ஆளும் குழுவிற்கும் சட்டப்பூர்வ நிறுவனத்திற்கும் உள்ள வித்தியாசம்
உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் பென்ஸில்வேனியாவின் வருடாந்தர கூட்டம் ஜனவரி 1885 முதற்கொண்டு நடந்து வந்திருக்கிறது. அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் கூட்டிச் சேர்க்கப்பட்டு வந்த 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சொல்லப்போனால் மற்ற சமயங்களிலும், இந்நிறுவனத்தின் இயக்குநர்களும் அதிகாரிகளும் பரலோக நம்பிக்கை உள்ளவர்களாகவே இருந்திருக்கின்றனர்.
ஒரேவொரு விதிவிலக்கு இருந்தது. 1940-ல், பூமிக்குரிய நம்பிக்கையுள்ள ‘வேறே ஆடுகளில்’ ஒருவரான ஹேடன் ஸி. கவிங்டன் என்பவர் சங்கத்தின் இயக்குநர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். (யோவான் 10:16) அச்சமயத்தில் அவரே சங்கத்தின் வழக்கறிஞராக செயலாற்றி வந்தார். 1942 முதல் 1945 வரை அவர் சங்கத்தின் துணைத் தலைவராகவும் செயலாற்றினார். பிறகு அவர், இயக்குநர் பதவியை ராஜினாமா செய்தார். ஏனெனில் பென்ஸில்வேனியா நிறுவனத்தின் அனைத்து இயக்குநர்களும் அதிகாரிகளும் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களாக இருப்பதே யெகோவாவின் சித்தமென அப்போது தோன்றியது. இயக்குநர் குழுவில் அவரது இடத்தை லைமன் ஏ. ஸ்விங்கில் நிரப்பினார். துணைத் தலைவராக ஃப்ரெட்ரிக் டபிள்யூ. ஃப்ரான்ஸ் ஓட்டெடுப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் பென்ஸில்வேனியாவின் அனைத்து இயக்குநர்களும் அதிகாரிகளும் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டுமென ஏன் யெகோவாவின் சாட்சிகள் நினைத்தார்கள்? ஏனெனில் அச்சமயத்தில், பென்ஸில்வேனியா நிறுவனத்தின் இயக்குநர் குழுவிற்கும் யெகோவாவின் சாட்சிகளது ஆளும் குழுவிற்கும் வித்தியாசம் இல்லையென கருதப்பட்டது. ஆளும் குழுவினர் எப்போதுமே அபிஷேகம் செய்யப்பட்டவர்களாகவே இருந்ததால் இயக்குநர் குழுவினரும் அவ்வாறே இருக்கும்படி எதிர்பார்க்கப்பட்டது.
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வருடாந்தர கூட்டம்
அக்டோபர் 2, 1944-ல் பிட்ஸ்பர்கில் நடைபெற்ற வருடாந்தர கூட்டத்தில் பென்ஸில்வேனியா நிறுவனத்தின் உறுப்பினர்கள் ஆறு தீர்மானங்களை எடுத்து தங்கள் சாசனத்தை திருத்தினர். முந்தைய சாசனத்தின்படி, சங்கத்தின் வேலைக்கு நன்கொடை வழங்கியோர் இயக்குநர் ஓட்டெடுப்பில் பங்கெடுக்க முடிந்தது. எந்தளவு அதிக நன்கொடை வழங்கினரோ அந்தளவு அதிக எண்ணிக்கையான ஓட்டுகள் போட முடிந்தது. ஆனால் மூன்றாம் திருத்தத்தின்படி இந்த ஏற்பாடு நீக்கப்பட்டது. அந்த வருடாந்தர கூட்டத்தைக் குறித்த ஓர் அறிக்கை இப்படிச் சொன்னது: “அதிகபட்சம் 500 பேர் சங்கத்தின் உறுப்பினர்களாக இருக்கலாம் . . . தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொருவரும் சங்கத்தின் முழுநேர ஊழியராகவோ யெகோவாவின் சாட்சிகளது ஒரு சபையின் பகுதிநேர ஊழியராகவோ இருக்க வேண்டும், கர்த்தரின் மனப்பான்மையைப் பிரதிபலிக்கவும் வேண்டும்.”
