“சோதனைமுறை நியாயத்தீர்ப்பு” பைபிள் ஆதாரமுள்ள ஒரு கோட்பாடா?
அக்டோபர் 22, 1844, ஐக்கிய மாகாணங்களின் கிழக்குக் கரையில் கூடியிருந்த சுமார் 50,000 பேருக்கு எதிர்பார்ப்புகள் நிறைந்த ஒரு நாளாக இருந்தது. அந்த நாளில் இயேசு கிறிஸ்து திரும்பி வருவார் என்பதாக அவர்களுடைய மதத் தலைவர் வில்லியம் மில்லர் சொல்லியிருந்தார். மில்லரைட்ஸ் என்றழைக்கப்பட்ட இவர்கள் இரவு வரையாக தாங்கள் கூடிவரும் இடங்களில் காத்திருந்தார்கள். அடுத்த நாளும் வந்தது, ஆனால் ஆண்டவரோ வரவில்லை. ஏமாற்றமடைந்தவர்களாய் அவர்கள் வீடு திரும்பினர், அதன் பின்பு “பெருத்த ஏமாற்றம்” என்பதாக அவர்கள் அந்நாளை ஞாபகப்படுத்திக்கொண்டனர்.
இருந்தாலும், ஏமாற்றத்தைத் தொடர்ந்து விரைவில் நம்பிக்கை பிறந்தது. அவர்களுடைய கால கணக்கு சரியே என்பதை தனக்கு கடவுள் தரிசனத்தில் வெளிப்படுத்தியதாக எலன் ஹார்மன் என்ற பெயருள்ள ஒரு இளம் பெண், மில்லரைட்ஸூகளின் ஒரு சிறிய தொகுதியை நம்பச்செய்தாள். அந்நாளில் மிக முக்கியமான ஒரு சம்பவம்—கிறிஸ்து “பரலோகத்திலுள்ள தேவாலயத்தின் மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள்” பிரவேசித்துவிட்ட சம்பவம்—நிகழ்ந்தது என்பதாக அவள் நம்பினாள்.
ஒரு பத்தாண்டுக்கும் மேலான பின்பு, அட்வென்ட்டிஸ்ட் ஜேம்ஸ் வைட் (எலன் ஹார்மனை திருமணம் செய்துகொண்டவர்) 1844 அக்டோபர் முதல், கிறிஸ்து செய்துகொண்டிருக்கும் வேலை எப்படிப்பட்டது என்பதை விவரிப்பதற்கு ஒரு சொற்றொடரை உருவாக்கினார். 1857, ஜனவரி 29 தேதியிட்ட ரெவ்யூ அண்டு ஹெரால்ட்-ல் இயேசு “சோதனைமுறையான நியாயத்தீர்ப்பை” செய்ய ஆரம்பித்துவிட்டார் என்பதாக வைட் சொன்னார். இது செவன்த் டே அட்வென்ட்டிஸ்டுகள் என்பதாக தங்களை அழைத்துக்கொள்ளும் சுமார் 70 லட்சம் மக்களின் முக்கியமான நம்பிக்கையாக இருந்துவருகிறது.
இருப்பினும், செவன்த் டே அட்வென்ட்டிஸ்ட் (SDA) சர்ச்சிலுள்ள ஒருசில மதிப்புக்குரிய கல்விமான்கள், “சோதனைமுறை நியாயத்தீர்ப்பு” பைபிள் ஆதாரமுள்ள ஒரு கோட்பாடுதானா என்பதைப் பற்றி சிந்தித்துவந்திருக்கிறார்கள். இதைக் குறித்து அவர்கள் ஏன் மீண்டும் எண்ணிப்பார்க்கிறார்கள்? நீங்கள் ஒரு செவன்த் டே அட்வென்ட்டிஸ்டாக இருந்தால், இந்தக் கேள்வி உங்களுக்கு அக்கறைக்குரியதாக இருக்கும். ஆனால் முதலாவதாக “சோதனைமுறை நியாயத்தீர்ப்பு” என்றால் என்ன?
அது என்ன?
