வாழ்க்கை சரிதை
எங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம் சேவை செய்தேன்
ஜேம்ஸ் பி. பெர்ரீ சொன்னபடி
ஐக்கிய மாகாணங்களில் ஏற்பட்ட பொருளாதார மந்தம் நிறைய பேருடைய வாழ்க்கையைப் பாழாக்கிய காலம் அது. ஐரோப்பா எங்கும் போர் அச்சுறுத்தல் தலைதூக்கியிருந்தது. இந்தச் சமயத்தில், அதாவது 1939-ம் வருஷத்தில், நானும் என் தம்பி பென்னட்டும் மிஸ்ஸிஸிபியிலிருந்து டெக்ஸஸிலிருந்த ஹியூஸ்டனுக்கு வேலை தேடி புறப்பட்டோம்.
கோடைகால முடிவில் ஒருநாள், ஸ்தம்பிக்க வைக்கும் அறிவிப்பு கரகரவென ரேடியோவில் கேட்டது. ஹிட்லரின் இராணுவம் போலந்துக்குள் நுழைந்துவிட்டது என்பதே அந்தச் செய்தி. “அர்மகெதோன் ஆரம்பித்துவிட்டது!” என என் தம்பி பரபரப்புடன் கூறினான். உடனடியாக நாங்கள் இருவரும் வேலையை ராஜினாமா செய்தோம். பக்கத்திலிருந்த ராஜ்ய மன்றத்தில் நடந்த கூட்டத்தில் முதன்முறையாக கலந்துகொண்டோம். ஏன் ராஜ்ய மன்றத்திற்கு சென்றோம் தெரியுமா? நடந்ததை ஆரம்பத்திலிருந்து சொல்கிறேன்.
நான் 1915-ல் மிஸ்ஸிஸிபியிலுள்ள ஹீப்ரனில் பிறந்தேன். நாட்டுப்புற பண்ணைதான் எங்கள் குடியிருப்பு. அப்போது பைபிள் மாணாக்கர்கள் என அழைக்கப்பட்ட யெகோவாவின் சாட்சிகள் வருடா வருடம் எங்கள் பகுதிக்கு வருவார்கள்; யாராவது ஒருவருடைய வீட்டில் பைபிள் பேச்சு கொடுப்பார்கள். அதனால் அவர்களிடமிருந்து என் பெற்றோருக்கு எக்கச்சக்கமான பைபிள் பிரசுரங்கள் கிடைத்தன. நரகம் அக்கினிமயமான இடமல்ல, ஆத்துமா அழியும், நீதிமான்கள் என்றென்றும் பூமியில் வாழ்வார்கள் என்ற விஷயங்கள் அவற்றில் இருந்தன. நானும் பென்னட்டும் அவற்றை மனதார நம்பினோம். எங்களுக்குக் கற்றுக்கொள்ள இன்னும் எத்தனையோ விஷயங்கள் அந்தப் புத்தகங்களில் புதைந்துகிடந்தன. என் பள்ளி படிப்பு முடிந்த கொஞ்ச நாட்களுக்கு அப்புறம் நானும் என் தம்பியும் வேலை தேடி டெக்ஸஸுக்குப் போனோம்.
ஒருவழியாக ராஜ்ய மன்றத்தில் சாட்சிகளைக் கண்டுபிடித்தோம்; நாங்கள் பயனியர்களா என அவர்கள் எங்களிடம் கேட்டார்கள். யெகோவாவின் சாட்சிகளுடைய முழுநேர ஊழியர்தான் பயனியர் என்பது எங்களுக்குத் தெரியாது. பிரசங்கிக்க விரும்புகிறீர்களா என எங்களிடம் கேட்டார்கள். “ஓ, தாராளமாக!” என பதிலளித்தோம். எப்படி பிரசங்கிக்க வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுக்க எங்களுடன் யாரையாவது அனுப்புவார்கள் என நினைத்தோம். கடைசியில் பார்த்தால், ஒரு வரைபடத்தை கையில் கொடுத்து, “இங்கு ஊழியம் செய்யுங்க!” என அனுப்பி வைத்தார்கள். சொல்லப்போனால், எப்படி பிரசங்கிப்பது என்றே எனக்கும் பென்னட்டுக்கும் தெரியாது; யாராவது எதையாவது கேட்டு தர்மசங்கடமான நிலையில் மாட்டிக்கொண்டால்?—ஐயோ, அதை எங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. உடனே அந்த வரைபடத்தை சபைக்கு போஸ்ட் செய்துவிட்டு மிஸ்ஸிஸிபிக்கே திரும்பிவிட்டோம்!
