உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w00 12/15 பக். 12-13
  • ஏன் கடவுளை சேவிக்கிறீர்கள்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஏன் கடவுளை சேவிக்கிறீர்கள்?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஆசீர்வாதங்களை யோசியுங்கள்
  • சபைக் கூட்டங்களும் கைகொடுக்கும்
  • சரியானதைச் செய்வதற்குப் போராடுதல்
    நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம்
  • நீங்கள் யெகோவாவின் கண்மணிகள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2021
  • இளம் வயதிலேயே யெகோவாவைச் சேவிக்கத் தீர்மானியுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
  • ‘தேவனே, என்னை ஆராய்ந்து பாரும்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
w00 12/15 பக். 12-13

ஏன் கடவுளை சேவிக்கிறீர்கள்?

கடவுள் பயமிக்க அரசர் ஒருவர் தன் மகனுக்கு, “உன் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி” என அறிவுரை கொடுத்தார். (1 நாளாகமம் 28:9) தம் ஊழியர்கள், நன்றியும் போற்றுதலும் நிறைந்த இதயத்தோடு தம்மை சேவிக்க வேண்டும் என்பதே யெகோவாவின் விருப்பம்.

யெகோவாவின் சாட்சிகளாகிய நாம், முதலில் பைபிள் சத்தியத்தைப் பற்றி கேள்விப்பட்ட சமயத்தை சற்று நினைவுபடுத்திப் பார்ப்போம். சத்தியம் நமக்கு விளக்கப்படுகையில் நம் இருதயம் நன்றியுணர்வால் பூரிப்படைந்ததை மறுக்க மாட்டோம். ஒவ்வொரு நாளும் கடவுளுடைய நோக்கத்தைப் பற்றி புதிய புதிய விஷயங்களை கற்றுக்கொண்டோம். யெகோவாவைப் பற்றி கற்றுக்கொள்ள கற்றுக்கொள்ள, நாம் அவரை “உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி”க்க வேண்டும் என்ற ஆவல் நமக்குள் பெருக்கெடுத்தது.

யெகோவாவின் சாட்சிகளாக ஆகும் அநேகர், தங்கள் வாழ்நாள் முழுவதும் கட்டுக்கடங்கா சந்தோஷத்துடன் யெகோவாவை சேவிக்கின்றனர். வேறு சிலரோ துவக்கத்தில் உற்சாகத்தைக் காட்டிய போதிலும் நாளாக நாளாக கடவுளை சேவிக்கும்படி தூண்டும் முக்கிய காரணங்களையே மறந்துவிடுகின்றனர். நீங்கள் எப்படி? உங்கள் நிலையும் அதுதான் என்றால் மனதை தளரவிடாதீர்கள். நீங்கள் தொலைத்துவிட்ட சந்தோஷத்தை நிச்சயம் அடையலாம். எப்படி?

ஆசீர்வாதங்களை யோசியுங்கள்

முதலாவது, ஒவ்வொரு நாளும் கடவுளிடமிருந்து என்னென்ன ஆசீர்வாதங்களை பெறுகிறீர்கள் என எண்ணிப் பாருங்கள். யெகோவா உங்களுக்கு கொடுத்திருக்கும் நல்ல நல்ல பரிசுகளை சிந்தியுங்கள். உதாரணமாக, மொழி, இனம், அந்தஸ்து என எதையும் பார்க்காமல் எல்லோருக்கும் தாராளமாக வாரி வழங்கியிருக்கும் அவருடைய எண்ணற்ற படைப்புகளை நினைத்துப் பாருங்கள். உயிர்வாழ்வதற்கு அத்தியாவசியமான உணவு முதலானவற்றைக் கொடுத்திருக்கிறார்; முடிந்தளவுக்கு ஆரோக்கியமாக இருக்க வழி செய்திருக்கிறார்; பைபிள் சத்தியங்களை போதித்திருக்கிறார்; எல்லாவற்றிற்கும் மேலாக, அவருடைய சொந்த குமாரனையே பரிசாக கொடுத்திருக்கிறார். இயேசுவின் மரணமே நீங்கள் சுத்தமுள்ள மனசாட்சியுடன் கடவுளை சேவிக்க வழிசெய்தது. (யோவான் 3:16; யாக்கோபு 1:17) கடவுள் செய்திருக்கும் நன்மைகளைப் பற்றி நீங்கள் சிந்திக்க சிந்திக்க, அவரிடம் உங்களுக்குள்ள போற்றுதல் அதிகரிக்கும். அவர் உங்களுக்கு செய்திருப்பவற்றிற்கான நன்றியுணர்வு உங்கள் இதயத்தில் பொங்குகையில் அவரை சேவிக்கும்படி அது உங்களை உந்துவிக்கும். அப்போது நீங்களும் சங்கீதக்காரனைப் போல் நிச்சயம் உணர்வீர்கள். “என் தேவனாகிய யெகோவாவே, நீர் எங்களுக்கு செய்திருக்கும் அதிசயமான செயல்களும் சிந்தனைகளும் ஏராளம்; உமக்கு நிகர் வேறொருவரும் இல்லை. . . . அவை எண்ண முடியாத அளவிற்கு அதிகமாயிருக்கின்றன” என அவர் எழுதினார்.​—⁠சங்கீதம் 40:⁠5, NW.

