிரதான மீட்பர் யார், அவருடைய நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளவையாக இருக்கும் என்று நாம் ஏன் நிச்சயமாயிருக்கலாம்?
15 கடவுளுடைய ஊழியர்கள் மீட்கப்படுவதற்கு, சாத்தானும் உலகெங்கிலுமுள்ள அவனுடைய முழு காரிய ஒழுங்குமுறையும் நீக்கப்படுவது அவசியமாகும். இது மனிதர்களைக் காட்டிலும் அதிக வல்லமையுள்ள மீட்பின் ஊற்றுமூலர் தேவை என்பதைக் காட்டுகிறது. அந்த ஊற்றுமூலர் பிரமிக்க வைக்கும் பிரபஞ்சத்தினுடைய சர்வ வல்லமையுள்ள படைப்பாளரான, உன்னத பேரரசரான யெகோவா தேவனே. அவரே பிரதான மீட்பர்: “நான், நானே கர்த்தர் [“யெகோவா,” NW]; என்னையல்லாமல் ரட்சகர் இல்லை.”—ஏசாயா 43:11; நீதிமொழிகள் 18:10.
16 உச்ச அளவில் வல்லமையும் ஞானமும் நீதியும் அன்பும் யெகோவாவிடம் இருக்கிறது. (சங்கீதம் 147:5; நீதிமொழிகள் 2:6; ஏசாயா 61:8; 1 யோவான் 4:8) ஆகவே அவர் தம்முடைய நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றும்போது, அவருடைய செயல்கள் நீதியுள்ளவையாக இருக்கும் என்பதைக் குறித்து நாம் நிச்சயமாயிருக்கலாம். ஆபிரகாம் இவ்வாறு கேட்டார்: “சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாதிருப்பாரோ”? (ஆதியாகமம் 18:24-33) பவுல் இவ்வாறு உணர்ச்சிபொங்கக் கூறினார்: “தேவனிடத்திலே அநீதி உண்டென்று சொல்லலாமா? சொல்லக்கூடாதே.” (ரோமர் 9:14) யோவான் இவ்வாறு எழுதினார்: “கர்த்தாவே, [“யெகோவாவே,” NW] உம்முடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்.”—வெளிப்படுத்துதல் 16:7.
17. யெகோவாவின் ஊழியர்கள் கடந்த காலத்தில் எவ்விதமாக அவருடைய வாக்குறுதிகளில் நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்?
17 மீட்பைக் குறித்து யெகோவா வாக்களிக்கும்போது, அவர் தவறாமல் அதை நிறைவேற்றுவார். யோசுவா சொன்னார்: “கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தாருக்குச் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை.” (யோசுவா 21:45) சாலொமோன் சொன்னார்: ‘அவர் சொன்ன அவருடைய நல்வார்த்தைகளில் எல்லாம் ஒரு வார்த்தையினாலும் தவறிப்போகவில்லை.’ (1 இராஜாக்கள் 8:56) ஆபிரகாம் “அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல், தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி”னார் என்பதாக அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்டார். அதே போலவே சாராள், “வாக்குத்தத்தம்பண்ணினவர் [கடவுள்] உண்மையுள்ளவரென்றெண்ணி”னாள்.—ரோமர் 4:20, 21; எபிரெயர் 11:11.
18. தாங்கள் மீட்கப்படுவார்கள் என்பதைக் குறித்து யெகோவாவின் ஊழியர்கள் ஏன் இன்று நம்பிக்கையோடிருக்கலாம்?
18 மனிதர்களைப் போல இல்லாமல், யெகோவா தம்முடைய வார்த்தைக்கு உண்மையுள்ளவராக முழுமையாக நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக இருக்கிறார். “நான் நினைத்திருக்கிறபடியே நடக்கும்; நான் நிர்ணயித்தபடியே நிலைநிற்கும் என்று சேனைகளின் கர்த்தர் ஆணையிட்டுச் சொன்னார்.” (ஏசாயா 14:24) ஆகவே பைபிள் “கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்,” என்று சொல்லும்போது இது சம்பவிக்கும் என்பதில் நாம் முழு நம்பிக்கை வைக்கலாம். (2 பேதுரு 2:9) வல்லமையுள்ள சத்துருக்கள் கொன்றுவிடப்போவதாக மிரட்டினாலும்கூட, யெகோவாவின் ஊழியர்கள், அவருடைய ஒரு தீர்க்கதரிசியினிடமாக சொல்லப்பட்ட வாக்குறுதியில் வெளிக்காட்டப்படும் அவருடைய மனநிலையின் காரணமாக தைரியங்கொள்ளுகிறார்கள்: “அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.”—எரேமியா 1:19; சங்கீதம் 33:18, 19; தீத்து 1:3.