இந்தக் கோட்பாட்டை ஆதரிப்பதற்கு மேற்கோள் காட்டப்படும் முக்கிய வசனம் தானியேல் 8:14 ஆகும். அது இவ்வாறு வாசிக்கிறது: “அவன் என்னை நோக்கி: இரண்டாயிரத்து முந்நூறு இராப்பகல் செல்லும்வரைக்கும் இருக்கும்; பின்பு பரிசுத்தஸ்தலம் சுத்திகரிக்கப்படும் என்றான்.” “பின்பு பரிசுத்தஸ்தலம் சுத்திகரிக்கப்படும்” என்ற சொற்றொடரின் காரணமாக அநேக அட்வென்ட்டிஸ்டுகள் இந்த வசனத்தை லேவியராகமம் 16-ஆம் அதிகாரத்தோடு தொடர்புபடுத்தி இருக்கிறார்கள். அது பாவ நிவாரண நாளில் யூதர்களின் பிரதான ஆசாரியன் பரிசுத்த ஸ்தலத்தைச் சுத்திகரிப்பதை விவரிக்கிறது. அவர்கள் தானியேலின் வார்த்தைகளை, இயேசுவை பரலோகத்தில் பெரிய பிரதான ஆசாரியராக விவரிக்கும் எபிரெயர் 9-ஆம் அதிகாரத்தோடும்கூட இணைத்துப் பேசுகிறார்கள். இந்த விவாதம் “சான்றுள்ள-வேதவசனம்” முறையை ஆதாரமாக கொண்டுள்ளது என்பதாக ஒரு SDA கல்விமான் சொல்லுகிறார். “பரிசுத்த ஸ்தலம் போன்ற ஒரு வார்த்தையை தானி. 8:14-லும் அதே வார்த்தையை லேவி. 16-லும், எபி. 7, 8, 9-லும் பார்க்கிற ஒரு நபர், இந்த எல்லா வேதவசனங்களும் ஒரே காரியத்தைப்பற்றியே பேசுகின்றன” என்ற முடிவுக்கு வருகிறார்.
அட்வென்ட்டிஸ்டுகள் இவ்விதமாக விவாதிக்கிறார்கள்: பண்டைய இஸ்ரவேலில் ஆசாரியர்கள் ஆலயத்தில் பரிசுத்த ஸ்தலம் என்றழைக்கப்படும் அறையில் தினசரி ஊழியத்தைச் செய்தனர்; இது அவர்களுக்கு பாவ மன்னிப்பைத் தந்தது. பாவ நிவாரண நாளில், பிரதான ஆசாரியன் மகா பரிசுத்த ஸ்தலத்தில் (ஆலயத்தின் உட்புறத்திலிருந்த அறை) வருடாந்தர ஊழியத்தை செய்தார்; இது அவர்களுடைய பாவங்களை நிவர்த்தி செய்வதில் விளைவடைந்தது. பரலோகத்தில் கிறிஸ்துவின் ஆசாரியருக்குரிய ஊழியத்துக்கு இரண்டு கட்டங்கள் இருப்பதாக அவர்கள் முடிவுசெய்கிறார்கள். முதல் கட்டம் முதல் நூற்றாண்டில் அவர் பரலோகத்துக்கு ஏறிச்சென்றதோடு ஆரம்பமாகி 1844-ல் முடிவடைந்தது; இது பாவங்கள் மன்னிக்கப்படுவதில் விளைவடைந்தது. இரண்டாவது அல்லது “நியாயத்தீர்ப்புக் கட்டம்,” 1844, அக்டோபர் 22-ல் ஆரம்பமாகி இன்னும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது; இது பாவங்கள் நிவர்த்திசெய்யப்படுவதில் விளைவடையும். இது எவ்வாறு நிறைவேற்றப்படுகிறது?
1844 முதற்கொண்டு விசுவாசிகள் என்று சொல்லிக்கொள்ளும் எல்லாருடைய (முதலில் மரித்தோர், பின்னர் உயிரோடிருப்பவர்கள்) வாழ்க்கைப் பதிவுகளையும், அவர்கள் நித்திய ஜீவனுக்குத் தகுதியுள்ளவர்களா என்பதைத் தீர்மானிப்பதற்காக இயேசு சோதனை செய்வதாக சொல்லப்படுகிறது. இந்த ஆய்வே “சோதனைமுறை நியாயத்தீர்ப்பு” ஆகும். இப்படியாக மக்கள் நியாயந்தீர்க்கப்பட்ட பின்பு, இந்தப் பரீட்சையில் தேர்ச்சிபெறும் ஆட்களின் பாவங்கள் பதிவு புத்தகங்களிலிருந்து அழிக்கப்பட்டுவிடுகின்றன. ஆனால், இந்தப் பரீட்சையில் தேர்ச்சிபெறாதவர்களின் ‘பெயர்கள் ஜீவபுஸ்தகத்திலிருந்து கிறுக்கப்பட்டுபோகும்’ என்பதாக எலன் வைட் விளக்கினார். இப்படியாக “எல்லாருடைய முடிவும் ஜீவனுக்கு அல்லது மரணத்துக்குமாக தீர்மானிக்கப்பட்டிருக்கும்.” அந்தச் சமயத்தில் பரலோக பரிசுத்த ஸ்தலம் சுத்திகரிக்கப்பட்டு தானியேல் 8:14 நிறைவேற்றமடைகிறது. இப்படித்தான் செவன்த் டே அட்வென்ட்டிஸ்டுகள் போதிக்கிறார்கள். ஆனால் அட்வென்ட்டிஸ்ட் ரெவ்யூ என்ற பிரசுரம் இவ்வாறு ஒப்புக்கொள்கிறது: “சோதனைமுறை நியாயத்தீர்ப்பு என்ற பதம் பைபிளில் காணப்படுவதில்லை.”
