தேறினவர்களாயும் முழு நிச்சயமுள்ளவர்களாயும் நிலைத்திருங்கள்
புதிய உலக மொழிபெயர்ப்பு உலகெங்கிலும் கோடிக்கணக்கானோரால் பாராட்டப்படுகிறது
இதில் 12 வருடங்கள், 3 மாதங்கள், 11 நாட்கள் கடுமையான உழைப்பு உட்பட்டுள்ளது. ஆனால் மார்ச் 13, 1960-ல் புதியதோர் பைபிள் மொழிபெயர்ப்பின் கடைசி பகுதி பூர்த்தியானது. அதற்கு பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு என்று பெயர் சூட்டப்பட்டது.
ஒரு வருடம் கழித்து, யெகோவாவின் சாட்சிகள் இந்த மொழிபெயர்ப்பை ஒரே தொகுப்பாக வெளியிட்டனர். 1961-ம் ஆண்டு இந்தப் பதிப்பில் பத்து லட்சம் பிரதிகள் அச்சிடப்பட்டன. இன்று, அச்சடிக்கப்பட்ட பிரதிகளின் எண்ணிக்கை பத்து கோடியை தாண்டிவிட்டது, இந்தப் புதிய உலக மொழிபெயர்ப்பு மிகப் பரவலாக விநியோகிக்கப்படும் பைபிள்களில் ஒன்று என்ற பெயரையும் பெற்றுள்ளது. ஆனால் இந்த மொழிபெயர்ப்பை தயாரிப்பதற்கு சாட்சிகளை எது தூண்டியது?
ஏன் ஒரு புதிய பைபிள் மொழிபெயர்ப்பு?
பரிசுத்த வேதாகமத்தின் செய்தியை புரிந்துகொண்டு அதை அறிவிப்பதற்கு யெகோவாவின் சாட்சிகள் பல காலமாக பல்வேறு ஆங்கில பைபிள் மொழிபெயர்ப்புகளை பயன்படுத்தி வந்திருக்கின்றனர். இந்த மொழிபெயர்ப்புகளில் பயனுள்ள பல அம்சங்கள் இருக்கிறபோதிலும், இவை கிறிஸ்தவமண்டலத்தின் பாரம்பரியங்களாலும் கோட்பாடுகளாலும் பெரும்பாலும் கலப்படம் செய்யப்பட்டிருக்கின்றன. (மத்தேயு 15:6) ஆகவே ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட மூல எழுத்துக்களில் இருப்பவற்றை அச்சுப்பிசகாமல் எடுத்துரைக்கும் ஒரு பைபிள் மொழிபெயர்ப்பு அவசியம் என்பதை யெகோவாவின் சாட்சிகள் புரிந்துகொண்டனர்.
இந்தத் தேவையை பூர்த்திசெய்வதற்கு அக்டோபர் 1946-ல் முதல் படியை எடுத்தவர் யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவின் அங்கத்தினர் நேதன் எச். நார். ஒரு புதிய பைபிள் மொழிபெயர்ப்பை தயாரிக்க வேண்டும் என்று அவரே முன்மொழிந்தார். 1947, டிசம்பர் 2 அன்று, புதிய உலக பைபிள் மொழிபெயர்ப்பு கமிட்டி ஒன்று செயல்பட தொடங்கியது. மூல வாசகத்தை அப்படியே ஒத்திருக்கும் வகையிலும், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பைபிள் கையெழுத்துப் பிரதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட நிபுணர்களின் சமீபகால கண்டுபிடிப்புகளை கவனத்தில் கொண்டும், இன்றைய வாசகரால் உடனடியாக புரிந்துகொள்ள முடிகிற மொழியிலும் ஒரு மொழிபெயர்ப்பை தயாரிக்க வேண்டும் என்பதே அதன் குறிக்கோளாக இருந்தது.
