“ஒவ்வொன்றுக்கும் குறிக்கப்பட்ட ஒரு காலமுண்டு”
“ஒவ்வொன்றுக்கும் குறிக்கப்பட்ட ஒரு காலமுண்டு, வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்திற்குமே ஒரு சமயமுண்டு.”—பிரசங்கி 3:1, NW.
1. அபூரண மனிதருக்கு என்ன குழப்பம் இருக்கிறது, இது சில சந்தர்ப்பங்களில் எதற்கு வழிநடத்தியிருக்கிறது?
“நான் அதை முதல்ல செஞ்சிருக்கணும்” என்றோ அல்லது “நான் கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கணும்” என்றோ அடிக்கடி அநேகர் புலம்புகின்றனர். சில காரியங்களை செய்வதற்கு சரியான நேரத்தை தீர்மானிப்பதில் அபூரண மானிடருக்கு இருக்கும் குழப்பத்தையே இப்படிப்பட்ட புலம்பல்கள் பறைசாற்றுகின்றன. இது உறவுகள் முறிந்துபோகும்படி செய்திருக்கிறது. ஏமாற்றத்திற்கும் மனசங்கடத்திற்கும் வழிநடத்தியிருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேல், யெகோவாவிலும் அவருடைய அமைப்பிலும் சிலருடைய விசுவாசத்தைக் குறைத்திருக்கிறது.
2, 3. (அ) குறிக்கப்பட்ட காலங்களைப் பற்றிய யெகோவாவின் தீர்மானத்தை ஏற்பது ஏன் ஞானமான போக்கு? (ஆ) பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தைக் குறித்ததில் என்ன சமநிலையான நோக்கு நமக்கு இருக்க வேண்டும்?
2 மனிதருக்கு இல்லாத ஞானமும் உட்பார்வையும் யெகோவாவுக்கு இருப்பதால், அவர் விரும்பினால், ஒவ்வொரு செயலின் விளைவையும் முன்னரே காண முடியும். “அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டு” அவரால் அறிய முடியும். (ஏசாயா 46:10) இதனால், தாம் விரும்பும் எதையும் செய்வதற்கு மிகப் பொருத்தமான சமயத்தை துல்லியமாக தெரிந்தெடுக்க முடியும். ஆகையால், காலத்தை கணிப்பதில் குறைந்த ஞானத்தைக்கொண்ட நம்மீது நம்பிக்கை வைப்பதைப் பார்க்கிலும், யெகோவா தீர்மானித்திருக்கும் காலங்களை நம்புவதே ஞானமான செயல்!
3 உதாரணமாக, சில பைபிள் தீர்க்கதரிசனங்கள் நிறைவேற்றமடையப் போகும் யெகோவாவின் குறித்த காலத்திற்காக முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்கள் உண்மையுடன் காத்திருக்கிறார்கள். “யெகோவாவினிடமிருந்து வரும் ரட்சிப்பை எதிர்நோக்கி அமர்ந்திருப்பது நன்றாம்” என்று புலம்பல் 3:26-ல் (தி.மொ.) சொல்லப்பட்டுள்ள நியமத்தை எப்போதும் மனதில் பளிங்குபோல தெளிவாக வைத்திருந்து, அவருடைய சேவையில் சுறுசுறுப்பாய் நிலைத்திருக்கிறார்கள். (ஒப்பிடுக: ஆபகூக் 3:16, தி.மொ.) அதே சமயத்தில், யெகோவாவின் நியாயத்தீர்ப்பு அறிவிக்கப்பட்டபடி நிறைவேறுவது “தாமதித்தாலும் . . . அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை” என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.—ஆபகூக் 2:3.
4. யெகோவாவுக்காக பொறுமையுடன் காத்திருக்க ஆமோஸ் 3:7-ம் மத்தேயு 24:45-ம் எவ்வாறு நமக்கு உதவிசெய்ய வேண்டும்?