மொழிசார்ந்த ஒரு சம்பந்தம் காணப்படுவதில்லை
இந்தப் போதனை சில அட்வென்ட்டிஸ்டுகளைக் கலக்கமடையச் செய்திருக்கிறது. “எங்கள் சபையின் பற்றுமாறாத தலைவர்கள், சோதனைமுறை நியாயத்தீர்ப்பு பேரிலான எங்களுடைய பாரம்பரியமான போதனையை எண்ணிப்பார்த்து குழப்பமடைந்திருப்பதாக வரலாறு காண்பிக்கிறது” என்பதாக ஒரு கருத்துரையாளர் சொல்லுகிறார். சமீப ஆண்டுகளில், கல்விமான்கள் “பரிசுத்த ஸ்தலத்தின் சுத்திகரிப்பு பற்றிய எங்களுடைய வழக்கமான விளக்கத்தின் பல முக்கிய ஆதாரங்களை ஆராய்ச்சி செய்ய ஆரம்பிக்கையில்” குழப்பம் சந்தேகமாக மாறிவிட்டிருக்கிறது என்பதாக அவர் கூடுதலாக சொல்கிறார். அவற்றில் இரண்டை நாம் இப்போது ஆராய்ந்து பார்க்கலாம்.
ஆதாரம் ஒன்று: தானியேல் 8-ஆம் அதிகாரம், லேவியராகமம் 16-ஆம் அதிகாரத்தோடு தொடர்புபடுத்தப்படுகிறது. முன்கூறப்பட்ட இது, இரண்டு முக்கிய பிரச்சினைகளால் வலுவிழந்து நிற்கிறது—மொழியும் சூழமைவும். முதலில் மொழியை எடுத்துக்கொள்ளுங்கள். லேவியராகமம் 16-ஆம் அதிகாரத்தின் ‘சுத்திகரிக்கப்பட்ட பரிசுத்த ஸ்தலம்’ தானியேல் 8-ஆம் அதிகாரத்திலுள்ள ‘சுத்திகரிக்கப்பட்ட பரிசுத்த ஸ்தலத்தின்’ தீர்க்கதரிசன நிறைவேற்றம் என்பதாக அட்வென்ட்டிஸ்டுகள் நம்புகிறார்கள். கிங் ஜேம்ஸ் வெர்ஷன்-ல் உள்ள ‘சுத்திகரிப்பு’ என்ற வார்த்தை தானியேல் 8:14-ல் பயன்படுத்தப்பட்டிருக்கும் எபிரெய வினை வடிவமாகிய ஸதக் [tsadaq அல்லது tsa·dhaqʹ] (“நீதிமானாய் இருப்பது” என்பது பொருள்) என்ற வார்த்தையின் தவறான மொழிபெயர்ப்பு என்பதை மொழிபெயர்ப்பாளர்கள் அறிந்துக்கொள்ளும்வரையாக இந்த ஒப்புடைமை ஏற்றுக்கொள்ளத்தக்கவையாகவே தோன்றியது. இறையியல் பேராசிரியர் ஆன்தனி ஏ. ஹோகமா இவ்விதமாக குறிப்பிடுகிறார்: “சுத்திகரித்து என்பதாக பொதுவாக மொழிபெயர்க்கப்படும் எபிரெய வினைச்சொல் டஹர் [ta·herʹ அல்லது taheer] இங்கே பயன்படுத்தப்பட்டே இல்லாத காரணத்தால் சுத்திகரித்து என்பதாக இந்த வார்த்தை மொழிபெயர்க்கப்பட்டிருப்பது வருந்தத்தக்கதாகும்.”a லேவியராகமம் 16-ஆம் அதிகாரத்தில் இது பயன்படுத்தப்பட்டுள்ளது, கிங் ஜேம்ஸ் வெர்ஷன் டஹர் என்பதற்குரிய வினை வடிவங்களை “சுத்திகரித்து” மற்றும் “சுத்திகரிக்கப்படும்” என்பதாக மொழிபெயர்க்கிறது. (லேவியராகமம் 16:19, 30) ஆகவே, டாக்டர் ஹோகமா சரியாகவே இந்த முடிவுக்கு வருகிறார்: “பாவ நிவர்த்தி நாளில் செய்யப்பட்ட விதமான சுத்திகரிப்பை தானியேல் குறிப்பிடுவதாக இருந்தால், அவர் ஸதக் என்பதற்கு பதிலாக டஹர் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பார்.” இருப்பினும் ஸதக் லேவியராகமத்தில் காணப்படுவதில்லை, டஹர் தானியேலில் காணப்படுவதில்லை. மொழிசார்ந்த ஒரு சம்பந்தம் காணப்படுவதில்லை.
