யெகோவா விரும்பும் பலிகளை செலுத்துதல்
ஒரு காலத்தில், ஏதேன் தோட்டத்தின் கிழக்குமுக வாயிலில் பட்டொளி வீசிடும் தனிச்சிறப்புமிக்க ஒரு காட்சியை பார்த்திருக்கலாம்.a வலிமைமிகு கேருபீன்கள் அங்கே காவலுக்கு நின்று கொண்டிருந்தார்கள். யாரும் துணிச்சலுடன் நுழைய முடியாது என்பதை அவர்களுடைய கம்பீர தோற்றம் பறைசாற்றியது. அதைப் போலவே, சுடரொளி வீசும் சுழல் வாளும் தடையாணையிட்டது. இரவிலே அதைச் சுற்றியுள்ள மரங்களில் திகிலூட்டும் பிரகாசமான ஒளியை பரப்பியது. (ஆதியாகமம் 3:24) எட்ட நின்று பார்க்கும் எவருடைய ஆவலையும் அது கிளர்ந்தெழச் செய்திருக்கும்.
ஒருவேளை காயீனும் ஆபேலும் இந்த இடத்தை பல தடவை பார்த்திருக்கலாம். தோட்டத்திற்கு வெளியில் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் பிறந்த இவர்கள், செழிப்பாக தண்ணீர் பாய்ந்த, பச்சைப் பசேலென்ற மரம் செடிகொடிகள் நிறைந்த, பழவகைகளும் காய்கறிகளும் ஏராளமாய் விளைந்த பரதீஸில் வாழ்வது எப்படி இருக்கும் என்பதை யூகித்திருக்கத்தான் முடியும். சுவடு தெரியாத அந்த ஏதேன் இப்பொழுது புதர்கள் மண்டிக்கிடக்கும் காடாக காட்சியளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஏன் அந்தத் தோட்டம் கவனிப்பாரற்று கிடந்தது, ஏன் ஆதாமும் ஏவாளும் அதிலிருந்து துரத்தப்பட்டார்கள்—இதை பிள்ளைகளுக்கு அவர்கள் விளக்கியிருப்பார்கள் என்பதில் இம்மியும் சந்தேகமில்லை. (ஆதியாகமம் 2:17; 3:6, 23) காயீனும் ஆபேலும் எந்தளவுக்கு ஏமாற்றமடைந்திருக்க வேண்டும்! அந்தத் தோட்டத்தை கண்ணால்தான் ரசிக்க முடிந்தது, ஆனால் அதில் கால் பதிக்க முடியவில்லை. பரதீஸுக்கு மிக அருகில் இருந்தும், அதற்கு வெகுதூரத்தில்! அபூரணம் அவர்களுக்கு அகழியாக இருந்தது, அதற்காக காயீனோ ஆபேலோ ஒன்றும் செய்ய முடியவில்லை.
அவர்களுடைய பெற்றோரின் உறவால் நிச்சயமாகவே நிலைமையை நிவிர்த்தி செய்ய முடியவில்லை. ஏவாளுக்கு தண்டனைத் தீர்ப்பு வழங்கும்போது கடவுள் இவ்வாறு சொன்னார்: “உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான்.” (ஆதியாகமம் 3:16) அந்தத் தீர்க்கதரிசனத்திற்கு ஏற்ப, ஆதாம் தன்னுடைய அதிகாரத்தை மனைவிமீது செலுத்தியிருக்க வேண்டும், ஒருவேளை தன்னுடைய துணையாகவோ உதவியாளாகவோ அவளை நடத்தத் தவறியிருக்கலாம். ஏவாள் இந்த மனுஷனிடம் மிதமிஞ்சிய வகையில் சார்ந்திருப்பதை வெளிப்படுத்தியதாய் தோன்றியது. அவளது “ஆசை,” ‘வியாதியைப் போன்ற ஒரு வேட்கை’ என்று வர்ணிக்குமளவுக்கு ஒரு குறிப்புரை செல்கிறது.