அது முதற்கொண்டு, யெகோவாவிற்கு முழுமையாக ஒப்புக்கொடுத்திருந்த நபர்களே ஓட்டுப்போட்டு சங்கத்தின் இயக்குநர்களை தேர்ந்தெடுக்க முடிந்தது. ராஜ்ய ஊழியத்திற்காக அவர்கள் அளித்த நன்கொடையின் அடிப்படையில் அவர்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்படவில்லை. படிப்படியான முன்னேற்றத்தைக் குறித்து ஏசாயா 60:17 முன்னறிவித்ததற்கு இசைவாக இது இருந்தது. அது வாசிப்பதாவது: “நான் வெண்கலத்துக்குப் பதிலாகப் பொன்னையும், இரும்புக்குப் பதிலாக வெள்ளியையும், மரங்களுக்குப் பதிலாக வெண்கலத்தையும், கற்களுக்குப் பதிலாக இரும்பையும் வரப்பண்ணி, உன் கண்காணிகளைச் சமாதானமுள்ளவர்களும், உன் தண்டற்காரரை [“பணி நியமிப்போரை,” NW] நீதியுள்ளவர்களுமாக்குவேன்.” இந்தத் தீர்க்கதரிசனம் ‘கண்காணிகளையும்,’ ‘பணி நியமிப்போரையும்’ குறிப்பிடுவதன் மூலம் யெகோவாவின் மக்களது அமைப்புமுறையில் முன்னேற்றங்கள் நிகழும் என்பதைச் சுட்டிக்காட்டியது.
அமைப்பை தேவாட்சிக்கு இசைவாக ஒழுங்கமைப்பதற்கான இந்த முக்கிய நடவடிக்கை, தானியேல் 8:14-ல் (தி.மொ.) குறிப்பிடப்பட்டுள்ள ‘இரண்டாயிரத்து முந்நூறு இராப்பகலின்’ முடிவில் எடுக்கப்பட்டது. அச்சமயத்தில் ‘பரிசுத்த ஸ்தலம் அதற்குரிய சரியான நிலைமைக்கு வந்தது.’
1944-ல் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வருடாந்தர கூட்டம் நடைபெற்ற பின்னும் ஒரு முக்கிய கேள்வி பதிலளிக்கப்படாமல் இருந்தது. அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் அடங்கிய ஆளும் குழுவிற்கும் பென்ஸில்வேனியா நிறுவனத்தின் இயக்குநர் குழுவிற்கும் வித்தியாசம் இல்லையென கருதப்பட்டதால், இயக்குநர் குழுவில் ஏழு பேர் இருந்தது போல் ஆளும் குழுவிலும் ஏழு பேர் மட்டுமே இருக்க வேண்டுமா? மேலும், நிறுவனத்தின் உறுப்பினர்களே இயக்குநர்களை ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்ததால், ஒவ்வொரு வருடாந்தர கூட்டத்தின்போதும் அவர்கள் ஆளும் குழுவின் அங்கத்தினர்களையா தேர்ந்தெடுத்தார்கள்? உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் பென்ஸில்வேனியாவின் இயக்குநர்களும் அதிகாரிகளும், ஆளும் குழுவின் அங்கத்தினர்களும் ஒன்றுதானா, அல்லது அவர்கள் வித்தியாசப்பட்டவர்களா?
மறக்கமுடியாத மற்றொரு வருடாந்தர கூட்டம்
அக்டோபர் 1, 1971-ல் நடைபெற்ற வருடாந்தர கூட்டத்தில் மேற்கண்ட கேள்விகளுக்குப் பதில் கிடைத்தது. உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் பென்ஸில்வேனியா தோன்றுவதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை’ வகுப்பாரின் ஆளும் குழு தோன்றிவிட்டதாக பேச்சாளர்களில் ஒருவர் அன்று குறிப்பிட்டார். (மத்தேயு 24:45-47, NW) பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளன்று ஆளும் குழு ஸ்தாபிக்கப்பட்டது. அப்படியென்றால் பென்ஸில்வேனியா நிறுவனம் அமைக்கப்படுவதற்கு 18 நூற்றாண்டுகளுக்கும் முன்னதாகவே தோன்றிவிட்டது. ஏழு பேர் அல்ல, ஆனால் 12 அப்போஸ்தலர்களே முதன்முதலில் ஆளும் குழுவில் இருந்தனர். பிற்பாடு இந்த எண்ணிக்கையும் அதிகரித்தது. ஏனெனில் ‘எருசலேமில் அப்போஸ்தலர்களும் மூப்பர்களும்’ தலைமை வகித்தனர்.—அப்போஸ்தலர் 15:2.