1950-ல், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு முதல் தொகுப்பு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டபோது, மொழிபெயர்ப்பாளர்கள் தங்கள் குறிக்கோள்களை நிறைவேற்றிவிட்டார்கள் என்பது தெளிவாக தெரிந்தது. முன்பு தெளிவில்லாமல் இருந்த வசனங்கள் மிகவும் தெள்ளத் தெளிவாயின. உதாரணமாக, குழப்பமாக இருக்கும் மத்தேயு 5:3-லுள்ள வசனத்தை எடுத்துக்கொள்ளுங்கள்: “ஆவியில் ஏழ்மையுள்ளவர்கள் பாக்கியவான்கள்.” (கிங் ஜேம்ஸ் வர்ஷன்) இது, “தங்கள் ஆன்மீகத் தேவையைக் குறித்து உணர்வுள்ளோர் சந்தோஷமுள்ளவர்கள்” என்று மொழிபெயர்க்கப்பட்டது. “எதற்கும் ஜாக்கிரதையாயிருக்க வேண்டாம்” (கிங் ஜேம்ஸ் வர்ஷன்) என்ற அப்போஸ்தலன் பவுலின் அறிவுரை, “நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்பட வேண்டாம்” (பிலிப்பியர் 4:6, NW) என்று மொழிபெயர்க்கப்பட்டது. மத்தேயு குறிப்பிடும் “வருகை” (தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பு) என்பது “வந்திருத்தல்” (மத்தேயு 24:3, NW) என்று மொழிபெயர்க்கப்பட்டது. புதிய உலக மொழிபெயர்ப்பு, புரிந்துகொள்ளுதலில் ஒரு புதிய அத்தியாயத்தையே திறந்து வைத்தது.
கல்விமான்கள் பலரை இது கவர்ந்துள்ளது. உதாரணமாக, பிரிட்டிஷ் பைபிள் கல்விமான் அலெக்சாண்டர் தாம்ஸன், கிரேக்க மொழியின் நிகழ்கால வினைச்சொல்லை புதிய உலக மொழிபெயர்ப்பு மிகவும் திருத்தமாக மொழிபெயர்த்திருப்பதாக கூறினார். உதாரணத்திற்கு: எபேசியர் 5:25-ல் “புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்” (தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பு) என்று வெறுமனே சொல்வதற்கு பதிலாக “புருஷர்களே, உங்கள் மனைவிகளில் தொடர்ந்து அன்புகூருங்கள்” (NW) என்று குறிப்பிடுகிறது. “இந்தச் சிறப்பு அம்சத்தை இந்தளவுக்கு முழுமையாகவும் அடிக்கடியும் வேறெந்த மொழிபெயர்ப்பும் காண்பித்ததில்லை” என்று புதிய உலக மொழிபெயர்ப்பு பற்றி தாம்ஸன் கூறினார்.
எபிரெய வேதாகமம், கிரேக்க வேதாகமம் ஆகிய இரண்டிலும் கடவுளுடைய தனிப்பட்ட பெயராகிய யெகோவா என்பதை பயன்படுத்தியிருப்பது புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளின் மற்றொரு சிறப்பு அம்சம். பழைய ஏற்பாடு என்று அழைக்கப்படும் பகுதியில் மாத்திரமே கடவுளுடைய எபிரெய பெயர் சுமார் 7,000 தடவை இருப்பதால், தம்முடைய வணக்கத்தார் தம்முடைய பெயரை பயன்படுத்த வேண்டும் என்றும் தம்மை ஓர் நபராக அறிந்திருக்க வேண்டும் என்றும் படைப்பாளர் விரும்புவது தெளிவாக தெரிகிறது. (யாத்திராகமம் 34:6, 7, NW) கோடிக்கணக்கானோர் இதைச் செய்வதற்கு புதிய உலக மொழிபெயர்ப்பு உதவியுள்ளது.
புதிய உலக மொழிபெயர்ப்பு பன்மொழிகளில்
புதிய உலக மொழிபெயர்ப்பு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது முதல் உலகெங்கிலும் வாழும் யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய தாய் மொழியில் அதைப் பெற்றுக்கொள்ள மாட்டோமா என்று ஏங்க ஆரம்பித்தனர். இதற்கு நல்ல காரணமுமிருந்தது. சில நாடுகளில் உள்ளூர் மொழிகளில் பைபிள்களை பெறுவது யெகோவாவின் சாட்சிகளுக்கு கடினமாக இருந்தது; ஏனெனில் அவற்றை விநியோகித்து வந்த பைபிள் சொஸைட்டிகளின் பிரதிநிதிகள், யெகோவாவின் சாட்சிகள் அவற்றை பெற்றுக்கொள்வதை விரும்பவில்லை. அதுமட்டுமல்லாமல் இந்தப் பிராந்திய மொழி பைபிள்களில் முக்கியமான போதனைகள் பெரும்பாலும் மறைக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு சரியான ஒரு உதாரணம் தென் ஐரோப்பிய மொழிபெயர்ப்பு ஒன்று; அது, “உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக” என்ற இயேசுவின் வார்த்தைகளை “மக்களால் நீர் கனப்படுத்தப்படுவீராக” என்று மொழிபெயர்த்து, இவ்வாறு கடவுளுடைய பெயரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் அம்சத்தை மறைத்துவிட்டிருக்கிறது.—மத்தேயு 6:9.