பைபிள் சத்தியத்துடன் ஒன்றிவிடுதல்
வீடு திரும்பியதும், நாள் தவறாமல் ஒரு வருஷத்திற்கு சாட்சிகளின் பிரசுரங்களை வாசித்து வந்தோம். எங்கள் வீட்டிலோ மின்சார வசதியில்லை. எனவே இரவு நேரத்தில் நெருப்பை மூட்டி அந்த வெளிச்சத்தில் வாசித்தோம். அந்தக் காலத்தில், யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளையும் ஒதுக்குப் புறத்தில் வசித்த சாட்சிகளையும் ஆவிக்குரிய விஷயங்களில் பலப்படுத்த பயணக் கண்காணிகள் வருவார்கள். அவர்களில் ஒருவர் எங்கள் சபையை சந்திக்க வந்தார். அவருடைய பெயர் டெட் கிளைன். அவர் என்னுடனும் பென்னட்டுடனும் பிரசங்க ஊழியத்தில் கலந்துகொண்டார்; பெரும்பாலும் எங்கள் இரண்டு பேரையுமே ஒன்றாக சேர்த்து ஊழியத்திற்கு அழைத்துச் செல்வார். பயனியர் ஊழியத்தின் நெளிவு சுளிவுகளைப் பற்றி விலாவாரியாக அவர் எங்களுக்கு விவரித்தார்.
அவரோடு சேர்ந்து ஊழியம் செய்தது, கடவுளுக்கு இன்னும் அதிக சேவை செய்ய வேண்டும் என எங்களை யோசிக்கச் செய்தது. ஆகவே 1940, ஏப்ரல் 18-ம் தேதி எனக்கும் பென்னட்டுக்கும் எங்கள் தங்கை வெல்வாவுக்கும் சகோதரர் கிளைன் முழுக்காட்டுதல் கொடுத்தார். நாங்கள் முழுக்காட்டுதல் எடுப்பதைப் பார்க்க எங்களுடைய அப்பா அம்மா வந்திருந்தார்கள், நாங்கள் எடுத்த தீர்மானத்தில் அவர்களுக்கு அதிக சந்தோஷம். கிட்டத்தட்ட இரண்டு வருஷம் கழித்து, அவர்களும் முழுக்காட்டுதல் எடுத்தார்கள். அவர்கள் இருவரும் சாகும்வரை கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருந்தார்கள். அப்பா 1956-லும் அம்மா 1975-லும் காலமானார்கள்.
என்னால் பயனியர் ஊழியம் செய்ய முடியுமா என சகோதரர் கிளைன் கேட்டார். எனக்கு செய்ய ஆசைதான் ஆனால், கையில் காசில்லை, உடுக்க உடையில்லை, எதுவுமே என்னிடமில்லை என அவரிடம் சொன்னேன். “அதைப் பற்றி கவலைப்படாதே, அதையெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றார். சொன்னபடியே செய்தார். முதலில் அவர் என் பயனியர் விண்ணப்பத்தை அனுப்பி வைத்தார். பின்னர் என்னை சுமார் 300 கிலோமீட்டர் தூரத்திலிருந்த நியூ ஆர்லியன்ஸுக்கு அழைத்துச் சென்று, ராஜ்ய மன்றத்திற்கு மேல் கட்டப்பட்டிருந்த சில அருமையான அப்பார்ட்மென்டுகளைக் காட்டினார். அவை பயனியர்களுக்காக கட்டப்பட்டிருந்தன. சீக்கிரத்தில் அங்கு குடியேறி பயனியர் ஊழியத்தை ஆரம்பித்தேன். நியூ ஆர்லியன்ஸிலிருந்த சாட்சிகள் பயனியர்களுக்கு உடை, பணம், உணவு முதலியவற்றைக் கொடுத்து உதவினார்கள். பகல் நேரத்தில் சகோதரர்கள் எங்களுக்காக சாப்பாடு கொண்டு வந்தார்கள்; அவற்றை கதவருகில் அல்லது ஃபிரிஜ்ஜில்கூட வைத்துவிட்டு போனார்கள். அருகில் ஒரு சகோதரர் ஹோட்டல் வைத்திருந்தார். அவர் தினமும் கடை அடைப்பதற்கு முன் அந்த நாள் மீந்திருந்த மாமிசம், பிரெட், கொத்துக்கறி ஸ்டியூ, ஏதாவது ஸ்வீட் வகை போன்ற ‘ஃபிரஷ்ஷான’ உணவுப் பொருட்களைக் கொண்டு போக சொன்னார்.