உவாட்ச் டவர் சொஸைட்டியின் உறுப்பினர்கள் அபிஷேகம் செய்யப்பட்ட ஆளும் குழு அங்கத்தினர்களை ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்க முடியாது என அதே பேச்சாளர் 1971-ல் சொன்னார். ஏன்? “ஏனெனில் ‘அடிமை’ வகுப்பாரின் ஆளும் குழு எந்த மனிதனாலும் நியமிக்கப்படுவது இல்லை. அது . . . உண்மையான கிறிஸ்தவ சபையின் தலைவரும் கர்த்தரும் ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை’ வகுப்பாரின் எஜமானருமான இயேசு கிறிஸ்துவால் நியமிக்கப்படுகிறது.” ஆகவே ஆளும் குழுவின் அங்கத்தினர்களை எவ்வித சட்டப்பூர்வ நிறுவனத்தின் உறுப்பினர்களும் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்க முடியாது என்பது தெள்ளத்தெளிவாகிறது.
அதன்பின் இந்த மிக முக்கிய குறிப்பை பேச்சாளர் தெரிவித்தார்: “சங்கத்தின் இயக்குநர் குழுவில் தலைவர், துணைத் தலைவர், செயலர்-பொருளாளர், துணை செயலர்-பொருளாளர் போன்ற அதிகாரிகள் உள்ளனர். ஆனால் ஆளும் குழுவிலோ எந்த அதிகாரியும் இல்லை, சேர்மேன் மட்டுமே உண்டு.” பல ஆண்டுகளாக, பென்ஸில்வேனியா நிறுவனத்தின் தலைவர் ஆளும் குழுவிலும் தலைமை ஸ்தானம் வகித்தார். ஆனால் இனி அப்படி இருக்காது. ஆளும் குழுவின் அங்கத்தினர்கள் அனுபவம், திறமை போன்றவற்றில் சரிசமமாக இல்லாவிட்டாலும் பொறுப்பில் சரிசமமாகவே இருப்பர். பேச்சாளர் தொடர்ந்து சொன்னார்: “இதுமுதல், ஆளும் குழுவின் அங்கத்தினர் எவர் வேண்டுமானாலும் சேர்மேனாக இருக்கலாம். அவரே சங்கத்தின் . . . தலைவராகவும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. . . . ஆளும் குழுவினர் சுழல் முறையில் சேர்மேன் பொறுப்பு வகிப்பர்.”
1971-ல் நடைபெற்ற மறக்கமுடியாத அந்த வருடாந்தர கூட்டத்தில், ஆளும் குழுவின் அபிஷேகம் செய்யப்பட்ட அங்கத்தினர்களுக்கும் பென்ஸில்வேனியா நிறுவனத்தின் இயக்குநர்களுக்கும் உள்ள வித்தியாசம் தெளிவாக எடுத்துக் காட்டப்பட்டது. இருந்தாலும் ஆளும் குழுவின் அங்கத்தினர்கள் சங்கத்தின் இயக்குநர்களாகவும் அதிகாரிகளாகவும் தொடர்ந்து பணியாற்றினர். ஆனால் இப்போது எழும் கேள்வி: உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் பென்ஸில்வேனியாவின் இயக்குநர்கள், ஆளும் குழுவின் அங்கத்தினர்களாகத்தான் இருக்க வேண்டும் என்பதற்கு வேதப்பூர்வ காரணம் ஏதேனும் உண்டா?