சூழமைவு எதை வெளிப்படுத்துகிறது?
இப்பொழுது சூழமைவை எடுத்துக்கொள்ளுங்கள். தானியேல் 8:14, “சூழமைவில்லா ஒதுக்கிடம்” என்றும், அதற்கு முன்னாலிருக்கும் வசனங்களோடு அது சம்பந்தப்பட்டில்லை என்றும் அட்வென்ட்டிஸ்டுகள் நம்புகிறார்கள். ஆனால் “தானியேல் 8:14-ன் சூழமைவு” என்ற தலைப்புடைய பெட்டியில் தானியேல் 8:9-14-ஐ நீங்கள் வாசிக்கையில் உங்களுக்கு அப்படித் தோன்றுகிறதா? வசனம் 9, சின்ன கொம்பாகிய வலுச்சண்டைக்காரனை அடையாளப்படுத்துகிறது. வசனங்கள் 10-12 வலுச்சண்டைக்காரன் பரிசுத்த ஸ்தலத்தை தாக்குவான் என்பதை வெளிப்படுத்துகிறது. வசனம் 13 ‘இந்த தாக்குதல் எதுவரைக்கும் தொடரும்?’ என்பதாக கேட்கிறது. அதற்கு “இரண்டாயிரத்து முந்நூறு இராப்பகல் செல்லும்வரைக்கும் இருக்கும்; பின்பு பரிசுத்தஸ்தலம் சுத்திகரிக்கப்படும்” என்பதாக வசனம் 14 பதிலளிக்கிறது. வசனம் 13 ஒரு கேள்வியை எழுப்புகிறது, வசனம் 14 அதற்கு பதிலளிக்கிறது என்பது தெளிவாக இருக்கிறது. இறையியலர் டெஸ்மெண்ட் ஃபோர்ட் இவ்வாறு சொல்கிறார்: “தானி. 8:14-ஐ [வசனம் 13-ல் உள்ள “எது வரைக்கும்” என்ற] இந்தக் கேள்வியிலிருந்து பிரித்து விளக்கமளிப்பது ஆதாரம் இல்லாமல் அதைச் செய்வதாக இருக்கும்.”b
அட்வென்ட்டிஸ்டுகள் வசனம் 14-ஐ சூழமைவிலிருந்து ஏன் தனியே எடுத்துவிடுகிறார்கள்? சங்கடமான ஒரு முடிவைத் தவிர்ப்பதற்காக. வசனம் 14-ல் உள்ள சின்ன கொம்பின் நடவடிக்கையே பரிசுத்த ஸ்தலம் அசுத்தமாவதற்கு காரணம் என்பதாக சூழமைவு காட்டுகிறது. என்றபோதிலும், “சோதனைமுறை நியாயத்தீர்ப்பு” கோட்பாடு பரிசுத்த ஸ்தலம் அசுத்தமாவதற்கு கிறிஸ்துவின் நடவடிக்கை காரணம் என்பதாக காட்டுகிறது. அவர் விசுவாசிகளின் பாவங்களை பரலோகத்திலுள்ள பரிசுத்த ஸ்தலத்துக்கு கொண்டுசெல்வதாக சொல்லப்படுகிறார். ஆகவே, அட்வென்ட்டிஸ்டுகளின் கோட்பாடு, சூழமைவு ஆகிய இரண்டையுமே ஏற்றுக்கொண்டால் என்ன நடக்கிறது? செவன்த் டே அட்வென்ட்டிஸ்டும் SDA பைபிள் விளக்கம் என்பதனுடைய முன்னாள் துணை பதிப்பாசிரியருமான டாக்டர் ரேமண்ட் எஃப். காட்ரில் இவ்வாறு எழுதுகிறார்: “SDA-வின் விளக்கம் சூழமைவு பொருத்தத்தோடுதான் தானியேல் 8:14-ஐ ஆய்வு செய்கிறது என்பதாக நம்மைநாமே ஏமாற்றிக்கொள்வது, சின்ன கொம்பு கிறிஸ்துவாக இருக்கவேண்டும் என்று அடையாளங்காட்டுவதாக இருக்கும்.” டாக்டர் காட்ரில், “சூழமைவு, அட்வென்ட்டிஸ்டுகளின் விளக்கம் ஆகிய இரண்டையுமே பொருந்தும்படி நம்மால் செய்யமுடியாது,” என்பதை நேர்மையுடன் ஒத்துக்கொள்கிறார். ஆகவே “சோதனைமுறை நியாயத்தீர்ப்பு” சம்பந்தமாக அட்வென்ட்டிஸ்டு சர்ச் ஒரு தெரிவைச் செய்யவேண்டியிருந்தது—ஒன்று கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளவேண்டும் அல்லது தானியேல் 8:14-ன் சூழமைவை ஏற்றுக்கொள்ளவேண்டும். வருந்தத்தக்கவிதமாக அது கோட்பாட்டை தெரிவுசெய்து சூழமைவைப் புறக்கணித்துவிட்டது. “வேதவாக்கியங்களிலிருந்து பெற்றுக்கொள்ளமுடியாத ஒரு கருத்தை” “வேதவாக்கியங்களுக்குள் இருப்பதாக கற்பித்து கூறுவதற்காக” அட்வென்ட்டிஸ்டுகளைத் தகவல் அறிந்த பைபிள் மாணவர்கள் குற்றம் சாட்டுவதைக் குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை என்பதாக டாக்டர் காட்ரில் கூறுகிறார்.