கலக கும்பலை சமாளித்தல்
கொஞ்ச நாட்களுக்குப் பிறகு மிஸ்ஸிஸிபி மாகாணத்திலுள்ள ஜாக்ஸன் என்ற இடத்தில் ஊழியம் செய்ய நியமித்தார்கள். என்னையும் என்னுடன் ஊழியம் செய்த இளம் பயனியரையும் கலக கும்பலை சேர்ந்த சிலர் தாக்கினார்கள். அந்தக் கும்பலுக்கு உள்ளூர் போலீஸ்காரர்கள்தான் உடந்தையாக இருந்திருப்பார்கள் போல தோன்றியது! அடுத்து, மிஸ்ஸிஸிபி மாகாணத்திலுள்ள கொலம்பஸில் ஊழியம் செய்ய போனோம், அங்கேயும் இதே பிரச்சினைதான். எல்லா இனத்தவருக்கும் தேசத்தவருக்கும் நாங்கள் பிரசங்கித்ததால் சில வெள்ளையர்களுக்கு எங்களை கண்டாலே பிடிக்கவில்லை. எங்களை தேச துரோகிகள் என்றே அநேகர் நம்பினார்கள். தேசப்பற்றுமிக்க அமைப்பாகிய அமெரிக்கன் லீஜனின் அதிகாரியும் அப்படித்தான் நம்பினார். எங்களைத் தாக்குவதற்கு அநேக முறை கலக கும்பலை தூண்டிவிட்டவரே அவர்தான்.
கொலம்பஸில் ஒரு தெருவில் பத்திரிகைகளை விநியோகித்துக் கொண்டிருந்தபோதுதான் முதன்முறையாக ஒரு கலக கும்பல் எங்களை தாக்கியது. பளபளவென்று இருந்த கடையின் கண்ணாடி சன்னல்மீது எங்களைத் தள்ளியது. என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க ஒரு கூட்டம் வேறு! சீக்கிரத்தில் போலீஸார் வந்து, எங்களைக் கோர்ட்டுக்கு கூட்டிக்கொண்டு போனார்கள். எங்கள் பின்னாடியே அந்தக் கும்பலும் கோர்ட்டுக்கே வந்துவிட்டது. சொல்கிற தேதிக்குள் அந்த ஊரைவிட்டு போனால் உயிரோடு அங்கிருந்து போகலாம், இல்லையென்றால் பிணமாகத்தான் போவீர்கள் என்று அங்கிருந்த எல்லா அதிகாரிகளின் முன்பாகவும் கும்பல்காரர்கள் கூச்சலிட்டார்கள். கொஞ்ச நாட்களுக்கு அந்த ஊரில் இருப்பது நல்லதல்ல என முடிவு பண்ணி அங்கிருந்து கிளம்பிவிட்டோம். ஆனால் சில வாரங்களுக்குப் பின் மீண்டும் அங்கு போய் ஊழியம் செய்தோம்.
அதன் பின்பு சீக்கிரத்திலேயே, கும்பலாக எட்டு பேர் வந்து எங்களை கண்மண் தெரியாமல் தாக்கினார்கள்; அவர்கள் ஓட்டி வந்த இரண்டு கார்களில் எங்களை ஏற்றிக்கொண்டு சென்றார்கள். காட்டுக்குள் எங்களை கொண்டு போய், துணிமணிகளை கழற்ற சொல்லி என்னுடைய பெல்ட்டால் இருவருக்கும் முப்பது முப்பது அடி கொடுத்தார்கள்! அவர்கள் துப்பாக்கிகளும் கயிறுகளும்கூட வைத்திருந்தார்கள்; நாங்கள் உண்மையிலேயே பயந்துவிட்டோம். எங்கள் கையை காலை கட்டி ஆற்றில் தூக்கி வீசப்போகிறார்கள் என நினைத்தேன். எங்கள் பிரசுரங்களை எல்லாம் எடுத்து சுக்குநூறாக கிழித்து வானில் பறக்கவிட்டார்கள்; எங்களிடமிருந்த ஃபோனோகிராஃப்பை பிடுங்கி மரத்தில் ஓங்கி அடித்து சின்னாபின்னமாக்கினார்கள்.
எங்களை பெல்ட்டில் விளாசிய பின், உடைகளை மாட்டிக்கொண்டு திரும்பி பார்க்காமல் அங்கிருந்து போக சொன்னார்கள். திரும்பி பார்த்தால் எங்களை சுட்டுக் கொன்றுவிட்டு அவர்கள் தப்பிவிடுவார்கள் என்ற பயத்தில் விறுவிறுவென நாங்கள் நடந்தோம்! ஆனால் சில நிமிடங்களுக்கெல்லாம் அவர்கள் காரில் புறப்பட்டு செல்லும் சத்தம் கேட்டது.
