நமிபியாவில் உயிருள்ள மணிக் கற்கள்!
ஆப்பிரிக்காவின் தென்மேற்கு கரையோரத்தில் ஏறக்குறைய 1,500 கிலோமீட்டர் பரப்பளவை நமிபியா வளைத்துப் பிடித்திருக்கிறது. இந்நாட்டின் கடற்கரை நெடுக மணல் குன்றுகளும் கற்பாறை குன்றுகளும் சரளைக்கல் சமவெளிகளும் கண்ணில் தெரிகின்றன. நமிபியாவின் கூழாங்கல் கடற்கரைகளில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் வண்ண வண்ண மணிக் கற்கள் உங்கள் கண்களுக்கு விருந்து படைக்கின்றன. வைரக் கற்களுங்கூட சிலசமயங்களில் அங்கே கண்சிமிட்டுகின்றன. ஆனால் இந்தக் கற்களைவிட அருமையானவை—மிக அருமையானவை—அந்நாட்டில் இருக்கின்றன. அவை சாதாரண மணிக் கற்கள் அல்ல, நமிபியாவின் உயிருள்ள மணிக் கற்களே. உயிருள்ள மணிக் கற்களா? ஆம், பல்வகை தொகுதியினர் அடங்கிய மக்களே அந்த மணிக் கற்கள்.
பூர்வீக நமிபியா குடிகள் கோய்சன் என்றழைக்கப்பட்ட தொகுதியான மொழிகளைப் பேசினார்கள். அவர்களுடைய பேச்சு ‘கிளிக்’ என்ற ஓசைகளுக்குப் பெயர்பெற்றது. இன்று கோய்சன் பேசுகிற மக்கள் மத்தியில் கருநிற தோலுடைய டாமாராக்களும், வெளுத்த நிற தோலுடைய குள்ளமான நாமாக்களும் நடமாடுகின்றனர். காட்டுவாசிகளான புகழ்பெற்ற வேட்டைக்காரர்களும் இருக்கின்றனர். சமீப நூற்றாண்டுகளில் கருநிற மரபினத்தவரில் பலர் நமிபியாவுக்குள் நுழைந்திருக்கின்றனர். இவர்கள் மூன்று முக்கிய தேசிய தொகுதியினராக பிரிக்கப்படுகின்றனர்: ஒவம்போ (நமிபியாவிலேயே மிகப் பெரிய இனத் தொகுதியினர்), ஹெரெரொ, கவங்கோ. 19-வது நூற்றாண்டில் ஐரோப்பியர் நமிபியாவில் குடியேறத் தொடங்கினார்கள். அந்த வனாந்தர மணல்களில் வைரக் கற்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டபோது இன்னும் அதிகமானோர் குடிபுகுந்ததை சொல்லவே தேவையில்லை.
நமிபியாவின் குடிமக்கள் அருமையானவர்கள், ஏனெனில் யாருக்காக கடவுள் தம்முடைய குமாரனையே ஈந்து நித்திய வாழ்வுக்கு வழிவகுத்திருக்கிறாரோ அந்த மனிதவர்க்க உலகத்தின் பாகமாகவே இவர்களும் இருக்கிறார்கள். (யோவான் 3:16) அநேக மரபினரைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான நமிபியர்கள் ஏற்கெனவே இரட்சிப்பின் செய்திக்கு செவிசாய்த்திருக்கிறார்கள். இவர்களை உயிருள்ள மணிக் கற்களுக்கு ஒப்பிடலாம். ஏனெனில் வணக்கத்திற்குரிய யெகோவாவின் வீட்டுக்குள் இப்போது கூட்டிச்சேர்க்கப்படும் ‘சகல ஜாதிகளிலும் அருமையானவை’ எனப்படுவோர் மத்தியில் இருக்கிறார்கள்.—ஆகாய் 2:7.
ஆவிக்குரிய சுரங்க வேலை ஆரம்பமாகிறது
நமிபியாவின் ஆவிக்குரிய மணிக் கற்களைத் தேடும் படலம் 1928-ல் ஆரம்பமானது. அந்த ஆண்டில், நாடு முழுவதிலும் பரவியிருந்த ஜனங்களுக்கு உவாட்ச் டவர் சொஸையிட்டியின் தென் ஆப்பிரிக்க கிளை 50,000 பைபிள் பிரசுரங்களை அனுப்பியது. அதற்கடுத்த ஆண்டில், தென் ஆப்பிரிக்காவில் இருந்த அபிஷேகம் செய்யப்பட்ட ஒருவராகிய லீனி டெரன் என்ற பெண்மணி அக்கறை காட்டியவர்களைச் சென்று சந்தித்தார்கள். மிகப் பரந்துவிரிந்த அந்த நாட்டிற்கு தனிமையிலேயே அங்குமிங்கும் சென்று, நான்கு மாதங்களுக்குள் பைபிள் படிப்புக்கு உதவும் 6,000 பிரசுரங்களை ஆப்பிரிக்கான்ஸ் மொழியிலும் ஆங்கிலத்திலும் ஜெர்மன் மொழியிலும் அளித்தார்கள். இந்த வேலையெல்லாம் நிச்சயமாகவே வீண்போகவில்லை.