கடந்த கால மீட்புகள்
19. யெகோவா எவ்விதமாக லோத்தை மீட்டார், நம்முடைய காலத்தில் இதற்கு இணையாக இருப்பது எது?
19 முற்காலங்களில் யெகோவா நடப்பித்த சில மீட்பின் செயல்களை நினைவுக்குக் கொண்டுவருவதன் மூலம் நாம் மிகவும் உற்சாகமடையலாம். உதாரணமாக, சோதோம் கொமோராவின் அக்கிரமத்தைக்குறித்து லோத்து ‘வெகுவாக வேதனைப்பட்டார்.’ ஆனால் யெகோவா அந்தப் பட்டணங்களுக்கு எதிராக எழும்பின “கூக்குரலை” கவனித்தார். சரியான சமயத்தில், லோத்துவையும் அவருடைய குடும்பத்தாரையும் அந்தப் பகுதியிலிருந்து உடனடியாக வெளியேறிவிடும்படியாக துரிதப்படுத்துவதற்கு தூதுவர்களை அனுப்பினார். விளைவு? ‘நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்து,’ “சோதோம் கொமோரா என்னும் பட்டணங்களையும் சாம்பலாக்கி”னார். (2 பேதுரு 2:6-8; ஆதியாகமம் 18:20, 21) இன்றும்கூட, யெகோவா இந்த உலகின் படுமோசமான அக்கிரமத்தின் நிமித்தமாக எழும்பும் கூக்குரலை கவனித்துக்கேட்கிறார். அவருடைய நவீன நாளைய தூதுவர்கள் அவர் விரும்புகிற அளவுக்கு தங்களுடைய அவசரமான சாட்சி கொடுக்கும் வேலையை செய்து முடிக்கையில், இந்த உலகிற்கு எதிராக அவர் நடவடிக்கை எடுத்து லோத்தை மீட்டுக்கொண்டதைப் போலவே தம்முடைய ஊழியர்களை மீட்டுக்கொள்வார்.—மத்தேயு 24:14.
20. எகிப்திலிருந்து பண்டைய இஸ்ரவேலரை யெகோவா மீட்டுக்கொண்டதை விவரிக்கவும்.
20 பண்டைய எகிப்தில் லட்சக்கணக்கான யெகோவாவின் மக்கள் அடிமைப்படுத்தப்பட்டிருந்தார்கள். யெகோவா அவர்களைக் குறித்து இவ்வாறு சொன்னார்: ‘அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன். அவர்களை விடுதலையாக்க இறங்கினேன்.’ (யாத்திராகமம் 3:7, 8) இருப்பினும், கடவுளுடைய மக்களை செல்ல அனுமதித்தபின்பு, பார்வோன் தன்னுடைய மனதை மாற்றிக்கொண்டு தன்னுடைய பலத்த சேனையோடு அவர்களைப் பின்தொடர்ந்தான். இஸ்ரவேலர் சிவந்த சமுத்திரத்தில் மாட்டிக்கொண்டது போல தோன்றியது. என்றபோதிலும் மோசே இவ்வாறு சொன்னார்: “பயப்படாதிருங்கள், நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்.” (யாத்திராகமம் 14:8-14) யெகோவா சிவந்த சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்தார், இஸ்ரவேலர் தப்பினார்கள். பார்வோனின் சேனை அவர்களை வேகமாக பின்தொடர்ந்தது, ஆனால் யெகோவா தம்முடைய வல்லமையைப் பயன்படுத்தியதால், “ஆழி அவர்களை மூடிக்கொண்டது; கல்லைப்போல ஆழங்களில் அமிழ்ந்துபோனார்கள்.” அதற்குபின், மோசே யெகோவாவுக்கு ஒரு பாட்டைப் பாடி பேரானந்தம் அடைந்தார்: “பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்?”—யாத்திராகமம் 15:4-12, 19.
21. யெகோவாவின் மக்கள் எவ்விதமாக அம்மோன், மோவாப் மற்றும் சேயீரிடமிருந்து காப்பாற்றப்பட்டார்கள்?