அந்தப் பிள்ளைகளுக்கு பெற்றோர்மீது இருந்த மரியாதையை இந்தத் திருமண பந்தம் எந்தளவுக்கு பாதித்தது என்பதை பைபிள் சொல்லவில்லை. ஆனால், ஆதாமும் ஏவாளும் தங்களுடைய பிள்ளைகளுக்கு அலைக்கழிக்கும் ஒரு முன்மாதிரியையே வைத்திருக்க வேண்டும் என்பதுதான் உண்மை.
வித்தியாசமான வழிகளை தெரிந்தெடுத்தல்
கடைசியில், ஆபேல் ஆடு மேய்ப்பனாகவும் காயீன் பயிர்த்தொழில் செய்பவனாகவும் மாறினான். (ஆதியாகமம் 4:2) ஆபேல் தன் மந்தையை மேய்க்கையில், தன்னுடைய பெற்றோர் ஏதேனிலிருந்து விரட்டப்படுவதற்கு முன்பு சொல்லப்பட்ட இந்தத் தீர்க்கதரிசனத்தைக் குறித்து அதிகம் சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை: “உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்.” (ஆதியாகமம் 3:15) ‘சர்ப்பத்தை நசுக்கும் ஒரு வித்துவைப் பற்றிய கடவுளுடைய தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேற்றப்படும், எப்படி இந்த வித்து குதிங்காலில் நசுக்கப்படும்?’ என்பதை ஆபேல் யோசித்துப் பார்த்திருக்க வேண்டும்.
சில காலத்திற்குப் பிறகு, அதாவது அவர்கள் நன்கு முதிர்ச்சிவாய்ந்த ஆட்களான சமயத்தில், காயீனும் ஆபேலும் யெகோவாவுக்கு காணிக்கை செலுத்தினார்கள். ஆபேல் ஆடு மேய்ப்பனாக இருந்ததால், ‘தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளில் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்ததில்’ ஆச்சரியமில்லை. ஆனால் காயீன், ‘நிலத்தின் கனிகளில் சிலவற்றை’ காணிக்கையாக கொண்டுவந்தான். ஆபேலின் காணிக்கையை யெகோவா ஏற்றுக்கொண்டார், ஆனால் “காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கிகரிக்கவில்லை.” (ஆதியாகமம் 4:3-5) ஏன்?
ஆபேலின் பலி ‘மந்தையின் தலையீற்றுகளிலிருந்து’ எடுக்கப்பட்டது, காயீனுடையதோ ‘நிலத்தின் கனிகளில் சில’ என்ற விஷயத்தை சிலர் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆனால் பிரச்சினை, காயீன் அளித்த காணிக்கைப் பொருளின் இயல்பைப் பொறுத்ததாய் இருக்கவில்லை, ஏனென்றால் ‘ஆபேல்மீதும் அவன் காணிக்கைமீதும்’ யெகோவா தயவுகூர்ந்தார், ‘காயீன்மீதும் அவன் காணிக்கைமீதும்’ தயவுகூரவில்லை என்று பதிவு சொல்கிறது. ஆகவே, வணக்கத்தாருடைய இருதய நிலையையே யெகோவா முக்கியமாக நோக்கினார். அவ்வாறு செய்வதன் மூலம், எதை அவர் கண்டார்? ‘விசுவாசத்தால்’ ஆபேல் தன் காணிக்கையை செலுத்தினார் என எபிரெயர் 11:4 சொல்கிறது. எனவே, காயீன் விசுவாசம் இல்லாமலிருந்தான், ஆபேலின் காணிக்கை ஏற்றுக்கொள்ளத்தக்கதாக விசுவாசத்தோடு இருந்தது.