உதாரணமாக, சுரங்கத்தில் வேலைசெய்யும் பெர்ன்ஹார்ட் பாடி என்ற ஜெர்மானியரை கவனியுங்கள். 1929-ல், ஒரு விவசாயிடமிருந்து தவறாமல் முட்டைகளை வாங்கி வந்தார். அந்த விவசாயி ஒவ்வொரு முட்டையையும் உவாட்ச் டவர் பிரசுரத்தின் தாளில் சுருட்டி தருவார். அந்த ஒவ்வொரு பக்கத்தையும் பெர்ன்ஹார்ட் ஆவலுடன் வாசித்து, இந்தப் புத்தகத்தை யார் எழுதியிருப்பாரென ஆச்சரியப்படுவார். முடிவில் கடைசி பக்கம் அவருக்கு கிடைத்தது, அதில் ஜெர்மனியிலுள்ள உவாட்ச் டவர் சொஸையிட்டியின் விலாசம் கொடுக்கப்பட்டிருந்தது. கூடுதலான பிரசுரங்களுக்காக பெர்ன்ஹார்ட் எழுதிக் கேட்டு, சத்தியத்தின் சார்பாக நிலைநிற்கை எடுத்த முதல் நமிபியர் ஆனார்.
முழுநேர ஊழியர்கள் வருகை
1950-ல், உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியில் பயிற்றுவிக்கப்பட்ட நான்கு மிஷனரிகள் நமிபியாவுக்கு வந்து சேர்ந்தார்கள். 1953-க்குள் மிஷனரிகளின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்தது. ஆஸ்திரேலிய தம்பதி டிக் மற்றும் காரலீ உவால்ட்ரன் என்பவர்களும் அவர்களில் அடங்குவர். இவர்கள் இன்னும் அங்கு உண்மையுடன் சேவிக்கிறார்கள். அதோடு தென் ஆப்பிரிக்காவிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் வந்த முழுநேர ராஜ்ய பிரஸ்தாபிகள் பலரும் நமிபியாவின் ஆவிக்குரிய மணிக் கற்களைக் கண்டுபிடிப்பதில் பங்கெடுத்திருக்கிறார்கள். வேறு மிஷனரிகளும் உதவி ஊழியர் பயிற்சிப் பள்ளியில் பயின்றவர்களும் நமிபியாவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.
அங்கு பேசப்படும் முக்கிய மொழிகளாகிய ஹெரெரோ, க்வாங்காலி, க்வான்யாமா, நாமா/டாமாரா, டோங்கா போன்றவற்றில் பைபிள் இலக்கியங்களை மொழிபெயர்த்து பிரசுரிப்பது நமிபியாவின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு அடிகோலிய மற்றொரு காரணியாகும். 1990 முதற்கொண்டு, தலைநகராகிய வின்ட்ஹுக்கில் முழுநேர தொண்டர்களுக்கு ஒரு சிறந்த மொழிபெயர்ப்பு அலுவலகமும் வீடும் நடத்தப்பட்டு வருகிறது. நமிபியாவின் பல்வேறு பாகங்களில் முழுநேர சுவிசேஷ ஊழியம் செய்வதில் தன் கணவருடன் பங்குகொண்ட காரன் டெப்பிஷ் இவ்வாறு சொல்கிறார்கள்: “அவர்களுடைய சொந்த மொழியில் பிரசுரங்களைக் கொடுத்தபோது பலருக்கு ஒரே ஆச்சரியம், ஏனென்றால் அந்த மொழியில் புத்தகங்கள் அதிகமில்லை.”
