ஆப்பிரிக்க கலாச்சாரத்தில்—மணமகள் விலை
இன்று பைபிள் காலங்களைப் போலவே, ஒரு பெண்ணை மணம் முடிப்பதற்கு முன்பு ஓர் ஆண், மணமகள் விலையைக் கொடுக்கும் பழக்கம் சில கலாச்சாரங்களில் இருக்கிறது. “உம்முடைய இளைய குமாரத்தியாகிய ராகேலுக்காக உம்மிடத்தில் ஏழு வருஷம் வேலைசெய்கிறேன்” என்று யாக்கோபு தன் வருங்கால மாமனார் லாபானிடம் தெரிவித்தார். (ஆதியாகமம் 29:18) ராகேலை யாக்கோபு நேசித்ததால் ஒரு பெரும் தொகையை, அதாவது ஏழு வருட சம்பளத்துக்கு இணையான தொகையை கொடுக்க முன்வந்தார்! லாபான் அத்தொகையை ஏற்றுக்கொண்டார், ஆனால் மூத்த மகள் லேயாளை முதலில் மணமுடித்துக் கொடுத்து யாக்கோபை ஏமாற்றிவிட்டார். அதற்குப் பிறகும் யாக்கோபுடன் லாபானுடைய செயல்பாடுகள் தந்திரமிக்கவையாகவே இருந்தன. (ஆதியாகமம் 31:41) லாபான் பொருளாதார லாபத்தை பெறுவதிலேயே குறியாய் இருந்தான்; அதனால் தன்னுடைய குமாரத்திகளிடம் தனக்கு இருந்த மரியாதையை இழந்தான். “அவரால் நாங்கள் அந்நியராய் எண்ணப்படவில்லையா? அவர் எங்களை விற்று, எங்கள் பணத்தையும் வாயிலே போட்டுக்கொண்டார்” என்று சொன்னார்கள்.—ஆதியாகமம் 31:15.
பொருளாசை பிடித்த இன்றைய உலகில், பெற்றோர்கள் அநேகர் லாபானை உரித்து வைத்ததுபோல இருப்பது சோகமளிக்கும் விஷயம். சிலர் அதைவிட மோசமானவர்களாய் இருக்கிறார்கள். ஓர் ஆப்பிரிக்க செய்தித்தாளின்படி, “பேராசைமிக்க அப்பாக்கள் லாபம் பெறுவதற்காகவே” கல்யாணத்தை பேசி முடிக்கிறார்கள். மற்றொரு அம்சம் பொருளாதார நெருக்கடி. இதனால் சில பெற்றோர்கள் தங்களுடைய மகள்களை, பணக் கஷ்டத்தை நீக்கும் “பொன் வாத்தாக” கருதுகிறார்கள்.a
அதிக விலைக்கு “ஏலம்” கேட்கிறவர் வரும் வரைக்கும் சில பெற்றோர்கள் தங்களுடைய மகள்களை கல்யாணம் முடித்துக் கொடுக்காமல் தாமதிக்கின்றனர். இது பெரும் பிரச்சினைகளை உண்டாக்கலாம். கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு செய்தித்தாள் நிருபர் இவ்வாறு எழுதினார்: “அதிக டெளரி வாங்குவதிலேயே குரங்குப்பிடியாக இருக்கும் சம்பந்திமாரிடமிருந்து தப்பித்துக்கொள்வதற்காக இளைஞர்கள் காதலர்களோடு ஓடிவிடுகின்றனர்.” இமாலய மணமகள்-விலை கேட்பதால் வரும் பிரச்சினைகளில் ஒன்று பாலுறவு ஒழுக்கக்கேடு. மேலும், சில ஆண்கள் எப்படியோ ஒரு மனைவியை வாங்கிவிடுகிறார்கள், ஆனால் பாறாங்கல்லை மேலே தூக்கி வைத்தாற்போல கடன் சுமையில் மாட்டிக்கொள்கிறார்கள். “பெற்றோர்கள் நியாயமானவர்களாக இருக்க வேண்டும்” என்று வற்புறுத்துகிறார் தென் ஆப்பிரிக்க சமூக சேவகர் ஒருவர். “நிறைய தொகையை கேட்காதீர்கள். புதுமணத் தம்பதிகளை வாழவிடுங்கள். . . . ஏன் அந்த இளைஞனை திவாலாக்குகிறீர்கள்?”
