தன்னந்தனியாக ஒரு குட்டித்தீவு
“தன்னந்தனி,” “குட்டி” என்ற அடைமொழிகளில் அடிக்கடி அழைக்கப்படும் தீவுதான் செயின்ட் ஹெலினா. இந்த அடைமொழி இதற்கு மிகப் பொருத்தமானதே. 17 கிலோமீட்டர் நீளமும் 10 கிலோமீட்டர் அகலமும் கொண்ட இத்தீவின் ‘அண்டை வீடு’ ஆப்பிரிக்காவின் தென்மேற்குக் கரை—1,950 கிலோமீட்டர் தூரத்தில்! 1815-ல் தோல்வியைத் தழுவிய நெப்போலியன் போர்னபார்ட், தன் அந்திம காலத்தை கழிக்க கைதியாக அனுப்பப்பட்டதும் இத்தீவுக்குத்தான்.
கடலிலிருந்து “இயற்கை காமிராவில்” பார்க்கையில் வெல்லமுடியாத கோட்டையைப் போல் காட்சியளிக்கிறது இத்தீவு. வானளாவ கம்பீரமாக தோன்றுவது வேறொன்றுமில்லை, உறங்கும் எரிமலையே. இது, அட்லான்டிக்கிலிருந்து 1,600 முதல் 2,300 அடி உயரத்திற்கு செங்குத்தாக உயர்ந்தோங்கி நிற்கிறது. தீவின் மத்தியில் இருக்கும் 2,685 அடி உயரமுள்ள அக்டியன் மலை முழு தீவையும் வளைத்துப்பிடித்துக் கொண்டிருக்கிறது. தென் அட்லான்டிக்கில் சதாகாலமும் வீசும் குளிர் பருவக் காற்றாலும் கடல் நீரோட்டத்தாலும், பொதுவாக இந்தத் தீவில் இதமான, ரம்யமான சீதோஷணநிலை நிலவுகிறது. ஆனால் தாழ்வான கடற்கரை பகுதியிலிருந்து மலைப்பாங்கான உள்நாடு வரை வெவ்வேறுபட்ட சீதோஷணநிலை நிலவுகிறது, விதவிதமான பயிர்வகைகளும் விளைகின்றன.
பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் இந்த செயின்ட் ஹெலினா பிரிட்டிஷ்காரர்களின் கைவசம் இருந்து வருகிறது. இங்குள்ள ஜனத்தொகையே சுமார் 5,000 தான். இவர்கள் ஐரோப்பிய, ஆசிய, ஆப்பிரிக்க பூர்வீகம் கொண்ட கதம்ப கலாச்சாரத்தினர். இங்கு பேசப்படும் மொழி இங்லிஷ்; ஆனால் உச்சரிப்பில் வித்தியாசம் இருக்கிறது. இங்கு ‘வான்பறவை’ வந்திறங்க வசதியில்லை. வெளி உலகத்தோடு ‘கடற்கன்னி’ மூலமே தொடர்புகொள்ள முடியும். தென் ஆப்பிரிக்காவுக்கும் இங்கிலாந்திற்கும் தவறாமல் கப்பல்கள் நீந்திச் செல்கின்றன. சொல்லப்போனால், இங்கு 1990-களின் மத்திபத்தில்தான், சாட்டிலைட் தட்டியெழுப்ப டிவி-யே கண்விழித்தது.
1930-களின் ஆரம்பத்தில், கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி முதன்முதலில் இதன் கரைகளில் எதிரொலித்தது. (மத்தேயு 24:14, NW) பொருளுடைமைகளை மதிப்பற்றதாக்கும் இந்தப் பொக்கிஷத்தை இதுவரை அநேக தீவுவாசிகள் பெற்றுள்ளனர். (மத்தேயு 6:19, 20) இன்று, 31 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் இங்கு சாட்சிகள் இருப்பதால், செயின்ட் ஹெலினா தனித்தன்மை பெற்று உலகிலேயே நெம். 1 ஆக விளங்குகிறது!
[பக்கம் 24-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
செயின்ட் ஹெலினா
ஜேம்ஸ்டவுன்
லெவல்வுட்
ஆப்பிரிக்கா
அட்லான்டிக் பெருங்கடல்
செயின்ட் ஹெலினா