1961-ல், மொழிபெயர்ப்பாளர்கள் ஏற்கெனவே புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளின் ஆங்கில வசனங்களை மற்ற மொழிகளில் மொழிபெயர்க்க ஆரம்பித்துவிட்டிருந்தார்கள். இரண்டே ஆண்டுகளுக்குப் பிறகு, கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு கூடுதலாக ஆறு மொழிகளில் மொழிபெயர்த்து முடிக்கப்பட்டது. அதற்குள், உலகம் முழுவதிலும் நான்கு சாட்சிகளில் மூவர் தங்களுடைய தாய் மொழியில் இந்தப் பைபிளை படிக்க முடிந்தது. ஆனால் கோடிக்கணக்கான ஆட்களுக்கு இந்த பைபிள் பிரதியை கிடைக்கச் செய்வதற்கு யெகோவாவின் சாட்சிகள் இன்னும் அதிக வேலை செய்ய வேண்டியதாக இருந்தது.
1989-ல் யெகோவாவின் சாட்சிகளுடைய உலக தலைமை அலுவலகத்தில் மொழிபெயர்ப்பு சேவைகள் ஆரம்பிக்கப்பட்டபோது இந்த இலக்கை அடைவதற்கு வாய்ப்புகள் அதிகரித்தன. பைபிள் வார்த்தைகளின் ஆராய்ச்சியையும் கம்ப்யூட்டர் டெக்னாலஜியையும் இணைத்து ஒரு விசேஷ மொழிபெயர்ப்பு முறையை இந்த இலாக்கா உருவாக்கியது. இந்த முறையை பயன்படுத்தி கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தை இன்னும் சில மொழிகளில் ஒரு வருடத்திலும் எபிரெய வேதாகமத்தை இரண்டு வருடங்களிலும் மொழிபெயர்க்க முடிந்திருக்கிறது. சாதாரணமாக ஒரு பைபிள் மொழிபெயர்ப்புக்கு ஆகும் காலத்தைவிட இது மிக மிகக் குறைவாகும். இந்த முறை பயன்படுத்தப்பட்டது முதற்கொண்டு, புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள்கள் 29 மொழிகளில் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்த மொழிகளை சுமார் 200 கோடி மக்கள் பேசுகின்றனர். இன்னும் 12 மொழிகளில் மொழிபெயர்ப்பு வேலை நடைபெற்று வருகிறது. இன்று வரை ஆங்கில புதிய உலக மொழிபெயர்ப்பு முழுமையாகவோ பகுதியாகவோ 41 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
நியூ யார்க் நகரில் நடைபெற்ற யெகோவாவின் சாட்சிகளுடைய தேவராஜ்ய அதிகரிப்பு என்ற மாநாட்டில் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளின் முதல் பகுதி 1950 ஆகஸ்ட் 3-ல் வெளியிடப்பட்டது; அது முதல் 50-க்கும் அதிகமான ஆண்டுகள் கடந்துவிட்டன. அந்தச் சமயத்தில் மாநாட்டிற்கு வந்திருந்தவர்களை நேதன் எச். நார் இவ்வாறு ஊக்கப்படுத்தினார்: “இந்த மொழிபெயர்ப்பை எடுத்துச் செல்லுங்கள், அதை வாசியுங்கள், அதை அனுபவத்து மகிழ்வீர்கள். அதை படியுங்கள், கடவுளுடைய வார்த்தையை நீங்கள் இன்னும் நன்றாக புரிந்துகொள்ள அது உங்களுக்கு உதவி செய்யும். மற்றவர்களுக்கும் அதை விநியோகியுங்கள்.” பைபிளை தினமும் வாசிக்கும்படி உங்களை உற்சாகப்படுத்துகிறோம்; “கடவுளுக்குச் சித்தமான எதிலும் தேறினவர்களாயும் முழு நிச்சயமுள்ளவர்களாயும் நிலைநிற்க” அதில் அடங்கியுள்ள செய்தி உங்களுக்கு உதவும்.—கொலோசெயர் 4:12, திருத்திய மொழிபெயர்ப்பு.
[பக்கம் 8, 9-ன் வரைபடம்/படங்கள்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
“புதிய உலக மொழிபெயர்ப்பு வெளியீடுகள்”
முதன்முதலில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் இப்போது முழுமையாகவோ பகுதியாகவோ 41 மொழிகளில் கிடைக்கிறது
கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் முழு பைபிள்
1950 1
1960-69 6 5
1970-79 4 2
1980-89 2 2
1990-இதுவரை 29 19