மணமகள் விலை கொடுப்பதைப் பற்றியோ வாங்குவதைப் பற்றியோ பேசுகையில் எவ்வாறு கிறிஸ்தவ பெற்றோர்கள் நியாயத்தன்மைக்கு முன்மாதிரிகளாய் இருக்கலாம்? இது முக்கியமான விஷயம், ஏனெனில் பைபிள் இவ்வாறு கட்டளையிடுகிறது: “உங்கள் நியாயத்தன்மை எல்லாருக்கும் தெரிந்திருப்பதாக.”—பிலிப்பியர் 4:5, NW.
நியாயமான பைபிள் நியமங்கள்
மணமகள் விலையை வாங்குவதா வேண்டாமா என்பதை தீர்மானிப்பது கிறிஸ்தவ பெற்றோர்களின் தனிப்பட்ட விஷயம். அவ்வாறு வாங்க விரும்பினால், இப்படிப்பட்ட பேச்சுவார்த்தைகள் பைபிள் நியமங்களுக்கு இசைவாக இருக்க வேண்டும். “உங்களுடைய வாழ்க்கை முறை பண ஆசை இல்லாமல் இருப்பதாக” என்று பைபிள் சொல்கிறது. (எபிரெயர் 13:5, NW) திருமண பேச்சுவார்த்தைகளில் இந்த நியமத்தை பொருத்தவில்லையென்றால், தான் ஒரு நல்ல முன்மாதிரியானவர் அல்ல என்பதை ஒரு கிறிஸ்தவ பெற்றோர் அம்பலப்படுத்தலாம். கிறிஸ்தவ சபையில் பொறுப்பான ஸ்தானங்களை வகிக்கும் ஆண்கள், ‘பண ஆசைமிக்கவர்களாகவோ’ ‘அநியாயமாய் லாபம் சேர்ப்பதில் பேராசைமிக்கவர்களாகவோ’ இல்லாமல் ‘நியாயமானவர்களாக’ இருக்க வேண்டும். (1 தீமோத்தேயு 3:3, 8, NW) மனந்திரும்பாமல் மணமகள் விலையை பேராசையோடு அதிகம் கறக்கும் ஒரு கிறிஸ்தவர் சபையிலிருந்து விலக்கப்படலாம்.—1 கொரிந்தியர் 5:11, 13; 6:9, 10.
பேராசையால் பிரச்சினைகள் தலைதூக்குவதால், குடிமக்கள் சுரண்டப்படுவதிலிருந்து பாதுகாப்பதற்காக சில அரசாங்கங்கள் சட்டங்களை அமல்படுத்தியிருக்கின்றன. உதாரணமாக, டெளரி வாங்குவதற்காக பேச்சுவார்த்தைகள் நடத்துவதோ டௌரியை ஏற்றுக்கொள்வதோ இந்தியாவில் சட்ட விரோதமானது, தண்டனைக்குரியது. இந்தியாவிலுள்ள மெய் கிறிஸ்தவர்கள் இந்தச் சட்டத்திற்கு கீழ்ப்படிந்து நடக்கிறார்கள். மணமகள் விலையை “பொருளாகவோ பணமாகவோ அல்லது இரண்டு விதமாகவும் கொடுக்கலாம்” என்று மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள டோகோ நாட்டு சட்டம் குறிப்பிடுகிறது. அதேசமயம், “எந்தச் சூழ்நிலையிலும் அந்தத் தொகை 10,000 F CFA-ஐ (ஐமா $20.00) தாண்டக்கூடாது” என்றும் அந்தச் சட்டம் கூறுகிறது. சட்டத்திற்கு கீழ்ப்படியும் குடிமக்களாக இருக்க வேண்டும் என்று பைபிள் திரும்பத் திரும்ப கிறிஸ்தவர்களுக்கு கட்டளையிடுகிறது. (தீத்து 3:1) இப்படிப்பட்ட ஒரு சட்டத்தை அரசாங்கம் கட்டாயப்படுத்தாவிட்டாலும், உண்மை கிறிஸ்தவர் ஒருவர் கீழ்ப்படிய விரும்புவார். இவ்வாறு, கடவுளுக்கு முன்பாக ஒரு நல்மனசாட்சியைக் காத்துக்கொள்வார், மற்றவர்களுக்கு இடறலாகவும் இருக்க மாட்டார்.—ரோமர் 13:1, 5; 1 கொரிந்தியர் 10:32, 33.