4 மறுபட்சத்தில், உவாட்ச் டவர் பிரசுரங்களில் கொடுக்கப்பட்ட சில பைபிள் வசனங்களை அல்லது விளக்கங்களை நாம் முழுமையாக புரிந்துகொள்ளவில்லை என்றால் பொறுமையை இழக்க நமக்கு காரணம் இருக்கிறதா? குறிக்கப்பட்ட காலத்தில் யெகோவா காரியங்களைத் தெளிவுபடுத்துவதற்காக காத்திருப்பதே ஞானமுள்ள போக்கு. “கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தமது ஊழியருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்.” (ஆமோஸ் 3:7) எப்பேர்ப்பட்ட அதிசயமான வாக்கு! ஆனால், பொருத்தமானதென தாம் கருதுகிற சமயத்தில் யெகோவா தம்முடைய இரகசியத்தை வெளிப்படுத்துகிறார் என்பதை நாம் தெரிந்திருக்க வேண்டும். இதற்காக, கடவுள் தம்முடைய ஜனங்களுக்கு ‘ஏற்றவேளையிலே [ஆவிக்குரிய] போஜனம்’ கொடுக்கும்படி, ‘உண்மையும் விவேகமுமுள்ள ஓர் ஊழியக்காரனுக்கு’ அதிகாரம் அளித்திருக்கிறார். (மத்தேயு 24:45) ஆகையால், சில விஷயங்கள் முழுமையாக தெளிவாக்கப்படவில்லை என்று நாம் மட்டுக்குமீறி கவலைப்படுவதற்கோ மனக்கலக்கம் அடைவதற்கோ காரணம் எதுவுமில்லை. மாறாக, நாம் யெகோவாவுக்காக பொறுமையுடன் காத்திருந்தால், தேவைப்படுகிறதை ‘ஏற்றவேளையில்’ அந்த உண்மையுள்ள ஊழியக்காரன் மூலம் அவர் அளிப்பார் என்று நம்பிக்கையோடு இருக்கலாம்.
5. பிரசங்கி 3:1-8-ஐ ஆழ்ந்து சிந்திப்பதால் உண்டாகும் பலன் என்ன?
5 28 வெவ்வேறான காரியங்களைப் பற்றி ஞானமுள்ள அரசன் சாலொமோன் பேசினார். அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ‘குறித்த காலமுண்டு.’ (பிரசங்கி 3:1-8) சாலொமோன் சொன்னதன் அர்த்தத்தையும் சம்பந்தங்களையும் புரிந்துகொள்வது, சில நடவடிக்கைகளுக்கு கடவுளுடைய நோக்கில் சரியான நேரத்தையும் தவறான நேரத்தையும் தீர்மானிக்க நமக்கு உதவும். (எபிரெயர் 5:14) நம்முடைய வாழ்க்கையை அதற்கிசைய அமைக்க அது நம்மை அனுமதிக்கும்.
“அழ ஒரு காலமுண்டு, நகைக்க ஒரு காலமுண்டு”
6, 7. (அ) மற்றவர்களுடைய நலனில் அக்கறை காட்டும் ஆட்களை இன்று எது ‘அழும்படி’ செய்கிறது? (ஆ) இந்த உலகம் அதன் மோசமான நிலைமையை மறைக்க எப்படி முயல்கிறது?
6 ‘அழ ஒரு காலமும் நகைக்க ஒரு காலமும்’ இருக்கிறபோதிலும், நகைக்க மட்டுமே எல்லாரும் விரும்புவார்கள். (பிரசங்கி 3:4) வாழ்க்கையில் அழுவது என்பது மாறி, அழுவதற்கே வாழ்க்கை என்ற ஓர் உலகில் நாம் வாழ்வது வருந்தத்தக்க விஷயம். கண்களையும் மனங்களையும் கசக்க வைக்கும் செய்திகளே செய்தித்தாள்களில் அதிக பக்கங்களை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. பள்ளியில் இளைஞர்கள் தங்கள் சக மாணவர்களை சுடுவதும், பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடமே தவறாக நடப்பதும், பயங்கரவாதிகள் அப்பாவிகளை கொன்று குவிப்பதும் முடமாக்குவதும், இவை போதாதென்று இயற்கை விபத்துகள் தன் பங்குக்கு மனிதரின் உயிர்களையும் உடைமைகளையும் நாசமாக்குவதுமான இவற்றை நாம் கேள்விப்படுகையில் நெஞ்சம் பதறுகிறோம். சாப்பாட்டை நாட்கணக்கில் கண்டிராத, எலும்பும் தோலுமாக காட்சியளிக்கும் இளம் பிள்ளைகளும், நிலையான ஓர் இடமின்றி அல்லல்படும் அகதிகளும் சின்னத் திரையில் நம் சிந்தைக்கு கொண்டுவரப்படுகிறார்கள். இன ஒழிப்பு, எய்ட்ஸ், கிருமி போர், எல் நீனோ போன்ற முந்நாளில் அறியப்படாத பதங்கள், இப்போது ஒவ்வொன்றும் அதனதன் போக்கில் நம் மனங்களிலும் இருதயங்களிலும் கிலியை உண்டுபண்ணுகின்றன.
