வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
யோபு எவ்வளவு காலத்திற்கு துன்பப்பட்டார்?
யோபுவுக்கு நேரிட்ட சோதனைகள் அநேக ஆண்டுகளுக்கு நீடித்தன என சிலர் நினைக்கின்றனர். ஆனால் இவ்வளவு நீண்ட காலத்திற்கு துன்பப்பட்டதாக யோபு புத்தகம் சொல்வதில்லை.
யோபுவுக்கு நேரிட்ட முதல் கட்ட சோதனைகள், அதாவது குடும்ப அங்கத்தினர்களையும் உடைமைகளையும் இழந்தது மிகவும் குறுகிய காலத்திலேயே நேரிட்டதாக தோன்றுகிறது. நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: ‘பின்பு ஒருநாள் யோபுடைய குமாரரும், அவன் குமாரத்திகளும், தங்கள் மூத்த சகோதரன் வீட்டிலே புசித்து, திராட்சரசம் குடித்துக் கொண்டிருந்தார்கள்.’ யோபு இழந்தவற்றை—எருதுகள், கழுதைகள், ஆடுகள், ஒட்டகங்கள், இந்த விலங்குகளை மேய்க்கும் வேலையாட்கள் என அனைத்தையும் இழந்ததை—பற்றிய அறிக்கை ஒன்றன்பின் ஒன்றாக வருகிறது. இதற்கு அடுத்ததாகவே அவருடைய குமாரரும் குமாரத்திகளும் “தங்கள் மூத்த சகோதரன் வீட்டிலே புசித்துத் திராட்சரசம் குடிக்கிறபோது” இறந்துபோனதை கேள்விப்படுவதாக தெரிகிறது. இவை எல்லாமே ஒரே நாளில் சம்பவித்ததாக தோன்றுகிறது.—யோபு 1:13-19.
யோபுவுக்கு நேரிட்ட அடுத்த கட்ட சோதனைகளுக்கு அதிக காலம் எடுத்திருக்க வேண்டும். யோபுவுக்கு சரீர வேதனை ஏற்பட்டால் அவன் தோல்வியடைந்து விடுவான் என யெகோவாவிடம் சாத்தான் சவால்விட்டான். அப்பொழுது “உள்ளங்கால் தொடங்கி அவன் உச்சந்தலை மட்டும் கொடிய பருக்களால் அவனை வாதித்தான்.” இந்த நோய் உடல் பூராவும் பரவுவதற்கு சில காலம் எடுத்திருக்கலாம். யோபுவுக்கு நேரிட்ட ‘தீமைகள் யாவற்றையும்’ அவரது போலி தேற்றரவாளர்கள் கேள்விப்பட்டு புறப்பட்டு வருவதற்கும் சிலகாலம் எடுத்திருக்கும்.—யோபு 2:3-11.
ஏதோம் தேசத்தின் தேமானிலிருந்து எலிப்பாஸ் வந்தார், வடமேற்கு அரேபியாவிலுள்ள ஓர் இடத்திலிருந்து சோப்பார் வந்தார். ஆகவே, அவர்களுடைய ஊர் யோபு வசித்த ஊத்ஸ் தேசத்திலிருந்து அதிக தூரத்தில் இல்லை. ஊத்ஸ் ஒருவேளை வட அரேபியாவில் இருந்திருக்கலாம். ஆனால் பில்தாத் என்பவர் சூகியன், அவருடைய இனத்தார் யூப்ரடீஸ் அருகே வாழ்ந்தார்கள் என நம்பப்படுகிறது. இந்தச் சமயத்தில் பில்தாத் தன்னுடைய சொந்த ஊரில் இருந்திருந்தால், யோபுவின் நிலைமையை கேள்விப்பட்டு ஊத்ஸுக்கு புறப்பட்டு வருவதற்கு வாரங்களோ மாதங்களோ எடுத்திருக்கலாம். யோபு துன்பப்பட்ட காலத்தில் மூவருமே யோபு வசித்துவந்த இடத்திற்குப் பக்கத்திலேயே இருந்திருக்கும் சாத்தியமும் உள்ளது. எப்படியிருந்தாலும், யோபுவின் மூன்று நண்பர்களும் வந்துசேர்ந்தபோது, ஒரு வார்த்தையையும் பேசாமல், “இரவுபகல் ஏழுநாள், அவனோடுகூடத் தரையிலே உட்கார்ந்திருந்தார்கள்.”—யோபு 2:12, 13.
இப்பொழுது, யோபுவின் கடைசி கட்ட சோதனைகள் வந்தன, இதற்குரிய விவரங்கள் இந்தப் புத்தகத்தின் பல அதிகாரங்களை எடுத்துக்கொள்கின்றன. போலி தேற்றரவாளர்கள் தொடர்ச்சியாக வாக்குவாதங்கள் அல்லது சொற்பொழிவை நடத்தினர், பெரும்பாலும் யோபுவும் அதற்கு பதிலளித்தார். அது முடிந்தப்பின், இளைஞனாகிய எலிகூ கடிந்துகொண்டார், பிறகு யோபுவை பரலோகத்திலிருந்து யெகோவா திருத்தினார்.—யோபு 32:1-6; 38:1; 40:1-6; 42:1.
ஆகவே, யோபுவுக்கு நேரிட்ட துன்பமும் அதற்குரிய தீர்வும் சில மாதங்களிலேயே, ஒருவேளை ஓர் ஆண்டுக்குள்ளாகவே நிகழ்ந்திருக்கலாம். கஷ்டமான சோதனைகள் சதா தொடர்ந்திருப்பது போல நீங்கள் அனுபவத்தில் அறிந்திருக்கலாம். ஆனால், யோபுவுக்கு நடந்ததுபோல, அவை முடிவடையும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நாம் எதிர்ப்படும் சோதனைகள் எவ்வளவு காலத்திற்கு நீடித்தாலும்சரி, கடவுளுடைய ஆதரவு நமக்கு இருப்பதை மனதில் வைத்திருப்போமாக. அவர் தரும் ஆதரவை ஏவப்பட்டு எழுதப்பட்ட அவருடைய வார்த்தைகளில் காணலாம்: “அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது.” (2 கொரிந்தியர் 4:17) அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு எழுதினார்: “கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி. பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக.”—1 பேதுரு 5:10.