Subheading is not for in vernacular
சில நாடுகளில், மணமகள் விலை பேசப்படும் முறை, மற்றொரு முக்கியமான நியமத்துடன் முரண்படலாம். பைபிள் சொல்கிறபடி, தன் வீட்டு காரியங்களுக்கு தகப்பனே பொறுப்பாளி. (1 கொரிந்தியர் 11:3; கொலோசெயர் 3:18, 20) ஆகவே, சபையில் பொறுப்புள்ள ஸ்தானங்களில் இருப்பவர்கள் “தங்கள் பிள்ளைகளையும் சொந்தக் குடும்பங்களையும் நன்றாய் நடத்துகிறவர்களுமாயிருக்க வேண்டும்.”—1 தீமோத்தேயு 3:12.
இருப்பினும், முக்கியமான கல்யாண பேச்சுவார்த்தைகளை அந்தக் குடும்பத் தலைவரின் உறவினர்களிடம் விட்டுவிடுவது சமுதாயத்தில் பொதுவாக இருக்கலாம். இந்த உறவினர்கள் மணமகள் விலையில் பங்கு கேட்கலாம். இது கிறிஸ்தவ வீட்டாருக்கு ஒரு சோதனையாக இருக்கிறது. சம்பிரதாயம் என்ற பெயரில், அதிகமாய் மணமகள் விலையை பிடுங்குவதற்காக விசுவாசத்தில் இல்லாத உறவினர்களை குடும்பத் தலைவர்கள் சிலர் அனுமதிக்கின்றனர். இது, சிலசமயங்களில் ஒரு கிறிஸ்தவ பெண் அவிசுவாசிக்கு “விரலை நீட்டுவதற்கு” வழிநடத்தியிருக்கிறது. கிறிஸ்தவர்கள் ‘கர்த்தருக்குட்பட்டவரையே’ கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்ற அறிவுரைக்கு இது முரணாக இருக்கிறது. (1 கொரிந்தியர் 7:39) தன்னுடைய பிள்ளைகளின் ஆவிக்குரிய நலனிற்கு ஊறுவிளைவிக்கும் தீர்மானமெடுக்க விசுவாசத்தில் இல்லாத உறவினர்களை அனுமதிக்கும் ஒரு குடும்பத் தலைவர், ‘தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவராயிருக்க’ முடியாது.—1 தீமோத்தேயு 3:4.
கடவுளுக்கு பயந்து நடந்த கோத்திரப் பிதாவாகிய ஆபிரகாமின் விஷயத்தில் பார்க்கிறபடி, கிறிஸ்தவ பெற்றோர் தன்னுடைய பிள்ளைகளில் ஒருவருடைய திருமண பேச்சுவார்த்தைகளில் நேரடியாக கலந்துகொள்ளாதிருந்தால் என்ன செய்வது? (ஆதியாகமம் 24:2-4) இதற்காக வேறொருவரை ஏற்பாடு செய்திருந்தால், பேச்சுவார்த்தை நடத்துபவர் பைபிளிலுள்ள நியாயமான நியமங்களுக்கு இசைவாக செயல்படுகிறாரா என்பதை அந்தக் கிறிஸ்தவ தகப்பன் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், மணமகள் விலைக்காக எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்த ஆரம்பிப்பதற்கு முன்பு, கிறிஸ்தவ பெற்றோர்கள் கவனமாக காரியங்களை சிந்தித்துப் பார்க்க வேண்டும், நியாயமற்ற சம்பிரதாயங்கள் அல்லது வற்புறுத்தல்கள் என்ற வலையில் சிக்க தங்களை அனுமதிக்கக் கூடாது.—நீதிமொழிகள் 22:3.