7 துன்பங்களும் மனவேதனைகளும் நிறைந்ததே இன்றைய உலகம் என்பதில் சந்தேகமில்லை. இந்த நிலைமையின் வினைமைத் தன்மையை மறைப்பதற்கு பொழுதுபோக்குத் துறை மேற்பூச்சான, கீழ்த்தரமான, பெரும்பாலும் ஒழுக்கக்கேட்டுக்கும் வன்முறைக்கும் வழிநடத்தும் அம்சங்களையே அள்ளியிறைக்கிறது. இவை மற்றவர்கள் படும் துன்பத்தை நாம் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக அல்லது தவறாக திசைதிருப்புவதற்காக திட்டமிடப்பட்டவை. ஆனால், அப்படிப்பட்ட கிறுக்குத்தனமான, முட்டாள்தனமான நகைப்பை கொண்ட பொழுதுபோக்குகளால் கிடைக்கும் அல்ப சந்தோஷத்தை மெய்யான சந்தோஷத்தோடு குழப்பிக் கொள்ளக்கூடாது. கடவுளுடைய ஆவியின் கனிகளில் ஒன்றாகிய சந்தோஷம், சாத்தானின் உலகம் அளிக்கவே முடியாத ஒன்று.—கலாத்தியர் 5:22, 23; எபேசியர் 5:3, 4.
8. அழுவதற்கா சிரிப்பதற்கா, எதற்கு கிறிஸ்தவர்கள் இன்று முதலிடம் தரவேண்டும்? விளக்குங்கள்.
8 துயர்மிகு இவ்வுலக நிலைமையை உணர்ந்து, நாம் சிரிப்புக்கு அளவுக்கு மிஞ்சி இடமளிப்பதற்கான காலம் இதுவல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பொழுதுபோக்கிலே உல்லாசமாக இருப்பது, சிரித்தே காலத்தை ஓட்டுவது அல்லது ஆவிக்குரிய காரியங்களுக்கு மேலாக ‘வேடிக்கை விளையாட்டுகளுக்கு’ முதலிடம் கொடுப்பதற்கு இது காலமல்ல. (ஒப்பிடுக: பிரசங்கி 7:2-4) “இவ்வுலகத்தை அனுபவிக்கிறவர்கள் முழுவதுமாய் அதை அனுபவியாதவர்கள் போலவும் இருக்கவேண்டும்,” என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். ஏன்? ஏனெனில், “இந்த உலகத்தின் வேஷம் கடந்துபோகிறதே.” (1 கொரிந்தியர் 7:31) உண்மை கிறிஸ்தவர்கள் நாம் வாழும் காலங்களின் அவசர நிலையை முழுமையாக அறிந்தவர்களாகவே ஒவ்வொரு நாளும் வாழ்கிறார்கள்.—பிலிப்பியர் 4:8.
அழுகையின் மத்தியிலும் சந்தோஷம்!
9. ஜலப்பிரளயத்திற்கு முந்தின நாட்களில் நிலவிய வருந்தத்தக்க நிலைமை என்ன, இன்று நமக்கு அது எதை அர்த்தப்படுத்துகிறது?
9 உலகளாவிய ஜலப்பிரளயத்தின்போது வாழ்ந்த ஜனங்கள், வாழ்க்கையைக் கருத்துடன் நோக்கத் தவறினார்கள். ‘மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினதைக்’ குறித்து கொஞ்சமும் வருந்தாதவர்களாக தங்கள் அன்றாட வாழ்விலேயே மூழ்கியிருந்தார்கள். ‘பூமி கொடுமையினால் நிறைந்திருந்ததை’ மெத்தனமாக பார்த்துக்கொண்டிருந்தார்கள். (ஆதியாகமம் 6:5, 11) வருந்தத்தக்க அந்த நிலைமையை இயேசு குறிப்பிட்டு, அதைப் போன்று நம்முடைய நாளில் ஜனங்களின் போக்கு இருக்கப்போவதை முன்னறிவித்தார். அவர் இவ்வாறு எச்சரித்தார்: “ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டு போகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.”—மத்தேயு 24:38, 39.