1967-ல், டாக்டர் காட்ரில் சன்டே ஸ்கூலுக்காக தானியேல் புத்தகத்தைப் பற்றி ஒரு பாடத்தை தயார்செய்தார், இது உலகம் முழுவதிலுமுள்ள SDA சர்ச்சுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தானியேல் 8:14 அதனுடைய சூழமைவோடு சம்பந்தப்பட்டுள்ளது என்றும் அதிலுள்ள ‘சுத்திகரிப்பு’ விசுவாசிகளைக் குறிப்பிடுவதில்லை என்றும் அது போதித்தது. “சோதனைமுறை நியாயத்தீர்ப்பு” பற்றிய எந்தக் குறிப்பும் அந்தப் பாடத்தில் இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
குறிப்பிடத்தக்க சில பதில்கள்
“சோதனைமுறை நியாயத்தீர்ப்பு” கோட்பாட்டை ஆதரிப்பதற்கு முதல் ஆதாரம் மிகவும் பலவீனமானது என்பதைப்பற்றி அட்வென்ட்டிஸ்டுகள் எந்தளவுக்கு உணர்வுள்ளவர்களாக இருக்கின்றனர்? ‘தானியேல் 8-ஆம் அதிகாரத்துக்கும் லேவியராகமம் 16-ம் அதிகாரத்திற்குமிடையே தொடர்பு இருக்கிறது என்பதாக சொல்வதற்கு என்ன மொழிசார்ந்த அல்லது சூழமைவு சார்ந்த காரணங்களை உங்களால் கொடுக்க முடியும்?’ என்பதாக டாக்டர் காட்ரில் முக்கியமான 27 அட்வென்ட்டிஸ்டு இறையியலாளர்களைக் கேட்டார். அவர்களுடைய பதில்?
“தானியேல் 8:14-ஐ மாதிரிப்படிவமான பாவ நிவர்த்தி நாளுக்கும் சோதனைமுறை நியாயத்தீர்ப்புக்கும் பொருத்துவதற்கு எந்த மொழிசார்ந்த அல்லது சூழமைவுக் காரணங்களும் இல்லை என்பதை இருபத்து ஏழு பேரும் உறுதிசெய்தனர்.” ‘இவ்விதமாக சம்பந்தப்படுத்துவதற்கு உங்களுக்கு வேறு ஏதாவது காரணங்கள் இருக்கின்றனவா?’ என்பதாக அவர்களை அவர் கேட்டார். பெரும்பாலான அட்வென்ட்டிஸ்டு கல்விமான்கள் தங்களுக்கு வேறு எந்தக் காரணமுமில்லை என்பதாகச் சொன்னார்கள்; அவர்களில் ஐந்துபேர் எலன் வைட் அவ்விதமாகச் செய்ததால் தாங்கள் சம்பந்தப்படுத்துவதாக பதிலளித்தார்கள், இரண்டு பேர் மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட “அதிர்ஷ்டவசமான விபத்தை” தங்களுடைய கோட்பாட்டுக்கு ஆதாரமாக கொண்டதாக சொன்னார்கள். இறையியலர் ஃபோர்ட் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “நம்முடைய மிகச் சிறந்த இந்தக் கல்விமான்களின் இந்த முடிவுகள், தானி. 8:14 வசனத்தின் பேரிலான நம்முடைய பாரம்பரியமான போதனை உண்மையில் ஏற்றுக்கொள்ளத்தக்கதாயில்லை என்பதை ஊர்ஜிதம் செய்கிறது.”
எபிரெயரில் ஏதாவது ஆதாரம் கிடைக்கிறதா?