கிறிஸ்தவமற்ற போக்குகளை தவிர்த்தல்
மேட்டிமையையும் ‘ஜீவனத்தின் பெருமையையும்’ பைபிள் கண்டனம் செய்கிறது. (1 யோவான் 2:16; நீதிமொழிகள் 21:4) இருப்பினும், கிறிஸ்தவ சபையுடன் கூட்டுறவு கொண்டுள்ள சிலர் திருமண பேச்சுவார்த்தைகளில் இப்படிப்பட்ட போக்குகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பெருந்தொகையை கொடுப்பதையும் வாங்குவதையும் பகட்டுடன் காட்டிக்கொள்வதன் மூலம் சிலர் இந்த உலகின் போக்கை பின்பற்றுகிறார்கள். மறுபட்சத்தில், ஆப்பிரிக்காவிலுள்ள உவாட்ச் டவர் சொஸைட்டியின் கிளைகளில் ஒன்று இவ்வாறு அறிக்கை செய்கிறது: “சம்பந்தி வீட்டார் நியாயமாக கேட்டாலும், சில கணவன்மார் அதை மதிப்பதில்லை. தங்களுடைய மனைவிகளை ‘அடிமாட்டு’ விலைக்கு வாங்கியதுபோல் மட்டமாக நினைக்கிறார்கள்.”
மணமகள் விலையை அதிகம் வாங்குவதற்கான பேராசை சில கிறிஸ்தவர்களை ஆட்டிப்படைக்கிறது, அது துயரமான விளைவுகளுக்கு வழிநடத்தியிருக்கிறது. உதாரணமாக, உவாட்ச் டவர் சொஸைட்டியின் மற்றொரு கிளையிலிருந்து வரும் இந்த அறிக்கையை கவனியுங்கள்: “சகோதரர்களுக்கு மணமாவதோ சகோதரிகளுக்கு வரன் கிடைப்பதோ பொதுவாக கடினமாய் இருக்கிறது. அதன் விளைவாக, பாலுறவு ஒழுக்கக்கேட்டால் சபைநீக்கம் செய்யப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தங்கத்தையோ வைரத்தையோ தேடி சில சகோதரர்கள் சுரங்கங்களுக்கு போகிறார்கள்; எதற்கு என்றால், அவற்றை விற்று கல்யாணம் செய்துகொள்வதற்கு போதுமான பணத்தை ஈட்டுவதற்கு. இது, அவர்களுக்கு இரண்டு மூன்று ஆண்டுகளோ அதற்கும் அதிகமான ஆண்டுகளோ ஆகலாம். சகோதர கூட்டுறவிலிருந்தும் சபையின் கூட்டுறவிலிருந்தும் தூரமாக செல்கையில் அவர்கள் பொதுவாக ஆவிக்குரிய விதத்தில் பலவீனராக ஆகிவிடுகின்றனர்.”
இப்படிப்பட்ட துயரமான விளைவுகளைத் தவிர்ப்பதற்காக, கிறிஸ்தவ பெற்றோர்கள் சபையிலுள்ள அனுபவசாலிகளுடைய முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும். அப்போஸ்தலன் பவுல் ஒரு தகப்பனாக இல்லாதபோதிலும், உடன் விசுவாசிகளுடன் நியாயமாக நடந்துகொண்டார். எவர்மீதும் பாரத்தை சுமத்தாதபடிக்கு கவனமாக இருந்தார். (அப்போஸ்தலர் 20:33) நிச்சயமாகவே, கிறிஸ்தவ பெற்றோர்கள் மணமகள் விலையை பேசிமுடிக்கையில் அவருடைய சுயநலமற்ற முன்மாதிரியை சிந்தித்துப் பார்க்க வேண்டும். சொல்லப்போனால், பவுல் இவ்வாறு எழுதும்படி தேவனால் ஏவப்பட்டார்: “சகோதரரே, நீங்கள் என்னோடேகூடப் பின்பற்றுகிறவர்களாகி, நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறபடி நடக்கிறவர்களை மாதிரியாக நோக்குங்கள்.”—பிலிப்பியர் 3:17.