10. ஆகாயின் நாட்களில் வாழ்ந்த இஸ்ரவேலர் யெகோவாவின் குறிக்கப்பட்ட காலத்திற்கு அக்கறையற்று இருந்ததை எவ்வாறு காட்டினார்கள்?
10 அந்த ஜலப்பிரளயத்திற்கு ஏறக்குறைய 1,850 ஆண்டுகளுக்குப் பின், ஆகாயின் நாட்களில், இஸ்ரவேலரில் பலர் அசட்டையுள்ளவர்களாக ஆவிக்குரிய காரியங்களில் மந்தமாக இருந்தார்கள். யெகோவாவின் அக்கறைகளுக்கே முதலிடம் கொடுக்கவேண்டிய காலத்தில் வாழ்கிறோம் என்பதை மறந்து, தங்கள் சொந்த அக்கறைகளுக்கே அதிக கவனம் செலுத்தினார்கள். நாம் வாசிப்பதாவது: “இந்த ஜனங்கள் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கு ஏற்றகாலம் இன்னும் வரவில்லை என்கிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். ஆனாலும் ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர் சொல்லுகிறார்: இந்த வீடு பாழாய்க் கிடக்கும்போது, நீங்கள் மச்சுப்பாவப்பட்ட உங்கள் வீடுகளில் குடியிருக்கும்படியான காலம் இதுவோ? இப்போதும் சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: உங்கள் வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள்.”—ஆகாய் 1:1-5.
11. என்ன கேள்விகளை நாம் பொருத்தமாய் நம்மைநாமே கேட்டுக்கொள்ளலாம்?
11 ஆகாயின் காலத்தில் இருந்த அந்த இஸ்ரவேலரைப்போல், இன்று யெகோவாவின் சாட்சிகளாகிய நாம் யெகோவாவுக்கு முன்பாக பொறுப்புகளையும் சிலாக்கியங்களையும் உடையோராக இருக்கிறோம். எனவே, நம் வழிகளை கருத்தாக சிந்தித்துப் பார்க்க வேண்டும், அவற்றை மனமுவந்து முழு அக்கறையுடனும் செய்ய வேண்டும். உலக நிலைமைகளுக்காகவும் கடவுளுடைய பெயரின்மீது அவை கொண்டுவரும் நிந்தனைக்காகவும் நாம் ‘அழுது’ புலம்புகிறோமா? கடவுள் இருப்பதை ஜனங்கள் மறுக்கையில் அல்லது அவருடைய நீதியுள்ள நியமங்களை அவர்கள் வெளிப்படையாய் மீறுகையில் நாம் மனவேதனை அடைகிறோமா? 2,500 ஆண்டுகளுக்குமுன், தரிசனத்தில் எசேக்கியேல் கண்ட அடையாளம் போடப்பட்ட ஆட்கள் உணர்ந்ததுபோல் நாம் உணருகிறோமா? அவர்களைக் குறித்து நாம் வாசிப்பதாவது: “கர்த்தர் அவனை [கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருக்கிற புருஷனை] நோக்கி: நீ எருசலேம் நகரம் எங்கும் உருவப்போய், அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு என்றார்.”—எசேக்கியேல் 9:4.
12. எசேக்கியேல் 9:5, 6-ல், இன்றைய ஜனங்களுக்கு என்ன உட்கருத்து அடங்கியுள்ளது?
12 அடித்து நொறுக்குவதற்கான ஆயுதங்களை ஆறு மனிதர் வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகளை நாம் வாசிக்கையில், இந்த விவரத்தின் உட்கருத்து இன்று நமக்கு தெளிவாகிறது: “நீங்கள் இவன் பின்னாலே நகரமெங்கும் உருவப்போய் வெட்டுங்கள்; உங்கள் கண் தப்பவிடாமலும், நீங்கள் இரங்காமலும், முதியோரையும், வாலிபரையும், கன்னிகைகளையும், குழந்தைகளையும், ஸ்திரீகளையும் சங்கரித்துக் கொன்றுபோடுங்கள்; அடையாளம் போடப்பட்டிருக்கிற ஒருவனையும் கிட்டாதிருங்கள், என் பரிசுத்த ஸ்தலத்திலே துவக்குங்கள்.” (எசேக்கியேல் 9:5, 6) அழுவதற்கான முக்கியமான காலம் இதுவே என்பதை நாம் தெரிந்துணர வேண்டும். விரைவில் நெருங்கிக்கொண்டிருக்கும் அந்தப் பெரிய உபத்திரவத்தினூடே நாம் உயிர்தப்பிப் பிழைப்பது இதன்மீதே சார்ந்திருக்கிறது.