இல்லை. யெகோவாவின் சாட்சிகள் பென்ஸில்வேனியா நிறுவனத்தை மட்டுமே பயன்படுத்துவதில்லை. மற்ற சட்டப்பூர்வ ஸ்தாபனங்களையும் பயன்படுத்துகின்றனர். அதில் ஒன்று, உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் நியூ யார்க், இன்கார்ப்பரேட்டட். இது ஐக்கிய மாகாணங்களில் ராஜ்ய வேலையை நிறைவேற்ற உதவுகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குநர்களும் அதிகாரிகளும் பெரும்பாலும் ‘வேறே ஆடுகளை’ சேர்ந்தவர்கள் என்றாலும் அது யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெற்றிருப்பது தெளிவாக தெரிகிறது. பிரிட்டனில், த இன்டர்நேஷனல் பைபிள் ஸ்டூடன்ட்ஸ் அசோசியேஷன் பயன்படுத்தப்படுகிறது. ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிப்பதற்காக வேறு நாடுகளில் மற்ற சட்டப்பூர்வ நிறுவனங்கள் உபயோகிக்கப்படுகின்றன. அவை அனைத்தும் ஒன்றுக்கொன்று ஒத்திசைந்து, பூமியெங்கும் நற்செய்தியை அறிவிப்பதில் பங்காற்றுகின்றன. அவை எங்கு ஸ்தாபிக்கப்பட்டிருந்தாலும் சரி, அவற்றின் இயக்குநர்களும் அதிகாரிகளும் யாராக இருந்தாலும் சரி, தேவாட்சியால் வழிநடத்தப்பட்டு ஆளும் குழுவால் பயன்படுத்தப்படுவதில் சந்தேகமில்லை. ஆகவே ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிப்பதற்காக நியமிக்கப்படும் பணிகளை இப்படிப்பட்ட நிறுவனங்கள் நிறைவேற்றுகின்றன.
சட்டப்பூர்வ நிறுவனங்கள் நமக்கு அநேக நன்மைகளை அளிக்கின்றன. உள்ளூர் சட்டங்களுக்கும் தேசிய சட்டதிட்டங்களுக்கும் கீழ்ப்பட்டிருக்க உதவுகின்றன. இதையே கடவுளுடைய வார்த்தையும் எதிர்பார்க்கிறது. (எரேமியா 32:11; ரோமர் 13:1) பைபிள்கள், புத்தகங்கள், பத்திரிகைகள், சிற்றேடுகள் போன்ற பல பிரசுரங்களின் மூலம் ராஜ்ய செய்தியைப் பரப்ப சட்டப்பூர்வ நிறுவனங்கள் நமக்குக் கைகொடுக்கின்றன. அதுமட்டுமல்ல, சொத்துரிமை, நிவாரணப் பணிகள், மாநாட்டு மன்றங்களுக்கான ஒப்பந்தங்கள் போன்ற பல விஷயங்களை சட்டப்பூர்வமாக கையாளவும் இந்த நிறுவனங்கள் கருவியாக செயல்படுகின்றன. இப்படிப்பட்ட சட்டப்பூர்வ ஸ்தாபனங்கள் ஆற்றும் பணிக்காக நன்றி தெரிவிக்கிறோம்.
யெகோவாவின் பெயருக்கு முதலிடம்
1944-ல், உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் பென்ஸில்வேனியாவின் சாசனத்தில், பிரிவு இரண்டு திருத்தியமைக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் குறிக்கோளை வலியுறுத்துவதற்காக அது திருத்தப்பட்டது. “இயேசு கிறிஸ்துவின் தலைமையில் கடவுளுடைய ராஜ்ய நற்செய்தியை எல்லா தேசத்தாருக்கும் பிரசங்கித்து, சர்வவல்லமையுள்ள கடவுளாகிய யெகோவாவின் வார்த்தைக்கும் அவரது நாமத்திற்கும் பேரரசுரிமைக்கும் சாட்சி பகருவதே” சங்கத்தின் முக்கிய நோக்கம் என சாசனம் குறிப்பிட்டது.