நியாயத்தன்மைக்கு உதாரணங்கள்
திருமண பேச்சுவார்த்தையைக் குறித்ததில், கிறிஸ்தவ பெற்றோர் அநேகர் நியாயத்தன்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் இருந்திருக்கிறார்கள். முழுநேர பிரசங்கிகளாக சேவிக்கும் ஜோசப்பையும் அவருடைய மனைவி மே-வையும் கவனியுங்கள்.b அவர்கள் சாலொமோன் தீவுகள் ஒன்றில் வசிக்கிறார்கள்; சிலசமயங்களில் அங்கு மணமகள் விலை ஒரு பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இப்படிப்பட்ட கஷ்டங்களைத் தவிர்ப்பதற்காக, ஜோசப்பும் மே-வும் தங்களுடைய மகள் ஹெலனுக்கு அண்டை தீவில் மணம் முடித்தனர். மற்றொரு மகளான எஸ்தருக்கும் அதேபோலவே செய்தனர். தன்னுடைய மருமகன் பீட்டர் நியாயமான விலைக்கு மிகவும் குறைவாகவே மணமகள் விலையை கொடுத்தபோதும் ஜோசப் அதை ஏற்றுக்கொண்டார். ஏன் இவ்வாறு செய்தாரென கேட்டபோது, ஜோசப் விளக்கினார்: “பயனியராக சேவைசெய்யும் என்னுடைய மருமகன்மீது ஒரு சுமையை வைக்க நான் விரும்பவில்லை.”
ஆப்பிரிக்காவில் வாழும் யெகோவாவின் சாட்சிகளில் அநேகரும் நியாயத்தன்மைக்கு சிறந்த முன்மாதிரி வைத்திருக்கின்றனர். சில இடங்களில், நிர்ணயிக்கப்பட்ட மணமகள் விலையை பேசிமுடிப்பதற்கு அச்சாரமாக ஒரு பெரும் தொகையை உறவினர்கள் பொதுவாக எதிர்பார்க்கிறார்கள். மணமகளை வாங்குவதற்காக, நிச்சயிக்கப்படும் பெண்ணின் இளைய சகோதரனுக்குரிய மணமகள் விலையை பிற்காலத்தில் அந்த மணமகன் கொடுப்பதாக வாக்குறுதி அளிக்கும்படி எதிர்பார்க்கலாம்.
இதற்கு நேர்மாறாக, கோஸியையும் அவருடைய மனைவி மாராவையும் எடுத்துக்கொள்ளுங்கள். அவர்களுடைய மகள் பிபோகோ, சமீபத்தில் யெகோவாவின் சாட்சிகளுடைய பயணக் கண்காணியை கல்யாணம் செய்துகொண்டார். கல்யாணத்திற்கு முன்பு, மணமகள் விலையில் ஒரு பெரும் பங்கை சுருட்டிக்கொள்வதற்காக உறவினர்கள் அந்தப் பெற்றோரை பயங்கரமாய் நச்சரித்தனர். ஆனால், பெற்றோர் உறுதியாக இருந்து, அவர்களது கோரிக்கைகளுக்கு இணங்கவில்லை. அதற்குப் பதிலாக, தங்களுடைய வருங்கால மருமகனுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி, தங்களுடைய மகளுக்காக குறைந்தபட்ச விலையைப் பெற்றுக்கொண்டார்கள்; அதன் பிறகு, திருமண செலவுக்காக அந்தப் பணத்தில் பாதியை அந்த இளம் ஜோடியிடம் திருப்பிக் கொடுத்துவிட்டனர்.