இதன் சம்பந்தமாக, ஆபேலின் காணிக்கையில் இரத்தம் சிந்துதல் உட்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. குதிங்காலில் நசுக்கப்படும் வித்துவைப் பற்றிய கடவுளுடைய வாக்குறுதி ஓர் உயிர்ப்பலி செலுத்துவதை உட்படுத்தும் என அவன் சரியாகவே தீர்மானித்திருக்கலாம். இவ்வாறாக, ஆபேலின் பலி பாவநிவிர்த்தி செய்வதற்கு மன்றாடியதாக இருந்திருக்கும், ஏற்ற சமயத்தில் பாவங்களுக்கு ஈடான பலியை கடவுள் கொடுப்பார் என்பதில் விசுவாசத்தை வெளிப்படுத்தியது.
மாறாக, காயீன் தான் செலுத்திய காணிக்கைக்கு மேலோட்டமான சிந்தனையையே செலுத்தியிருக்கலாம். “அவனுடைய காணிக்கை வெறுமனே கடவுள் ஒரு கொடையாளர் என்பதையே ஒத்துக்கொள்வதாக இருந்தது” என 19-ம் நூற்றாண்டு பைபிள் விரிவுரையாளர் தெரிவித்தார். “தனக்கும் தன்னுடைய சிருஷ்டிகருக்கும் இடையே முறிவு இருப்பதை உணரவில்லை என்பதையே அது காட்டியது, பாவ மன்னிப்பின் அவசியத்தையோ பாவநிவிர்த்திக்காக சார்ந்திருப்பதையோ காண்பிக்கவில்லை.”
மேலும், முதற்பேறானவனாக, சர்ப்பமாகிய சாத்தானை அழிக்கப்போகும் வாக்குப்பண்ணப்பட்ட வித்து தான்தான் எனவும் அகந்தையுடன் காயீன் நினைத்திருக்கலாம். ஏவாளும்கூட தன்னுடைய முதற்பேறான குமாரன்மீது இப்படிப்பட்ட ஆசையை வைத்திருந்திருக்கலாம். (ஆதியாகமம் 4:1) இதையே காயீனும் ஏவாளும் எதிர்பார்த்திருந்தால், அவர்களுடைய எண்ணம் தவறானது என்பது வருத்தத்திற்குரிய விஷயம்.
ஆபேலின் காணிக்கையை யெகோவா எவ்வாறு அங்கீகரித்தார் என்பதை பைபிள் குறிப்பிடுகிறதில்லை. பரலோகத்திலிருந்து வந்த அக்கினி பட்சித்தது என சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர். எப்படியிருந்தாலும்சரி, தன்னுடைய காணிக்கை நிராகரிக்கப்பட்டதை காயீன் உணர்ந்ததால், அவனுக்கு “மிகவும் எரிச்சல் உண்டாகி, அவன் முகநாடி வேறுபட்டது.” (ஆதியாகமம் 4:5) காயீன் அழிவை நோக்கி சென்றான்.
யெகோவாவின் அறிவுரையும் காயீனின் பிரதிபலிப்பும்
காயீனிடம் யெகோவா நியாயங்காட்டிப் பேசினார். “உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது?” என்று அவனிடம் கேட்டார். தன்னுடைய உணர்ச்சிகளையும் உள்நோக்கங்களையும் ஆராய்ந்து பார்க்க காயீனுக்கு இது போதுமான வாய்ப்பை அளித்தது. “நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய்” என்று யெகோவா தொடர்ந்து சொன்னார்.—ஆதியாகமம் 4:6, 7. (23-ம் பக்கத்திலுள்ள பெட்டியைக் காண்க.)
காயீன் யெகோவாவின் பேச்சைக் கேட்கவில்லை. அதற்குப் பதிலாக, ஆபேலை வயல்வெளிக்கு அழைத்துச் சென்று அவனை கொலை செய்தான். பிற்பாடு, ஆபேல் எங்கே என்று யெகோவா அவனிடம் கேட்டபோது, ஏற்கெனவே செய்த பாவத்தோடு பொய்யும் சொன்னான். “நான் அறியேன்; என் சகோதரனுக்கு நான் காவலாளியோ” என்று எரிந்து விழுந்தான்.—ஆதியாகமம் 4:8, 9.