மற்றொரு சமயம், மூர்க்க வெறிபிடித்த ஒரு கும்பல் எங்களைத் துரத்தி வந்தது. தப்பினால் போதும் என துணிமணிகளை எங்கள் கழுத்தில் கட்டிக்கொண்டு ஆற்றில் பாய்ந்தோம். சீக்கிரத்திலேயே தேச துரோகிகள் என முத்திரை குத்தி கைதுசெய்தார்கள். விசாரணைக்கு முன் மூன்று வாரங்கள் சிறையில் கழித்தோம். இந்த விஷயம் கொலம்பஸில் ரொம்ப பிரபலமானது. விசாரணையை நேரில் காண்பதற்கு வசதியாக பக்கத்திலிருந்த கல்லூரி மாணவர்கள் சீக்கிரத்தில் வகுப்பறையிலிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அந்த விசாரணை நாளும் வந்தது, நிற்கக்கூட இடமில்லாமல் நீதிமன்றம் நிரம்பி வழிந்தது! அரசு தரப்பில் சாட்சி சொல்ல இரண்டு பிரசங்கிமாரும் மேயரும் போலீஸாரும் வந்திருந்தார்கள்.
யெகோவாவின் சாட்சியாக இருந்த வழக்கறிஞர் ஜி. சி. கிளார்க்கும் அவருடைய நண்பரும் எங்கள் சார்பாக வழக்காட வந்திருந்தனர். தேச துரோகிகள் என்ற குற்றச்சாட்டுக்கு தகுந்த ஆதாரம் இல்லாததால் வழக்கை ரத்து செய்ய இவர்கள் கேட்டுக்கொண்டார்கள். சகோதரர் கிளார்க்குடன் வந்திருந்த அந்த வழக்கறிஞர் யெகோவாவின் சாட்சி அல்ல. இருந்தாலும் எங்கள் சார்பில் காரசாரமாக விவாதித்தார். ஒரு சமயம் நீதிபதியிடம், “யெகோவாவின் சாட்சிகள் பைத்தியக்காரர்கள் என ஜனங்கள் சொல்கின்றனர். அவர்கள் என்ன பைத்தியக்காரர்களா? மக்கள் தாமஸ் எடிஸனையும்தான் பைத்தியக்காரர் என்று சொன்னார்கள்! ஆனால் அங்கு எரியும் பல்பை பாருங்கள்!” என அவர் பல்பை சுட்டிக்காட்டினார். ஒளிதரும் பல்பை கண்டுபிடித்த எடிஸனை பைத்தியக்காரர் என சிலர் நினைத்திருந்தார்கள்; ஆனால் அவருடைய சாதனைகளைக் குறித்தோ யாருமே கேள்வி கேட்க முடியவில்லை!
அந்த தர்க்கத்தைக் கேட்ட அந்த வட்டார நீதிபதி, வாதாட வந்திருந்த வழக்கறிஞரிடம், “தேச துரோகிகள் என நிரூபிக்க ஆதாரங்கள் துளிகூட உங்களிடம் இல்லாததால் அவர்கள் தங்கள் ஊழியத்தைத் தொடரலாம். உங்களிடம் தக்க ஆதாரம் இல்லாதவரை அவர்களை மீண்டும் இந்த நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து அரசாங்கத்தின் நேரத்தையும் பணத்தையும் மட்டுமல்ல, என்னுடைய நேரத்தையும் வீணாக்காதீர்கள்!” என சொன்னார். எங்களுக்கு வெற்றி!
பின்னர், நீதிபதி எங்களை அவருடைய ஆபீஸுக்கு அழைத்தார். அவருடைய தீர்ப்புக்கு எதிராக அந்த ஊரே திரண்டு நிற்பது அவருக்குத் தெரியும். எனவே அவர், “நான் சட்டம் சொல்வதை செய்தேன். தனிப்பட்ட விதத்தில் உங்கள் இருவருக்கும் நான் சொல்ல விரும்புவதெல்லாம், நீங்கள் இங்கிருந்து போய்விடுவதுதான் நல்லது. இல்லாவிட்டால் அவர்கள் உங்களைக் கொன்றே விடுவார்கள்!” என எச்சரித்தார். அவர் சொன்னது நூறு சதம் உண்மை என்பதை அறிந்த நாங்கள் அந்த ஊரைவிட்டு புறப்பட்டோம்.
டென்னஸீயிலுள்ள கிளார்க்ஸ்வில் என்ற இடத்தில் பென்னட்டும் வெல்வாவும் விசேஷ பயனியர்களாக ஊழியம் செய்து வந்தார்கள்; நானும் அவர்களோடு சேர்ந்து கொண்டு ஊழியம் செய்து வந்தேன். சில மாதங்களுக்குப் பிறகு கென்டகியிலுள்ள பாரஸ் என்ற நகரத்தில் ஊழியம் செய்ய நாங்கள் நியமிக்கப்பட்டோம். ஒன்றரை வருஷங்களுக்குப் பின்பு நாங்கள் புதிய சபை ஒன்றை உருவாக்க இருந்தோம். அந்த நேரம் பார்த்து எனக்கும் பென்னட்டுக்கும் எதிர்பாரா அழைப்பு வந்தது; அது விசேஷ அழைப்பு.