13, 14. (அ) என்ன வகை ஆட்களை சந்தோஷமுள்ளவர்கள் என்று இயேசு கூறினார்? (ஆ) இந்த விவரிப்பு யெகோவாவின் சாட்சிகளுக்கு நன்றாய் பொருந்துகிறதென்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள் என்பதை விளக்குங்கள்.
13 நிச்சயமாகவே, உலக விவகாரங்களின் இந்த ஒழுக்கச் சீர்கேடான நிலைமைக்காக யெகோவாவின் ஊழியர்கள் ‘அழுவது,’ அவர்கள் சந்தோஷத்தை கெடுத்துப் போடுவதில்லை. உண்மையாக, அவர்களே பூமியில் மிக சந்தோஷமான ஜனங்கள்! இயேசு இவ்வாறு சொன்னபோது சந்தோஷத்திற்கான மூலாதாரத்தைக் கொடுத்தார்: “ஆவிக்குரிய தேவையைப் பற்றி உணர்வுள்ளவர்கள், . . . துக்கித்துப் புலம்புகிறவர்கள், . . . சாந்தகுணமுள்ளவர்கள், . . . நீதிக்கான பசி தாகமுள்ளவர்கள், . . . இரக்கமுள்ளவர்கள், . . . இருதயத்தில் தூய்மையானவர்கள், . . . சமாதானமாயிருப்பவர்கள், . . . நீதியினிமித்தம் துன்புறுத்தப்படுகிறவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்.” (மத்தேயு 5:3-10, NW) வேறெந்த மத அமைப்பைவிட ஒரு தொகுதியினராக யெகோவாவின் சாட்சிகளுக்கே இந்த விவரிப்பு நன்றாக பொருந்துகிறது என்பதைக் காட்டுவதற்கு அத்தாட்சி பெருமளவில் உள்ளது.
14 முக்கியமாக 1919-ல் மெய் வணக்கம் திரும்பப் புதுப்பிக்கப்பட்டதிலிருந்து யெகோவாவின் சந்தோஷமுள்ள ஜனங்கள் ‘நகைப்பதற்குக்’ காரணம் இருக்கிறது. பொ.ச.மு. ஆறாவது நூற்றாண்டில் பாபிலோனிலிருந்து வந்தவர்களின் பெரு மகிழ்ச்சியூட்டின அந்த அனுபவத்தில் ஆவிக்குரிய முறையில் அவர்கள் பங்குகொண்டார்கள்: “சீயோனின் சிறையிருப்பைக் கர்த்தர் திருப்பும்போது சொப்பனம் காண்கிறவர்கள்போல் இருந்தோம். அப்பொழுது நம்முடைய வாய் நகைப்பினாலும் நம்முடைய நாவு ஆனந்த சத்தத்தினாலும் நிறைந்திருந்தது; . . . கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; இதினிமித்தம் நாம் மகிழ்ந்திருக்கிறோம்.” (சங்கீதம் 126:1-3) எனினும், ஆவிக்குரிய நகைப்பின் மத்தியிலும், காலங்களின் வினைமையான தன்மையை யெகோவாவின் சாட்சிகள் ஞானமாய் மனதில் வைக்கிறார்கள். புதிய உலகம் மெய்மையாகி, பூமியின் குடியிருப்பாளர்கள் ‘உண்மையில் ஜீவனைப் பற்றிக்கொள்கையில்,’ அழுகையின் இடத்தை நகைப்பு நித்திய காலத்திற்கும் ஏற்கும் காலம் வந்திருக்கும்.—1 தீமோத்தேயு 6:19; வெளிப்படுத்துதல் 21:3, 4.
“தழுவ ஒருகாலம், விலக ஒருகாலம்”
15. நண்பர்களைத் தெரிந்தெடுப்பதில் யெகோவாவின் சாட்சிகள் ஏன் கவனமாக இருக்கிறார்கள்?