21 மற்றொரு சந்தர்ப்பத்தில் எதிரி தேசங்களாகிய அம்மோன், மோவாப் மற்றும் சேயீர் (ஏதோம்) யெகோவாவின் மக்களை அழித்துவிடுவதாக பயமுறுத்தின. அப்போது யெகோவா சொன்னார்: “நீங்கள் அந்த ஏராளமான [எதிரி] கூட்டத்திற்குப் பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் . . . இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது. . . . இந்த யுத்தத்தைப் பண்ணுகிறவர்கள் நீங்கள் அல்ல; . . . நீங்கள் தரித்துநின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்.” எதிரிகள் ஒருவரையொருவர் வெட்டிக்கொள்ளும்படியாக அவர்களுக்குள் குழப்பத்தை உண்டுபண்ணுவதன் மூலம் யெகோவா தம்முடைய மக்களை மீட்டார்.—2 நாளாகமம் 20:15-23.
22. அசீரியாவிடமிருந்து இஸ்ரவேலருக்கு யெகோவா என்ன அற்புதமான மீட்பை அளித்தார்?
22 அசீரிய உலக வல்லரசு எருசலேமுக்கு எதிராக வந்தபோது, மதிலின்மீதிருந்த ஆட்களிடம் பின்வருமாறு சொல்வதன் மூலம் ராஜாவாகிய சனகெரிப் யெகோவாவை நிந்தித்தான்: “கர்த்தர் எருசலேமை என் கைக்குத் தப்புவிப்பார் என்பதற்கு, [நான் கைப்பற்றின] அந்தத் தேசங்களுடைய எல்லாத் தேவர்களுக்குள்ளும் தங்கள் தேசத்தை என் கைக்குத் தப்புவித்தவர் யார்”? கடவுளுடைய ஊழியர்களிடம் அவன் சொன்னதாவது: “கர்த்தர் நம்மை நிச்சயமாய்த் தப்புவிப்பார், . . . என்று சொல்லி, எசேக்கியா உங்களைக் கர்த்தரை நம்பப்பண்ணுவான்; அதற்கு இடங்கொடாதிருங்கள்.” பின்பு எசேக்கியா “தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்களெல்லாம் அறியும்படிக்கு,” மீட்பிற்காக ஊக்கமாக ஜெபித்தார். யெகோவா 1,85,000 அசீரிய போர்வீரர்களை சங்கரித்தார், கடவுளுடைய ஊழியர்கள் மீட்கப்பட்டார்கள். பின்னால், சனகெரிப் தன்னுடைய பொய் கடவுளை பணிந்துகொண்டிருக்கையில் அவனுடைய குமாரர்கள் அவனை வெட்டிப்போட்டார்கள்.—ஏசாயா அதிகாரங்கள் 36 மற்றும் 37.
23. இன்று மீட்பைப்பற்றிய என்ன கேள்விகள் பதிலளிக்கப்படுவது அவசியமாக உள்ளது?
23 கடந்த காலத்தில் யெகோவா எவ்விதமாக தம்முடைய மக்களை அதிசயமாக மீட்டார் என்பதை நாம் காணும்போது நிச்சயமாகவே நாம் தைரியங்கொள்ள முடியும். இன்றைய நாளைப் பற்றி என்ன? அற்புதமாக அவர் மீட்டுக்கொள்வதைத் தேவைப்படுத்தும் என்ன ஆபத்தான நிலைமை சீக்கிரத்தில் அவருடைய உண்மையுள்ள ஊழியர்களுக்கு ஏற்படும்? அவர்களை மீட்டுக்கொள்வதற்கு அவர் இப்போதுவரையாக ஏன் காத்துக்கொண்டிருந்திருக்கிறார்? இயேசுவின் பின்வரும் வார்த்தைகளின் என்ன நிறைவேற்றம் அங்கே இருக்கும்: “இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்துபார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்”? (லூக்கா 21:28) ஏற்கெனவே இறந்துவிட்டிருக்கும் கடவுளுடைய ஊழியர்களுக்கு எவ்விதமாக மீட்பு கிடைக்கும்? பின்வரும் கட்டுரை இந்தக் கேள்விகளை ஆராயும்.
மறுபார்வை கேள்விகள்
◻ மீட்புக்கு அதிகமான தேவை இருப்பது ஏன்?
◻ மீட்புக்காக நாம் ஏன் மனிதர்களை நம்பியிருக்கக்கூடாது?
◻ யாருக்கு மீட்பு சமீபமாயிருக்கிறது?
◻ யெகோவாவின் மீட்பில் நாம் ஏன் நம்பிக்கை வைக்கலாம்?
◻ கடந்தகால மீட்புகளைப் பற்றிய என்ன உதாரணங்கள் உற்சாகமளிப்பவையாய் இருக்கின்றன?
[பக்கம் 10-ன் படம்]
யெகோவாவில் முழு நம்பிக்கை வைத்தவர்களில் ஆபிரகாம் ஒருவர்