ஃபெடரல் கான்ஸ்ட்டிட்யூஷனல் கோர்ட்டில் வெற்றி
ஜெர்மனியிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் கர்ல்ஷ்ரு ஃபெடரல் கான்ஸ்ட்டிட்யூஷனல் கோர்ட்டில் வெற்றிபெற்றது ஒரு மைல் கல்லாக விளங்குகிறது. இவ்வாறு, அங்கீகாரம் பெறுவதற்கு அவர்கள் முக்கிய நடவடிக்கை எடுத்தார்கள்.
நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஜெர்மனியில் பிரசங்கிப்பதில் யெகோவாவின் சாட்சிகள் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகிறார்கள். 20-ம் நூற்றாண்டில் இரு சர்வாதிகாரத்தின்—நேஷனல் சோஷலிஸ்டுகள் மற்றும் கம்யூனிஸ்டுகளின்—கைகளில் அவர்கள் கடும் துன்புறுத்துதலை எதிர்ப்பட்டு தப்பிவந்தார்கள். 1990 முதற்கொண்டு, பொதுச் சட்டத்தின்படி ஒரு குழுவாக செயல்படுவதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற சாட்சிகள் முயற்சி செய்திருக்கிறார்கள். நீதிமன்றத்திலிருந்து பெற்ற இரு சாதகமான தீர்ப்புக்கும் ஒரு பாதகமான தீர்ப்புக்கும் பிறகு, சாட்சிகள் ஃபெடரல் கான்ஸ்ட்டிட்யூஷனல் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்கள், அது டிசம்பர் 19, 2000-ல் தீர்ப்பு வழங்கியது.
யெகோவாவின் சாட்சிகள் சார்பாக ஏகோபித்த தீர்ப்பு
அந்த நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகளும் யெகோவாவின் சாட்சிகள் சார்பாக தீர்ப்பு வழங்கினார்கள். ஃபெடரல் அட்மினிஸ்ட்ரேட்டிவ் கோர்ட் 1997-ல் வழங்கிய தீர்ப்பை இந்த நீதிபதிகள் மாற்றி, சாட்சிகளுடைய மனுவை அந்த நீதிமன்றம் மறுபரிசீலனை செய்யுமாறு கட்டளையிட்டனர்.
அரசுக்கும் மதத் தொகுதிகளுக்கும் இடையேயுள்ள அடிப்படை உறவைப் பற்றி சொல்வதற்கு ஃபெடரல் கான்ஸ்ட்டிட்யூஷனல் கோர்ட் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டது. அடிப்படையில், ஒரு மதத்தின் தகுதிநிலை “அதன் நம்பிக்கைகளை வைத்து அல்ல, அதன் நடத்தையை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது.”
சாட்சிகள் “கிறிஸ்தவ நடுநிலைமை” வகிக்கும்போது, அவர்கள் “ஜனநாயகத்தின் கொள்கையை தாக்குவதில்லை,” அதோடு “ஜனநாயகத்தை மற்றொரு வகை அரசாங்கத்தால் மாற்றீடு செய்யவும் விரும்புவதில்லை” என்றும் அந்த நீதிமன்றம் குறிப்பிட்டது. ஆகவே, அரசியல் தேர்தல்களில் கலந்துகொள்ளாததால் அவர்கள் சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற தகுதியில்லாதவர்கள் என தீர்மானிக்க முடியாது.—யோவான் 18:36; ரோமர் 13:1.
யெகோவாவின் சாட்சியாக இருந்தாலும் வேறொரு மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஒருவருடைய மத நம்பிக்கையும் அரசாங்க சட்டங்களும் ஒன்றுக்கொன்று முரண்படுகிற சூழ்நிலை சிலசமயங்களில் வரலாம் என்றும் அந்த நீதிமன்றம் குறிப்பிட்டது. “சட்டத்துக்கு கீழ்ப்படிவதைப் பார்க்கிலும் தன்னுடைய மத நம்பிக்கைகளுக்கு கீழ்ப்படிந்து” மனசாட்சிக்கு கட்டுப்பட்டு ஒருவர் நடப்பாராகில், அரசு அதை நியாயமானதாகவும் மத சுதந்திரத்திற்கு உட்பட்டதாகவும் கருதலாம்.—அப்போஸ்தலர் 5:29.
இந்த நீதிமன்ற தீர்ப்பு தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றது. ஜெர்மனியில் இந்த வழக்கைப் பற்றி அறிக்கை செய்யாத செய்தித்தாளே கிடையாது. பெரிய பெரிய தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்களும் அறிக்கைகளை அல்லது பேட்டிகளை ஒளி/ஒலி பரப்பின. யெகோவா என்ற பெயர் முன்னொருபோதும் ஜெர்மனியில் இந்தளவுக்கு விளம்பரப்படுத்தப்படவில்லை.
[பக்கம் 8-ன் படத்திற்கான நன்றி]
AP Photo/Daniel Maurer