ஆபேலை கொலை செய்ததற்கு முன்பும் பின்பும், காயீன் ‘நன்மைசெய்ய’ மறுத்துவிட்டான். பாவம் தன்னை ஆண்டுகொள்ள அனுமதித்தான், அதனால் மனித குடும்பத்தார் குடியிருந்த இடத்திலிருந்து காயீன் புறத்தாக்கப்பட்டான். காயீனை கொலைசெய்து ஆபேலின் மரணத்திற்கு எவரும் பழிதீர்க்காதபடி ஒரு ‘அடையாளத்தை’ போட்டார். அது ஒருவேளை பயபக்தியூட்டும் ஒரு கட்டளையாக இருக்கலாம்.—ஆதியாகமம் 4:15.
பிற்பாடு காயீன் ஒரு பட்டணத்தை உருவாக்க சென்றான், அதற்கு தன் மகனுடைய பெயரை வைத்தான். அவனுடைய வம்சத்தார் வன்முறைக்குப் பெயர்போனவர்களாய் ஆனதில் ஆச்சரியமில்லை. கடைசியில், அநீதியான மனிதர் அனைவரையும் நோவாவின் நாளைய ஜலப்பிரளயம் வாரிக்கொண்டு போனபோது காயீனுடைய சந்ததி முடிவுக்கு வந்தது.—ஆதியாகமம் 4:17-24; 7:21-24.
காயீன் ஆபேலை பற்றிய பைபிளிலுள்ள விவரப்பதிவு பொழுதுபோக்கிற்கு வாசிப்பதற்காக பாதுகாத்து வைக்கப்படவில்லை. அதற்கு மாறாக, “நமக்குப் போதனையாக”வும் “உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும்” பிரயோஜனமுள்ளவையாகவும் எழுதப்பட்டுள்ளது. (ரோமர் 15:4; 2 தீமோத்தேயு 3:16, 17) இந்த விவரப்பதிவிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
நமக்கு ஒரு பாடம்
காயீன் ஆபேலை போலவே, இன்று கிறிஸ்தவர்கள் கடவுளுக்கு பலி செலுத்தும்படி—சொல்லர்த்தமான பலி அல்ல, ‘அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலியை தேவனுக்குச் செலுத்தும்படி’—அழைக்கப்படுகிறார்கள். (எபிரெயர் 13:15) 230 நாடுகளுக்கும் மேல் கடவுளுடைய ராஜ்ய நற்செய்தியை யெகோவாவின் சாட்சிகள் பிரசங்கிப்பதால், இது தற்போது உலகளாவிய அளவில் செய்யப்பட்டு வருகிறது. (மத்தேயு 24:14) இந்த வேலையில் நீங்கள் பங்குகொள்கிறீர்களா? ‘தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தை மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்ல’ என்பதில் நீங்கள் நிச்சயமாயிருக்கலாம்.—எபிரெயர் 6:10.
காயீன் ஆபேலின் பலியை போல, வெளிப்படையான தோற்றத்தை வைத்து—உதாரணமாக, ஊழியத்தில் நீங்கள் செலவழிக்கும் நேரத்தை வைத்து—உங்களுடைய பலி நியாயந்தீர்க்கப்படுவதில்லை. யெகோவா ஆழமாக நோக்குகிறார். அவரே “இருதயத்தை ஆராய்கிறவரும்” ‘உள்ளிந்திரியங்களையும்கூட’—அதாவது, ஆழ்ந்த யோசனைகளையும் உணர்ச்சிகளையும் ஒருவருடைய ஆள்தன்மையின் நோக்கங்களையும்—‘சோதித்தறிகிறவருமாயிருக்கிறார்’ என்று எரேமியா 17:10 சொல்கிறது. ஆகவே, இங்கு உண்மையில் உட்பட்டிருப்பது உள்நோக்கம்தான், அளவு அல்ல. உண்மையில், பெரிதாகவோ சிறிதாகவோ, அன்பால் தூண்டப்பட்ட இதயத்திலிருந்து கொடுக்கும்போது அந்த பலி கடவுளுக்கு மதிப்புமிக்கது.—மாற்கு 12:41-44-ஐ 14:3-9-உடன் ஒப்பிடுக.