மிஷனரி சேவைக்கு
உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளியின் இரண்டாவது வகுப்பில் கலந்துகொள்ளும்படியான அழைப்புதான் அந்த விசேஷ அழைப்பு. அதைப் பார்த்ததும் எங்கள் மனதில் ஒரே குழப்பம். ‘அவங்க தப்பு பண்ணிட்டாங்க! போயும் போயும் ஒன்னுமே தெரியாத எங்களை ஏன் கூப்பிட்டாங்க?’ என்று யோசித்தோம். அவர்களுக்கு நன்கு படித்தவர்கள்தான் தேவை என்பதாக நாங்கள் நினைத்தோம். இருந்தாலும் அழைப்பை ஏற்றுக்கொண்டு அங்கே போனோம். அந்த வகுப்பில் 100 மாணவர்கள் இருந்தார்கள். அந்தப் பயிற்சி ஐந்து மாத காலம் நீடித்தது. 1944, ஜனவரி 31-ந் தேதி பட்டமளிப்பு விழா நடந்தது; ஊழியம் செய்ய வேறு தேசங்களுக்குச் செல்லும் நாளை நாங்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தோம். அப்போது விசா, பாஸ்போர்ட் கிடைப்பதெல்லாம் அவ்வளவு சுலபமல்ல; மாதக்கணக்காக காத்திருக்க வேண்டும். எனவே மாணவர்களாகிய நாங்கள் ஐக்கிய மாகாணங்களிலேயே தற்காலிக ஊழிய நியமிப்பைப் பெற்றோம். அலபாமா, ஜார்ஜியா ஆகிய இடங்களில் சிலகாலம் பயனியர் ஊழியம் செய்த பின்னர் கடைசியாக, மேற்கு இந்தியத் தீவுகளில் பார்படாஸ் என்ற இடத்திற்கு செல்லும் நியமிப்பை நானும் பென்னட்டும் பெற்றோம்.
இரண்டாம் உலக யுத்தம் மும்முரமாக நடந்துகொண்டிருந்த சமயம் அது. பார்படாஸிலும் மற்ற அநேக இடங்களிலும் யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழியத்திற்கும் பிரசுரங்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. கஸ்டம்ஸ் அதிகாரிகள் எங்கள் லக்கேஜை சோதனை போட்டார்கள்; அப்போது ஒளித்து வைத்திருந்த பிரசுரங்களை கண்டுபிடித்தார்கள். ‘அவ்வளவுதான் தீர்ந்தோம்’ என நினைத்தோம். ஆனால், “உங்கள் லக்கேஜை நாங்கள் சோதனையிடுவதற்கு மன்னிக்கவும்; இந்தப் புத்தகங்கள் பார்படாஸில் தடை செய்யப்பட்டிருக்கின்றன” என்பதாக மட்டுமே ஓர் அதிகாரி சொன்னார். ஆனால் நாங்கள் வைத்திருந்த எல்லா பிரசுரங்களையும் எடுத்துக்கொண்டு செல்ல அனுமதித்தது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்! பின்னர் நாங்கள் அரசாங்க அதிகாரிகளிடம் சாட்சி கொடுக்கையில், ஏன் அந்தப் பிரசுரங்கள் தடை செய்யப்பட்டிருக்கின்றன என்பது அவர்களுக்கும் தெரியாது என சொன்னார்கள். சில மாதங்களுக்குப் பிறகு தடையுத்தரவு நீக்கப்பட்டது.
பார்படாஸில் எங்கள் ஊழியத்திற்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்தது. எங்கள் ஒவ்வொருவருக்கும் குறைந்தது 15 பைபிள் படிப்புகள் இருந்தன. அவர்களில் அநேகர் ஆவிக்குரிய விதத்தில் நன்கு முன்னேறினார்கள். அவர்களில் சிலர் சபைக் கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தார்கள்; அதைப் பார்த்தபோது எங்களுக்கு ஒரே சந்தோஷம். இருந்தாலும், சில காலத்திற்கு பிரசுரங்கள் தடை செய்யப்பட்டிருந்ததால், அச்சமயத்தில் கூட்டங்களை எப்படி நடத்துவது என்பது அங்கிருந்த சகோதரர்களுக்குத் தெளிவாக தெரியாமல் இருந்தது. அதற்காக தகுதியான சகோதரர்களுக்கு நாங்கள் பயிற்சி அளித்தோம். எங்களுடன் பைபிள் படிப்பு படித்து வந்தவர்களும் ஊழியத்தில் ஈடுபட உதவினோம், சபை மேன்மேலும் வளர்ச்சியடைவதை காணும் பாக்கியமும் கிடைத்தது.