இப்படி எழுதியவர் தாவீது. அவர் கஷ்டமே இல்லாத சுகபோகமான வாழ்க்கை வாழவில்லை; அவருக்கு பிரச்சினைகள் மாறி மாறி வந்துகொண்டே இருந்தன. இளம் வயதில் தாவீது தன்னை கொல்லத் துடித்த பொல்லாத அரசனாகிய சவுலிடமிருந்தும் அவருடைய சேவகர்களிடமிருந்தும் தப்புவதற்காக தலைமறைவாகவே இங்குமங்குமாய் வசித்து வந்தார். (1 சாமுவேல் 23:7, 8, 19-23) தன்னுடைய அநேக பலவீனங்களை எதிர்த்து தாவீது எப்போதும் போராட வேண்டியிருந்தது. இதை அவரே 40-⁠ம் சங்கீதத்தில் ஒத்துக்கொண்டார்: “எண்ணிக்கைக்கு அடங்காத தீமைகள் என்னைச் சூழ்ந்துகொண்டது, என் அக்கிரமங்கள் என்னைத் தொடர்ந்துபிடித்தது, நான் நிமிர்ந்து பார்க்கக்கூடாதிருக்கிறது, அவைகள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறது.” (சங்கீதம் 40:12) ஆம், தாவீதை அநேக பிரச்சினைகள் அழுத்தின, ஆனால் அவர் முழுவதுமாக ஒடுங்கிப் போய்விடவில்லை. மாறாக, அவருக்கு எண்ணற்ற பிரச்சினைகள் இருந்தபோதிலும், யெகோவா தன்னை எப்படியெல்லாம் ஆசீர்வதித்து வந்தார் என்பதை எண்ணிப்பார்த்தார். அந்த மலையளவு ஆசீர்வாதங்களோடு தன் பிரச்சினைகளை ஒப்பிடுகையில் அவை கடுகளவே என்பதை தெரிந்துகொண்டார்.

அவ்வாறே, நீங்களும் பிரச்சினைகளால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தால், அல்லது தாழ்வு மனப்பான்மை உங்களை பாடாய்ப்படுத்தினால், தாவீதைப் போலவே நீங்கள் பெற்றுக்கொள்ளும் ஆசீர்வாதங்களை சற்று எண்ணிப்பார்ப்பது நல்லது. அந்த ஆசீர்வாதங்களுக்கான போற்றுதலே ஆரம்பத்தில் உங்களை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுக்க தூண்டியது என்பதில் சந்தேகமில்லை. அவற்றை மீண்டும் உங்கள் மனக்கண் முன் கொண்டுவருவது, நீங்கள் இழந்த சந்தோஷத்தை மீண்டும் பெறவும் நன்றி நிறைந்த இதயத்துடன் கடவுளை சேவிக்கவும் உங்களுக்கு உதவும்.

சபைக் கூட்டங்களும் கைகொடுக்கும்

யெகோவாவின் நற்குணங்களை நாம் தனிமையில் தியானிப்பதோடு உடன் கிறிஸ்தவர்களுடன் கூட்டுறவுகொள்வதும் அவசியம். யெகோவாவை சேவிப்பதில் தீர்மானமாயிருந்து, அவரை நேசிக்கும் ஆண்கள், பெண்கள், இளைஞர்களோடு தவறாமல் கூடிவருவது எவ்வளவு உற்சாகமளிக்கும்! அவர்களுடைய முன்மாதிரி யெகோவாவின் சேவையில் முழு ஆத்துமாவோடு சேவிக்க நம்மைத் தூண்டும். ராஜ்ய மன்றத்தில் நம்மைப் பார்ப்பது, அவர்களுக்கும் உற்சாகம் அளிக்கும்.