1926 முதற்கொண்டு ‘உண்மையுள்ள அடிமை’ வகுப்பு யெகோவாவின் பெயருக்கு முதலிடம் கொடுத்திருக்கிறது. அதில் குறிப்பிடத்தக்க வருடம் 1931, ஏனெனில் பைபிள் மாணாக்கர்கள் அவ்வருடத்திலேயே யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரை ஏற்றனர். (ஏசாயா 43:10-12) கடவுளுடைய பெயரை சிறப்பித்துக் காட்டியிருக்கும் சங்கத்தின் ஆங்கில புத்தகங்கள் பின்வருமாறு: யெகோவா (1934), “உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக” (1961), “நான் யெகோவா என்று தேசத்தார் அறிந்துகொள்வார்கள்”—எப்படி? (1971).
எல்லாவற்றைக் காட்டிலும் பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை விசேஷமாக குறிப்பிட வேண்டும். இது 1960-ல் முழுமையாக ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்டது. எபிரெய வேதாகமத்தில் டெட்ராகிராமட்டன் எங்கெல்லாம் தோன்றுகிறதோ அங்கெல்லாம் யெகோவாவின் பெயர் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்திலும் கடவுளுடைய பெயரைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை உன்னிப்பான ஆய்வு உணர்த்தியதால் அதில் 237 இடங்களில் இப்பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘அடிமை’ வகுப்பாரும் ஆளும் குழுவினரும் யெகோவாவின் பெயரை பூமியெங்கும் அறிவிப்பதற்காக பிரசுர வசதிகளையும் சட்டப்பூர்வ ஸ்தாபனங்களையும் பல்வேறு வழிகளில் பயன்படுத்தியிருக்கின்றனர். இதை யெகோவா அனுமதித்திருப்பதற்காக எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்!
கடவுளுடைய வார்த்தையை விநியோகிப்பதில் முன்னேற்றம்
யெகோவாவின் மக்கள் அவரது பெயருக்கு இடைவிடாமல் சாட்சி அளித்திருக்கின்றனர். லட்சக்கணக்கான பைபிள்களையும் பைபிள் சார்ந்த பிரசுரங்களையும் பிரசுரித்து விநியோகிப்பதன் மூலம் அவரது வார்த்தையை உயர்த்திக் காட்டியிருக்கின்றனர். 1900-களின் ஆரம்பப் பகுதியில் உவாட்ச் டவர் சொஸைட்டி, பெஞ்சமின் வில்சனின் த எம்ஃபடிக் டையக்ளாட் பைபிளின் பதிப்புரிமையை பெற்றது. அது கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் கிரேக்க-ஆங்கில இன்டர்லீனியர் பதிப்பாகும். பைபிள் மாணாக்கரது கிங் ஜேம்ஸ் வர்ஷன் பதிப்பை சங்கம் பிரசுரித்தது. இது 500 பக்க பிற்சேர்க்கையைக் கொண்டிருந்தது. 1942-ல் கிங் ஜேம்ஸ் வர்ஷன் பைபிளை ஓரக்குறிப்புகளுடன் பிரசுரித்தது. பிறகு 1944-ல், கடவுளுடைய பெயரைப் பயன்படுத்தும் அமெரிக்க ஸ்டான்டர்டு வர்ஷன் பைபிளின் 1901-ஆம் ஆண்டு பதிப்பை அச்சிட ஆரம்பித்தது. யெகோவாவின் பெயரைப் பயன்படுத்திய மற்றொரு பைபிள், ஸ்டீஃபன் டி. பையிங்டனின் த பைபிள் இன் லிவிங் இங்லிஷ். இதை சங்கம் 1972-ல் பிரசுரித்தது.
இந்த எல்லா பைபிள் மொழிபெயர்ப்புகளையும் அச்சிட்டு விநியோகிப்பதில் யெகோவாவின் சாட்சிகளது சட்டப்பூர்வ ஸ்தாபனங்கள் உதவி அளித்திருக்கின்றன. உவாட்ச் டவர் சொஸைட்டிக்கும் அபிஷேகம் செய்யப்பட்டவர்களின் தொகுதியாகிய புதிய உலக பைபிள் மொழிபெயர்ப்பு குழுவிற்கும் இருந்துவந்துள்ள நெருங்கிய ஒத்துழைப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது. இப்போதுவரை முழுமையாகவோ பகுதியாகவோ இந்த புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளின் 10,64,00,000 பிரதிகள் 38 மொழிகளில் அச்சிடப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது. உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் பென்ஸில்வேனியா உண்மையிலேயே ஒரு பைபிள் சங்கம்!