குடும்ப வாழ்க்கை
பார்படாஸில் சுமார் 18 மாதங்கள் ஊழியம் செய்த பின்பு, எனக்கு ஆபரேஷன் செய்ய வேண்டியிருந்ததால் ஐக்கிய மாகாணங்களுக்கு திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது. அங்கிருக்கையில், ஏற்கெனவே கடிதத்தின் மூலம் மலர்ந்திருந்த காதல் கனிந்ததும் டாரத்தி என்ற சாட்சியை மணந்தேன். பின்னர் நானும் என் மனைவியும் ஃப்ளாரிடாவில் டல்லஹஸீ என்ற இடத்தில் பயனியர் ஊழியம் செய்தோம். ஆறு மாதங்களுக்குப் பிறகு கென்டகியிலுள்ள லூயிவில் என்ற இடத்திற்கு வந்தோம். அங்கிருந்த சாட்சி ஒருவர் எனக்கு வேலைவாய்ப்பு அளித்திருந்தார். என் தம்பி பென்னட் பார்படாஸில் அநேக வருடங்கள் ஊழியத்தைத் தொடர்ந்து செய்து வந்தான். பின்னர் மிஷனரி ஒருவரை மணந்துகொண்டு அங்கிருந்த தீவுகளில் பயணக் கண்காணியாக ஊழியம் செய்து வந்தான். உடல்நிலை காரணமாக அவர்களும் ஐக்கிய மாகாணங்களுக்கு வரவேண்டி இருந்தது. 1990-ல் தன் 73-வது வயதில் பென்னட் மரிக்கும் வரை அவர்கள் தொடர்ந்து பயண ஊழியத்தில் இருந்தனர்; அங்குள்ள ஸ்பானிய மொழி பேசும் சபைகளில் சேவை செய்து வந்தனர்.
எங்களுக்கு 1950-ல் முதல் பெண் குழந்தை பிறந்தது, அவளுக்கு டாரல் என பெயர் வைத்தோம். எங்களுக்கு மொத்தம் ஐந்து குழந்தைகள் பிறந்தனர். எங்கள் இரண்டாவது குழந்தை டெரிக்கு அப்போது இரண்டரை வயசுதான் இருக்கும், நரம்புத்தண்டு மூளை உறையழற்சி (spinal meningitis) நோய் வந்து இறந்துவிட்டான். ஆனால், எங்களுக்கு 1956-ல் லெஸ்லீ என்ற மகனும் 1958-ல் எவ்ரெட் என்ற மகனும் பிறந்தனர். பைபிள் சத்தியத்தில் பிள்ளைகளை வளர்க்க நானும் டாரத்தியும் பெரும்பாடு பட்டோம். வாரம் தவறாமல் குடும்ப பைபிள் படிப்பு நடத்த முயன்றோம்; அதுவும் பிள்ளைகள் அனைவருக்கும் ஆர்வம் ஏற்படுத்தும் வகையில் நடத்தினோம். டாரல், லெஸ்லீ, எவ்ரெட் அனைவரும் சின்னஞ்சிறுசுகளாக இருந்ததால் ஒவ்வொரு வாரமும் அவர்களிடம் சில கேள்விகளைக் கொடுத்து அதற்கான பதிலை மறுவாரம் சொல்லும்படி செய்தோம். வீட்டுக்கு வீடு ஊழியத்தில் ஈடுபடுவது போல் அவர்கள் நடித்தும் காட்டினர். ஒரு பிள்ளை துணிமணிகளை வைக்கும் அறைக்குள் புகுந்துகொண்டு வீட்டுக்காரர் போல் நடிக்கும். மற்றொன்று வெளியே இருந்து கதவைத் தட்டும். வீட்டுக்காரர் திட்டுவது போல் வார்த்தைகளை உபயோகித்து திட்டுவார்கள்; ஆனால் இது பிரசங்கிக்கும் ஆசையை அவர்களுக்கு வளர்த்தது. அவர்களைத் தவறாமல் ஊழியத்திற்கு அழைத்து சென்றோம்.