15 நண்பர்களை தேர்ந்தெடுக்கும்போது கிறிஸ்தவர்கள் நட்பில் யாரைத் ‘தழுவுவது’—அல்லது சேர்த்துக்கொள்வது? பவுலின் இந்த எச்சரிக்கையை அவர்கள் மனதில் வைக்கிறார்கள்: “மோசம்போகாதிருங்கள். கெட்ட கூட்டுறவு நல்லொழுக்கத்தைக் கெடுக்கும்.” (1 கொரிந்தியர் 15:33, NW) ஞானமுள்ள அரசன் சாலொமோன் இவ்வாறு குறிப்பிட்டார்: “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.”—நீதிமொழிகள் 13:20.
16, 17. நட்பையும் எதிர்பாலர் சந்திப்பையும் திருமணத்தையும் யெகோவாவின் சாட்சிகள் எவ்வாறு கருதுகிறார்கள், ஏன்?
16 யெகோவாவின்மீதும் அவருடைய நீதியின்மீதும் தங்களுக்கு இருக்கும் அதே அன்பை காட்டுபவர்களையே யெகோவாவின் ஊழியர்கள் தங்கள் நண்பர்களாக தெரிந்தெடுக்கிறார்கள். தங்கள் நண்பர்களின் தோழமையை அவர்கள் மதித்து மகிழ்கிறார்கள். அதேசமயம், இன்று சில நாடுகளில் பரவலாக இருந்துவரும் கட்டுப்பாடற்ற மிதமீறிய நெருங்கிய எதிர்பாலர் சந்திப்பை அவர்கள் ஞானமாய் தவிர்க்கிறார்கள். தீங்கற்ற மகிழ்ச்சிக்குரிய விளையாட்டு சந்திப்பாக அதில் உட்படுவதைப் பார்க்கிலும், மணம்செய்வதை நோக்கிய முக்கியமான ஒரு படியாக கருதுகிறார்கள். நிலையான திருமண உறவுக்குள் பிரவேசிப்பதற்கு, உடலிலும் மனதிலும் ஆவிக்குரிய விதத்திலும் ஆயத்தமாயிருக்கையில் மாத்திரமே எடுக்க வேண்டிய படியாகவும் அதைக் கருதுகிறார்கள். அதற்கு வேதப்பூர்வ தடைகள் ஏதுமின்றி இருக்கவும் பார்த்துக்கொள்கிறார்கள்.—1 கொரிந்தியர் 7:36.
17 எதிர்பாலர் சந்திப்பையும் திருமணத்தையும் பற்றி அவ்வாறு கருதுவது பழம்பாணி என சிலர் நினைக்கலாம். ஆனால், தங்கள் நண்பர்களைத் தெரிவுசெய்வதைப் பற்றிய அல்லது எதிர்பாலர் சந்திப்பையும் திருமணத்தையும் பற்றிய தங்கள் தீர்மானங்களில், சகவயதினரின் வற்புறுத்தலுக்கு யெகோவாவின் சாட்சிகள் இடங்கொடுப்பதில்லை. ‘ஞானமோ தன் செயல்களால் நியாயமென்று தீர்க்கப்படுகிறது’ என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். (மத்தேயு 11:19, NW) மிகச் சிறந்தது எதுவென்பது எப்போதும் யெகோவாவுக்கே தெரியும். ஆகையால், ‘கர்த்தருக்குட்பட்டவரான’ ஒருவரை மாத்திரமே மணம் செய்யும்படியான அவருடைய அறிவுரையை கருத்துடன் ஏற்கிறார்கள். (1 கொரிந்தியர் 7:39; 2 கொரிந்தியர் 6:14) மண உறவில் ஏதாவது சங்கடம் ஏற்பட்டால், தாங்கள் மணவிலக்கு செய்துகொள்ளலாம் அல்லது பிரிந்து வாழலாம் என்ற தவறான எண்ணத்துடன் அவசரப்பட்டு மணம் செய்வதைத் தவிர்க்கிறார்கள். திருமண உறுதிமொழிகளை ஒருமுறை எடுத்துவிட்ட பின்பு, பின்வரும் யெகோவாவின் சட்டம் பொருந்துகிறது என்பதை உணர்ந்து பொருத்தமான துணையைத் தேடுவதற்கு தேவைப்பட்ட நேரத்தைச் செலவிடுகிறார்கள்: “இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்.”—மத்தேயு 19:6; மாற்கு 10:9.