ஆதாரம் இரண்டு: தானியேல் 8:14 எபிரெயர் 9-ஆம் அதிகாரத்தோடு சம்பந்தப்படுத்தப்படுகிறது. “தானி. 8:14-ஐ விளக்கும் நம்முடைய எல்லா முயற்சிகளிலும் நாம் எபி. 9-ஆம் அதிகாரத்தையே அதிகமாக பயன்படுத்தியிருக்கிறோம்” என்பதாக இறையியலர் ஃபோர்ட் சொல்லுகிறார். 1844-ல் ஏற்பட்ட ‘பெருத்த ஏமாற்றத்துக்குப்’ பின்பே இந்தத் தொடர்பு உருவாக்கப்பட்டது. வழிகாட்டுதலைப் பெற்றுக் கொள்வதற்காக, மில்லரைட் ஹைரம் எட்சன், பைபிள் திறந்துகொள்ளும்விதமாக அதை ஒரு மேசையின்மீது போட்டார். விளைவு? பைபிளில் எபிரெயர் 8 மற்றும் 9-ஆம் அதிகாரங்களைக் கொண்ட பக்கம் திறந்துகொண்டது. ஃபோர்ட் சொல்கிறார்: “1844 மற்றும் தானியேல் 8:14 ஆகியவற்றின் அர்த்தத்துக்கான விடை இந்த அதிகாரங்களில்தான் இருக்கிறதென்ற அட்வென்ட்டிஸ்டுகளின் உரிமைப்பாராட்டலுக்கு இதைவிட பொருத்தமாகவும் அடையாள அர்த்தமுடையதாகவும் வேறு என்ன இருக்கமுடியும்!”
“அந்த உரிமைப்பாராட்டல் செவன்த் டே அட்வென்ட்டிஸ்டுகளுக்கு அதிமுக்கியமான ஒன்றாகும்” என்பதாக டாக்டர் ஃபோர்ட் தானியேல் 8:14, பாவ நிவர்த்தி நாளும் சோதனைமுறை நியாயத்தீர்ப்பும் என்ற தன்னுடைய புத்தகத்தில் மேலுமாகச் சொல்கிறார். “எபி. 9-ல் மட்டுமே . . . நமக்கு மிகவும் இன்றியமையாததாக இருக்கும் பரிசுத்த ஸ்தலத்தைப்பற்றிய கோட்பாட்டின் . . . முக்கியத்துவத்துக்கு விவரங்களோடுகூடிய விளக்கம் உள்ளது.” ஆம், லேவியராகமம் 16-ஆம் அதிகாரத்தின் தீர்க்கதரிசன அர்த்தத்தை “புதிய ஏற்பாட்டில்” விளக்கும் ஒரே அதிகாரம் எபிரெயர் 9 ஆகும். ஆனால் “பழைய ஏற்பாட்டில்” அதைச் செய்யும் ஒரே வசனம் தானியேல் 8:14 என்பதாகவும்கூட அட்வென்ட்டிஸ்டுகள் சொல்கிறார்கள். இந்த இரண்டு கூற்றுகளுமே உண்மையாக இருக்கிறதென்றால், எபிரெயர் 9-ஆம் அதிகாரத்துக்கும் தானியேல் 8-ஆம் அதிகாரத்துக்கும் கூட தொடர்பு இருக்கவேண்டும்.
டெஸ்மாண்ட் ஃபோர்ட் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “ஒருவர் எபி. 9-ஆம் அதிகாரத்தை வாசிக்கையில் ஒருசில காரியங்கள் உடனடியாக தெளிவாக தெரிகின்றன. தானியேல் புத்தகமும், நிச்சயமாகவே தானியேல் 8:14-ம் வசனமும் எந்த இடத்திலும் குறிப்பிடப்படுவதாக தெரியவில்லை. . . . அந்த அதிகாரம் மொத்தமாக லேவி. 16-ன் பொருத்தமாக உள்ளது.” அவர் மேலும் சொல்கிறார்: “புதிய ஏற்பாட்டில் பரிசுத்த ஸ்தலத்தின் சேவைகளின் முக்கியத்துவத்தை கலந்தாலோசிக்கும் ஒரே புத்தகத்தில் மாத்திரமே நம்முடைய பரிசுத்தஸ்தல போதனை ஆதாரத்தைக் கொண்டிருக்க முடியாது. உலகம் முழுவதிலுமுள்ள நன்கு அறியப்பட்ட அட்வென்ட்டிஸ்ட்டு எழுத்தாளர்கள் இதை ஒப்புக்கொண்டிருக்கின்றனர்.” அப்படியென்றால், சர்ச்சைக்கிடமான இந்தக் கோட்பாட்டை நிலைநிறுத்துவதற்கு இரண்டாம் ஆதாரமும்கூட மிகவும் பலவீனமாயுள்ளது.