எங்கள் கடைக்குட்டி எல்ட்டன் 1973-ல் பிறந்தான்; அந்தச் சமயத்தில் நான் 60 வயதை நெருங்கிக்கொண்டிருந்தேன், டாரத்திக்கு கிட்டத்தட்ட 50 வயது. இதனால், சபையினர் எங்களை ஆபிரகாம் சாராள் என அழைத்தனர்! (ஆதியாகமம் 17:15-17) வளர்ந்த மற்ற பிள்ளைகள் எல்ட்டனை அவர்களுடன் ஊழியத்திற்கு கூட்டிக்கொண்டு போவார்கள். குடும்பமாக சேர்ந்து ஊழியத்தில் ஈடுபட்டு, அதாவது சகோதர சகோதரிகளாக, பெற்றோர் பிள்ளைகளாக ஒன்றாக சேர்ந்து ஊழியத்தில் ஈடுபட்டு, மற்றவர்களுக்கு பைபிள் சத்தியத்தைப் பற்றி சொல்வதே சிறந்தளவில் சாட்சி கொடுக்கும் என நம்பினோம். எல்ட்டனின் அண்ணன்மார் மாற்றி மாற்றி அவனைத் தங்கள் தோள்களில் தூக்கிக்கொண்டனர், அவன் கையிலும் பைபிள் துண்டுப்பிரதியைக் கொடுத்து வைத்தனர். தன் அண்ணனின் தோளில் ஒய்யாரமாக பொம்மை குட்டிபோல் உட்கார்ந்திருந்த இவனைப் பார்த்ததும் சொல்ல வந்த செய்தியை தட்டாமல் எல்லாரும் எப்போதுமே கேட்டனர். தாங்கள் பேசி முடித்ததும் துண்டுப்பிரதியைக் கொடுக்கவும் சில வார்த்தைகள் பேசவும் எல்ட்டனுக்கு அவனுடைய அண்ணர்மார் சொல்லி கொடுத்திருந்தார்கள். அவன் அப்படித்தான் பிரசங்க ஊழியத்தில் ஈடுபட ஆரம்பித்தான்.
மற்றவர்கள் யெகோவாவைப் பற்றி தெரிந்துகொள்ள நாங்கள் அநேக வருடங்களாக உதவி செய்து வந்திருக்கிறோம். 1978, 79 வாக்கில் அதிக தேவை இருந்த சபையுடன் சேர்ந்து ஊழியம் செய்வதற்கு லூயிவில் நகரிலிருந்து ஷெல்பீவில் நகருக்குக் குடிமாறினோம். அங்கிருந்த சபை வளர்ந்து வருவதை காணும் பாக்கியம் கிடைத்தது. ராஜ்ய மன்றத்திற்கென இடம் வாங்கி அதைக் கட்டுவதற்கும் உதவினோம். அதற்குப் பிறகு பக்கத்திலிருந்த சபையில் ஊழியம் செய்ய கேட்டுக்கொண்டார்கள், அதனால் அங்கு போனோம்.
குடும்பத்தில் ஏற்பட்ட எதிர்பாரா திருப்பங்கள்
என் பிள்ளைகள் அனைவரும் யெகோவாவின் வணக்கத்தில் நிலைத்திருக்கின்றனர் என சொல்லவே எனக்கு ஆசை; ஆனால் அப்படி சொல்ல வழியில்லாமல் போய்விட்டது. அவர்கள் வளர்ந்து, பெரியவர்களாகி, வீட்டை விட்டுச் சென்றபிறகு இறந்துவிட்ட மகனைச் சேர்க்காமல் உயிரோடிருக்கும் எங்கள் நான்கு பிள்ளைகளில் மூவர் சத்தியத்தின் பாதையிலிருந்து வழிவிலகிப் போயினர். எனினும், எங்கள் மகன் எவ்ரெட் என்னைப் போலவே, முழுநேர ஊழியத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டான். பின்னர் அவன் நியூ யார்க்கிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய உலக தலைமை அலுவலகத்தில் பணியாற்றினான்; 1984-ல் கிலியட் பள்ளியின் 77-வது வகுப்பில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டான். பட்டம் பெற்ற பின்பு, மேற்கு ஆப்பிரிக்காவில் சியர்ரா லியோனில் ஊழியம் செய்ய நியமிக்கப்பட்டான். 1988-ல் பெல்ஜியத்தில் பயனியர் செய்துவந்த மேரிஆன் என்ற பெண்ணை கல்யாணம் பண்ணிக்கொண்டான். அப்போதிருந்து அவர்கள் மிஷனரிகளாக சேவை செய்து வருகிறார்கள்.
ஆனால் எங்களுடைய மற்ற மூன்று பிள்ளைகளும், இப்போது திருப்தியான வாழ்க்கையையும் எதிர்காலத்தில் பரதீஸிய பூமியில் நித்திய ஜீவன் என்ற மகத்தான நம்பிக்கையையும் அளிக்கும் சத்தியத்தை வேண்டாம் என உதறித் தள்ளிவிட்டு சென்ற போது ஏற்பட்ட வேதனையை சொல்லவே முடியாது; எங்கள் ஆதங்கத்தை எந்தப் பெற்றோராலும் புரிந்துகொள்ள முடியும். சில சமயங்களில் அதற்காக பழியை என்மீதே போட்டுக்கொண்டதுண்டு. ஆனால் யெகோவா தம்முடைய ஆவிக்குமாரர்களுக்கு அதாவது தேவதூதர்களுக்கு அன்போடும் இரக்கத்தோடும் புத்திமதி கூறினார், அவரோ எந்த தவறும் செய்யாதவராக இருந்தார். இருந்தாலும் அவர்களில் சிலர் அவரை சேவிக்காமல் விட்டு விலகிப் போனார்களே. இதை எண்ணி என்னை நானே தேற்றிக்கொண்டதுண்டு. (உபாகமம் 32:4; யோவான் 8:44; வெளிப்படுத்துதல் 12:4, 9) எவ்வளவுதான் கஷ்டப்பட்டு யெகோவாவின் வழிகளில் பிள்ளைகளை வளர்த்தாலும் சிலர் சத்தியத்தை ஏற்றுக்கொள்ள பிடிவாதமாக மறுக்கலாம் என்பது என் மனதில் ஆழப்பதிந்தது.