18. சந்தோஷம் பொங்கும் மணவாழ்வுக்கு தொடக்க நிலையாக எது இருக்க முடியும்?
18 திருமணம் வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கிற ஓர் ஒப்பந்தம், அதற்கு கவனமான திட்டமிடுதல் தகுந்ததாயிருக்கிறது. ஓர் ஆண் நியாயப்படி தன்னைத்தானே இவ்வாறு கேட்டுக்கொள்வான்: ‘அவள் உண்மையில் எனக்குத் தகுந்த பெண்ணா?’ அதே சமயத்தில் தன்னைத்தானே இவ்வாறு கேட்டுக்கொள்வதும் முக்கியமானது: ‘நான் உண்மையில் அவளுக்குப் பொருத்தமான ஆளா? அவளுடைய ஆவிக்குரிய தேவைகளை கவனித்துக்கொள்ளும் முதிர்ச்சியுள்ள ஒரு கிறிஸ்தவனா? ஆவிக்குரியபடி பலமுள்ளவர்களாயும், கடவுளுடைய அங்கீகாரத்திற்குத் தகுதியான உறுதியுள்ள மண இணைப்பை உண்டாக்குவதற்குத் திறமையுள்ளவர்களாயும் இருப்பதற்கு, எதிர்கால துணைவர்கள் இருவரும் யெகோவாவுக்கு முன்பாக கடமைப்பட்டவர்கள். சந்தோஷமான மண வாழ்க்கைக்கு முழுநேர ஊழியம் மிகச் சிறந்த தொடக்க நிலையாக உள்ளதென்று ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ தம்பதிகள் சாட்சிபகர முடியும். ஏனெனில் பெற்றுக்கொள்வதைவிட கொடுப்பதன்மீதே அதிக முக்கியத்துவம் வைக்கிறது.
19. கிறிஸ்தவர்கள் சிலர் மணம் செய்யாத நிலையில் இருப்பது ஏன்?
19 கிறிஸ்தவர்கள் சிலர் நற்செய்திக்காக மணம் செய்யாமல், ‘விலகியிருக்கிறார்கள்.’ (பிரசங்கி 3:5) வேறுசிலரோ பொருத்தமான ஒரு துணையைக் கவருவதற்கு ஆவிக்குரிய பிரகாரம் தாங்கள் தகுதியாயிருப்பதாக உணரும் வரையில், திருமணத்தைத் தள்ளிவைக்கிறார்கள். என்றபோதிலும், நெருங்கிய உறவுகளுக்காகவும் திருமணத்தினால் உண்டாகும் நன்மைகளுக்காகவும் ஏங்குவோரும், ஆனால் துணையை இன்னும் கண்டடையாதவர்களுமான மணமாகாத கிறிஸ்தவர்களையும் நாம் நினைவுகூருவோமாக. திருமணத்தை நாடித்தேடுவதில், அவர்கள் கடவுளுடைய நியமங்களை மீறுவதற்கு ஒத்துப்போக இடங்கொடாமல் இருப்பதிலேயே யெகோவா சந்தோஷப்படுகிறார் என்று நாம் நிச்சயமாயிருக்கலாம். மேலும், அவர்களுடைய உண்மை தவறாமையையும் நாம் மதித்துப் பாராட்டி, அவர்களுக்குத் தகுந்த ஊக்கமூட்டுதலையும் நாம் அளிப்பது நல்லது.
20. ஏன் மணத் துணைவர்களும்கூட சில சமயங்களில் ‘விலகியிருக்கிறார்கள்’?
20 மணமாகிய தம்பதிகளும்கூட அவ்வப்போது ‘விலகியிருக்க’ வேண்டுமா? ஒரு கருத்தில் அவ்வாறு இருக்கவேண்டுமென தெரிகிறது, ஏனெனில் பவுல் இவ்வாறு குறிப்பிட்டார்: “மேலும், சகோதரரே நான் சொல்லுகிறதென்னவெனில், இனிவரும் காலம் குறுகினதானபடியால், மனைவிகளுள்ளவர்கள் மனைவிகளில்லாதவர்கள் போலவும், . . . இருக்கவேண்டும்.” (1 கொரிந்தியர் 7:29) இதன்படி, மணவாழ்க்கையின் சந்தோஷங்களும் ஆசீர்வாதங்களும் சில சமயங்களில், தேவராஜ்ய பொறுப்புகளுக்கு இரண்டாவது இடத்தை ஏற்க வேண்டும். இந்தக் காரியத்தின்பேரில் சமநிலையான ஒரு கருத்து, திருமணத்தை பலன் குறைக்கச் செய்யாது, அதைப் பலப்படுத்தவே செய்யும். ஏனெனில், தங்கள் உறவை திடப்படுத்தும் முக்கிய மத்திபராக யெகோவா எப்போதும் இருக்க வேண்டும் என்று இரு துணைவர்களுக்கும் நினைப்பூட்ட இது உதவி செய்கிறது.—பிரசங்கி 4:12.