என்றபோதிலும் இந்த முடிவு புதிதான ஒன்றல்ல. அநேக ஆண்டுகளாக, “சர்ச்சின் பைபிள் கல்விமான்கள் தானியேல் 8:14-க்கும் எபிரெயர் 9-க்கும் நாம் அளித்துவந்திருக்கும் பாரம்பரியமான விளக்கம் எதிர்ப்படுகின்ற பிரச்சினைகளை நன்றாகவே அறிந்தவர்களாய் இருக்கிறார்கள்” என்பதாக டாக்டர் காட்ரில் சொல்லுகிறார். சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பாக, செல்வாக்கு மிக்கவராய் இருந்த செவன்த் டே அட்வென்ட்டிஸ்ட் இ. ஜே. வேகனர் பின்வருமாறு எழுதினார்: “‘சோதனைமுறை நியாயத்தீர்ப்போடுகூட’ பரிசுத்த ஸ்தலத்தைப் பற்றிய அட்வென்ட்டிஸ்டுகளின் போதனை . . . , உண்மையில் பாவநிவர்த்தியை மறுதலிப்பதாக உள்ளது.” (விசுவாச அறிக்கை) 30 ஆண்டுகளுக்கும் முன்பாக, இப்படிப்பட்ட பிரச்சினைகள் SDA சர்ச்சின் தலைமை உறுப்பினர்களின் பொது மாநாட்டில் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றன.
பிரச்சினைகளும் செயலற்ற நிலையும்
பொது மாநாடு “தானியேல் புத்தகத்திலுள்ள பிரச்சினைகளுக்காக ஒரு குழுவை” நியமனம் செய்தது. தானியேல் 8:14-ல் ஒருமுகப்படுத்தப்பட்டிருக்கும் சிக்கல்களை எவ்வாறு தீர்ப்பது என்பதன் பேரில் அது ஓர் அறிக்கையை தயார் செய்யவேண்டும். 14 உறுப்பினர்களடங்கிய குழு ஐந்து ஆண்டுகளாக இக்கேள்வியை ஆய்வு செய்தது, ஆனால் ஒருமித்த கருத்துடைய தீர்வை எடுத்துரைக்க இயலாமற்போனது. 1980-ல் குழு உறுப்பினரான காட்ரில், தானியேல் 8:14-ன் பேரில் கொடுக்கப்படும் அட்வென்ட்டிஸ்டுகள் விளக்கத்தை வரிசையாக “பல ஊகங்களை” செய்வதன் மூலம் “திருப்தியளிக்கும் விதமாக நிலைநிறுத்திட முடியும்” என்றும் பிரச்சினைகள் “மறக்கப்பட வேண்டும்” என்றும் பெரும்பாலான குழு உறுப்பினர்கள் நினைப்பதாக சொன்னார். அவர் மேலுமாகச் சொன்னார்: “தானியேல் புத்தகத்திலுள்ள பிரச்சினைகளுக்கான ஒரு குழு என்பதே குழுவின் பெயராக இருந்தது என்பதை மறந்துவிடவேண்டாம். பெரும்பாலானவர்களோ நாம் பிரச்சினைகளை மறந்துவிட்டு அவற்றைப் பற்றி பேசவே வேண்டாம் என்பதாக சொல்லிக்கொண்டிருந்தார்கள்.” “எங்களிடம் பதில் இல்லை என்பதை ஒப்புக்கொள்வதற்கே” அது சமமாக இருந்திருக்கும். ஆகவே சிறுபான்மையானோர் பெரும்பான்மையானோரின் கருத்தை ஆதரிக்க மறுத்துவிட்டனர், ஆகவே அதிகாரப்பூர்வமான அறிக்கை எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை. கோட்பாடு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீர்க்கப்படாமலே இருந்தன.
செயலற்ற இந்த நிலையைக் குறித்து டாக்டர் காட்ரில் சொல்கிறார்: “அளிக்கப்படும் விளக்கத்தில் மிகவும் உண்மையாக இருக்கும் ஒரு பிரச்சினை இருக்கிறது என்ற உண்மையை நாம் இதுவரையாக எதிர்ப்பட மனமில்லாதவர்களாக இருந்திருக்கும் காரணத்தால் தானியேல் 8:14-ன் விவாதம் இன்னும் அப்படியே தீர்க்கப்படாமல் உள்ளது. பிரச்சினை எதுவும் இல்லை என்பதாக நாம் பாவனைசெய்துகொண்டு, ஏற்கெனவே சொல்லப்பட்ட கருத்துக்களை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வதில் தனிப்பட்டவர்களாகவும் குழுவாகவும் நாம் பிடிவாதமாக இருக்கும் வரையில் அந்த விவாதம் தீர்க்கப்படாது.”—அட்வென்ட்டிஸ்ட் பொதுமன்ற சங்கத்தினால் பிரசுரிக்கப்படும் ஸ்பெக்ட்ரம் என்ற பத்திரிகை.