அதே சமயத்தில், அரைமனதோடு செலுத்தப்பட்ட காயீனுடைய காணிக்கையை கடவுள் ஏற்றுக்கொள்ளாததுபோல, முடமான பலிகளையும் யெகோவா ஏற்றுக்கொள்ள மாட்டார் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். (மல்கியா 1:8, 13) உங்களுடைய மிகச் சிறந்ததையே, முழு இருதயத்தோடும் ஆத்துமாவோடும் மனதோடும் பலத்தோடும் செய்யும் சேவையையே கடவுள் கேட்கிறார். (மாற்கு 12:30) நீங்கள் அதைச் செய்கிறீர்களா? அப்பொழுது, உங்களுடைய பலியை திருப்தியோடு நோக்குவதற்கு உங்களுக்கு நிறைய காரணம் இருக்கும். பவுல் இவ்வாறு எழுதினார்: “அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப் பார்க்கக்கடவன்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்போதல்ல, தன்னையே பார்க்கும்போது மேன்மை பாராட்ட அவனுக்கு இடமுண்டாகும்.”—கலாத்தியர் 6:4.
காயீனும் ஆபேலும் ஒரே மாதிரிதான் வளர்க்கப்பட்டார்கள். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஒவ்வொருவரும் தனித்தன்மைமிக்க பண்புகளை வளர்த்துக்கொள்ள வாய்ப்பளித்தது. பொறாமை, வைராக்கியம், கோபம் ஆகியவற்றால் காயீனுடைய மனப்பான்மை படிப்படியாக சீர்கேடடைந்தது.
அதற்கு மாறாக, கடவுளால் ஆபேல் ஒரு நீதிமானாக நினைவுகூரப்படுகிறார். (மத்தேயு 23:35) எப்படியாயினும் கடவுளைப் பிரியப்படுத்த வேண்டுமென்ற அவருடைய திடதீர்மானம், தன் குடும்பத்தாராகிய ஆதாம், ஏவாள், காயீன் ஆகிய நன்றிகெட்ட ஆட்களிலிருந்து அவரை பிரித்துக்காட்டுகிறது. இது நமக்கே இதமளிக்கிறது. ஆபேல் மரித்தபோதிலும்கூட, அவன் “இன்னும் பேசுகிறான்” என்று பைபிள் நமக்குச் சொல்கிறது. கடவுளுக்கு செய்த அவனுடைய உண்மையுள்ள சேவை, சரித்திர ஏடாகிய பைபிளில் அழியா இடம்பெற்றுள்ளது. கடவுள் விரும்பும் பலியை தொடர்ந்து அவருக்கு செலுத்துவதன் மூலம் ஆபேலின் முன்மாதிரியை நாம் பின்பற்றுவோமாக.—எபிரெயர் 11:4.
[அடிக்குறிப்புகள்]
a நவீனகால துருக்கியின் கிழக்கு பாகத்திலுள்ள மலைசூழ்ந்த ஒரு பகுதியில் ஏதேன் தோட்டம் அமைந்துள்ளது என சிலர் நினைக்கின்றனர்.
[பக்கம் 23-ன் பெட்டி/படம்]
கிறிஸ்தவ அறிவுரையாளர்களுக்கு ஒரு முன்மாதிரி
“உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது?” இந்தக் கேள்வியோடு காயீனிடம் தயவுடன் யெகோவா நியாயங்காட்டிப் பேசினார். காயீன் மாறுவதற்கு அவனை அவர் வற்புறுத்தவில்லை, ஏனெனில் காயீனுக்கு சுயதெரிவு செய்யும் திறமை இருந்தது. (உபாகமம் 30:19-ஐ ஒப்பிடுக.) இருப்பினும், காயீனுடைய நெறிமுறையற்ற போக்கின் விளைவுகளை சுட்டிக்காட்ட யெகோவா தயங்கவில்லை. ‘நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மை செய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அதன் ஆசை உன்னை பற்றியிருக்கும்’ என காயீனிடம் எச்சரித்தார்.—ஆதியாகமம் 4:6, 7.