மணிக் கற்களை மெருகூட்டுதல்
நமிபியாவின் சொல்லர்த்தமான சில மணிக் கற்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் கடல் அலைகளாலும் மணலாலும் மெருகூட்டப்பட்டிருக்கின்றன. ஆனால் நிச்சயமாகவே, இத்தகைய இயற்கை வழிமுறைகள் உயிருள்ள மணிக் கற்களை உருவாக்குவதில்லை. அபூரண மனிதர்கள், “பழைய மனிதத் தன்மையைக் களைந்துபோட்டு,” கிறிஸ்துவைப் போன்ற புதிய மனிதத் தன்மையைத் தரித்துக்கொள்வதற்கு முயற்சி தேவைப்படுகிறது. (எபேசியர் 4:20-24) உதாரணமாக, மரித்த மூதாதையருக்கு வணக்கம் செலுத்துவது, நமிபியாவின் பல குலத்தவருக்குள் ஊறிப்போன ஒரு பாரம்பரியம். மூதாதை வணக்கத்திற்குரிய செயல்களை செய்யாதவர்கள் குடும்ப அங்கத்தினராலும் அயலாராலும் அடிக்கடி துன்புறுத்தப்படுகிறார்கள். மரித்தோர் “ஒன்றும் அறியார்கள்” என்பதை பைபிளிலிருந்து கற்றுக்கொள்கையில், அவர்கள் கடுஞ்சோதனையை எதிர்ப்படுகிறார்கள். (பிரசங்கி 9:5) எவ்வகையில்?
ஒரு ஹெரெரோ சாட்சி இவ்வாறு விளக்குகிறார்: “சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்திருப்பது ஒரு பெரும் சவாலாக இருந்தது. நான் யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிள் படிப்பதற்குச் சம்மதித்தேன், ஆனால் நான் படித்த விஷயங்களின்படி வாழ எனக்குக் காலமெடுத்தது. முதலாவதாக, பாரம்பரிய நம்பிக்கைகளை கடைப்பிடிக்காமல் இருந்தால் ஆபத்து எதுவும் இருக்குமா என்பதை நான் சோதித்தறிய வேண்டியதாக இருந்தது. உதாரணமாக, நமிபியாவில் சில இடங்களில், ஒரு கல்லறையின்மீது ஒரு கல்லைப் போடாமல் அல்லது மரித்தோருக்கு வணக்கம் தெரிவிக்க என் தொப்பியை மேலே தூக்காமல் வண்டியை ஓட்டிக்கொண்டு போய்விடுவேன். மரித்த மூதாதையரை வணங்காதிருப்பதால் எனக்கு ஆபத்து எதுவும் ஏற்படப் போவதில்லை என்பதைப் படிப்படியாக அறிந்து நம்பினேன். சத்தியத்தைக் கற்கும்படி என் குடும்பத்தாருக்கும் அக்கறை காட்டிய மற்றவர்களுக்கும் உதவிசெய்ய நான் எடுத்த முயற்சிகளை யெகோவா ஆசீர்வதித்ததில் நான் எவ்வளவாய் மகிழ்ச்சியடைகிறேன்!”
ஆவிக்குரிய சுரங்க வேலைக்காரர் தேவை
1950-ல் மிஷனரிகள் வந்து சேருவதற்கு முன்பு, நற்செய்தியைப் பிரசங்கிப்பவர் ஒருவர் மாத்திரமே நமிபியாவில் இருந்தார். அந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து 995 பேர் என்ற உச்சநிலையை எட்டியிருக்கிறது. ஆனால் செய்வதற்கு இன்னும் அதிக வேலை இருக்கிறது. உண்மையில், சில பகுதிகளில் வேலை பெரும்பாலும் ஆரம்பிக்கப்படாமலேயே இருக்கிறது. ஆர்வமுள்ள ராஜ்ய பிரஸ்தாபிகளுக்கான தேவை அதிகமுள்ள இடத்தில் உங்களால் சேவிக்க முடியுமா? அப்படியானால், நமிபியாவுக்கு வந்து இன்னும் அதிகமான ஆவிக்குரிய மணிக் கற்களைக் கண்டுபிடிப்பதற்கும் மெருகூட்டுவதற்கும் எங்களுக்கு உதவுங்கள்.—அப்போஸ்தலர் 16:9-ஐ ஒப்பிடவும்.
[பக்கம் 26-ன் வரைப்படம்/படங்கள்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
ஆப்பிரிக்கா
நமிபியா
[படங்கள்]
நமிபியா அழகிய மணிக் கற்களைக் கொண்ட ஒரு நாடு
[படத்திற்கான நன்றி]
Maps: Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.; Diamonds: Courtesy Namdek Diamond Corporation
[பக்கம் 26-ன் படம்]
நமிபியாவின் அனைத்து பழங்குடியினருக்கும் நற்செய்தி பிரசங்கிக்கப்படுகிறது
[பக்கம் 28-ன் படம்]
ராஜ்ய பிரஸ்தாபிகளுக்கான தேவை அதிகமுள்ள இடத்தில் நீங்கள் சேவிக்க முடியுமா?