பயங்கரமாக காற்றடிக்கும் போது ஒரு மரம் அதை சமாளிக்க வளைந்துகொடுப்பதைப் போல பலவிதமான கஷ்டங்களும் சோதனைகளும் வருகையில் நாம் சமாளிக்க கற்றுக்கொள்ள வேண்டும். அப்படி வளைந்துகொடுப்பதற்கு தேவையான ஆவிக்குரிய சக்தியை, தவறாமல் பைபிள் படிப்பதும் கூட்டங்களுக்குச் செல்வதும் இதுநாள் வரை எனக்கு கொடுத்து உதவியிருக்கிறது. வயதாக ஆக கடந்த காலத்தில் செய்த தவறுகளை நினைக்கையில் ‘எல்லாம் நன்மைக்கே’ என்று எடுத்துக்கொள்ள முயலுகிறேன். மொத்தத்தில், நாம் உண்மையுடன் நிலைத்திருந்தால், அந்த அனுபவங்கள் நம்முடைய ஆவிக்குரிய முன்னேற்றத்திற்கு படிக்கற்களாய் அமையும். அவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டால், வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள கசப்பான அனுபவங்களில் இருந்தும் நன்மை கிடைக்கலாம்.—யாக்கோபு 1:2, 3.
யெகோவாவின் சேவையில் என்னென்ன செய்ய ஆசைப்படுகிறோமோ அவற்றை எல்லாம் செய்ய எனக்கும் என் மனைவிக்கும் ஆரோக்கியமுமில்லை பலமுமில்லை. ஆனால் எங்கள் நேசத்திற்குரிய கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் கொடுக்கும் ஆதரவுக்கு நாங்கள் ரொம்ப கடமைப்பட்டிருக்கிறோம். ஒவ்வொரு கூட்டத்திலும் எங்களைப் பார்ப்பது அவர்களுக்கு எவ்வளவு சந்தோஷமளிக்கிறது என்பதை சகோதரர்கள் சொல்லாமல் இருந்ததில்லை. வீட்டையும் காரையும் பழுதுபார்ப்பது போன்ற எந்த வேலையாக இருந்தாலும் முடிந்த வரை எங்களுக்கு உதவி செய்ய அவர்கள் ஓடோடி வருகிறார்கள்.
அவ்வப்போது துணைப் பயனியர் ஊழியம் செய்கிறோம். ஆர்வம் காட்டுபவர்களுக்குப் பைபிள் படிப்பு நடத்துகிறோம். ஆப்பிரிக்காவில் சேவை செய்யும் எங்கள் மகனிடமிருந்து வரும் செய்திகள் வேகாத வெயிலில் புத்துணர்ச்சியூட்டும் தண்ணீரைப்போல் எப்போதுமே எங்களுக்குள் சந்தோஷத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இப்போது நாங்கள் இரண்டு பேர் மட்டுமே இருந்தாலும் தவறாமல் குடும்ப பைபிள் படிப்பை நடத்தி வருகிறோம். யெகோவாவின் சேவையில் இத்தனை ஆண்டுகளை செலவழித்தது எங்களுக்கு பரம சந்தோஷம். ‘அவருடைய பெயருக்கு நாங்கள் காண்பித்த அன்பையும் எங்கள் உழைப்பையும்’ அவர் ஒருபோதும் மறக்க மாட்டார் என்பதை உறுதியளிக்கிறார்.—எபிரெயர் 6:10, NW.
[பக்கம் 25-ன் படம்]
1940, ஏப்ரல் 18-ம் தேதி எனக்கும் பென்னட்டுக்கும் எங்கள் தங்கை வெல்வாவுக்கும் டெட் கிளைன் முழுக்காட்டுதல் கொடுத்தார்
[பக்கம் 26-ன் படங்கள்]
என் மனைவி டாரத்தியுடன் 1940-களின் ஆரம்பத்திலும் 1997-லும்
[பக்கம் 27-ன் படம்]
“சமாதான பிரபு” என்ற பொதுப் பேச்சை விளம்பரப்படுத்திச் செல்லும் பார்படாஸ் நகர பேருந்து
[பக்கம் 27-ன் படம்]
மிஷனரி ஹோமின் முன் என் தம்பி பென்னட்