21. மணமான தம்பதிகள் பெற்றோராகும் காரியத்தில், நாம் ஏன் எந்தத் தீர்ப்பும் செய்யக்கூடாது?
21 கூடுதலாக, மணமாகிய தம்பதிகள் சிலர், கடவுளுக்குச் செய்யும் தங்கள் சேவையை தடங்கலின்றி தொடர்ந்து செய்வதற்காக பிள்ளை பெறாமல் இருக்கிறார்கள். இது அவர்கள் பங்கில் தியாகத்தைக் குறிக்கிறது, அதற்கேற்ற பலனை யெகோவா அவர்களுக்கு அளிப்பார். நற்செய்தியின் நிமித்தம் மணம் செய்யாதிருக்கும் நிலையை பைபிள் ஊக்குவிக்கிறபோதிலும், அதே காரணத்திற்காக பிள்ளைகள் இல்லாமல் இருப்பதன்பேரில் நேரடியான எந்தக் குறிப்பையும் பைபிள் சொல்கிறதில்லை. (மத்தேயு 19:10-12; 1 கொரிந்தியர் 7:38; மத்தேயு 24:19-ஐயும் லூக்கா 23:28-30-ஐயும் ஒப்பிடுக.) ஆகவே, மணமாகிய தம்பதிகளும் அவரவருடைய சூழ்நிலைமைகளுக்குத் தக்கபடியும், தங்கள் சொந்த மனச்சாட்சியின்படியும் தீர்மானிக்க வேண்டும். அந்தத் தீர்மானம் என்னவாக இருந்தாலும், மணமாகிய தம்பதிகளைக் குற்றங்குறை சொல்லக்கூடாது.
22. எதைத் தீர்மானிப்பது நமக்கு முக்கியம்?
22 ஆம், “ஒவ்வொன்றிற்கும் ஒரு குறிக்கப்பட்ட காலமுண்டு. வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு சமயமுண்டு.” “யுத்தத்திற்கும் ஒரு காலமுண்டு, சமாதானத்திற்கும் ஒரு காலமுண்டு.” (பிரசங்கி 3:1, 8, NW) இந்த இரண்டில் எதற்கு இப்போது காலம் என்பதை தீர்மானிப்பது ஏன் முக்கியம் என்பதை அடுத்தக் கட்டுரை விளக்கும்.
நீங்கள் விளக்கம் கூற முடியுமா?
◻ “ஒவ்வொன்றிற்கும் ஒரு குறிக்கப்பட்ட காலமுண்டு” என்பதை அறிவது நமக்கு ஏன் முக்கியம்?
◻ ஏன் இதுவே முக்கியமாக ‘அழுவதற்கான காலம்’?
◻ கிறிஸ்தவர்கள் ‘அழுகிற’போதிலும், ஏன் உண்மையில் சந்தோஷமாக இருக்கிறார்கள்?
◻ தற்போதைய காலம் ‘தழுவாது விலகியிருப்பதற்கான ஒரு காலம்’ என கருதுவதை கிறிஸ்தவர்கள் சிலர் எவ்வாறு காட்டுகிறார்கள்?
[பக்கம் 6, 7-ன் படங்கள்]
உலக நிலைமைகளின் காரணமாக கிறிஸ்தவர்கள் ‘அழுகிற’ போதிலும், . . .
. . . உண்மையில், அவர்களே இந்த உலகத்தில் மிக சந்தோஷமான ஜனங்கள்
[பக்கம் 8-ன் படம்]
முழுநேர ஊழியம், சந்தோஷமான திருமணத்திற்கு மிகச் சிறந்த ஓர் ஆதாரம்