அதே நாட்டிலிருந்து வரும் மற்றொரு உதாரணம் இட்டோங்கோ என்ற பெயருடைய ஓர் இளம் சாட்சியை பற்றியது. முதலாவதாக, அவளுடைய குடும்பத்தினர் நியாயமான மணமகள் விலையைக் கேட்டார்கள். ஆனால், உறவினர்கள் அத்தொகையைவிட கூடுதலாக தரும்படி வற்புறுத்தினார்கள். நிலைமை மோசமானது, இந்த உறவினர்கள் தாங்கள் எதிர்பார்த்த விலையை வாரிக்கொண்டு போய்விடுவார்கள் போல தோன்றியது. இட்டோங்கோ இயல்பாகவே பயந்த சுபாவமுள்ளவள்; அப்படி இருந்தபோதிலும், ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபடி, சாங்ஸி என்ற பெயருடைய வைராக்கியமான கிறிஸ்தவரையே கல்யாணம் செய்யப்போவதாக தீர்மானித்துவிட்டதாய் எழுந்து நின்று மரியாதையோடு சொன்னாள். பின்பு தைரியத்தோடு “ம்பி கே” (அர்த்தம், “விஷயம் அத்தோடு முடிஞ்சது”) என்று சொல்லிவிட்டு உட்கார்ந்துவிட்டாள். அவளுடைய கிறிஸ்தவ தாய் சாம்பெக்கோவும் ஆதரித்துப் பேசினார். அதற்கு மேல் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை, ஆரம்பத்தில் திட்டமிட்டபடியே அந்தத் தம்பதியினரின் திருமணம் இனிதே முடிந்தது.
மணமகள் விலையால் வரும் தனிப்பட்ட நன்மையைவிட அன்பான கிறிஸ்தவ பெற்றோர்களை கவலைகொள்ள வைக்கும் அநேக காரியங்கள் இருக்கின்றன. காமரூனில் வசிக்கும் கணவர் ஒருவர் இவ்வாறு விளக்குகிறார்: “சந்தர்ப்பம் கிடைத்தால் போதும் என் மாமியார் என்னிடம் சொல்வார், மணமகள் விலையாக நான் கொடுக்க விரும்பியதெல்லாம், தன்னுடைய மகளுடைய தேவைகளை கவனித்துக்கொள்ள பயன்படுத்த வேண்டும்.” அன்பான பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளின் ஆவிக்குரிய நலனிலும் அக்கறையுள்ளவர்களாக இருக்கிறார்கள். உதாரணமாக, ஃபரியையும் ரூடோவையும் எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் ஜிம்பாப்வேயில் வசிக்கிறார்கள்; கடவுளுடைய ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கிக்கும் சேவையில் அநேக மணிநேரத்தை செலவழிக்கிறார்கள். சம்பளத்திற்கு வேலை செய்யாதபோதிலும், சாதாரணமாக கேட்கப்படும் விலையில் ஒரு சிறு தொகைக்குத்தான் தங்களுடைய இரண்டு மகள்களையும் கல்யாணம் செய்துகொடுத்தனர். அவர்கள் சொல்லும் காரணம்? உண்மையிலேயே யெகோவாவை நேசிக்கும் நபர்களுக்கு கல்யாணம் செய்துகொடுப்பதிலிருந்து தங்களுடைய மகள்கள் பயனடைய வேண்டுமென விரும்பினார்கள். “எங்களுக்கு ரொம்ப முக்கியமானதெல்லாம், எங்கள் மகள்களுடைய, மருமகன்களுடைய ஆவிக்குரியத்தன்மைதான்” என்று அவர்கள் விளக்கினர். கேட்க எவ்வளவு ஆனந்தமாயிருக்கிறது! கல்யாணமான தங்களுடைய பிள்ளைகளின் ஆவிக்குரிய மற்றும் பொருளாதார நலத்திற்கு அன்பான அக்கறை காண்பிக்கும் சம்பந்திமார் வெகுவாக பாராட்டப்படுகிறார்கள்.
