உண்மையான—விசுவாசம் இன்றும் சாத்தியமா?
“கடவுளுடைய இரக்கத்தில் வைக்கும் உயிருள்ள, உறுதியான நம்பிக்கையே விசுவாசம். அது அவ்வளவு நிச்சயமானதாக இருப்பதால் ஒரு விசுவாசி ஆயிரம் தடவைகூட அதற்காக தன் உயிரை பணயம் வைப்பார்.”—மார்டின் லூத்தர், 1522.
“நாம் ஏறக்குறைய மத சார்பற்ற சமுதாயத்திலேயே வாழ்ந்து வருகிறோம். அதில் கிறிஸ்தவ விசுவாசமும் பழக்கங்களும் ஏறக்குறைய அடியோடு மறைந்துவிட்டன.”—லூடோவிக் கென்னடி, 1999.
விசுவாசத்தை பற்றிய விவரிப்புகள் பெரிதும் வேறுபடுகின்றன. முற்காலங்களில், கடவுளில் நம்பிக்கை வைப்பதே இயல்பாக இருந்தது. அவநம்பிக்கையும் துயரமும் நிறைந்த இன்றைய உலகில் கடவுளிலும் பைபிளிலும் உண்மையான விசுவாசம் வைப்பது படுவேகமாக மறைந்து வருகிறது.
உண்மையான விசுவாசம்
அநேகரை பொருத்தவரை, “விசுவாசம்” என்பது ஒரு மதத்தில் நம்பிக்கை வைப்பது அல்லது ஒருவித வணக்கமுறையை கடைப்பிடிப்பதாகும். ஆனால், பைபிளின்படி “விசுவாசம்” என்பது முழுமையான நம்பிக்கை; கடவுளிலும் அவருடைய வாக்குறுதிகளிலும் திடமான, அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும். அது, இயேசு கிறிஸ்துவின் சீஷரை அடையாளம் காட்டும் குணமாகும்.
“சோர்ந்துபோகாமல்” ஜெபம் செய்வதன் அவசியத்தைப் பற்றி இயேசு கிறிஸ்து ஒரு முறை பேசினார். அப்போது, நம் நாளில் உண்மையான விசுவாசம் காணப்படுமா என்பதைப் பற்றி ஒரு கேள்வி எழுப்பினார். “மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே [இந்த] விசுவாசத்தைக் காண்பாரோ” என்பதே அந்த கேள்வி. இயேசு ஏன் இந்த கேள்வியை கேட்டார்?—லூக்கா 18:1, 8.
மறைந்த விசுவாசம்
மக்களுக்கு இருக்கும் கொஞ்சநஞ்ச விசுவாசமும் மறைந்துபோக அநேக காரணங்கள் உள்ளன. அன்றாட வாழ்க்கையில் எதிர்ப்படும் வேதனைகளும் சோதனைகளும் அதில் அடங்கும். உதாரணமாக, 1958-ல் ம்யூனிச்சில் நிகழ்ந்த விமான விபத்தில் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்தாட்ட வீரர்களில் பெரும்பாலோர் இறந்தனர்; அப்போது பேராசிரியர் மைக்கேல் கோல்டர் இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டரில் பங்கு தந்தையாக இருந்தார். கோல்டர், “மக்களுடைய துயரத்தின் அளவைக் கண்டு உதவியற்றவராக உணர்ந்தார்” என பிபிசி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அறிவிப்பாளர் ஜோன் பேக்வெல் விளக்கினார். அதன் விளைவாக “மனித விவகாரங்களில் தலையிடும் ஒரு கடவுளில் அவர் வைத்திருந்த விசுவாசம் மறைந்துபோனது.” “பைபிள் . . . கடவுளுடைய குறைபாடற்ற வார்த்தையல்ல,” மாறாக “ஆங்காங்கே சில தெய்வீக ஏவுதல்கள் கொண்ட மனிதனின் குறைபாடுள்ள வார்த்தையே” என தன் நம்பிக்கையை கோல்டர் வெளியிட்டார்.
சில சமயங்களில் விசுவாசம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துபோகிறது. எழுத்தாளரும் ஒலிபரப்பாளருமான லூடோவிக் கென்னடி விஷயத்தில் இதுவே நடந்தது. குழந்தை பருவத்திலிருந்தே அவருக்கு “[கடவுளை பற்றிய] சந்தேகங்களும் குழப்பங்களும் அவ்வப்போது தலைகாட்டின, [அவருடைய] அவநம்பிக்கையும் வளர்ந்தது” என்று கூறுகிறார். அவருடைய கேள்விகளுக்கு திருப்திகரமான பதில்களை யாராலும் கொடுக்க முடியவில்லை போலும். கடலுக்கு சென்ற தந்தை மரித்தது, ஏற்கெனவே பலவீனமாக இருந்த அவருடைய விசுவாசத்திற்கு பேரிடியாக இருந்தது. இரண்டாம் உலக யுத்தத்தின் சமயத்தில் மாற்றியமைக்கப்பட்ட பயண கப்பல் ஒன்றில் அவருடைய தந்தை பயணித்தார். ஜெர்மானிய போர்க் கப்பல்கள் அதை தாக்கி அழித்ததால், “கடலின் ஆபத்திலிருந்தும் எதிரியின் வன்முறையிலிருந்தும் எங்களை காப்பாற்றும்” என கடவுளிடம் ஏறெடுத்த ஜெபங்கள் பலனளிக்காமல் போயின.—மனசே காரணம்—கடவுளுக்கு குட்பை, (ஆங்கிலம்).
இப்படிப்பட்ட அனுபவங்கள் சர்வசாதாரணமானவை. “விசுவாசம் எல்லாரிடத்திலுமில்லையே” என அப்போஸ்தலன் பவுல் கூறுகிறார். (2 தெசலோனிக்கேயர் 3:2) நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? தொட்டதுக்கெல்லாம் சந்தேகப்படும் இந்த உலகில்கூட கடவுளிலும் அவருடைய வார்த்தையிலும் உண்மையான விசுவாசம் வைப்பது சாத்தியமா? இதைப் பற்றி அறிய அடுத்த கட்டுரையை ஆராய்ந்து பாருங்கள்.