‘உண்மையுள்ள அடிமை’ வகுப்பு ‘எஜமானின் எல்லா ஆஸ்திகளையும் மேற்பார்வையிட நியமிக்கப்பட்டிருக்கிறது.’ நியூ யார்க் மாகாணத்திலுள்ள தலைமை அலுவலகமும் உலகெங்கும் இயங்கிவரும் 110 கிளை அலுவலகங்களும் இந்த ஆஸ்திகளில் அடங்கும். அடிமை வகுப்பாரின் அங்கத்தினர்கள், தங்கள் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டவற்றை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு கணக்கு கொடுக்க வேண்டும் என்பதை அறிந்திருக்கிறார்கள். (மத்தேயு 25:14-30, NW) இருந்தாலும், சட்டப்பூர்வ மற்றும் நிர்வாகப் பொறுப்புகளை நிறைவேற்ற ‘வேறே ஆடுகளை’ சேர்ந்த தகுதியுள்ள கண்காணிகளை அனுமதிக்க இது அவர்களுக்கு தடையாக இருப்பதில்லை. சொல்லப்போனால், ஆளும் குழுவின் அங்கத்தினர்கள் ‘ஜெபம்பண்ணுவதற்கும் தேவவசனத்தைப் போதிப்பதற்கும்’ அதிக நேரத்தை ஒதுக்க இது உதவுகிறது.—அப்போஸ்தலர் 6:4.
உலக நிலைமைகள் அனுமதிக்கும்வரை, ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையை’ அடையாளப்படுத்தும் ஆளும் குழு சட்டப்பூர்வ ஸ்தாபனங்களை பயன்படுத்தும். இவை மிகுந்த பயனளிக்கின்றன, ஆனால் இவை இல்லையென்றால் ஒன்றும் நடக்காது என்றில்லை. ஓர் அரசாங்கம் இப்படிப்பட்ட சட்டப்பூர்வ ஸ்தாபனத்தை கலைத்துவிட்டாலும், பிரசங்க வேலை தொடர்ந்து நடைபெறும். இப்போதும்கூட தடையுத்தரவு போடப்பட்டுள்ள நாடுகளில், சட்டப்பூர்வ ஸ்தாபனங்கள் இல்லாமலேயே ராஜ்ய செய்தி பிரசங்கிக்கப்படுகிறது, சீஷர்கள் உருவாக்கப்படுகிறார்கள், தேவராஜ்ய அதிகரிப்பு தொடர்கிறது. ஏனெனில், யெகோவாவின் சாட்சிகள் நடுகிறார்கள், நீர் பாய்ச்சுகிறார்கள், ‘தேவனும் விளையச்செய்கிறார்.’—1 கொரிந்தியர் 3:6, 7.
எதிர்காலத்தில் யெகோவா தம் மக்களின் ஆவிக்குரிய தேவைகளையும் பொருளாதார தேவைகளையும் கவனித்துக்கொள்வார் என உறுதியாக நம்புகிறோம். அவரும் அவரது குமாரன் இயேசு கிறிஸ்துவும், ராஜ்ய பிரசங்க வேலையை முழுமையாக நிறைவேற்றி முடிப்பதற்கான வழிநடத்துதலையும் ஆதரவையும் தொடர்ந்து பரலோகத்திலிருந்து அருளுவர். கடவுளுடைய ஊழியர்களாக நாம் எதை நிறைவேற்றினாலும் அது நம் ‘பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, யெகோவாவினுடைய ஆவியினாலேயே’ என்பதில் சந்தேகமில்லை. (சகரியா 4:6) ஆகவே, யெகோவா தரும் பலத்தினால் இந்த முடிவு காலத்தில் அவர் நமக்கு தந்திருக்கும் வேலையை நிறைவேற்றி முடிக்க முடியும் என்பதை அறிந்து அவர் உதவிக்காக ஜெபிக்கிறோம்!