நியாயத்தன்மையின் நன்மைகள்
சாலொமோன் தீவுகளில் வசித்துவந்த ஜோசப்பும் மே-வும் தாராளமாகவும் கவனமாகவும் தங்கள் மகள்களுடைய கல்யாணங்களை நடத்தி வைத்ததால் அபரிமிதமாய் ஆசீர்வதிக்கப்பட்டார்கள். இதனால், அவர்களுடைய மருமகன்கள் கடன் என்ற ஆழ்கடலில் ஆழ்த்தப்படவில்லை. மாறாக, இரண்டு தம்பதியினரும் ராஜ்ய செய்தியை பரப்பும் முழுநேர வேலையில் அநேக வருடங்களை செலவழிக்க முடிந்திருக்கிறது. ஜோசப் தன்னுடைய கடந்தகாலத்தை பின்னோக்கிப் பார்த்து இவ்வாறு சொல்கிறார்: “நானும் என்னுடைய குடும்பத்தினரும் எடுத்த தீர்மானங்கள் அபரிமிதமான ஆசீர்வாதங்களை அறுவடை செய்திருக்கின்றன. இதைப் புரிந்துகொள்ளாதவர்களிடமிருந்து சிலசமயங்களில் ஏகப்பட்ட இடைஞ்சல்கள் வந்தது உண்மைதான், ஆனால் என்னுடைய பிள்ளைகள் யெகோவாவின் சேவையில் சுறுசுறுப்பாகவும் வைராக்கியமாகவும் இருப்பதைப் பார்க்கையில் அது எனக்கு நல்மனசாட்சியையும் திருப்தியையும் தருகிறது. அவர்களும் சந்தோஷமாய் இருக்கிறார்கள்; அதைவிட நாங்களும் சந்தோஷமாய் இருக்கிறோம்.”
மற்றொரு நன்மை என்னவென்றால், இரு சம்பந்திமார்களுக்கும் இடையில் சுமூகமான உறவு ஏற்பட்டிருக்கிறது. உதாரணமாக, ஸான்டையும் ஸிபூஸிசோவும்—இவர்களுடைய மனைவிகள் உடன் பிறந்த சகோதரிகள்—ஜிம்பாப்வேயில் உள்ள உவாட்ச் டவர் சொஸைட்டியின் கிளையில் வாலண்டியர்களாய் சேவை செய்கிறார்கள். அவர்களுடைய மாமனார் டாகெரி, ஒரு முழுநேர பிரசங்கி; வேலை பார்ப்பவர் அல்ல. மணமகள்-விலை பற்றிய பேச்சுவார்த்தையின்போது, அவர்கள் கொடுக்கும் எதையும் வாங்கிக்கொள்வதாக அவர் சொன்னார். “நாங்கள் எங்களுடைய மாமனாரை நெஞ்சார நேசிக்கிறோம். அவருக்கு தேவைன்னு வந்துட்டால் எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்வோம்” என்று ஸான்டையும் ஸிபூஸிசோவும் சொல்கிறார்கள்.
ஆம், மணமகள் விலை பேச்சுவார்த்தைகளில் நியாயமாக இருப்பது குடும்ப மகிழ்ச்சிக்கு உதவுகிறது. உதாரணமாக, புதுத் தம்பதிகள் கடன் சுமையில் மாட்டிக்கொள்ள மாட்டார்கள். இதனால் திருமண வாழ்க்கையை அனுசரித்துச் செல்வது சுலபமாகிறது. பிரசங்கிப்பதும் சீஷராக்குவதுமாகிய அவசர வேலையில் முழுநேரமாக சேவிப்பது போன்ற ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை நாடுவதற்கு பல இளம் தம்பதியினருக்கு இது உதவியிருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அது, திருமணத்தை ஆரம்பித்து வைத்தவராகிய அன்புள்ள யெகோவா தேவனுக்கு மகிமையைக் கொண்டுவருகிறது.—மத்தேயு 24:14; 28:19, 20.