வேலை சக்கையாய் பிழிந்தெடுக்க, களைப்புடன் வீடு திரும்பிய பின்பு அல்லது சில பிரச்சினைகள், பலவீனங்கள் நம்மை சோர்வில் தள்ளியிருக்கும் போது கூட்டங்களில் கலந்துகொள்ள ராஜ்ய மன்றத்திற்கு போவது அவ்வளவு சுலபமல்ல என்பது உண்மைதான். ஆனால் அப்படிப்பட்ட சமயங்களில், உடன் கிறிஸ்தவர்களுடன் கூடிவரும்படியான கட்டளைக்கு கீழ்ப்படிவதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். நம் ‘சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்த வேண்டும்.’​—⁠1 கொரிந்தியர் 9:26, 27; எபிரெயர் 10:23-25.

கூட்டங்களுக்கு போக முடியாது என்ற எண்ணத்தை அடக்கி ஒடுக்கும் நிலை நமக்கு ஏற்பட்டால், உண்மையில் யெகோவாவிடம் நமக்கு அன்பு இல்லை என அர்த்தமாகுமா? நிச்சயம் இல்லை. ஏனெனில் கடந்தகாலங்களில் வாழ்ந்துவந்த அநேக முதிர்ந்த கிறிஸ்தவர்களுக்கும் இந்நிலை ஏற்பட்டது. அவர்கள் கடவுளிடம் அசைக்க முடியாத அன்பு வைத்திருந்தபோதிலும், அவருடைய சித்தத்தை செய்ய கடுமையாக போராட வேண்டி இருந்தது. (லூக்கா 13:24) அப்படிப்பட்டவர்களுள் ஒருவர் அப்போஸ்தலன் பவுல். அவர் தன்னுடைய எண்ணங்களை இவ்வாறு வெளிப்படையாக சொன்னார்: “என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மை செய்ய வேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை. ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்.” (ரோமர் 7:18, 19) “சுவிசேஷத்தை நான் பிரசங்கித்து வந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; . . . நான் உற்சாகமாய் அப்படிச் செய்தால் எனக்குப் பலன் உண்டு; உற்சாகமில்லாதவனாய்ச் செய்தாலும், உக்கிராண உத்தியோகம் எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறதே” என கொரிந்தியர்களிடம் சொன்னார்.​—⁠1 கொரிந்தியர் 9:16, 17.

நம்மில் அநேகருக்கு நன்மை செய்ய ஆசையிருந்தும் பாவமுள்ள மனச்சாய்வு அதைக் குலைத்துப்போடுகிறது; அப்படித்தான் பவுலும் கஷ்டப்பட்டார். இருப்பினும், அந்த மனச்சாய்வுகளை எதிர்த்து அவர் எப்போதும் கடினமாக போராடினார். அப்போராட்டங்களில் பெரும்பாலும் அவருக்கு வெற்றி கிடைத்தது. இதை அவர் சுயபலத்தால் சாதிக்கவில்லை என்பது நிச்சயம். ஏனென்றால், “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு” என அவர் எழுதினார். (பிலிப்பியர் 4:13) பவுலை பலப்படுத்திய யெகோவா தேவன், நன்மை செய்வதற்கான பலத்தை தந்து உங்களையும் நிச்சயம் பலப்படுத்துவார். ஆனால் உதவிக்காக நீங்கள் யெகோவாவிடம் விண்ணப்பிக்க வேண்டும். (பிலிப்பியர் 4:6, 7) ஆகையால், “விசுவாசத்திற்காக நீங்கள் கடுமையாகப் போராடுங்கள்,” அப்போது யெகோவா உங்களை ஆசீர்வதிப்பார்.​—⁠யூதா 3, NW.

நீங்கள் தன்னந்தனியாக போராட வேண்டியதில்லை. யெகோவாவின் சாட்சிகளின் சபைகளில், ‘விசுவாசத்திற்கான போராட்டத்தில்’ தொடர்ந்து ஈடுபட்டுவரும் முதிர்ந்த கிறிஸ்தவ மூப்பர்கள், உங்களுக்கு உதவ எப்போதும் தயாராயிருக்கின்றனர். அவர்களில் யாருடைய உதவியையாவது நீங்கள் நாடினால், உங்களை ‘தேற்றுவதற்கு’ அவர் முழு முயற்சி எடுப்பார். (1 தெசலோனிக்கேயர் 5:14) “காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும்” திகழ வேண்டுமென்பதே அவரது விருப்பம்.​—⁠ஏசாயா 32:⁠2.

“தேவன் அன்பாகவே இருக்கிறார்.” தம்முடைய ஊழியர்களும் அன்பால் தூண்டப்பட்டு தம்மை சேவிக்க வேண்டும் என விரும்புகிறார். (1 யோவான் 4:8) கடவுளுக்கான உங்களுடைய அன்பு மீண்டும் கொழுந்துவிட்டு எரிய, மேலே சொல்லப்பட்ட ஆலோசனைகள் அனைத்தையும் பின்பற்றுங்கள். அப்போது எதிர்கால சந்தோஷம் உங்களுடையதே.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்