இப்படி வன்மையாக கடிந்துகொண்டபோதிலும், ‘உதவாக்கரையைப்’ போல யெகோவா காயீனை நடத்தவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அதற்கு மாறாக, அவன் தன்னுடைய வழிகளை மாற்றினால் அடையப்போகும் ஆசீர்வாதங்களைப் பற்றி காயீனிடம் சொன்னார். மேலும், அப்படிச் செய்தால் காயீன் தன்னுடைய பிரச்சினையை சமாளிக்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். “நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ?” என்று யெகோவா சொன்னார். அவனுடைய கொலைபாதக கோபத்தைக் குறித்தும் காயீனிடம் கேட்டார்: ‘நீ அதை ஆண்டுகொள்வாயோ?’
இன்று, கிறிஸ்தவ சபையிலுள்ள மூப்பர்கள் யெகோவாவின் முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும். 2 தீமோத்தேயு 4:2-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சிலசமயங்களில் ‘கண்டனம்பண்ணி’ ‘கடிந்துகொண்டு’ தவறிழைத்தவருடைய நெறிமுறையற்ற போக்கின் விளைவுகளை நேரிடையாக எடுத்துப்பேச வேண்டும். அதேசமயத்தில், மூப்பர்கள் ‘புத்திசொல்லவும்’ வேண்டும். பாராகாலேயோ, என்ற கிரேக்க வார்த்தை “உற்சாகப்படுத்துவதை” அர்த்தப்படுத்துகிறது. “கொடுக்கப்படும் புத்திமதி மூக்குடைப்பது மாதிரியாகவோ, மூர்க்கத்தனமாகவோ, விமர்சிப்பதாகவோ இருக்கக்கூடாது” என்று சொல்கிறது புதிய ஏற்பாட்டின் இறையியல் அகராதி (ஆங்கிலம்). “ஆறுதலளிப்பது என்ற மற்றொரு அர்த்தமும் இருப்பதை இந்தக் கிரேக்க வார்த்தை சுட்டிக்காட்டுகிறது.”
மேற்குறிப்பிடப்பட்ட கிரேக்க வார்த்தையுடன் தொடர்புடைய பாரகிலிடோஸ் என்ற வார்த்தை, ஓர் உதவியாளரையோ அல்லது சட்ட சம்பந்தமான விஷயத்தில் ஒரு வழக்குரைஞரையோ அர்த்தப்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, குறிப்பாக சுட்டிக்காட்டி கடிந்துகொள்ளும்போதும்கூட, அறிவுரை தேவைப்படுவோருக்கு தாங்கள் உதவியாளர்கள்—பகைவர்கள் அல்லர்—என்பதை மூப்பர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அறிவுரை கொடுக்கப்படுகிறவர் அந்தப் பிரச்சினையை மேற்கொள்ள முடியும் என்பதில் நம்பிக்கை வைத்து, யெகோவாவைப் போல, மூப்பர்கள் நேர்மறையாக சிந்திக்க வேண்டும்.—கலாத்தியர் 6:1-ஐ ஒப்பிடுக.
கடைசியாக, புத்திமதியைப் பொருத்திப் பிரயோகிப்பது தனிப்பட்ட நபரை பொருத்தது. (கலாத்தியர் 6:5; பிலிப்பியர் 2:12) படைப்பாளரிடமிருந்தே வந்த கடிந்துகொள்ளுதலை அசட்டை செய்த காயீனைப் போலவே, எச்சரிக்கைகளுக்கு சிலர் செவிசாய்க்காததை அறிவுரை கொடுப்பவர்கள் காணலாம். ஆனால், கிறிஸ்தவ அறிவுரையாளர்களுக்கு பரிபூரண முன்மாதிரியாகிய யெகோவாவை மூப்பர்கள் பின்பற்றும்போது, தாங்கள் செய்யவேண்டியதை செய்திருக்கிறார்கள் என்பதில் நிச்சயமாயிருக்கலாம்.