[அடிக்குறிப்புகள்]
a சில கலாச்சாரங்களில், இந்த நிலைமை தலைகீழாக இருக்கிறது. மணமகளின் பெற்றோரிடமிருந்து சம்பந்தி வீட்டார் வரதட்சணை எதிர்பார்க்கிறார்கள்.
b இந்தக் கட்டுரையில் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
[பக்கம் 27-ன் பெட்டி]
மணமகள் விலையை திருப்பிக் கொடுத்துவிட்டனர்
மணமகள் விலை குறைவாக இருந்தால், மணமகளையும் அவளுடைய பெற்றோரையும் சில சமுதாயங்களில் தாழ்வாக எடைபோடுகிறார்கள். எனவே, மேட்டிமையும் குடும்ப அந்தஸ்தை டாம்பீகமாய் காட்டிக்கொள்வதற்கான ஆசையும் சிலசமயங்களில் அதிக விலையைக் கேட்பதற்கு தூண்டுகின்றன. நைஜீரியாவிலுள்ள லாகோஸில் வாழும் ஒரு குடும்பம், இதற்கு முற்றிலும் மாறுபட்ட ஓர் உதாரணம்; மனதிற்கு இதமளிக்கும் உதாரணம். அவர்களுடைய மருமகன் டெலே இவ்வாறு விளக்குகிறார்:
“என் மாமனார் வீட்டு தயவினால், ஆடம்பர உடைகளை மாற்றிக்கொள்வது போன்ற பாரம்பரிய சடங்குகளுக்கு ஆகும் அநேக செலவுகள் எனக்கு மிச்சமாகிவிட்டது. என்னுடைய வீட்டார் மணமகள்-விலையைக் கொடுத்தபோதிலும், அவர்களுடைய தரகர் கேட்டார்: ‘நீங்கள் இந்தப் பெண்ணை மருமகளாக ஏற்றுக்கொள்கிறீர்களா, மகளாக ஏற்றுக்கொள்கிறீர்களா?’ என்னுடைய வீட்டார் எல்லாரும், ‘நாங்கள் அவளை மகளாக ஏற்றுக்கொள்கிறோம்’ என்று பதிலளித்தார்கள். அதற்குப் பின்பு, மணமகள் விலை அதே உறையிலேயே திரும்பி வந்துவிட்டது.
“என் மனைவி வீட்டார் இந்தக் கல்யாணத்தை நடத்திய விதத்தை நான் இன்னைக்கும் பாராட்டுவேன். அவர்கள்மீது நான் உயர்ந்த மதிப்பு வைத்திருப்பதற்கும் அதுதான் காரணம். அவர்களுடைய அருமையான தெய்வீக குணம், அவர்களை கூடப்பிறந்தவர்களைப் போல பார்க்க வைத்திருக்கிறது. என்னுடைய மனைவியின் மீதும் எனக்கு நல்ல அபிப்பிராயம். அவளுடைய குடும்பத்தார் என்னை அவ்வாறு நடத்தியதால் அவள்மீது எனக்கு ரொம்ப மரியாதை. எங்களுக்குள் கருத்துவேறுபாடு வரும்போது, அதை நான் பெரிசுபடுத்துவதில்லை. அவளுடைய குடும்பத்தை நினைத்துப்பார்த்தாலே போதும், மனஸ்தாபமெல்லாம் மறைந்துவிடும்.
“எங்கள் இருவரது குடும்பமும் நட்பு என்ற பந்தத்தால் உறுதியாக இணைந்திருக்கிறது. இப்பொழுதுகூட, எங்களுக்கு கல்யாணமாகி இரண்டு வருஷங்களுக்குப் பிறகு, என்னுடைய மனைவியின் குடும்பத்தினருக்கு பரிசுகளையும் பண்டங்களையும் என்னுடைய அப்பா அனுப்புகிறார்.”