டாக்டர் காட்ரில், “அட்வென்ட்டிஸ்டுகளுக்கு இன்றியமையாத ஒரு வேதவசனமாக இருக்கும் இதை விளக்க நாம் ஆதாரமாக கொள்ளும் அடிப்படை ஊகங்களையும் நியமங்களையும் கவனமாக மறுபரிசீலனை செய்யவேண்டும்” என்பதாக அட்வென்ட்டிஸ்டுகளைத் துரிதப்படுத்துகிறார். “சோதனைமுறை நியாயத்தீர்ப்பு” கோட்பாட்டை ஆராய்ந்து, அதன் ஆதாரங்கள் உறுதியான பைபிளையா அல்லது உறுதியில்லாத பாரம்பரிய மணலையா எதை ஆதாரமாக கொண்டுள்ளது என்பதை ஆராய்ந்து பார்க்கும்படியாக நாங்கள் அட்வென்ட்டிஸ்டுகளை உற்சாகப்படுத்துகிறாம்.c அப்போஸ்தலன் பவுல் ஞானமாக பின்வருமாறு துரிதப்படுத்தினார்: “எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.”—1 தெசலோனிக்கேயர் 5:21.
[அடிக்குறிப்புகள்]
a வில்சன்ஸ் ஓல்டு டெஸ்டமன்ட் உவர்ட் ஸ்டடீஸ், ஸதக் என்பதற்கு “நீதியாய் இருப்பது, நியாயமாய் இருப்பது” என்றும் டஹர் என்பதற்கு “தெளிவாயும், பிரகாசமாயும் பளபளப்பாயும் இருப்பது; தூய்மையாக, சுத்தமாக, சுத்திகரிக்கப்பட்டிருப்பது; எல்லா தூய்மைக்கேட்டிலிருந்தும் அல்லது அசுத்தத்திலிருந்தும் சுத்தமாயிருப்பது” என்றும் விளக்கமளிக்கிறது.
b டாக்டர் ஃபோர்ட், அ.ஐ.மா.-ல் சர்ச் நடத்திவரும் பசிபிக் யூனியன் கல்லூரியில் சமய பாட பேராசிரியராக இருந்தார். 1980-ல் SDA-வின் தலைமைப் பொறுப்பில் இருந்த உறுப்பினர்கள் இந்தக் கோட்பாட்டை ஆய்வு செய்வதற்காக இவருக்கு ஆறு மாத கால விடுப்பு கொடுத்தனர், ஆனால் அவருடைய கண்டுபிடிப்புகளை அவர்கள் நிராகரித்துவிட்டனர். இவற்றை தானியேல் 8:14, பாவ நிவர்த்தி நாளும் சோதனைமுறை நியாயத்தீர்ப்பும் என்ற ஆங்கில புத்தகத்தில் வெளியிட்டார்.
c தானியேல் 8-ஆம் அதிகாரத்தின்பேரில் ஆதாரத்துடன்கூடிய விளக்கத்துக்கு உவாட்ச்டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டி வெளியிட்டுள்ள ‘உம்முடைய சித்தம் பூமியிலே செய்யப்படுவதாக’ என்ற ஆங்கில புத்தகத்தில் பக்கங்கள் 188-219 பார்க்கவும்.
[பக்கம் 27-ன் பெட்டி]
தானியேல் 8:14-ன் சூழமைவு
தானியேல் 8:9 ‘அவைகளில் ஒன்றிலிருந்து சின்னதாக [வேறு] ஒரு கொம்பு புறப்பட்டு, தெற்குக்கும், கிழக்குக்கும் எதிராகவும், சிங்காரமான தேசத்துக்கு நேராகவும் மிகவும் பெரியதாயிற்று. 10 அது வானத்தின் சேனைபரியந்தம் வளர்ந்து, அதின் சேனையாகிய நட்சத்திரங்களில் சிலவற்றைப் பூமியிலே விழப்பண்ணி அவைகளை மிதித்தது. 11 அது சேனையினுடைய அதிபதிபரியந்தமும் தன்னை உயர்த்தி, அவரிடத்திலிருந்து அன்றாட பலியை நீக்கிற்று. அவருடைய பரிசுத்த ஸ்தானம் தள்ளுண்டது. 12 பாதகத்தினிமித்தம் அன்றாட பலியோடுங்கூடச் சேனையும் அதற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது, அது சத்தியத்தைத் தரையிலே தள்ளிற்று; அது கிரியைசெய்து அநுகூலமடைந்தது.
‘13 பரிசுத்தவானாகிய ஒருவன் பேசக்கேட்டேன், அப்பொழுது வேறொரு பரிசுத்தவான் பேசினவரை நோக்கி: அன்றாட பலியைக்குறித்தும், பாழ்க்கடிப்பை உண்டாக்கும் பாதகத்தைக் குறித்தும், பரிசுத்த ஸ்தலமும் சேனையும் மிதிபட ஒப்புக்கொடுக்கப்படுவதைக்குறித்தும், உண்டான தரிசனம் எதுவரைக்கும் இருக்கும் என்று கேட்டான். 14 அவன் என்னை நோக்கி: இரண்டாயிரத்து முந்நூறு இராப்பகல் செல்லும்வரைக்கும் இருக்கும்; பின்பு பரிசுத்தஸ்தலம் சுத்திகரிக்கப்படும் என்றான்.’